Plerinage des tamouls Lourdes

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா

  திருப்பலி முன்னுரை  

            உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் ஆசி பெற வந்திருக்கும் அன்பு நெஞ்சங்களே!
ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார். அல்லேலுயா! அவரின் உயிர்ப்பிலே அகமகிழ்வோம். அல்லேலுயா! சாவை வென்று வெற்றி வீரராய் மாட்சியுடன் உயிர்த்தெழுந்த நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பாஸ்காப் பெருவிழாவை, நாம் இன்று கொண்டாடுகின்றோம்.

தனது வாழ்விலே உண்மையைப் பேசி, மக்களுக்கு வாழ்வு கொடுத்ததற்காக இயேசு கொல்லப்பட்டார். இறந்து அடக்கம் செய்யப்பட்ட இயேசு, மூன்றாம் நாள் கல்லறையில் இருந்து வெற்றி வீரராய் உயிர்த்தெழுந்தார். வெற்றியும் மகிழ்வும் நிறைந்த இந்த உயிர்ப்பு, நமக்கு நம்பிக்கை தரும் நிகழ்வாகும்.

ஆதவனை ஆழ் குழியுள் அடக்கி வைக்கலாமோ? ஒளிக் கீற்றுக்கள் இருளை இல்லாமல் செய்துவிடுமன்றோ! இறைமகன் இயேசு கிறிஸ்து சாவை வென்றவர். இறப்பைக் கடந்தவர். அவருடைய இந்த மாபெரும் உயிர்ப்பு நமது மனித இனம் அனைத்திற்கும், பாவத்தில் இருந்து மீட்புக்கு விடுதலை தருகிறது. துன்ப துயரங்கள் வேதனைகளை நீக்குகிறது. மகிழ்ச்சி, அமைதி, ஆனந்தம் போன்ற உயிர்ப்பின் பரிமாணங்களை எடுத்துக் கூறுகிறது. நம்மை புதுப்பிக்கப்பட்ட வாழ்விற்கு அழைத்துச் செல்கிறது.

கிறிஸ்தவத்தின் அடித்தளம் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு. உயிர்ப்பு அன்று இல்லை என்றால் கிறிஸ்தவம் இன்று இல்லை. கிறிஸ்தவர்களின் விசுவாச பேருண்மை இயேசு கிறிஸ்துவின் இறப்பு, உயிர்ப்பு, மீண்டும் வருகை. இயேசு உயிர்த்தெழுந்தார் என்று சொல்லும்போது அவர் இன்றும் என்றும் நம்மோடு வாழ்கிறார் என்பதுதான் பொருள்.

இயேசுவின் சிலுவை சாவிற்கும், அவரது இறுதி அடக்கத்திற்கும் சாட்சிகளாக இருந்த பெண்களே, அவரது உயிர்த்தெழுதலுக்கும் சாட்சிகள். நாமும் உயிர்ப்பின் சாட்சிகளாக மாறி, உயிர்ப்பின் செய்தியை எங்கும் அறிவிக்கும் கருவிகளாவோம். பொய்மை, அநீதி, தீயவை இறக்கவும், உண்மை, நீதி, நல்லவை உயிர்க்கவும் கிறிஸ்துவுக்குள் இணைந்த நற்செய்தியின் சாட்சிகளாக வாழ வரம் வேண்டி, இந்த தெய்வீக உயிர்ப்பின் பலியில் முழு மனதுடன் பங்கேற்போம்.

                                                                             
இறைவேண்டல்

1.உயிர்த்தெழுந்து விண்ணக அரியணையில் வீற்றிருக்கும் திருமகனே எம் இறைவா!
எம் திருச்சபையை உமக்கேற்றபடி வழி நடத்திச் செல்லும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொது நிலையினர் ஆகிய அனைவரையும் ஆசிர்வதியும். உமது இறையாட்சியை, எளிமையும். அமைதியும் நிறைந்த முறையில் மக்களுக்கு உணர்த்தவும் மக்களை உயிர்ப்பு பெற்றவர்களாக உருமாற்றவும் தேவையான வரம் அருள உம்மை மன்றாடுகிறோம்.

2.வாழ்வுக்கு வாசல் அமைத்த திருமகனே இறைவா!
எம் தாய்த்திரு நாட்டை ஆளும் அரசியல்வாதிகளையும், தலைவர்களையும் உம் கரம் தருகின்றோம். அவர்கள் லஞ்சம், ஊழல், இனப்பாகுபாடு போன்றவற்றிலிருந்து உயிர்ப்பு பெற்று அவர்கள் நாட்டையும், மக்களையும் தன்னலம் கருதாது பிறர் நலத்தில் நாட்டம் கொண்டு நீதி வழியில் நடத்திட தேவையான வரம் அருள உம்மை மன்றாடுகிறோம்.

3. உயிர்ப்புக்கு உரை எழுதிய தெய்வீக திருமகனே இறைவா!
எம் பங்கை சிறப்படன் வழிநடத்திச் செல்லும் பங்குத்தந்தையை ஆசிர்வதியும். மக்களுக்கு பணி செய்ய குருத்துவத்தை ஏற்றுக்கொண்ட இவர்களுக்கு, நீரே பங்கும் உரிமை சொத்தாகவும் இருந்து, அவர்கள் மேற்கொள்ளும் காரியத்தில் உடனிருந்து வெற்றி பெறச்செய்யும். உன்னத இறைவனின் கோவிலுக்குமேல் ஒளிரும் கதிரவன் போலவும், பளிச்சிடும் வானவில் போலவும் அவர்கள் திகழ வரம் அருள உம்மை மன்றாடுகிறோம்.

4. சாவை சாகடிக்கச் செய்த தாவீதின் மகனே இறைவா!
கிறிஸ்தவ மறையின் மூலைக்கல்லான உயிர்ப்புப் பெருவிழாவிலே பங்குகொண்டு இருக்கும் நாங்கள், உமது அருள் உதவியால் உயிர்ப்பின் சாட்சிகளாய் மாறி, உயிர்ப்பின் உண்மைச் செய்தியான மீட்பை, உலகமெங்கும் அறிவிக்கும் கருவிகளாக மாற வரம் அருள, உம்மை மன்றாடுகிறோம்.

5.சாவை வென்று சாதனைக் காவியம் ஒன்றை வெளியிட்டவரே எம் இறைவா!
வேகமும் விவேகமுடைய இளைஞர்களை உம் பதம் தருகின்றோம். அவர்கள் தங்கள் உடலின் வலிமையால் தீய நாட்டங்களுக்கு பணியாமல், இதயத்தின் உண்மையான மாண்பின் மூலம் கடவுளுக்கு பெருமை சேர்க்கவும், உள்ளம் என்னும் ஆன்ம தாகத்தை வளர்க்கும் தூண்டுகோலாக அவர்களை மாற்றவும், தாங்கள் உயிர்க்கவும், பிறரை உயிர்ப்பிக்கவும் தேவையான வரம் அருள, உம்மை மன்றாடுகிறோம்.

6.மாட்சியும் மாண்பும் மிக்க உயிர்த்த ஆண்டவரே இறைவா!
சிறுவர் சிறுமிகளை ஆசிர்வதியும். தூய ஆவியின் கொடைகளை அவர்களுக்கு கொடுத்து, அவர்களை தனித் தன்மையுடையவர்களாகவும், இறைவனின் அழைப்பிற்கு பதில் கொடுக்க வேண்டியவர்களாகவும், சாதனைகள் பல புரிந்து உம்முடைய உயிர்ப்பின் தீபங்களாக விளங்க தேவையான வரம் அருள, உம்மை மன்றாடுகிறோம்.                                                              
 மறையுரை சிந்தனை
  

குளிர்காலம் பனி கடுமையாக பொழிந்துகொண்டிருந்தது. சில புறாக்கள் ஒரு வீட்டுக் கூரையின் அடியில் ஒதுங்கின. அருகிலே சில சிட்டுக் குருவிகள் வந்து அமர்ந்தன. குளிர் தாங்க முடியாமல் சிட்டு குருவிகள் நடுங்கின. "பாவம் இந்த சிட்டு குருவிகளை நாம் காப்பாற்றா விட்டால், இவை இறந்து போகும். நான் காப்பாற்றப் போகிறேன்" என்று கூறி ஒரு புறா ஒரு குருவியை தன் சிறகுக்குள் ஒதுங்க அழைத்தது. அதைப் பார்த்து மேலும் சில புறாக்கள் குருவிகளை அழைத்து தம்மோடு சேர்த்துக் கொண்டனர். குருவிகளுக்கு அடைக்கலம் கொடுத்த புறாக்களை பார்த்து, ஒரு புறா "நீங்கள் முட்டாள்கள்" இந்த குருவிகளை காப்பாற்றும் முயற்சியில் நீங்கள் செத்துப் போகப் போகிறீர்கள் என்று எச்சரித்தது. எப்படியும் நாம் சாகத்தான் போகிறோம். நாம் இறந்தாலும் இவர்களுக்கு உயிர் கிடைக்குமே என்றது ஒரு புறா. இரவு முழுவதும் பனிக்காற்று கொடுமையாக வீசியது. விடிந்ததும் அந்த வீட்டுச் சிறுமி ஜன்னலைத் திறந்தாள். அப்போது கூரையிலிருந்து ஒரு புறா பொத்தென்று தரையில் விழுந்தது. தந்தையை அழைத்து வந்தாள். கூரையின் அடியில் வேறு சில புறாக்கள் இருப்பதையும் பார்த்தார்கள். சிறிது நேரம் சென்றதும் புறாக்கள் சிறகை அசைத்துக் கூவின. அவற்றிற்குள் சிட்டுக் குருவிகள் வெளிப்பட்டன. சில புறாக்கள் அசையாமல் கிடந்தன. சிறுமி அந்த புறாக்களின் சிறகுகளை விலக்கி பார்த்தாள். அங்கே குருவிகள் இல்லை. சிறுமியின் தந்தை சொன்னார் "கண்ணே பார்தாயா? குருவிகளுக்கு அடைக்கலம் கொடுத்த புறாக்கள் சாவிலிருந்து தப்பித்துவிட்டன. அடைக்கலம் கொடுக்காத புறாக்கள் செத்துப்போய்விட்டன" என்றார். புறாக்கள் குருவிகளுக்கும், குருவிகள் புறாக்களுக்கும் வெப்பப் பரிமாற்றம் செய்ய இவை அனைத்தும் உயிர்பெற்றன.

வாழ்வும் சாவும் நாம் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகள். வாழ்வு கொடுக்க முன் வரும்போது சாவு பின் வாங்குகிறது.

தம் தலைவர் உயிர்த்தவுடன் சீடர்கள் அடைந்த மகிழ்ச்சி அச்சத்தை அகற்றியது. பெற்றுக் கொண்ட பெரு வாழ்வை பிறருக்காய் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

பிறருக்கு வாழ்வு கொடுக்க தன்னை இழக்கும் போது...........
பிறருக்கும் வாழ்வு நமக்கும் வாழ்வு.
உறவின் சாட்சியாக உறவில் உயிர்ப்போம்.
அன்பின் சாட்சியாக அன்பில் உயிர்ப்போம்.
நல்லெண்ணத்தின் சாட்சியாக நல்லெண்ணத்தில் உயிர்ப்போம்.
மகிழ்ச்சியின் சாட்சியாக மகிழ்ச்சியில் உயிர்ப்போம்.
கொடுக்கும் போது பெறுவோம்.
எதைக் கொடுக்கிறோமோ அதையே பெறுவோம்.
நல்லதைக் கொடுக்கும் போது நல்லதைப் பெறுவோம்.
வாழ்வைக் கொடுக்கும் போது வாழ்வைப் பெறுவோம்.


உலகம் தீமையோடு, இருளோடு கைகோர்த்து திரிந்து விடக்கூடாது என்பதற்காகவே இயேசு உயிர்த்தார்.

ஏனென்றால் முடங்கிக் கிடந்த உறவை முன்னேறச் செய்ய வேண்டும்.
அடங்கிக் கிடந்த அன்பை அறிவிக்க வேண்டும்.
நடுங்கிக் கிடந்த நம்பிக்கையை நடக்கச் செய்ய வேண்டும்.
நல்லெண்ணத்துடன் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்.
இறுக்கமான உறவுகளை உடைக்க வேண்டும்.
இருளைக் கிழிக்க வேண்டும்.
அச்சத்தை அகற்ற வேண்டும் என்பதற்காகவே இயேசு உயிர்த்தார்.

இயேசு பட்ட பாடுகள் ஒன்று கூட வீணாகவில்லை. இது நமக்கு இன்று புதுமையாக, வினோதமான மகிழ்ச்சியை உறபத்தி செய்வதாக அமைகிறது. அதோடு நாம் நடந்து போகும் பாதையில் நம்பிக்கை தளிர்களை துளிர்க்கச் செய்கிறது.

வேதனைக்கு வெற்றி உண்டு என வெளிச்சம் போட்டு காட்டியவர், இரவில் உயிர்த்த ஆண்டவர்.
நமது விடியாத வேதனைப் பொழுதுகளுக்கு, விடியல் உண்டு என அர்த்தப்படுத்துவதற்கு தேர்ந்தெடுத்த பொழுது இரவுப் பொழுது.

இன்று அகமகிழ்வோம் ஆர்ப்பரிப்போம். ஆனந்தமுடனே அன்பில், நீதியில் நல்லவை அனைத்திலும் உயிர்த்தெழுந்து, உயிர்த்த இயேசுவுக்கு சாட்சியாக நாமிருப்போம்! உயிரைக் கொடுத்து உயிரைப் பெறுவோம். அயலாரின் நலனுக்காக நாமும், நம் நலனுக்காக அயலாரும் வெப்பப் பரிமாற்றத்தைப்போல், அன்பை, அமைதியை, நல்லவை அனைத்தையும் பரிமாற்றம் செய்து, உயிர்ப்பின் சாட்சியங்களை உலகில் பதிவு செய்வோம்.
 
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.
 
 
மறையுரைச்சிந்தனை  - அருட்சகோதரி: செல்வராணி O.S.M.
 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி.

ஈஸ்டர் என்னும் வதந்தி

'இந்நாள்வரை இந்த வதந்தி யூதரிடையே பரவியிருக்கிறது' (மத் 28:15) என்னும் அருள்வாக்கியத்தை நான் வாசிக்கும்போதெல்லாம் நம்முடைய கிறிஸ்தவ மதம் வதந்தியின்மேல் கட்டப்பட்ட ஒரு மதமோ அல்லது நெறியோ என்று நிறைய நாள்கள் எண்ணியதுண்டு. ஆனால், திருத்தூதர்களின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம், தொடக்க கிறிஸ்தவர்களுடைய புதிய வாழ்க்கைமுறை, தங்களுடைய சமகாலத்துக் கலாச்சாரத்திற்கான எதிர்சான்று போன்ற நிகழ்வுகளை விவிலியத்தில் வாசிக்கும்போது ஈஸ்டர் என்பது வதந்தி அல்ல, மாறாக, அது வாழ்வு என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு வதந்தி வாழ்வாக மாறிய நிகழ்வை ஆராய்வதோடு ஈஸ்டர் திருநாளின் வரலாற்றையும் தேடுதல் இக்கட்டுரையின் நோக்கம்.

1. ஈஸ்டர் பெயர் விளக்கம்
உங்கர் விவிலிய அகராதி, 'ஈஸ்டர்' என்ற சொல் ஒரு ஆங்கிலோ-சாக்ஸன் சொல்லாடல் என்றும், இதன் மூலம் 'ஈஸ்த்ரா' என்ற வசந்தகாலத் தேவதையின் பெயர் என்றும், இந்த தேவதைக்கு ஒவ்வொரு ஆண்டின் பாஸ்கா காலத்திலும் பலிகள் செலுத்தப்பட்டன என்றும், ஏறக்குறைய எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தப் பெயர் கிறிஸ்துவின் உயிர்ப்பை அடையாளப்படுத்தப் பயன்படுத்தப்பட்டது என்றும் வரையறுக்கிறது.

2. மறுபிறப்பின் அடையாளம் ஈஸ்டர்
குளிர்காலத்தில் 'இறக்கின்ற' கதிரவன் வசந்தகாலத்தில் 'மறுபிறப்பு' எடுக்கின்றான் என்ற பின்புலத்தில், கதிரவன் உதிக்கும் திசையான 'ஈஸ்ட்டிலிருந்து' (கிழக்கு) கிறிஸ்து எழுவதால், கிறிஸ்துவின் உயிர்ப்பை 'ஈஸ்டர்' என்று அழைப்பவர்கள், இயேசுவின் இறப்பை 'குளிர்காலத்திற்கும்,' இயேசுவின் உயிர்ப்பை 'வசந்தகாலத்திற்கும்' ஒப்பிடுகின்றனர்.

முனைவர் டோனி நுஜென்ட், 'ஈஸ்டர் கதையாடல், தம்முஸ் மற்றும் அவருடைய மனைவி இஷ்தார் என்னும் கதைமாந்தர்களைத் தாங்கிய 'இனன்னாவின் இறக்கம்' என்ற கிமு 2100ஆம் ஆண்டின் சுமேரிய புராணக்கதையின் தழுவல்' என்கிறார். இக்கதையின்படி, தன் கணவன் தம்முஸ் இறந்தவுடன், மிகவும் வருத்தமுற்ற இஷ்தார் அவரோடு இணைந்து பாதாளத்திற்குச் செல்கின்றாள். ஏழு வாயில்களைத் தாண்டி அவள் நுழையும்போது அவள் தன்னுடைய ஆடை அணிகலன்களை இழக்கிறாள். இழிவுபடுத்தப்பட்டு நிர்வாணமாக்கப்பட்ட அவள் கொல்லப்பட்டு எல்லாரும் பார்க்குமாறு தொங்கவிடப்படுகிறாள். அவளுடைய இல்லாமையில் பூமி தன்னுடைய வளமையை இழக்கிறது. தாவரங்கள் வளர இயலாமலும், விலங்குகள் பலுக இயலாமலும் நிற்கின்றன. இஷ்தாரைக் காணாத அவளுடைய பணிப்பெண் மற்ற கடவுளர்களின் துணையை நாடிச் செல்கிறாள். இறுதியில் என்க்கி வாழ்வின் தாவரம், வாழ்வின் தண்ணீர் என்னும் இரண்டைப் படைத்து பாதாளத்திற்குள் அனுப்புகின்றார். இவை தம்முஸூக்கும் இஷ்தாருக்கும் உயிர்கொடுத்து அவர்களை சூரிய ஒளியாக மீண்டும் மாற்றி பூமிக்கு அனுப்புகின்றன. ஆறு மாதத்திற்குப் பின் தம்முஸூம் இஷ்தாரும் மீண்டும் பாதாளத்திற்குச் செல்ல, தண்ணீர் கடவுள் அவர்களை மீண்டும் மேலே அனுப்புகின்றார். இப்படியாக மாறி மாறி வருபவை தான் குளிர்காலத்தின் இறப்பும் வசந்தகாலத்தின் பிறப்பும். இஷ்தார் என்ற தேவதையே கானான் நாட்டில் அஸ்தார்த் என்றழைக்கப்பட்டார். அஸ்தார்த்தின் ஆலயம் இருந்த இடத்தில்தான் இயேசுவின் புனித கல்லறை இருந்ததாக 4ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்கள் கண்டறிந்து அங்கே ஆலயம் கட்டுகிறார்கள்.

இக்கதையைப் போன்றவைதாம், எகிப்தியக் கடவுள் ஹோரஸின் உயிர்ப்பு, மித்ராஸின் கதை, பாட்டியால் உயிர்ப்பிக்கப்பட்ட டைனிசியுஸ் கதை. இக்கதையாடல்களில் வளமை, உயிர் உருவாக்கம், இருளுக்குள் இறங்குதல், ஒளி இருள்மேலும் நன்மை தீமைமேலும் வெற்றிகொள்தல் போன்ற கருத்துருக்கள் காணக்கிடக்கின்றன.

3. வசந்தகாலத் தேவதையின் திருநாள் ஈஸ்டர்
வசந்தகாலத் தேவதையான 'ஈஸ்த்ரா' ('எயோஸ்தர்,' 'ஒஸ்தாரா,' 'அவ்ஸ்த்ரா') திருநாள் மார்ச் மாதத்தின் 21ஆம் நாள், வசந்தகாலத்தின் உத்தராயணம் (இரவும் பகலும் சமமான நாள், சூரியன் நிலநடுக்கோட்டைக் கடந்துசெல்லும் நாள்) அன்று கொண்டாடப்பட்டது. நீண்ட இருள்சூழ் பனிக்காலத்திற்குப் பின் வெளிச்சத்தைக் கொண்டுவரும் இத்தேவதையை முயல் அடையாளப்படுத்தியது. ஏனெனில், முயல் என்பது வசந்தகாலத்தையும் வளமையையும் குறித்தது. க்ரிம் என்ற ஜெர்மானிய புராண ஆய்வாளரின் கூற்றுப்படி, 'உயிர்ப்பு என்னும் கருதுகோள் ஈஸ்த்ரா திருநாளில் மையம் கொண்டுள்ளது. ஏனெனில், வைகறையின் கடவுளாம், வசந்தத்தையும் வளமையையும் அறிவித்து, மகிழ்ச்சியையும் ஆசீரையும் கொண்டுவரும் ஈஸ்த்ராரை தங்களுடைய கடவுளில் கிறிஸ்தவர்கள் கண்டார்கள்.' சில ஐரோப்பிய மொழிகளில் 'ஈஸ்டர்' என்பது 'பாஸ்கா' (யூதர்களின் பெருவிழா) என்று அழைக்கப்பட்டாலும், ஆங்கிலோ-சாக்ஸன் குடும்ப மொழிகளில் 'ஈஸ்டர்' என்ற சொல்லே வழங்கப்படுகிறது.

4. ஈஸ்டரும் பாஸ்கா பெருவிழாவும்
அடையாளம் மற்றும் பொருளாலும், நாள்காட்டியாலும் யூத பாஸ்காவும் கிறிஸ்தவ ஈஸ்டரும் இணைந்தே செல்கின்றன. மார்ச் மாத உத்தராயணத்தைத் தொடர்ந்து வரும் பௌர்ணமிக்கு அடுத்த ஞாயிறு அன்று ஈஸ்டர் கொண்டாடப்படுவதால் - மார்ச் 22க்கும் ஏப்ரல் 25க்கும் இடையில் - திருவழிபாட்டு ஆண்டில் இது 'நகரும் திருவிழா' என அழைக்கப்படுகிறது. இந்த நாளில்தான் 'ஈஸ்டர்' கொண்டாடப்பட வேண்டும் என்பது பேரரசர் கொன்ஸ்தாந்தின் அவர்கள் 325ஆம் ஆண்டு கூட்டிய நிசேயா திருச்சங்கத்தில் முடிவெடுக்கப்பட்டது. அன்றுமுதல் பாஸ்கா பெருவிழாவின் தொடக்கத்தைக் குறிக்கும் பௌர்ணமி நாளை ஒட்டியே ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது. வழிபாடு மற்றும் சமய நிலைகளில் பெஸா மற்றும் ஈஸ்டர் திருநாள்கள் வேறுபட்டாலும் இரண்டுமே மறுபிறப்பையும் புதுவாழ்வையுமே கிறிஸ்தவத்தில் இயேசுவின் உயிர்ப்பாலும், யூத சமயத்தில் இஸ்ரயேல் மக்கள் அடிமைத்தனத்திலிருந்து பெற்ற வாழ்வாலும் (காண். விப 14-15) - அடையாளப்படுத்துகின்றன.

5. ஈஸ்டர் வழக்கங்களின் தொடக்கம்

உலகெங்கும் இன்று ஈஸ்டர் கொண்டாட்டங்களில் முயலும் முட்டையும் இடம் பெறுகின்றன. ஏற்கனேவே நாம் குறிப்பிட்டபடி, 'முயல்' என்பது வளமையின் அடையாளமாக இருக்கிறது. மேலும், 'முட்டை' வசந்தகாலத்தையும், வளமையையும், புதுப்பித்தலையும் குறிக்கிறது. ஜெர்மானிய புராணம் ஒன்றின்படி, அடிபட்ட பறவை ஒன்றை ஈஸ்த்ரா முயலாக மாற்றி நலம் தந்தார் என்றும், அதற்கு நன்றியாக அந்த முயல் முட்டையிட்டது என்றும் சொல்லப்படுகிறது. பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம், 'பண்டைக்கால எகிப்தியர்களும் பாரசீகர்களும் வசந்தகாலத்தில் வளமையின் அடையாளமான முட்டையின்மேல் வண்ணம் தடவியும், உண்டும் கொண்டாடினர்' என்று குறிப்பிடுகிறது. மேலும், எகிப்திய இலக்கியங்களில் முட்டை சூரியனையும், பாபிலோனிய இலக்கியங்களில் யூப்பிரத்திசு நதியில் விழுந்த இஷ்தார் தேவதையின் எழுச்சியையும் குறிக்கிறது. இதன் பின்புலத்தில்தான் முட்டை இயேசுவின் கல்லறைக்கு ஒப்பிடப்பட்டு, முட்டையை உடைத்துக்கொண்டு வரும் குஞ்சுபோல கல்லறையைத் திறந்துகொண்டு இயேசு வருகிறார் என்று நாம் முட்டைகளை அலங்கரிக்கவும் பரிமாறவும் செய்கின்றோம்.


6. ஈஸ்டர் என்னும் வாழ்வு
'ஈஸ்டர்' என்பது வதந்தி போலக் காணப்பட்டாலும், இயேசுவின் திருத்தூதர்களுக்கு அது வாழ்வியல் நிகழ்வாகவும் அனுபவமாகவும் இருந்தது. உயிர்ப்புக்குப் பின் தோன்றிய இயேசுவைக் கண்ட திருத்தூதர்கள் புதிய மனிதர்களாக மாறுகின்றர். பயம், தயக்கம், கோபம் மறைந்து, நம்பிக்கை, துணிச்சல், மற்றும் மன்னிப்பு அவர்கள் உள்ளங்களில் பிறப்பதால் கிறிஸ்து திருத்தூதர்களின் உள்ளங்களில் உயிர்க்கிறார்' என்று கூறுகின்றார் இறையியலாளர் ஷில்லிபெக்ஸ். 'கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார், நம்பினார்' (யோவா 20:8) என்று வெற்றுக்கல்லறையை உயிர்ப்பின் சான்றாகப் பதிவுசெய்கிறார் யோவான். 'கல்லறையின் கல் அகற்றப்பட்டது இயேசுவை வெளியேற்றுவதற்காக அல்ல, மாறாக, திருத்தூதர்களை உள்ளே அனுப்புவதற்காகவே' என இந்த நிகழ்வை வர்ணிக்கிறார் புனித அகுஸ்தினார். உயிர்த்த இயேசுவைக் கண்ட சீடர்கள் அமைதியையும், மகிழ்ச்சியையும் கொடைகளாகப் பெற்றுக்கொள்கின்றனர் (காண். லூக் 24:36, 52). 'கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்' (1 கொரி 15:14) என்று கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிநாதமாக உயிர்ப்பை முன்வைக்கிறார் புனித பவுல். 'கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறியவும் அவருடைய துன்பங்களில் பங்கேற்று, சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புகிறேன்' (பிலி 3:10) என்பதே இவருடைய பேராவலாகவும் இருக்கிறது.

கிழக்கிலிருந்து எழும் கதிரவன்போல் எழும் கிறிஸ்துவின் உயிர்ப்பு நம்முடைய வாழ்வாகவும் அனுபவமாகவும் மாற எல்லாம் வல்ல இறைவன் அருள்கூர்வாராக! வதந்தி போல வந்து மனித வரலாற்றை புரட்டிப் போட்டு வாழ்வைச் சீரழிக்கும் வைரஸ் போன்றதல்ல ஈஸ்டர். இது வதந்தி அல்ல. வரலாற்றில் நிகழ்ந்து வாழ்வியல் அனுபவமாக மாறி மானுடத்திற்கு நம்பிக்கை தரும் நல்விழா.
 
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
I திருத்தூதர் பணிகள் 10: 34a, 37-43
II கொலோசையர் 3: 1-4
III யோவான் 20: 1-9

கிறிஸ்து உயிர்த்தார் அல்லேலூயா!

இரஷ்யாவைச் சார்ந்த மிகப்பெரிய ஆளுமை நிகோலாய் இவானோவிச் புகாரின் (Nikolai Ivanovich Bukharin 1888-1938). இவர் 1917 ஆம் ஆண்டு அந்நாட்டில் ஏற்பட்ட போல்ஸ்விக் புரட்சிக்கு வித்திட்டவர்; கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கியப் பொறுப்பை வகித்தவர்; கடவுள் மறுப்பாளர்

1930 ஆம் ஆண்டு மாஸ்கோவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய இவர், கிறிஸ்துவைக் குறித்தும், கிறிஸ்தவ மதத்தைக் குறித்தும் கடுமையாகச் சாடிப் பேசினார். இவர் இவ்வாறு பேசிவிட்டு அமர்ந்ததும், கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து, மேடைக்குச் சென்று, "கிறிஸ்து உயிர்த்தார்" என்று உரக்கக் கத்தினார். மக்களும் ஒருமித்த குரலில், "ஆம், கிறிஸ்து உயிர்த்தார்" என்று கத்தினார்கள். இதைக் கேட்டுவிட்டு இவர், 'மக்கள் இப்படிக் கிறிஸ்துவின்மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருக்கும்போது, அவரைப் பற்றி என்ன பேசினாலும், எடுபடாது' என்று தன் மனத்தில் நினைத்துக் கொண்டார்.

கிறிஸ்துவுக்கு எதிராக யார் என்ன பேசினாலும், அவர் உயிர்த்தார் என்பதை யாரும் மறுக்கமுடியாது. இன்று நாம் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இப்பெருவிழாவில் நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

கிறிஸ்துவின் உயிர்ப்பு நமது நம்பிக்கையின் அடிப்படை

"கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கையும் பொருளற்றதாகிவிடும்" (1 கொரி 15: 14) இது திருத்தூதர் புனித பவுல் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பைக் குறித்துச் சொல்லும் மிக முக்கியமான வார்த்தைகள். இவ்வார்த்தைகள் கிறிஸ்துவின் உயிர்ப்பே நமது நம்பிக்கைக்கு அடிப்படையாக இருக்கின்றது என்பதையும், பொருளைத் தருகின்றது என்பதையும் எடுத்துக்கூறுகின்றது.

இன்றைப் பலர், இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்களைப் போன்று ஒன்றைச் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள் (மத் 23: 3). ஆனால், ஆண்டவர் இயேசு, தான் இறந்து மூன்றாம் உயிர்த்தெழுவேன் என்று சொன்னார் (மத் 17: 22; மாற் 8: 31; லூக் 9: 22; யோவா 2: 19). அவர் சொன்னது போன்றே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். இதன்மூலம் அவர் சொல்வீராக அல்ல, செயல்வீரராக விளங்குகின்றார்.

கிறிஸ்துவின் உயிர்ப்பு நமக்குத் தரும் நம்பிக்கை

கிறிஸ்துவின் உயிர்ப்பு நமது நம்பிக்கைக்குப் பொருள் தருகின்றது என்று பார்த்தோம். கிறிஸ்துவின் உயிர்ப்பு நமது நம்பிக்கைக்குப் பொருள் தருவதோடு அல்லாமல், நாமும் ஒருநாள் உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கையையும் தருகின்றது. இக்கூற்றிற்கு வலுசேர்ப்பதாய் இருக்கின்றது இயேசு மார்த்தாவிடம் பேசிய வார்த்தைகள். இயேசு மார்த்தாவிடம் "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்" (யோவா 11: 25-26) என்பார். ஆதலால், நாம் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டு வாழும்பொழுது, அவரைப் போன்று உயிர்த்தெழுவோம் என்பது உறுதி.

இங்கு அமெரிக்காவைச் சார்ந்த கவிஞரும் நாவலாசிரியருமான பிரெடரிக் பூச்னர் (Frederick Buechner) சொல்லக்கூடிய ஒரு செய்தி மிகவும் கவனிக்கத்தக்கது. அவர் சொல்கின்றார்: "இயேசுவின் உயிர்ப்பு, இவ்வுலகில் நாம் எதிர்கொள்கின்ற மிகக்கொடிய துன்பமும் நிரந்தரமானது அல்ல என்பதை உணர்த்துகின்றது." ஆம், அக்காலத்தில் ஒருவருக்குக் கொடுக்கப்பட்ட மிகக்கொடிய தண்டனை சிலுவைச் சாவுதான். அத்தண்டனை ஒரு குற்றமும் செய்யாத இயேசுவுக்குக் கொடுக்கப்பட்டது. யூதர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்துவிட்டால், அவருடைய வாழ்க்கை அத்தோடு முடிந்துவிடும் என்று நினைத்தார்கள். இயேசுவோ சிலுவைச்சாவை வென்று உயிர்த்தெழுந்தார். எனவே, மிகக் கொடிய தண்டனையான சிலுவைச் சாவையே இயேசு வெற்றி கொண்டார் எனில், நம்முடைய வாழ்கையில் வரும் மிகக்கொடிய துன்பத்தையும் (இறைவனுடைய துணையால்) நம்மால் வெற்றிகொள்ள முடியும். னெனில் அக்கொடிய துன்பமும் நிரந்தரமல்ல!

உயிர்ப்புக்குச் சாட்சிகளாய் விளங்குவோம்

கிறிஸ்துவின் உயிர்ப்பு நமது நம்பிக்கைக்குப் பொருளைத் தருகின்றது; நாமும் ஒரு நாள் உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கையைத் தருகின்றது என்று பார்த்தோம். இப்பொழுது கிறிஸ்து உயிர்ப்பு நமக்கு என்ன அழைப்பினைத் தருகின்றது என்று பார்ப்போம்.

நற்செய்தியில், ஆண்டவர் இயேசு உயிர்த்த செய்தியை மகதலா மரியா சீடர்களிடம் சொல்கின்றார். முதல்வாசகத்தில் பேதுரு ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியைச் கொர்னலேயுவின் இல்லத்தில் இருந்தவர்களுக்குச் சொல்கின்றார். இவ்வாறு இவர்கள் உயிர்த்த இயேசுவுக்குச் சான்று பகர்கின்றார்கள். இவர்களைப் போன்று நாம் ஒவ்வொருவரும் உயிர்த்த ஆண்டவர் இயேசுவுக்குச் சான்று பகரவேண்டும். இதை நாம் வார்த்தையால் வெளிப்படுத்திவிட்டால் போதுமா அல்லது வாழ்வாலும் வெளிப்படுத்த வேண்டுமா? என்ற கேள்வி எழலாம். இதற்கான பதிலை இன்றைய இரண்டாம் வாசகம் தருகின்றது.

திருத்தூதர் புனித பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்தில், "கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள்" என்பார். முன்னதாக இயேசு, நாம் இவ்வுலகைச் சார்ந்தவர் அல்ல (யோவா 17: 14) என்று கூறியிருப்பார். புனித பவுல் இக்கருத்தோடு சேர்த்து, நாம் மேலுலகு சார்ந்தவற்றை நாடவேண்டும் என்ற கருத்தினையும் வலியுறுத்திக் கூறுகின்றார். இன்றைக்கு ஒருசிலர் கிறிஸ்தவர்களாக இருந்துகொண்டு தன்னலத்தோடும், தான் என்ற ஆணவத்தோடும் தான்தோன்றித் தனமாக வாழ்வதைக் காணமுடிகின்றது. வேறு சிலர், அடுத்தவர்மட்டில் எந்தவோர் அக்கறையில்லாமலும், கரிசனை இல்லாமலும் வாழ்வதைக் காண முடிகின்றது. "ஆன்மாவின் பெருந்தன்மை என்பது நாம் எத்தனை சந்தர்பங்களில் இரக்கம் காட்டுகின்றோம் என்பதை பொறுத்ததே!" என்பார் ஆங்கிலக் கவிஞர் பேகன். எனவே, நாம் தன்னலத்தையும் தான் என்ற அகந்தையும் துறந்து, அடுத்தவர் மட்டில் இரக்கமும் அன்பும்கொண்டு மேலுலகு சார்ந்த வாழ்ந்து, இயேசுவின் உயிர்ப்புக்குச் சாட்சிகளாய் விளங்குவோம்.

சிந்தனை:
'நாமெல்லாம் உயிர்ப்பின் மக்கள்; அல்லேலூயா என்பதே நமது பாடல்' என்பார் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால். எனவே, உயிர்ப்பின் மக்களாகிய நாம், இவ்வுலகு சார்ந்த வாழ்க்கை வாழாமல், மேலுலகு சார்ந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவகாப் பெறுவோம்.
 
I திருத்தூதர் பணிகள் 10: 34, 37-43.
II கொலோசையர் 3: 1-4.
III யோவான் 20: 1-9


"நாம் சாட்சிகள்" - உயிர்ப்பில் நம்பிக்கையில்லாத பெண்மணி

கிறிஸ்தவராக இருந்தாலும் அந்தப் பெண்மணிக்கு உயிர்ப்பின்மீது நம்பிக்கை கிடையாது. அப்படிப்பட்டவர் தனது இறப்பு நெருங்கி வருவதை அறிந்து தன்னுடைய நண்பரிடம், "நான் இறந்தபிறகு என்னுடைய கல்லறையின்மேல் பெரிய பெரிய சலவைக் கற்களை வைத்துப் பூசிவிடுங்கள். மேலும், என்னுடைய உடல் இப்போது இருப்பதுபோல் நான் இறந்த பின்னும் இருக்கவும், அது உயிர்க்காத வண்ணமாய் இருக்கவும் இரும்புக் கம்பிகள் போட்டு அடைத்துவிடுங்கள்" என்றார்.

அவர் இவ்வாறு சொன்ன ஒருசில நாள்களிலேயே இறந்தார். அதன்பிறகு அவர் சொன்னது போன்றே அவரது நண்பர் அவரது கல்லறையின்மீது பெரிய பெரிய சலவைக் கற்களை வைத்துப் பூசி, அதன்மேல் இரும்புப் கம்பிகளை வைத்துக் கட்டினார்.
ஆண்டுகள் மெல்ல உருண்டோடின. உயிர்ப்பின்மீது நம்பிக்கை இல்லாமல் இறந்த அந்தப் பெண்மணியின் கல்லறையில் லேசாக விரிசல் விழுந்தது. காலப்போக்கில் அந்த விரிசலிலிருந்து ஒரு செடி முளைத்து வளர்ந்து, அது மிகப்பெரிய மரம் வந்தது. அதைப் பார்த்து விட்டு, அப்பகுதியில் இருந்த மக்கள் அனைவரும், "உயிர்ப்பின்மீது நம்பிக்கையில்லாத இந்தப் பெண்மணியின் கல்லறையிலிருந்தே கடவுள் உயிர்ப்புக்குச் சாட்சியாக இவ்வளவு பெரிய மரத்தைத் தோன்றச் செய்தார்" என்று அவரைப் போற்றிப் புகழ்ந்தனர்.

ஆம், உயிர்ப்பு என்பது புதிய வாழ்விற்கான தொடக்கம். இன்றைய நாளில் ஆண்டவருடைய உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இப்பெருவிழா நமக்குத் தரும் செய்தியும், நமக்கு விடுக்கும் அழைப்பும் என்ன என்று சிந்திப்போம்.

சொன்னபடி உயிர்த்த கிறிஸ்து
"இவன் கடவுளுடைய திருக்கோயிலை இடித்து, அதை மூன்று நாளில் கட்டியெழுப்ப என்னால் முடியும் என்றான்" (மத் 26:61) என்பதுதான் தலைமைக் குருக்களும் தலைமைச் சங்கத்தாரும் இயேசுவின்மீது சுமத்திய குற்றசாட்டாகும். இயேசு தமது உடலாகிய கோயிலைப் பற்றிச் சொல்லியிருந்தாலும் (யோவா 2:21), அது அவர்களுக்குப் புரியவில்லை. ஆனால், இயேசு தாம் சொன்னது போன்றே சாவை வென்று, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.

தாம் இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுவது பற்றி இயேசு தம் சீடர்களுக்குப் பலமுறை முன்னறிவித்திருந்தார் (மத் 16:21; மாற் 16:21, 9:31; லூக் 9:22) அப்படியிருந்தும் அவர்கள் அவர் சொன்னதை நம்பாமல் இருந்தார்கள். இந்நிலையில், வாரத்தின் முதல் நாள், விடியற்காலை வேளையில் இயேசு அடக்கம் செய்து வைக்கப்பட்டிருந்த கல்லறைக்கு வரும் மகதலா மரியா கல்லறையில் இயேசுவின் உடல் இல்லாததைக் கண்டு, திருத்தூதர்களிடம் விரைந்து வந்து செய்தியைச் சொல்கிறார். இதன்பிறகு கல்லறைக்கு வரும் யோவான் இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டு, மற்ற துணிகளோடு இல்லாமல், ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டு கண்டு, இயேசு உண்மையாகவே உயிர்த்து விட்டார் என்று நம்புகின்றார்.

இங்கு யோவான் எப்படி இயேசு உயிர்த்துவிட்டார் என நம்பினார் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இயேசுவின் நண்பரான இலாசர் உயிர்பெற்றபோது அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது (யோவா 11:44) இயேசு உயிர்த்தெழுந்தபோது, அவரது தலையை மூடியிருந்த துண்டு, மற்ற துணிகளோடு இல்லாமல், ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்து. இதைக் கண்டு யோவான் இயேசு உயிர்த்தெழுந்து விட்டார் என்று நம்புகின்றார். மேலும் ஒருவேளை இயேசுவின் உடலை யாராவது எடுத்துச் சென்றிருந்ததால், அவரது உடலை மூடியிருந்த துணியோடுதான் எடுத்துச் சென்றிருக்க வேண்டும். அது அங்கு நடக்கவில்லை. எனவேதான் இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என்று நம்புகின்றார் யோவான். இவ்வாறு இயேசு எந்தவோர் ஐயத்திற்கும் இடமில்லாமல் சொன்னபடி உயிர்த்தெழுந்தார்.

சாட்சிகளாக மாறிய சீடர்கள்
ஒருவேளை இயேசு மட்டும் உயிர்த்தெழுந்திருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் என்று சிறிது கற்பனை செய்து பார்ப்போம். சீடர்கள், முன்பு தாங்கள் செய்து வந்த வேலையைச் செய்யக் கிளம்பியிருப்பார்கள். இயேசுவோடு தாங்கள் இருந்ததால், தங்களுக்கும் அவருக்கு ஏற்பட்ட நிலைமைதான் ஏற்படும் என்று அஞ்சி அஞ்சி வாழ்ந்திருப்பர். சிறிது காலத்திற்கு இயேசுவைப் பற்றி அவர்கள் நினைத்துப் பார்த்து வருந்தியிருக்கலாம். சிலுவையைப் பற்றிய அச்சம் அவர்களுக்கு எப்போதும் இருந்துகொண்டே இருந்திருக்கும். ஆனால், இயேசுவின் உயிர்ப்பு இவை எல்லாவற்றையும் முற்றிலுமாக மாற்றிப் போடுகின்றது.

உயிர்த்த ஆண்டவரின் அனுபவத்தைப் பெற்ற சீடர்கள், அதிலும் குறிப்பாக, உயிருக்கு அஞ்சி அவரை மும்முறை மறுதலித்த பேதுரு, நாசரேத்து இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் சாட்சிகள் என்று துணிவோடு அறிவிக்கின்றார். அதை இன்றைய இரண்டாம் வாசகத்தில் வாசிக்கின்றோம். இதுதான் உயிர்த்த ஆண்டவர் இயேசு தம் சீடர்களிடம் ஏற்படுத்திய மாற்றம் ஆகும். அன்று இயேசுவின் சீடர்கள், அவரது உயிர்ப்பைத் தங்கள் வாழ்வாலும் வார்த்தையாலும் அறிவித்து இயேசுவுக்குச் சாட்சிகளாகத் திகழ்ந்தார். நாம் எவ்வாறு இயேசுவின் உயிர்ப்புக்குச் சாட்சிக்லாகத் திகழப்போகின்றோம் என்பதுதான் நமக்கு முன்பாக இருக்கும் கேள்வியாக இருக்கின்றது.

நாம் எப்போது சாட்சிகளாக இருக்கப்போகிறோம்?
புனித பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், "நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள்" என்று வாசிக்கின்றோம். மேலுலகு சார்ந்தவற்றை நாடுவதுதான் இயேசுவுவின் உயிர்ப்புக்குச் சாட்சியாக வாழ்வதாகும். இது பற்றிப் புனித பவுல் கீழ்க்காணும் பகுதிகளில் இன்னும் தெளிவாக விளக்குகின்றார் (உரோ 8:5, 12:2, பிலி 1:23, 4:8)

இயேசுவின் உயிர்ப்புச் சாட்சியாக திகழ்கின்றபோது அல்லது மேலுலகு சார்ந்தவற்றை நாடுகின்றபோது கடவுள் நமக்கு என்னென்ன ஆசிகளை வழங்குவார் என்ற கேள்வி எழலாம். இது பற்றிப் பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தின் இரண்டாவது பகுதியில் தெளிவாக விளக்குகின்றார். நாம் மேலுலகு சார்ந்தவற்றை நாடுகின்றபோது நிலைவாழ்வை அளிக்கும் கடவுளோடு நமது வாழ்வு இணைந்திருக்கும். அதைவிடவும் ஆண்டவர் இயேசு தோன்றும்போது, நாம் அவரோடு மாட்சி பொருந்தியவர்களாய்த் தோன்றுவோம். இத்தகைய ஆசிகளை நாம் பெற இயேசுவுக்குச் சாட்சிகளாகத் திகழ்வது இன்றியமையாதது. எனவே, இயேசுவின் உயிர்ப்பில் பெருமிதம் கொள்வோம். அந்த உயிர்த்த ஆண்டவர் நமக்கு எல்லா ஆசிகளையும் வழங்க, நாம் அவருக்குச் சான்று பகர்ந்து வாழ்வோம்.

சிந்தனைக்கு: "இயேசுவின் உயிர்ப்பில் நம்பிக்கை கொள்ளும் ஒருவரால் முன்பு வாழ்ந்த வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்க முடியாது. அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பார் ஜெர்மனியைச் சேர்ந்த வோல்ஃப்ஹர்ட் பன்னன்பெர்க் (Wolfhart Pannenberg) என்ற அறிஞர். எனவே, இயேசுவின் உயிர்ப்பில் நம்பிக்கை கொள்ளும் நாம் மண்ணுலகு சார்ந்தவற்றை நாடாமல், மேலுலகு சார்ந்தவற்றை நாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.சொன்னபடி உயிர்த்தெழுந்தார்

சில ஆண்டுகளுக்கு முன்பாக ஆப்ரோ அமெரிக்க இனத்தைச் சார்ந்த ஒருவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். இதை அறிந்த ஒருசிலர் அவரிடம், "நீங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறியதன் காரணம் என்ன?" என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், "நீங்கள் ஓர் ஊருக்குச் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த ஊர் உங்களுக்குப் புதிது... போகிற வழியில் இரண்டு பாதைகள் பிரிகின்றன. அப்படியிருக்கும்பொழுது ஒரு பாதையின் ஓரத்தில் பிணமும் இன்னொரு பாதையின் ஓரத்தில் நன்றாக இருக்கும் ஒரு மனிதரும் இருந்தால், நீங்கள் யாரிடம் போகும் ஊருக்கான வழியைக் கேட்பீர்கள்?" என்று கேட்டார். "இதிலென்ன சந்தேகம் நன்றாக இருக்கும் மனிதரிடம்தான் கேட்போம்" என்றார்கள் அந்த மனிதரிடம் கேள்வி கேட்டவர்கள்.

உடனே கிறிஸ்தவ மதத்திற்குப் புதிதாக மாறியவர் அவர்களிடம், "நீங்கள் சொன்னது மிகவும் சரியான பதில். எப்படி நீங்கள் புதிதாகப் போகும் ஊருக்கான வழியை ஒரு பிணத்திடம் கேட்காமல், நன்றாக இருக்கும் ஒரு மனிதரிம் கேட்பீர்களோ, அதுபோன்றுதான் நானும், (இறந்தும் உயிர்த்தெழுந்து) இன்றைக்கும் வாழ்ந்துகொண்டிருக்கின்ற கடவுள் யாரெனத் தேடித் பார்த்தேன். கடைசியில் நான் தேடுகின்ற கடவுள் இயேசுதான் என்பதை உணர்ந்து, அவரைப் பின்பற்றத் தொடங்கினேன்" என்றார்.

அந்த மனிதர் சொல்வதுபோன்று இயேசு ஒருவர்தான் சாவை வென்று, வெற்றிவீரராய் உயிர்த்தெழுந்தவர். அப்படிப்பட்ட ஒருவருடைய உயிர்ப்பைத்தான் இன்று நாம் பெருவிழாவாகக் கொண்டாடுகின்றோம். எனவே, இந்நன்னாளில் இயேசுவின் உயிர்ப்பு எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது? அது நமக்கு உணர்த்தும் செய்திகள் என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

இயேசுவின் உயிர்ப்பு கிறிஸ்தவ வாழ்வின் அடித்தளம்
தூய பவுல் கூறுவார், "கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், நாங்கள் அறிவித்த நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்." (1 கொரி 15: 14) தூய பவுலின் இவ்வார்த்தைகள் இயேசுவின் உயிர்ப்புதான் கிறிஸ்தவ வாழ்வின் அடித்தளம் என்பதை உறுதியாக எடுத்துச் சொல்கின்றன. மேலும் இயேசு தன்னுடைய உயிர்ப்பின்மூலம், தான் இறைமகன் என்பதை (திப 2: 32-36; உரோ 1:4) கடவுள் தனக்குக் கொடுத்த, மனிதர்களை கடவுளுக்கு ஏற்புடையவர்களாக்கும் பணியைச் (உரோ 4: 24-25) செவ்வனே செய்து, நிறைவுசெய்துவிட்டேன் என்பதையும் நிரூபித்துக் காட்டுகின்றார்.

இது ஒருபுறமிருக்க, இயேசுவுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள், "இயேசு உயிர்த்தெழவில்லை... அவருடைய சீடர்கள்தான் அவரது உடலைத் திருடிக்கொண்டு போய்விட்டனர்" என்ற பொய்யான செய்தியை மக்கள் மத்தியில் பரப்பத் தொடங்கினார்கள் (மத் 28: 13). இங்கு இயேசுவுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் சொல்வதுபோன்று, இயேசுவின் சீடர்கள் அவருடைய உடலைத் திருடிக்கொண்டு போனதற்கான ஏதாவது சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவா? என்றால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், இயேசு இறந்து உயிர்த்தெழுவார் என்பதை இயேசுவின் எதிரிகள் நம்பிய அளவுக்கு (மத் 27: 62-66) அவருடைய சீடர்கள் நம்பவில்லை. இதைவிடவும் படைவீரர்களால் காவல்காக்கப்பட்ட இயேசுவின் கல்லறைக்குச் செல்லும் அளவுக்கு இயேசுவின் சீடர்கள் அவ்வளவு துணிச்சல் கிடையாது. காரணம், அவர்கள் தங்களை அறைக்குள் அடைத்துக்கொண்டு வாழ்ந்த பயந்தாங்கோழிகளாக இருந்தார்கள். அப்படி இருக்கையில் இயேசுவின் சீடர்கள் அவருடைய உடலைத் திருடிக்கொண்டு போவதற்கு வாய்ப்பே இல்லை. மாறாக, இயேசு தான் சொன்னபடியே (மாற் 8:31; மத் 17:22; லூக் 9:22; யோவா 2:19) உயிர்த்தெழுந்தார் என்பதுதான் உண்மை.

ஆகவே, யாராலும் மறுக்கமுடியாத அளவுக்கு உண்மையிலும் உண்மையாக இருக்கும் இயேசுவின் உயிர்ப்பு, கிறித்தவ வாழ்வின் அடித்தளம் என்று சொன்னால் அது மிகையாகாது.

இயேசுவின் உயிர்ப்பு நாமும் ஒருநாள் உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கையைத் தருகின்றது
இயேசுவின் உயிர்ப்பு நாமும் ஒருநாள் உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கையைத் தருகின்றது என்றால் அது மிகையாகாது. "இறுதிநாள் உயிர்த்தெழுதலின்போது அவனும் (லாசரும்) உயிர்த்தெழுவான்" என்று சொன்ன மார்த்தாவுக்குப் பதிலளிக்கும் இயேசு, "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்" என்பார். (யோவா 11: 24-25) இயேசு கூறும் இவ்வார்த்தைகள், யாராரெல்லாம் அவர்மீது நம்பிக்கை கொண்டு வாழ்கின்றார்களோ அவர்கள் இறந்தபின்னும் வாழ்வார்கள் என்பதை எடுத்துச் சொல்கின்றது. தூய பவுலும் இதைத்தான், "அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்" (2திமொ 2:11) என்று கூறுகின்றார். ஆகவே, இயேசுவைப் போன்று நாமும் ஒரு நாள் உயிர்த்தெழ அவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்வது தேவையான ஒன்று.

இயேசுவின் உயிர்ப்பு பாவத்திற்கு இறந்து கடவுளுக்காக வாழ்வதற்கான ஓர் அழைப்பு
ஒரு தந்தையும் அவருடைய சிறு வயது மகனும் ஒரு கிராமச் சாலையின் வழியாக, நான்கு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்கள். அப்பொழுது தேன்குளவி ஒன்று சிறுவனுக்கு முன்பாக அங்கும் இங்கும் பறந்துகொண்டிருந்தது. அதைப் பார்த்த பயந்துபோன மகன் தன் தந்தையிடம், அதை அங்கிருந்த விரட்டும்படி சொன்னான். தந்தையோ அந்தத் தேன்குளவியைப் பிடித்து வெளியே எறிந்தார். அப்படியும் மகனுக்குத் தேன்குளவியைப் பற்றிய பயம் போகவில்லை. எனவே, அவன் தன் தந்தையிடம், "அப்பா! அந்தத் தேன்குளவி தன்னிடம் இருக்கும் கொடுக்கால் என்னைக் கொட்டினால், வலியில் உயிர்போய்விடும்" என்றான். அதற்குத் தந்தை அவனிடம், "அந்த தேன்குளவி இனிமேல் உன்னைக் கொட்டுவதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில், அது என்னை ஏற்கனவே கொட்டிவிட்டது" என்று தன்னுடைய கையில் இருந்த அதன் கொடுக்கைக் காட்டினார். எப்படி அந்தத் தந்தை தன் மகனைக் தேன்குளவி கொட்டிவிடக்கூடாது என்பதற்காக தன்மேல் குளவியின் கொட்டினை வாக்கிக் கொண்டாரோ, அதுபோன்று இந்த மனுக்குலத்தின்மீது பாவம்/சாவு வெற்றிகொள்ளக்கூடாது என்பதற்காக இயேசு தன்மீது சாவினை ஏற்றுக்கொண்டு, இறுதியில் அதை வெற்றி கொண்டார். அதனால்தான் தூய பவுல், "சாவே உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கோ?" என்று கேட்கின்றார் (1 கொரி 15: 55). அப்படியென்றால் பாவம் அழிக்கப்பட்டு (உரோ6: 10-11) நாம் அனைவரும் புதுபிறப்பாக மாறியிருக்கின்றோம் என்பது உண்மையாகின்றது.

எனவே, புதுப்பிறப்பாக மாறியிருக்கும் நாம், மீண்டும் பழைய பாவ வாழக்கை வாழாமல், புதிய இயல்புகளான (கலா 5:22) அன்பு, பரிவு, பொறுமை, நம்பிக்கை போன்றவற்றை அணிந்துகொண்டு வாழவேண்டும். அப்பொழுதுதான் இயேசு இறந்து, உயிர்த்ததற்கு அர்த்தமிருக்கும். அப்படியில்லாமல், நாம் பழைய பாவ வாழ்க்கையை வாழ்ந்தால், இயேசுவின் உயிர்ப்பு எந்தவிதத்திலும் அர்த்தம் பெறாது.

சிந்தனை
"நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவை நாடுங்கள்" என்பார் தூய பவுல் (கொலோ 3:1). ஆகவே, இயேசுவின் உயிர்ப்புக்கு அர்த்தம் சேர்க்கும் வகையில், மேலுலகு சார்ந்த காரியங்களான அன்பு, இரக்கம், மன்னிப்பு போன்றவற்றால் நம்மை அணிந்துசெய்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
 
 இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை
 
 
 மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
 
 
 மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
 
 
 திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
கல்லறைக்கு அப்பால்

'வார்த்தை மீது வாசல்கள்' (Windows on the Word) என்ற ஆங்கில நூலில் காணும் நிகழ்ச்சி இது.

டாக்டர் தேஹான் என்பவர் தனது இரு மகன்களுடன் பசுமையான வயல்வெளி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். எங்கிருந்தோ வேகமாகப் பறந்து வந்த தேனீ ஒன்று மூத்தமகன் ரிச்சர்டின் கண்களுக்குமேல் - கண்ணிமையில் கொட்டி விட்டது. அந்தத் தேனீயைக் கீழே உதறித் தள்ளிவிட்டு அங்கிருந்த புல்தரையில் ரிச்சர்ட் விழுந்து கதறினான், அலறினான் வலி தாங்க இயலாமல்.
அதையெல்லாம் கண்டு அதிர்ந்து நின்றான் சின்னவன் மெர்வின். சிறிதுநேரத்தில் அதே தேனி அவனைச் சுற்றி வட்டமிட்டது. தன் அண்ணன் துடித்த துடிப்பை நினைத்தான். அழத் தொடங்கினான். அது தன்னைக் கொட்டிவிடுமோ என்று மிரண்டான். அதே புல்தரையில் உருண்டான், புரண்டான். அப்போது அவனுடைய தந்தை ஓடிவந்து மெர் வினைக் கைகளில் அணைத்துக் கொண்டு "மெர்வின், பயப்படாதே. தைரியமாயிரு. அந்தத் தேனீ உன்னை ஒன்றும் செய்ய முடியாது. அது ஏற்கனவே தன் கொடுக்கை இழந்து விட்டது. அந்தத் தேனீ உன்னை வளைய வளைய வட்டமிடலாம். அச்சுறுத்தலாம். உன் அண்ணனைக் கொட்டியபோதே அதன் கொடுக்கு முறிந்து விட்டது" என்றார்.

நம்மைப் பொறுத்தவரை இயேசு சாவின் கொடுக்கை முறித்து விட்டார். ''சாவு, வீழ்ந்தது. வெற்றி கிடைத்தது. சாவே, உன் வெற்றி எங்கே? சாவே, உன் கொடுக்கு எங்கே? (1 கொரி. 15;55) என்ற திருத்தூதர் பவுலின் ஆவேச வார்த்தைகள் எவ்வளவு ஆழமானவை! அர்த்தமுள்ளவை!

கிறிஸ்துவின் உயிர்ப்பில் திருத்தூதர் வைத்துள்ள நம்பிக்கை, உறுதிப்பாடு வியப்புக்குரியவை. "பாவமே சாவின் கொடுக்கும். ஆகவே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி" என்று திருத்தூதர் பவுலோடு கிறிஸ்தவ உலகமே ஆர்ப்பரிக்கும் பாஸ்கா இரவு இது!

சாவின் மீது வெற்றி, சாவுக்குக் காரணமான பாவத்தின் மீது வெற்றி, பாவத்துக்குக் காரணனான சாத்தானின் மீது வெற்றி, இம்முப்பெரும் வெற்றிக்காக உயிர்த்த ஆண்டவரைக் கைகுலுக்கிப் பாராட்டுவோம். இயேசு பெற்ற அம்முப்பெரும் வெற்றியில் நமக்கும் பங்களிப்பதற்காக அவருக்கு நன்றி கூருவோம்.

1. இயேசு பாவத்தை வென்றார். அவரது உயிர்ப்பு பாவத்தின் மயக்கத்திலிருந்து நம்மை விடுவிக்கிறது. கல்வாரிப் பலியே பாவப் பரிகாரப் பலிதான். கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே, மனிதனுக்கும் மனிதனுக்குமிடையே இருந்த உறவுக்கான தடைச் சுவர்களை உடைத்தெறிந்த பலி, "கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு ஒரே முறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒருமுறை தோன்றுவார். ஆனால் பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார்'' (எபி.9:28)

2. இயேசு சாவை வென்றார். அவரது உயிர்ப்பு சாவின் தூக்கத்திலிருந்து நம்மை எழுப்புகிறது. "பாவத்துக்குக் கிடைக்கும் கூலி சாவு. மாறாகக் கடவுள் கொடுக்கும் அருள்கொடை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோடு இணைந்து வாழும் நிலைவாழ்வு" (உரோமை 6:23). "எல்லாப் பகைவரையும் அடிபணிய வைக்கும் அவரை அவர் ஆட்சி செய்தாக வேண்டும். சாவே கடைசிப் பகைவன். அதுவும் அழிக்கப் படும்" (1 கொரி.15:25, 26) திருத்தூதர் உரத்துச் சொன்ன வார்த்தைகள் இவை. இயேசு வந்ததே, வாழ்வு சாவை விட வலிமையானது என்பதை உணர்த்தவே!

3. இயேசு அலகையை வென்றார். அவரது உயிர்ப்பு அலகையின் மாயையிலிருந்து நம்மைத் தெளிவிக்கிறது. ''கடவுளின் அருளால் அனைவருடைய நலனுக்காகவும் இவர் சாவுக்கு உட்பட வேண்டியிருந்தது... ஊனும் இரத்தமும் கொண்ட அப்பிள்ளைகளைப் போல் அவரும் அதே இயல்பில் பங்கு கொண்டார். இவ்வாறு சாவின் மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாகவே அழித்து விட்டார். வாழ்நாள் முழுவதும் சாவு பற்றிய அச்சத்தினால் அடிமைப் பட்டிருந்தவர்களை விடுவித்தார்" (எபி.2:9, 14, 15). ஏற்கனவே பாலை வனத்திலும் தொழுகைக் கூடத்திலும் சாத்தானை விரட்டியடித்தவர் தானே இயேசு!

"உடலின் உயிர்ப்பை நம்புகிறேன். முடிவில்லா வாழ்வை நம்புகிறேன்" - இது நமது நம்பிக்கைக் கோட்பாட்டின் தெளிவு. உயிர்ப்பு என்பது கிறிஸ்தவக் கோட்பாட்டின் மையம். கிறிஸ்தவ நம்பிக்கைக்கும் வாழ்வுக்கும் ஓர் உந்துசக்தி.

சிறந்த கிறிஸ்தவரும் அறிவியல் அறிஞருமான மைக்கேல் பாரடே மரணப்படுக்கையில் இருந்தார். "சாவுக்குப் பிறகு கிடைக்கும் வாழ்வு எப்படியிருக்கும்?" என்று கேட்டபோது அவர் சொன்னார்: "எனக்குத் தெரியாது. ஆனால் நான் நிலையானவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளேன். காரணம், நான் நம்பும் மீட்பர் உயிர்த்து இன்றும் வாழ்கின்றார். எனவே நான் வாழ்வேன் என்பது உறுதி ". உயிர்ப்பு என்பது மேலோட்டமாகப் பார்த்தால் புரியாத புதிராக, அறிவுக்குப் புலப்படாததாகத் தோன்றும். ஆழமான நம்பிக்கை கொண்டு பார்த்தால் இம்மறைபொருள் காட்டும் மேன்மையை உணர முடியும்.

திருத்தூதர் தெளிவுபடுத்துவது இதுதான்: "இறந்தோர் உயிர்த்தெழ மாட்டார் எனில் கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை என்றாகி விடும். கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்" (1கொரி. 15:13,14)

ஆம், இயேசு உயிர்த்து விட்டார். நமது உயிர்ப்பு வாழ்வுக்கும் உறுதி தந்துவிட்டார். அவரோடு நாமும் உயிர்க்கின்றோம்.
- பொய்யைவிட உண்மை மேலானது என்பதை இயேசுவின் உயிர்ப்புஎண்பிக்கிறது.
- தீமையைவிட நன்மை உறுதியானது என்பதை இயேசுவின் உயிர்ப்பு எடுத்து இயம்புகிறது.
- பகைமையை விட அன்பு, மன்னிப்பு உயர்ந்தது என்பதை இயேசுவின் உயிர்ப்பு உணர்த்துகின்றது.
- சாவை விட வாழ்வு சக்தியானது என்பதை இயேசுவின் உயிர்ப்பு உறுதிசெய்கின்றது.

உயிர்ப்பு நமக்கு அனுபவமாகட்டும். அல்லேலூயா!
 
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி

ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா

இயேசுவின் வாழ்வையும், பாடுகளையும் மையமாகக் கொண்டு, பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில், இயேசுவின் உயிர்ப்பை மையமாகக்கொண்டு, 2016ம் ஆண்டு வெளிவந்த 'Risen' என்ற திரைப்படம் ஒரு சில அதிர்வலைகளை உருவாக்கியது. இயேசுவின் உடல் கல்லறையில் இல்லை என்ற செய்தியை உரோமைய அரசு அதிகாரிகள் எவ்வாறு சந்தித்தனர் என்பதை இத்திரைப்படம் விவரித்தது.

கல்வாரியில் இயேசுவின் மரணத்தை நேரடியாகக் கண்டதோடு, அதை உறுதிசெய்வதற்கு, இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்த உத்தரவிட்ட உரோமையப் படைத்தலைவன் கிளாவியுஸ் என்பவர், இயேசுவின் உடலை யூதர்கள் கடத்திச் சென்றுவிட்டனர் என்ற எண்ணத்துடன், இயேசுவை பின்தொடர்ந்த அனைவரையும் வேட்டையாடி வதைப்பது, இத்திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. இறுதியில், கிளாவியுஸ், இயேசுவைச் சந்தித்து, அவருடைய சீடர்களில் ஒருவராக மாறுவது போன்று இத்திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இயேசுவின் உயிர்ப்பை நம்பாமல், பின்னர் அவரது உயிர்ப்புக்கு சாட்சியாக மாறிய கிளாவியுஸ், நற்செய்திகளில் இடம்பெறாத ஒருவர் என்றாலும், கோடான கோடி மக்களின் பிரதிநிதியாக அவர் இருக்கிறார் என்பதை மறுக்க இயலாது.

இத்திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி, உயிர்ப்பை நம் நம்பிக்கையின் அடித்தளமாகக் கொண்டு வாழும் நம்மைக் குறித்த சிந்தனைகளை துவக்கி வைக்கிறது. இயேசு மீண்டும் உயிர்த்துவிட்டார் என்ற செய்தி கலகத்தை உருவாக்கும் என்ற விவாதம், கிளாவியுஸ் முன்னிலையில், ஆளுநர் பிலாத்தின் அரண்மனையில் நடைபெறுகிறது. அப்போது, பிலாத்து, "மக்கள் இதை நம்புவார்களா?" என்ற கேள்வியை எழுப்புகிறார். அவர் அருகில் நிற்கும் மதத் தலைவர் ஒருவர், "சக்தியற்ற கும்பல் இதை நம்பும்" என்று பதில் சொல்கிறார்.

கடந்த 20 நூற்றாண்டுகளாக, 'சக்தியற்ற கும்பலாக' கருதப்படும் கிறிஸ்தவர்களாகிய நாம், இயேசு உயிர்த்துவிட்டார் என்ற செய்தியை, மிகப்பெரும் விழாவாகக் கொண்டாடி வருகிறோம். நம்மைச் சுற்றி, அனைத்தும் அழிந்துவிட்டதைப்போன்ற உணர்வைத் தரும் நம்பிக்கையற்ற சூழலிலும், நம்பிக்கை தருவதற்கு, கிறிஸ்தவ மறையின் ஆணிவேராக விளங்கும் இயேசுவின் உயிர்ப்பு என்ற உண்மை, கடந்த 20 நூற்றாண்டுகளுக்கும் மேலாக நம்மை வழிநடத்தி வந்துள்ளது. அனைத்தும் அழிவுற்ற நிலையிலும், நம்பிக்கையை வழங்கும் ஒரு சில செய்திகள், அண்மையக் காலங்களில், நம்மை வந்தடைந்துள்ளன. இதோ, அவற்றில் ஒரு சில:

கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி, மதியிழந்த இரஷ்ய அரசுத்தலைவன் விளாடிமீர் புடின் அளித்த அநீதியான ஆணைக்கு உட்பட்டு, இரஷ்ய இராணுவம் உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல்களை துவங்கியது. உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் (Kyiv) மீது பயங்கரத் தாக்குதல்கள் நடைபெற்ற பிப்ரவரி 25ம் தேதி இரவில், அந்நகரின் சுரங்க இரயில் நிலையங்களில் மக்கள் பதுங்கியிருந்தனர். அவ்வேளையில், அங்கிருந்த 23 வயதான இளம்பெண்ணுக்கு பிரசவ வேதனைத் துவங்கியது. அவர் எழுப்பிய அழுகுரலைக் கேட்ட காவல்துறையினர், அப்பெண்ணுக்குத் தேவையான உதவிகள் செய்ததால், அவர் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். பின்னர் தாயும், சேயும் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உயிருக்குப் பயந்து, சுரங்க இரயில் நிலையத்தில் தங்கியிருந்த இளம் பெண்ணின் விரலை, அவரது குழந்தையின் பிஞ்சுக் கரம் பற்றியிருந்த புகைப்படம், சமூக வலைத்தளத்தில் வெகு வேகமாகப் பரவியது. அழிவை எதிர்நோக்கியிருக்கும் சூழலில், 'நம்பிக்கையின் ஒளிவிளக்கு' என்ற தலைப்புடன் இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது.

2011ம் ஆண்டு, அக்டோபர் 23, ஞாயிறன்று, துருக்கி நாட்டின் Van என்ற நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் (7.2 ரிக்டர் அளவு) பல நூறு கட்டடங்கள் இடிந்துவிழுந்தன. அன்றைய நிலவரப்படி, 300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்; 2000த்திற்கும் அதிகமானோர் காயமுற்றனர். ஒரு வாரத்தில், இறந்தோரின் எண்ணிக்கை 604 என்றும், காயமடைந்தோரின் எண்ணிக்கை 4,100 என்றும் கூறப்பட்டது. மரணங்களின் எண்ணிக்கை குறித்த செய்திகள் வெளிவந்த அதே நாள்களில், வாழ்வைப்பற்றிய ஒரு செய்தியும் வெளியானது. பிறந்து, 2 வாரங்களே ஆகியிருந்த, Azra Karaduman என்ற குழந்தை, நிலநடுக்கம் ஏற்பட்டு 48 மணி நேரங்கள் சென்று, இடிபாடுகளின் நடுவிலிருந்து காப்பாற்றப்பட்டது. அதுமட்டுமல்ல, அக்குழந்தை காப்பற்றப்பட்ட அதே இடத்தில், குழந்தையின் தாயும் (Semiha), பாட்டியும் (Gulsaadet) மீட்கப்பட்டனர்.
இக்குழந்தையை, "நம்பிக்கையின் முகம்" என்று ஊடகங்கள் அழைத்தன. Azra என்ற அக்குழந்தையின் பெயருக்கு, "பாலைநிலத்து மலர்" என்பது பொருள் என்றும், 2 வாரக் குழந்தை, இரு தலைமுறைகளைக் காப்பாற்றியது என்றும், இந்நிகழ்வை, ஊடகங்கள் விவரித்தன.

அமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனம் (CBS) இச்செய்தியை ஒளிபரப்பியபோது, Mark Philips என்ற செய்தித் தொடர்பாளர், அழகான ஒரு கருத்தை பதிவுசெய்தார்: "பெரிய, பெரிய புள்ளிவிவரங்களைக் காட்டிலும், சின்னச் சின்ன மனிதாபிமானக் கதைகள் நம் கற்பனையைக் கவர்கின்றன" என்று அவர் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளில், துருக்கியில், ஜப்பானில் (2011), ஹெயிட்டியில் (2010), பல ஆசிய நாடுகளில் (2004), ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி ஆகிய இயற்கைப் பேரிடர்களில் இறந்தோர், காயமுற்றோர் ஆகியோரின் புள்ளிவிவரங்கள் நம் மனதில் பதிந்ததைவிட, அந்த அழிவுகளின் நடுவிலிருந்து, உயிர்கள் மீட்கப்பட்டச் செய்திகள், நம்மை அதிகம் கவர்ந்தன என்பதையும், அவை, நம் உள்ளங்களில், நம்பிக்கை விதைகளை நட்டுவைத்தன என்பதையும் மறுக்கமுடியாது.

கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக, கோவிட்-19 பெருந்தொற்று, நிலநடுக்கமாக, சுனாமியாக, சூறாவளியாக, எரிமலை வெடிப்பாக, இவ்வுலகை பெருமளவு சிதைத்துவருகிறது. இப்பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டோர், மற்றும், இறந்தோரின் எண்ணிக்கையை, ஊடகங்கள், ஒவ்வொரு நாளும், நம் எண்ணங்களில் வலுக்கட்டாயமாகத் திணித்து, நம் உள்ளங்களை கல்லறைகளாக மாற்றிவருகின்றன. ஊடகங்களின் கல்லறைச் செய்திகளிலிருந்து உயிர்த்தெழ, இன்றைய ஞாயிறு நற்செய்தி நமக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன், நம் சிந்தனைகளைத் தொடர்வோம்.

2010ம் ஆண்டு, சனவரி மாதம், ஹெயிட்டியில் நிலநடுக்கத்தால் எற்பட்ட இடிபாடுகளிலிருந்து, பதினாறு நாட்களுக்குப் பின், Darline Etienne என்ற இளம்பெண் உயிரோடு மீட்கப்பட்டது, ஓர் உயிர்ப்பு என்று கூறப்பட்டது. அதே 2010ம் ஆண்டு, சிலே நாட்டு சுரங்க விபத்தில் அகப்பட்ட 33 தொழிலாளிகள், 69 நாட்களுக்குப் பின் உயிரோடு மீட்கப்பட்டது, உயிர்ப்பெனக் கொண்டாடப்பட்டது.

2010ம் ஆண்டு, ஆகஸ்ட் 5ம் தேதி, சிலே நாட்டின் அட்டக்காமா (Atacama) பாலைநிலத்தில் அமைந்துள்ள, தாமிர, தங்கச் சுரங்கம் ஒன்றில் சிக்கிக்கொண்ட 33 தொழிலாளர்கள், அக்டோபர் 12ம் தேதி, அதாவது, 69 நாட்களுக்குப் பின், மீட்கப்பட்டனர். இந்தச் சாதனை முடிந்ததும், சிலே நாட்டின் ஆயர் பேரவைத் தலைவர், ஆயர் Alejandro Karmelic அவர்கள், "சிலே நாடு, இன்று உயிர்ப்பின் நம்பிக்கைக்குச் சான்று பகர்ந்துள்ளது" என்று கூறினார்.

ஆயர் Karmelic அவர்கள், உயிர்ப்பைக் குறித்து, அக்டோபர் மாதத்தில் குறிப்பிட்டது பொருத்தமாகத் தெரிகிறது. உயிர்ப்புக்கும், வசந்தகாலத்திற்கும் தொடர்பு உள்ளது என்பதை அறிவோம். பூமியின் வட பாதி கோளத்தில் (Northern hemisphere), மார்ச், ஏப்ரல் மாதங்களில் வரும் வசந்தகாலத்தையொட்டி, திருஅவையில் தவக்காலமும், உயிர்ப்புத் திருநாளும் கொண்டாடப்படுகின்றன. பூமியின் தென் பாதி கோளத்தில் (Southern hemisphere), அமைந்துள்ள சிலே நாட்டில், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வசந்தகாலம் வரும். எனவே, அந்த சுரங்கத் தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்ட அக்டோபர் மாதத்தில், அவர்கள் உயிர்ப்புத் திருநாளைக் கொண்டாடியிருந்தாலும், பொருத்தமாகவே இருந்திருக்கும்.

கல்வாரிக் கொடுமைகளுக்குப் பின், சாத்தப்பட்ட அறையை, ஒரு கல்லறையாக மாற்றி, அதில், தங்களையே பூட்டி வைத்துக்கொண்ட சீடர்கள், இயேசுவின் உயிர்ப்பிற்குப் பின், அச்சமின்றி, இயேசுவை உலகறியச் செய்தனர். அதேபோல், பாறைகளால் முற்றிலும் மூடப்பட்டு, இனி உயிரோடு மீளமாட்டோம் என்ற அச்சத்தில், சந்தேகத்தில் புதையுண்டிருந்த சிலே நாட்டு சுரங்கத் தொழிலாளிகள், வெளியே வந்தபின், பல நாடுகளுக்குச் சென்று இயேசுவை உலகறியச் செய்தனர். கோவிட்-19 பெருந்தொற்றைக் குறித்த செய்திகளால், இவ்வுலகின்மீது வைக்கப்பட்டுள்ள "நம்பிக்கையின்மை என்ற பாறைகளை அகற்றுவதிலும், மரணத்தைவிட, வாழ்வைக் குறித்து பேசுவதிலும், நம் சக்தியை பயன்படுத்த, உயிர்த்த இறைவன் நம்மை அழைக்கிறார்.

இங்கு நாம் குறிப்பிட்ட 'உயிர்ப்பு நிகழ்வுகள்' ஊடகங்களில் செய்திகளாக வெளிவந்தவை. ஆனால், ஊடகங்களில் செய்திகளாக வராமல், நம் ஒவ்வொருநாள் வாழ்விலும், உயிர்ப்பு, சின்னச்சின்ன நிகழ்வுகள் வழியே நடந்தவண்ணம் உள்ளன. இவை எதுவும் நம் கவனத்தை ஈர்ப்பது கிடையாது. இயேசுவின் உயிர்ப்பு முதல்முறை நிகழ்ந்தபோதும், அது யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை. இத்தகைய உயிர்ப்பு நிகழ்வுகளைக் காண்பதற்கு அன்பின் விழிகள் அவசியம். அன்பின் விழிகள் கொண்டிருப்பதன் அவசியம் குறித்து, இறையியலிலும், ஆன்மீகத்திலும் புலமைபெற்ற அருள்பணி Ronald Rolheiser அவர்கள், "உயிர்ப்பைக் காண" என்ற தலைப்பில் பகிர்ந்துகொண்டிருக்கும் கருத்துக்கள், நம்மை சிந்திக்க அழைக்கின்றன.

இறைவன் நம் சுதந்திரத்தைப் பறித்து, தன் வலிமையைத் திணித்து, நம்மை வலுக்கட்டாயமாக ஒன்றைக் காணும்படி செய்வதில்லை. நம் சுதந்திரத்தை எப்போதும் மதிப்பவர் அவர். இறைவனின் இந்தப் பண்பு, இயேசுவின் உயிர்ப்பு நிகழ்வில் மிகத் தெளிவாகத் தெரிகிறது. உயிர்ப்பு நிகழ்வு, கண்ணையும், கருத்தையும் பறிக்கும் பிரம்மாண்டமான நிகழ்வாக, தலைப்புச் செய்தியாக நிகழவில்லை. இயேசுவின் பிறப்பைப் போலவே, அவரது உயிர்ப்பும் மிக அமைதியாக நிகழ்ந்தது.

இயேசுவின் உயிர்ப்பை ஒரு சிலர் கண்டனர். மற்றவர்களால் அவரைக் காண இயலவில்லை. உயிர்ப்பு என்ற பேருண்மை ஒரு சிலரில் பெரும் மாற்றங்களை உருவாக்கியது. வேறு சிலரோ, அந்த பேருண்மையைப் புரிந்துகொள்ள மறுத்ததோடு, அதை அழிக்கவும் முயற்சிகள் செய்தனர். இந்த வேறுபாடு ஏன்? 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித விக்டரின் ஹுகோ என்பவர் கூறுவது இதுதான்: "அன்பின் கண்களால் காணும்போது, சரியான முறையில் காண முடியும். பேருண்மைகளை சரியான முறையில் புரிந்துகொள்ள முடியும்."

அன்பின் கண்கள் கொண்டு பார்த்த மகதலாவின் மரியா, உயிர்ப்பு நாளன்று விடியற் காலையில் தன் அன்புத் தலைவனின் உடலுக்கு உரிய மாண்பை வழங்க நறுமணத் தைலத்துடன் கல்லறைக்குச் சென்றார் என்பதை உயிர்ப்பு விழாவின் நற்செய்தியாக வாசிக்கிறோம். மனமெங்கும் நிறைந்திருந்த அன்புடன் கல்லறைக்குச் சென்ற மரியா, உயிர்ப்பு என்ற பேருண்மையின் முதல் திருத்தூதராக மாறினார். ஏனைய சீடர்கள் தங்கள் கவலைகளாலும், அச்சத்தாலும் மூடிய கதவுகளுக்குப் பின் பதுங்கியிருந்த வேளையில், மகதலாவின் மரியா துணிவுடன் கல்லறைக்குச் சென்றார். உயிர்த்த இயேசுவை சந்தித்த முதல் சீடராக மாறினார்.

நம்மைச் சுற்றி ஒவ்வொருநாளும் நிகழ்ந்துவரும் அழிவுச் செய்திகளின் விளைவாக, உயிர்ப்பின் நம்பிக்கை நம்மைவிட்டு விலகிச் செல்கிறது. இத்தனை அழிவுகளின் நடுவிலும், அன்பின் கண்கள் கொண்டு பார்க்கப் பழகினால், நம்மைச் சுற்றி சின்னச்சின்ன உயிர்ப்புகள் நிகழ்வதைக் காணமுடியும். இத்தகைய வரத்தை, உயிர்த்த கிறிஸ்து நமக்கு வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம்.
 
 
 
 

வழியிழந்து வருந்துவோரைத் தேற்றும் அன்னையே !
வாழ்க்கைப் பயணம் போகும்போது துணையாய் நின்றவளே!