Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

     
                                         பொதுக்காலம்: 32ஆம் ஞாயிறு
==================================================================================
முதல் வாசகம்
==================================================================================
ஞானத்தைத் தேடுவோர், அதைக் கண்டடைவர்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 6: 12-16

ஞானம் ஒளிமிக்கது; மங்காதது. அதன்பால் அன்புகூர்வோர் அதை எளிதில் கண்டுகொள்வர்; அதைத் தேடுவோர் கண்டடைவர். தன்னை நாடுவோர்க்கு அது தன்னையே விரைந்து வெளிப்படுத்தும்.

வைகறையில் அதைத் தேடுவோர் தளர்ச்சி அடைய மாட்டார்கள்; ஏனெனில் தம் கதவு அருகில் அது அமர்ந்திருப்பதை அவர்கள் காண்பார்கள். அதன்மீது மனத்தைச் செலுத்துவதே ஞானத்தின் நிறைவு.

அதன் பொருட்டு விழிப்பாய் இருப்போர், கவலையிலிருந்து விரைவில் விடுபடுவர். தனக்குத் தகுதியுள்ளவர்களை ஞானம் தேடிச் செல்கிறது; அவர்களுடைய வழியில் கனிவுடன் தன்னையே காட்டுகிறது; அவர்களின் ஒவ்வொரு நினைவிலும் அது அவர்களை எதிர்கொள்கிறது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
==============================================================================
பதிலுரைப் பாடல் -  திபா 63: 1. 2-3. 4-5. 6-7 (பல்லவி: 1b)
==================================================================================
பல்லவி: என் இறைவா! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.

1 கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. பல்லவி

2 உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன். 3 ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. பல்லவி

4 என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன். 5 அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். பல்லவி

6 நான் படுத்திருக்கையில் உம்மை நினைப்பேன்; இரா விழிப்புகளில் உம்மைப் பற்றியே ஆழ்ந்து சிந்திப்பேன். 7 ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன். பல்லவி
==================================================================================
இரண்டாம் வாசகம்

==================================================================================
இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13-18

சகோதரர் சகோதரிகளே, இறந்தோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்; எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துயருறக் கூடாது. இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம்.

அப்படியானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார். ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்குக் கூறுவது இதுவே: ஆண்டவர் வரும்வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், இறந்தோரை முந்திவிட மாட்டோம்.

கட்டளை பிறக்க, தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க, கடவுளுடைய எக்காளம் முழங்க, ஆண்டவர் வானினின்று இறங்கி வருவார்; அப்பொழுது, கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர். பின்னர் உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், அவர்களோடு மேகங்களில் எடுத்துக்கொண்டுபோகப்பட்டு, வான் வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளச் செல்வோம். இவ்வாறு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம். எனவே, இவ்வார்த்தைகளைச் சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக்கொள்ளுங்கள்.
==================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
==================================================================================
மத் 24: 42a,44

அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். அல்லேலூயா.
======================================================================================
நற்செய்தி வாசகம்
=============================================================================================
விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் மானிடமகன் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 1-13

இயேசு தம் சீடர்களுக்குச் சொன்ன உவமையாவது: "விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்: மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப் பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.

அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை.

முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர். மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர்.

நள்ளிரவில், "இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்" என்ற உரத்த குரல் ஒலித்தது. மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர்.

அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, "எங்கள் விளக்குகள் அணைந்து கொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள" என்றார்கள்.

முன்மதியுடையவர்கள் மறுமொழியாக, "உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே, வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக் கொள்வதுதான் நல்லது" என்றார்கள்.

அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்துவிட்டார்.

ஆயத்தமாய் இருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது.

பிறகு மற்றத் தோழிகளும் வந்து, "ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும" என்றார்கள்.

அவர் மறுமொழியாக, "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; எனக்கு உங்களைத் தெரியாத" என்றார்.

எனவே விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது.''
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

==================================================================================

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!