Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

வாசகங்கள்

 

     
          பொதுக்காலம்: 30ஆம் ஞாயிறு          
முதல் வாசகம்

விதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 22: 21-27

ஆண்டவர் கூறியது: அன்னியனுக்கு நீ தொல்லை கொடுக்காதே! அவனைக் கொடுமைப் படுத்தாதே. ஏனெனில் எகிப்து நாட்டில் நீங்களும் அன்னியராய் இருந்தீர்கள். விதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே.

நீ அவர்களுக்குக் கடுமையாகத் தீங்கிழைத்து அவர்கள் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் அவர்கள் அழுகுரலுக்குச் செவிசாய்ப்பேன்.

மேலும் என் சினம் பற்றியெரியும். நான் உங்களை என் வாளுக்கு இரையாக்குவேன். இதனால் உங்கள் மனைவியர் விதவைகளாவர். உங்கள் பிள்ளைகள் தந்தையற்றோர் ஆவர்.

உங்களோடிருக்கும் என் மக்களில் ஏழை ஒருவருக்கு நீ பணம் கடன் கொடுப்பாயானால், நீ அவர்மேல் ஈட்டிக்காரன் ஆகாதே. அவரிடம் வட்டி வாங்காதே.

பிறருடைய மேலாடையை அடகாக நீ வாங்கினால், கதிரவன் மறையுமுன் அதை அவரிடம் திருப்பிக் கொடுத்துவிடு. ஏனெனில், அது ஒன்றே அவருக்குப் போர்வை. உடலை மூடும் அவரது மேலாடையும் அதுவே.

வேறு எதில்தான் அவர் படுத்துறங்குவார்? அவர் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் செவிசாய்ப்பேன். ஏனெனில் நான் இரக்கமுடையவர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
 

பதிலுரைப் பாடல் - திபா 18: 1-2a. 2bc-3. 46, 50 (பல்லவி: 1)

பல்லவி: என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்பு கூர்கின்றேன்.

1 என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்பு கூர்கின்றேன். 2ய ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர். பல்லவி

2bc என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண். 3 போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்; என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன். பல்லவி

46 ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்! என் கற்பாறையாம் அவர் போற்றப் பெறுவாராக! என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவாராக! 50 தாம் ஏற்படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர்; தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே. பல்லவி

 

இரண்டாம் வாசகம்


நீங்கள் கடவுளிடம் திரும்பி, அவருடைய மகன் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்கள்.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 5c-10

சகோதரர் சகோதரிகளே, உங்கள் பொருட்டு நாங்கள் உங்களிடையே எவ்வாறு நடந்து கொண்டோம் என்பதும் உங்களுக்குத் தெரியும். மிகுந்த வேதனை நடுவிலும் நீங்கள் தூய ஆவி அருளும் மகிழ்வோடு இறைவார்த்தையை ஏற்றுக்கொண்டீர்கள். இவ்வாறு எங்களைப் போலவும் ஆண்டவரைப் போலவும் நடப்பவரானீர்கள்.

மாசிதோனியாவிலும் அக்காயாவிலும் உள்ள, நம்பிக்கை கொண்டோர் அனைவருக்கும் முன்மாதிரியானீர்கள். எப்படியெனில், ஆண்டவருடைய வார்த்தை உங்கள் நடுவிலிருந்தே பரவியது.

கடவுள்மீது நீங்கள் நம்பிக்கை கொண்டிருப்பது மாசிதோனியாவிலும் அக்காயாவிலும் மட்டும் அல்ல, எல்லா இடங்களிலும் தெரிய வந்துள்ளது. எனவே இதைப் பற்றி நாங்கள் எடுத்துச் சொல்ல வேண்டிய தேவையே இல்லை.

நாங்கள் உங்களிடம் வந்தபோது எவ்வாறு நீங்கள் எங்களை வரவேற்றீர்கள் என்று அவர்களே கூறுகிறார்கள். நீங்கள் எவ்வாறு சிலைகளை விட்டுவிட்டு, உண்மையான, வாழும் கடவுளுக்கு ஊழியம்புரியக் கடவுளிடம் திரும்பி வந்தீர்கள் என்றும் கூறிவருகிறார்கள்.

இவ்வாறு நீங்கள் வானினின்று வரும் அவருடைய மகன் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்கள். அவரே வரப்போகும் சினத்திலிருந்து நம்மை மீட்பவர். இறந்த அவரையே தந்தை உயிர்த்தெழச் செய்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


யோவா 14: 23

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
 

நற்செய்தி வாசகம்

உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 34-40

அக்காலத்தில் இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர்.

அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன், "போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?" என்று கேட்டார்.

அவர், "உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து." இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை.

"என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை.

திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன'' என்று பதிலளித்தார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



 

 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா