ஆண்டவரது
திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே.
இறைவாக்கினர்
எசாயா நூலிலிருந்து வாசகம் 5: 1-7
என் நண்பரைக் குறித்துக் கவி
பாடுவேன்; என் அன்பரின் திராட்சைத் தோட்டத்தைப் பற்றிக்
காதல் பாட்டொன்று பாடுவேன். செழுமைமிக்கதொரு
குன்றின்மேல் என் நண்பருக்குத் திராட்சைத் தோட்டம் ஒன்றிருந்தது.
அவர் அதை நன்றாகக் கொத்திக் கிளறிக் கற்களைக் களைந்தெடுத்தார்;
நல்ல இனத் திராட்சைக் கொடிகளை அதில் நட்டுவைத்தார்;
அவற்றைக் காக்கும் பொருட்டுக் கோபுரம் ஒன்றைக் கட்டி
வைத்தார்; திராட்சைப் பழம் பிழிய ஆலை ஒன்றை அமைத்தார்;
நல்ல திராட்சைக் குலைகள் கிட்டும் என எதிர்பார்த்துக்
காத்திருந்தார்; மாறாக, காட்டுப் பழங்களையே அது தந்தது.
இப்பொழுது என் நண்பர் சொல்கிறார்; எருசலேமில்
குடியிருப்போரே, யூதாவில் வாழும் மனிதரே, எனக்கும் என்
திராட்சைத் தோட்டத்திற்கும் இடையே நீதி வழங்குங்கள்.
என் திராட்சைத் தோட்டத்திற்குச் செய்யாது நான் விட்டு
விட்டதும் இனிச் செய்யக் கூடியதும் ஏதும் உண்டோ? நற்கனிகளைத்
தரும் என்று நான் காத்திருக்க, காட்டுப் பழங்களை அது
தந்ததென்ன?
என் திராட்சைத் தோட்டத்திற்குச் செய்யப் போவதை உங்களுக்கு
நான் அறிவிக்கிறேன்இ கேளுங்கள்: "நானே அதன் வேலியைப்
பிடுங்கி எறிவேன்; அது தீக்கிரையாகும்; அதன் சுற்றுச்
சுவரைத் தகர்த்தெறிவேன்; அது மிதியுண்டு போகும். நான்
அதைப் பாழாக்கி விடுவேன்; அதன் கிளைகள் நறுக்கப்படுவதில்லை;
களையை அகற்ற மண் கொத்தப் படுவதுமில்லை; நெருஞ்சியும்,
முட்புதர்களுமே அதில் முளைக்கும்; அதன்மீது மழை
பொழியாதிருக்க மேகங்களுக்குக் கட்டளையிடுவேன்.''
படைகளின் ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே;
அவர் ஆர்வத்துடன் நட்ட கன்று யூதா மக்களே; நீதி
விளையுமென்று எதிர்நோக்கியிருந்தார்; ஆனால் விளைந்ததோ
இரத்தப்பழி; நேர்மை தழைக்கும் என்று காத்திருந்தார்;
ஆனால் தழைத்ததோ முறைப்பாடு.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
- திபா 80: 8,11. 12-13. 14-15.
18-19 (பல்லவி: எசா 5: 7a)
பல்லவி: ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே.
8 எகிப்தினின்று திராட்சைக் கொடி ஒன்றைக் கொண்டு வந்தீர்;
வேற்றினத்தாரை விரட்டிவிட்டு அதனை நட்டு வைத்தீர். 11
அதன் கொடிகள் கடல் வரையும் அதன் தளிர்கள் பேராறு வரையும்
பரவின. பல்லவி
12 பின்னர்இ நீர் ஏன் அதன் மதில்களைத் தகர்த்துவிட்டீர்?
அவ்வழிச் செல்வோர் அனைவரும் அதன் பழத்தைப் பறிக்கின்றனரே!
13 காட்டுப் பன்றிகள் அதனை அழிக்கின்றன; வயல்வெளி உயிரினங்கள்
அதனை மேய்கின்றன. பல்லவி
14 படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று
கண்ணோக்கிப் பாரும்; இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு
காட்டும்! 15 உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென
நீர் வளர்ந்த மகவைக் காத்தருளும்! பல்லவி
18 இனி நாங்கள் உம்மை விட்டு அகலமாட்டோம்; எமக்கு
வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம்.
19 படைகளின் கடவுளான ஆண்டவரே! எங்களை முன்னைய நன்னிலைக்குக்
கொணர்ந்தருளும்! நாங்கள் விடுதலை பெறுமாறு உமது முக ஒளியைக்
காட்டியருளும்! பல்லவி
இரண்டாம் வாசகம்
அமைதியை அருளும் கடவுள் உங்களோடு
இருப்பார்.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு
எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-9
சகோதரர் சகோதரிகளே, எதைப் பற்றியும் கவலைப்பட
வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறைவேண்டல், மன்றாட்டு
ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத்
தெரிவியுங்கள்.
அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு
இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும்
பாதுகாக்கும்.
இறுதியாக, சகோதரர் சகோதரிகளே, உண்மையானவை எவையோ, கண்ணியமானவை
எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை
எவையோ, பாராட்டுதற்கு உரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ,
போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனத்தில் இருத்துங்கள்.
நீங்கள் என்னிடம் கற்றுக்கொண்டவை, என் வழியாய்ப்
பெற்றுக்கொண்டவை, என்னிடம் கேட்டறிந்தவை, என் வாழ்வில்
நீங்கள் கண்டுணர்ந்தவை யாவற்றையும் கடைப்பிடியுங்கள்.
அப்போது அமைதியை அருளும் கடவுள் உங்களோடு இருப்பார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
நற்செய்திக்கு
முன் வாழ்த்தொலி
யோவா 15: 16
அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும்
கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு
அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து
வாசகம் 21: 33-43
அக்காலத்தில் இயேசு தலைமைக் குருக்களையும் மக்களின்
மூப்பர்களையும் நோக்கிக் கூறியது: "மேலும் ஓர் உவமையைக்
கேளுங்கள்; நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம்
போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து, அதில் பிழிவுக் குழி
வெட்டி ஒரு காவல் மாடமும் கட்டினார்; பின்பு தோட்டத்
தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு
நெடும் பயணம் மேற்கொண்டார்.
பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்தபோது அவர் தமக்குச்
சேரவேண்டிய பழங்களைப் பெற்று வரும்படி தம் பணியாளர்களை
அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார்.
தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து,
ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்;
ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள்.
மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களை விட மிகுதியான
வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே
அவர்கள் செய்தார்கள்.
தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக்கொண்டு
அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார்.
அம்மகனைக் கண்டபோது தோட்டத் தொழிலாளர்கள், "இவன்தான்
சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக்
கொன்றுபோடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக்
கிடைக்கும்" என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
பின்பு அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு
வெளியே தள்ளிக் கொன்று போட்டார்கள். எனவே, திராட்சைத்
தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன
செய்வார்?'' என இயேசு கேட்டார்.
அவர்கள் அவரிடம், "அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து
விடுவார்; உரிய காலத்தில் தமக்குச் சேரவேண்டிய பங்கைக்
கொடுக்க முன்வரும் வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத்
தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார்'' என்றார்கள்.
இயேசு அவர்களிடம், "கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு
மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; நம்
கண்களுக்கு இது வியப்பாயிற்று!" என்று நீங்கள் மறைநூலில்
ஒருபோதும் வாசித்தது இல்லையா? எனவே உங்களிடமிருந்து இறையாட்சி
அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும்
ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச்
சொல்கிறேன்'' என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
|