Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

வாசகங்கள்

 

     
          பொதுக்காலம்: 26ஆம் ஞாயிறு          
முதல் வாசகம்

பொல்லார் நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால், தம் உயிரை அவர்கள் காத்துக் கொள்வர்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 18: 25-28


ஆண்டவர் கூறுவது: "தலைவரின் வழி செம்மையானதாக இல்ல" என்று நீங்கள் சொல்கிறீர்கள். இஸ்ரயேல் வீட்டாரே! கேளுங்கள். என் வழியா நேர்மையற்றது? உங்கள் வழிகளன்றோ நேர்மையற்றவை!

நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்தால், அவர்கள் தாம் இழைத்த தவற்றின் பொருட்டுச் சாவர். பொல்லார் தாம் செய்த பொல்லாப்பினின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால், தம் உயிரை அவர்கள் காத்துக் கொள்வர். அவர்கள் உண்மையைக் கண்டுணர்ந்து, தாம் செய்த குற்றங்கள் அனைத்தினின்றும் விலகிவிட்டால், அவர்கள் வாழ்வது உறுதி; அவர்கள் சாகமாட்டார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
 

பதிலுரைப் பாடல் - திபா 25: 4-5. 6-7. 8-9 (பல்லவி: 6a)


பல்லவி: ஆண்டவரே, உம் இரக்கத்தையும், பேரன்பையும் நினைந்தருளும்.

4 ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்; 5 உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும். ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்; உம்மையே நான் நாள் முழுவதும் நம்பியிருக்கின்றேன். பல்லவி

6 ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும். ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. 7 என் இளமைப் பருவத்தின் பாவங்களையும், என் குற்றங்களையும் நினையாதேயும், உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். பல்லவி

8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். 9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். பல்லவி
 

இரண்டாம் வாசகம்


கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்!

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-11

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் ஊக்கம் பெற்றுள்ளீர்களா? அன்பினால் ஆறுதலும், தூய ஆவியினால் தோழமையும் பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டுள்ளீர்களா? அப்படியானால் நீங்கள் ஒரே எண்ணமும் ஒரே அன்பும் ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து, ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள். கட்சி மனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தர வேண்டாம். மனத் தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள்.

நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும். கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்! கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை.

ஆனால் தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து, தம்மையே தாழ்த்திக்கொண்டார்.

எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக "இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
 

அல்லது


குறுகிய வாசகம்

கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்!

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-5

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் ஊக்கம் பெற்றுள்ளீர்களா? அன்பினால் ஆறுதலும், தூய ஆவியினால் தோழமையும் பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டுள்ளீர்களா?

அப்படியானால் நீங்கள் ஒரே எண்ணமும் ஒரே அன்பும் ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து, ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள். கட்சி மனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தர வேண்டாம்.

மனத்தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள். நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும். கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


யோவா 10: 27
அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.
 

நற்செய்தி வாசகம்



வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 28-32

அக்காலத்தில் இயேசு கூறியது: "இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், "மகனே நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்' என்றார்.

அவர் மறுமொழியாக "நான் போக விரும்பவில்லை' என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார்.

அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார்.

அவர் மறுமொழியாக "நான் போகிறேன் ஐயா!' என்றார்; ஆனால் போகவில்லை.

இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?'' என்று கேட்டார். அவர்கள் "மூத்தவரே'' என்று விடையளித்தனர்.

இயேசு அவர்களிடம், "வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரிதண்டுவோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவும் இல்லை; அவரை நம்பவும் இல்லை'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா