என் எண்ணங்கள்
உங்கள் எண்ணங்கள் அல்ல.
இறைவாக்கினர் எசாயா
நூலிலிருந்து வாசகம் 55: 6-9
ஆண்டவரைக் காண்பதற்கு
வாய்ப்புள்ள போதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும்
போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். கொடியவர் தம் வழிமுறையையும்,
தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக; அவர்கள்
ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்; அவர்அவர்களுக்கு இரக்கம்
காட்டுவார்; அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்; ஏனெனில்
மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர்.
என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள்
என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர். மண்ணுலகத்திலிருந்து
விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட
என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும்
மிக உயர்ந்திருக்கின்றன.
இது ஆண்டவர்
வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
- திபா 145: 2-3. 8-9.
17-18 (பல்லவி: 18a)
பல்லவி: தம்மை
நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில்
இருக்கிறார்.
2 நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும்
எப்பொழுதும் புகழ்வேன். 3 ஆண்டவர் மாண்புமிக்கவர்;
பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு
எட்டாதது. பல்லவி
8 ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம்
கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். 9 ஆண்டவர் எல்லாருக்கும்
நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம்
காட்டுபவர். பல்லவி
17 ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்;
அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. 18 தம்மை
நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை
நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.
பல்லவி
இரண்டாம் வாசகம்
நான்
வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே.
திருத்தூதர் பவுல்
பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1:
20c-24, 27a
சகோதரர் சகோதரிகளே,
வாழ்விலும் சாவிலும் முழுத் துணிவுடன் கிறிஸ்துவை என்
உடலால் பெருமைப்படுத்துவேன். இதுவே என் பேராவல், இதுவே
என் எதிர் நோக்கு. ஏனெனில் நான் வாழ்ந்தால் அது
கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே.
எனினும் நான் தொடர்ந்து வாழ்ந்தால் பயனுள்ள பணி செய்ய
முடியும்.
எனவே நான் எதைத் தேர்ந்து கொள்வதென எனக்குத் தெரியவில்லை.
இந்த இரண்டுக்கும் இடையே ஓர் இழுபறி நிலையில் உள்ளேன்.
உயிர் நீத்துக் கிறிஸ்துவோடு இருக்கவேண்டும் என்னும்
ஆவல் ஒரு புறம். - இதுவே மிகச் சிறந்தது. - ஆனால், இன்னும்
வாழவேண்டும் என்பது மற்றொரு புறம். - இது உங்கள்
பொருட்டு மிகத் தேவையாய் இருக்கின்றது.
ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள்: கிறிஸ்துவின் நற்செய்திக்கு
ஏற்றவாறு நடந்துகொள்ளுங்கள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
நற்செய்திக்கு
முன் வாழ்த்தொலி
திப. 16: 14b
அல்லேலூயா, அல்லேலூயா!
உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி
ஆண்டவரே, எங்கள் இதயத்தைத் திறந்தருளும். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நான் நல்லவனாய் இருப்பதால்
உமக்குப் பொறாமையா?
மத்தேயு எழுதிய
நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-16a
அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக்
கூறிய உவமை: "விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்:
நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த
விடியற்காலையில் வெளியே சென்றார். அவர் நாளொன்றுக்கு
ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு
அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார்.
ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்றபொழுது
சந்தை வெளியில் வேறு சிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார்.
அவர்களிடம், "நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப்
போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன" என்றார்.
அவர்களும் சென்றார்கள்.
மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல்
மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார்.
ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர்
நிற்பதைக் கண்டார். அவர்களிடம், "நாள் முழுவதும் வேலை
செய்யாமல் ஏன் இங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள்?"என்று
கேட்டார்.
அவர்கள் அவரைப் பார்த்து, "எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்ல"
என்றார்கள். அவர் அவர்களிடம், "நீங்களும் என்
திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள" என்றார்.
மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம்
மேற்பார்வையாளரிடம், "வேலையாள்களை அழைத்துக் கடைசியில்
வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர் வரை அவர்களுக்குரிய
கூலி கொடும்" என்றார்.
எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம்
பெற்றுக் கொண்டனர். அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு
மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும்
ஒரு தெனாரியம் வீதம்தான் பெற்றார்கள். அவர்கள் அதைப்
பெற்றுக்கொண்ட போது அந்நிலக்கிழாருக்கு எதிராக
முணுமுணுத்து, "கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே
வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும்
வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி
விட்டீர" என்றார்கள்.
அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, "தோழரே, நான் உமக்கு
அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம்
கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா? உமக்குரியதைப்
பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில்
வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை
நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான்
நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?" என்றார்.
இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்''
என்று இயேசு கூறினார்.
இது
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
|