தீயோர் தம் வழியிலிருந்து
திரும்பும்படி நீ அவர்களை எச்சரிக்காவிடில், அவர்களது
இரத்தப்பழியை உன் மேல் சுமத்துவேன்.
இறைவாக்கினர் எசேக்கியேல்
நூலிலிருந்து வாசகம் 33: 7-9
ஆண்டவர் கூறியது:
மானிடா! நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்கும் காவலாளியாக
ஏற்படுத்தியுள்ளேன். என் வாயினின்று வரும் வாக்கைக்
கேட்கும் போதெல்லாம் நீ என் பொருட்டு அவர்களை எச்சரிக்க
வேண்டும்.
தீயோரிடம் நான், "ஓ தீயோரே! நீங்கள் உறுதியாகச் சாவீர்கள்'
என்று சொல்ல, அத்தீயோர் தம் வழியிலிருந்து திரும்பும்படி
நீ அவர்களை எச்சரிக்காவிடில், அத்தீயோர் தம் குற்றத்திலேயே
சாவர்; ஆனால், அவர்களது இரத்தப் பழியை உன் மேலேயே சுமத்துவேன்.
ஆனால் தீயோரை அவர்கள் தம் வழியிலிருந்து திரும்ப
வேண்டுமென்று நீ எச்சரித்தும் அவர்கள் தம் வழியிலிருந்து
திரும்பாவிட்டால், அவர்கள் தம் குற்றத்திலேயே சாவர்.
நீயோ, உன் உயிரைக் காத்துக் கொள்வாய்.
இது ஆண்டவர்
வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
(திபா 95: 1-2.
6-7. 8-9 (பல்லவி: 8b)
பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
1 வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது
மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.
2 நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப் பாக்களால்
அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். பல்லவி
6 வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய
ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம்.
7 அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்;
நாம் அவர் பேணிக் காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது
குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! பல்லவி
8 அன்று மெரிபாவிலும், பாலைநிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல்,
உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
9 அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக்
கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். பல்லவி
இரண்டாம் வாசகம்
அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு
எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 13: 8-10
சகோதரர் சகோதரிகளே,
நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர்
அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய்
இருக்கட்டும். பிறரிடத்தில் அன்புகூர்பவர் திருச்சட்டத்தை
நிறைவேற்றுபவர் ஆவார்.
ஏனெனில், "விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு
செய்யாதே, பிறருக்குரியதைக் கவர்ந்திட விரும்பாதே" என்னும்
கட்டளைகளும், பிற கட்டளைகளும், "உன்மீது அன்புகூர்வதுபோல்,
உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக" என்னும்
கட்டளையில் அடங்கியுள்ளன.
அன்பு அடுத்திருப்பவருக்குத் தீங்கிழைக்காது. ஆகவே அன்பே
திருச்சட்டத்தின் நிறைவு.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
நற்செய்திக்கு
முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா!
கடவுள் உலகினரைக் கிறிஸ்துவின் வாயிலாகத் தம்மோடு ஒப்புரவாக்கினார்.
அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார்.
அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
குற்றம் செய்தவர் உங்களுக்குச்
செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து
வாசகம் 18: 15-20
அக்காலத்தில் இயேசு சீடர்களிடம் கூறியது:
"உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப்
பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது
அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச்
செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்.
இல்லையென்றால் "இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய
வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்" என்னும்
மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக்
கூட்டிக்கொண்டு போங்கள். அவர்களுக்கும்
செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும்
செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர்
போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும்.
மண்ணுலகில் நீங்கள் தடை செய்பவை அனைத்தும் விண்ணுலகிலும்
தடை செய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும்
விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச்
சொல்கிறேன்.
உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக்
குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என்
தந்தை அதை அவர்களுக்கு அருள்வார்.
ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின்
பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே
அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச்
சொல்கிறேன்" என்றார்.
இது
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
|