Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

வாசகங்கள்

 

     
          பொதுக்காலம்: 17ஆம் ஞாயிறு          
முதல் வாசகம்

ஆண்டவரின் வாக்கு என்னை பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 20: 7-9

ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்; நானும் ஏமாந்து போனேன்; நீர் என்னைவிட வல்லமையுடையவர்; என்மேல் வெற்றி கொண்டுவிட்டீர்; நான் நாள் முழுவதும் நகைப்புக்கு ஆளானேன். எல்லாரும் என்னை ஏளனம் செய்கின்றார்கள். நான் பேசும்போதெல்லாம் "வன்முறை அழிவு" என்றே கத்த வேண்டியுள்ளது; ஆண்டவரின் வாக்கு என்னை நாள் முழுதும் பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது.

அவர் பெயரைச் சொல்ல மாட்டேன்; அவர் பெயரால் இனிப் பேசவும் மாட்டேன்'' என்பேனாகில், உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனேன்; இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
 

பதிலுரைப் பாடல்   திபா 63: 1. 2-3. 4-5. 7-8 (பல்லவி: 1b)

பல்லவி: கடவுளே! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.

1 கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. பல்லவி
2 உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன். 3 ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. பல்லவி

4 என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன். 5 அறுசுவை விருந்தில் நிறைவடைவது போல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். பல்லவி

7 ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன். 8 நான் உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்; உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது. பல்லவி

 

இரண்டாம் வாசகம்

 தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 12: 1-2

சகோதரர் சகோதரிகளே, கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு உங்களை வேண்டுகிறேன்: கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு.

இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! அல்லேலூயா.
 

நற்செய்தி வாசகம்

என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, என்னைப் பின்பற்றட்டும்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 21-27

அக்காலத்தில் இயேசு தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு அந்நேரம் முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார்.

பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டு, "ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது'' என்றார்.

ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, "என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவைபற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய" என்றார்.

பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர்.

மாறாக, என் பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார். மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? மானிட மகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதர்களுடன் வரப் போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா