✠ புனித ஆசிர்வாதப்பர்
✠(St.Benedict ) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(ஜூலை
/
Juill-
11) |
✠
புனித ஆசிர்வாதப்பர் ✠(St.Benedict )
ஐரோப்பாவின் தந்தை
இருபத்தைத்திற்கும் மேற்பட்ட திருத்தந்தையர்கள், நான்காயிரத்து
ஐநூறுக்கும் மேற்பட்ட ஆயர்கள், ஐயாரத்திற்கும் மேற்பட்ட புனிதர்கள்
இவர்களெல்லாம் உருவாவதற்குக் காரண கர்த்தாவாக இருந்தவர் இன்று
நாம் விழாக் கொண்டாடும் தூய ஆசிர்வாதப்பர் என்பதாலேயே திருத்தந்தை
பனிரெண்டாம் பத்திநாதர் இவரை 'ஐரோப்பாவின் தந்தை'என்று அழைக்கின்றார்.
வாழ்க்கை வரலாறு
ஆசிர்வாதப்பர் 480 ஆம் ஆண்டு இத்தாலியில் உள்ள நர்சியா என்னும்
ஊரில், ஒரு செல்வச் செழிப்பான குடுப்பத்தில் பிறந்தார். இவருக்கு
ஒரு சகோதரி இருந்தார். அவர்தான் தூய கொலாஸ்டிகா. ஆசிர்வாதப்பரின்
பெற்றோர் அவருக்கு நல்ல கல்வி கொடுக்கவேண்டும் என்பதற்காக அவரை
உரோமைக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் அங்கே அவரோடு படித்த தோழர்களின்
தீய பழக்கவழக்கங்கள் அவருக்குப் பிடிக்காமல் போனதால், அவர் அங்கிருந்து
வெளியேற சுபியாகோ என்னும் இடத்தில் இருந்த ஒரு குகையில் தங்கி,
தவ முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கினார். சிறிது காலத்திற்குப்
பின்னர் எர்பானுஸ் என்னும் முனிவருக்கு கீழே இருந்து பயிற்சிகள்
பெற்ற இவர் ஓரிரு ஆண்டுகளிலே ஆன்மீகத்தில் முழு வளர்ச்சி அடைந்தார்.
அதன்பிறகு இவர் மொண்டே காசினோ என்னும் இடத்திற்குச் சென்று அங்கே
துறவற சபையைத் தொடங்கினார். அதுதான் பின்னாளில் ஆசிர்வாதப்பர்
சபையாக உருவானது.
ஆசிர்வாதப்பர் துறவற சபையின் ஒழுக்க நெறிகளை உருவாக்கினர். அது
இன்றைக்கு ஏறக்குறைய எல்லாத் துறவற மடங்களிலும் விவிலியத்திற்கு
அடுத்த இடத்தில் இருந்து துறவிகளின் உருவாக்கத்தில் முக்கியப்
பங்காற்றுகின்றது. ஆசிர்வாதப்பரின் துறவு வாழ்க்கையைப்
பார்த்துவிட்டு ஏராளமான இளைஞர்கள் அவருடைய சபையில் வந்து
சேர்ந்தார்கள். அதனால் சபை மேலும் மேலும் வளர்ந்தது. ஒருசமயம்
இவருடைய துறவற மடத்தில் தங்கிப் பயிற்சி பெற்று வந்த இளைஞன் ஒருவன்
இவர் தருகின்ற பயிற்சிகள் கடுமையாக இருப்பதாக நினைத்து அவருக்கு
உணவில் விஷம் வைத்துக் கொல்லப் பார்த்தான். ஆனால் ஆசிர்வாதப்பரோ
இறையுதவியால் விஷம் கலந்த அந்த உணவைக் கூட நல்ல உணவாக மாற்றி,
அந்த ஆபத்திலிருந்து தப்பித்தார்.
இவர் தன்னுடைய துறவற மடத்தில் இருந்த இளந்துறவிகளுக்கு பயிற்சிகள்
கொடுத்ததோடு மட்டுமல்லாமல், நேரம் கிடக்கின்றபோதெல்லாம் அக்கம்
பக்கத்தில் இருந்த நோயாளிகளைச் சந்தித்து, அவர்களோடு நீண்ட நேரம்
உறவாடினார். மட்டுமல்லாமல், இறந்த ஒருசிலரையும் உயிர்த்தெழச்
செய்தார். இதனால் பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் அவர் இருந்த
இடத்திற்கு வந்து, அவரிடமிருந்து நலம்பெற்றுச் சென்றார்கள்.
அந்நாட்களில் உடல் உழைப்பு என்பது மிகவும் கீழானதாகவும் கேவலமாகவும்
பார்க்கப்பட்டது. அத்தகைய சூழலில் 'ORA ET LABORA'அதாவது ஜெபமும்
உழைப்பும் என்று சொல்லி மனித உழைப்பை உயர்வாகப் பார்த்தார். தன்னுடைய
சபையில் இருந்த துறவிகள் உழைப்பிணை இழிவானதகப் பார்க்கக்
கூடாது, மாறாக அதனை உயர்வாகவும் உயர்வுக்கான ஒரு வழியாகவும்
பார்க்கவேண்டும் என்று போதித்தார். இப்படி துறவற வாழ்வில்
பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்த ஆசிர்வாதப்பர் 540 ஆம் ஆண்டு தன்னுடைய
கண்களை வானத்தை நோக்கிப் பார்த்தவாறே உயிர் துறந்தார்.
கற்றுக் கொள்ளவேண்டிய பாடம்
தூய ஆசிர்வாதப்பரின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து
என்ன பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து
நிறைவு செய்வோம்.
1. உடல் உழைப்பு என்பது இழிவானதல்ல, அதுவே உயர்வுக்கான வழி
தூய ஆசிர்வாதப்பரின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் நம்முடைய
மனத்தில் இருந்தவேண்டிய மிக முக்கியமான சிந்தனை "உடல் உழைப்பு
என்பது இழிவானதல்ல, அது உயர்வுக்கான வழி" என்பது ஆகும்.
அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கும் கூட ஒருசிலர் உடல் உழைப்பை மிகவும்
இழிவாகப் பார்ப்பது வேதனையாக இருக்கின்றது. உடல் உழைப்பு இல்லையென்றால்
இந்த உலகமே இயங்காது என்பதுதான் உண்மை.
ஒரு முறை சுயமுன்னேற்றப் பேச்சாளர் ஒருவரை நிகழ்ச்சி ஒன்றிக்கு
அழைத்திருந்தனர். வரவேற்புரை முடிந்ததும், நினைவுப் பரிசு தரவந்தனர்.
பேச்சாளர் வாங்க மறுத்தார். நேரடியாக தன் உரையைத் தொடங்கினார்.
பேசி முடித்தபின் அமைப்பாளரிடம் சொன்னார், "கடின உழைப்புக்கே
வெகுமதி என்று நான் பேச வந்திருக்கின்றேன். உழைக்காமலேயே வெகுமதியைப்
பெறுவது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்" என்றார். உடனே கூட்டத்திலிருந்து
பலத்த கரகோஷம் எழுந்தது.
ஆம், உழைப்புதான் வெகுமதி கிடையாது. உழைக்காமல் இருப்பதும், உழைப்பை
இழிவாகப் பார்ப்பதும் தவறான ஒன்றாகும். ஆகவே, தூய ஆசிர்வாதப்பரின்
விழாவைக் கொண்டாடும் நாம் உழைப்பை உயர்வாகப் போற்றுவோம், இறைவனுக்கு
உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
|
|
|