Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் முதலாம் விக்டர் ✠(St. Victor I)
   
நினைவுத் திருநாள் : (ஜூலை / july- 28)
✠ புனிதர் முதலாம் விக்டர் ✠ (St. Victor I)

14ம் திருத்தந்தை:
(14th Pope)
பிறப்பு: தெரியவில்லை

ரோமப் பேரரசின் கீழ் இருந்த வடமேற்கு ஆப்பிரிக்க கடற்கரை பிராந்தியம்
(Africa Proconsulare)

இறப்பு: கி.பி. 199
ரோம், ரோமப் பேரரசு
(Rome, Roman Empire)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

நினைவுத் திருவிழா: ஜூலை 28
திருத்தந்தை புனிதர் முதலாம் விக்டர், கத்தோலிக்க திருச்சபையின் 14ம் திருத்தந்தையாகக் கருதப்படுகிறார். இவர் கி.பி. 189 முதல் 199ல் தமது மரணம் வரை ஆட்சி செய்தார். கத்தோலிக்க திருச்சபை, மரபு வழி திருச்சபை, மற்றும் கோப்து திருச்சபை ஆகிய கிறிஸ்தவ பிரிவுகள் முதலாம் விக்டரைப் புனிதராகப் போற்றுகின்றன.

வரலாற்றுக் குறிப்புகள்:
"திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) என்னும் ஏடு தருகின்ற குறிப்புகள்படி, முதலாம் விக்டர் ரோமப் பேரரசின் கீழ் இருந்த ஆப்பிரிக்க மாநிலத்தில் பிறந்தவர் ஆவார். அவர் பெர்பெர்' இனத்தவர் (Berber origin) என்றும், அவரின் பிறப்பிடம், ரோம லிபியாவிலுள்ள (Roman Libya) லெப்டிஸ் மேக்னா (Leptis Magna) என்றும் கருதப்படுகிறது. அவரது தந்தை பெயர் 'பெலிக்சு' என்பர்.
ஆட்சிக் காலம்:
இவர் திருத்தந்தையாக ஆட்சி செய்த காலம் குறித்து பண்டைய சரித்திர ஆசிரியர்கள் நடுவே பல கருத்துகள் உள்ளன. யூசேபியஸ் (Eusebius) கூற்றுப்படி, இவர் கோம்மொதுஸ் (Commodus) பேரரசனின் பத்தாம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 189) பதவி ஏற்றார். லிப்சியுஸ் (Lipsius) என்பவர் இது சரியான ஆண்டு என்று கருதுகிறார். ஜெரோம், விக்டர் ஆட்சி தொடங்கியது செப்டிமியஸ் செவேரஸ் (Septimius Severus) பேரரசனின் முதலாம் ஆட்சி ஆண்டு (அதாவது கி.பி 193) என்று கூறுகிறார்.
பொதுவாக ஏற்கப்பட்ட கருத்துப்படி, முதலாம் விக்டர், கி.பி. 189ம் ஆண்டு முதல், கி.பி. 199ம் ஆண்டு வரை திருத்தந்தையாக ஆட்சி செய்தார்.

ரோமப் பேரரசோடு உறவு:
கோம்மொதுஸ் பேரரசனின் இறுதி ஆட்சி ஆண்டுகளின் போதும் (கிபி 180-192), செப்திமுஸ் செவேருஸ் ஆட்சியின் தொடக்க காலத்திலும் (கிபி 192) ரோமத் திருச்சபை அரசு, அடக்குமுறைக்கு ஆளாகாமல் அமைதியாகச் செயல்பட முடிந்தது.
கோம்மொதுஸ் பேரரசன் கிறிஸ்தவ திருச்சபை குறித்து நல்லெண்ணம் கொண்டதற்கு மார்சியா (Marcia) என்னும் பெண்மணி காரணமாக இருந்திருக்கலாம். புனித இப்போலித்து என்பவர் கூற்றுப்படி, அப்பெண்மணி ஒருவேளை கிறிஸ்தவராக இருந்திருக்கலாம், அல்லது கிறிஸ்தவம் மட்டில் மதிப்புக்கொண்டவராய் இருந்திருக்கலாம். அவர் ஒருநாள் திருத்தந்தை விக்டரை அரச அரண்மனைக்கு அழைத்து, அவரிடமிருந்து ஒரு பெயர்ப் பட்டியல் கேட்டார். சார்தீனியா தீவில் அமைந்திருந்த சுரங்கங்களில் கட்டாய வேலை செய்ய அனுப்பப்பட்டிருந்த கிறிஸ்தவர்களை விடுதலை செய்யவே அப்பட்டியலை மார்சியா கேட்டார்.
கிறிஸ்தவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பாக ரோம ஆயருக்கும், பேரரசுக்கும் ஏற்பட்ட முதல் தொடர்பு இதுவே எனத் தெரிகிறது. தம்மிடம் கேட்கப்பட்ட பெயர்ப் பட்டியலை விக்டர் கொடுத்தார். அரசு அனுமதியோடு மார்சியா ஹையசிந்த் என்னும் திருப்பணியாளரை சார்தீனியாவுக்கு அனுப்பி அங்குக் கட்டாய வேலை செய்த கிறிஸ்தவர்களை விடுதலை செய்ய வழிவகுத்தார்.
இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களுள் கலிஸ்டஸ் என்பவரும் இருந்தார். இவர் பிற்காலத்தில் (கி.பி. 217-222) திருத்தந்தையாகப் பதவி வகித்தவர் ஆவார். உடல் நலக் குறைவால் கலிஸ்டஸ் ரோமுக்குத் திரும்புவதற்குப் பதிலாக ஆன்சியம் என்னும் நகருக்குச் சென்றார்.

முதலாம் விக்டர் காலத்தில் கிறிஸ்தவ திருச்சபை வளர்ச்சி கண்டது. பல கிறிஸ்தவர்கள் ரோமப் பேரரசில் உயர் பதவிகள் வகித்தனர் என்று இரனேயுஸ் குறிப்பிடுகிறார். செப்டிமியஸ் செவேரஸ் (Septimius Severus) மன்னனுக்குக் குணமளித்த புரோக்குலஸ் (Proculus) என்பவர் அரசவையில் பதவி வகித்தார் என்று தெர்த்தூல்லியன் எழுதுகிறார்.

இயேசுவின் உயிர்த்தெழுதல் கொண்டாடுவது பற்றிய விவாதம்:
விக்டர் திருத்தந்தையாகப் பதவி ஏற்குமுன், திருத்தந்தை அனிசேட்டஸ் காலத்தில் எழுந்த ஒரு பிரச்சினை திருத்தந்தை முதலாம் விக்டர் காலத்திலும் தலைதூக்கியது. அதாவது, இயேசு சாவினின்று உயிர்த்தெழுந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு ஆண்டும் எந்த நாளில் கொண்டாடுவது என்பது பிரச்சினை. இதில் மேற்கு (ரோம) திருச்சபைக்கும் கிழக்கு திருச்சபைக்கும் இடையே வேறுபாடு நிலவியது. ரோமில் அவ்விழா நிசான் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக் கிழமைதான் கொண்டாடப்பட்டது. கிழக்கு சபையோ, இயேசுவின் உயிர்த்தெழுதல் விழாவை நிசான் மாதம் 14ம் நாள் (அது ஞாயிறாயினும் சரி, வேறு நாளாயினும் சரி) கொண்டாடியது. இது யூதர்களின் பாஸ்கா விழா முறையைப் பின்பற்றி நிகழ்ந்தது.
இக்கொண்டாட்டம் பற்றி ஒத்த கருத்து உருவாக்கும் முயற்சி திருத்தந்தை அனிசேட்டஸ் காலத்தில் நிகழ்ந்தது. அவர் கீழைச் சபைத் தலைவராகிய பொலிக்கார்ப்பு என்பவரை ரோமில் சந்தித்துப் பேசியும் ஒத்த கருத்து உருவாகவில்லை. ஆயினும், கீழைச் சபை தன் வழக்கப்படி அக்கொண்டாட்டத்தைத் தொடரலாம் என்று அனிசேட்டஸ் ஏற்றுக்கொண்டார்.

முதலாம் விக்டர் காலத்தில் நிலைமை மாறத் தொடங்கியது. ஆசியப் பகுதிகளிலிருந்து ரோமில் குடியேறிய கிறிஸ்தவர்கள் தங்கள் வழக்கப்படி இயேசுவின் உயிர்த்தெழுதல் விழாவை ரோமிலும் நிசான் மாதம் 14ம் நாள் கொண்டாடத் தொடங்கினர். ரோமில் அவ்விழா இயேசு உயிர்த்தெழுந்த நாளாகிய ஞாயிறன்றுதான் கொண்டாடப்பட வேண்டும் என்று விக்டர் வலியுறுத்தினார்.
எபேசு நகரில் ஆயராக இருந்த பொலிக்கார்ப்புக்கு விக்டர் மடல் எழுதி, ஆசியாவிலிருந்த பிற ஆயர்களை மன்றமாகக் கூட்டி இப்பொருள் பற்றி ஒத்த கருத்து உருவாக்கக் கேட்டார். அவ்வாறே மன்றம் கூட்டப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. ஆனால், பொலிக்கார்ப்பு திருத்தந்தை விக்டருக்கு எழுதிய மடலில், தம் மாநிலத்தில் எத்தனையோ புனிதர்களும் ஆயர்களும் அதுவரையிலும் கடைப்பிடித்த வழக்கத்தை மாற்றப் போவதில்லை என்றும், இயேசுவின் உயிர்த்தெழுதல் விழா நிசான் மாதம் 14ம் நாள்தான் கொண்டாடப்படும் என்றும் கூறினார்.

உடனே திருத்தந்தை விக்டர் ரோமப் பகுதியில் இருந்த ஆயர்களை மன்றமாகக் கூட்டினார். அதுபோலவே வேறு இடங்களிலும் ஆயர்கள் கூடி ஆலோசித்து கருத்துத் தெரிவிக்குமாறு கேட்டார். பாலஸ்தீனாவில் செசரேயா நகர் தியோபிலசு என்பவர் மன்றத்துக்குத் தலைமை தாங்கினார். போந்துஸ் நகரில் பால்மா என்னும் ஆயர் தலைமை தாங்கினார். லியோன் நகர ஆயர் இரனேயுஸ் கால்லிய (பிரான்சு) பகுதி மன்றத்துக்குத் தலைமை தாங்கினார். மேலும் ஓஸ்ரேன், கொரிந்து போன்ற நகரங்களிலும் மன்றங்கள் நடந்தன. இவ்வாறு அக்காலத்தில் திருச்சபை பரவியிருந்த அனைத்து இடங்களிலிருந்தும் கருத்துப் பெறப்பட்டது. அனைவருமே, இயேசுவின் உயிர்த்தெழுதல் விழா ஞாயிற்றுக் கிழமைதான் கொண்டாடப்பட வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தனர்.

திருச்சபை அனைத்திற்கும் தலைவர் என்னும் முறையில் விக்டர் கீழைத் திருச்சபை ஆயர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களும் இயேசுவின் உயிர்த்தெழுதல் விழாவை ரோம வழக்கப்படி கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தினார். அம்முறையை ஏற்காதவர்கள் திருச்சபையின் ஒன்றிப்பிலிருந்து விலக்கப்படுவர் என்றும் எச்சரித்தார்.

விக்டரின் அணுகுமுறையில் சில ஆயர்கள் குறை கண்டனர். லியோன் நகர ஆயர் இரனேயுஸ் மற்றும் பிற ஆயர்கள் திருத்தந்தை விக்டர் கடுமையான அணுகுமுறையைத் தவிர்க்க வேண்டும் என்றும், கீழைத் திருச்சபையோடுள்ள நல்லுறவை முறித்தலாகாது என்றும் கேட்டுக் கொண்டனர். விக்டருக்கு முன் திருத்தந்தையாக இருந்தவர்கள் கடைப்பிடித்த முறையை அவரும் தொடர்வது நல்லது என்று கூறினார் இரனேயுஸ். அதாவது, ரோமிலும் மேற்கு திருச்சபையிலும் இயேசுவின் உயிர்த்தெழுதல் விழா ஞாயிறன்று கொண்டாடப்படுவது முறையே என்றாலும், கீழைச் சபையில் அவ்விழாவை நிசான் மாதம் 14ம் நாள் (அது ஞாயிறாக இல்லாமல் இருந்தாலும்) கொண்டாடிய வழக்கம் ஏற்கனவே இருந்ததால் அதைத் தடை செய்ய வேண்டாம் என்று கருத்துத் தெரிவித்தார்.
திருத்தந்தை விக்டரின் ஆட்சியில் ஆசிய ஆயர்கள் நிலை என்னவாயிற்று என்பது தெரியவில்லை. எவ்வாறாயினும், கி.பி மூன்றாம் நூற்றாண்டில் இயேசுவின் உயிர்த்தெழுதலை ஞாயிறன்று கொண்டாடும் பழக்கம் படிப்படியாகத் திருச்சபை முழுவதிலும் பரவியது.

கிரேக்க மொழியிலிருந்து இலத்தீன் மொழிக்கு மாறுதல்:
திருத்தந்தை விக்டர் காலத்தில் நடந்த இன்னொரு முக்கிய நிகழ்வு திருச்சபையில் பயன்படுத்திய மொழி சார்ந்ததாகும். பண்டைய கிறிஸ்தவ அறிஞர் புனித ஜெரோம் கூற்றுப்படி, "ரோம் நகரின் பதின்மூன்றாம் ஆயர் விக்டர், இயேசுவின் உயிர்த்தெழுதல் கொண்டாடப்பட வேண்டிய நாள் குறித்து எழுதினார்; செவேருஸ் மன்னன் காலத்தில் பத்து ஆண்டுகள் திருத்தந்தையாக ஆட்சிசெய்தார்".
திருத்தந்தை விக்டர் காலம் வரையிலும் திருச்சபையின் அதிகாரபூர்வமான மடல்கள், எழுத்துக்கள் போன்றவை கிரேக்க மொழியில் ஆக்கப்பட்டன. விக்டர் இலத்தீன் மொழிப் பின்னணியிலிருந்து வந்த முதல் திருத்தந்தை ஆவார். அவர் காலத்தில் ரோமத் திருச்சபையில் இலத்தீன் படிப்படியாக கிரேக்கத்தின் இடத்தைப் பிடித்தது. வழிபாட்டு மொழி கிரேக்கத்திலிருந்து இலத்தீனாக மாறத் தொடங்கியது.
இருப்பினும் திருப்பலியை இலத்தீன் மொழியில் கொண்டாடும் வழக்கம் கி.பி. 230ம் ஆண்டு அளவில்தான் உறுதியாக நிலைபெற்றது.

 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா