Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் தோமா ✠(St. Thomas)
   
நினைவுத் திருநாள் : (ஜூலை / Juill- 03)
✠ புனிதர் தோமா ✠(St. Thomas)

 திருத்தூதர், பிரசங்கிப்பாளர், மறைசாட்சி :
(Apostle, Preacher, Christian Martyr)

பிறப்பு : கி.பி. 1 (முற்பகுதி)
கலிலேயா, ரோமப் பேரரசு (தற்போதைய இஸ்ரேல்)
(Galilee, Roman Empire (Present-day Israel)

இறப்பு : டிசம்பர் 21, கி.பி. 72
பரங்கிமலை, சென்னை, சோழப் பேரரசு (தற்போதைய தூய சாந்தோம் மலை, தமிழ்நாடு, இந்தியா)
(Parangimalai, Chennai, Chola Empire (Present-day St. Thomas Mount, Tamil Nadu, India)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
லூதரன் திருச்சபை
(Lutheran Church)
மலங்கரா திருச்சபை
(Malankara Church)
கிழக்கு அசிரிய திருச்சபை
(Assyrian Church of the East)
ஆங்கிலிகன் சமூகம்
(Angilican Communion)
ஓரியண்ட்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodox Church)

முக்கிய திருத்தலங்கள் :
தூய தோமா திருத்தூதர் பேராலயம், ஒர்டோனா, இத்தாலி
(Basilica of St. Thomas the Apostle in Ortona, Italy)
சென்னை சாந்தோம் தேவாலயம்
(Santhom Church, Chennai, India)

நினைவுத் திருவிழா : ஜூலை 3

சித்தரிக்கப்படும் வகை : இயேசுவின் விலாவில் கையை இடுபவராக, வேல்

பாதுகாவல் : கட்டட கலைஞர், இந்தியா, மற்றும் பல

புனிதர் தோமா அல்லது புனித தோமையார் (St. Thomas), இயேசு தமது நற்செய்திப் பணிக்காக தேர்ந்தெடுத்த பன்னிரு திருத்தூதர்களில் ஒருவர் ஆவார்.

பாவம் தோமா! உயிர்த்த ஆண்டவரைக் காண்பதற்கு அவர் போட்ட நிபந்தனை அவருக்கு ஒரு பட்டப் பெயர் சூட்டப்படக் காரணமாயிற்று. "ஐயப் பேர்வழி" என்றே இன்றுவரை உலகம் இவரை அழைக்கின்றது. இயேசு கிறிஸ்து உயிர்த்துவிட்டார் என மற்ற திருத்தூதர்கள் சொன்னதை முதலில் நம்ப மறுத்ததால் இவர் "சந்தேக தோமா" (Doubting Thomas) என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார். ஆனால் அவர், "நீரே என் ஆண்டவர். நீரே என் கடவுள்" (யோவான் 20:28) என்று விசுவாச அறிக்கை வெளியிட்டதுபோல வேறு யாரும் அவ்வளவு மனம் விட்டு அறிக்கையிடவில்லை. இவர் நமக்கு ஓர் உருக்கமான, விசுவாசம் நிறைந்த செபத்தை அமைத்து கொடுத்து, இச்செபத்தை நாம் பொருள் உணர்ந்து சொல்லும் போதெல்லாம் நமது பற்றுறுதி மெருகேற்றப்படுகிறது. "காணாமல் நம்புவோர் பேறுபெற்றோர்" என்று கூறிய உயிர்த்த ஆண்டவர், உலகம் முடியும்வரை தம்மில் விசுவாசம் கொள்வோர் பேறு பெற்றோர் என்று தெளிவுபடுத்துகிறார். நாம் இந்த விசுவாசக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது பெரும் ஆறுதலும் பெருமையும் கொண்டதாகும்.

இந்தியாவில் இயேசுவின் நற்செய்தியை முதன்முதலில் அறிவித்தவர் இவரே என்று பழங்கால கிறிஸ்தவ மரபும், ஏடுகளும் சான்று பகர்கின்றன. கேரளாவில் வாழும் தோமையார் கிறிஸ்தவர்களும் இதற்கு சான்றாக உள்ளனர்.

பெயரும் இளமையும் :
இயேசுவின் திருத்தூதர்களுள் ஒருவரான இவரை நற்செய்தி நூல்கள் தோமா என்ற பெயருடனேயே அடையாளப்படுத்துகின்றன. 'தோமா' என்னும் "அரமேய" அல்லது "சிரியாக்" (Aramaic or Syriac) மொழிச் சொல்லுக்கு இரட்டையர் என்பது பொருள். இதற்கு இணையான திதைமுஸ் (Didymus, தமிழ் ஒலிப்பெயர்ப்பு: திதிம்) என்ற கிரேக்க மொழிச் சொல் யோவான் நற்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இந்த பெயரின் அடிப்படையில் இவருடன் இரட்டையராகப் பிறந்த ஒரு சகோதரரோ, சகோதரியோ இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பழங்கால சிரிய மரபின்படி, திருத்தூதரின் முழுப்பெயர் யூதா தோமா என்று அறியப்படுகிறது.

இளமைக் காலம் :
ரோமப் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்த முதல் நூற்றாண்டு பாலஸ்தீன் நாட்டின் கலிலேயா பகுதியில் தோமா பிறந்தார். இவரது தந்தை படகு கட்டும் தொழில் செய்து வந்ததாகவும், தோமாவும் அதே தொழிலையே செய்து வந்ததாகவும் பழங்கால மரபு கூறுகிறது. இவர் கல்வியறிவு பெற்றவர் என்றும், தச்சு வேலை செய்தவர் என்றும், மீனவர்களோடும், தச்சுத் தொழிலாளர்களோடும் நெருங்கி பழகி வந்ததாகவும் அறிகிறோம். எந்த ஒன்றின் உண்மை நிலையையும் கேள்வி கேட்டு, தெளிவுபடுத்திக் கொள்ளும் குணம் கொண்டவராக இருந்தார். இவர் இயேசுவின் நெருங்கிய உறவினர் என்றும், இயேசுவைப் போன்ற தோற்றம் கொண்டிருந்ததே இவர் திதைமுஸ் என்று அழைக்கப்பட காரணம் எனவும் சில குறிப்புகள் கூறுகின்றன. ஆனால், திருத்தூதர் பிலிப்பு மூலம் இவர் இயேசுவுக்கு அறிமுகமானதாக சிலர் கூறுகின்றனர்.

இந்தியாவில் தோமா :
கிறிஸ்தவர்கள் தோமா கி.பி 52ம் ஆண்டு, இந்தியாவிற்கு பயணித்தார் எனவும், முசிறித் துறைமுகம் (Muziris) வந்தடைந்தார் எனவும் நம்புகின்றனர். அப்போது அங்கு கொச்சி யூதர்கள் சமூகம் காணப்பட்டது. ஆனாலும் அவர் அங்கு வந்தார் என்பதற்கு வரலாற்று ஆதாரம் இல்லை.

பாரம்பரியமாக குறிப்பிடப்படும் தோமாவின் பணிகள் என்ற நூல், ரப்பான் பாட்டு என்ற வாய்மொழி பாடல் தொகுப்பு ஆகியவை குறிப்பிடத்தக்க நூல்களாகும்.

தோமாவின் பணிகள் :
'தோமாவின் பணிகள்' என்ற நூல் கி.பி. 2ம் நூற்றாண்டில் சிரியாக் மொழியில் எழுதப்பட்டது. அது இயேசுவின் உயிர்ப்புக்கு பிறகு, தோமா இந்தியாவுக்கு வந்து நற்செய்தி அறிவித்து உயிர்துறந்தது குறித்த வரலாற்று குறிப்புகளுடன் கூடிய கதையை வழங்குகிறது. இந்த நூல் இந்தியாவில் தோமா என்று பொதுவாக குறிப்பிட்டாலும், இரண்டு பகுதிகளில் அவர் பணி செய்த விவரங்களைத் தருகிறது.

இயேசு உயிர்த்தெழுந்து விண்ணகம் சென்ற பிறகு, அவரது சீடர்கள் எந்த நாட்டில் சென்று பணியாற்ற வேண்டும் என்பது குறித்து சீட்டுப் போட்டு பார்த்தனர். அப்போது, தோமாவுக்கு விழுந்த சீட்டில் இந்தியாவின் பெயர் வந்தது. அதிக தொலைவில் உள்ள இந்தியாவுக்கு செல்ல அவர் விரும்பவில்லை. அப்போது இந்தோ-பார்த்திய அரசரான கொண்டபோரஸ் அனுப்பிய ஹப்பான் என்பவர், கட்டடக் கலைஞர் ஒருவரை எதிர்பார்த்து பாலஸ்தீன் சென்றிருந்தார். அவருக்கு தோன்றிய இயேசு தமது பணியாளரை அழைத்து செல்லுமாறு கூறி, தோமாவை அவருடன் அனுப்பி வைத்தார்.

கொண்டபோரஸ் அரசவைக்கு வந்த தோமா, மாளிகை கட்டுவதாகக் கூறி பணத்தை வாங்கிக் கொண்டு, அதை ஏழைகளுக்கு உதவி செய்ய செலவிட்டார். குறிப்பிட்ட காலத்திற்கு பின் மாளிகையைப் பார்க்கச் சென்ற அரசர், அங்கு ஒரு சிறிய கல் கூட இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தோமா தம்மை ஏமாற்றி விட்டதாகக் கூறி, அவரை அரசர் சிறையில் அடைத்தார். அப்போது, அரசரின் தம்பி காத் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். அவருக்கு இறுதிச் சடங்குகள் நடத்த ஏற்பாடு செய்து கொண்டிருந்த வேளையில், அவர் திடீரென எழுந்து விண்ணகத்தில் தமது அண்ணன் பெயரில் உள்ள மாளிகையைத் தமக்கு தருமாறு கேட்டார். இதையடுத்து, தோமா மாளிகை கட்டுவதாக கூறியது உண்மை என்று நம்பிய அரசர் கொண்டபோரஸ், அவரது குடும்பத்துடன் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவரானார். அதன் பிறகு, சிறிது காலம் அந்த நாட்டில் உள்ள மக்களுக்கு இயேசுவைப் பற்றிய நற்செய்தி அறிவித்து, பலரை மனந்திருப்பினார்.

பின்னர் மற்றொரு நாட்டுக்கு (மயிலாப்பூர்) சென்ற தோமா, காரிஷ் (தமிழ்: காரி) என்ற அரசவை பணியாளரின் மனைவியின் நோயை குணப்படுத்தினார். இதையடுத்து, தோமா அப்பகுதியில் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து பல்வேறு அற்புதங்கள் செய்து வந்தார். இதை அறிந்த அரசர் மஸ்டாயின் (தமிழ்: மகாதேவன்) மனைவி மிக்தோனியா (தமிழ்: மகதோனி) தோமாவின் போதனைகளை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவராக மனந்திரும்பினார். மிக்தோனியா கிறிஸ்தவ நம்பிக்கையை கைவிட அரசர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அரசர், தோமாவைக் கொலை செய்ய ஆணையிட்டார். அதன்படி, அரசரின் காவலர்கள் தோமாவை ஈட்டியால் குத்தி கொலை செய்தனர். அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்திலும் அற்புதங்கள் நிகழ்ந்ததைக் கண்ட அரசர் மஸ்டாயும் இறுதியில் கிறிஸ்தவரானார்.

சென்னையில் உள்ள புனித தோமையார் மலையே, தோமா குத்தி கொல்லப்பட்ட இடம் என்றும், சாந்தோம் ஆலயம் உள்ள இடத்திலேயே அவர் அடக்கம் செய்யப்பட்டார் என்றும் மரபுகள், வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் அகழ்வாய்வுகள் மூலம் அறிகிறோம்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா