Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் ஒலிவர் ப்லங்கெட் ✠(St. Oliver Plunkett)
   
நினைவுத் திருநாள் : (ஜூலை / Jull 02)
✠ புனிதர் ஒலிவர் ப்லங்கெட் ✠(St. Oliver Plunkett)

 மறைசாட்சி, பேராயர், அனைத்து அயர்லாந்தின் பிரதான கிறிஸ்தவ குரு :
(Martyr, Archbishop and Primate of All Ireland)

பிறப்பு : நவம்பர் 1, 1625
லௌஃப்க்ரூ, மீத், அயர்லாந்து
(Loughcrew, County Meath, Ireland)

இறப்பு : ஜூலை 1, 1681 (வயது 55)
டைபர்ன், லண்டன், இங்கிலாந்து
(Tyburn, London, England)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம் : மே 23, 1920
திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட்
(Pope Benedict XV)

புனிதர் பட்டம் : அக்டோபர் 12, 1975
திருத்தந்தை ஆறாம் பவுல்
(Pope Paul VI)

முக்கிய திருத்தலம் :
புனித பீட்டர்ஸ் ரோமன் கத்தோலிக்க ஆலயம், டிரோகேடா, அயர்லாந்து
(St. Peter's Roman Catholic Church, Drogheda, Ireland)

பாதுகாவல் :
அயர்லாந்தின் அமைதி மற்றும் நல்லிணக்கம்
(Peace and Reconciliation in Ireland)

நினைவுத் திருநாள் : ஜூலை 2

புனிதர் ஒலிவர் ப்லங்கெட், "அர்மாக்" உயர்மறைமாவட்டத்தின் ரோமன் கத்தோலிக்க பேராயரும் (Roman Catholic Archbishop of Armagh), அனைத்து அயர்லாந்தின் பிரதான கிறிஸ்தவ குருவும் (Primate of All Ireland) ஆவார்.

கி.பி. 1625ம் ஆண்டு, அயர்லாந்து நாட்டின் "லௌக்ரூ", "மீத்" (Loughcrew, County Meath, Ireland) பிராந்தியத்தில் வசதியான குடும்பத்தில் பிறந்த இவர், தமது பதினாறு வயது வரை "டப்லினிலுள்ள"(Dublin) "தூய மரியாளின் துறவு மடத்தின் மடாதிபதியான"(Abbot of St Mary's) உறவினரிடம் கல்வி கற்றார். குருத்துவ கல்வியில் நாட்டம் கொண்ட ஒலிவர் ப்லங்கெட், 1647ம் ஆண்டு ரோம் பயணித்தார். இதே வேளையில் அயர்லாந்தில் "ஐரிஷ் கூட்டமைப்பு யுத்தங்கள் அல்லது பதினோரு ஆண்டு கால போர்" (Irish Confederate Wars or Eleven Years' War) தொடங்கியது. இந்த பதினோரு ஆண்டு கால யுத்தங்கள், முக்கியமாக "ஐரிஷ் குடி ரோமன் கத்தோலிக்கர்கள்", "ஆங்கிலேயர்"மற்றும் "ஐரிஷ் ஆங்கிலிகன்"மற்றும் "புராட்டஸ்டன்ட்"(Native Irish Roman Catholics, English and Irish Anglicans and Protestants) சபையினரிடையே நடந்தது.

ஒலிவர் ப்லங்கெட், ரோம் நகரிலுள்ள ஐரிஷ் கல்லூரியில் (Irish College in Rome) இணைந்தார். 1654ம் ஆண்டு குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்ட இவர், ஐரிஷ் ஆயர்களால் ரோம் நகரில் அவர்களது பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். இதற்கிடையில் அயர்லாந்தின் "க்ராம்வெல்லியன் வெற்றி"(Cromwellian conquest of Ireland), (1649-53) அயர்லாந்தில் ரோமன் கத்தோலிக்க மதத்தை தோற்கடித்தது. அதன் பின்னர், ரோமன் கத்தோலிக்க பொது நடைமுறைகள் தடை செய்யப்பட்டன. மற்றும், ரோமன் கத்தோலிக்க மத குருமார்கள் தூக்கிலிடப்பட்டனர். இதன் விளைவாக, ப்லங்கெட் பல ஆண்டுகாலம் அயர்லாந்து திரும்ப இயலாமல் போனது. ரோம் நகரிலேயே தங்கிவிட்ட ப்லங்கெட் 1657ம் ஆண்டு இறையியல் பேராசிரியரானார். பிரச்சார கல்லூரியில் (College of Propaganda Fide) பணியாற்றினார். 1669ம் ஆண்டு, ஜூலை மாதம், 9ம் தேதி, அக்கல்லூரி அர்ச்சிக்கப்பட்ட அன்று, அவர் "அர்மாக்"பேராயராக (Archbishop of Armagh) நியமிக்கப்பட்டார். அதே வருடம், நவம்பர் மாதம், 30ம் தேதி, "கென்ட்"ஆயர் (Bishop of Ghent) "யூஜின்-ஆல்பர்ட்"(Eugeen-Albert) என்பவரால் அருட்பொழிவு செய்விக்கப்பட்டார். இறுதியில், 1670ம் ஆண்டு, மார்ச் மாதம், ஏழாம் தேதியன்று, ப்லங்கெட் ஐரிஷ் மண்ணில் மீண்டும் காலடி வைத்தார்.

ப்லங்கெட், அயர்லாந்து திரும்பிய பின்னர், சில குருமார்கள் மத்தியிலிருந்த போதைப் பழக்கத்தை நீக்கும் பணியை கையாண்டார். அயர்லாந்தை ஆண்ட இங்கிலாந்து அரசர் "இரண்டாம் சார்ளசின்" (Charles II of England) "பிரேடா"(Declaration of Breda) பிரகடனத்தின்படி, 1660ம் ஆண்டு, தண்டனை சட்டங்கள் (Penal Laws) தளர்த்தப்பட்டன. ஆகவே, ப்லங்கெட் 1670ம் ஆண்டு, "ட்ரோகேடா" (Drogheda) நகரில் ஒரு இயேசு சபை கல்லூரியை (Jesuit College) நிறுவினார். ஒரு வருட காலத்தின் பின்னர் அக்கல்லூரியின் மாணவர் எண்ணிக்கை 150 ஆக இருந்தது. அதில், 40 பேர் எதிர் திருச்சபைகளைச் (Protestant) சேர்ந்த மாணவர்களாவர். இக்கல்லூரியை அயர்லாந்தின் முதல் ஒருங்கிணைந்த கல்லூரியாக ஆக்கினார். திருச்சபைக்கான இவரது ஊழியம் வெற்றிகரமாக இருந்தது. நான்கே வருட காலத்தில், 48,000 கத்தோலிக்கர்களுக்கு உறுதிப்பூசுதல் வழங்கினார்.

அதன்பின்னர், ஏறக்குறைய 1673ம் ஆண்டு, கத்தோலிக்கர்களுக்கு எதிரான அலை வீசத் தொடங்கி, துன்புருத்தல்களாக மாறியது. பேராயர் ப்லங்கெட் தமது மறைப்பணிகளை இரகசியமாகவும் மாறு வேடத்திலும் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். அவரது அநேக குருக்கள் நாடு கடத்தப்பட்டனர். பள்ளிகள் மூடப்பட்டன. தேவாலய திருப்பலிகள் இரகசியமாக நடைபெற்றன. கத்தோலிக்க பள்ளிகளும், குரு மாணவர்களின் கல்லூரிகளும் ஒடுக்கப்பட்டன. இவரது பங்கில் நடக்கும் எத்தகைய அரசியல் நிகழ்வுகளுக்கும், கிளர்ச்சிகளுக்கும் பேராயர் என்ற காரணத்தால் ப்லங்கெட் பொறுப்பாக்கப்பட்டார்.

கி.பி. 1679ம் ஆண்டு கைது செய்யப்பட்டு டப்லின் கோட்டையில் (Dublin Castle) சிறை வைக்கப்பட்ட பேராயர் ப்லங்கெட், விசாரணைக்காக லண்டன் மாநகர் கொண்டு செல்லப்பட்டார். 15 நிமிடங்கள் திட்டமிட்டபடி, கலகம் விளைவித்த குற்றவாளியாக நீதிபதி அறிவித்தார். 1681ம் ஆண்டு, ஜூலை மாதம், முதல் தேதியன்று, "டைபர்ன்"(Tyburn) கிராமத்தில், அவர் தூக்கிலிடப்பட்டார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா