Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் மகதலின் மரியாள் ✠ (St. Mary Magdalene)
   
நினைவுத் திருநாள் : (ஜூலை / july- 22)
✠ புனிதர் மகதலின் மரியாள் ✠ (St. Mary Magdalene)

அப்போஸ்தலர்களின் அப்போஸ்தலர்:
(Apostle to the Apostles)

பிறப்பு: தகவலில்லை
மகதலா, யூதேயா
(Magdala, Judea)

இறப்பு: தகவலில்லை
பிரான்ஸ் அல்லது எபேசஸ்
(France or Ephesus)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஆங்கிலிகன் சமூகம்
(Anglican Communion)
லூதரன் திருச்சபை
(Lutheranism)
மற்ற எதிர் திருச்சபைகள்
(Other Protestant Churches)

நினைவுத் திருவிழா: ஜூலை 22

பாதுகாவல்:
மருந்து செய்து விற்பவர்கள்; தியான வாழ்வு வாழ்பவர்கள்; மனம்மாறியவர்கள்; கையுறை செய்பவர்கள்; சிகை அலங்காரம் செய்பவர்கள்; பெண்கள், செய்த பிழைக்கு மனம் வருந்துபவர்கள், இத்தாலியர்.
புனிதர் மகதலின் மரியாள், புதிய ஏற்பாட்டின்படி, இயேசுவின் பிற சீடர்களில் ஒருவராக இயேசுவுடன் பயணித்த யூதப் பெண் ஆவார். இவர், இயேசுவின் சிலுவைப் பாடுகளையும் இறைவனின் உயிர்த்தெழுதலையும் நேரில் கண்டவர் என அறியப்படுகிறது. நான்கு நற்செய்தி நூல்களுல், பிற அப்போஸ்தலர்களைவிட, சுமார் 12 தடவைக்கும் அதிகமாக இவரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவரது பெயர் இவர் பிறந்த ஊரான தற்போதய இசுரேலில் அமைந்துள்ள மகதலாவின் மரியாள் எனப் பொருள்படும்.

இயேசு அவரை "ஏழு அரக்கர்களிடமிருந்து" காப்பாற்றியதாக, (லூக்கா 8:2 & மார்க்கு 16:9) கூறப்படுவது சிக்கலான நோய்களிலிருந்து அவரைக் குணப்படுத்தியதைக் குறிப்பதாக புரிந்துகொள்ளப்படுகிறது. மகதலின் மரியாள் இயேசுவின் கடைசி நாட்களில் - பாடுகள்பட்டு, மரித்து, உயிர்தெழும்வரை கூடவே இருந்தார்; அவரை சிலுவையில் அறைந்தபோது, (அன்பிற்குரிய ஜானைத் தவிர) பிற ஆண் சீடர்கள் ஓடியபோதும், பின்னர் கல்லறையிலும் உடனிருந்தார்.

இவர் ரோமன் கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்கன் சமூகம், லூதரன் திருச்சபை மற்றும் பிற எதிர் திருச்சபைகளால் புனிதராக மதிக்கப்படுகிறார். இவரது நினைவுத் திருநாள் ஜூலை 22 ஆகும். மரியாளின் வாழ்க்கை, ஆய்வாளர்களால் தொடர்ந்து சர்சைக்குட்படுத்தப்பட்டு வந்துள்ளது.

புனிதர் லுக்கா எழுதிய நற்செய்தியின் ஏழாம் அதிகாரத்தில் நாம் காணும் பாவியான பெண்ணும், லூக்கா பத்தாம் அதிகாரம், அருளப்பர் பதினோரம் அதிகாரம் ஆகியவற்றில் நாம் காணும் மார்த்தாள் - லாசர் இவர்களுடைய சகோதரியும் இவரேயாவார்.

இவர் வேறு பல புண்ணிய பெண்களோடு இயேசுவைப் பின்சென்று அவருக்கு சேவை செய்து வந்தார். இயேசு தனக்குச் செய்த உதவிகளுக்கு நன்றியாக, இவர் தனது உடமைகளைப் பயன்படுத்தி, அவருக்குச் சேவை செய்தார். சாகும்வரை அவருக்குப் பிரமாணிக்கமாய் இருந்தார்.

மரியாள் ஓர் பெரும்பாவி என்று மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்டபோது, தன் நிலையை உணர்ந்து அழுது, இயேசுவிடம் ஓடிச்சென்றார். தன் பாவங்களின் பரிகாரமாய் செய்த செயலினால், இயேசுவின் ஆழ்மனதில் இடம்பிடித்தார். அன்னை மரியாளுக்குப் பிறகு, இயேசுவின் அருகில் எப்போதும் அவருக்காக வாழ்ந்தவர்.
"என்னை இப்படி பற்றிக்கொள்ளாதே" என்று ஆண்டவரே கூறுமளவுக்கு, அவர் மேல் அன்புகொண்டவர். இயேசுவைப் பற்றிக்கொள்வதில் அனைவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாய் அன்றிலிருந்து இன்றுவரை திகழ்கிறார்.

இயேசு தொங்கிய சிலுவையின் அடியில் இவர் நின்றார்.
கல்லறை வெறுமனே இருப்பதை முதன்முதலில் பார்த்து, இயேசுவை காணவில்லையே என்று ஆதங்கப்பட்டு, கண்ணீர் விட்டு அழுது, இயேசுவை பற்றிக்கொண்டவர் இவர்.
உயிர்த்த இயேசு தம் அன்னைக்கு முதலில் காட்சி கொடுத்தார். அடுத்தபடியாக காட்சி கொடுத்தது இவருக்கே.

யோவான் 20 மற்றும் மார்க்கு 16:9 ஆகிய இரு நற்செய்தியாளர்கள் கூற்றுப்படி, இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, முதலில் அவரைக் கண்டதும் மகதலின் மரியாளேயாவார்.

உயிர்த்த இயேசுவைக் காணும்வரை இவர் இளைப்பாறவில்லை. "அவரை எங்கே வைத்திருக்கிறீர்கள்? நான் அவரைத் தூக்கிக் கொண்டு செல்வேன்" என்றார். அவரைத் தூக்கிச் செல்ல இவரால் முடியாதென்றாலும், இச்சொற்கள் இவரது அன்பைக் காட்டுகின்றன. இவரை யூதர்கள் நாடு கடத்தினார்கள்.
மார்த்தாள், லாசர் மற்றும் இன்னும் சில சீடர்களுடன் இவர் ஃபிரான்ஸ் நாட்டை அடைந்தார் என பாரம்பரியம் கூறுகிறது.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா