✠ புனிதர் மார்த்தா ✠(St. Martha of
Bethany) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(ஜூலை
/
july-
29) |
✠ புனிதர் மார்த்தா ✠(St.
Martha of Bethany)
கன்னியர், வெள்ளைப்போளம் கொணர்பவர், தென் கால் நாட்டின் புதுமைகள்
புரிபவர்:
(Virgin, Myrrhbearer, Wonder Worker of Southern Gaul)
பிறப்பு: யூதேயா எனத் தெரிகிறது.
இன்றைய இசுரயேல் அல்லது மேற்குக் கரை
(Probably Iudaea Province (Modern-day Israel or West Bank))
இறப்பு: மரபுப்படி லார்னாக்கா, சைப்ரஸ் அல்லது டராஸ்கோன், கால்
(தற்போதைய ஃபிரான்ஸ்)
(Traditionally Larnaca, Cyprus or Tarascon, Gaul (Modern-day
France))
ஏற்கும் சபை/ சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு கிறிஸ்தவ திருச்சபைகள்
(Eastern Christianity)
லூதரன் திருச்சபை
(Lutheran Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
நினைவுத் திருவிழா: ஜூலை 29
பாதுகாவல்:
உதவியாளர்; சமையல் செய்வோர்; உணவுநெறியாளர்; வீட்டுவேலை
செய்வோர்; வீட்டுப் பொறுப்பாளர்; விடுதியாளர்; வீட்டில்
கூலிவேலை செய்வோர்; இல்லத்தலைவியர்; விடுதிக்காப்பாளர்; சலவைத்
தொழிலாளர்; வேலைக்காரர்;
தனித்த பெண்கள்; பயணம் செய்வோர்; ஸ்பெயின் நாட்டின்
வில்லாஜோயோசா (Villajoyosa, Spain)
புனிதர் மார்த்தா, புதிய ஏற்பாட்டு நூல்களாகிய லூக்கா நற்செய்தியிலும்
யோவான் நற்செய்தியிலும் விவரிக்கப்படுகின்ற புனிதர் ஆவார்.
மார்த்தாவும் அவருடைய உடன்பிறப்புகளான இலாசர் (Lazarus) மற்றும்
மரியா (Mary of Bethany) ஆகியோர் எருசலேம் (Jerusalem) அருகே
பெத்தானியா (Bethany) என்னும் ஊரில் வாழ்ந்துவந்ததாக புதிய
ஏற்பாடு தகவல் தருகின்றது. குடும்பத்தில் மரியா முதலிலும், அவருக்கு
அடுத்தவராக இலாசரும், இருவருக்கும் இளையவராக மார்த்தாவும் இருந்தனர்.
இறந்துபோன இலாசருக்கு இயேசு உயிர்கொடுத்த நிகழ்ச்சியைக் கண்டவருள்
மார்த்தாவும் ஒருவர்.
மார்த்தா பற்றிய விவிலியக் குறிப்புகள் :
லூக்கா நற்செய்தி :
லூக்கா நற்செய்தி நூலில் இயேசு தம் நண்பர்களான மார்த்தா, மரியா,
லாசர் ஆகியோரின் வீடு சென்று அவர்களைச் சந்திக்கிறார். மரியா,
மார்த்தா ஆகிய இரு சகோதரிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு அங்கே
காட்டப்படுகிறது. அவர்களது வீட்டில் இயேசு விருந்தினராகச் சென்றபோது,
மார்த்தா "பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்கிக்கொண்டிருந்தார்",
ஆனால் மரியா "இயேசுவின் காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக்
கேட்டுக்கொண்டிருந்தார்"; எனவே அவர் "நல்ல பங்கைத்
தேர்ந்தெடுத்துக்கொண்டார்." (காண்க: லூக்கா 10:38-42).
இப்பகுதியில் மார்த்தா, மரியா, இலாசர் ஆகியோரின் வீடு எந்த நகரில்
இருந்தது என்பதும், இயேசு எருசலேமுக்கு அருகில் இருந்தாரா என்பதும்
சொல்லப்படவில்லை.
யோவான் நற்செய்தி :
யோவான் நற்செய்தியில் மார்த்தாவும் மரியாவும் இரு நிகழ்வுகளில்
வருகின்றனர். ஒன்று, இறந்துபோன இலாசருக்கு இயேசு உயிரளித்தது,
மற்றொன்று, மரியா இயேசுவுக்கு உணவு பரிமாறியபோது மார்த்தா இயேசுவுக்கு
நறுமணத் தைலம் பூசியது.
இலாசருக்கு இயேசு உயிரளித்த நிகழ்ச்சியில் முதலில் மரியா வருகிறார்,
அதன்பின் அவருடைய சகோதரி மார்த்தா வருகிறார். இயேசு வந்துகொண்டிருக்கிறார்
என்று கேள்விப்பட்ட உடனேயே மார்த்தா ஓடோடிச் சென்று அவரை வரவேற்கிறார்.
மரியாவோ வீட்டிலேயே இருந்தார். இயேசு சொல்லி அனுப்பிய பின்னரே
மரியா வருகிறார்.
இங்கே மார்த்தா அங்குமிங்கும் சென்று காரியங்களைச் செய்வதில்
முனைப்பாக இருப்பதும், மரியா அமைதியை நாடி சிந்தனையில் இருப்பதும்
காட்டப்படுகிறது. இது லூக்கா நற்செய்தியில் வருகின்ற மார்த்தா
மரியா ஆகியோரின் குணச்சித்திர விவரிப்புக்கு ஒத்திருக்கிறது
(லூக்கா 10:38-42).
இரு சகோதரிகளுமே இயேசுவைப் பார்த்து, "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால்
என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்" என்றுதான் கூறுகிறார்கள்.
(யோவான் 11:21,32) ஆயினும், இயேசு மரியாவுக்கு அளித்த பதில்
உணர்ச்சியையும் உள்ளத்தின் துயரத்தையும் வெளிப்படுத்துகிறது.
மார்த்தாவிடம் இயேசு நம்பிக்கை கொள்ளும்படி அறிவுறுத்தி, போதனை
வழங்குகிறார்:
இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, மார்த்தா மரியாவிடம் சென்று
இயேசு அவரைத் தேடியதாகக் கூறுகிறார். மரியா வந்ததும் இயேசு அவரிடம்
இலாசரை எங்கே வைத்தார்கள் என்று கேட்கிறார். மரியா இயேசுவை இலாசரின்
கல்லறைக்குக் கூட்டிச் செல்கிறார். கல்லறையின் கல்லை அகற்றும்படி
இயேசு கூறியதும் மார்த்தா அதற்கு மறுப்புத் தெரிவிக்கிறார்: "ஆண்டவரே,
நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே!" என்பது மார்த்தாவின்
கூற்று (யோவான் 11:39). இயேசு பதில்மொழியாக, "நீ நம்பினால் கடவுளின்
மாட்சிமையைக் காண்பாய் என் நான் உன்னிடம் கூறவில்லையா" என்று
கேட்டார் (யோவான் 11:40). அதன்பின் இலாசரின் கல்லறையின் கல்
அகற்றப்படுகிறது. இயேசு அண்ணாந்து பார்த்து தம் தந்தையை நோக்கி
வேண்டுகிறார். இலாசரும் சாவினின்று விடுபட்டு மீண்டும் உயிர்பெற்று
எழுகின்றார்.
யோவான் நற்செய்தியில், மார்த்தா மீண்டும் வருகிறார். யோவான் நற்செய்தியின்
பன்னிரண்டாம் அதிகாரத்தில் அந்நிகழ்ச்சி விவரிக்கப்படுகிறது.
இயேசு பெத்தானியாவுக்குச் சென்றார் என்றும் அங்கு அவருக்கு
விருந்து அளிக்கப்பட்டது என்று மட்டுமே அந்நற்செய்தி கூறுகிறது.
அதற்கு இணையான பகுதிகளாக உள்ள மத்தேயு 26:6-3 பகுதியிலும்,
மாற்கு 14:3-9 பகுதியிலும் விருந்து "தொழுநோயாளரான சீமோன்
வீட்டில் நிகழ்ந்தது" என்றுள்ளது.
எனவே, இந்த விருந்து சீமோனின் வீட்டில் நடந்திருக்கலாம் என்று
பலர் கருதுகின்றனர். ஆயினும், மார்த்தா விருந்து பரிமாறினார்
என்று யோவான் கூறுவது கவனிக்கத்தக்கது. மேலும், விலையுயர்ந்த
நறுமணத் தைலத்தைக் கொண்டு இயேசுவை மார்த்தாவின் சகோதரியான மரியா
பூசினார் என்று யோவான் நற்செய்தி கூறுகிறது.
கத்தோலிக்க மரபில் புனித மார்த்தா :
ரோமன் கத்தோலிக்க மரபில் மார்த்தாவின் சகோதரி மரியா, இயேசுவுக்கு
நறுமண எண்ணெய் பூசிய "பாவியான பெண்ணாகிய" மகதலா மரியாவோடு
பெரும்பாலும் இணைத்துப் புரிந்துகொள்ளப்பட்டார். அதுபோலவே
மார்த்தா பற்றியும் சில மரபுச் செய்திகளும் விளக்கங்களும் உள்ளன.
யோவான் நற்செய்திப்படி, மரியா, மார்த்தா, இலாசர் ஆகியோர்
பெத்தானியாவில் வாழ்ந்தனர். லூக்கா நற்செய்திப்படி, அவர்கள்
சிறிது காலமாவது கலிலேயாவில் வாழ்ந்திருக்க வேண்டும். லூக்கா
அவர்கள் வாழ்ந்த நகரத்தைக் குறிப்பிடவில்லை. ஆனால் அந்த இடம் "மகதலா"
என்னும் ஊராக இருந்திருக்கலாம். அவ்வாறென்றால் பெத்தானியா மரியாவும்
மகதலா மரியாவும் ஒரே ஆளைக் குறிக்கக் கூடும். மார்த்தா பற்றி
யோவானும் லூக்காவும் தருகின்ற விவரிப்பு மிகத் துல்லியமாக ஒத்திருக்கின்றன.
இயேசு அவர்களோடு கொண்டிருந்த உறவு உண்மையிலேயே ஆழமானது:
"மார்த்தாவிடமும் அவருடைய சகோதரியான மரியாவிடமும் இலாசரிடமும்
இயேசு அன்பு கொண்டிருந்தார்" (யோவான் 11:5). மார்த்தா இயேசுவுக்கு
உணவு பரிமாறுவது பற்றியே கரிசனையும் கவலையும் கொண்டிருந்தார்
(யோவான் 11:20-21,39; லூக்கா 10:40). ஆனால் படிப்படியாக
மார்த்தாவின் மனநிலையில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. அவர் இயேசுவைக்
கடவுள் தன்மை கொண்டவராக ஏற்கின்றார். தம் சகோதரியான மரியாவிடம்
சென்று அதை அறிவிக்கின்றார் (காண்க: யோவான் 11:20-27).
கீழை மரபுவழிச் சபை மரபு:
கீழை மரபுவழிச் சபையில், மார்த்தாவும் அவருடைய சகோதரி மரியாவும்
வெள்ளைப்போளம் ஏந்தியவர்களாகப் போற்றப்படுகிறார்கள். இயேசு
கொல்கொதா மலையில் சிலுவையில் உயிர்துறந்து கல்லறையில் அடக்கப்பட்ட
பின், அவரைப் பிரமாணிக்கமாகப் பின்சென்ற பெண்கள் அவருடைய கல்லறைக்குச்
சென்று அவருடைய உடலுக்கு வெள்ளைப்போளம் கொண்டு பூசப் போனார்கள்
என்னும் அடிப்படையில் இக்கருத்து எழுந்தது. கல்லறை வெறுமையாய்
இருந்தது. வானதூதர், இயேசு உயிர்பெற்றெழுந்த செய்தியை அறிவித்தார்.
எனவே, இப்பெண்களே, இயேசு உயிர்த்தெழுந்ததற்கு முதல் சாட்சிகள்.
மரபுவழிச் சபையின் பாரம்பரியப்படி, மார்த்தாவின் சகோதரர் இலாசர்
கிறித்துவில் நம்பிக்கை கொண்டதால் யூதர்கள் அவரை எருசலேமிலிருந்து
துரத்தினர். அவரும் புனித ஸ்தேவான் மறைச்சாட்சியாக உயிர்துறந்ததைத்
தொடர்ந்து, தம் சகோதரி மார்த்தாவோடு யூதேயாவை விட்டுச் சென்று,
பல்வேறு பகுதிகளில் கிறித்தவ சமயத்தைப் பரப்பினார். அதே சமயம்,
மகதலா மரியா எருசலேமில் திருத்தூதர் யோவானோடு சேர்ந்து கிறிஸ்தவத்தைப்
பரப்பினார். மூன்று உடன்பிறப்புகளும் அதன்பின்னர் சைப்ரசு
தீவுக்கு வந்தனர். அங்கே இலாசர் லார்னாக்கா நகரில் ஆயராகப்
பொறுபேற்றுப் பணிபுரிந்தார்.
|
|
|