Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

புனித மரிய கொரற்றி  ✠ (St. Maria Goratti)
   
நினைவுத் திருநாள் : யூலை 06
  புனித மரிய கொரற்றி ✠ (St. Maria Goratti)

கன்னியர் மற்றும் மறைசாட்சி :
(Virgin and Martyr)

பிறப்பு : அக்டோபர் 16, 1890
கொரினல்டோ, அன்கோனா பிராந்தியம், மர்ச்சே, இத்தாலி அரசு
(Corinaldo, Province of Ancona, Marche, Kingdom of Italy)

இறப்பு : ஜூலை 6, 1902 (வயது 11)
நெட்டுனோ, ரோம் பிராந்தியம், லஸியோ, இத்தாலி அரசு
(Nettuno, Province of Rome, Lazio, Kingdom of Italy)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம் : ஏப்ரல் 27, 1947
திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்
(Pope Pius XII)

புனிதர் பட்டம் : ஜூன் 24, 1950
திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்
(Pope Pius XII)

முக்கிய திருத்தலம் :
நெட்டுனோ, ரோம் பிராந்தியம், லஸியோ, இத்தாலி அரசு
(Nettuno, Province of Rome, Lazio, Italy)

நினைவுத் திருவிழா : ஜூலை 6

சித்தரிக்கப்படும் வகை : 14 லில்லி மலர்கள்;
ஏழை உழவர்களின் உடைகள்; கத்தி

பாதுகாவல் :
பாலியல் வன் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள், குற்ற செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள், இளம் பெண்கள், நவீனகால இளைஞர்கள், மரியாளின் குழந்தைகள்

புனிதர் மரியா கொரெட்டி, இத்தாலிய கன்னியரும், கத்தோலிக்க திருச்சபையின் மறைசாட்சியும், கத்தோலிக்க திருச்சபையில் அதிகாரபூர்வமாய் புனிதர் பட்டம் பெற்றவர்களுள் மிக இளையவரும் ஆவார். தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முனைந்தவனுக்கு மறுப்பு தெரிவித்ததால், அவனாலேயே பதினான்கு முறை கத்தியால் குத்தப்பட்டு இவர் இறந்தார்.

வரலாறு :
"மரியா தெரெசா கொரெட்டி" (Maria Teresa Goretti) எனும் இயற்பெயர் கொண்ட இவர், கல்வி கற்குமளவுக்கு வசதி இல்லாத ஏழைகுடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இவரது தந்தையின் பெயர், "லுய்கி கொரெட்டி" (Luigi Goretti) ஆகும். தாயாரின் பெயர், "அசுன்ட்டா நீ கர்லினி" (Assunta ne Carlini) ஆகும். தமது பெற்றோரின் ஏழு குழந்தைகளில் மூன்றாவது குழந்தை ஆவார். மரியாவுக்கு ஐந்து வயதாகையில் வறுமை காரணமாக இவர்களது குடும்பம் கொஞ்ச நஞ்சமிருந்த நிலங்களை விற்றுவிட்டு ஊர் ஊராக சென்றனர். இறுதியில் கி.பி. 1899ம் ஆண்டு, "லீ ஃபெர்ரியர்" (Le Ferriere) என்ற ஊருக்கு சென்றனர். அங்கே அவர்கள், "லா கசினா அன்டிகா" (La Cascina Antica) என்ற பெயருள்ள வீட்டில் தங்கினர். அந்த வீட்டை "செரனெல்லி" (Serenelli) என்ற குடும்பத்தினருடன் பகிர்ந்துகொண்டனர். அந்த குடும்பத்தில், "ஜியோவன்னி செரனெல்லி" (Giovanni Serenelli) என்பவரும் அவரது மகனான "அலெஸ்ஸாண்ட்ரோ செரனெல்லி" (Alessandro Serenelli) என்ற 18 வயது இளைஞனும் வசித்தனர்.

விரைவில், மரியாவுக்கு ஒன்பது வயதாகையில் அவரது தந்தை மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மரித்தார். பகல் நேரங்களில் மரியாவின் தாயாரும் சகோதரர்களும் விவசாய கூலி வேலை செய்வதற்காக செல்ல, மரியா வீட்டில் தனது சின்னத் தங்கையை கவனிப்பதுவும், வீட்டை சுத்தம் செய்வதுவும், சமையல் பணிகளை செய்வதுமாக இருப்பார். 11 வயதில் இவருக்குப் புது நன்மை கொடுக்கப்பட்டது.

கி.பி. 1902ம் ஆண்டு, ஜூலை மாதம் 5ம் தேதி, மரியா தமது வீட்டின் வெளிப்புறம் அமைந்திருந்த படிக்கட்டில் அமர்ந்திருந்தார். அவர் தனித்திருந்ததை அறிந்து, சற்று நேரத்தில் அங்கு வந்த "அலெஸ்ஸாண்ட்ரோ" (Alessandro Serenelli), ஒரு கத்தியைக் காட்டி, தாம் சொன்னபடி கேட்கவில்லை என்றால் குத்தி விடுவதாக பயமுறுத்தினான். அவனுடைய நோக்கம், பாலியல் வன்கொடுமையால் மரியாவை அடைவதாகும். "இது சாவான பாவம், இதற்காக நீ நரகத்திற்குப் போவாய்", என்று மரியா பலவிதமாக கதறி அழுதும் பயனில்லை. மரியா அதற்கிணங்க மறுத்ததால் அவரின் உடலைப் பலமுறை கத்தியால் குத்திக் கிழித்தான். குற்றுயிராய் மருத்துவமனை எடுத்துச் செல்லப்பட்ட மரியாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், 24 மணி நேரம் மரணப்படுக்கையில் இருந்த மரியா கொரெட்டி "மன்னித்துவிட்டேன் அவரை" என்று கூறிவிட்டு மரித்தார்.

கொலை செய்ததற்காக அலெஸ்ஸாண்ட்ரோவுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. பலகாலமாக மனந்திரும்ப மனமி்ல்லாதிருந்த அலெஸ்ஸாண்ட்ரோ, மரியா கொரெட்டி, விண்ணினின்று மலர்களை தன் கை நிறையக் கொடுத்ததாகக் கனவு கண்டதாகவும் அதனால் மனமாற்றம் அடைந்ததாகவும் அறிவித்தான். 27 ஆண்டுகளுக்குப் பின்னர் அவன் சிறையிலிருந்து விடுதலை பெற்றான். அப்போது மரியாவின் தாயிடம் சென்று மன்னிப்புக் கேட்டான். மன்னிப்பு பெற்ற அலெஸ்ஸாண்ட்ரோ, தமது இறுதி நாட்களில் கப்புச்சின் 3ம் சபையின் பொதுநிலை துறவியாக (Lay Brother) வாழ்ந்து கி.பி. 1970ம் ஆண்டு காலமானார்.

மரியா கொரெட்டி இறந்து 45 ஆண்டுகளுக்குள் மரியாவுக்கு திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ், புனிதர் பட்டமளித்தார். இந்த நிகழ்வுக்கு மரியாவின் தாயும், இரண்டு சகோதரிகளும், ஒரு சகோதரரும், அலெஸ்ஸாண்ட்ரோவும் வந்திருந்தனர். இவரது புனித பட்டமளிப்பு விழாவுக்கு உலகின் பல பகுதிகளிலிருந்தும் 2,50,000 மக்கள் ரோம் நகருக்கு வருகை தந்தனர்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
புனித மரிய கொரற்றி ✠ (St. Maria Goratti)

தன்னுடையை கற்பை காப்பாற்றிக்கொள்ள 14 கத்திக்குத்துகளை வாங்கி இரத்த வேத சாட்சியான புனித மரிய கொரற்றியின் புனிதை பட்ட விழாவில் அப்போதைய பாப்பரசர் 12-ம் பயஸ் பேசிய வார்த்தைகள் (நாள்:24.06.1950) :

இன்று புனித ஆலயத்தில் வைத்து 45 வருடங்களுக்கு முன்னால் தன் கன்னிமைக்கு கேடு வருவிக்க சம்மதிக்காமல் கடவுளுக்காக தன் உயிரை விட்ட பன்னிரெண்டு வயது கூட முடிவுறாத கொரினால்டோவின் (ரோமில் உள்ள ஒரு நகரம்) மகளாகிய மரிய கொரற்றியை நாம் புனிதர்கள் பட்டியலில் சேர்க்கப் போகிறோம். கடவுளுக்காக மறைசாட்சிகளின் முடிசூடிக்கொள்ள ஆன்ம திடன் அவளுக்கு கிடைத்திருக்கிறது. பல்லாண்டுகளுக்கு முன் உரோமை நகரில் வளர்ந்து வந்த அழகு வாய்ந்த பூக்கள்தான் அகந்தாவும், மரியாவும்.

இன்று நம் வலப்பக்கம் இருக்கும் மரியாவின் தாய் அகந்தாவும், தந்தை லூயிஜியும் (இவர் புனித கொரற்றியின் வேத சாட்சியின் ஒரு வருடத்திற்கு முன்பே இறந்துவிட்டார்) மரியாவின் கிறிஸ்தவ வாழ்விலும், தியாகத்திலும், பெரும் பங்கு பெற்றுள்ளனர்.

சகோதர சகோதரிகளே, சிறுபிள்ளைகளே, இன்று நம் அனைவருக்கும் மகிழ்ச்சியின் தினமாகும். நல்ல கிறிஸ்தவக் குடும்பத்தின் தினமாகும். தாய் தந்தையிடம் பக்தியும், நல்ல கிறிஸ்தவ வாழ்வும் நடத்தும் அன்பான குடும்பத்தில்தான் புனிதர்கள் உருவெடுப்பார்கள். ஏழைகளானாலும் கடவுள் முன் பணக்காரர்களாக இருந்த கொரற்றி குடும்பத்தார், கவலைகளும், கண்ணீர்களும் உண்டானாலும் நிலையான கடவுள் நம்பிக்கையில் வாழ்ந்துள்ளனர்.

இன்று  ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இளம்பிள்ளைகள்,  வசீகரமான படங்கள்,புத்தகங்கள், உடை அணிதல், செயல்பாடுகள் இவற்றால் 
கெட்டுப் போய்க் கொண்டுருக்கிறார்கள். இப்படி சின்னஞ் சிறுவர்களுக்கு இடறலாய் இருப்பவர்கள் கழுத்தில் எந்திரக் கல்லைக்கட்டி  கடலின் ஆழத்தில்எரிந்து விடுவது அவனுக்கு நலம் என திருநூல் கூறுகிறது. இதற்கு மாற்றுச் சமுதாயத்தை உருவாக்க கத்தோலிக்க சபையில் உள்ளதாய்தந்தையர்களுக்கு பெரும்பங்கு உள்ளது.

அன்பான சிறுவர் 
சிறுமியரே, நீங்கள் இன்று ஒரு சபதம் செய்ய வேண்டும். கன்னிமைக்கும்,  தூய்மைக்கும் ஒருபோதும் கேடு விளைவிக்கும் வகையில்  நடக்கமாட்டேன்  என்று முடிவுக்கு வர வேண்டும். தீயவனின் கத்தி முனையைக் கூட எதிர்த்து நின்ற மரியாவைப்போல நீங்களும் வாழஅவர்உங்களுக்கு துணை செய்வாராக.." என்றார்.

1950 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-தேதி மரிய கொரற்றி புனிதையின் பட்டியலில் சேர்க்கப்பட்டார். அன்று புனித ராயப்பர் ஆலயத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கை ஐந்து லட்சம் பேர். புனிதையைக்கொன்ற கொலைகாரனும் அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அன்று அவன் பேசியபோது " ஒரு புனிதையை கத்தியால் கொன்றேன் " என்று சொன்னான். மனந்திரும்பியிருந்த அவன் கடைசிகாலத்தில் (ஆயுள்தண்டனை முடிந்து) கப்புச்சியன் சபையின் துறவியாக மரித்தது குறிப்பிடத்தக்கது..

இவ்வளவு அதிகமாக கூட்டம் கூடியதும், புனிதையின் தாய் புனிதை பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டதும் மரிய கொரற்றி மட்டுமே நடந்த நிகழ்வு..

1950 லேயே போப் ஆண்டவர் கண்ணியமான ஆடைகள் உடுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.. இன்றைய கால கட்டங்களில் மிக கேவலமான ஆடைகள் சர்வ சாதாரனமாக அநேகரால் எவ்வித உறுத்துதலும் இன்றி அணியப்படுகிறது, கன்னியமான ஆடைகளுக்கு வாலின்டெரி ரிடையர்மெண்ட் கொடுக்கப்பட்டு வெளியேறிவிட்டன. பெற்றோர்களே தங்கள் பிள்ளைக்களுக்கு எதை வேண்டுமாலும் வாங்கிக் கொடுக்கிறார்கள். கன்னிமற்ற ஆடைகளுடன் ஆலயத்திற்கு வந்து ஆண்டவரை வாங்கும் துணிச்சல் வந்துவிட்டது..

ஆடைகள் விசயத்தில் அதிக கவனமும், எச்சரிக்கையும் தேவை.. அதே போல் கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே உரியது அல்ல. அது ஆண்களுக்கும் உண்டு. ஆண்கள் ஆடைகள் விசயத்தில் அதிக பாதிப்பு இல்லையென்றாலும் அவர்களும் கண்ணியமான ஆடைகள் அணிய வேண்டும். காலரில்லாத T சர்ட்டுடன் ஆலயம் வருவது, முக்கால் பேண்டுடன் ஆலயம் வருவது, நடிகர்கள், பேய்கள் உருவம் போட்ட பணியனுடன் வருவது போன்றவைகள் மாற்றப்பட வேண்டும்

கடவுள் வாழும் ஆலயமான நம்முடையை உடலை மறைப்பத்தற்கு நாம் எத்தகைய ஆடைகளை அணிய வேண்டும் என்பதை நாம் சிந்தித்து முடிவு செய்ய வேண்டும்..

14- கத்தி குத்துகள் வாங்கியபோதும் தன் உயிரைப்பற்றி கவலைப்படாமல் தன்னுடைய ஆடைகளை சரி செய்து கொண்டிருந்தாள் என்று அவரைக் குத்தியவனே சான்று பகர்ந்துள்ளான்..

புனித மரிய கொரற்றியே.. உங்கள் வாழ்வின் படிப்பினையை நாங்களும் எங்கள் வாழ்வில் கடைபிடிக்க, கற்புக்காக.. கடவுளுக்காக எதையும் தியாகம் செய்ய எங்களுக்கு வரத்தை எங்களுக்குப் பெற்றுத்தாரும்... ஆமென்.

குறிப்பு : புனிதர்களின் வாழ்க்கை வரலாறுகள் நமக்கு ரோல்மாடல்கள்.. ஆகவே எந்த ஆலயம் சென்றாலும் அங்கு புனிதர்கள் வாழ்க்கை வரலாறுகள் இருக்கிறதா? என்று கேட்டு வாங்கிப்படிப்பது நம் கத்தோலிக்க வாழ்க்கைக்கு ரொம்பவே நல்லது
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மரியா கொரற்றி (ஜூலை 06)

நிகழ்வு

1950 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் நாள் மரியா கொரற்றிக்கு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்ட நாள். அன்றைக்கு அவருக்கு புனிதர் பட்டம் கொடுக்கப்படுகிறது என செய்தியைக் கேள்விப்பட்டு, உரோமையில் உள்ள தூய பேதுரு சதுக்கத்துக்கு ஒரே நேரத்தில் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் கூடிவந்தார்கள். இவ்வளவு மக்களும் அங்கே இருப்பது இயலாத காரணத்தினால், புனிதர் பட்ட நிகழ்வுகள் பேதுரு சதுக்கத்திற்கு வெளியே வைத்து நடத்தப்பட்டது. திருச்சபையின் வரலாற்றில் தூய பேதுரு சதுக்கத்தில் எந்தப் புனிதருக்கும் இவ்வளவு கூட்டம் கூடியதில்லை. மரியா கொரற்றிக்கே முதல்முறையாக இவ்வளவு மக்கள் கூடி வந்தார்கள். காரணம் அவருடைய மாசற்ற, தூய வாழ்க்கை

வாழ்க்கை வரலாறு

மரிய கொரற்றி இத்தாலியில் உள்ள கோரினால்டோ என்னும் இடத்தில் 1890 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய குடும்பம் மிகவும் ஏழ்மையான விவசாயக் குடும்பம். அன்றாடம் உழைத்து, அதிலிருந்து வரக்கூடிய வருமானத்தை வைத்து பிழைக்கக்கூடிய குடும்பம்.

ஒருசமயம் மரிய கொரற்றியின் தந்தை, தன்னுடைய குடும்பம் பிழைப்பதற்கு கொரினால்டோவில் எந்தவித வசதியும் இல்லை என முடிவெடுத்து, உரோமையில் உள்ள நெட்டுனோ என்ற இடத்திற்கு குடிபெயர்ந்தார். அங்கே சென்ற ஒருசில ஆண்டுகளிலே அவர் மரணமடைந்தார். இதனால் குடும்ப பாரம் மரிய கொரற்றியின் தலையில் விழுந்தது. மரிய கொரற்றியின் தாயார் ஏற்கனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் குடும்பத்தில் எல்லாப் பொறுப்புகளையும் அவரே பார்க்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவர் வீட்டிலிருந்து துணிகளைத் தைத்து அதிலிருந்து வரக்கூடிய வருமானத்தை வைத்து குடும்பத்தை பராமரித்து வந்தாள்.

மரிய கொரற்றி 1902 ஆம் ஆண்டு தன்னுடைய 12 ஆம் வயதில் புதுநன்மை வாங்கினார். அன்றிலிருந்தே அவர் மிகவும் தூய்மையான வாழ்க்கையை வாழத்தொடங்கினார். பாவம் செய்து வாழ்வது கடவுளுக்கு விரோதமான வாழ்க்கை, எனவே பாவத்திலிருந்து எப்போதும் தன்னைப் பாதுகாத்துக்கொண்டே வாழ்ந்துவந்தார். மரிய கொரற்றி இருந்த வீட்டிற்குப் பக்கத்தில் அலெக்ஸ்சாண்டரோ என்ற 19 வயது இளைஞன் வசித்து வந்தான். அவன் எப்போதும் மரிய கொரற்றிக்கு தொல்லை கொடுத்து வந்தான். ஒருசமயம் மரிய கொரற்றி வீட்டில் தனியாக இருந்த சமயம், அலெக்ஸ்சாண்டரோ என்ற அந்த இளைஞன் உள்ளே வந்து, மரிய கொரற்றியை தன்னுடைய காம இச்சைக்கு இணங்குமாறு கேட்டான். ஆனால் அவரோ பாவம் செய்வது கடவுளுக்கு விரோதமானது. என்னை நீ பாவத்திற்கு இணங்கச் செய்தால் நீ நரகத்திற்குத்தான் போவாய்" என மிகக் கண்டிப்பாய் கூறினார். ஆனால் அந்தக் காமுகனோ மரிய கொரற்றியை பலமுறை கத்தியால் குத்திக் கிழித்தான்.

குற்றுயிராய் கிடந்த மரிய கொரற்றியைக் காப்பாற்றுவதற்கு மருத்துவமனைக்கு எடுத்துக்கொண்டு போனார்கள். ஆனால் அவரோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இருபத்து நான்கு மணி நேரத்திற்கு உள்ளாகவே இறந்துபோனார். அவர் இறப்பதற்கு முன்பாக தன்னைக் கொலை செய்த அந்தக் காமுகனை முற்றிலுமாக மன்னித்துவிட்டதாகக் கூறினார். மரிய கொரற்றியை கொலைசெய்த அலெக்ஸ்சாண்டரோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். அவனுக்கு முப்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது. சிறையில் இருந்த நாட்களில் மரிய கொரற்றி அவனுக்குக் காட்சிகொடுத்தார். அந்தக் காட்சியில் அவர் அவனுக்கு, "விண்ணிலிருந்து கைநிறைய மலர்களைத் தூவுவேன்" என்றார். இக்காட்சிக்குப் பிறகு அவன் மனம் மாறினான். இதனால் அவன் விரைவாகவே விடுதலை செய்யப்பட்டான். விடுதலையான பிறகு நேராகச் சென்று, மரிய கொரற்றியின் தாயிடம் மன்னிப்புக் கேட்டான்.

இந்த சமயத்தில்தான் அதாவது 1950, ஜூன் 22 ஆம் நாள் உரோமை நகரில் மரிய கொரற்றிக்கு புனிதர்பட்டம் வழங்கப்பட்டது. அந்தப் புனிதர் பட்ட நிகழ்வில் மரிய கொரற்றயின் தாய் மற்றும் சகோதரியோடு இவனும் கலந்துகொண்டு முற்றிலும் மனம் மாறினான். அதன்பிறகு இவன் கப்புசின் 3 ஆம் சபையில் சேர்ந்து, அங்கே ஒரு சகோதரராக வாழ்ந்து 1970 ஆண்டு இறந்து போனான்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

இருபதாம் நூற்றாண்டின் ஆக்னஸ் என அழைக்கப்படும் தூய மரிய கொரற்றியின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்ப்போம்.

1. தூய மாசற்ற வாழ்க்கை

லேவியர் புத்தகம் 19:2 ல் வாசிக்கின்றோம், "உங்கள் கடவுளும் ஆண்டவருமான நான் தூயவராக இருப்பதுபோல் நீங்களும் தூயவராக இருங்கள்" என்று. மரியா கொரற்றி தூய்மைக்கு, மாசற்ற தன்மைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார் என்பதை அவருடைய வாழ்விலிருந்து நாம் கண்டுகொள்கிறோம். பாவம் செய்வதற்கு அலெக்ஸ்சாண்டரோ என்ற அந்த இளைஞர் வற்புறுத்தியபோது, இவரோ பாவம் செய்வது கடவுளுக்கு விரோதமானது என மிக உறுதியாக இருந்தார். அதனாலேயே தன்னுடைய உயிரைத் துறந்தார். கிறிஸ்தவர்களாகிய நாம் கற்புக்கும் தூய்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறோமா என சிந்தித்துப் பாப்போம்.

தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பார்கள் என மலைபொழிவில் இயேசு கூறுகின்றார். நாம் மரிய கொரற்றியைப் போன்று தூய வாழ்க்கை வாழ முற்படுவோம்.

2. தீமை செய்தவனை மன்னித்தல்

குத்திக் கொலை செய்த இளைஞனை மரியா கொரற்றி மனதார மன்னித்தார். அதனாலேயே அவர் அவர் புனிதராக விளங்குகின்றார். கிறிஸ்தவர்களாகிய நாம் நமக்கு எதிராகத் தீமை செய்கிறவர்களை நாம் மன்னிக்கிறோமா என சிந்தித்துப் பார்ப்போம்.

மன்னிப்பு என்பது மண்ணகத்திலிருந்து விண்ணகத்திற்கு ஏறிச்செய்யும் ஒரு பாலம். அதில் நாம்தான் முதலில் ஏறிச்சொல்வோம் என்பான் ஒரு அறிஞன்.

ஆகவே தூய மரிய கொரற்றியின் விழா நாளில் நாமும் அவரைப் போன்று தூய்மையிலும், மன்னிப்பதிலும் சிறந்து விளங்குவோம், அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா