Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠  புனிதர் லியோபோல்ட் மேண்டிக் ✠(St. Leopold Mandié)
   
நினைவுத் திருநாள் : (ஜூலை/ july- 28)
✠ புனிதர் லியோபோல்ட் மேண்டிக் ✠(St. Leopold Mandié)

மறைப்பணியாளர், குரு:
(Religious and Priest)

பிறப்பு: மே 12, 1866
ஹெர்சக் நோவி, டல்மாஷியா அரசு, ஆஸ்திரிய-ஹங்கேரி
(Herceg Novi, Kingdom of Dalmatia, Austro-Hungary)

இறப்பு: ஜூலை 30, 1942 (வயது 76)
பதுவை, இத்தாலி அரசு
(Padua, Kingdom of Italy)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: மே 2, 1976
திருத்தந்தை ஆறாம் பவுல்
(Pope Paul VI)

புனிதர் பட்டம்: அக்டோபர் 16, 1983
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

முக்கிய திருத்தலங்கள்:
புனித லியோபோல்டு மேண்டிக் திருத்தலம், பதுவை, இத்தாலி
(Shrine of St. Leopold Mandić, Padua, Italy)

நினைவுத் திருவிழா: ஜூலை 28

புனித லியோபோல்ட் மேண்டிக், "குரோஷியன் கப்புச்சின் சபை" (Croatian Capuchin Friar) துறவியும், கத்தோலிக்க அருட்பணியாளரும் ஆவார். திக்குவாய் போன்ற பேச்சுக் குறைபாடுகள் உள்ள இவர், தமது குறைபாடுகளையும் மீறி, ஆழ்ந்த ஆன்மீக பலத்தை வளர்த்ததுடன், தினமும் 1215 மணி நேரம் ஓப்புரவு திருவருட்சாதனம் அளிப்பதன் மூலம் மக்களின் மனதில் நிலைத்தவர்.

"போக்டான் இவன் மேண்டிக்" (Bogdan Ivan Mandić) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் லியோபோல்ட் மேண்டிக், அன்றைய ஆஸ்திரிய-ஹங்கேரி (Austro-Hungary) பிராந்தியமான "ஹெர்செக் நோவி" (Herceg Novi) எனும் கடற்கரை நகரில் பிறந்தார். மொழியால் குரோசி இனத்தைச் சார்ந்த இவரது தந்தை, "அட்ரியாடிக்" (Adriatic) கடல் பகுதியில் சொந்தமாக மீன்பிடி கப்பல் வைத்து தொழில் செய்த "பீட்டர் அன்டுன் மேண்டிக்" (Petar Antun Mandić) ஆவார். இவரது தாயாரின் பெயர், "டிராகிஸியா செரெவிக்" (Dragica Zarević) ஆகும். இவர் தமது பெற்றோரின் பன்னிரண்டு குழந்தைகளில் கடைசி குழந்தை ஆவார்.

வெனிஸ் குடியரசிலுள்ள (Republic of Venice) கபுச்சின் துறவியரின் சமூகத்தால் வளர்க்கப்பட்ட இவர், உடல்நலம் குன்றியவராவார். சுமார் நாலரை அடி உயரமேயுள்ள இவர், சாய்வான நடையும் திக்கித் திணறி பேசும் திறனுமுள்ளவர் ஆவார். தமது 16 வயதில் "உடின்" (Udine) எனுமிடத்திலுள்ள இளம் கபுச்சின் துறவியர் மடத்தில் இணைந்தார். இரண்டே வருட காலத்தின் பின்னர் ஆன்மீக சத்திய பிரமாணமும் துறவு ஆடைகளும் ஏற்றுக்கொண்ட இவர், புகுமுக துறவியாக தமது துறவு வாழ்க்கையை தொடர்ந்தார். தமது ஆன்மீக பெயராக "லியோபோல்ட்" எனும் பெயரை ஏற்றுக்கொண்டார். தனது சொந்த நாடு அமைந்த குரோசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் மறைபணி செய்ய ஆவல் கொண்டார். ஆனால் இவரது பலவீனமான உடல் அமைப்பு இடம் தரவில்லை.

தமது 24 வயதில், கி.பி. 1890ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 20ம் நாளன்று, வெனிஸ் (Venice) நகரிலுள்ள "புனித மரியா டெல்லா சலுட்" (Basilica of Santa Maria della Salute) பேராலயத்தில், கர்தினால் (Cardinal) "டொமினிக்கோ அகஸ்டினி" (Domenico Agostini) என்பவரால் குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்டார்.

அடிக்கடி நோய்வாய்ப் பட்டதால், 1906ம் ஆண்டு முதல் தமது மரணம் வரையான சுமார் முப்பத்தாறு வருடங்கள் இத்தாலியின் பதுவை நகரிலேயே தங்கி பணியாற்றினார்.

புனிதர் அந்தோணியார் கல்லறை அமைந்த பதுவை திருத்தலப் பேராலயத்தில் பக்தர்களுக்கு ஓப்பரவு அருட்சாதனம் வழங்க நியமிக்கப்பட்டார். இப்பணியை தமது வாழ்நாள் முழுவதும் செய்தார். இவரிடம் ஓப்பரவு பெற்றவர்கள் இறை ஞானத்தையும், இறை ஆசிரையும், மன்னிப்பையும் பெற்றதாக உணர்ந்தனர்.
கீழைத் திருச்சபையும், ரோமைத் திருச்சபையும் இணைந்து திருத்தந்தையின் கீழ் ஒரே குடையாக செயல்பட வேண்டுமென்ற புனித நோக்கத்திற்காக தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டார்.

தனது புனித வாழ்வால் அனைவருக்கும் இறைப்பணி ஆற்றிய இவருடைய உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நோய் காரணமாக, இவர் தமது 76வது வயதில், 1942ம் ஆண்டு, ஜூலை மாதம், 30ம் தேதியன்று, திருப்பலிக்கு (Mass) ஆயத்தம் செய்துகொண்டிருந்த இவர், நிலைகுலைந்து தரையில் வீழ்ந்தார். அங்கிருந்து அவரது அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு, இறுதி அருட்சாதனங்கள் வழங்கப்பட்டன. அவரது படுக்கையருகில் ஒன்றுகூடிய துறவியர், "பரிசுத்த அரசியே வாழ்க" (Salve Regina) எனப்படும் மரியாளின் புகழ் பா பாடத் தொடங்கினர். "ஓ புன்னகையே, ஓ அன்பே, ஓ இனிய கன்னி மரியே" ("O clement, O loving, O sweet Virgin Mary") எனும் வரிகளை அவர்கள் பாடிக்கொண்டிருக்கும் வேளையில் அவரது ஆன்மா இவ்வுலகை விட்டு பிரிந்தது.

திருத்தந்தை ஆறாம் பவுல் (Pope Paul VI), 1976ம் ஆண்டு, மே மாதம், 2ம் நாளன்று, இவரை அருளாளர் நிலைக்கு உயர்த்தி, திருச்சபை ஒன்றிப்பின் பாதுகாவலர் என அறிவித்தார். திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் (Pope John Paul II), 1983ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 16ம் நாளன்று, இவரை புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.


 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா