Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் கத்தேரி டேக்கக்விதா ✠(St. Kateri Tekakwitha)
   
நினைவுத் திருநாள் : (ஜூலை / Juill- 14)
 ✠ புனிதர் கத்தேரி டேக்கக்விதா ✠(St. Kateri Tekakwitha)

 கன்னியர்/ பொதுநிலைத் துறவி :
(Virgin/ Religious Ascetic/ Lay woman)

பிறப்பு : கி.பி. 1656
ஓசர்நினோன், இரோக்குவா பிரதேசம் (1793 வரை "புது ஃபிரான்ஸ்" - தற்போது ஓரிஸ்வில், நியூ யோர்க் மாநிலம்)
(Ossernenon, Iroquois Confederacy (New France until 1763, modern Auriesville, New York)

இறப்பு : ஏப்ரல் 17, 1680
கானாவேக், (மொண்ட்ரியல் அருகே), கியூபெக், கனடா
(Kahnawake (near Montreal), Quebec, Canada)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

அருளாளர் பட்டம் : ஜூன் 22, 1980
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

புனிதர் பட்டம் : அக்டோபர் 21, 2012
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
(Pope Benedict XVI)

முக்கிய திருத்தலங்கள் :
புனித ஃபிரான்சிஸ் சவேரியார் ஆலயம், கானாவேக், கியூபெக், கனடா
(Saint Francis Xavier Church, Kahnawake, Quebec, Canada)

நினைவுத் திருவிழா :
ஜூலை/ July 14 (ஐக்கிய அமெரிக்க நாடுகள்/ United States)
ஏப்ரல்/ April 17 (கனடா/ Canada)

சித்தரிக்கப்படும் வகை : லில்லி மலர்; கடல் ஆமை; செபமாலை

பாதுகாவல் :
சூழலியலாளர், சுற்றுச்சூழல், சூழலியம், அனாதைகள், நாடுகடத்தப்பட்டவர், தங்களது பக்திக்காக கேலிக்கு உள்ளாகுபவர், அமெரிக்க முதற்குடிமக்கள்

"கேதரின் " (Catherine ) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் கத்தேரி டேக்கக்விதா, ஒரு ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் "அல்கோன்குயின்-மோஹாவ்க்" (AlgonquinMohawk laywoman), பொதுநிலைத் துறவியும் ஆவார். இவர், "மோஹாவ்க்கின்" லில்லி மலர் (Lily of the Mohawks) என்றும் அழைக்கப்படுகிறார்.

தற்போது நியூ யோர்க் மாநிலம் அமைந்துள்ள இடத்தில் பிறந்த இவர், சிறுவயதில் பெரியம்மையால் தாக்கப்பட்டு பிழைத்தவர் ஆவார். இளமையிலேயே பெற்றோரை இழந்தவர். இவர் தனது 19ம் வயதில் கத்தோலிக்கத்துக்கு மனம் மாறித் திருமுழுக்கு பெற்றார். இதன்பின் இவர் தனது வாழ்நாளை, இன்றைய "கனடா" (Canada) நாட்டின் (அன்றைய புதிய ஃபிரான்ஸ் (New France) நாட்டின்) இயேசுசபை மறைப்பணி தளமான (Jesuit mission) "மொண்ட்ரியால்" (Montreal) நகருக்கு தெற்கே உள்ள "கானாவாக்கே" (Kahnawake) கிராமத்தில் கழித்தார்.

இவர் தனது 24ம் வயதில் கற்பு நிலை உறுதி பூண்டார். தமது நல்லொழுக்கத்திற்கும் கற்பு நிலைக்கும் பெயர் போன இவர் தனது கடும் தவ முயற்சிக்காக அறியப்படுகின்றார். இவர் கத்தோலிக்க மறைக்கு மனம் மாறியதால் தனது சொந்த குடும்பத்தாலும், இனத்தாலும் ஒதுக்கப்பட்டார்.

அமெரிக்க முதற்குடிமக்களுள் திருச்சபையின் பீட மகிமை அளிக்கப்பட்ட முதல் பெண் இவர் ஆவார். இவருக்குத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் 1980ல் அருளாளர் பட்டம் அளித்தார். திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், 2012ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 21ம் நாளன்று, புனித பேதுரு பேராலயத்தில் இவருக்குப் புனிதர் பட்டம் அளித்தார். பல்வேறு அதிசயங்களும், இயற்கைக்கு மீறிய நிகழ்வுகளும் இவரது மரணத்திற்கு பின்னர் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

பெற்றோரும் இளம் பருவமும் :
திருமுழுக்கின்போது கேதரின் என்று பிரஞ்சு மொழிவடிவத்தில் கொடுக்கப்பட்ட பெயரே "கத்தேரி" (Kateri) என்று வழங்கலாயிற்று. கத்தேரி தேக்கக்விதா பிறந்த ஆண்டு, கி.பி. சுமார் 1656 ஆகும். அமெரிக்க முதற்குடி மக்களின் ஒரு பிரிவாகிய மோகாக் இனத்தவராகிய கத்தேரி பிறந்த ஊரின் பெயர் ஓசர்நினோன். அது இன்றைய நியூயார்க் மாநிலத்தில் (New York) உள்ள "ஓரிஸ்வில்" (Auriesville) நகருக்கு அருகில் உள்ளது.

கத்தேரியின் தந்தை பெயர் "கென்னெரோன்குவா" (Kenneronkwa) ஆகும். அவர் மோகாக் இனத்தின் தலைவராக இருந்தார். கத்தேரியின் தாய் பெயர் தாகாஸ்குயித்தா (Tagaskouita). அவர் கத்தோலிக்க சபை உறுப்பினராக இருந்தார். அல்கோன்குவின் இனத்தவரான அவர் கவர்ந்துசெல்லப்பட்டு பின்னர் மோகாக் இனத் தலைவரின் மனைவி ஆனார். இளவயதில் தாகஸ்குயித்தாக்கு மொண்ட்ரியால் மாநிலத்தில் ஃபிரெஞ்ச் கத்தோலிக்க மறைபரப்பாளர்கள் திருமுழுக்குக் கொடுத்துக் கத்தோலிக்க முறைப்படி கல்வியும் கற்பித்திருந்தனர். மோகாக் போர்வீரர்கள் அவரைக் கைதியாகப் பிடித்து, தமது பிரதேசத்துக்குக் கொண்டுசென்றனர். பின்னர் அவர் மோகாக் இனத்தலைவரான் கென்னெரோன்குவாவை மணந்துகொண்டார்.

கத்தேரி பிறந்த ஊரில் முதற்குடி மக்களின் பல இனத்தவர் வாழ்ந்துவந்தனர். மோகாக் இனத்தவரில் பலர் ஐரோப்பியரால் கொணரப்பட்ட நோய்கள் காரணமாகவும் அடிக்கடி நிகழ்ந்த போர்கள் காரணமாகவும் மடிந்தனர். எனவே மோகாக் இனத்தவர் பிற இனத்தவர்மீது போர்தொடுத்து அவர்களைக் கைதிகளாகப் பிடித்துத் தமது பிரதேசத்துக்குக் கொண்டுவந்தனர். இவ்வாறு அவர்களின் எதிரிகளாக இருந்த ஹ்யூரோன் இனத்தவர் பலர் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.

தாய்வழி உறவுமுறை :
கத்தேரி சிறு குழந்தையாக இருந்தபோது அவருடைய கிராமம் வேறொரு இடத்துக்கு மாற்றப்பட்டது. மோகாக் மக்களில் பலர் 1661-1663 காலக் கட்டத்தில் பெரியம்மை நோய்க்குப் பலியானார்கள். கத்தேரியின் பெற்றோரும் சகோதரரும் அவ்வாறே இறந்தனர். நோயின் காரணமாகக் கத்தேரியின் கண்பார்வை பாதிக்கப்பட்டது, அவருடைய உடம்பிலும் தழும்புகள் பல ஏற்பட்டன. பெற்றோரையும் சகோதரரையும் இழந்த கத்தேரியை அவருடைய தாய்மாமன் எடுத்து வளர்த்தார். அவர் "ஆமைக் குழு" (Turtle Clan) என்னும் பிரிவைச் சார்ந்தவர்.

கத்தேரியின் குணநலன்கள் :

கத்தேரி மிகவும் அடக்கமான பெண் என்றும், கேளிக்கைக் கூட்டங்களில் பங்கேற்காதவர் என்றும் அவருடைய வரலாற்றை எழுதிய இயேசு சபையினர் கூறுகின்றனர். அவர் தம் உடலில் ஏற்பட்டிருந்த தழும்புகளை மறைக்கும் வண்ணம் தலையில் ஒரு போர்வையைச் சுற்றியிருந்தார். அநாதையாக இருந்தபோது பெரும்பாலும் அவருடைய விரிந்த குடும்பத்தினர் அவரைப் பராமரித்தனர். அவருடைய தாயின் குடும்பத்தினர் வாழ்ந்த பொதுவீட்டில் (longhouse) அவரும் வாழ்ந்திருப்பார்.

கத்தேரி தம் இனத்தைச் சார்ந்த பெண்கள் செய்த மரபுவழித் தொழிலில் ஈடுபட்டார். இவ்வாறு, துணி நெய்தல், விலங்குகளின் தோலிலிருந்து வார் செய்தல், கோரைப் புல்லினால் பாய் கூடை பெட்டி போன்றவை முடைதல் ஆகிய கலைத் தொழிலை அவர் செய்தார். மேலும், வேட்டையாடிக் கொண்டுவரப்பட்ட இறைச்சியைச் சமைத்தல், தானியங்கள் காய்கறிகளைச் சமைத்தல் போன்ற வீட்டுவேலைகளைச் செய்தார். பயிரிடும் காலத்தில் வயலில் வேலை செய்வது, களை பிடுங்குவது போன்றவற்றிலும் அவர் ஈடுபட்டார்.

கத்தேரிக்கு 13 வயது நிரம்புகையில் அவர் மொழி செய்ய வேண்டும் என்று உறவினர் கேட்டபோது அவர் தாம் மொழி புரியப்போவதில்லை என்று கூறிவிட்டார்.

கத்தேரி புரிந்த ஒறுத்தல் முயற்சிகள் :
கானவாக்கே மறைத்தளத்துக்கு வந்து சேர்ந்த கத்தேரி 1678ல் மரி-தெரேஸ் தேகையாகுவெந்தா (Marie-Thérèse Tegaiaguenta) என்னும் பெண்மணியை அங்கே சந்தித்தார். தமக்குள்ளே ஆழ்ந்த நட்புக் கொண்ட அந்த இருவரும் கிறிஸ்தவ மறையை உருக்கமாகக் கடைப்பிடிப்பதில் முனைந்தனர். எனவே இரகசியமாக அவர்கள் தம்மைச் சாட்டையால் அடித்துக்கொள்வதுண்டு. கத்தேரியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கோலனெக் கூற்றுப்படி, கத்தேரி சில சமயங்களில் ஒரே அமர்வில் 1000-1200 தடவைத் தம்மைக் கசையால் அடித்துக்கொண்டாராம்.

நீண்ட உபவாசம் இருத்தல், கசையால் தம்மை அடித்தல், உடலைக் கீறிக்கொள்ளுதல், முட்படுக்கையில் படுத்தல், கனலால் தம்மைச் சுடுதல் என்று பலவகைகளில் கத்தேரி ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொள்ளலானார்.

கத்தேரியின் இறப்பு :
1680ம் ஆண்டு, கிறிஸ்து இயேசுவின் பாடுகளை நினைவுகூரும் புனித வாரத்தின்போது கத்தேரியின் உடல் நிலை மிகவும் மோசமானதை அவருடைய நண்பர்கள் கண்டனர். இன்னும் ஒருசில மணி நேரம் மட்டுமே அவருடைய உயிர் நீடிக்கும் என்று உணர்ந்த கிராம மக்கள் அனைவரும் கத்தேரியைச் சூழ்ந்து கூடினர். அவர்களோடு இயேசுசபைத் துறவியர், அருட்தந்தையர் "ச்சௌசெட்டியெர்" மற்றும் "கோலனெக்" (Chauchetière and Cholenec) ஆகிய இருவரும் உடன் வந்தனர்.

அருட்தந்தை "கோலனெக்" (Cholenec) கத்தேரிக்கு இறுதிச் சடங்காகிய நோயில் பூசுதல் என்னும் திருவருட்சாதனத்தை வழங்கினார்.

அமெரிக்க முதற்குடி கிறிஸ்தவரான கத்தேரி டேக்கக்விதா என்னும் புனிதப் பெண்மணி தமது 24ம் வயதில், 1680, ஏப்ரல் 17ம் நாள், பெரிய புதனன்று, தமது தோழியான "மேரி-தேரசின்" (Marie-Therèse) மடியில் உயிர் துறந்தார். கத்தேரி தாம் இறப்பதற்கு முன், "இயேசுவே, மரியாயே! நான் உம்மை அன்பு செய்கிறேன்." ("Jesus, Mary, I love you.") என்றபடி உயிர்விட்டதாக கத்தேரியை நேரடியாக அறிந்து, அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய அருட்தந்தை "ச்சௌசெட்டியெர்" (Chauchetière ) கூறினார்.

கத்தேரியின் உடல் ஒளிவீசுதல் :
கத்தேரியின் உயிர் பிரிந்ததும் அவரது உடலில் ஒரு மாற்றம் நிகழ்ந்ததைச் சூழ்ந்து நின்றோர் கண்டனர். அருட்தந்தை "கோலனெக்" (Cholenec) கூறுகிறார்: "தழும்புகளால் தடித்துப்போன கத்தேரியின் முகம், அவருடைய இறப்புக்குப் பின் ஒரு மணி நேரத்தில் எழில் பொங்கும் ஒளிவீசியதை நான் கண்டேன்."

கத்தேரி தேக்கக்விதாவுக்கு வழங்கப்படுகின்ற சிறப்புப் பெயர்கள் :
கன்னிமையில் சிறந்து, தம் வாழ்க்கைநிலைக்கு ஏற்றக் கற்பு நெறியையும் கடைப்பிடித்த கத்தேரியை "லில்லி மலர்" என்று குறிப்பிடுவது வழக்கம். கத்தோலிக்க திருச்சபை மரபில் லில்லி மலர் தூய்மையையும் கன்னிமையையும் குறிக்கும் அடையாளம். குறிப்பாக, அது அன்னை மரியாளுக்குச் சிறப்பு அடையாளம்.

கத்தேரியிடம் துலங்கிய நற்பண்புகள் அமெரிக்க முதற்குடி மக்களின் கலாச்சாரத்துக்கும் ஐரோப்பிய கலாச்சாரத்துக்கும் இடையே நல்லெண்ணத்தையும் புரிதலையும் கொணர்ந்த ஒரு பாலம்போல அமைந்தன.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா