Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் இரண்டாம் ஹென்றி ✠(St. Henry II)
   
நினைவுத் திருநாள் : (ஜூலை / Juill- 13)
 ✠ புனிதர் இரண்டாம் ஹென்றி ✠(St. Henry II)

 தூய ரோமப் பேரரசர் :
(Holy Roman Emperor)

பிறப்பு : மே 6, 973
அப்பாச், பவரியா, ஜெர்மனி, தூய ரோம பேரரசு
(Abbach, Bavaria, Germany, Holy Roman Empire)

இறப்பு : ஜூலை 13, 1024 (வயது 51)
கோட்டிங்கன் அருகில், ஜெர்மனி, தூய ரோம பேரரசு
(Near Göttingen, Germany, Holy Roman Empire)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

புனிதர்பட்டம் : 1146
திருத்தந்தை அருளாளர் 3ம் யூஜின்
(Pope Bl. Eugene III)

நினைவுத் திருநாள் : ஜூலை 13

"பவரியாவின்" பிரபுவும் (Duke of Bavaria), இத்தாலி மற்றும் ஜெர்மனியின் அரசரும் (King of Italy and Germany), தூய ரோம பேரரசருமான (Holy Roman Emperor) புனிதர் இரண்டாம் ஹென்றி, தமது வாரிசுகள் இல்லாத காரணத்தால், "ஒட்டோனியன்" (Ottonian dynasty) வம்சத்தின் கடைசி பேரரசர் ஆவார். கி.பி. 995ம் ஆண்டுமுதல் பவரியாவின் பிரபுவாக (Duke of Bavaria) இருந்தார். ஜெர்மனியின் பேரரசர் "மூன்றாம் ஓட்டோ" (Emperor Otto III) அகால மரணமடைந்ததால் 1002ம் ஆண்டு ஜெர்மனியின் அரசனாக முடிசூட்டப்பட்டார். 1004ம் ஆண்டு இத்தாலியின் அரசனாக முடி சூடினார். 1014ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 14ம் நாளன்று, திருத்தந்தை எட்டாம் பெனடிக்ட் (Pope Benedict VIII) அவர்களால், தூய ரோம பேரரசின் பேரரசராக முடிசூட்டப்பட்டார்.

பவரியாவின் பிரபுவான "இரண்டாம் ஹென்றி" (Henry II, Duke of Bavaria) இவரது தந்தை ஆவார். தாயார், "கீசலா" (Gisela of Burgundy) ஆவார். இவரது தந்தை, இரண்டு முன்னாள் பேரரசர்களுக்கு எதிராக கலகம் மூட்டிக்கொண்டே இருந்ததால், இவர் ஒரு இடத்தில் நில்லாமல் தலைமறைவு வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருந்தார். இதன் காரணமாகவே, இளம் வயதிலேயே இவரது கவனங்கள் ஆன்மீகத்தின் மீது திரும்பியது. ஆரம்பத்தில் "ஃப்ரெய்சிங்" ஆயர் (Bishop of Freising) இடத்தில் அடைக்கலம் புகுந்த இவர், பின்னர் "ஹில்டேஷெய்ம்" (Hildesheim Cathedral) பேராலய பள்ளியில் கல்வி கற்றார். கி.பி. 995ம் ஆண்டு, தமது தந்தையின் வாரிசாக - பவரியாவின் பிரபுவாக நான்காம் ஹென்றியாக (Henry IV) பதவியேற்றார்.

ஹென்றி, ஒரு நடைமுறை மனிதர் ஆவார். இவர் தனது ஆட்சியை பலப்படுத்துவதில் ஆற்றல்மிக்கவர். தமது பேரரசில் கிளர்ச்சிகள் மற்றும் மோதல்களை நசுக்கினார். அனைத்து பக்கங்களிலும் அவர் தனது எல்லைகளை பாதுகாக்க அதனால் வரையப்பட்ட சர்ச்சைகளை சமாளிக்க வேண்டியிருந்தது. இது, இத்தாலியில் தெற்கில் குறிப்பாக, பல போர்களில் ஈடுபட நேரிட்டது. அவர் ரோமில் ஏற்படும் குழப்பங்களைத் தடுக்க திருத்தந்தை "எட்டாம் பெனடிக்ட்" (Pope Benedict VIII) அவர்களுக்கு உதவினார். எப்பொழுதும் இவரது இறுதி நோக்கம், ஐரோப்பாவில் ஒரு நிலையான சமாதானத்தை நிலை நிறுத்துவதேயாகும்.

பதினோராம் நூற்றாண்டு வழக்கப்படி, ஹென்றி தனது நிலைப்பாட்டைப் பயன்படுத்தி, அவருக்கு விசுவாசமாக இருந்தவர்களை ஆயர்களாக நியமித்தார். அவர் இந்த நடைமுறையின் குழப்பங்களை தவிர்த்தார்; மற்றும் உண்மையில் திருச்சபை மற்றும் துறவிகளின் வாழ்க்கை சீர்திருத்தத்தை வளர்த்தார்.

இரண்டாம் ஹென்றியின் ஆட்சி சாம்ராஜ்யம் முழுவதும் மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தின் காலமாகக் கருதப்படுகிறது. கத்தோலிக்க திருச்சபைக்கு தனிப்பட்ட மற்றும் அரசியல் உறவுகளை வளர்ப்பதன் மூலம் அவர் தனது அதிகாரத்தை பலப்படுத்தினார். மதச்சார்பற்ற பிரிவினருக்கு எதிராக எதிர்ப்பைக் காட்டிய மதகுருக்களை நியமிப்பதற்காக அவர் ஓட்டோனிய வம்சத்தின் வழக்கத்தை பெரிதும் விரிவுபடுத்தினார். திருச்சபைக்கு நன்கொடைகள் மற்றும் புதிய மறைமாவட்டங்களை நிறுவுதல் மூலம், ஹென்றி பேரரசு முழுவதும் ஏகாதிபத்திய ஆட்சியை வலுப்படுத்தினார். திருச்சபை விவகாரங்களில் அதிக ஈடுபாடு காட்டினார்.

அவர் திருச்சபைக்கு சேவை செய்ய வலியுறுத்தினார். சீர்திருத்த சீர்திருத்தங்களை ஊக்குவித்தார். அவரது தனிப்பட்ட புனிதத்தன்மை மற்றும் திருச்சபைக்கு ஆதரவளிக்கும் அவரது முயற்சிகளுக்காக திருத்தந்தை அருளாளர் மூன்றாம் யூஜின் (Pope Bl. Eugene III) அவர்கள், கி.பி. 1146ம் ஆண்டு ஹென்றியை புனிதராக அருட்பொழிவு செய்வித்தார். புனிதர் பட்டம் வென்ற ஜெர்மானிய மன்னர் இரண்டாம் ஹென்றி ஒருவரேயாவார்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தூய ஹென்றி (ஜூலை 13)

"சைப்பிரசு தீவைச் சேர்ந்த யோசேப்பு எனும் லேவியர் ஒருவர் இருந்தார். இவருக்குத் திருத்தூதர்கள் "ஊக்குவிக்கும் பண்பு கொண்டவர்" என்று பொருள்படும் பர்னபா என்னும் பெயரைக் கொடுத்திருந்தார்கள். அவர் தமது நிலத்தை விற்று அந்த பணத்தைக் கொண்டுவந்து திருத்தூதர்களது காலடியில் வைத்தார். (திப 4)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் ஹென்றி, 972 ஆம் ஆண்டு, மே திங்கள் 6 ஆம் நாள், (ஜெர்மனி) பவேரியில் இருந்த அரச குடும்பத்தில் பிறந்தார். இவர் தன்னுடைய கல்வியை ஆயர் வோல்ப்காங் என்பவரிடத்தில் கற்று, அறிவில் சிறந்து விளங்கி வந்தார்.

இப்படி இவருடைய வாழ்க்கை போய்க்கொண்டிருக்கும்போது, இவருடைய தந்தை இறந்துபோனார். அதனால் இவர் ஜெர்மனியின் அரசராகப் பொறுபேற்றார். இவர் அரசராகப் பொறுப்பேற்றபோது இவருக்கு வயது 30 தான். வயதில் மிகச் சிறியவராக ஆனபோதும்கூட, இவர் மக்களை சிறப்பான முறையில் வளர்த்தெடுத்தார். இதனால் இவருக்கு மக்களுக்கு மத்தியில் மிகுந்த செல்வாக்கு உண்டானது.

1014 ஆம் ஆண்டு இவர் உரோமைக்குச் சென்றபோது, அப்போது திருத்தந்தையாக இருந்த எட்டாம் ஆசிர்வாதப்பர், இவருடைய எடுத்துக்காட்டான வாழ்க்கையைப் பார்த்துவிட்டு, இவரை உரோமைக்கும் அரசராக நியமித்தார். அந்நாட்களில் உரோமையின் மீது பலர் படையெடுத்து வந்தார்கள். அவர்கள் அனைவரையும் இவர் தன்னுடைய வலிமையால் வெற்றிகொண்டார். இன்னொரு சமயம் இவருடைய சகோதரரே இவருக்கு எதிராகப் போர்தொடுத்தார். அவரையும் இவர் தன்னுடைய வலிமை மிக்க கரத்தால் வெற்றி கொண்டார்.

இவர் நிறைய நிலங்களை ஆலயம் கட்டுவதற்கும் துறவு மடங்களை நிறுவுவதற்கும் தானமாகத் தந்தார். அதோடு கூட, ஏரளமான ஆலயங்களையும் துறவுமடங்களையும் கட்டித் தந்தார். இப்படி திருச்சபையின் வளர்ச்சியில் தன்னை முழுமையாய் அர்ப்பணித்துக் கொண்ட இவர், குனகுந்த் என்ற பெண்மணியை மணந்தார். மணவாழ்க்கையைக் கூட, ஒரு துறவு வாழ்க்கையைப் போல் தான் வாழ்ந்து வந்தார்.

ஹென்றி ஏழை எளியவர்களிடத்தில் மிகுந்த அன்பு காட்டினார். அவர்களுடைய தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்து மக்கள் போற்றும் அரசராக விளங்கினார். இப்படி ஆன்மீகப் பணியையும் மக்கள் பணியையும் இணைந்தே செய்து வந்த ஹென்றி 1024 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் நாள், உடல்நலமுற்று இறந்து போனார். இவருக்கு 1146 ஆம் ஆண்டு திருத்தந்தை மூன்றாம் யூஜின் என்பவரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய ஹென்றியின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. திருச்சபையின் வளர்ச்சிப் பணிகளில் பொதுநிலையினரின் பங்கு

தூய ஹென்றியின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது ஒரு பொதுநிலையினராக இருந்து, திருச்சபையின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணிகள்தான் நம்முடைய நினைவுக்கு வந்து போகிறது. ஹென்றி நினைத்திருந்தால் எப்படியும் வாழ்ந்திருக்க முடியும். ஆனால், அவர் திருச்சபையோடு இணைந்தே பயணித்தார். திருச்சபையோடு இணைந்தே பணியாற்றினார்.

தூய ஹென்றியின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று திருச்சபையின் வளர்ச்சிக்காக நான் என்னை முழுமையாய் அர்ப்பணிக்கின்றேனா? தாய் திருச்சபை முன்னெடுக்கின்ற காரியங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை நல்குகின்றேனா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு வேண்டும். இதில் ஒன்று குறைந்தாலும் பயணம் சரியாக இருக்காது. திருச்சபையும் அப்படித்தான். இறையடியார்களால் மட்டும் இந்தத் திருச்சபை முழுமையாக இயங்கிவிடாது. இது முழுமையாக இயங்குவதற்கு பொதுநிலையினர் தங்களுடைய பங்களிப்பினைத் தரவேண்டும். இன்றைக்கு ஒருசில பொதுநிலையினர் நாம் எதற்கு திருச்சபையின் நடவடிக்கைகளில் கலந்துகொள்ளவேண்டும்? அதில் பங்கெடுக்க வேண்டும்? என்று என்று விலகிச் செல்லக்கூடிய போக்கு நிலவிக்கொண்டிருக்கின்றது. இது ஒரு தவறான போக்கும்கூட. திருச்சபை வளர்வதற்கு இறைமக்களும் சரி, இறையடியார்களும் சரி ஒருவர் மற்றவருக்கு உறுதுணையாக இருக்கவேண்டும், ஒத்துழைப்பினை நல்கவேண்டும். அப்போது தான் தாயாம் திருச்சபை நல்லவிதமாய் இயங்கும்.

தூய ஹென்றி, தான் அரசர் என்றெல்லாம் பாராமல் திருச்சபையின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார். திருப்பணியில் தன்னை முழுமையாய் அர்ப்பணித்துக் கொண்டார்.

ஆகவே, தூய ஹென்றியின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று திருச்சபையின் வளர்ச்சியில் நம்மை முழுமையாய் அர்ப்பணிப்போம், எப்போதும் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா