Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் கிரகொரி மேரி கிரஸ்ஸி ✠(St. Gregory Mary Grassi)
   
நினைவுத் திருநாள் : (ஜூலை / July 08)
✠ புனிதர் கிரகொரி மேரி கிரஸ்ஸி ✠(St. Gregory Mary Grassi)

 துறவி, ஆயர், மறைசாட்சி :
(Friar and Bishop and Martyr)

பிறப்பு : டிசம்பர் 13, 1833
காஸ்டெல்லஸோ போர்மிடா, பிட்மாண்ட், இத்தாலி
(Castellazzo Bormida, Piedmont, Italy)

இறப்பு : ஜூலை 9, 1900
டையுவன், ஷன்க்ஸி, சீனா
(Taiyuan, Shanxi, China)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம் : நவம்பர் 27, 1946
திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்
(Pope Pius XII)

புனிதர் பட்டம் : அக்டோபர் 1, 2000
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

நினைவுத் திருநாள் : ஜூலை 8

புனிதர் கிரகொரி மேரி கிரஸ்ஸி, ஒரு "இத்தாலிய பிரான்சிஸ்கன் துறவியும்" (Italian Franciscan Friar), ஆயரும், ரோமன் கத்தோலிக்க திருச்சபையால் மறைசாட்சியாகவும் புனிதராகவும் கௌரவிக்கப்படுபவருமாவார். 2000ம் ஆண்டு, அக்டோபர் மாதம், முதல் தேதியன்று, திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் (Pope John Paul II) அவர்களால் புனிதர்களாக அருட்பொழிவு செய்விக்கப்பட்ட 120 சீன மறைசாட்சியருள் (120 Martyrs of China) இவரும் ஒருவராவார்.

"பியர்லுய்கி கிரஸ்ஸி" (Pierluigi Grassi) எனும் இயற்பெயர் கொண்ட இவர், இத்தாலி நாட்டின் "பியட்மாண்ட்" (Piedmont) பிராந்தியத்தின் "காஸ்டெல்லஸோ போர்மிடா" (Castellazzo Bormida) எனுமிடத்தில், கி.பி. 1833ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 13ம் தேதியன்று, பிறந்தார்.

தமது 15 வயதில், 1848ம் ஆண்டு, நவம்பர் மாதம், 2ம் தேதியன்று, "ரொமாக்னா" (Romagna) பிராந்தியத்திலுள்ள "மான்ட்டியானோ" (Montiano) என்னுமிடத்திலுள்ள ஃபிரான்சிஸ்கன் துறவு மடத்தில் வார்த்தைப்பாடு எடுத்துக்கொண்டார். தமது பெயரையும் "கிரகோரி" (Gregory) என்று ஏற்றுக்கொண்டார். பின்னர், இறையியல் கற்பதற்காக "போலோக்னா" (Bologna) அனுப்பப்பட்ட இவர், 1856ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 17ம் நாளன்று, "மிரண்டோலா" (Mirandola) நகரில், குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.

பின்னர், சீன (China) நாட்டில் செய்யவேண்டிய மறைப்பணிக்கான தயாரிப்புக்கான பயிற்ச்சிகளுக்காக ரோம் (Rome) அனுப்பப்பட்டார்.

கி.பி. 1860ம் ஆண்டு, வட சீனாவிலுள்ள "டையுவன்" (Taiyuan) நகர் அனுப்பப்பட்ட இவர், மறைப்பணி பரப்பாளராகவும், மறைப்பணியின் அனாதைகள் இல்லத்தின் இயக்குனராகவும், பாடல் குழுவின் தலைவராகவும் நியமனங்களைப் பெற்றார்.

கி.பி. 1876ம் ஆண்டு, (Apostolic Vicariate of Shansi) ஆக தேர்வு செய்யப்பட்டார். 1891ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 6ம் தேதியன்று, சீன மக்களுக்கு பிரான்சிஸ்கன் வாழ்வில் அணுகல் வழங்குவதற்காக "ஷன்க்ஸி" (Shanxi) எனுமிடத்தில் ஒரு புகுநிலை (Novitiate) மடம் ஒன்றினை நிறுவினார். அதிகமாக உழைக்கும் மறைப் பணியாளர்களுக்காக ஒரு ஓய்வு இல்லம் ஒன்றினையும் கட்டினார்.

பிளேக் (Plague) மற்றும் பஞ்சம் (Famine) போன்ற பேரழிவுகளால் பாதிப்படைந்த மக்களுக்காக அக்கறையுடன் சேவையாற்றினார். இவர்களுக்காக நகரில் ஏற்கனவேயுள்ள அநாதை இல்லங்களை பெரிது படுத்தினார். வேறு பல இல்லங்களையும் நிறுவினார்.

கி.பி. 1899ம் ஆண்டு முதல் 1901ம் ஆண்டு வரை, சீனாவிலிருந்த வெளிநாட்டினர், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கெதிராக பெரும் கலகம் ஒன்று வெடித்தது. இது "பாக்ஸர் கலகம்" (Boxer Rebellion) என்று அழைக்கப்பட்டது. பேரரசி "டோவகர் சிக்ஸி" (Empress Dowager Cixi) "வெளிநாட்டு சக்திகளுக்கு எதிரான போரை அறிவிக்கும் அரசு ஆணையை" (Imperial Decree of declaration of war against foreign powers) பிரகடனப்படுத்தினார்.

கிரகொரி தப்பி ஓடுமாறு வலியுறுத்தப்பட்டார். ஆனால் கிரெகொரி பின்வருமாறு பதிலளித்தார்.:
"நான் எனக்கு பன்னிரண்டு வயதானபோதே, கடவுளுக்காக மறைசாட்சியாக உயிர்த்தியாகம் செய்யும் நிலை வேண்டி வரம் கேட்டேன். இப்போது நான் ஏங்கின காலம் வந்துவிட்டது, நான் ஓடிப்போகலாமா?"

"டையுவன்" (Taiyuan) நகரில் கிரகொரியும் அவருடன் சுமார் பன்னிரண்டு மிஷனரிகளும், நான்கு பிற துறவியரும், "மரியாளின் பிரான்சிஸ்கன் மிஷினரிகள்" (Franciscan Missionaries of Mary) ஏழு பேரும், "புனிதர் பிரான்ஸிசின் மூன்றாம் நிலை (Third Order of St. Francis) சபையின் 11 சீன நாட்டு உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர். அடித்து சிதைக்கப்பட்ட அனைவரும் இரும்பு கூண்டுகளில் அடைத்து பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டனர். அக்கம்பக்கத்து கிராமங்களினூடே ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டனர். ஜூலை மாதம், 8ம் தேதியன்று, அவர்கள் "டையுவன்" (Taiyuan) நகருக்கு திரும்ப இழுத்து வரப்பட்டனர். மறுநாள் ஒன்பதாம் தேதி, "யூக்ஸியன்" (Yuxian) என்ற ஆளுநர் அத்தனை பேரையும் கழுத்தை வெட்டி கொன்றான். இதனை "டையுவன் படுகொலை" (Taiyuan Massacre) என்றழைக்கின்றனர்.

"பாக்ஸர் கலகம்" (Boxer Rebellion) காலத்தின்போது, 5 ஆயர்களும், 50 குருக்களும், 2 அருட்சகோதரர்களும், 15 அருட்சகோதரியரும் 40,000 சீன கிறிஸ்தவர்களும் கொல்லப்பட்டனர்.

கி.பி. 1906ம் ஆண்டு, ஃபிரான்சிஸ்கன் துறவியரால் சேவை செய்யப்பட்ட 146,575 கத்தோலிக்கர்கள், கி.பி. 1924ம் ஆண்டு, 303,760 பேராக பல்கிப் பெருகினர். அப்போது, 282 ஃபிரான்சிஸ்கன் துறவியரும், 174 உள்ளூர் குருக்களும் இருந்தனர்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா