Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் முதலாம் செலஸ்டின் ✠ (St. Celestine I)
   
நினைவுத் திருநாள் : (ஜூலை / july- 27)
✠ புனிதர் முதலாம் செலஸ்டின் ✠ (St. Celestine I)

43ம் திருத்தந்தை: (43rd Pope)

ஆட்சி துவக்கம்: செப்டம்பர் 10, 422
ஆட்சி முடிவு: ஜுலை 26, 432

முன்னிருந்தவர்:
திருத்தந்தை முதலாம் போனிஃபாஸ் (Pope Boniface I)

பின்வந்தவர்:
திருத்தந்தை மூன்றாம் சிக்ஸ்துஸ் (Pope Sixtus III)

பிறப்பு: ----
ரோம், மேற்கு ரோமானியப் பேரரசு
(Rome, the Western Roman Empire)

இறப்பு: ஆகஸ்ட் 1, 432

ஏற்கும் சமயம்:
கத்தோலிக்க திருச்சபை
(Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodoxy)

நினைவுத் திருநாள்: ஜூலை 27

திருத்தந்தை புனித முதலாம் செலஸ்தீன், கத்தோலிக்க திருச்சபையின் 43ம் திருத்தந்தையாக கி.பி. 422ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 10ம் நாள் முதல், கி.பி. 432ம் ஆண்டு, ஜுலை மாதம், 26ம் நாள் வரை பணியாற்றினார். அவரது ஆட்சிக்காலம் நவம்பர் மாதம், 3ம் நாள் தொடங்கியதாக "திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) என்னும் நூல் கூறினாலும், தில்லெமோன் போன்ற வரலாற்றாசியர்கள் கருத்துப்படி செலஸ்தீனின் ஆட்சி தொடக்கம் செப்டம்பர் மாதம், 10ம் நாள் ஆகும்.

வரலாற்று ஆதாரங்கள்:
திருத்தந்தை முதலாம் செலஸ்தீன், ரோம பேரரசின் கம்பானியா (Campania) என்னும் பிரதேசத்தில் பிறந்தவர். அவருடைய தந்தை பெயர் பிரிஸ்குஸ் (Priscus) ஆகும். அவர் சிறிது காலம் மிலான் (Milan) நகரில் புனித அகுஸ்தீனோடு (St. Ambrose) வாழ்ந்ததாகத் தெரிகிறது. அகுஸ்தீன், செலஸ்தீனுக்கு எழுதிய ஒரு கடிதம் உள்ளது. திருத்தந்தை முதலாம் இன்னசென்ட் (Pope Innocent I) கி.பி. 416ம் ஆண்டு, எழுதிய ஓர் ஆவணத்தில் "திருத்தொண்டர் செலஸ்தீன்" (Celestine the Deacon) என்று இவரைக் குறிப்பிட்டுள்ளார்.

செலஸ்தீனின் ஆட்சி:
திருத்தந்தை செலஸ்தீன் திருவழிபாட்டில் சில பகுதிகளை ஆக்கியதாகத் தெரிகிறது. ஆயினும் இதுபற்றி உறுதியான செய்தி இல்லை. கி.பி. 431ம் ஆண்டு நிகழ்ந்த எபேசுஸ் பொதுச்சங்கத்தில் அவர் நேரடியாகக் கலந்துகொள்ளாவிடினும் அதில் பங்கேற்க பதிலாள்களை அனுப்பினார். அச்சங்கத்தில் நெஸ்தோரியர்களின் தப்பறைக் கொள்கை கண்டிக்கப்பட்டது. அத்தருணத்தில் அவர் எழுதிய நான்கு மடல்கள் கி.பி. 431ம் ஆண்டு, மார்ச்சு மாதம், 15ம் நாள், என்னும் தேதியைக் கொண்டுள்ளன. அம்மடல்கள் ஆப்பிரிக்கா (Africa), இல்லீரியா (Illyria), தெசலோனிக்கா (Thessalonica) மற்றும் நார்போன் (Narbonne) என்னும் பகுதிகளில் ஆண்ட ஆயர்களுக்கு (African Bishops) எழுதப்பட்டவை. இலத்தீன் (Latin) மொழியில் எழுதப்பட்ட அம்மடல்களின் கிரேக்க (Greek) மொழிபெயர்ப்பு கிடைத்துள்ளது. மூல ஏடு கிடைக்கவில்லை.

மறைபரப்புப் பணி:
செலஸ்தீன் கத்தோலிக்க கிறிஸ்தவ கொள்கைகளைப் பாதுகாப்பதில் தீவிரம் காட்டினார். "பெலாஜியநிஸம்" (Pelagianism) என்ற தவறான கொள்கையை அவர் கண்டித்தார். மேலும் அயர்லாந்து (Ireland) நாட்டில் கிறித்தவத்தைப் பரப்புவதற்காக பல்லாதியுஸ் (Palladius) என்பவரை அனுப்பிவைத்தார். அவரைத் தொடர்ந்து அயர்லாந்தில் கிறித்தவ மறையை அறிவிக்கச் சென்றவரே புனித பேட்ரிக் (Saint Patrick) ஆவார்.
உரோமையில் நோவாசியன் (Novatians) என்பவர் போதித்த தவறான கொள்கைகளையும் செலஸ்தீன் கண்டித்தார்.

இறப்பு:
திருத்தந்தை முதலாம் செலஸ்தீன் கி.பி. 432ம் ஆண்டு, ஜுலை மாதம், 26ம் நாள் உயிர்துறந்தார். அவரது உடல் உரோமை சலாரியா (Via Salaria) வீதியில் அமைந்த புனித பிரிசில்லா (St. Priscilla) சுரங்கக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் அது புனித பிரசேதே (Basilica di Santa Prassede) கோவிலுக்கு மாற்றப்பட்டது.

கலை உருவில்:
புனித முதலாம் செலஸ்தீன் உருவப்படத்தில் ஒரு புறா, பறவைநாகம், தீப்பிழம்பு போன்றவை உருவகமாகச் சித்தரிக்கப்படுவது வழக்கம். உரோமைத் திருச்சபையும், கீழைத் திருச்சபையும் இவரை ஒரு புனிதராகக் கருதி வணக்கம் செலுத்துகின்றன.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா