Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் கமில்லஸ் டி லெல்லிஸ் ✠(St. Camillus de Lellis)
   
நினைவுத் திருநாள் : (ஜூலை / Juill- 14)
 ✠ புனிதர் கமில்லஸ் டி லெல்லிஸ் ✠(St. Camillus de Lellis)

 குரு/ சபை நிறுவனர் :
(Priest and Religious Founder)

பிறப்பு : மே 25, 1550
புச்சியானிகோ, சீட்டி, நேப்பிள்ஸ் அரசு
(Bucchianico, Chieti, Kingdom of Naples)

இறப்பு : ஜூலை 14, 1614 (வயது 64)
ரோம், திருத்தந்தையர் மாநிலங்கள்
(Rome, Papal States)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

அருளாளர் பட்டம் : கி.பி. 1742
திருத்தந்தை பதினான்காம் பெனடிக்ட்
(Pope Benedict XIV)

புனிதர் பட்டம் : கி.பி. 1746
திருத்தந்தை பதினான்காம் பெனடிக்ட்
(Pope Benedict XIV)

முக்கிய திருத்தலம் :
புனித மரியா மடலேனா தேவாலயம், இத்தாலி
(Church of Santa Maria Maddalena, Rome, Italy)

பாதுகாவல் :
நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனைகள்

நினைவுத் திருநாள் : ஜூலை 14

புனிதர் கமில்லஸ் டி லெல்லிஸ், ஒரு இத்தாலிய குருவும், நோயாளிகளின் சேவைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சபையின் நிறுவனரும் ஆவார்.

கமில்லஸ், கி.பி. 1550ம் ஆண்டு, மே மாதம், 25ம் நாளன்று, தற்போதைய "அப்ரஸ்ஸோ" (Abruzzo) (அன்றைய "நேப்பில்ஸ்" அரசின் (Kingdom of Naples) கீழிருந்த) பிறந்தார். இவர் பிறக்கும்போது, இவரது தாயார் "கமில்லாவுக்கு" (Camilla Compelli de Laureto) ஏறத்தாழ ஐம்பது வயது. இவரது தந்தை "நெப்போலிட்டன்" மற்றும் ஃபிரெஞ்ச்" அரச இராணுவங்களில் (Neapolitan and French Royal Armies) அதிகாரியாக பணியாற்றினார். கமில்லஸ் தந்தையின் கோப குணங்களைக் கொண்டு வளர்ந்தார். வயதான தாயாரால் இவரைக் கட்டுப்படுத்த இயலவில்லை. இவருக்கு பன்னிரண்டு வயதாகையில் தாயார் மரித்துப் போனார்.

தாயை இழந்த கமில்லஸ் யாரும் கவனிப்பாரற்று, ஆதரவற்றிருந்தார். பதினாறு வயதிலேயே "வெனீஷியன்" (Venetian Army) இராணுவத்தில் சேர்ந்தார். துருக்கி (Turks) நாட்டுக்கெதிரான போரிலும் பங்குகொண்டார். பத்து வருடங்களுக்கும் மேல் இராணுவத்தில் பணியாற்றிய பின்னர், அவர் பணி புரிந்த இராணுவ படைப் பிரிவு கலைக்கப்பட்டது. வேறு வழியற்ற கமில்லஸ், "மன்ஃபிரடோனியா" (Manfredonia) எனுமிடத்திலுள்ள கபுச்சின் (Capuchin Friary) துறவற மடத்தில் கூலி வேலை செய்யத் தொடங்கினார்.

கமில்லஸ் இராணுவத்திலிருந்தபோது காலில் அடி பட்டு காயம் ஏற்பட்டிருந்தது. அது ஆறாமல் கடுமையாக பாதிக்கப்பட்டார். கமில்லஸிடம் ஆக்ரோஷ குணங்களுடன் சூதாடும் பழக்கமுமிருந்தது. இவரை கண்காணித்து வந்த துறவற மடத்தின் பாதுகாவலர், இவரை திருத்தி இவரிடமுள்ள நற்குணங்களை வெளிக்கொணர தொடர்ந்து முயற்சித்தார். இறுதியில், துறவியின் அறிவுரை அவரது இதயத்தை ஊடுருவியது. அத்துடன், 1575ம் ஆண்டு இவர் கத்தோலிக்கராக மனம் மாறினார். கபுச்சின் (Capuchin) சபையின் புகுமுக துறவியாக (Novitiate) இணைந்தார். எனினும் அவரது காலிலிருந்த புண் அவருக்கு தொடர்ந்து வேதனை அளித்தது. அது இனி குணமாக்க இயலாது என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர். இதன் காரணமாக அவருக்கு கபுச்சின் சபையில் அனுமதி மறுக்கப்பட்டது.

பின்னர் ரோம் (Rome) பயணமான கமில்லஸ், அங்கே, "குணமாக்க இயலாது" என்று கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவம் செய்யும், "சேன் கியகோமோ மருத்துவமனையில்" (San Giacomo Hospital) இணைந்தார். (இம்மருத்துவமனை, புனிதர் ஜேம்ஸ் மருத்துவமனை சபையால் (Hospitaller Knights of St. James) நிறுவப்பட்டது. அங்கே, தாமும் ஒரு நோயாளிகளைப் கவனிப்பவராக (Caregiver) மாறிய கமில்லஸ், பின்னாளில் அதே மருத்துவமனையின் கண்காணிப்பாளராக (Superintendent) உயர்ந்தார். இதற்கிடையே துறவு வாழ்வு வாழ்ந்த இவர், செபம் தவம் ஆகியவற்றையும் தீவிரமாக பின்பற்றினார். மயிரிழைகளாலான மேலாடையையே அணிந்தார். உள்ளூரில் பிரபலமான குருவான அருட்தந்தை (பின்னர் புனிதராக அருட்பொழிவு செய்யப்பட்டவர்) "ஃபிலிப் நேரி" (Philip Neri) அவர்களை தமது ஒப்புரவாளராகவும் (Confessor), ஆன்மீக வழிகாட்டியாகவும் (Spiritual Director) ஏற்றுக்கொண்டார்.

தமது மருத்துவமனையின் பணியாளர்கள் நோயாளிகளை சரியாக கவனிப்பதில்லை என்பதனை கண்ட லெல்லிஸ், நோயாளிகளின் சேவையில் தமது பக்தி விசுவாசத்தை வெளிப்படுத்த வெளியிலிருந்து பயபக்தியுடைய ஆண்கள் குழுக்களை அழைத்து வந்தார். இறுதியில், இந்த காரணத்துக்காக ஒரு மத சபையை தொடங்க எண்ணினார். இதற்கான அங்கீகாரத்தை திருச்சபையிடமிருந்து வேண்டினார். "ஃபிலிப் நேரி" (Philip Neri) இப்பெருமுயற்சியை அங்கீகரித்தார். ஒரு பணக்கார கொடை வள்ளல் லெல்லிஸின் இறையியல் கல்விக்கான செலவுகளை கொடையாக தந்தார்.

கி.பி. 1584ம் ஆண்டின் உயிர்த்த இறைவனின் பெருவிழாவுக்கு பின்னர் வரும் ஏழாவது ஞாயிற்றுக்கிழமையன்று, (பெந்தெகொஸ்தே Pentecost) "புனித அசாஃப், வேல்ஸ்" ஆயர், (Bishop of St Asaph) "லார்டு தாமஸ் கோல்டுவெல்" (Lord Thomas Goldwell) அவர்களால் குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்டார். பின்னர், கமில்லஸும் அவரது துணைவர்களும் தமது மருத்துவமனையிலிருந்து ஓய்வு பெற்றனர். பின்னர், அங்கிருந்து கிளம்பி, "தூய ஆவியின் மருத்துவமனை" (Hospital of the Holy Ghost) சென்று, அங்குள்ள நோயாளிகளைக் கவனிக்கும் பொறுப்பினை ஏற்றனர்.

அதன்பின்னர், (M.I.) என்று சுருக்கமாக அழைக்கப்படும் (Order of Clerks Regular, Ministers of the Infirm) எனும் சமய சபையினை கமில்லஸ் நிறுவினார். இச்சபை பொதுவாக, "கமில்லியன்ஸ்" (Camillians) அழைக்கப்படுகிறது. போர்களில் அவருக்கிருந்த அனுபவம், அவரை ஒரு மருத்துவ சேவை பணியாளர்களின் குழு (Health Care Workers) ஒன்றினை உருவாக்க உதவியது. இக்குழு, போர்முனைகளில் காயம் ஏற்படும் இராணுவ வீரர்களுக்கு சேவை செய்யும். அன்று, இவர்களணியும் நீண்ட அங்கியில் (Cassock) பெரிய சின்னமாக விளங்கிய செஞ்சிலுவை, (Red Cross) இன்று உலகின் பெரியதோர் சங்கத்தின் (Red Cross Society - செஞ்சிலுவைச் சங்கம்) அடையாளமாக உள்ளது. இதுவே உண்மையான, சுமார் நானூறு வருடங்களுக்கு முன்னர் தோற்றுவிக்கப்பட்ட "சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம்" (International Red Cross and Red Crescent Movement) ஆகும்.

கி.பி. 1601ம் ஆண்டு, "கனிஸ்ஸா" (Battle of Canizza) போரின்போது ஒரு நாள், "கமில்லியன்ஸ்" (Camillians) தங்கியிருந்த, அவர்களது மருத்துவ பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கூடாரம் தீ பற்றி எரிந்து முற்றிலும் நாசமானது. ஒரு பொருள் கூட மீதமாகவில்லை. அடி பட்ட போர் வீரர்களுக்கு சேவை செய்வதற்காக சென்றிருந்த ஒரு "கமில்லியன்ஸின்" அங்கியிலிருந்த செஞ்சிலுவை மட்டும் எரியாமல் தப்பியது. இச்சம்பவம், தெய்வீக அங்கீகாரம் வெளிப்படுத்தப்பட்டதாக கொள்ளப்பட்டது.

கி.பி. 1586ம் ஆண்டு, திருத்தந்தை "ஐந்தாம் சிக்ஸ்டஸ்" (Pope Sixtus V) இவர்களது "கமில்லியன்ஸ்" (Camillians) குழுவுக்கு சங்கம் (Congregation) என்ற அங்கீகாரம் அளித்தார். ரோம் நகரிலுள்ள "புனித மரியா மகதலின்" (Church of St. Mary Magdalene) தேவாலயத்தை அவர்களுக்காக ஒதுக்கிக் கொடுத்தார். இன்றளவும் அந்த தேவாலயத்தை அவர்கள்தாம் பராமரிக்கின்றனர். 1588ம் ஆண்டு "நேப்பிள்ஸ்" (Naples) நகருக்கும், 1594ம் ஆண்டு "மிலன்" (Milan) நகருக்கும் தங்களது சபையை விரிவுபடுத்தினர். மிலன் நகரின் "கா கிராண்டா" (Ca' Granda) மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சேவை புரிந்தனர். இவர்களின் ஞாபகார்த்தமாக, "கா கிராண்டா" (Ca' Granda) மருத்துவமனையின் பிரதான முற்றத்தில் ஒரு நினைவு சின்னம் இன்றும் அவரது இருப்பை நினைவுபடுத்துகிறது.

கி.பி. 1591ம் ஆண்டு, திருத்தந்தை "பதினைந்தாம் கிரகோரி" (Pope Gregory XV) அவர்களது சங்கத்தை "மென்டிகன்ட்" (Mendicant Orders) சபைக்கு நிகரானதாக அந்தஸ்து உயர்த்தினார்.

தமது சபையின் தலைமைப் பொறுப்பினை கி.பி. 1607ம் ஆண்டில் விட்டுக்கொடுத்த கமில்லஸ், தொடர்ந்து சபைக்கு சேவையாற்றினார். இதற்கிடையே, இவர்களது சபை இத்தாலி முழுதும் மட்டுமல்லாது, ஹங்கேரி (Hungary) நாட்டிலும் பரவியிருந்தது. ஒருமுறை இத்தாலியின் மருத்துவமனைகளை ஆய்வு செய்வதற்காக சபையின் புதிய தலைவருடன் சென்றிருந்த கமில்லஸ், பயணத்தின்போது நோய்வாய்ப்பட்டார். கி.பி. 1614ம் ஆண்டு, தமது 64 வயதில் நித்திய வாழ்வில் மரித்தார். இவரது உடல் "மரியா மகதலின்" தேவாலயத்தில் (Church of St. Mary Magdalene) அடக்கம் செய்யப்பட்டது.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா