Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ நூர்சியாவின் புனிதர் பெனடிக்ட் ✠ (St. Benedict of Nursia)
   
நினைவுத் திருநாள் : (ஜூலை / july- 11)

✠ நூர்சியாவின் புனிதர் பெனடிக்ட் ✠ (St. Benedict of Nursia)

மடாதிபதி/ நிறுவனர்:
(Abbot/ Founder)

பிறப்பு: மார்ச் 2, 480
நூர்சியா, ஊம்ப்ரியா, ஊம்ப்ரியா அரசு
(Norcia, Umbria, Kingdom of Odoacer)

இறப்பு: கி.பி. 547 (வயது 67),
மோன்ட்டே கேசினோ, இத்தாலி அரசு
(Monte Cassino, Kingdom of the Ostrogoths)

ஏற்கும் சபை/ சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபைகள்
(Eastern Orthodox Churches)
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglican Communion)
ஓரியண்ட்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodox Churches)
லூதரன் திருச்சபை
(Lutheran Church)
ஆதி கத்தோலிக்க திருச்சபைகள்
(Old Catholic Churches)

புனிதர் பட்டம்: கி.பி. 1220
திருத்தந்தை மூன்றாம் ஹோனோரியஸ்
(Pope Honorius III)

நினைவுத் திருவிழா: ஜூலை 11

பாதுகாவல்:
நஞ்சினால் பாதிக்கப்பட்டோர், பில்லி சூனியத்திலிருந்து தப்ப, உழவர், பொற் கொல்லர், மரண படுக்கையில் இருப்போர், ஐரோப்பா, காய்ச்சல், துறவற சபையினர், பிள்ளை, தன் தலைவரின் உடமைகளை உடைத்த வேலைக்காரர்கள், பாவ சோதனை

நூர்சியாவின் புனிதர் பெனடிக்ட், ஒரு கிறிஸ்தவப் புனிதரும், கத்தோலிக்க திருச்சபையினால் ஐரோப்பா மற்றும் மாணவர்களுக்கு பாதுகாவலராகக் கருதப்படுபவரும் ஆவார். இத்தாலியில், ரோம் நகருக்கு 40 மைல் (64 கிமீ) கிழக்கே, லாஸியோ (Lazio) நகருக்கு அருகேயுள்ள சுபியாகோ (Subiaco) என்னும் இடத்தில் இவர் 12 மடங்களைத் தோற்றுவித்தார். இதன்பின் இவர் தெற்கு இத்தாலியில் உள்ள மோன்ட்டே கேசினோவில் (Monte Cassino) உள்ள மலைப்பகுதியில் தன் வாழ்வின் மீதி நாட்களைக் கழித்தார்.

பெனடிக்டின் முக்கிய சாதனையாகக் கருதப்படுவது, இவர் தனது துறவிகளுக்கான கட்டளைகளைக் கொண்ட சட்ட நூல் ஒன்றைத் தொகுத்ததாகும். இதில் ஜான் சாசியானின் எழுத்துகளின் தாக்கம் பெரிதும் உள்ளது. இது நவீனத்துவம் மற்றும் நேரியத் தனித்துவம் பெற்றிருப்பதனால் இதனால் இடைக்காலத்தில் நிறுவப்பட்ட மடங்கள் அனைத்தும் இச்சட்டங்களையே ஏற்று பின்பற்றின. இந்த காரணத்தால், பெனடிக்ட் மேற்கு கிறித்தவ துறவறமடங்களின் நிறுவனர் என்று அழைக்கப்படுகிறார்.

வரலாறு:
தனது 20ம் வயதில் உலகை வெறுத்து ரோமுக்கு வெளியே வனவாசியாக வாழ்ந்தவர் இவர். தனிமையில் இறைவனை தியானிப்பதில் செலவிட்டார். அருகில் இருந்த ஆதீனத்தின் தலைவர் இறந்தபோது, அம்மடத்து துறவிகளின் வேண்டுதலின் பேரில் இவர் அவர்களுக்கு தலைவரானார். இவர் இயற்றிய கடின சட்டங்களினால் வெறுப்படைந்த துறவிகள் இவரை நஞ்சூட்டு கொல்ல திட்டமிட்டு நஞ்சு கலந்த கோப்பையினை இவரிடம் கொடுத்தபோது, இவர் அதனை ஆசீர்வதிக்க, அக்கோப்பை உடைந்ததாகக் கூறப்படுகின்றது. இதனால் அவர் மடத்தை விட்டு வெளியேறி மீண்டும் தனிமை வாழ்வுக்கு திரும்பினார்.
இவர் மோன்ட்டே கேசினோவில் நின்றுகொண்டு இறைவேண்டல் புரியும்போது இறந்தார். பாரம்பரியக் கூற்றின்படி இது நிகழ்ந்தது கி.பி. 547ம் ஆண்டு, மார்ச் மாதம், 21ம் நாளாகும்.

கி.பி. 1964ம் ஆண்டு, இவரை ஐரோப்பாவின் பாதுகாவலராக திருத்தந்தை ஆறாம் பவுல் (Pope Paul VI) அறிவித்தார். இவரின் நினைவு நாளான மார்ச் 21, பெரும்பாலும் தவக்காலத்தில் வருவதால், இவரின் விழா நாள், இவரின் மீப்பொருட்கள் ஃபிரான்சுக்கு கொன்டுவரப்பட்ட நாளான ஜூலை 11ல் கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் விருப்ப நினைவாக இடம் பெருகின்றது.

பெனடிக்டின் சட்டங்கள்:
இவை இவரால் இயற்றப்பட்ட எழுபத்தி மூன்று குறுகிய அதிகாரங்களை உடைய சட்ட தொகுப்பு ஆகும். இச்சட்டங்கள் ஒரு மடத்தை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும் மற்றும் ஒரு மடத்தில் எவ்வாறு வாழ்வது என்பது குறித்து விளக்குகின்றது. மடத்தின் தலைவருக்கு எவ்வாறு கீழ்ப்படிய வேண்டும் எனவும், அவ்வாறு கீழ்படியாதோருக்கான தண்டனை மற்றும் மடத்தின் தலைவருக்கான கடமைகள் முதலியன இந்நூலில் குறிக்கப்பட்டுள்ளன.

பெனடிக்டின் பதக்கம்:
பெனடிக்டின் பதக்கம் முதன் முதலில் புனித பெனடிக்டின் பாதுகாவலுக்கய் அணியப்பட்டது. இதன் ஒருபக்கத்தில் பெனடிக்டின் உருவமும். மறுபக்கத்தில் சிலுவையும் அதனைச்சுற்றியும் அதன் மீதும் இலத்தீன் எழுத்துகளும் பொறிக்கப்படிருக்கும்.
இப்பதகமானது முதன்முதலில் பயன்படுத்தப்பட காலம் சரிவர தெரியவில்லை. ஆயினும் கி.பி. 1880ம் ஆண்டு, இவரின் பிறப்பின் கி.பி. 1400ம் ஆண்டு நினைவுக்காக வெளியிடப்பட்ட போதிலிருந்து இது மக்களிடையே புகழ் பெறத்துவங்கியது.

கி.பி. 1647ம் ஆண்டு பவேரியாவின் இருந்த ஒரு சூனியக்காரி, இப்பதகத்தை அனிபவர் மீது தனது மந்திரம் வேலை செய்ய மறுப்பதாக கூறியுள்ளார். திருத்தந்தை பதினான்காம் பெனடிக்ட், கி.பி. 1741ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 23ம் நாள், மற்றும் கி.பி. 1742ம் ஆண்டு, மார்ச் மாதம், 12ம் நாளன்று, இப்பதக்கதை அருளிக்கமாக அணிய அதிகாரபூர்வ அனுமதியளித்தார்.

பெனடிக்டின் தாக்கம்:
மத்தியக்காலத்தின் துவக்க நூற்றாண்டுகள் பெனடிக்டின் நூற்றாண்டுகள் என அழைக்கப்படுகின்றது. 2008ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், புனித பெனடிக்ட் தனது வாழ்வினால் ஐரோப்பிய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டில் அழிக்க முடியா தாக்கம் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார்.
ரோமப் பேரரசின் அழிவால் இருள் சூழ்ந்திருந்த ஐரோப்பாவை மீட்டவர் இவர் என இவருக்கு புகழாரம் சூட்டினார். மற்ற எந்த ஒரு தனி நபரையும் விட பெனடிக்ட் மேற்கு துறவு மடங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். இவர் இயற்றிய சட்டங்கள் இன்றளவும் பல்லாயிரக்கணக்கான துறவுமடங்களில் பயன்படுத்தப்படுகின்றது.



 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா