Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ தூயவர்களான அக்கில்லா மற்றும் பிரிஸ்கா ✠(Aguila and Prisca )
     
நினைவுத் திருநாள் : (ஜூலை / Juill- 08)
 ✠ தூயவர்களான அக்கில்லா மற்றும் பிரிஸ்கா ✠(Saints Aguila and Prisca )

"கிறிஸ்து இயேசுவுக்காக என்னோடு சேர்ந்து உழைக்கின்ற பிரிஸ்காவுக்கும் அக்கில்லாவுக்கும் என் வாழ்த்து" (உரோ 16:3)

வாழ்க்கை வரலாறு

அக்கில்லா, பிரிஸ்கா ஆகிய இருவரும் பிறப்பால் யூதர்கள். இவர்கள் இருவரும் கூடாரத் தொழில் செய்து பிழைத்து வந்தார்கள். கி.பி.49 ஆம் ஆண்டு, உரோமையை ஆண்டுவந்த கிளாடியஸ் என்ற மன்னன் கிறிஸ்தவர்களைக் கொடுமைப்படுத்தத் தொடங்கியதால், இவர்கள் அங்கிருந்து கொரிந்து நகருக்கு இடம்பெயர்ந்து, அங்கே கூடாரத் தொழில் செய்து பிழைத்து வந்தார்கள்.

இப்படிப்பட்ட சமயத்தில்தான் புறவினத்தாரின் இறைவாக்கினர் என அழைக்கப்படும் பவுல் இவர்களிடத்தில் வந்து, பிழைப்பிற்காக கூடாரத் தொழில் செய்து வந்தார். பவுலடியாரின் போதனையும் எடுத்துக்காட்டன வாழ்வும் இவர்களை மிகவும் மாற்றியது என்றுதான் சொல்லவேண்டும். இதனால் இவர்கள் பவுலடியாருக்கு பணிவிடை செய்யத் தொடங்கினார்கள்.

பவுல் எபேசு நகருக்குச் சென்றபோது இவர்கள் இருவரையும் தன்னோடு கூட்டிச் சென்றார். அங்கே இவர்கள் இருவரும் நற்செய்திப் பணியில் பவுலுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். இதற்கிடையில் இவர்கள் இருவரும் அப்போல்லோவைச் சந்தித்தார்கள். அவரோ திருமுழுக்கு குறித்த போதுமான தெளிவில்லாமல் இருந்தார். எனவே அவருக்கு இவர்கள் சரியான போதனையை எடுத்துச் சொல்லி, அவரைத் தெளிவுபடுத்தினார்கள்.

எபேசு நகரில் சில காலத்திற்கு பவுலோடு நற்செய்திப் பணியாற்றிய இவர்கள் இருவரும் உரோமை நகருக்கு வந்தார்கள். அங்கே இவர்கள் இருவரும் ஆண்டவர் இயேசுவைப் பற்றி வல்லமையோடு மக்களுக்கு எடுத்துரைத்து வந்தார்கள். இதுகுறித்து கேள்விப்பட்ட உரோமை மன்னன் இவர்களைக் கொன்றுபோட்டான். இவ்வாறு அக்கில்லாவும் பிரிஸ்காவும் ஆண்டவர் இயேசுவுக்காக இரத்தம் சிந்தி, தங்களுடைய இன்னுயிரைத் துறந்தார்கள்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய அக்கில்லா மற்றும் பிரிஸ்காவின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. நம் ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்தல்

தூய அக்கில்லா மற்றும் பிரிஸ்காவின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது நமக்கு மேலே சொல்லப்பட்ட தலைப்புதான் நினைவுக்கு வந்து போகின்றது. அக்கில்லாவும் பிரிஸ்காவும் பவுலடியாருக்கு அவருடைய நற்செய்திப் பணியில் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தார்கள். அவருக்கு தங்களுடைய இல்லத்தில் தங்குவதற்கு இடம் கொடுத்து, வேலையும் கொடுத்தார்கள். அது மட்டுமல்லாமல், அவருடைய திருத்தூதுப் பயணத்தில் அவருக்கு எப்போதும் பக்க பலமாக, உறுதுணையாக இருந்தார்கள்.

இந்த தம்பதியரைப் போன்று நற்செய்திப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அல்லது ஞான மேய்ப்பவர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இன்றைக்கு ஞான மேய்ப்பர்களாக இருக்கக்கூடிய குருக்கள், கன்னியர்கள், இறையடியார்கள் இவர்கள் சந்திக்கக்கூடிய சவால்கள் ஏராளம். மதவாத அமைப்புகளிடமிருந்து சந்திக்கக்கூடிய சவால்கள் ஒருபுறம் என்றால், யாருக்காகப் பணி செய்கின்றார்களோ அவர்களிடமிருந்து சந்திக்கக்கூடிய சவால்களும் பிரச்சனைகளும் ஏராளம், ஏராளம். இவற்றையெல்லாம் வார்த்தையால் விவரித்துச் சொல்ல முடியாது. தேவையற்ற விமர்சனங்கள், பழிச் சொற்கள், புரிந்துகொள்ளாத தன்மை, ஒத்துழையாமை இவையும் இன்ன பிற பிரச்சனையும் இறைப்பணியைச் செய்யகூடியவர்கள் அன்றாடம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இவை எல்லாவற்றையும் விட, அவர்கள் நோயில் விழுகின்றபோது கவனிப்பாரற்ற நிலை. இப்படி பல பிரச்சனைகளை குருக்கள் அனுதினமும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில், அவர்களால் பலவிதங்களில் பயன்பெறக்கூடிய இறைமக்கள், அவர்களுக்குத் தகுந்த உதவிகள் செய்வது தேவையானதொன்றாக இருக்கின்றது.

இறைவாக்கினர் எலியாயை சாரிபாத்தைச் சார்ந்த ஒரு கைம்பெண் கவனித்துக் கொண்டபோது, பஞ்ச காலத்தில் அவருக்கு எந்தவொரு பற்றாக்குறையும் ஏற்படவில்லை என்று விவிலிய எடுத்துரைக்கின்றது. ஆண்டவர் இயேசுகூட, "இறைவாக்கினர் ஒருவருக்கு, அவர் இறைவாக்கினர் என்பதற்காக ஒரு கிண்ணம் குளிர்ந்த தண்ணீர் கொடுப்பவர், அதற்கான கைம்மாறு பெறாமல் போகார்" என்பார். ஆம், இறைவாக்கினர்களுக்கும் இறையடியார்களுக்கும் செய்யப்படுகின்ற சேவைகள் யாவும் இறைவனுக்கே செய்யப்படுகின்ற சேவைகள் ஆகும். ஆகையால், குருக்களையும் கன்னியர்களையும் இறைவாக்குப் பணியைச் செய்யக்கூடிய ஒவ்வொருவரையும் இறைவனுடைய பதிலாகப் பார்த்து, அவர்களுக்கு உரிய பதிப்பளித்து, அவர்களுக்குச் சேவைகள் செய்வது தேவையான ஒன்றாக இருக்கின்றது.

ஆகவே, தூய அக்கில்லா மற்றும் பிரிஸ்காவின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவர்களைப் போன்று நம் ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்வோம். இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா