Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ அருளாளர் டைடஸ் ப்ரேண்ட்ஸ்மா ✠(Blessed Titus Brandsma)
   
நினைவுத் திருநாள் : (ஜூலை / july- 27)
✠ அருளாளர் டைடஸ் ப்ரேண்ட்ஸ்மா ✠(Blessed Titus Brandsma)


மறைப்பணியாளர், குரு, மறைசாட்சி:
(Religious, Priest and Martyr)

பிறப்பு: ஃபெப்ரவரி 23, 1881
ஓகேக்ளூஸ்டர், ஃப்ரீஸ்லேண்ட், நெதர்லாந்து
(Oegeklooster, Friesland, Netherlands)

இறப்பு: ஜூலை 26, 1942 (வயது 61)
டச்சாவ் சித்திரவதை முகாம், பவரியா, ஜெர்மனி
(Dachau concentration camp, Bavaria, Germany)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
முக்திபேறு பட்டம்: நவம்பர் 3, 1985
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

முக்கிய திருத்தலம்:
டைடஸ் ப்ரேண்ட்ஸ்மா, நினைவகம், நிஜ்மேகன், நெதர்லாந்து
(Titus Brandsma Memorial, Nijmegen, Netherlands)

நினைவுத் திருநாள்: ஜூலை 27

பாதுகாவல்:
கத்தோலிக்க பத்திரிகையாளர்கள், புகையிலைவாதிகள், ஃப்ரீஸ்லேண்ட் (Friesland)
அருளாளர் டைடஸ் ப்ரேண்ட்ஸ்மா, ஒரு டச்சு கார்மேல் சபை துறவியும் (Dutch Carmelite Friar), கத்தோலிக்க குருவும் (Catholic priest), தத்துவ ஞான சாஸ்திர (Professor of Philosophy) பேராசிரியருமாவார். நாஜி சித்தாந்தத்தை கடுமையாக எதிர்த்த இவர், இரண்டாம் உலகப் போருக்கு (Second World War) முன்னர் பலமுறை அதை எதிர்த்து வெளிப்படையாக பேசினார். தென்மேற்கு ஜெர்மனியின் (SouthWestern Germany) பவரியா (Bavaria) மாகாணத்திலுள்ள "டச்சாவ்" (Dachau) நகரிலுள்ள மிகவும் மோசமான சித்திரவதை முகாம் சிறையில் (Dachau concentration camp) அடைக்கப்பட்ட இவர், அங்கேயே மரித்தும் போனார். ரோமன் கத்தோலிக்க திருச்சபை, இவருக்கு விசுவாசத்தின் மறைசாட்சியாக (Martyr of the Faith) முக்திபேறு பட்டமளித்தது.

"அன்னோ ஸ்ஜோர்ட் ப்ரேண்ட்ஸ்மா" (Anno Sjoerd Brandsma) எனும் இயற்பெயர் கொண்ட இவருடைய தந்தையார் பெயர், "டைடஸ் ப்ரேண்ட்ஸ்மா" (Titus Brandsma) ஆகும். இவரது தாயாரின் பெயர், "ஜிட்ஸ் போஸ்ட்மா" (Tjitsje Postma) ஆகும். நெதர்லாந்து (Netherlands) நாட்டின் "ஃப்ரீஸ்லேண்ட்" (Friesland) மாகாணத்திலுள்ள "ஹர்ட்வர்ட்" (Hartwerd) கிராமத்தினருகேயுள்ள "ஓகேக்ளூஸ்டர்" (Oegeklooster) எனுமிடத்தில், கி.பி. 1881ம் ஆண்டு பிறந்தார்.

ஒரு சிறிய பால் பண்ணை நடத்தி வந்த அவருடைய பெற்றோர்கள், மிகவும் பக்திமிக்க கத்தோலிக்கர்களாக இருந்தனர். முக்கியமாக, கால்வினிஸ்ட் (Calvinist region) பிராந்தியத்தில் ஒரு சிறுபான்மை இன மக்களாக இருந்தனர். அவர்களது ஒரு மகளைத் தவிர, அவர்களது குழந்தைகள் அனைவரும் ஆன்மீக சபைகளில் இணைந்தனர்.

ஒரு சிறுவனாக, ப்ரேண்ட்ஸ்மா, ஃபிரான்சிஸ்கன் (Franciscan) சபையினர் நடத்தும் குருத்துவ படிப்புக்கான உயர்நிலை கல்வியை மேகன் (Megen) நகரிலுள்ள இளநிலை செமினாரி (Minor Seminary) பள்ளியில் கற்றார்.
ப்ரேண்ட்ஸ்மா, கி.பி. 1898ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 17ம் நாளன்று, நெதர்லாந்தின் மேல் தென்கிழக்கு பிராந்தியத்திலுள்ள "பாக்ஸ்மீர்" (Boxmeer) நகரிலுள்ள கார்மேல் (Carmelite) துறவு மடத்தில், முதுமுக (Novitiate) பயிற்சியில் இணைந்தார். அங்கே, தமது தந்தையை கௌரவிக்கும் விதமாக, அவர் டைடஸ் (Titus) என்ற பெயரை தமது ஆன்மீகப் பெயரை ஏற்றுக்கொண்டார்.

கி.பி. 1905ம் ஆண்டு குருத்துவ அருட்பொழிவு பெற்ற ப்ரேண்ட்ஸ்மாவுக்கு, "கார்மேல் மாய அனுபவங்கள்" (Carmelite Mysticism) எனப்படும் "தியானத்தால் உண்மையையும் பரம்பொருளையும் காணலாம் என்ற நம்பிக்கையில்" சிறப்பான அனுபவமிருந்தது. இதன்காரணமாக இவருக்கு, 1909ம் ஆண்டு, ரோம் நகரில், தத்துவ அறிவியலுக்கான முனைவர் (Doctorate of Philosophy) பட்டமளிக்கப்பட்டது. அதன் பின்னர், அவர் நெதர்லாந்தின் பல்வேறு பள்ளிகளில் கற்பிக்க தொடங்கினார். 1916ம் ஆண்டுமுதல், "அவிலாவின் புனிதர் தெரேசா" (St. Teresa of vila) அவர்களின் படைப்புகளை டச்சு மொழியில் மொழிபெயர்ப்பதற்கான ஒரு திட்டத்தை ஆரம்பித்தார்.

"நிஜ்மேகன்" கத்தோலிக்க பல்கலைக்கழகத்தின் (தற்போது "ராட்பவுட்" (Radboud University) பல்கலைக்கழகம்) நிறுவனர்களுள் ஒருவரான, பிராண்ட்ஸ்மா 1923ம் ஆண்டு, பள்ளியில் "தத்துவம்" (Philosophy) மற்றும் "மாய அனுபவ வரலாறுகளின்" (History of Mysticism) பேராசிரியராகவும் ஆனார்.
ஒரு பத்திரிகையாளராகவும் பணிபுரிந்த ப்ரேண்ட்ஸ்மா, 1935ம் ஆண்டில் கத்தோலிக்க பத்திரிகையாளர்களுக்கான திருச்சபை ஆலோசகரும் ஆவார். அதே வருடம், விரிவுரையாளர் சுற்றுப்பயணத்தை அமெரிக்காவில் மேற்கொண்ட அவர், தமது சபையின் பல்வேறு நிறுவனங்களில் உரையாற்றினார்.

1940ம் ஆண்டு, மே மாதம், ஹிட்லரின் நாஜிக்கள் (Third Reich) நெதர்லாந்தில் படையெடுத்ததன் பின்னர், நாஜிக்களின் சித்தாந்தங்களை பரப்புவதற்கு எதிராகவும், கல்வி மற்றும் பத்திரிகை சுதந்திரத்திற்காகவும் போராட்டங்கள் நடத்திய காரணத்தால், நாஜிக்களின் கவனம் அவர்மீது திரும்பியது.
1942ம் ஆண்டு, ஜனவரி மாதம், அதிகாரப்பூர்வ நாஜி ஆவணங்களை அச்சிட வேண்டாம் என்று "டச்சு ஆயர்கள் பேரவையால்" கட்டளையிடப்பட்டிருந்த ஒரு கடிதத்தை, கத்தோலிக்க செய்தித்தாள்களின் ஆசிரியர்களிடம் கையளித்தார். இது ஜேர்மன் ஆக்கிரமிப்பாளர்களால் ஒரு புதிய சட்டத்தின் கீழ் தேவைப்பட்டிருந்தது. அதே மாதம், 19ம் தேதி, "பாக்ஸ்மீர்" (Boxmeer) துறவு மடத்தில் வைத்து அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர், அவர் 14 பத்திரிக்கை ஆசிரியர்களை சந்தித்திருந்தார்.
"ஸ்செவெனிங்கென்" (Scheveningen), "அமர்ஸ்ஃபூர்ட்" (Amersfoort), மற்றும் "க்லீவ்ஸ்" (Cleves) ஆகிய இடங்களில் சிறை வைக்கப்பட்ட பின்னர், பிராண்ட்ஸ்மா "டச்சாவ்" சித்திரவதை முகாமிற்கு (Dachau Concentration Camp) மாற்றப்பட்டு, ஜூன் மாதம், 19ம் தேதி, அங்கே வந்து சேர்ந்தார். அவரது உடல்நிலை விரைவாக மோசமடைந்தது. அவர் முகாம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 1942ம் ஆண்டு, ஜூலை மாதம், 26ம் தேதி, "அல்ஜமேயின்" (Allgemeine SS) எனப்படும் நாஜிக்களின் அதிதீவிர படையைச் சேர்ந்த செவிலியர் ஒருவர், அவர்கள் மனிதர்கள் மேல் நடத்தும் மருத்துவ பரிசோதனைகளின் (Program of Medical Experimentation) அடிப்படையில், ப்ரேண்ட்ஸ்மாவுக்கு போட்ட விஷ ஊசி காரணமாக அவர் மரணமடைந்தார்.

ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் ஒரு மறைசாட்சியாக மதிக்கப்படும் ப்ரேண்ட்ஸ்மாவுக்கு, 1985ம் ஆண்டு, நவம்பர் மாதம், திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் (Pope John Paul II) அவர்களால் முக்திபேறு பட்டமளிக்கப்பட்டது.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா