Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ அருளாளர் ஏஞ்சலின் ✠(Blessed Angeline of Marsciano)
   
நினைவுத் திருநாள் : (ஜூலை / Juill- 13)
 ✠ அருளாளர் ஏஞ்சலின் ✠(Blessed Angeline of Marsciano)


சபை நிறுவனர்/ மடாலய தலைவி :
(Foundress and Abbess)

பிறப்பு : கி.பி. 1357
மான்ட்டேகியோவ், ஊம்ப்ரியா, திருத்தந்தையர் மாநிலங்கள்
(Montegiove, Umbria, Papal States)

இறப்பு : ஜூலை 14, 1435
ஃபாலிக்னோ, ஊம்ப்ரியா, திருத்தந்தையர் மாநிலங்கள்
(Foligno, Umbria, Papal States)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

அருளாளர் பட்டம் : மார்ச் 8, 1825
திருத்தந்தை பன்னிரெண்டாம் லியோ
(Pope Leo XII)

முக்கிய திருத்தலம் :
சீசா டி சேன் ஃபிரேன்செஸ்கோ, ஃபோலிக்னோ, இத்தாலி
(Chiesa di San Francesco, Foligno, Perugia, Italy)

நினைவுத் திருநாள் : ஜூலை 13

ஏஞ்சலின் (Angeline of Marsciano) என்றும், ஏஞ்சலினா (Angelina of Montegiove) என்றும் அழைக்கப்படும் இவர், ஒரு இத்தாலிய கத்தோலிக்க அருட்சகோதரியும், "ஃபிரான்சிஸ்கன் மூன்றாம்நிலை சபையின் அருட்சகோதரிகளின் சபையின்" (Congregation of Religious Sisters of the Franciscan Third Order Regular) நிறுவனரும் ஆவார். இன்று இச்சபை, "அருளாளர் ஏஞ்சலினின் ஃபிரான்சிஸ்கன் அருட்சகோதரிகள் சபை" (Franciscan Sisters of Blessed Angeline) என்றழைக்கப்படுகிறது.

கி.பி. 1357ம் ஆண்டு, ஊம்ப்ரியாவிலுள்ள மூதாதையர்களின் "மான்ட்டேகியோவ்" என்னும் கோட்டையில் (Castle of Montegiove) பிறந்த இவருடைய தந்தை பெயர் "ஜாகோபோ" (Jacopo Angioballi) ஆகும். இவருடைய தாயார் "அன்னா" (Anna) ஆவார்.

தமது ஆறு வயதிலேயே தமது ஒரு சகோதரியுடன் அனாதரவாகவும் தனிமையிலும் விடப்பட்ட ஏஞ்சலினா, தமது பதினைந்து வயதில், "ஸிவிடெல்லா டெல் ட்ரொன்டோ" (Count of Civitella del Tronto) நகரின் பிரபுவான "கியோவன்னி ட டேர்னி" (Giovanni da Terni) என்பவருக்கு மொழி செய்து வைக்கப்பட்டார். ஆனால், இரண்டே வருடங்களில் அவரது கணவர் மரணமடைந்ததால், குழந்தைகளற்ற ஏஞ்சலினா, விதவையானார். தமது கணவரின் தோட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பேற்றார்.

பின்னர், தமது வாழ்வினை இறைவனுக்கு அர்ப்பணிக்க தீர்மானித்தார். தமது திருமணத்தின் முன்னரே செயல்படுத்த விரும்பியதை இப்போது சாதித்தார். "மூன்றாம் நிலை ஃபிரான்சிஸ்கன்" சபையில் அருட்சகோதரியாக இணைந்தார்.

பல துணைவர்களுடன் இணைந்து நாட்டின் கிராமங்களில் செயல்படும் வகையில் 'அப்போஸ்தலிக்க சபை' ஒன்றினை தொடங்கினார். "மனம் திரும்புதல் மற்றும் கன்னித்தன்மையின் மதிப்புகளை" போதிக்க ஆரம்பித்தார். அத்துடன், அவசியப்படுபவர்களுக்கு தேவைப்படும் உதவிகளையும், சேவைகளையும் செய்ய ஆரம்பித்தார்.

நாட்டின் இளம்பெண்களை கத்தோலிக்க வாழ்வு வாழ அழைத்த காரணத்தால், இவர் ஒரு மந்திரவாதி என்றும், பெண்களுக்கெதிராக - மொழி செய்வதை தடுக்கும் வகையில் போதனைகள் செய்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டதால் இவரது மத போதனைகளும் செயல்பாடுகளும் தடுத்து நிறுத்தப்பட்டன. நேப்பிள்ஸ் அரசர் "லாடிஸ்லாஸ்" (Ladislas, the King of Naples) அவர்களின் முன்னர் நிறுத்தப்பட்ட ஏஞ்சலினா, தமது தரப்பு வாதங்களை எடுத்து வைத்தார். அவற்றை ஏற்றுக்கொண்ட அரசர், ஏஞ்சலினாவை குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவித்தார். ஆனால், மீண்டும் பிரச்சினைகள் ஏற்படாதிருக்கும் பொருட்டு, ஏஞ்சலினாவையும் அவரது தோழர்களையும் நாடு கடத்த உத்தரவிட்டார்.

அதன்பிறகு, ஏஞ்சலினா "அசிசி" (Assisi) பயணமானார். வழியில், "ஃபிரான்சிஸ்கன் சபையின் தொட்டில்" (The Cradle of the Franciscan Order) என அழைக்கப்படும் பேராலயமான "சான்ட மரியாவில்" (Basilica of Santa Maria degli Angeli) இளைப்பாருதலுக்காகவும் செபிப்பதற்காகவும் தங்கினார். அங்கே, அவருக்கு ஆண்டவர் இயேசு காட்சியளித்தார். 'ஃபோலிக்னோ' (Foligno) என்னும் இடத்தில் "மூன்றாம் நிலை ஃபிரான்சிஸ்கன் சபையின்" (Third Order of Saint Francis) சட்டப்படி நடக்கும் "துறவியர் மடம்" ஒன்றினை தொடங்க இறைவன் கட்டளை இட்டார். இதற்கு அங்குள்ள உள்ளூர் ஆயர் ஒப்புதலளித்தார்.

கி.பி. சுமார் 1394ம் ஆண்டு "ஃபோலிக்னோ" (Foligno) என்ற இடத்தில் தங்கிய ஏஞ்சலினா, "புனித அன்னா" (St. Anna) என்ற சிறிய மடாலயத்தில் இணைந்தார். அங்கே தலைமைப் பொறுப்பினை ஏற்ற அவர், கி.பி. 1397ம் ஆண்டு, பன்னிரண்டு பெரும் சபைகளை நிறுவி, அதன் தலைமை பொறுப்பேற்றார். கி.பி. 1435ம் ஆண்டு, இவருடைய மரணத்தின் முன்னரே, இவருடைய சபை "ஃப்ளோரன்ஸ்" (Florence), "ஸ்போலேடோ" (Spoleto), "அசிசி" (Assisi) மற்றும் "விடெர்போ" (Viterbo) ஆகிய இடங்களிலும் விரிவடைந்தது.

கி.பி. 1435ம் ஆண்டு, ஜூலை மாதம், 14ம் நாளன்று, மரணமடைந்த ஏஞ்சலினா, ஃபோலிக்னோவில் (Foligno) உள்ள "புனித ஃபிரான்சிஸ் ஆலயத்தில்" (Church of St. Francis) அடக்கம் செய்யப்பட்டார்.

கி.பி. 1825ம் ஆண்டு, மார்ச் மாதம், 8ம் நாளன்று, திருத்தந்தை பன்னிரெண்டாம் லியோ (Pope Leo XII) அவர்களால் ஏஞ்சலினாவுக்கு அருளாளர் பட்டம் அளிக்கப்பட்டது.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா