திருப்பாடல்கள் | ஆண்டவர் எத்துணை இனியவர் என்று |
திபா 34: 1-2. 9-10. 11-12. 13-14 (பல்லவி: 8a) பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள். 1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். - பல்லவி 9 ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது. 10 சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. - பல்லவி 11 வாரீர் பிள்ளைகளே! நான் சொல்வதைக் கேளீர்! ஆண்டவருக்கு அஞ்சுவதைப் பற்றி உங்களுக்குக் கற்பிப்பேன். 12 வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா? வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு நெடுநாள் வாழ நாட்டமா? - பல்லவி 13 அப்படியெனில், தீச்சொல்லினின்று உன் நாவைக் காத்திடு; வஞ்சக மொழியை உன் வாயைவிட்டு விலக்கிடு! 14 தீமையைவிட்டு விலகு; நன்மையே செய்; நல்வாழ்வை நாடு; அதை அடைவதிலேயே கருத்தாயிரு. - பல்லவி |