| 
				
					| பதின்மூன்றாம் நாள் புதுமையும் செபமும்
 தூய பாத்திமா அன்னை என்ற பெயர், போர்ச்சுக்கல் 
					நாட்டின் பாத்திமா நகரில் 1917 மே 13 முதல் 1917 அக்டோபர் 13 
					வரை லூசியா சான்டோஸ், ஜெசிந்தா மார்த்தோ, பிரான்சிஸ்கோ 
					மார்த்தோ என்ற மூன்று சிறாருக்கு அன்னை மரியா அளித்த 
					காட்சியின் அடிப்படையில் அவருக்கு வழங்கப்பட்ட பெயராகும். உலகின் 
					பல்வேறு இடங்களில் மரியன்னை அளித்த காட்சிகளில் சிறப்பு வாய்ந்ததாக 
					பாத்திமா நகர் காட்சியும் விளங்குகிறது. இரண்டாம் உலகப் போர், 
					ரஷ்ய நாட்டின் மனமாற்றம் ஆகியவை பற்றி பாத்திமா அன்னை வழங்கிய 
					முன்னறிவிப்புகள் அப்படியே பலித்ததால், பாத்திமா காட்சி மிகவும் 
					பிரபலம் அடைந்தது. பாத்திமா அன்னையின் திருவிழா மே 13ந்தேதி 
					கொண்டாடப்படுகிறது
 
 மரியன்னை சிறுவர்களிடம், "நான் செபமாலை அன்னை" என்று தன்னை அறிமுகம் 
					செய்து கொண்டார். மேலும், அந்த மூன்று சிறாரும், தொடர்ந்து ஒவ்வொரு 
					மாதமும் 13ந்தேதி அதே இடத்திற்கு வர வேண்டும் என்று மரியா 
					கேட்டுக் கொண்டார். ஜூலை 13ந்தேதி, அன்னை மரியா காட்சி அளித்தபோது 
					சிறுவர்களுக்கு நரகத்தின் கொடிய வேதனைகளைக் காண்பித்தார். 
					"பாவிகள் மனம் திரும்ப செப, தவ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" 
					என்றும் மரியன்னை அறிவுறுத்தினார்.
 
 மக்கள் நரகத்தில் விழாமல் இருக்க, "ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களை 
					மன்னியும். நரக நெருப்பிலிருந்து எங்களை மீட்டருளும். எல்லாரையும் 
					விண்ணகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகம் 
					தேவையோ, அவர்களுக்கு சிறப்பாக உதவி புரியும்" என்ற செபத்தை 
					செபிக்குமாறு மரியா கற்றுக்கொடுத்தார். காட்சியை உறுதிப்படுத்தும் 
					வகையில் அக்டோபர் 13ந்தேதி சூரியனில் ஓர் அதிசயம் நிகழும் என்றும் 
					அவர் முன்னறிவித்தார்.
 
 ஆகஸ்ட் மாதம் 13ந்தேதி, லூசியா, ஜெசிந்தா, பிரான்சிஸ்கோ மூவரும் 
					அதிகாரிகளால் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர். எனவே அன்றைய 
					தினத்துக்கு பதிலாக, மரியாவின் விண்ணேற்பு நாளான ஆகஸ்ட் 
					15ந்தேதி சிறார் மூவரும் அன்னையின் காட்சியைக் கண்டனர். மக்கள் 
					பலரும் அன்னையின் அற்புதத்தைக் காண இச்சிறாரைப் பின்தொடர்ந்தனர்.
 
 மேலும் அன்னை தனது காட்சிகளின்போது, மனிதரின் தீய நடத்தையையும் 
					இறைவனின் கோபத்தையும் வெளிப்படுத்தினார். மரியா காட்சி அளித்த 
					வேளையில் நிகழ்ந்து கொண்டிருந்த முதல் உலகப் போர் விரைவில் 
					முடியப் போவதாகவும், மக்கள் தொடர்ந்து பாவம் செய்தால் அதைவிடக் 
					கொடிய உலகப் போர் மூளும் என்றும் அன்னை எச்சரிக்கை செய்தார். 
					வானில் காரணமின்றி தோன்றும் ஓர் ஒளியே அந்த போருக்கு அடையாளமாக 
					இருக்கும் என மரியன்னை முன்னறிவிப்பு செய்தார்.
 
 கிறிஸ்தவர்கள் செபித்தால் மக்களிடையே மனமாற்றம் நிகழும் என்றும், 
					கிறிஸ்துவை அறியாதவர்கள் விரைவில் மனம் திரும்புவார்கள் என்றும் 
					அன்னை மரியா மொழிந்தார். தலை வணங்கி கடவுளிடம் மன்னிப்புக் 
					கேட்குமாறும், கிறிஸ்துவின் திருச்சிலுவை முன் மண்டியிட்டு 
					செபிக்குமாறும் மரியன்னை அறிவுறுத்தினார். "இறுதி காலத்தில் மக்கள் 
					கடவுளின் கட்டளைகளை மதிக்காமல் நடப்பர், மக்களிடையே மனக்கசப்பும் 
					வெறுப்பும் நிலவும், மனிதர்கள் உலகையே அழிக்கும் பயங்கர ஆயுதங்களைக் 
					கண்டுபிடிப்பர்" என்றும், "இயற்கை சக்திகளால் சிறிது சிறிதாக 
					அழிவுகள் ஏற்பட கடவுள் அனுமதிப்பார். குளிர்ந்த இரவில் ஏற்படும் 
					கொடிய நிலநடுக்கத்திற்கு பின் உலகத்தில் பேரழிவுகள் தொடங்கும், 
					கடவுளுக்கு விருப்பமான மக்கள் மட்டுமே அதில் தப்பி பிழைப்பர்" 
					என்றும் அன்னை மரியா கூறினார்.
 
 1917 அக்டோபர் 13ந்தேதி, அன்னையின் காட்சியைக் காண சுமார் 70 
					ஆயிரம் பேர் கூடி இருந்ததாக நம்பப்படுகிறது. அப்போது வானில் வியத்தகு 
					அதிசயங்கள் தோன்றின. வானில் இருந்து பல வண்ணங்கள் தோன்றி மக்கள் 
					மேல் ஒளிர்ந்தன. பெரிய மழைப் பெய்த வேளையிலும் அன்னை மரியா 
					காட்சி அளித்த புதரும் 3 சிறார்கள் இருந்த இடமும் மட்டும் உலர்ந்தே 
					காணப்பட்டன. மக்கள் பலரும் அன்னை தோன்றிய ஒளிரும் மேகத்தைக் கண்டனர். 
					அப்போது அவர் சிறாரிடம், "மக்கள் செபிக்க வேண்டும்; பாவத்தினால் 
					கடவுளின் உள்ளத்தை புண்படுத்தக்கூடாது" என்று மிகவும் வலியுறுத்தி 
					கூறினார். மக்களின் மனமாற்றத்திற்காக செபமாலை செபிக்கப்பட 
					வேண்டுமென்றும், இறுதியில் தனது மாசற்ற இதயம் வெற்றி பெறும் என்றும் 
					மரியன்னை மொழிந்தார்.
 
 செபம்
 
 மனித அவதாரம் எடுத்த அன்பே, எங்களிடத்தில் பிறந்தருளும் . எங்களுடைய 
					சதையையும், இரத்தத்தையும் எடுத்துக் கொண்டு, உமது மனுஷீகத்தை 
					எங்களுக்குத் தந்தருளும். எங்கள் கண்களை எடுத்துக் கொண்டு உமது 
					பார்வையை எங்களுக்குத் தந்தருளும். எங்கள் புத்தியை எடுத்துக் 
					கொள்ளும். உமது பரிசுத்த எண்ணங்களை எங்களுக்குத் தந்தருளும். 
					எங்கள் பாதங்களைத் தூக்கி, உமது பாதையில் திருப்பியருளும். எங்கள் 
					கரங்களை ஏந்தி உமது செபத்துக்காக குவித்தருளும்
 
 எங்கள் உள்ளங்களைக் கவர்ந்து அவைகள் நேசிக்க உமது நாட்டத்தை தந்தருளும், 
					செபமாலை இராக்கினியே எங்களை மற்றொரு இயேசு ஆக்கும் ஆமென்
 |  |