Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

தூய ஃபாத்திமா அன்னை
( மே 13 ) 

  மே 13 பாத்திமா அன்னை காட்சி கொடுத்த நாள்  


செபமாலையின் புகழ்பரப்பும் வணக்க மாதமான வைகாசி மாதத்தில் 13ம் திகதி பாத்திமா அன்னையின் பெருவிழாவை கத்தோலிக்கரான நாம் வருடாவருடம் கொண்டாடி மகிழ்வது அனைவரும் அறிந்ததே.

எதிர்வரும் 2017ம் வருடம் மே மாதத்தில் பாத்திமா அன்னையின் தரிசனத்தின் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாட ஆயத்தம் செய்யும் இக்காலத்தில் பாத்திமா அன்னையின் வரலாற்றைக் குறித்துத் தியானிப்பது பொருத்தமானது என்பது எனது பணிவான அபிப்பிராயம்.

ஆண்டவர் இயேசு தமது இறுதி மரணவேளையில் இவரே உம் தாய் (யோவான் 19:7) என எமது அடைக்கலமாக ஒப்படைக் கப்பட்ட அன்னை மரியா தரிசனம் கொடுத்த இடங்களின் பல்வேறு பெயர்களால் குறிப்பாக லூர்து அன்னை - மெயுகோரி அன்னை- பெனு அன்னை குவாட்டலூப் அன்னை - வேளாங்கன்னி அன்னை - மருதமடு அன்னை சாட்டி அன்னை - கார்மேல் அன்னை கேவழார் அன்னை மற்றும் பாத்திமா அன்னையென அழைக்கப்படுவதுண்டு

அன்னை மரியாவிற்கு தூய பாத்திமா அன்னை என்ற பெயர் போர்த்துக்கல் நாட்டின் பாத்திமா நகரில் 1917 மே 13முதல் 1917 அக்டோபர் 13வரை லூசியா ஜெசிந்தா - பிரான்சிஸ்கோ என்ற மூன்று சிறாருக்கு கொடுத்த தரிசனத்தின் அடிப்படையில் வழங்கப்படுகின்ற பெயராகும் என்று பாத்திமா அன்னையின் தரிசன வரலாறு கூறுகின்றது.

இரண்டாம் உலகப் போர் மற்றும் இரஷ்ய நாட்டின் மனமாற்றம் என்பன பாத்திமா அன்னையின் முன்னறிவிப்புகளின்படியே நிகழ்ந்தேறியதால் மிகவும் பிரபல்யம் அடைந்த பாத்திமா தரிசனம் பின்வருமாறு தெரிவிக்கின்றது.

1917 மே 13ந்தேதி போர்த்துக்கலில் பாத்திமாவில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த லூசியா - ஜெசிந்தா - பிரான்சிஸ்கோ ஆகிய மூன்று சிறுவர்கள் ஒளிமயமான ஒரு-மேகத்தின் மேல் அன்னை மரியா தோன்றிய அந்தக் காட்சியைக் கண்டனர்.
மரியன்னை, "நான் செபமாலை அன்னை" என்று தன்னை அறிமுகம் செய்து அந்த மூன்று சிறாரும், தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 13ந்தேதி அதே இடத்திற்கு வரவேண்டும் என்று கட்டளை இட்டார்

1917.ஜூலை 13ந்தேதி, அன்னை மரியா காட்சி அளித்தபோது சிறுவர்களுக்கு நரகத்தின் கொடிய வேதனைகளைக் காண்பித்து "பாவிகள் மனம் திரும்ப செப, தவ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" என்றும் அறிவுறுத்தினார்.

1917. அக்டோபர் 13ந்தேதி, காட்சியளித்தபோது மக்கள் நரகத்தில் விழாமல் இருக்க, "ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களை மன்னியும். நரக நெருப்பிலிருந்து எங்களை மீட்டருளும். எல்லாரையும் விண்ணகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகம் தேவையோ, அவர்களுக்கு சிறப்பாக உதவி புரியும்" என்ற செபத்தை செபிக்குமாறு கற்றுக்கொடுத்தார்.

1917.அக்டோபர் 13ந்தேதி சூரியனில் ஓர் அதிசயம் நிகழும் என்று முன்னறிவித்தார் - ஆகஸ்ட் 13ந்தேதி, லூசியா, ஜெசிந்தா, பிரான்சிஸ்கோ மூவரும் அதிகாரிகளால் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர். எனவே அன்றைய தினத்துக்கு பதிலாக மரியாவின் விண்ணேற்பு நாளான ஆகஸ்ட் 15ந்தேதி சிறார் மூவரும் அன்னையின் காட்சியைக் கண்டனர்.

அன்னை தனது காட்சிகளின்போது, மனிதரின் தீய நடத்தையையும் இறைவனின் கோபத்தையும் வெளிப் படுத்தினார் அக்காலத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த முதல் உலகப் போர் விரைவில் முடியப் போவதாகவும், மக்கள் தொடர்ந்து பாவம் செய்தால் அதைவிடக் கொடிய உலகப் போர் மூளும் என்றும் அன்னை எச்சரிக்கை செய்தார்.

வானில் காரணமின்றி தோன்றும் ஓர் ஒளியே அந்த போருக்கு அடையாளமாக இருக்கும் என மரியன்னை முன்னறிவிப்பு செய்தார் - கிறிஸ்தவர்கள் செபித்தால் மக்களிடையே (குறிப்பாக ரஷ்யாவில்) மனமாற்றம் நிகழும் என்றும், கிறிஸ்துவை அறியாதவர்கள் விரைவில் மனம் திரும்புவார்கள் என்றும் அன்னை மொழிந்தார்.

1917 அக்டோபர் 13ந்தேதி, அன்னையின் காட்சியைக் காண சுமார் 70 ஆயிரம் பேர் கூடியிருந்ததாக நம்பப்படுகிறது - அப்போது வானில் வியத்தகு அதிசயங்கள் தோன்றி வானில் இருந்து பல வண்ணங்கள் மக்கள் மேல் ஒளிர்ந்தன - பெரிய மழை பெய்த வேளையிலும் அன்னை மரியா காட்சி அளித்த புதரும் 3 சிறார்கள் இருந்த இடமும் மட்டும் உலர்ந்தே காணப்பட்டன.

மக்கள் பலரும் அன்னை தோன்றிய ஒளிரும் மேகத்தைக் கண்டனர். அப்போது அவர் சிறாரிடம், "மக்கள் செபிக்க வேண்டும்; பாவத்தினால் கடவுளின் உள்ளத்தை புண்படுத்தக் கூடாது" என்று மிகவும் வலியுறுத்தினார். மக்களின் மனமாற் றத்திற்காக செபமாலை செபிக்கப்பட வேண்டுமென்றும், இறுதியில் தனது மாசற்ற இதயம் வெற்றி பெறும் என்றும் மரியன்னை மொழிந்தார் என பாத்திமா தரிசன வரலாறு தெரிவிக்கின்றது.

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்