|
|
|
|
புனித சிறுமி லூசியா (தொடர்ச்சி) : அன்று
இரவு வெகு நேரம் வரை லூசியாவின் மூத்த சகோதரிகள் அவளுடைய புது
நன்மைக்கான தயாரிப்புகளை செய்தார்கள். லூசியாவிற்கு உறக்கம்
வரவில்லை. அடிக்கடி எழுந்து மணி பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளை எழுப்ப வந்த மூத்த சகோதரி மரியா, லூசியாவிடம் அவள்
எதையாவது தின்னவோ பருகவோ கூடாது. இயேசுவை வாங்கும் வரை உபவாசம்
இருக்க வேண்டும் என்று ஞாபகமூட்டினாள். (அப்போது நடுச்சாமம்
முதல் புது நன்மை வாங்கும்வரை தண்ணீர் முதலாய் பருகாமல்
உபவாசம் இருக்க வேண்டும் என்று ஒழுங்கு இருந்தது.)
அதன்பின் அவளுக்குப் புது நன்மை உடைகளை அணிவித்து, பெற்றோரிடம்
கூட்டி வந்து அவர்களிடம் தான் செய்த குற்றங்களுக்கு மன்னிப்பு
கேட்டு, அவர்கள் கரங்களை முத்தம் செய்து அவர்களிடம் ஆசீர்
பெற்றுக் கொள்ளும்படி கூறினாள். லூசியாவும் அவ்வாறே செய்து
பெற்றோரிடம் ஆசீர் பெற்றாள். அப்போது மரிய ரோசா தன் மகளிடம், "லூசியா,
தேவ அன்னை உன்னை ஒரு அர்சிஷ்ட்டவளாக்கும்படி (புனிதையாக்கும்படி)
கேட்க மறந்து விடாதே" என்று கூறினாள்.
விடியற்காலையில் மரிய ரோசா குடும்பத்தினர் பாத்திமா பங்கு
கோவிலுக்கு நடந்து சென்றார்கள். பூசை ஆரம்பிக்க இன்னும்
நேரமிருந்தது. லூசியா ஜெபமாலைத்தாயின் பீடத்தடிக்கு மீண்டும்
சென்று, "அம்மா, என்னை அர்ச்சிஷ்ட்டவளாக்குங்கள்; ஆண்டவரிடம்
மன்றாடி என்னை அர்ச்சிஷ்ட்டவளாக்குங்கள் " என்று கேட்டாள்.
அன்று இயேசுவை முதலில் வாங்கியது லூசியாதான். அவள்தான்
எல்லோரையும் விடச்சிறியவளாததால் முதல் வரிசையில் முதல்
இடத்தில் இருந்து மற்றவர்களுக்கு முந்தி இயேசுவைப்
பெற்றுக்கொண்டாள். இயேசு தன் நாவில் பட்டதும்,"நிரந்தரமான
ஓர் அமைதியும் சமாதானமும் என்னிடம் ஏற்பட்டது " என்று லூசியா
கூறுகிறாள்.
பூசை முடியும் வரை," இயேசுவே என்னை அர்ச்சிஷ்ட்டவளாக்குங்கள்.
என் இருதயத்தை எப்போதும் தூய்மையாக உங்களுக்கென
வைத்துக்கொள்ளுங்கள் இயேசு!" என்று கூறிக்கொண்டே இருந்தாள்.
அவள் உள்ளத்தில் இயேசு, "இன்று நான் உனக்குத் தரும்
வரப்பிரசாதம் நித்திய வாழ்வின் பலனைக் கொடுக்கும்படி உன்
ஆன்மாவில் நிலைத்திருக்கும்" என்று கூறிய மொழிகளை லூசியா
தெளிவாகக் கேட்டாள். அன்று முதல் அவள் எங்கோ
இழுக்கப்பட்டவளாகவும், எதிலோ ஈடுபட்டவளாகவும் காணப்பட்டாள்.
சிந்தனை: நம்மாலும் தூய மனமுடைய
லூசியாவைப்போல் நற்கருணை நாதரைப்பெறும் ஒவ்வொரு வேளையும்,
அவளைப்போல் ஆண்டவர் இயேசுவிடம் இருந்து எண்ணற்ற வரங்களை பெற
முடியும். அவர் நம் உள்ளத்தில் உணர்த்துவதை உணர முடியும். ஏன்
லூசியாவைப்போல் அவர் குரலையும் கூட கேட்க முடியும். நம்மிடம்
அவரில் விசுவாசம் இல்லை.
நம்பிக்கை, அன்பு, நேசமிருந்தால் போதும். பராக்கு பார்க்காமல்
தேவையற்ற விசயத்தில் கவனத்தை செலுத்தாமல், நமக்குள் வந்த இயேசு
ஆண்டவரிடம் மென்மையான குரலில், தாழ்ச்சியான, நேசமான உள்ளத்தோடு
அவரிடம் ஒரு பத்து நிமிடமாவது நாம் செலவிட்டோமென்றால், நாம்
கேட்பது அனைத்தும் கிடைக்கும். அப்போதும் பெட்டிசனே
போடாதீர்கள், போட்டாலும் கிடைக்கும். ஆனாலும் நமக்குத் தேவையான
ஆன்ம ஞான காரியங்களை கேட்பது மிகவும் நன்று.. |
|