Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறந்தோர் வாழ்வு

  முடிவில்லாத வாழ்வைத் தேடி  
    

கார்த்திகை இரண்டில், கல்லறைகள் செல்வோம். காலத்தால் வாழ்ந்தவர்களை, கண்ணீரால் நினைப்போம். கல்வாரிப் பலிமூலம், முடிவில்லா வாழ்வுக்காய் செபிப்போம்.

கத்தோலிக்க திருச்சபையிலே ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் 2ந் திகதி அனைத்து ஆத்துமாக்களுடைய நாளாக நினைவு கூரப்படுகிறது. எம்மை உருவாக்க, உணவு தந்து, உடை தந்து, எம்மையெல்லாம் இவ்வுலகில் உயர்ந்து வாழ வழியமைத்துத் தந்து, இ;வ்வுலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு, முடிவில்லாத வாழ்க்கையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்ற எமது அன்புப் பெற்றோர்கள், பாசமிகு உறவுகள், அன்பர்கள், நண்பர்கள், உறவுகள் அனைவர்க்காகவும், நன்றி கூறி செபிக்கின்ற நாளாகும். இந்தநாளில் எம்மையெல்லாம், ஏன் இந்த உலகத்தையே அச்சத்திற்குள்ளாக்கி யிருக்கிற மரணத்தைப் பற்றிச் சிந்திப்பது சாலப் பொருத்தமானதாகும்.

வந்தவர் எவரும் இவ்வுலகில் தங்குவதில்லை. கொணர்ந்தவைகள் எவையும் எடுத்துச் செல்லப்படுவதில்லை. இதை உணர்ந்த மனிதன், இதை உணர்ந்த உலகம் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறது. ஏன் மனிதன் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறான். என்றால், அவன் வாழ்க்கையிலேயும், அச்சம் குடி கொண்டிருக்கிறது, என்ற அர்த்தப்படும் தங்கள் வாழ்க்கையிலே நிறைவைக் கண்ட வர்கள். முழுமையை அனுபவித்தவர்கள். மரணத்தை அமைதியுடனும், தைரியத்துடனும் எப்போதும், எந்நேரத்திலும் எதிர்கொள்ளத் தயாராயிருப்பார்கள். ஆனால், ஒருவன் அர்த்தமற்ற வாழ்க்கையை இவ்வுலகில் தொடருவானாகில், அவனில் மரணத்திற்கான அச்சம் ஆட்கொள்ளப்பட்டிருப்பதோடு இவ்வுலக வாழ்க்கையில் தான் அனைத்தையும், இழந்து கொண்டிருக்கிறேன் என்ற பயமும் ஏற்பட வாய்ப்பாக இருக்கிறது. ஆகவே, அர்த்தமற்ற வாழ்க்கை மனிதனை வாழ்க்கையிலும், மரணத்திலும் பயத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. உண்மையைப் பேசியதற்காகவும், உண்மையில் வாழ்ந்ததற்காகவும், சோக்கிரட்டீஸ் சமுதாயத்தினால் தண்டிக்கப்பட்;டார். இவரிடம், உனக்கு மரணத்தின் மேல் எந்த அச்சமும் இல்லையா? என்று கேட்டபொழுது, நண்பர்களே, வாழ்க்கையை சுவைத்துவிட்டேன். இப்போது மரணத்தைச் சுவைக்க ஆவலாக இருக்கிறேன். நான் இவ்வுலக வாழ்க்கையை அறிந்துவிட்டேன். இப்போது மரணத்தைப் பற்றி அறிய முற்படுகிறேன். இவரது அர்த்தமுள்ள இவ்வுலக வாழ்க்கையினூடாக உதிர்ந்த பதில், சமுதாயத்தையே ஆட்டம் காண வைத்தது. ஏனெனில், அச் சமுதாயத்தில் அர்த்தமுள்ள வாழ்க்கை அருகி இருந்தது.

எமது திருச்சபை சரித்திரத்திலும், ஆயிரமாயிரம் வேத சாட்சிகள். இவர்கள் மரணத்தைக் கண்டு அஞ்சியவர்கள் அல்லர். ஏனெனில், தங்கள் வாழ்க்கையிலும், இவர்கள் அச்சமின்றி வாழ்ந்தவர்கள். இவர்களுடைய வாழ்க்கையிலே அர்த்தம் இருந்தது. நம்பிக்கை இருந்தது. அதனால்தான் இவர்கள், சாவே உன் கொடுக்கு எங்கே என்று கேட்கும் அளவுக்கு துணிந்தவர்கள் ஆனார்கள். ஏனெனில், இவர்கள் இவ்வுலக வாழ்க்கை யிலும், இறைவனோடு ஒன்றித்திருந்து, அவர் காட்டிய, வாழ்ந்த, சமுதாயத்தில் பயணித்த வர்கள்.

மரணம் இவ்வுலக வாழ்க்கையின் முடிவு தான். ஆனால், புதிய புதிய வாழ்க்கைக்கான ஆரம்பம் என்பதை, கிறிஸ்த்துவின் உயிர்ப்பின் மூலம், உள்ளத்திலே உரப்படுத்தி, சாவுக்கு சாவு மணியடித்த இயேசுவின் பாதையிலே சென்று, முடிவில்லாத வாழ்கைக்குள் தம்மை இணைத்தவர்கள். இவர்கள் காட்டிய விசுவாசத்திலே, நம்பிக்கை யிலேயே நாங்களும் பயணித்துக் கொண்டி ருக்கின்றோம். உலகத்தை தங்கள் வாழ்க்கை யில் முதன்மைப் படுத்தியவர்களுக்கு, மரணத் தோடு தமது வாழ்க்கை முடிந்து விட்டதாக இருக்கலாம். ஆனால், கிறிஸ்தவர்களாகிய நாங்கள், மரணம் முடிவில்லாத வாழ்வுக்கான பாதை என்பதை விசுவசித்து ஏற்றுக் கொள்ளுகின்றோம்.

எம்மோடு இருந்தவர்கள் எம்மைவிட்டு பிரியும்பொழுது, மீளாத்துயரத்தில் நாங்கள் மூழ்கின்றபோதும், கிறிஸ்த்துவின் உயிர்ப்பு கிறிஸ்தவர்களையும் உயிர்ப்பிக்கும் என்ற நம்பிக்கை இவ்வுலகில் அர்த்தமுள்ள புனிதமான வாழ்க்கையில் பயணிக்க உந்து சந்தியாக இருக்கின்றது. என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்து விடுவார், என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களி லிருந்தும் கண்ணீரைத் துடைத்துவிடுவார் (எசாயா. 26-8) என்ற வார்த்தைகள் கலங்கிய, நொருங்கிய பிரிவுகளைத் தாங்கமுடியாது தவிக்கின்ற உங்களுக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும் தருகின்ற வார்த்தைகளாக அமைகின்றன.

புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலே, (5-6) எவ்வாறு இறைவன் சாவை அழித்தார் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றார். மத்தேயு நற்செய்தி யில் பெரும் சுமை சுமந்திருப்பவர்கள் அனைவ ரையும் தன்னிடம் அழைக்கிறார். அவர் களுக்கு தான் இளைப்பாறுதல் தருவதாக இயேசு உறுதியளிக்கின்றார். (மத். 11-28) கிறிஸ்த்து பாவத்தையும், சாவையும் வெற்றி கொண்டு தனது உயிர்ப்பின் ஊடாக எங்களைப் புதிய வாழ்க்கைக்குள் அழைத்துச் செல்கிறார். இதுவே நமது உயர்ந்த விசுவாசம். இயேசுவின் உயிர்ப்பிலே விசுவாசம் கொள்ளும் எவனும் ஒருபோதும் இறப்பதில்லை.

இதனால்தான் கத்தோலிக்க திருச்சபையில் ஆதி தொட்டே, இறந்தோரை நினைவில் கொள்ளவும், அவர்களுக்காகச் செபிக்கவும், இந்நாள் ஏற்படுத்தப்பட்டது. ஆகவே நாங்களும், இவர்களுக்காகச் செபிப்பதோடு, மரணம் யாவருக்கும் உண்டு என்பதை உணர்ந்தவர்களாக, வாழும் நாட்களில் எம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும், புனிதம் நிறைந்ததாகவும், மாற்ற முயற்சிப்போம்.

 
 

முடிவில்லாத வாழ்வைத் தேடி வருகின்றேன்