* இறந்தோர் திருப்பலி முன்னுரை* | ||
எம் வாழ்வின் ஒளியும் வழியுமாயிருந்து, எம்மை வாழ்விக்கும் இறைத்தந்தையின் நாமம் மாட்சியுறுவதாக. இறை இயேசுவில் அன்புமிக்க சகோர சகோதரிகளே! இன்று எம் துயரில் பங்கு கொண்டு எம் உறவுக்காக மன்றாட வந்த அனைவரையும் இயேசுக் கிறிஸ்துவின் இனிய நாமத்தால் அன்போடு வரவேற்கின்றோம். இவ்வுலகில், ஒரு மகனாக, கணவனாக, அப்பாவாக, மருமகனாக மாமாவாக நண்பனாகப் பயணித்த உறவொன்று இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டு, எமது தாயகமாம் விண்ணுலகை நோக்கி பயணித்துள்ளது, அவர் விண்ணுலகம் சென்றாலும், அவரது நினைவுகள், அவரோடு உறவாடியவர்களின் மனதில் என்றும் துளிர் விட்டுக் கொண்டேயிருக்கும், மனிதனாய்ப் பிறந்தால், இன்ப துன்பம் இரண்டும் உண்டு, இன்பத்தை ஏற்கும் மனம் துன்பத்தை விரும்புவதில்லை, பிரிவுகளால் துயருற்று நாம் வீழ்ந்து போவோமேயானால், அடுத்த அடிக்கு நம்மால் நகர முடியாது, ஆகவே இன்பத்தைப் போல் துன்பத்தையும் ஏற்று பயணிப்போம், விண்ணுலகில் எமது மகிழ்ச்சி இரட்டிப்பாகும், அங்கே இறைமகன் இயேசுவின் திருமுகதரிசனம் காணவும், வானதூதர்களின் மாட்சிக் கீதம் கேட்கவும் எமக்குக் பெரும் பாக்கியம் கிடைக்கும். எனவே அந்தப் பாக்கியத்தைப் பெற நம் பாவங்களிலிருந்து விடுதலை பெறுவோம், இறந்து போன சகோதரன் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு நிலைவாழ்வுக்குரிய பரிசை அவர் பெற்றுக்கொள்ளவும், இவரது பிரிவால் துயருறும் உறவுகள் ஆறுதல் பெறவும், தொடரும் கல்வாரிப் பலியில் உறவுக்காக மன்றாட குருவோடு இணைவோம். இறந்தோர் திருப்பலி மன்றாட்டு. 1-- கருணையின் தெய்வமே இறைவா! இறந்துபோன ..... அவர்கள், இவ்வுலகில் வாழ்ந்த போது,அவருக்க்கு நீர் செய்த அனைத்து நன்மைகளுக்காகவும் உமக்கு நன்றி கூறுகிறோம், இவ்வுலகில் அவருக்கு இடமளித்தது போல், விண்ணக வீட்டிலும் அவருக்கு இடமளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 2-- எம் நல்ல மேய்ப்பனே இறைவா! எம் திரு அவையை ஆசீர்வதித்தருளும், திருஅவையில் பணிபுரிந்து இறந்துபோன பணியாளர்கள் யாவரும், வான்வீட்டில் உம் புகழ் பாடி, உமதரசை அலங்கரிக்கும் தூதுவர்களாக திகழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 3--- பாவிகளையும் மன்னிக்கும் தந்தையே இறைவா! இறந்துபோன சகோதரன், இவ்வுலகில் தெரிந்தும் தெரியாமலும் செய்த குற்றங்களை மன்னித்து, அவரது ஆன்மாவை உமது கரங்களில் ஏற்று நிலைவாழ்வுதனை கொடுத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 4-- பாசத்தின் உறைவிடமே இறைவா! இவரது பிரிவால் துயருறும், மனைவி பிள்ளைகள் தாய், சகோதரிகள் உறவுகள் நண்பர்களுக்கு,நீரே அரணாக இருந்து பாதுகாத்து, ஆறுதல் அளித்திடவும்,விபத்துக்குள்ளான பிள்ளைகள் குணம் பெறவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 5-- அமைதியின் இருப்பிடமே இறைவா! இறந்துபோன சகோதரனின் தந்தையின் ஆன்மாவுக்கும், உத்தரிப்பு ஸ்தலத்தில் வேதனையுறும் ஆன்மாக்களுக்கும் அமைதியான இளைப்பாறுதலைக் கொடுத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். |