இரங்கல் திருப்பலி
தூய்மையான உள்ளத்தோர் பேறு பெற்றோர், ஏனெனில் அவர்கள் கடவுளைக்
காண்பர் (மத்: 5:8)
அன்புக்குரியவர்களே!
நாம் அனைவரும் சாகாமலே இருப்பதையே விரும்புகிறோம். அத்தோடு
சாவு, மரணம், இறப்பு எல்லாம் பொதுவாக நாம் கேட்க விரும்பாத
வார்த்தைகள். நாம் காண விரும்பாத நிகழ்வுகளும்கூட. இருந்தாலும்
நாம் விரும்பவில்லை என்பதற்காக அவற்றைத் தடுத்து நிறுத்த
இயலாது. நான் இப்போது உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பது
எந்த அளவுக்கு நிச்சயமோ, அந்த அளவுக்கு ஒருநாள் இறக்கவேண்டும்
என்பதும் நிச்சயமே.
கடவுள்மீதும், மறுவுலக வாழ்விலும் நம்பிக்கை உள்ளவர்கள்,
வாழ்க்கையில் அர்த்தம் இருப்பதை ஏற்றுக்கொள்வார்கள். மாறாக
இந்த நம்பிக்கை இல்லாதவர்கள், மரணத்தோடு எல்லாம் முடிந்து
போகிறது என்று நினைப்பவர்களுக்கு சேக்ஸ்பியர் சொல்வதுபோல,
ஓர் அர்த்தம் இல்லாத வெறும் சப்தம் நிறைந்த ஒரு முட்டாள்
சொன்ன கதையாகத்தான் இந்த வாழ்க்கை தென்படும். வாழப்போவது
கொஞ்சநாள்தான். மரணம் நிச்சயம். எனவே அதற்குள்ளே பல நல்ல
காரியங்களையும், சாதனைகளையும் செய்ய வேண்டும் என்று முடிவு
செய்வது நல்லது. அப்போதுதான் வாழ்க்கை அர்த்தம் பெறுகிறது.
நம்மில் பலருக்கு நம்மைச் சுற்றி யாராவது இறக்க
நேரிடும்போது மட்டும்தான் நானும் ஒருநாள் இறக்க நேரிடுமோ,
என்ற எண்ணம் தோன்றுகிறது.
பொதுவாக மரணம் என்ற ஒன்றை மறந்து இந்த உலகத்தில் எப்போதும்
இருக்கப்போகிறோம் என்பதுபோல், அடுத்தவர்களின் மனங்களைக் காயப்படுத்தி
ஏமாற்றி அநீதியாக வாழப்பார்க்கிறோம். அப்படியென்றால் இன்றும்
வாழ்வு - மரணம் என்ற மறைபொருளை புரிந்துகொள்ளவில்லை என்பதுதான்
பொருள். இவ்வுலகில் நாம் வாழ்வது ஒருமுறை. எப்படி
வாழ்ந்தாலும் வாழ்க்கை என்று இல்லாமல், இப்படி வாழ்வதுதான்
வாழ்க்கை என்று ஒருசில வரையறைகளோடு வகையாக முறையாக வாழவேண்டும்.
மரணம் என்று ஒன்று எனக்கும் உண்டு என்பதைத்தவிர,
வேறெதுவும் தெரியாத மரணத்தைப் பற்றி பயப்படுவதிலோ, கவலைப்படுவதிலோ
நேரத்தைச் செலவழிக்காமல் நம் கையில் ஒப்படைக்கப்பட்ட
வாழ்க்கையை சரியாக வாழ முயற்சிப்போம். கடவுளில் விசுவாசம்
கொள்பவருக்கு மரணம் ஒரு நிறைவையும், பேரின்ப வாழ்வுக்கு ஒரு
ஆரம்பத்தையும் சுட்டிக்காட்டுகிறது.
அந்த மரணம் அர்த்தமுள்ளதாக வேண்டுமானால், அதற்கு முன்னதாக
உள்ள இந்த வாழ்வு முறைப்படி சரியான வகையில் வாழப்பட
வேண்டும். சிலுவையில் மரித்தயேசு அதைத்தான் நமக்குச்
சொல்கிறார். அவரது சிலுவை மரணம் எப்படி முக்கியத்துவம்
பெறுகின்றது என்று பார்த்தால். அவர் ஏன் இறந்தார் என்பதில்தான்
அடங்கியிருக்கிறது. கிறிஸ்துவின் வாழ்வே அவரது மரணத்தை அர்த்தமுள்ளதாக்குகிறது.
எனவே வாழும்போது கடவுள் நம்மோடு இருக்கும் வகையில்
வாழ்வோம். இறக்கும்போது நாம் கடவுளோடு இருக்கும் வகையில்
இறப்போம்.
(பெயர்) அவர்கள் திருமுழுக்கிலே திருத்ததைலம் பூசி, அபிNஉகம்
பண்ணப்பட்டு விசுவாசத்திலே உறுதியாக இருந்து, வாழ்வும்,
வழியும், உண்மையும், ஒளியுமான இறைவனை நம்பி வாழ்ந்தார்.
எனவே இறைவன் இவரை ஒளியும், அமைதியும் நிறைந்த விண்ணகமாகிய
தாய்நாட்டில் சேர்த்தருள்வார் என்பது எமது உறுதியான நம்பிக்கை.
விசுவாசிகள் மன்றாட்டு
1) வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நிலைவாழ்வளிக்கும் இறைவா!
விசுவாசத்துடனும் நம்பிக்கையுடனும் நாங்கள் உண்டு வாழ வானக
அப்பத்தை எமக்களித்தீர். நிலையான வாழ்வு பெறும் பாதையில்
இறைமக்களை அரவணைத்துச் செல்லும் ஆற்றலை திருச்சபையின் தலைவர்களுக்குத்
தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
2) சுமை சுமந்து சோர்ந்திருப்போரே என்னிடம் வாருங்கள் - உங்களை
நான் இளைப்பாற்றுவேன் என்று ஆறுதல் மொழி கூறிய இறைவா!
உம்திருமகன் துயரத்தில் ஆழ்ந்திருந்தபோது அவருக்கு ஆறுதலளிக்க
வானதூதரை அனுப்பினீர். அதேபோல் இறந்துபோன (பெயர்) இவரின்
துயரத்தில் ஆழ்ந்து நிற்கும் அவர் மனைவி, பிள்ளைகள்,
பெற்றோர், சகோதர, சகோதரிகள், உற்றார் உறவினருக்கும், மருத்துவமனைகளில்
நோயினால், முதுமையால், தனிமையில் மரணத்தோடு போராடிக்
கொண்டிருக்கும் எங்கள் மக்களுக்கும் அவர்கள் அச்சத்தை அகற்றும்
வானதூதரை அனுப்பி, நம்பிக்கையில் அவர்கள் இதயத்தை நிரப்பியருள
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3) இறந்தோரை உயிர்ப்பிக்கும் இறைவா!
நீர் இயேசுவை மீண்டும் உயிர்த்தெழச் செய்ததுபோல இறந்த
விசுவாசிகள், யாரும் நினையாத விசுவாசிகள் அனைவரையும் உயிர்த்தெழச்
செய்து உமது விண்ணக மகிமையில் சேர்த்தருள வேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகின்றோம்.
4) நிலைவாழ்வை வழங்கும் இறைவா!
இன்றைய நாள் திருப்பலியிலே நாங்கள் சிறப்பாக
நினைவுகூர்ந்து ஜெபிக்கின்ற இறந்து போன எங்கள் பெற்றோர்கள்,
சகோதரர், சகோதரிகள், உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரையும்
உமது புனிதர்களின் தோழமையில் இணைத்து நித்திய மகிமையிலே பங்களித்தருள
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5) வாழ்விழந்தோரை ஆதரிக்கும் இறைவா!
எங்களின் உதவியைத் தேடும் ஏழைகள், நோயாளிகள், அனாதைகள்
கைவிடப்பட்டோர், நிம்மதி இழந்தோர், முதியோர் அனைவருக்கும்
கைமாறு எதிர்பாராது நாம் அனைவரும் உதவி புரிய நல்மனத்தைத்
தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம.
எமக்காக தன்னுயிரையே தந்த இயேசுவே, மரித்த உம் அடியான் ஏபனின்
ஆன்ம சாந்திக்காக இங்கு குழுமிநின்று செபிக்கின்றோம். அவரை
உம்சந்நிதியில் சேர்த்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
உன்னைப்போல் உன் அயலானையும் நேசி என்று எமக்கு போதித்த அன்பின்
இறைவா, நாங்கள் உமது போதனைக்கேற்ப எல்லோரையும் அன்புசெய்து
அவர்களின் திறமைகளைப் புகழவும், தவறுகளைச் சுட்டிக்காட்டி
அவர்கள் திருந்த வழிசமைக்கவும் எமக்கு மனவலிமையைத் தந்தருள
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
நானே வானின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு என பகன்ற இயேசுநாதா,
இவ்வுலகை விட்டு மறைந்த சகலரையும் இன்று
நினைவுகூர்கின்றோம். அவர்கள் யாவரையும் உமது சமூகத்தில்
சேர்த்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
பிறருக்காக தம் வாழ்வை அர்ப்பணித்த அன்பின் இறைவா, எமது
பாப்பரசருக்கும் துறவிகள் யாவருக்கும் உடல் நலத்தையும் உளதிறனையும்
அளித்து அவர்களை உமது நிழலில் காத்தருளு வேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகின்றோம்.
அமைதியின் பேரொளியான இயேசுவே, உலகின் பலபாகங்களிலும் விசேடமாக
எமது நாட்டில் கொரூரமான சூழ்நிலைகளில் சிக்கித்தவித்து பரிதவிக்கும்
மக்கள் யாவரும் இறைஅமைதி நிறைந்து வாழ வரமருள வேண்டுமென்று
இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
|
|