Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறந்தோருக்காக வேண்டுதல்
  இறந்தோர் திருப்பலி முன்னுரை 3  



"உயிர்ப்பும் உயிரும் நானே, என்னில் நம்பிக்கை கொள்பவன், இறப்பினும் வாழ்வான்"
இறை இயேசுவில் அன்புமிக்க சகோதரர்களே! எம்மோடு அன்பாக வாழ்ந்த உறவொன்று, தனது இவ்வுலக வாழ்வின் பயணத்தை முடித்துக் கொண்டு, விண்ணுலகம் நோக்கிச் செல்கின்றது. இந்த உறவை வழியனுப்பி வைக்க நாமெல்லாம், பெருந்துயரோடு ஒன்று கூடி நிற்கின்றோம்.

பிறப்பும் இறப்பும் இறைவனின் சித்தமே. அவரது சித்தப்படி பிறந்த நாம்,என்றோ ஒரு நாள், எந்நிலையிலிருந்தாலும் சென்றே ஆகவேண்டும் என்பது உண்மையே. நல்லவனுக்கு கூடிய காலம், கெட்டவனுக்கு குறுகிய காலம் என்பது இறைவனின் எண்ணம் அல்ல. அவர் எப்ப விரும்புகிறாரோ, விரும்புகிறவரை அழைத்தே தீருவார். அதனால் தான் நாம் எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டுமென்று சொல்லப்படுகிறது. இவ்வுலகில் வாழும் வரை, நாம் நல் வாழ்வு வாழ அழைக்கப்பட்டுள்ளோம். இந்த நல்வாழ்வால், நமக்கு நிலை வாழ்வு உண்டு என்பதை உணர்ந்து கொள்வோமாக. தன் மரணத்துக்கு முன், திருந்திய உள்ளத்தோடு, ஆண்டவர் இயேசுவிடம், தன்னை நினைவுகூரும்படி கேட்டுக் கொண்ட நல்ல கள்வனுக்கு, அன்றே வான் வீட்டில் இடம் கிடைத்தது. இதை உணர்ந்தவர்களாக , வாழும் வரை அனைவரையும் அன்பு செய்து, பாவநிலையற்று திருந்திய உள்ளத்தோராய் வாழ்வோம்.

இன்று இவ்வுலக வாழ்வின் பயணத்தை முடித்துக் கொண்ட. ...... அடியாரின் ஆன்மா நிலைவாழ்வு பெற வேண்டி அவருக்காக மன்றாடுவோம்.






இறந்தோர் திருப்பலி மன்றாட்டு

1--அன்பு நிறை தந்தையே இறைவா!
மண்ணுலக வாழ்வை முடித்துக்கொண்டு விண்ணுலகம் நோக்கிச் செல்கின்ற. ............. என்னும் அடியாரின் ஆன்மாவை, உமது கையில் ஏற்று நிலைவாழ்வு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2-- மன்னித்து மீட்பளிக்கும் தந்தையே!
வலது பக்கக் கள்வனின் பாவங்களை மன்னித்து, அவனுக்கு வான் வீட்டில் இடம் கொடுத்தது போல், இறந்த இந்த அடியார், இவ்வுலகில் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களை மன்னித்து, உமது வானக வீட்டில் இடம் கொடுக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3--- இரக்கம் நிறைந்த தந்தையே!
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினர், நண்பர்கள் உறவுகளுக்கு ஆறுதல் அளித்து, அவர்களுக்கு துணையாயிருக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4--வாழ்வை வழங்கும் வள்ளலே இறைவா!
இறந்த உம் அடியார் ஒரு பாசமான உறவாக வாழ்ந்து, (அன்னையாக, தந்தையாக, சகோதரியாக, சகோதரனாக, நண்பனாக, நண்பியாக) எம்மை மகிழ்வித்த தருணத்திற்காக உமக்கு நன்றி கூறும் இவ்வேளையில், இறந்த உம் அடியாரும் உம்மோடு மகிழ்ந்திருக்க உம்மருகில் அவரை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..

5--- உயிர்ப்பும் உயிருமான இறைவா!
ஏழை எளியோரை அன்பு செய்து, இல்லாதோரோடு பகிர்ந்து வாழ்ந்து, இறுதி நாளில் நீர் வருகின்ற வேளையில், உம் வலப்புறம் இருக்கும் தகுதியை நாம் பெற, எம்மோடு கூட இருந்து எம்மை வழி நடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.








ரஞ்சிதம் யேம்ஸ் - Paris





 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா