இறந்தோர்க்கான திருப்பலி இறையேசுவில் அன்புக்குரியவர்களே! சாவு என்ற சொல் நமக்கு அச்சத்தைத் தருகிறது. நான் யார்? நான் ஏன் பிறந்தேன்? நான் எங்கே செல்கின்றேன்? எனது சாவுக்குப் பொருள் என்ன? எனது சாவுக்குப் பின் உடல் எங்கே போகிறது? எமக்கு என்ன நடக்கிறது? இத்தனை கேள்விகளும் நம்முள் எமுந்து கொண்டுதான் இருக்கிறது, ஆனால் நம் அறிவுக்கு பதில் எட்டாதவை மனிதனின் வாழ்க்கைப் பயணத்தை மரணம் முடித்து வைக்கின்றது. மரணம்...வல்லமை கொண்டது. நமது மரணம் உன்னதமாக அமைய வேண்டுமானால், நாம் மரணத்தின்போது கொண்டு செல்லவிரும்பும் நல்ல சம்பாவனைகளை வாழும்போதே சம்பாதித்துக் கொள்ளவேண்டும். உயிரிழப்பு என்பது ஈடு செய்ய முடியாத ஒன்று. ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இருப்பினும் கடவுளின் திருவுளம் என ஏற்றுக் கொள்ளப்படவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறோம். இறந்துபோன அடியாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, அவரை வானக வீட்டிற்கு வழியனுப்பும் நிகழ்வாக நடைபெறுகின்ற இத்திருப்பலியில், இறந்துபோன நண்பருக்கு இறைவன் அருகில் குளிர்ச்சியான இளைப்பாற்றி கிடைக்க, அவரின் ஆத்மா சாந்தியடைய வரம் பெறட்டும் என nஐபிப்போம். விசுவாசிகள் மன்றாட்டு 1) நீதிமான்கள் ஆன்மாவை அருகில் வைத்துக் கொள்ளும் இறைவா! மரித்த எங்கள் நண்பரின் ஆன்மா உமது வானக வீட்டில் நிரந்தரமான சாந்தியடைய அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம் 2) எரியும் நெருப்பினின்று எங்களைப் பாதுகாக்கும் இறைவா! இறந்துபோன எங்கள் சகோதரனின் பாவத்திற்குரிய தண்டனைகளினின்று பாதுகாத்து உமதருகில் அவரை அமரச் செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம் 3) மன்னிப்பு அருளும் இறைவா! இறந்துபோன அடியாருக்கும் எங்களை விட்டுப்பிரிந்து போன எங்கள் நண்பபர்கள், உற்றார், உறவினர், யாரும் நினையாத ஆன்மாக்களுக்கும், ஒளிமிகுந்த வாழ்வைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம் 4) இறந்துபோன லாசருக்காக கண்ணீர் சிந்திய இறைவா! லாசரின் சகோதரிகளுக்கு ஆறுதல் கூறியது போல் இறந்துபோன நண்பரின் இழப்பினால் வருந்தும் உற்றார் உறவினர்களுக்கும் நீரே ஆறுதல் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம் |