Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு வாசகம்

                               Year B  
                                                           பொதுக்காலம் 23ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்     திருச்சிலுவையின் மகிமை விழா
=================================================================================
கொள்ளிவாய்ப் பாம்பைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்.

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 21: 4-9

அந்நாள்களில் ஏதோம் நாட்டைச் சுற்றிப் போகும்படி ஓர் என்ற மலையிலிருந்து இஸ்ரயேல் மக்கள் "செங்கடல் சாலை" வழியாகப் பயணப்பட்டனர்; அவ்வழியை முன்னிட்டு மக்கள் பொறுமை இழந்தனர். மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசினர்: "இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது" என்றனர்.

உடனே ஆண்டவர் கொள்ளிவாய்ப் பாம்புகளை மக்களிடையே அனுப்பினார்; அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர். அப்போது மக்கள் மோசேயிடம் வந்து, "நாங்கள் பாவம் செய்துள்ளோம்; நாங்கள் ஆண்டவருக்கும் உமக்கும் எதிராகப் பேசியுள்ளோம்; அவர் இந்தப் பாம்புகளை அகற்றிவிடும்படி நீர் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளும்" என்றனர்.

அவ்வாறே மோசே மக்களுக்காக மன்றாடினார். அப்போது ஆண்டவர் மோசேயிடம், "கொள்ளிவாய்ப் பாம்பு ஒன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்" என்றார்.

அவ்வாறே மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 78: 1-2. 34-35. 36-37. 38 (பல்லவி: 7b)
=================================================================================
பல்லவி: இறைவனின் செயல்களை மறவாதிருங்கள்.

1 என் மக்களே, என் அறிவுரைக்குச் செவிசாயுங்கள்; என் வாய்மொழிகளுக்குச் செவிகொடுங்கள். 2 நீதிமொழிகள் மூலம் நான் பேசுவேன்; முற்காலத்து மறைச் செய்திகளை எடுத்துரைப்பேன். பல்லவி

34 அவர்களை அவர் கொன்றபோது அவரைத் தேடினர்; மனம் மாறி இறைவனைக் கருத்தாய் நாடினர். 35 கடவுள் தங்கள் கற்பாறை என்பதையும் உன்னதரான இறைவன் தங்கள் மீட்பர் என்பதையும் அவர்கள் நினைவில் கொண்டனர். பல்லவி

36 ஆயினும், அவர்கள் உதட்டளவிலேயே அவரைப் புகழ்ந்தார்கள்; தங்கள் நாவினால் அவரிடம் பொய் சொன்னார்கள். 37 அவர்கள் இதயம் அவரைப் பற்றிக்கொள்வதில் உறுதியாய் இல்லை; அவரது உடன்படிக்கையில் அவர்கள் நிலைத்து நிற்கவில்லை. பல்லவி

38 அவரோ இரக்கம் கொண்டவராய், அவர்கள் குற்றத்தை மன்னித்தார்; அவர்களை அழித்து விடவில்லை, பலமுறை தம் கோபத்தை அடக்கிக்கொண்டார். தம் சினத்தையெல்லாம் அவர்களுக்கு எதிராய் மூட்டவில்லை. பல்லவி



இரண்டாம் வாசகம்

இயேசு தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தினார்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 6-11

சகோதரர் சகோதரிகளே, கடவுள் வடிவில் விளங்கிய இயேசு, கடவுளுக்கு இணையாய் இருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.

ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக `இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவே, உம்மை ஆராதித்து வாழ்த்துகின்றோம்; ஏனெனில், உம் சிலுவையாலே உலகை மீட்டீரே. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மானிட மகன் உயர்த்தப்பட வேண்டும்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-17

அக்காலத்தில் இயேசு நிக்கதேமிடம் கூறியது: "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை. பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்."

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல், உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்?

ஊரில் ஒரு பெரியவர் இருந்தார். அவருக்கு ஒரே ஒரு மகன். அவனும் வேலை விசயமாக நகரத்தில் போய் குடியேறி, அங்கேயே திருமணம் முடித்து, தன்னுடைய மனைவி பிள்ளைகளோடு வாழ்ந்து வந்தான். இதற்கிடையில் ஊரில் இருந்த பெரியவர் நகரத்திலிருக்கும் தன்னுடைய மகனுடைய வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவார். எப்போதெல்லாம் அவர் தன்னுடைய மகனுடைய வீட்டிற்குப் போவாரோ, அப்போதெல்லாம் அவருடைய மகனது வீடே நடுங்கும். காரணம் அவர் எல்லாவற்றையும் குறை கூறுவார்.

ஒருநாள் இரவு கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்த அந்த பெரியவர், காலையில் பல் துலக்கப் போனார். அந்த இடத்தில் ஒரே நாற்றம். அதன்பின்பு குளிக்கப் போனார். அங்கேயும் ஒரே நாற்றம், ஓடிவந்து விட்டார். மருமகளைத் தேடி சமையலறைக்குப் போனார். அங்கும் அதே நாற்றம். இதனால் பொறுமையிழந்து அந்தப் பெரியவர் கத்தத் தொடங்கினார். இவ்வாறு கத்தத் தொடங்கியவரின் வாயைப் பொத்திய, அந்த வீட்டிலிருந்த பேரன் அவரை வீட்டிலுள்ளே இருந்த நிலைக்கண்ணாடி முன்பாகக் கொண்டுபோய் நிறுத்தினான்.

அவர் நிலைக்கண்ணாடி முன்பாக நின்றபோதுதான் அவருக்குத் தெரிந்தது, அவருடைய மீசையில் இரவு வெண்ணெய் தடவப்பட்டது என்பதும் அதிலிருந்துதான் நாற்றம் வருகிறது என்பதும். (மீசை நன்றாக முறுக்கேறியது போன்று இருக்க சிலர் அதில் வெண்ணெய் தடவுவதுண்டு) இந்த உண்மை தெரிய வந்ததும் அவர் எதுவும் பேசாமல் அமைதியானார்.

நிகழ்வில் வரும் அந்தப் பெரியவரைப் போன்றுதான் பலர் தங்களிடத்தில் தவறை வைத்துக்கொண்டு, அடுத்தவரைக் குறை கூறுவர். இப்படிப்பட்டவர்களுக்கு சாட்டையடி போன்று இருப்பதுதான் இன்றைய நற்செய்தி வாசகம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களைப் பார்த்து, "உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல், உங்கள் சகோதர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்? வெளிவேடக்காரரே! முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுத்து எறியுங்கள். அப்போது உங்கள் சகோதர அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய் கண் தெரியும்" என்கின்றார்.

இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளில் இரண்டு உண்மைகள் அடங்கியிருக்கின்றன. அவை என்ன என்று இப்போது பார்ப்போம்.

அடுத்தவரைக் குற்றவாளி, அடுத்தவரிடம்தான் குற்றம் இருக்கின்றது என்று சொல்லும் நபர், தன்னிடத்தில் இருக்கும் தவறை அறிந்திருக்கின்றாரா?. இதுதான் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளிலிருந்து வெளிப்படும் முதலாவது உண்மை. இன்றைக்குப் பலர் அடுத்தவரிடம் இருக்கும் தவற்றைத்தான் பெரிதாகப் பேசுகிறார்களே ஒழிய, தங்களிடம் இருக்கின்ற தவற்றை அவர்கள் கண்டுகொள்வதே இல்லை. இதுதான் மிகவும் நகைப்புக்குரிய விசயமாக இருக்கின்றது.

அடுத்ததாக அடுத்தவரைக் குற்றவாளி என தீர்ப்பிடுவதற்கு நமக்கு ஏதாவது உரிமை இருக்கின்றதா? என்பதுதான் இயேசு எழுப்பக்கூடிய இரண்டாவது கேள்வி. இந்த உலகத்தில் உள்ள அனைத்தும், அனைவரும் ஆண்டவருடைய கட்டுப்பாட்டில் உள்ளவை, உள்ளவர்கள். அப்படியானால் எல்லாருக்கும் தீர்ப்பளிக்கின்ற அதிகாரம் ஆண்டவர் ஒருவருக்கு மட்டுமே உண்டு. பலர் இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல், பிறருக்குத் தீர்ப்பளிக்க தங்களுக்கு அதிகாரம் உண்டு என்பதுபோல் அடுத்தவரை எப்படியெல்லாமோ தீர்ப்பிடுகிறார்கள். இது கடவுளையே இழிவுபடுத்துவது தானே அன்றி, வேறொன்றும் இல்லை.

இறுதித் தீர்ப்பு நாளில் ஆண்டவராகிய கடவுள் ஒவ்வொருவருக்கும் அவரவருடைய செயல்களுக்கு ஏற்ப தீர்ப்பு வழங்குவார். அப்படி இருக்கும்போது நாம் ஒருவர் மற்றவரைப் பற்றித் தீர்ப்பிட்டுக் கொண்டிருந்தால் அதை என்னவென்று சொல்வது?. தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் கூறுவார், "எல்லாருமே பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்து போயினர்" என்று (3:23). ஆம், நாம் அனைவருமே பாவம் செய்து, கடவுள் தந்த மேன்மையை இழந்திருக்கும்போது நான் குற்றவாளியில்லை, அடுத்தவர்தான் குற்றவாளி என்று தீர்ப்பிடுவது என்பது எந்தவிதத்தில் நியாயம். ஆகையால், நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒருவர் மற்றவரை நிறைகுறையோடு ஏற்றுக்கொள்வதே நலமான ஒரு விசயமாகும்.

ஆகவே, அடுத்தவரைக் குற்றவாளித் தீர்ப்பிடுவதற்கு முன், நாமும் ஒருவிதத்தில் குற்றவாளி என்பதை உணர்வோம். ஒருவர் மற்றவரை நிறைகுறையோடு ஏற்றுக் கொள்வோம். அதன் வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

திருச்சிலுவை மகிமை விழா

புண்ணிய வாழ்வு வாழ்ந்து வந்த துறவி ஒருநாள் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் அவர் இறந்து மேலுலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார். மேலுலகில் அவர் இறுதித் தீர்ப்புக்காக கடவுளுக்கு முன்பாக நிறுத்தப்பட்டார். அவருக்குப் பக்கத்தில் சாத்தான் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு, அதிலிருந்து துறவி செய்த தவறுககளை (?) அடுக்கிக்கொண்டே போனது.

தான் செய்யாத தவறுகளையெல்லாம்கூட சாத்தான் அடுக்கிக்கொண்டே போனதால், துறவி அதிர்ச்சியடைந்து நின்றார். சாத்தான் எல்லாவற்றையும் வாசித்து முடிக்கும்வரை துறவி பொறுமையாக இருந்தார். வாசித்து முடித்ததும் துறவி சாத்தானைப் பார்த்து, "நீ இன்னும் ஒன்றை வாசிக்க மறுத்துவிட்டாய்" என்றார். சாத்தான், "அது என்ன?" என்று கேட்டு நின்றது.

அதற்கு துறவி, "என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நான் செய்த பாவங்கள் அனைத்தையும் சிலுவையில் சிந்திய இரத்ததினால் கழுவிப் போக்கிவிட்டார். இதுதான் நீ உன்னுடைய புத்தகத்தில் எழுதாத ஒன்று" என்றார். இதைக் கேட்டதும் சாத்தான் ஒரு வார்த்தையும் பேசாமல் அமைதியானது. ஆம், நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் ஆண்டவர் இயேசு, தான் சிலுவையில் சிந்திய இரத்ததினால் கழுவிப் போக்கிவிட்டார். இப்போது நாம் துயவர்களாக இருக்கின்றோம்.

இன்று நாம் திருச்சிலுவையின் மகிமைப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். சிலுவை யூதர்களுக்கு தடைக்கல்லாகவும், புறவினத்தாருக்கு மடமையாகவும் இருந்தது ( 1 கொரி 1:23) ஆனால் ஆண்டவர் இயேசு தன்னுடைய பாடுகள் மற்றும் உயிர்ப்பின் வழியாக அதனை வெற்றியின் சின்னமாக மாற்றினார். எனவே சிலுவை என்பது அவமானத்தின் சின்னம் கிடையாது, அது வெற்றியின் சின்னமாகும்.

இந்த வேளையில் திருச்சிலுவை மகிமை விழா எப்படி வந்தது, இவ்விழா நமக்கு உண்மை என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

கிபி. 312 ஆம் ஆண்டில் உரோமைப் பேரரசை யார் ஆட்சி செய்வது என்ற குழப்பம் கான்ஸ்டாண்டிநோபுலுக்கும், மாக்ஜெஸ்டியுசுக்கும் இடையே ஏற்பட்டது. இந்த நேரத்தில் கான்ஸ்டாண்டிநோபுள் கிறிஸ்தவர்களின் ஜெப உதவியை நாடினான். கிறிஸ்தவர்களும் அவனுக்காக ஜெபித்தார்கள். அப்போது ஒருநாள் வானத்தில் சிலுவை அடையாளம் தோன்றி கான்ஸ்டாண்டிநோபுள் வெற்றிபெறுவான் என்று சொல்லியது. அதைபோன்றே கான்ஸ்டாண்டிநோபுள் வெற்றிபெற்று அரசனானான். அன்றே அவன் கிறிஸ்தவ மதத்தை அரசாங்க மதமாக அறிவித்தான். சிலுவை கான்ஸ்டாண்டிநோபுலுக்கு வெற்றியைக் கொணர்ந்தது.

அதன்பிறகு கி.பி. 326 ஆம் ஆண்டு ஹெலினா என்ற புனிதர் எருசலேம் நகர் சென்றபோது அங்கே இயேசு அறையப்பட்ட சிலுவையை கண்டுபிடித்தார். அதைத் திருச்சிலுவையாக போற்றிப் பெருமைப்படுத்தினார். மக்களுக்கும் அதற்கு வணக்கமும், மரியாதையும் செலுத்தத் தொடங்கினார்கள். ஆனால் கி.பி.614 ஆண்டு பெர்சிய மன்னனாகிய சொஸ்ரோஸ் என்பவன் இந்த திருச்சிலுவையை கைப்பற்றிக்கொண்டு சென்று ஈரானில் வைத்தான். இதனை ஹெராகிளியஸ் என்று மன்னன் 629 ஆம் ஆண்டு மீட்டு, கால்நடையாகவே அதனை எருசலேமில் கொண்டுவந்து சேர்த்தான். அவன் திருச்சிலுவையைக் கொண்டுவந்த நாள் செப்டம்பர் 14. அதன் நினைவாகத் தான் திருச்சிலுவை மகிமை விழாவை உலகம் முழுவதும் செப்டம்பர் 14 ஆம் தேதி கொண்டாடுக்கின்றோம்.

இப்போது இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம். தொடக்கத்தில் சொன்னது போல சிலுவை அவமானத்தின் சின்னம் கிடையாது. வெற்றியின் சின்னம். உரோமையர்கள் நாட்டைக் காட்டிக்கொடுத்தவர்களுக்கும், திருடர்களுக்கும் சிலுவை மரத்தைத் தந்தார்கள். ஆனால் ஆண்டவர் இயேசுவோ ஒரு தவறும் செய்யாதவர். அப்படியிருந்தும் அவருக்கு அந்த சிலுவை மரணம் கொடுக்கப்பட்டது. இயேசு தனக்குக் கொடுக்கப்பட்ட சிலுவையை சிலுவை மரணத்தை - வெற்றியாக மாற்றினார். ஆகவே இந்த உண்மையை நாம் உணர்ந்துகொண்டு வாழவேண்டும்.

அடுத்ததாக இயேசுவின் சீடர்களாகிய நாம் ஒவ்வொருவரும், இறையாட்சிப் பணியாளர்களும் சிலுவையை துணிவோடு சுமக்க முன்வரவேண்டும். நற்செய்தியில் இயேசு கூறுவார், "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தன் சிலுவையை நாள்தோறும் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" என்று. ( லூக் 9:23). ஆம், இயேசுவின் சீடர்களாகிய நாம் ஒவ்வொரும் சிலுவையை சாபமாக அல்ல, மாறாக வரமாகத் தூக்கிக்கொண்டு அவரைப் பின்பற்றவேண்டும். அப்போதுதான் அவருடைய உண்மையான சீடர்களாக இருக்க முடியும்.

நிறைவாக அன்றாடம் நாம் பயன்படுத்தும் சிலுவை அடையாளத்தை பொருள் உணர்ந்ந்து பயன்படுத்த வேண்டும். காரணம் சிலுவை வாழ்வைத் தரக்கூடியது. இஸ்ரேயல் மக்கள் பாம்பினால் கடிபட்டு, இறந்தபோது அவர்கள் வெண்கலத்தால் ஆனா பாம்பைப் பார்த்தார்கள். வாழ்வைப் பெற்றார்கள். அதுபோன்று நாமும் வாழ்வில் துன்பம், துயரம் இவற்றையெல்லாம் சந்திக்கின்றபோது சிலுவையப் பார்த்தோமென்றால் வாழ்வைப் பெறுவோம் என்பது உறுதி.

எனவே சிலுவை அடையாளத்தை பொருள் உணர்ந்து பயன்படுத்துவோம், சிலுவையின் உண்மைப் பொருளை உணர்வோம். சிலுவையின் பாதையில் நடப்போம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.
  Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
திருச்சிலுவை மகிமை

அல்லேலூயா! அல்லேலுயா!

கிறிஸ்துவே உம்மை ஆராதித்து வாழ்த்துகின்றோம்.

ஏனெனில் உம் சிலுவையால் உலகை மீட்டீரே!

கடவுள் வடிவில் விளங்கிய இயேசு மனிதனாக அடிமை வடிவில் தம்மைத் தாழ்த்தி சிலுவைச் சாவை ஏற்குமளவிற்கு கீழ்ப்படிந்ததனால் கடவுள் அவரை எப்பெயருக்கும் மேலாக உயர்த்தினார். அவமானத்தின் அடையாளமாகவும் தண்டனையாகவும் கருதப்பட்ட சிலுவை இயேசுவின் பாடுகளினால் திருச்சிலுவையாக மாற்றப்பட்டது. மகிமைக்குரிய பாடுகளாக சிலுவைப்பாடுகள் மானுட மக்களுக்கு மீட்பை உறுதி செய்தது. கிறிஸ்துவின் சீடர்களாக விரும்பும் எவரும் தன்னையே மறுத்து தன் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின் தொடரட்டும் என்று இயேசு கற்பிக்கிறார். கடவுளின் விருப்பத்தை நிறைவு செய்வது கடினமாக இருந்தாலும் அவரின் அருள் துணையால் அதை ஏற்கின்ற போது துயரமே மகிழ்ச்சியாக, சிலுவைப் பாடுகளே மகிமையாக உணரப்படுகிறது. நாமும் சிலுவைவழி மகிமை காண்போமா?




திருச்சிலுவை மகிமைப் பெருவிழா

இன்று திருச்சபையானது திருச்சிலுவை மகிமைப் பெருவிழாவைக் கொண்டாடுகிறது. ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இவ்விழா "திருச்சிலுவையின் மகிமை, "சிலுவையின் வெற்றி, "பெருமைமிகு திருச்சிலுவை நாள்", "உயிர்வழங்கும் அரிய சிலுவை உயர்த்தப்பட்ட நாள் என பல்வேறு சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறது.

இப்பெருவிழாவைக் கொண்டாடும் வேளையிலே, இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்க்கும்முன் இதனுடைய வரலாற்றுப் பின்புலத்தை சற்று ஆய்ந்து பார்ப்போம்.

நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த கான்ஸ்டன்டைன் என்ற உரோமைப் பேரரசரின் அன்னை, புனித ஹெலெனா அவர்கள், ஒருமுறை புனித பூமிக்கு திருப்பயணம் மேற்கொண்டபோது அங்கே ஒரு குறிப்பிட்ட இடத்தில் பூமியை அகழ்வதற்கு அவர்கள் தூண்டப்பட்டார். அவ்விடத்தை அகழ்ந்தபோது, மூன்று சிலுவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அம்மூன்று சிலுவைகளில் இயேசு அறையப்பட்டச் சிலுவை எது என்பதைக் கண்டுபிடிக்க, புனித ஹெலெனா ஒரு சோதனையை மேற்கொண்டார். அதாவது மரணப் படுக்கையில் போராடிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை அவர் அவ்விடத்திற்குக் கொணர்ந்தார். அப்பெண், முதல் இரு சிலுவைகளைத் தொட்டபோது, அவரிடம் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. மாறாக மூன்றாவது சிலுவையை அவர் தொட்டதும் குணமடைந்தார். எனவே, அச்சிலுவையே இயேசு அறையப்பட்டச் சிலுவை என புனித ஹெலெனா அறிந்துகொண்டார்.

அச்சிலுவையைக் கண்டுபிடித்த இடத்தில், புனித கல்லறைக் கோவில் நிறுவப்பட்டது. இக்கோவில், 335ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு, செப்டம்பர் 13, 14 ஆகியத் தேதிகளில் அர்ச்சிக்கப்பட்டது. இந்த அர்ச்சிப்பின் நினைவாகத்தான் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 14ம் தேதியன்று திருச்சிலுவை உயர்த்தப்பட்டத் திருநாள் என்று திருச்சபை கொண்டாடப்படுகிறது. இயேசு அறையப்பட்ட சிலுவையின் ஒரு பெரிய துண்டு புனித கல்லறைக் கோவிலில் பாதுக்காக்கப்பட்டு வருகின்றது.

614 ஆம் ஆண்டு பெர்சிய நாட்டு அரசன் மெசபத்தோமியாவின்மீது (புனித நாடுகள் இருக்கும் பகுதி) படையெடுத்துக் சென்று அங்கிருந்த குருக்கள், கன்னியர்கள் கிறிஸ்தவர்கள் என்று பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றொழித்து, அங்கே இருந்த திருச்சிலுவையை எடுத்துக்கொண்டு போய்விட்டான். அதை 627 ஆம் ஆண்டு ஹெராக்ளியஸ் என்ற அரசன்தான் மீட்டுக்கொண்டு வந்து மீண்டும் அதே இடத்தில் நிறுவினான். அன்றிலிருந்து மகிமை பொருந்திய திருச்சிலுவை அதே இடத்தில் இருந்து அனைவருக்கும் அருள்பாலித்துக்கொண்டிருக்கிறது.

தூய ஆண்ட்ருஸ் இவ்வாறு கூறுவார், "திருச்சிலுவை நம்மை இருளிலிருந்து, ஒளிக்கு அழைத்து வந்தது. அதுவே நமக்கு வாழ்வு தந்தது; விண்ணகத்தின் கதவைத் திறந்து தந்தது" என்று. ஆம், இது எவராலும் மறுக்கமுடியாத உண்மை. பவுலடியார் கூட இதே கருத்தை 1 கொரி 1:18 ல் வலியுறுத்துவார். "சிலுவையைப் பற்றிய போதனை அழிவுறுவோருக்கு மடமை, ஆனால் மீட்புப் பெறும் நமக்கோ கடவுளின் வல்லமை" என்று.

இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் ஏதோம் என்ற நாட்டைச் சுற்றி வரும்போது, ஓர் என்ற மலையிலிருந்து "செங்கடல் சாலை" வழியாகப் பயணப்படும்போது மோசேக்கும், கடவுளுக்கும் எதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள். இதனால் கடவுள் அவர்கள்மீது சினம் கொண்டு கொள்ளிவாய்ப் பாம்புகளை அனுப்பி சாகடிக்கிறார். ஆனால் மோசே மீண்டும் கடவுளிடத்தில் மன்றாடுகிறபோது, அவர் அவர்கள்மீது இரக்கம் கொண்டு, "வெண்கலப்பாம்பு ஒன்றைச் செய்து, அதனை மக்கள் நடுவே வை, அப்போது பாம்பினால் கடிபட்ட எவரும் அதனைப் பார்க்கிறபோது உயிர்பிழைப்பார்கள்" என்று மோசேயிடம் கூறுகிறார். மோசேயும் அவ்வாறே செய்ய, இஸ்ராயேல் மக்கள் உயிர்பிழைக்கிறார்கள்.

இப்பகுதியில் வரக்கூடிய வெண்கலப்பாம்பு திருச்சிலுவையின் முன் அடையாளமாக இருக்கிறது. எவ்வாறெனில் வெண்கலப்பாம்பைப் பார்த்தவர்கள் வாழ்வுபெற்றதுபோல திருச்சிலுவையை பார்ப்பவர்கள் வாழ்வு பெறுவார்கள்.

பொதுவாக சிலுவை மரணமானது அல்லது சிலுவையானது மிகவும் இழிவாகக் கருதப்பட்டது. இது கொடியவர்களுக்கும், நாட்டைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கும்தான் வழங்கப்படும். ஆனால் அப்படிப்பட்ட சிலுவைச் சாவை ஆண்டவர் இயேசு நம்மீது கொண்ட அன்பினால் மகிழ்வோடு ஏற்றுக்கொள்கிறார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் படிக்கின்றோம், "கடவுள் தன்மையில் விளங்கிய அவர், தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்கு கீழ்படிபவரானார்" என்று. ஆம், இயேசு தன்னை வெறுமையாக்கி, அடிமையின் கோலம்கொண்டு, சிலுவை மரணம் ஏற்றார் என்றால் அது அவர் நம்மீது கொண்ட அளவுகடந்த அன்புகொண்டிருக்கிறார் என்பதே உண்மை. தந்தைக் கடவுள் தன் மகனாகிய இயேசுவையே இவ்வுலகிற்கு அளித்தார் என்றால், இயேசு அதனைச் செயல்படுத்தினார். அதனால்தான் கடவுள், ஆண்டவர் இயேசுவை எப்பெயருகும் மேலாக உயர்த்துகிறார். நாமும் இறைவனின் திட்டத்தின்படி வாழ்ந்தோம் என்றால் கடவுள் நம்மை மேலும், மேலும் உயர்த்துவார்.

இயேசுவின் குழந்தைப் பருவத்தில் நடந்த நிகழ்ச்சியாகச் சொல்வர்.
ஒருமுறை இயேசு, பைட்ஸ் என்ற சிறுவனோடு பேசிக்கொண்டிருந்தபோது அவனித்தில், "எதிர்காலத்தில் நீ என்னவாக போகிறாய்?" என்று கேட்டார். அதற்கு பைட்ஸ், "நான் மிகப்பெரிய தச்சராக மாறி, அரசர் அமர்வதற்கான சிம்மாசனம் ஒன்றைச் செய்வேன். அரசர் அதில் அமர்ந்துகொண்டு எல்லா மக்களுக்கும் ஆசி வழங்குவார்" என்றான். இயேசுவும் சரி என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். பைட்ஸ் சில நாட்களுக்குப் பிறகு ஜாப்பா என்ற ஓர் இடத்திற்கு குடிபெயர்ந்தார்.

ஆண்டுகள் பல கழிந்தன. அப்போது இயேசுவை சிலுவையில் அறைய, பிரத்யோகமான சிலுவைமரம் ஒன்று தேவைப்பட்டது. எனவே அப்படிப்பட்ட சிலுவைமரம் செய்வதற்குப் பெயர்போன பைட்ஸ் அங்கே அழைத்துவரப்பட்டான். அவன் இயேசுவுக்குதான் சிலுவை செய்ய வந்திருக்கிறோம் என்று தெரியாமல் செய்தான்.

ஒரு சில நாட்களுக்கு பிறகு உண்மையை அறிந்துகொண்டு இயேசு அறையப்பட்டிருந்த சிலுவையை நோக்கி ஓடினான். அவரைப் பார்த்ததும் "நானே உமக்கு சிலுவை செய்யும்படி ஆகிவிட்டதே" என்று கண்ணீர்விட்டு அழுதான். அப்போது இயேசு அவனிடம், "நீ சிறுவயதில் என்னிடம் என்ன சொன்னாய் என்று யோசித்துப் பார். அரசன் அமர்வதற்காக சிம்மாசனம் செய்வேன், அதிலே அரசர் அமர்ந்துகொண்டு எல்லா மக்களுக்கும் ஆசி வழங்குவார் என்று சொன்னாய். இப்போது அனைத்துலகின் அரசனாகிய நான் இந்த சிலுவை என்ற சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டு எல்லாருக்கும் ஆசி வழங்குகிறேன் பார்" என்று சொன்னார். இதைக் கேட்டு அவன் அமைதி அடைந்தான்.

சிலுவை அவமானச் சின்னமல்ல, அது அரியாசனம்; அது வெற்றியின் சின்னம் என்பதையே இந்நிகழ்வு உணர்த்துகிறது.

நாம் நமக்கு மீட்பைத்தரும் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் அன்பை உணர்ந்து, அவரைப் போன்று இறைவழியில் நடப்போம். இறையாசிரை நிறைவாய்ப் பெறுவோம்.



திருச்சிலுவைப் பெருவிழா

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இறந்த சிலுவையானது சாதாரண பொருளாக அல்ல. மாறாக, தியாகத்தின் சின்னமாக, நினைவாகக் கருதப்படுகிறது. இயேசுவின் பாடுகள், அவருடைய இறப்பு மற்றும் உயிர்ப்பு தான் கிறிஸ்தவத்தின் விசுவாசத்தை உலகிற்கு கொண்டு வந்தது. எனவே தான் தூய பவுலடியார் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் (1: 17, 18) "திருமுழுக்கு கொடுப்பதற்கு அல்ல, நற்செய்தியை அறிவிக்கவே கிறிஸ்து என்னை அனுப்பினார். மனித ஞானத்தின் அடிப்படையிலான சொற்களில் இந்நற்செய்தியை அறிவித்தலாகாது. அவ்வாறு அறிவித்தால் கிறிஸ்துவின் சிலுவை பொருளற்றுப்போய்விடும். சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப்பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை" என்று கூறுகிறார்.

நான்காம் நூற்றாண்டின் முதல் பகுதியில் திருச்சிலுவையின் பக்தி முயற்சியை நாம் காண முடிகிறது. அலெக்சாண்டிரியன் குறிப்பேடு வழங்கும் சான்றுப்படி கான்ஸ்டன்டைன் தாயான ஹெலன் (இலேனம்மாள்) அரசி தான், ஆண்டவரின் திருச்சிலுவையை செப்டம்பர் 14, 320 அன்று கண்டுபிடித்தார். அதன்பின் 13 செப்டம்பா் 335 அன்று, திருச்சிலுவையின் ஆலயமும், எருசலேமில் உள்ள கொல்கத்தா என்னும் இடத்தில் அர்ச்சிக்கப்பட்டது. அதற்கு அடுத்தநாள் ஹெலனால் கண்டுபிடிக்கப்பட்ட திருச்சிலுவை வணக்கம் செய்யப்படும் பக்தி முயற்சிக்காக வைக்கப்பட்டது. அன்றிலிருந்து அது ஒரு விழாவாக மாறியது. கூட்டத்தின் காரணமாக திருச்சிலுவை உயர்த்தி நிறுத்தப்பட தொடங்கியது. அதிலிருந்து அவ்விழாவிற்கு திருச்சிலுவை உயர்த்தப்பட்ட விழா என்ற பெயர் வரத்தொடங்கியது. உண்மையிலேயே திருச்சிலுவை உயர்த்தப்பட்டது என்பது சிலுவையினால் பாவத்தின் மீதும் சாத்தானின் மீதும் கிறிஸ்து கொண்ட வெற்றியினைக் குறிப்பதாகும். இவ்விழாவின் மையக்கருத்துயாதெனில் திருச்சிலுவையில் இயேசுவின் இறப்பினால் அவர் நமக்காக மீட்பைப் பெற்றுத்தந்தார் என்பதேயாகும்.

சிலுவை என்பது நமக்கு மீட்பைப் பெற்றுத்தரும் கருவி. வாழ்வில் நமக்கு துன்பங்களான சிலுவைகள் வருகிறபோது, துவண்டுவிடாமல், நம்பிக்கையோடு, அது நமக்கு மீட்பைப்பெற்றுத்தர வல்லது என்கிற உணர்வோடு மகிமைப்படுத்துவோம்.

கடவுள்பால் திரும்புவோம்

யோவான் நற்செய்தியாளர் பழைய ஏற்பாட்டில் எண்ணிக்கை புத்தகத்தில்(21: 4 9) நடந்த ஒரு நிகழ்வை இங்கே எடுத்துக்காட்டாக விவரிக்கிறார். இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து பாலைநிலம் வழியாக மோசே அழைத்து வந்தபோது, அவர்கள் மோசேக்கு எதிராகவும், கடவுளுக்கு எதிராகவும் பேசுகிறார்கள். உடனே ஆண்டவர் கொள்ளிவாய்ப்பாம்புகளை மக்களிடையே அனுப்பினார். அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர். அப்போது இஸ்ரயேல் மக்கள் தங்கள் தவறை உணர்ந்து மோசேயிடம் ஆண்டவரின் மன்னிப்பை வேண்டினர். மோசே ஒரு வெண்கலப்பாம்பைச் செய்து அதைக்கம்பத்தில் பொருத்த, அதைப்பார்த்த மக்கள் உயிர்பிழைத்தனர்.

இந்த நிகழ்வு இஸ்ரயேல் மக்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது. எந்த அளவுக்கு என்றால், அந்த வெண்கலப்பாம்பு அவர்களின் வாழ்வில் மையமாகத்தொடங்கியது. அதை தங்களது வழிபாட்டுக்கு பயன்படுத்த ஆரம்பித்தனர். யூதா அரசர் எசேக்கியா அதை அழித்தபிறகுதான், அந்த பழக்கம் மக்கள் மத்தியில் இருந்து மறையத்தொடங்கியது. 2அரசர்கள் 18: 4 ல் பார்க்கிறோம்: "எசேக்கியா அரசர் தொழுகைமேடுகளை அழித்து, நடுகற்களைத்தகர்த்து அசேராக் கம்பத்தையும் வெட்டி வீழ்த்தினார். மோசேயால் வைக்கப்பட்ட வெண்கலப் பாம்புச்சிலையையும் உடைத்தெறிந்தார். ஏனெனில், இஸ்ரயேல் மக்கள் அன்று வரை அதற்குத்தூபங்காட்டி வந்தனர்". இங்கே நாம் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை இதுதான். இஸ்ரயேல் மக்கள் பாம்பைப்பார்த்ததால் குணமடையவில்லை, மாறாக, தங்களுடைய எண்ணங்களை கடவுள் பக்கம் திருப்பியதால் குணமடைந்தனர். இதுநாள்வரை அவர்கள் தங்களின் எண்ணத்தை கடவுளைவிட்டு, வேறொரு பக்கம் திருப்பியருந்தனர். எப்போது, மீண்டும் கடவுள் பக்கம் திரும்பினார்களோ, அப்போது அவர்கள் குணம் பெற்றனர்.

இயேசுவும் அவ்வாறு சிலுவையில் உயர்த்தப்பட்டிருக்கிறார். நமது எண்ணங்களை சிலுவையில்பால் அல்ல, மாறாக, கடவுளின் பக்கம் திருப்புகிறபோது, கடவுளின் அருள் நமக்குக்கிடைக்கிறது. சிலுவை ஒரு அடையாளம். அந்த அடையாளத்தின் வழியாக, கடவுளின் பக்கம் நாம் திரும்புவோம். அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

திருச்சிலுவையின் மகிமை !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்று திருச்சிலுவை மகிமைப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். சிலுவையின் முன் அடையாளமாக பழைய ஏற்பாட்டில் நாம் காண்பது வெண்கலத்தால் ஆன பாம்பின் சிலை. அதைப் பற்றியே இன்றைய முதல் வாசகம் பேசுகிறது. சிலை வழிபாடு என்னும் பாவத்தின் காரணமாக கொள்ளிவாய்ப் பாம்புகளை கடவுள் அனுப்பி, பலரும் கடியுண்டு இறந்தபோது, மோசே அவர்களுக்காகப் பரிந்து பேசி மன்றாடியபோது, கடவுளே மோசேயிடம்;, “கொள்ளிவாய்ப் பாம்பொன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து. கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்? என்று கூறுகிறார். அவ்வாறே மோசேயும் வெண்கலப் பாம்பு ஒன்றைச் செய்து வைக்க, அதைப் பார்த்த அனைவரும் பிழைத்துக்கொண்ட செய்தியை நாம் எண்ணிக்கை நூலில் வாசிக்கிறோம். இந்த நிகழ்ச்சியையே ஆண்டவர் இயேசுவும் மேற்கோள் காட்டி, அந்த வெண்கலப் பாம்பை தனது சிலுவைச் சாவின் முன் அடையாளமாக யோவான் நற்செய்தியில் எடுத்துக்காட்டுகிறார். பாம்பால் இறந்தவர்களைப் பாம்பினாலே உயிர்பெற்றெழச் செய்த இறைவன், மரத்தால் வந்த சாபத்தை ஒரு மரத்தாலேயே நீக்கினார். இன்று அந்தச் சிலுவை மரத்தை வணங்குகிறோம். அந்தச் சிலுவைக்கு மகிமையைத் தந்த இயேசுவைப் போற்றுவோம். அந்த மகிமைக்குக் காரணமான அவரது கீழ்ப்படிதலைப் பின்பற்றுவோம்.

மன்றாடுவோம்: உமது கீழ்ப்படிதலால் சிலுவைச் சாவை ஏற்றுக்கொண்ட இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது சிலுவையால் எங்களை மீட்டுக்கொண்டதற்காக உமக்கு நன்றி கூறுகிறோம். எங்கள் வாழ்வின் சிலுவைகளை உற்றுப்பார்த்து, அவற்றில் இறைத்திருவுளத்திற்குப் பணிந்து வாழ அருள்தாரும். உமது தூய ஆவியின் கொடைகளால் எங்களை நிரப்பியருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென். அருள்தந்தை குமார்ராஜா

.............................

சிலுவையின் மாட்சி !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்று திருச்சிலுவையின் மகிமைப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். சிலுவை என்பது அவமானத்தின் சின்னமாக, தோல்வியின் அடையாளமாக இருந்தது. இயேசு அதனை வெற்றியின் சின்னமாக, மாட்சியின் அடையாளமாக மாற்றினார். தொடக்க காலத்திலிருந்தே நாமும் சிலுவை அடையாளத்தை அதிகமாகப் பயன்படுத்தி வருகிறோம். காலை எழுந்ததிலிருந்து, வேலை தொடங்குமுன், வழிபாட்டில், உணவு உண்ணுமுன், ஆலயங்களைக் கடந்துசெல்லும்போது... என்று வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சிலுவை அடையாளத்தை நம்மீது வரைந்துகொள்கிறோம்.

அதே வேளையில் அந்த சிலுவை குறித்துக்காட்டுகிற இறையியல் செய்திகளையும் நம் வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டும். சிலுவை இயேசுவின் கீழ்ப்படிதலைக் குறிக்கிறது. சாவை ஏற்குமளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்கு இயேசு கீழ்ப்படிந்தார் (பிலி 2:6-11) என்று பவுலடியார் கூறுகிறார். நாமும் இறைவனுக்கு, திருச்சபைக்கு, அதிகாரிகளுக்கு, பெரியவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

இரண்டாவதாக, சிலுவை துன்பங்களை மனமுவந்து ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. இயேசு அந்தச் சிலுவைத் துன்பத்தை அகற்ற மன்றாடினார். ஆனால், அதுதான் இறைவனின் விருப்பம் என்று உணர்ந்ததும் மனம் விரும்பி ஏற்றுக்கொண்டார். ஆகவே, இறைவன் அவருக்கு வெற்றியும், மாட்சியும் தந்தார். நமது வாழ்வில் தவிர்க்க முடியாமல் வரும் சிக்கல்கள், நோய்கள், துன்பங்கள், அவமானங்கள் இவற்றை ஏற்றே தீர வேண்டும் என்னும் நிலை வரும்போது இயேசுவைப் போல நாமும் மனம் உவந்து அவைகளை ஏற்போம். அப்போது தந்தை இறைவன் இயேசுவுக்குச் செய்ததுபோல, நமக்கும் அவரது வெற்றியிலும். மாட்சியிலும் பங்கு தருவார்.

மன்றாடுவோம்: சிலுவை வழியாக மீட்பு தந்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். துன்பத்தின், அவமானத்தின் சின்னமான சிலுவையை, மீட்பின், மாட்சியின் அடையாளமாக மாற்றினீரே. இந்த சிலுவைக்காக உமக்கு நன்றி. எனது வாழ்விலும் சிலுவை என நான் கருதும் அனைத்தையும், உம்மோடு சுமந்து, உமது வெற்றியிலும், மாட்சியிலும் நானும் பங்கு பெறுவேனாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென். அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

"உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக
அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்" (யோவான் 3:17)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- யோவான் நற்செய்தியில் கடவுள் உலகத்தின்மீது கொண்டுள்ள அன்பு அழகாக விளக்கப்படுகிறது. இந்த உலகத்தைப் படைத்து, அதில் மரம் செடி கொடிகள், பறவைகள், விலங்குகள் போன்றவற்றை உருவாக்கி, இறுதியில் அனைத்தையும் மனிதரின் பொறுப்பில் கொடுத்தார் கடவுள். இவ்வாறு கடவுள் படைத்த உலகம் அழகு வாய்ந்ததாக இருந்தது (காண்க: தொநூ 1:31). இந்த உலகம் கடவுளின் அன்பிலிருந்து பிறந்தது; அவருடைய அன்பில் நிலைகொண்டுள்ளது; அவருடைய அன்பினால் மீட்புப் பெற்றது. எனவே, உலகத்தின் மீது கடவுள் கொண்டுள்ள அன்பு எந்நாளும் தொடர்கின்ற ஒன்று. அதே நேரத்தில் உலகத்தில் தீமை இருப்பதையும் யோவான் நற்செய்தி கோடிட்டுக் காட்டுகிறது. கடவுளால் அனுப்பப்பட்ட அவர்தம் திருமகன் இயேசுவை ஏற்க மறுத்தவர்கள் ஒளியைக் கண்டும் இருளை விரும்பியவர்களுக்கு ஒப்பாவார்கள் (காண்க: யோவா 1:9-11). இவர்கள் இயேசுவை ஏற்க மறுத்தார்கள்.

-- ஆயினும் கடவுள் இந்த உலகத்தை அழிப்பதற்கோ, அதற்குத் தண்டனைத் தீர்ப்பு அளிக்கவோ தம் மகனை அனுப்பவில்லை. மாறாக, அவர் வழியாக இவ்வுலகிற்கு மீட்பு வழங்கவே அவர் இயேசுவை அனுப்பினார். இங்கே கடவுளின் எல்லையற்ற அன்பு துலங்குவதை நாம் தெளிவாகக் காண்கின்றோம். அன்பே உருவான கடவுள் தம்மில் பொங்கியnழுந்த அன்பின் பெருக்கால் தூண்டப்பட்டே இவ்வுலகைப் படைத்தார். மனிதர்கள் அவரை விட்டு அகன்ற போதிலும் அவருடைய அன்பு ஒருநாளும் குறைவுபடவில்லை. மாறாக, தம்மைவிட்டுப் பிரிந்தவர்களையும் அவர் தாராள உள்ளத்தோடு அன்புசெய்கிறார். அவர்கள் தம் தவற்றினை உணர்ந்து மீண்டும் தம்மிடம் திரும்புவார்கள் என்னும் நம்பிக்கை நம் அன்புக் கடவுளுக்கு என்றுமே உண்டு. இயேசு வழியாக நாம் பெற்ற மீட்பு நம்மைப் பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் விடுவித்தது. அந்த விடுதலை அனுபவத்தைப் பெற்ற நாம் கடவுளையும் கடவுள் அன்புசெய்கின்ற உலகத்தையும் அதில் வாழ்கின்ற மனிதர்களையும் நன்மனத்தோடு ஏற்று அன்புசெய்திட அழைக்கப்படுகிறோம். இயேசுவே நமக்கு அன்பின் வழியைக் கற்றுத் தந்துள்ளார். குறிப்பாக, தன்னலம் மறந்து, பிறர் நலம் நாடுகின்ற பண்பை அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். மனிதர் மேல் கொண்ட அன்பால் அவர் சிலுவைச் சாவையும் சந்திக்கத் தயங்கவில்லை. ஆனால் உலகம் கேவலமாகக் கருதிய அச்சிலுவை இயேசுவின் மரணத்தால் அன்பின் அடையாளமாக மாறிற்று; நமக்கு வாழ்வளிக்கும் ஊற்றாக விளங்குகிறது. சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசு உண்மையிலேயே கடவுளுக்கு நிகராக "உயர்த்தப்பட்டார்". இதையே யோவான் நற்செய்தி, "பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்" (யோவா 3:14-15) எனக் கூறுகிறார். நிலைவாழ்வு பெற விரும்புவோர் சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசுவை "உற்று நோக்க வேண்டும்"; அவரையே தங்கள் வாழ்க்கை நெறியாகக் கொள்ள வேண்டும். அப்போது தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகாமல் மீட்பின் கொடையைப் பெற்று மகிழ்வார்கள்.

மன்றாட்டு
இறைவா, இவ்வுலகை அன்புசெய்கின்ற உம்மை நாங்கள் முழு உள்ளத்தோடு அன்புசெய்திட அருள்தாரும். --அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

--------------------------------

உயர்த்தப்படு .. .. உயர்வடைவாய்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

சிலுவை என்றவுடன் பலருக்கு துன்பம், வேதனை, பாடுகள்,கண்ணீர், கவலைதான் உடனே கவனத்திற்கு வரும். ஆனால், நம் ஆண்டவர் இயேசு, மனித வரலாற்றின் அவமானச் சின்னமாக, கொலைக்கருவியாக இருந்த சிலுவையைத் தம் பாடுகள், மரணத்தால் வாழ்வின் சின்னமாக, வெற்றியின் கருவியாக மாற்றியதை உலகமே உணறும்.

சிலுவை, நம் இறைவன், விண்ணையும் மண்ணையும் இணைக்க பயன்படுத்தியது. மனிதனையும் இறைவனையும் இணைப்பது. பாவத்தின் பரிகாரம். அருளின் ஊற்று. தோல்வியின் அஸ்தமனம். வெற்றியின் உதயம். சாவின் சங்கொலி. உயிர்ப்பின் எக்காளம். பொய்மை அநீதி, ஆணவம், அதிகாரம் இவற்றின் இயலாமை. உண்மை, நீதி, பணிவு, அடக்கம் இவற்றின் வல்லமை.

இச்சிலுவையில் இயேசு உயர்த்தப்பட்டபோதுதான் அன்பு, தியாகம், தாழ்ச்சி இவற்றின் உண்மை முகம் உலகுக்கு உயர்த்தி காண்பிக்கப்பட்டது. "தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்." (யோவா 3'16)

இந்தச் சிலுவைகளை நாள்தோறும் மகிழ்வோடு சுமப்பவன் கிறிஸ்தவன். அவன் வாழ்வில் உயர்வடைவான். --அருட்திரு ஜோசப் லீயோன்



சிலுவை

யூதர்கள் அரும் அடையாளங்கள் வேண்டும் என்று கேட்கிறார்கள். கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள். ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும், பிற இனத்தாருக்கு மடமையாகவும் இருக்கிறது. ஆனால் அழைக்கப்பட்டவர்களுக்கு கிறிஸ்து கடவுளின் வல்லமையும், ஞானமுமாய் இருக்கிறார். (1 கொரிந்தியர் 1:22-24)

நெம்புகோல் தத்துவத்தைக் கண்டுபிடித்த ஆர்க்கிமெடீஸ் ஒருநாள் என்ன சொன்னார் தெரியுமா? 'இந்தப் பால்வெளியில் நான் நிற்கக் கொஞ்சம் இடமும், நீண்ட நெம்புகோலும் கொடுங்கள். நான் இந்தப் பூமியின் இருப்பிடத்தை நகர்த்திக் காட்டுகிறேன்'. ஆனால் அன்று அதை அவருக்குக் கொடுப்பார் யாருமில்லை.

கல்வாரி என்ற இடத்தில் நின்று கொண்டு, சிலுவை என்ற நெம்புகோலால் அன்பை நோக்கி, மன்னிப்பை நோக்கி, தியாகத்தை நோக்கி பூமிப்பந்தை மாற்றிப் போட்டார் இயேசு.

நாளை திருச்சிலுவையின் மகிமை பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

எதற்காக தன் மகன் இயேசுவை கடவுள் சிலுவையில் அறையப்பட்டு இறக்க வேண்டும் என நினைத்தார்? ஒரு தந்தை எப்படி தன் மகனையே பலியாகக் கேட்டார்? சிலுவையில் இயேசு இறந்ததால் நம் பாவம் அழிக்கப்பட்டது என்று எப்படிச் சொல்ல முடியும்? சிலுவையில் இயேசு அறையப்பட்டபோது அங்கே அவர் கடவுளாக இறந்தாரா? அல்லது மனிதராக இறந்தாரா? கடவுளாக இறந்தார் எனில் அந்த நாளில் கடவுளின் முழுமைக்குக் குறைவு வருமே? மனிதராக இறந்தார் எனில் அவரோடு இறந்த மற்ற மனிதர்களைப் போலத்தானே அந்த இறப்பும் இருந்திருக்க வேண்டும்? இயேசுவின் மேல் சுமத்தப்பட்ட குற்றச் சாட்டு ஆலயம் சம்பந்தப்பட்டது. ஆலயம் சம்பந்தப்பட்ட குற்றத்திற்கு கல்லெறியே தண்டனை. பின் ஏன் இயேசு சிலுவையில் அறையப்பட்டார்? - இவைகள் எல்லாம் விடைதெரியா மில்லியன் டாலர் கேள்விகள்.

சிலுவை என்ற ஒரு எதார்த்தத்தை இறையியலாக மாற்றியவர் தூய பவுலடியார். யூதர்கள் வலுவின்மை எனவும், கிரேக்கர்கள் மடமை எனவும் நினைத்ததை கடவுளின் வல்லமை என்றும், கடவுளின் ஞானம் என்றும் எதிர்ப்பதங்களின் வாயிலாக சிலுவை இறையியலுக்கு அடித்தளமிடுகின்றார். பவுலடியாரின் இறையியில் பிலிப்பியருக்கு எழுதப்பட்ட திருமுகம் 2ஆம் அதிகாரத்தில் நிறைவு பெறுகிறது. 'கெனோசிஸ்' (வெறுமை) என்ற கிரேக்க வார்த்தையை மையமாக வைத்து இயேசுவின் வாழ்விற்கு சிலுவையின் வழியாக ஒரு புதிய அர்த்தத்தைக் கொடுக்கின்றார்.

இன்று நாம் வாழும் உலகம் 'ஐக்கன்களின்' உலகம். ஒவ்வொன்றையும் குறிக்க, அடையாளப்படுத்த நாம் 'ஐக்கன்களை' வைத்திருக்கிறோம். 'எஃப்' என்றால் ஃபேஸ்புக், 'டி' என்றால் டுவிட்டர், 'கடித்த ஆப்பிள்' என்றால் ஆப்பிள் தயாரிப்புகள், 'நான்கு ஜன்னல்கள்' என்றால் விண்டோஸ், 'கை உயர்த்தும் பச்சை மனிதன்' என்றால் ஆண்ட்ராய்ட், 'எம்' என்றால் மோட்டோரோலா, 'எம்' என்றால் மேக்டொனால்ட்ஸ் என ஐக்கன்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். அந்த வகையில் 'கிராஸ்' என்பதும் இன்று ஒரு ஐக்கன். மருத்துவமனையில், ஆம்புலன்சுகளில், முதலுதவிப் பெட்டிகளில், பள்ளிகளில், ஆலயங்களில், கொடிக்கம்பங்களில், கால்குலேட்டர்களில், பெண்களின் சங்குக் கழுத்துக்களில், மோதிர விரல்களில் என எங்கும் நீக்கமற நிறைந்துவிட்டது. அதிகமாக நாம் பார்த்து அதன் பொருளை மறந்துவிட்ட ஒரு ஐக்கன் தான் 'கிராஸ்'.

சிலுவைக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தம் கொடுக்க முடியும். சிலுவை என்றால் இணைப்பு, சிலுவை என்றால் பிறரன்பு மற்றும் இறையன்பின் பிணைப்பு, சிலுவை என்றால் துன்பம், சிலுவை என்றால் கூட்டல் என தனிநபரைப் பொறுத்தே அர்த்தம் இருக்கின்றது.

இன்று திருச்சிலுவையின் மகிமை என்று சொல்லும் போது கூட்டத்தோடு சேர்ந்து நாமும் அதே போல சொல்லிவிட்டு வருவதற்குப் பதிலாக, 'இந்தச் சிலுவை என்றால் என்ன?' 'இந்தச் சிலுவை அடையாளம் எனக்குக் கற்றுக்கொள்ளப்படாவிட்டால் அது எனக்கு என்ன அர்த்தம் கொடுக்கும்?' 'சிலுவை என்றால் என்ன?' என்று இன்று நம்மை யாராவது கேட்டால் நாம் என்ன சொல்வோம்?'

சிலுவை அன்றும், இன்றும், என்றும் மறைபொருளாகவே இருக்கும்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
திருச்சிலுவை மகிமை விழா (செப்டம்பர் 14)

நிகழ்வு

மிகச்சிறந்த மறைபோதரும் பேராயருமான புல்டன் ஷீன் ஒருமுறை குறிப்பிட்ட வார்த்தைகள்: "நான் பல்வேறு நூல்களை எழுதியிருக்கின்றேன். அவையெல்லாம் ஏதோ ஒரு கேள்விக்கு பதில் சொல்வதாக இருக்கும். ஆனால் நான் எழுதிய இயேசுவின் வாழ்க்கை வரலாறு (Life of Christ) என்ற புத்தகம் சிலுவையின்மீது அறையப்பட்ட இயேசுவின் பேரன்பை, அவர் இந்த மனுக்குலத்தின்மீது கொண்டிருந்த இரக்கத்தை உணர்ந்துகொள்வதாகவே எழுதப்பட்டது. சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த கிறிஸ்துவின் பேரன்பை விளக்கிச் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை".

வரலாற்றுப் பின்னணி

312 ஆம் ஆண்டு, அக்டோபர் 20 ஆம் நாள், உரோமையை ஆண்டுவந்த கொன்ஸ்டன்டின் என்ற மன்னன் மாஜென்சியஸ் என்ற மன்னனோடு போர்தொடுக்கச் சென்றான். அவ்வாறு அவன் எதிரி நாட்டுப் படையோடு போர்தொடுக்கச் செல்லும்போது சிலுவை பொறித்த கொடிகளை ஏந்திச் சென்றான். இதனால் அவன் அந்தப் போரில் வெற்றிபெற்றான். அதன் நிமித்தமாக கிறிஸ்தவ மதத்தை அரசாங்க மதமாக அறிவித்தான்.

இது நடந்து 13 ஆம் ஆண்டுகள் கழித்து, கொன்ஸ்டன்டின் மன்னனின் தாயார் தூய ஹெலனா என்பவர் எருசலேம் நகருக்குப் புனித பயணம் மேற்க்கொண்டார். அவர் கல்வாரி மலைக்குச் சென்று, அகழ்வாராட்சியில் ஈடுபட்டபோது, அங்கே மூன்று சிலுவைகள் இருப்பதைக் கண்டார். இந்த மூன்று சிலுவைகளில் எது இயேசு கிறிஸ்து அறையப்பட்ட சிலுவை என்ற குழப்பம் ஏற்பட்டது. எனவே, அவர் ஒரு கைசூம்பிய மனிதனை அழைத்து, அந்த மூன்று சிலுவைகளையும் தொடுமாறு சொன்னார். உடனே அம்மனிதன் மூன்று சிலுவைகளையும் தொட்டபோது, அதிலிருந்த ஒரு சிலுவையிலிருந்து ஆற்றல் வெளிப்பட அம்மனிதருடைய கை குணமடைந்தது. இதைப் பார்த்த தூய ஹெலனா அந்த திருச்சிலுவையை உரோமை நகருக்குத் தூக்கிகொண்டு வந்து, ஆலயம் ஒன்றைக் கட்டி எழுப்பி, அதில் திருச்சிலுவை வைத்தார். அவர் திருச்சிலுவையை உரோமையில் உள்ள ஆலயத்தில் நிறுவிய நாள் 326 ஆம் ஆண்டு, செப்டம்பர் 14 ஆம் நாள். அன்றிலிருந்து திருச்சிலுவை உயர்த்தப்பட்ட நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அதன்பிறகு 614 ஆம் ஆண்டு, பெர்சிய மன்னன் சொஸ்ரோஸ் (Chosroas) என்பவன் உரோமை நகரின் மீது படையெடுத்துச் சென்று, திருச்சிலுவையை தூக்கிச் சென்றான். இதனைக் கேள்விப்பட்ட ஹெரக்லியுஸ் என்று மன்னன் 628 ஆம் ஆண்டு, பெர்சியா நாட்டின்மீது படையெடுத்துச் சென்று, திருச்சிலுவையை மீட்டுக்கொண்டு வந்தான். திருச்சிலுவையை மீட்டுக்கொண்டு வரும்போது அதனை ஆடம்பரமாக அலங்கரித்து, தூக்கிப்பார்த்தான். அவனால் ஒரு அடிகூட நகர்த்த முடியவில்லை. அப்போது அங்கிருந்த ஆயர், "இயேசு சுமந்து வந்த சிலுவை எளிமையின் அடையாளம், அதனை நீ ஆடம்பரமாக தூக்கிப் பார்த்தால் எப்படி நகரும்" என்று சொன்னார். இதைக் கேட்ட அரசன், தாழ்ச்சியோடு திருச்சிலுவையை தூக்கினான். இப்போது திருச்சிலுவை எளிதாக நகர்ந்தது. பின்னர் அவன் திருச்சிலுவையை உரோமை நகரில் உள்ள ஆலயத்தில் போய் நிறுவினான்.

இப்படியாக திருச்சிலுவைக்கு வணக்கம் செலுத்தும் வழக்கம் திருச்சபை முழுவதும் படிப்படியாக வளர்ந்தது. 1970 ஆம் ஆண்டு வரை இவ்விழா திருச்சிலுவை உயர்த்தப்பட்ட நாள் என்றே கொண்டாடப்பட்டு வந்தது. 1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு இவ்விழா திருச்சிலுவையின் மகிமை விழா என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அவமானத்திற்கு உரிய சிலுவைமரணம் அல்லது சிலுவைச்சாவு என்பது நாட்டைக் காட்டிக்கொடுத்தவர்களுக்கும் துரோகிகளுக்கும் தான் கொடுக்கப்பட்டது. இப்படிப்பட்ட கொடிய தண்டனைமுறை தொடக்கத்தில் பொனிசியர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. அதன்பிறகுதான் உரோமையர்கள் அவர்களிடமிருந்து இப்படிப்பட்ட தண்டனைமுறையை எடுத்துக்கொண்டு, தங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களுக்குக் கொடுத்தார்கள். இயேசு ஒரு பாவமும் அறியாதவர்; ஒரு குற்றமும் செய்யாதவர். அப்படிப்பட்டவருக்கு சிலுவைச் சாவு தண்டனையாகக் கொடுக்கப்பட்டது. ஆனாலும் அவர், அவமானமாகக் கருத்தப்பட்ட சிலுவையை, தன்னுடைய மரணத்தினால் வெற்றியின் சின்னமாக மாற்றுகின்றார். ஆகவே, சிலுவை என்பது அவமானத்தின் சின்னம் கிடையாது. மாறாக, அது வெற்றியின் சின்னம் என்பதை இயேசு தன்னுடைய மரணத்தினால் நிரூபிக்கின்றார்.

எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன்பாக சிலுவை அடையாளம் போட்டு, தொடங்குகின்ற நாம், அதற்கு எவ்வளவு மதிப்பிருக்கின்றது, அதற்கு நாம் எப்படி மரியாதை செலுத்தவேண்டும் என்பதை சிந்தித்து பார்ப்போம்.

திருச்சிலுவை கற்றுத்தரும் பாடம்

திருச்சிலுவையின் மகிமை விழாவைக் கொண்டாடும் நாம், இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.


திருச்சிலுவை: இயேசு இந்த மனுக்குலத்தின்மீது கொண்ட அன்பின் வெளிப்பாடு


தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் கூறுவார், "நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக்காட்டியுள்ளார் (உரோ 5: 7-8). ஆம், நாம் பாவிகளாக இருந்தும் கிறிஸ்து நமக்காக உயிர்கொடுக்கிறார் என்றால், அது உண்மையிலே கடவுள்/ இயேசு கிறிஸ்து நம்மீது கொண்ட அன்பை வெளிக்காட்டுவதாகவே இருக்கின்றது.

ஆகையால் ஒவ்வொருமுறையும் நாம் சிலுவையை உற்றுப் பார்க்கின்றபோது கடவுள் / நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மீது கொண்ட அளவு கடந்த அன்பினை ஆழமாக உணர்ந்துகொள்ளவேண்டும்.


திருச்சிலுவை: நன்மைகளின் ஊற்று


திருத்தந்தை பெரிய சிங்கராயர், "திருச்சிலுவை நன்மைகளின் ஊற்று" என்று குறிப்பிடுகின்றார். அது முற்றிலும் உண்மை. எப்படியென்றால் நம்முடைய கிறிஸ்தவ வாழ்விற்கான எல்லா நலன்களையும் திருச்சிலுவையிடமிருந்து பெறுகின்றோம்.

ஒருசமயம் புண்ணிய வாழ்வு வாழ்ந்து வந்த குருவானவர் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் அவர் நடுத்தீர்ப்புக்காக கடவுளின் அரியணை முன்பாக நிறுத்தப்பட்டார். ஒருபக்கம் சாத்தான் நின்றுகொண்டு அவர் மண்ணுலகத்தில் வாழ்ந்தபோது செய்த தவறுகளாக ஒவ்வொன்றாக பட்டியலிட்டது. எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த குருவானார், "எல்லாவற்றையும் சொல்லிவிட்டாய். ஆனால் இன்னும் ஒன்றே ஒன்று மட்டும் விட்டுவிட்டாய்" என்றார். "அது என்ன?" என்று கேட்டது சாத்தான். அதற்கு குருவானார், "இயேசு சிலுவையில் சிந்திய தன்னுடைய விலை மதிக்கப்பெறாத இரத்தத்தினால் என்னுடைய பாவம் முழுவதையும் முற்றிலுமாக கழுவிப்போக்கி விட்டார்" என்றார். இதைக் கேட்ட சாத்தான் எதுவும் பேசாது அமைதியானது. ஆம், இயேசு சிலுவையில் சிந்திய இரத்தத்தினால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் முற்றிலுமாகக் கழுவிப் போக்கிவிட்டார். இப்போது நாம் மாசற்றவர்களாக இருக்கின்றோம்.

ஆகையால் நாம் பாவத்திலிருந்து விடுதலை பெற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல், நன்மைகளை அதிகதிகமாக பெற்றுக்கொள்கின்றோம் எனப் புரிந்த்கொள்ளவேண்டும்.


திருச்சிலுவை: அவமானத்தின் சின்னமல்ல, வெற்றியின் சின்னம்


தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் கூறுவார், "யூதர்கள் அரும் அடையாளங்கள் வேண்டும் என்று கேட்கின்றார்கள்; கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள். ஆனால், நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பறைசாற்றுகின்றோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாகவும் இருக்கின்றது. ஆனால், அழைக்கப்பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும், அவர்களுக்கு கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கின்றார்" ( 1 கொரி1: 22-24). சிலுவை நமக்கு மீட்பின் சின்னமாக, வெற்றியின் சின்னமாக விளங்குகின்றது என்பதையே பவுலின் வார்த்தைகளிலிருந்து நாம் படித்து அறிகின்றோம்.

கிறிஸ்தவர்களாகிய நாம் சிலுவையை எத்தகைய கண்ணோட்டத்தோடு பார்க்கின்றோம் என சிந்தித்துப் பார்க்கவேண்டும். சிலுவையை துன்பமாகப் பார்க்கின்றோமா? அல்லது துன்பங்களையும் தாங்கிக்கொண்டு மீட்பைப் பெற்றுத்தந்த இயேசுவின் சிலுவையை வெற்றியின் சின்னமாகப் பார்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

"திருச்சிலுவை மரமிதோ, இதிலேதான் தொங்கியது உலகத்தின் இரட்சணியம்" என்று புனித வெள்ளியன்று குருவானவர் திருச்சிலுவையை கையில் ஏந்தி பாடுவதைக் கேட்டிருப்போம். சிலுவையினாலே நமக்கு மீட்பு வந்தது, சிலுவையினாலேயே நமக்கு சிம்மாசனம் வந்தது என்பது அவ்வார்த்தைகள் கற்றுத்தரும் பாடம்.

ஆகவே, திருச்சிலுவை மகிமை விழாவைக் கொண்டாடும் இன்று, நாம் திருச்சிலுவைக்கு தகுந்த மரியாதை செலுத்துவோம். இயேசுவைப் போன்று நம்முடைய வாழ்வில் வரும் சிலுவைகளைத் துணிவோடு ஏற்றுக்கொள்வோம். இயேசுவின் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!