Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                               year B  
                                                     மூவொரு இறைவன் பெருவிழா
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================

மேலே விண்ணிலும், கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள்.


இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 32-34, 39-40

மோசே மக்களை நோக்கிக் கூறியது: உங்களுக்கு முற்பட்ட பண்டைக் காலத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கடவுள், உலகில் மனிதனைப் படைத்த நாள்முதல், வானத்தின் ஒரு முனைமுதல் மறு முனைவரைக்கும் எங்காவது இத்தகைய மாபெரும் செயல் நடந்ததுண்டோ? அல்லது இதுபோல் கேள்விப்பட்டது உண்டா? நெருப்பின் நடுவிலிருந்து பேசிய கடவுளின் குரலொலியைக் கேட்டும், நீங்கள் உயிர் வாழ்ந்தது போல் வேறு எந்த மக்களினமாவது வாழ்ந்ததுண்டா? அல்லது, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் எகிப்தில் உங்கள் கண்முன்னே உங்களுக்குச் செய்த அனைத்தையும் போல, சோதனைகள், அடையாளங்கள், அருஞ்செயல்கள், போர், வலிய கரம், ஓங்கிய புயம் மற்றும் அச்சுறுத்தும் நிகழ்ச்சிகள் மூலம் ஓர் இனத்தை வேறொரு நாட்டினின்று தமக்கென உரிமையாக்கிக் கொள்ள முன்வரும் கடவுள் உண்டா? மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர்' என இன்று அறிந்து, உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள். நான் இன்று உங்களுக்குக் கட்டளையிடும் அவரது நியமங்களையும் கட்டளைகளையும் பின்பற்றுங்கள்.

அப்பொழுது உங்களுக்கும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் பிள்ளைகளுக்கும் எல்லாம் நலமாகும். மேலும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு எக்காலத்திற்கும் கொடுக்கும் மண்ணில் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் திபா 33: 4-5. 6,9. 18-19. 20,22 (பல்லவி: 12b) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.

4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. 5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. பல்லவி

6 ஆண்டவரது வாக்கினால் வானங்கள் உண்டாயின; அவரது சொல்லின் ஆற்றலால் வான் கோள்கள் எல்லாம் உருவாயின. 9 அவர் சொல்லி உலகம் உண்டானது; அவர் கட்டளையிட, அது நிலைபெற்றது. பல்லவி

18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். 19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். பல்லவி

20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். 22 உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! பல்லவி


================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 14-17

சகோதரர் சகோதரிகளே, கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள். மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லை; மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள்.

அதனால் நாம், "அப்பா, தந்தையே" என அழைக்கிறோம். நாம் இவ்வாறு அழைக்கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார்.

நாம் பிள்ளைகளாயின், உரிமைப் பேறு உடையவர்களாய் இருக்கிறோம். ஆம், நாம் கடவுளிடமிருந்து உரிமைப் பேறு பெறுபவர்கள், கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும்; அப்போதுதான் அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
திவெ 1: 8

அல்லேலூயா, அல்லேலூயா! இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவருமான கடவுள், தந்தை, மகன், தூய ஆவியாருக்கு மகிமை உண்டாகுக. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 28: 16-20

அக்காலத்தில் பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள். அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள்.

சிலரோ ஐயமுற்றார்கள். இயேசு அவர்களை அணுகி, "விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.

நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


சிந்தனை:

எல்லா நிகழ்வுகளிலும் தந்தை மகன் தூய ஆவியாரை அழைத்தே நாம் காரியங்களை செய்கின்றோம். திருமுழுக்கு பெற்றது கூட அந்த திரியேக கடவுளை அழைத்தே பெற்றுக் கொண்டோம். இவர்கள் மூவராக இருந்தாலும், ஓரே நிலைப்பாடும், ஓரே தெய்வீகத் தன்மையும், ஒத்த செயல்பாடும் கொண்டவர்களாகவே திருஅவையில் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். மூவருமே தொடக்க முதல் இறுதிவரை நம்முடனே இருக்கின்றார்கள்.

இந்த மூவொரு கடவுளை விசுவசிக்கின்ற நாம், அவரைப் போல படைத்து, பாராமரித்து, பாதுகாக்கின்ற பணிகள் பலவாறு இருந்தாலும், ஒத்த செயல்பாடு நம்மிலே இருக்குமேயானால், சாட்சிகளாக நாம் வாழ்ந்நதிட முடியும். இவ்வாறு வாழும் நம்மிலே நம்முடனே இவர்கள் இருந்து நம்மை பராமரித்து, பாதுகாப்பார்கள் என்பதிலே எந்த மாற்றுச் சிந்தனையும் இல்லை.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
மூவொரு இறைவன் பெருவிழா


"உலக முடிவுவரை எந்நாளும் நம்மோடு இருக்கும் மூவொரு இறைவன்!

ஒருமுறை ஒரு நகரப் பங்கில் உறுதிபூசுதல் கொடுப்பதற்காக ஆயர் அவர்கள் சென்றிருந்தார்கள்.

வழிபாட்டின்போது ஆயர், பின்வரிசையில் உறுதிபூசுதல் பெற இருந்த சிறுமி ஒருத்தியிடம், "மூவொரு கடவுள் என்றால் என்ன?" என்று கேட்டார். அதற்கு அந்த சிறுமி, "ஒரே கடவுள் மூன்று ஆட்களாக இருக்கின்றார்" என்று பதிலைச் சொன்னாள். ஆனால், சிறுமி சொன்னது ஆயரின் காதில் சரியாக விழாமல் போகவே, அவர் மீண்டுமாக அந்தச் சிறுமியிடம், "நீ சொன்னது எனக்கு சரியாக விளங்கவில்லை. மீண்டுமாக அதைச் சொல்" என்றார். சிறுமியோ, "மூவொரு கடவுளைப் பற்றி முழுமையாக விளக்கமுடியாது, அது ஒரு மறைபொருள். அதை அப்படியேதான் ஏற்றுக்கொள்ளவேண்டும்" என்று சொன்னதும், ஆயர் மிகவும் ஆச்சரியப்பட்டுபோய், அந்தச் சிறுமியை வாழ்த்தினார்.

ஆம், "மூவொரு இறைவன்" என்பது ஒரு மறைபொருள், அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் ஒழிய, அதை முழுமையாகப் புரிந்துகொள்வது என்பது இயலாத காரியம்.

இன்று நாம் மூவொரு கடவுளது பெருவிழாக் கொண்டாடுகின்றோம். இவ்வேளையில் இப்பெருவிழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம். மூவொரு கடவுளைக் குறித்து திருமறைச் சுவடியில் சொல்லப்படுகின்ற விளக்கம், "யாதொரு வேறுபாடும் இன்றி, மூவருக்கும் ஒரே அன்பு அன்புறவு, ஒரே ஞானம், ஒரே திருவுளம், ஒரே வல்லமை, ஒரே கடவுள் தன்மை இருப்பதால் மூவரும் ஒரே கடவுள்".

மூவொரு கடவுளான தந்தை, மகன், தூய ஆவி இவர்கள் மூவரும் எப்படிப்பட்டவர்கள், இவர்கள் எத்தகைய பணிகளைச் செய்துகொண்டிருக்கின்றார்கள் என இன்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம். இணைச்சட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகம் தந்தைக் கடவுளைக் குறித்து மிகத் தெளிவாக விளக்குகின்றது. அங்கு மோசே மக்களைப் பார்த்துக் கூறுகின்றார். நெருப்பின் வழியாகப் பேசிய கடவுளை, அடிமைப்பட்டுக் கிடந்த இனத்தை மீட்டு, ஒரு நாட்டையே உரிமைச் சொத்தாகத் தந்த கடவுளை வேறு எங்கேனும் பார்த்ததுண்டா?" என்று. ஆம், கடவுள் என்றால் அவர் வானுலகில் உறைகின்ற கடவுள் கிடையாது, மண்ணுலகில் மக்களோடு மக்களாக இருந்து செயல்படக் கூடியவர் என்பதைத்தான் மேசேயின் வார்த்தைகள் நமக்கு எடுத்துக்கூறுவதாக இருக்கின்றன. ஆகையால், தந்தைக் கடவுளை வரலாற்றில் செயல்படுகின்ற கடவுளாக நாம் புரிந்துகொள்ளலாம்.

தூய ஆவியாரைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும்போது இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுலடியார், "நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்கு தூய ஆவியார் சான்று பகர்வார் என்பார். பவுலடியாரின் வார்த்தைகள் உண்மையிலும் உண்மையான வார்த்தைகள். ஏனென்றால், ஆண்டவர் இயேசு தூய ஆவியாரைக் குறித்துச் சொல்கின்றபோது, "தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார்" என்பார். (யோவா 15:26) ஆகையால், தூய ஆவியார் கடவுளை/ ஆண்டவர் இயேசுவைக் குறித்து சான்று பகற்கின்றவர் என நாம் உறுதியாகச் சொல்லலாம்.

தூய ஆவியார் ஆண்டவர் இயேசுவைப் பற்றி சான்று பகர்வதோடு மட்டுமல்லாமல், நாம் சான்று பகர்வதர்கான வலுவினையும் தெம்பினையும் தருகின்றார் என்பது உண்மையாக இருக்கின்றது. பெந்தகொஸ்தே நாளில் அதுவரைக்கும் அஞ்சி அஞ்சி வாழ்ந்த இயேசுவின் சீடர்கள், மிகப்பெரிய மக்கள் கூட்டத்திற்கு முன்பாக மிகத் துணிச்சலாக நற்செய்தியை அறிவிக்க முடிந்தது என்றால், அது தூய ஆவியினால் அருட்பொழிவாலன்றி வேறெதுவும் இருக்க முடியாது. எனவே, தூய ஆவியார் ஆண்டவர் இயேசுவைக் குறித்து சான்று பகர்கின்றவராக இருப்பதோடு மட்டுமல்லாமல், நாம் இயேசுவைக் குறித்து சான்று பகர்வதற்கும் துணையாய் இருக்கின்றார் என்பது உண்மையாகின்றது.

ஆண்டவர் இயேசு யார் எப்படிப்பட்டவர் என்பதை இன்றைய இரண்டாம் வாசகம் மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது .தூய பவுல், "நாம் கிறிஸ்துவின் பங்காளிகள் என்பார். கிறிஸ்து நமக்குப் பங்காளி என்றால், அவர் நம்முடைய சகோதரர் என்பதே உண்மை. எப்படிப்பட்ட சகோதரர் என்று பார்க்கும்போது, நமது மீட்புக்காக துன்பங்களையும், பாடுகளையும் ஏற்றுக்கொண்ட சகோதரர் என்றுதான் சொல்லவேண்டும். ஆகையால், இயேசுவை நம்முடைய சகோதரர், நமக்காக துன்பப்பட்ட சகோதரர் என்றுதான் நாம் சொல்லவேண்டும்.

சகோதர அன்பிற்கு உதாரணமாகச் சொல்லப்படுகின்ற ஒரு கதை.

அது அறுவடைக் காலம். அப்போது ஓர் ஊரில் இருந்த உடன்பிறந்த சகோதரர்கள் இருவர் அவ்வூரில் இருந்த பண்ணையாரை அணுகி, "ஐயா! நாங்கள் இருவர் மட்டுமே சேர்ந்து உங்கள் வயலில் விளைந்திருக்கும் நெல்லை அறுத்து அதனை மூட்டையாகக் கட்டி களஞ்சியத்தில் சேர்கின்ற வரை எல்லா வேலைகளையும் செய்து தருகின்றோம். ஆனால், நீங்கள் எங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளமாகத் தரவேண்டும். அது சம்மதமில்லை என்றால், நாங்கள் வேறு ஆட்களைப் பார்த்துக்கொள்கின்றோம்" என்றார்கள். அதைக் கேட்ட பண்ணையார், "நீங்கள் இருவரும் மட்டுமே வேலைசெய்வது என்பது நல்லதுதான். ஆனால், பத்தாயிரம் என்பது அதிகமான தொகை. ஏன் இவ்வளவு பெரிய தொகையைக் கேட்கின்றீர்கள். இந்த பத்தாயிரம் ரூபாயை வைத்துக்கொண்டு அப்படி என்ன செய்யப் போகின்றீர்கள்?" என்று கேட்டார்.

அதற்கு சகோதர்களில் ஒருவன் அவரிடம், "ஐயா! எங்களோடு பிறந்தது மொத்தம் மூன்று பேர். நான், இவன், வீட்டில் இருக்கின்ற இன்னொரு சகோதரன். அந்த சகோதரனோ கால் ஊனமுற்றவன், அவனால் எங்கேயும் சென்று வேலை செய்யமுடியாது. அவனுடைய வாழ்க்கையையும் நாங்கள் பார்க்கவேண்டும் அல்லவா, அதனால்தான் அவனுக்கும் சேர்த்து நாங்கள் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாகக் கேட்கின்றோம்" என்றார். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த பண்ணையார் அவர்கள் இருவரும் தங்களுடைய கால் ஊனமுற்ற சகோதரன் மீது கொண்டிருக்கும் அன்பைக் கண்டு மெச்சினார்.

பின்னர் அவர் அவர்களிடம், "நீங்கள் சொன்னவாறே வேலையைச் செய்துமுடித்துத் தந்தால், நான் உங்களுக்கு நீங்கள் கேட்ட தொகையினைத் தருகின்றேன்" என்றார். அவர்களும் சரி என்று சொல்லிவிட்டு வேலையைத் தொடங்கினார்கள். ஏறக்குறைய ஒருவார காலம் அவர்கள் கடுமையாக உழைத்து, பண்ணையாரின் நிலத்தில் விளைந்திருந்த நெல்லை அறுத்து, அவற்றை அவருடைய களஞ்சியத்தில் சேர்த்தார்கள். சகோதரர்கள் இருவரும் செய்த வேலைப் பார்த்துவிட்டு, "நான் நினைத்ததைவிடவும் மிக நன்றாக வேலை செய்திருக்கின்றீர்கள். அதனால் நீங்கள் கேட்டதைவிடவும் அதிகமான தொகையை, நான் உங்களுக்கு சம்பளமாகத் தருகின்றேன். இதை வைத்து உங்களுடைய சகோதரனை நன்றாகப் பராமரித்துக்கொள்ளுங்கள்" என்றார்.

தங்களோடு பிறந்த கால் ஊனமுற்ற சகோதரனுக்காக அந்த சகோதர்கள் இருவர் கஷ்டங்களையும் துன்பங்களையும் அனுபவித்தது போன்று, இயேசு கிறிஸ்துவும் அவருடைய சகோதர சகோதரிகளுக்காக - நமக்காக - பல்வேறு துன்பங்களையும், பாடுகளையும் அனுபவித்தார் என்பதுதான் உண்மை. அவர் பட்ட பாடுகளின் வழியாக அவர், தன்னுடைய சகோதர சகோதரிகளாகிய நம்மீது எத்துணை அன்பு கொண்டிருக்கின்றார் என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். ஆகையால், இயேசுவை நம்முடைய சகோதரன் என அழைப்பதில் நாம் பெருமை கொள்ளலாம்.

இதுவரைக்கும் மூவொரு கடவுள் எப்படிப்பட்டவர் என்று சிந்தித்த நாம், இந்த மூவொரு கடவுள் நம்மிடம் எத்தகைய பணியைச் செய்ய அழைப்புவிடுக்கின்றார், அவருடைய பணியைச் செய்யும்போது அவருடைய பாதுகாப்பு எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொல்வார், "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள். தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைபிடிக்கும்படி கற்பியுங்கள்" என்று. ஆம், நற்செய்தியை அறிவிப்பதும், ஆண்டவர் இயேசு கட்டளையிட்டவற்றை மக்கள் கடைபிடிக்கச் செய்வதுதான் அவருடைய வழியில் நடக்கும் நம் ஒவ்வொருவருடைய கடமையாக இருக்கின்றது.

நற்செய்தி அறிவிப்பு என்பது வெறுமென ஆண்டவருடைய வார்த்தைகளைப் மக்களுக்குப் போதிப்பது மட்டும் இல்லை, அதனை நாம் வாழ்ந்து காட்டுவது, நம்முடைய வாழ்வையே நற்செய்தியாக மக்களுக்கு விளங்கச் செய்வது, தேவைப்பட்டால் உயிரையும் தருவது அதுதான் உண்மையான நற்செய்தியாக இருக்கும். நாம் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை வார்த்தைகளால் மட்டுமல்ல, வாழ்வாலும் அறிவித்து, மக்களை ஆண்டவர் பக்கம் கொண்டுவருகின்றபோது அதுதான் மிகச் சிறந்த நற்செய்தி அறிவிப்புப் பணியாக இருக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.

ஆண்டவர் இயேசு நமக்குக் கொடுத்த நற்செய்தி அறிவிப்புப் பணியினைச் செய்கின்றபோது அவருடைய பராமரிப்பு எப்படி இருக்கும் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துரைக்கத் தவறவில்லை. இன்றைய நற்செய்தியின் இறுதியில் நாம் வாசிக்கின்றோம், "இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களோடு இருக்கின்றேன்" என்று. ஆம். தன்னுடைய பணியினைச் செய்கின்ற இறையடியார்களை ஆண்டவர் இயேசு ஒருபோதும் கைவிடுவதில்லை, அவர்களைக் கண்ணின் கருவிழி போல பார்த்துக்கொள்வார் என்பதுதான் நிதர்சனம்.

ஆகவே, மூவொரு இறைவனின் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நாளில், அவர்களிடம் இருக்கும் அன்பையும், அவர்கள் நம்மீது செலுத்தும் அன்பினையும் உணர்ந்துகொள்வோம், அது மட்டுமல்லாமல், இந்த நாளில் அவர் நமக்கு விடுக்கின்ற நற்செய்தி அறிவிப்புப் பணியினை சிறப்புடன் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மூவொரு கடவுள் விழா

(மறையுரை சிந்தனைகளின் தொகுப்பு)

இணைச்சட்டநூல் 4: 32-34, 39 -40

1; இறைவன் தரும் வாழ்வு

இறைவன் தான் நமக்கு எல்லாமுமாக இருக்கிறார், அந்த இறைவனுக்கு நாம் கீழ்ப்படிதலுள்ளவர்களாக வாழ வேண்டும் என்பதுதான் இந்த பகுதி நமக்கு தரப்படுகிற செய்தி. இஸ்ரயேல் மக்களைப் பொறுத்தவரையில், இறைவன் தான் இந்த உலகத்தைப் படைத்தார் என்பதில் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தனர். அதேவேளையில் அவர்கள் மற்ற நாட்டு தெய்வங்களையும் மறுக்கவில்லை. ஆனால், அவர்களை விட, தாங்கள் வழிபடுகிற இறைவன் வல்லமை மிகுந்தவர் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தனர். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடு தான், இந்த பகுதியாக அமைகிறது.

கடவுள் மக்களிடமிருந்து எதிர்பார்ப்பது வேறொன்றுமில்லை. அவருடைய கட்டளைகளை நாம் கடைப்பிடித்து வாழ வேண்டும் என்பது மட்டும் தான். இறைவன் இஸ்ரயேல் மக்களை தன் சொந்த இனமாக தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர்கள் வழியாக இந்த உலகத்திற்கு மீட்பு கொடுக்க வேண்டும் என்பதுதான் அவருடைய திருவுளம். அதற்காகத்தான் இஸ்ரயேல் மக்களை அவர் தேர்ந்தெடுத்தார். இஸ்ரயேல் மக்களை அந்த பணியை நிறைவாகச் செய்வதற்காக ஒரு சில கட்டளைகளைக் கொடுக்கிறார். ஒரு புனிதமான பணிக்கு, இந்த உலகத்திற்கு மீட்பு வழங்கும் பணிக்கு அழைக்கப்பட்டிருக்கும் இஸ்ரயேல் மக்கள் அடிப்படையில், ஒரு சில விழுமியங்களைக் கொண்டிருக்க வேண்டும். அந்த விழுமியங்களைக் கற்றுக்கொடுப்பதுதான் கடவுள் கொடுத்த சட்டங்கள்.

நம்முடைய வாழ்விலும் இறைவன் நிறைவாக வாழ ஆசீர்வதிக்க திருவுளம் கொண்டிருக்கிறார். அதற்கு நாம் இறைவனின் குரலுக்கு செவிமடுக்க வேண்டும். அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். அப்போது, நாம் மகிழ்ச்சியுள்ளவர்களாய் வாழ முடியும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
----------------------------------------------------

2; இயேசுவின் அதிகாரம்

இயேசு தனது அதிகாரத்தை சீடர்களுக்கு கொடுக்கிறார். இயேசு உயிரோடு, அவர்களில் ஒருவராக வாழ்ந்தபோதும், சில இடங்களுக்குப் போதிப்பதற்கு அனுப்புகிறார்.அப்போதும் அவர் அவர்களுக்கு அதிகாரம் வழங்குகிறார். இப்போது, உயிர்த்து விண்ணகம் செல்வதற்கு முன்னதாக, தனது சீடர்களுக்குப்போதிக்கிறார். இரண்டிற்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது.

இரண்டுமே அதிகாரம் தான். ஆனால், உயிர்த்தபிறகு கொடுத்த அதிகாரம், சீடர்களுக்கு உண்மையிலே வலிமையைத் தந்திருக்கும். ஏனென்றால், இப்போது அவர்களே உணர்ந்து கொண்டார்கள். இயேசுவின் வல்லமையை அனுபவித்துவிட்டார்கள். எனவே, முன்னைய போதித்தலைவிட இப்போது நிச்சயமாக அவர்களிடத்தில், நம்பிக்கை அதிகமாக இருந்தது. வேகம் அதிகமாக இருந்தது. எத்தகைய துன்பம் வந்தாலும், அதை எதிர்த்து நிற்கலாம் என்கிற வேகம் அவர்களுக்குள்ளாக வந்தது. அந்த வேகம்தான், மூவொரு இறைவனின் மகிமையை, உன்னதத்தை, மாட்சிமையை உலகிற்கு எடுத்துரைப்பதற்கு உதவியாக இருக்கப்போகிறது.

சீடர்களிடம் இருந்த அந்த வேகம், ஆண்டவரின் நற்செய்தியைப் போதிக்க வேண்டும் என்கிற உற்சாகம் ஒவ்வொரு கிறிஸ்தவர்களிடம் இருக்க வேண்டும். அந்த உற்சாகம், ஒவ்வொருநாளும் அதிகப்பட வேண்டும். நம்பிக்கையோடு, ஆண்டவரைநோக்கி வருவதற்கு, அது உதவியாக இருக்க வேண்டும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
-------------------------------------------------------------


3; மூவொரு இறைவனை வணங்குவோம்!

மத்தேயு நற்செய்தியின் இறுதிப் பகுதியில்தான் மூவொரு இறைவனின் பெயர்கள் ஒரு சொற்கோவையாக (Trinitarian formula) நமக்குத் தரப்பட்டுள்ளன. "நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள். தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்" (மத் 28: 19) என்று வாசிக்கிறோம்.

இறைவன் ஒரே கடவுளாக, அதே வேளையில் மூன்று ஆள்களாக இருப்பது ஓர் இறையியல் மறைபொருள் (mystery). இந்த மறைபொருளை மானிட அறிவாற்றலால் புரிந்துகொள்ள முடியாது, இறைநம்பிக்கையால் ஏற்றுக்கொள்ளவே முடியும். இயேசுகிறிஸ்துவால் வெளிப்படுத்தப்பட்ட இந்த மறையுண்மையை ஓர் அடிப்படை விசுவாசக் கோட்பாடாக நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

இயேசு வழியாகவே நாம் தந்தையை அறியவும், புரியவும் முடியும். அவரே இறைவனை நமது "வானகத் தந்தை" (மத் 6: 9) என்று நமக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவரே இறைத் தந்தையின் மண்ணக முகமாக, அடையாளமாக இருக்கிறார். இயேசு " கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும்" (எபி 1:3) விளங்குகிறார் என்று எபிரேயர் திருமடலில் வாசிக்கிறோம்.

அதுபோல, இயேசுவே தூய ஆவியாரையும் நமக்கு அறிமுகம் செய்துவைத்தார். தந்தையிடமிருந்து புறப்படும் ஆவியானவர், "அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூயஆவியார்" (யோவா 15:26) என்றார் இயேசு.

இவ்வாறு, தந்தை, மகன், தூய ஆவியார் என்னும் மூன்று ஆள்களும் ஒரே ஞானமும், ஒரே வல்லமையும், ஒரே மாட்சியும் நிறைந்தவர்கள் என்று நாம் விசுவசிக்கிறோம். அத்துடன், இந்த மூன்று ஆள்களும் சரிசம வணக்கமும், மாட்சியும், ஆராதனையும் பெறுகின்றனர் என்றும் நாம் அறிகின்றோம்.

இந்த இறையியல் பின்னணியில் நாமும் நாள்தோறும் மூவொரு இறைவனுக்கு வணக்கமும், மாட்சியும் செலுத்துவதைக் கடமையாகக் கொள்வோம். பொதுவாக நமது செபங்கள் இயேசுவை நோக்கியே சொல்லப்படுபவையாக இருத்தல் சரியன்று. இயேசு வழியாக, இறைத் தந்தையை நோக்கி அமைதலே சாலவும் நன்று. எனவேதான், திருப்பலியின் பெரும்பாலான மன்றாட்டுகள் இயேசு வழியாக, இறைத் தந்தையை நோக்கி எழுப்பப்படுவனவாக அமைந்துள்ளன. "எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்" என்றே நிறைவடைகின்றன. ஆகவே, நாள்தோறும் மூவொரு இறைவனின் பெயரைச் சொல்லி, மூவருக்கும் சமமான புகழ்ச்சியும், நன்றியும், மாட்சியும் செலுத்தக் கற்றுக்கொள்வோமாக,

மன்றாடுவோமாக:
தந்தையே, உமக்குப் புகழ், நன்றி, மாட்சி
இயேசுவே உமக்குப் புகழ், நன்றி, மாட்சி
தூய ஆவியே உமக்குப் புகழ், நன்றி, மாட்சி.
மூவொரு இறைவா உமக்குப் புகழ், நன்றி, மாட்சி.

ஆமென்.



4;இயேசு பதினொரு சீடர்களையும் அணுகி,..."இதோ! உலக முடிவுவரை எந்நாளும்
நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று கூறினார் (மத்தேயு 28:20)

சரணாலயம் சரணாலயம் இயேசுவின் திருவடி சரணாலயம்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- மத்தேயு நற்செய்தியின் முடிவில், இயேசு சீடர்களுக்குத் தோன்றி, அவர்கள் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்க வேண்டும் என்னும் கட்டளையைக் கொடுக்கிறார் (மத் 28:16-20). சாவிலிருந்து உயிர்த்தெழுந்த இயேசு தம் சீடர்களோடு தொடர்ந்து இருப்பதாகவும் வாக்களிக்கிறார் (மத் 28:20). இது மத்தேயு நற்செய்தியின் தொடக்கத்தை நமக்கு நினைவூட்டுகிறது. அங்கே, இயேசு" இம்மானுவேல்" என்னும் பெயரால் அறிமுகம் செய்யப்பட்டார்." இம்மானுவேல் என்றால்"கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள் என மத்தேயு தம் வாசகர்களுக்கு நினைவூட்டுகிறார் (மத் 1:22-23). இயேசு வழியாகக் கடவுள் தம்மை முழுமையாக வெளிப்படுத்தி, அவர் வழியாக நம்மோடு இருக்கிறார் என்னும் உண்மை நமக்கு ஆறுதல் தருகின்றது. இயேசு சாவிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதைச் சீடர் ஏற்றுக்கொண்டாலும்"'சிலர் ஐயமுற்றார்கள்" (மத் 20:17). கடவுளையும் அவர் நம்மிடையே அனுப்பிய இயேசுவையும் நாம் நம்பிக்கையோடு ஏற்கிறோம் என்றாலும் நம் நம்பிக்கை எப்போதுமே அசையாத உறுதி கொண்டதாக இருக்கும் என்று கூற முடியாது."'ஐயம்" என்பதற்கு அங்கே இடம் உண்டு. ஆனால் நாம் நம்பிக்கையை இழக்காமல் நிலைத்திருக்க வேண்டும். ஏனென்றால் இயேசு"'உலக முடிவுவரை நம்மோடு இருக்கிறார்" (காண்க: மத் 28:20).

-- சீடர்களுக்குத் தோன்றிய இயேசு அவர்களுக்கு வழங்கிய கட்டளையில் மூன்று அம்சங்கள் உள்ளன. அவர்கள் எல்லா மக்களையும் சீடராக்க வேண்டும்; தந்தை மகன் தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுக்கவேண்டும்; இயேசு அளித்த கட்டளைகளை மக்களுக்குக் கற்பிக்க வேண்டும். இக்கட்டளையைத் திருச்சபை தொடர்ந்து செயல்படுத்த அழைக்கப்படுகிறது. இயேசு ஒரு சில மனிதரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குக் கடவுளாட்சி பற்றிக் கற்பித்து, அவர்களைத் தம் சீடராக மாற்றியதுபோல, இன்றும் திருச்சபை இயேசுவின் பெயரால் நற்செய்திப் பணியைத் தொடர வேண்டும். இப்பணியை ஆற்றுவதற்கான ஆற்றலை நாம் இயேசுவிடமிருந்து பெறுகிறோம். திருச்சபை எல்லா மக்களினத்தாரையும் சீடராக்க" அனுப்பப்படுகிறது. இயேசுவின் பணி பெரும்பாலும் யூதர்கள் நடுவே நிகழ்ந்தது. ஆனால், உலகில் உள்ள அனைத்து மக்களும் கடவுளின் மீட்பில் பங்கேற்க அழைக்கப்படுவதால் எல்லாருக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என இயேசு தம் சீடர்களுக்குக் கட்டளை அளிக்கிறார். அக்கட்டளையை நாம் ஏற்று, நற்செய்திப் பணியில் முழுமையாக நம்மை ஈடுபடுத்த வேண்டும். நற்செய்தியால் நம் வாழ்வு உருமாற்றம் பெற வேண்டும். அப்போது நாம் கடவுள் மனிதரிடையே வாழ்கின்றார் என்னும் உண்மைக்குச் சான்றுகளாக மாறுவோம்.

மன்றாட்டு
இறைவா, உம் அன்புக்கு நாங்கள் சாட்சி பகர எங்களுக்கு அருள்தாரும்.



--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்
-----+--------+----------


5; எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

மார்ச் 20, 2008 தினமலர் செய்தி : தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளும், " டூம்ஸ் டே" என்ற வழிபாட்டு அமைப்பு, ரஷ்யாவில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், வரும் மே மாதத்துடன் உலகம் அழியப் போவதாகவும், அதுவரை அவர்கள் தனிமையில் பிரார்த்தனை மேற்கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்காக கடந்த அக்டோபரில் இருந்து ரஷ்யாவின் பென்சா மலைப் பகுதியில் ஒரு குகையில் வழிபாடு நடத்தி வருகின்றனர். அவர்கள் உலகம் அழியும் வரை, இந்த குகையில் இருந்து வெளியே வர மாட்டோம் என மறுத்து வருகின்றனர். இவர்களை வெளியே கொண்டு வர, துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணேற்பு இப்படி தவறாக புறிந்துகொள்ளப்பட்டுள்ளது. விண்ணேற்படைந்த இயேசுவின் கடைசி வேண்டுகோளை ஆழ்ந்து தியானிப்போம். "விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்." அனைத்து அதிகாரத்தையும் பயன்படுத்தி, நாம் வாழும் இப்பூமியை, அதன் மனிதர்களோடு, அவர்களின் கலாச்சாரத்தோடு, புதிய வானமாக, புதிய பூமியாக, புதிய எருசலேமாக மாற்றி, புதுப்படைப்பாக்க வேண்டும்; மூவொரு இறைவன் பெயரால் திருநிலைப்படுத்தப்பட்ட இச் சீடர்கள் இப்பணியை இவ்வுலகில் உலகம் முடியும் வரை தொடர்ந்து ஆற்ற வேண்டும்.

"உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்ற நற்கருணை தெய்வம், அன்புச் சமூகம் உருவாக்கும் பணியைச் செய்ய நம்மை அழைக்கிறார். அதுவே அனைவரின் விண்ணேற்பு. அந்த விண்ணக வாழ்வை இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 நான் உங்களோடு!

இணைச்சட்டம் 4:32-34, 39-40
உரோமையர் 8:14-17
மத்தேயு 28:16-20

"லைக் தெ ஃப்ளோயிங் ரிவர்" என்ற தனது புத்தகத்தில்"பவுலோ கொயலோ' பின்வரும் நிகழ்வைப் பதிவு செய்கின்றார்: "பைஜாமா அணிந்த மனிதர்." 2005ம் ஆண்டு மே மாதம் 25ம் நாள் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரின் ஒரு செய்தித்தாளின் ஆன்லைன் பதிப்பில்"பைஜாமா அணிந்த ஒருவர் இறந்து கிடந்தார்' என்ற செய்தி வந்தது. யாராவது ஒருவர் இறந்தால் அவர் இல்லத்தில் அல்லது மருத்துவமனையில் தம் நண்பர்கள், உறவினர்கள் சூழ இருந்திருப்பார். அவர் இறந்த இடம் இல்லமோ, மருத்துவமனையோ அல்ல. பாழாய்ப்போய்க் கிடந்த 25 மாடிக் கட்டிடத்தை உடைக்க தொழிலாளர்கள் சென்றபோது ஒரு அறையில்"பைஜாமா அணிந்த ஒருவர் படுத்துக்கிடந்தார். பைஜாமா அணிந்த ஒரு எலும்புக்கூடு படுத்துக்கிடந்தது. அந்த எலும்புக்கூட்டின் அருகே 1985ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் நாள் வெளியான செய்தித்தாள் ஒன்று கிடந்தது. அங்கே விரித்து வைக்கப்பட்டு தூசி நிரம்பியிருந்த மேசை நாட்காட்டியும் அதே நாளைத்தான் காட்டியது.இவர் யார் என்று விசாரித்தபோது, இவர் ஒரு பெரிய பிஸினஸ்மேன் என்றும், இவருடைய தொழிலில் நஷ்டம் ஏற்பட்டபின் இவருடைய மனைவி இவரைவிட்டுப் பிரிந்துவிட்டார் என்றும், இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை என்றும் கண்டுபிடிக்கின்றனர்.

ஏறக்குறைய 20 ஆண்டுகள் ஒருவர் இந்தப் பூமிப்பந்திலிருந்து மறைந்து போயிருக்கிறார். அவரைத் தேடியவர் யாருமில்லை. டோக்கியோ நகரம் மின்னணு இணைப்பில் மேலோங்கி நிற்கின்ற நகரம். இப்படிப்பட்ட நகரத்திலும் தொலைந்துபோன இவரைத் தேடியவர் யாரும் இல்லை.

பைஜாமா அணிந்து கிடந்த இந்த மனிதர் அனுபவித்த ஒரே உணர்வு தனிமை. தனிமை என்பது ஒரு உணர்வு மட்டுமல்ல. அது ஒரு செயல்பாடு. ஏனெனில் அந்த உணர்வு ஒருவருக்கு வந்தவுடன் அவர் மற்றவர்களைவிட்டு தனியே சென்றுவிடுகின்றார். அல்லது தனித்துவிடப்படுகின்றார்.

இன்று மூவொரு இறைவன் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். தனிமை இனிமை அல்ல என்று நமக்கச் சொல்கிறது இன்றைய பெருவிழா.

'இவ்வாறு, முதலும் முடிவுமற்ற உண்மையான இறைத்தன்மையை அறிக்கையிடும்போது,

ஆள்வகையில் தனித்தன்மையையும்,

இறையியல்பில் ஒருமையையும்,

மகத்துவத்தில் சமத்துவத்தையும் ஆராதிக்கின்றோம்!'

என்று இன்றைய நாளின் மறைபொருளைப் பதிவு செய்கிறது இன்றைய திருப்பலியின் தொடக்கவுரை (பழைய மொழிபெயர்ப்பு).

மூவொரு இறைவனில் காணப்படும் தனித்தன்மையும், ஒருமையும் தனிமை அன்று. மாறாக,"இதோ நான் உங்களோடு இருக்கிறேன்' என்று அவர்கள் ஒருவர் மற்றவருக்குத் தரும் வாக்குறுதி.

மனிதன்-மனிதை ஒரு சமூகப் பிராணி - ஆகையால்தான் இவர்கள் தனிமையை உணர்கிறார்கள் - என்கிறது சமூக அறிவியல்.

குறைவு மனப்பான்மை (sense of lack), இழப்பு (sense of loss), அன்பு (sense of love)' - இந்த மூன்றும்தான் மனித தனிமை உணர்வுக்கான அடிப்படையான காரணிகள் என்கிறது உளவியல். குறைவு மனப்பான்மை என்பது நமக்கு எல்லாம் இருந்தும் நாம் மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டு, "நான் அடுத்தவரைப் போல இல்லையே" என்று சொல்லும் மனநிலை. இந்த மனநிலையில் அடுத்தவர் எதிரிபோல நமக்குத் தோன்றுவதால் நாம் அவரிடமிருந்து மெதுவாக விலகிவிடுகிறோம். இழப்பு நமக்கு உரிமையான ஒன்றை அல்லது ஒருவரை இழக்கும்போது வருகிறது. நம்மிடமிருந்த வீடு அல்லது பணம் பறிபோய்விட்டால், அல்லது நமக்குரியவர் ஒருவர் இறந்துவிட்டால் மற்றவர்மேல் - அது கடவுளாக இருந்தாலும் - நாம் நம்பிக்கையை இழந்துவிடுகிறோம். அடுத்தவர் நம்மை ஏமாற்றிவிட்டார் என்ற உணர்வு நம்மைத் தனிமையில் தள்ளிவிடுகிறது. குறைவு மனப்பான்மையும், இழப்பும் நமக்குத் தனிமையைத் தருகின்றன என்பது சரி. ஆனால், அன்பு எப்படி தனிமையைக் கொண்டுவரமுடியும்? நாம் நமக்கு உரியவரை, விருப்பமானவரை அன்பு செய்தாலும் நம்மிடமிருக்கின்ற அன்பு என்ற அந்த உணர்வு அடங்கிவிடுவதில்லை."இன்னும் நான் நிறைய பேரை அன்பு செய்ய வேண்டும்?" என் வாழ்வு நிறைய பேரைத் தொட வேண்டும்? என்ற ஏக்கத்தை அது நம்மில் உருவாக்கிவிடுகிறது. இந்த நிலையில்தான் நாம் புதிய வேலை, புதிய நண்பர்கள், புதிய சுற்றத்தார் என புதியவற்றைத் தேட ஆரம்பிக்கிறோம். இந்தத் தேடலே நம்மைத் தனிமையில் விட்டுவிடுகிறது. ஏனெனில் இந்தப் புதிய தேடலில் நாம் புதியவற்றோடும் இல்லாமல், பழைய நண்பர்களோடும் இல்லாமல் போய்விடுகிறோம். முதல் இரண்டு தனிமை காரணிகளும் சீக்கிரம் மறைந்துவிடும். ஆனால், இந்த மூன்றாம் காரணி நம் வாழ்வு முழுவதும் நம்மைத் தொற்றிக்கொண்டே வருகிறது.

மூவொரு இறைவனின் மறைபொருளை நாம் புரிந்துகொள்ள முடியுமா? விவிலியமும் பாரம்பரியமும் இதற்கு மூன்று முயற்சிகள் எடுத்துள்ளன:

1. விவிலியம் காட்டும் மூவொரு இறைவன். தொநூ 1:1ல் (மற்றும் 1:26, 3:22, 11:7, எசாயா 6:8, 48:16, 61:1) கடவுளின் பெயர் 'எலோஹிம்' (கடவுள்கள்!) எனக் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதான் மூவொரு இறைவனுக்கு முதல் அடிக்கல். கடவுள் தன்னை ஒருமையில் அல்ல, பன்மையில் அழைக்கிறார். இப்படிப் பலராக இருக்கும் கடவுள் பலர் அல்லர், ஒருவரே என்றும் உறுதியாகச் சொல்கிறது விவிலியம் (இச 6:4, 1 கொரி 8:4, கலா 3:20, 1 திமொ 2:5). சில இடங்களில் தந்தை என்னும் கடவுள் தன் மகனிடம் உரையாடுவதாகவும் நாம் வாசிக்கின்றோம் (எசா 48:16, 61:1, லூக் 4:14-19). இயேசுவின் திருமுழுக்கின் போது தந்தையாகிய இறைவன் பேசுவதாகவும், தூய ஆவியானவர் புறா வடிவில் இறங்குவது போலவும், மகனாகிய இயேசு யோர்தான் நதிக்கரையில் நின்று கொண்டிருப்பதாகவும் எழுதுகிறார் மத்தேயு (3:16-17)."தந்தை-மகன்-தூய ஆவி' என்று திருமுழுக்கு ஃபார்முலா ஒன்றைச் சொல்லிக்கொடுக்கின்றார் இயேசு (மத் 28:19). 'ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!' என்று கொரிந்து நகரத் திருச்சபையை வாழ்த்தி தன் மடலை நிறைவு செய்கின்றார் பவுலடியார். (இந்தப் பவுலடியாரின் வார்த்தைகளைக் கொண்டே நாம் திருப்பலியின் தொடக்கத்தில் இறைமக்களையும் வாழ்த்துகின்றோம்!). மூவொரு இறைவன் தங்களுக்குள் தனித்தன்மை கொண்டிக்கிறார்கள் (தொநூ 19:24, ஓசே 1:4, திபா 2:7, நீமொ 30:2-4, எண் 27:18) என்றும், தமதிருத்துவத்தின் ஒவ்வொரு நபரும் கடவுள் (யோவா 6:27, உரோ 1:7. 1பேதுரு 1:2, யோவா 1:1, திப 5:3-4, 1 கொரி 3:16) என்றும் நாம் வாசிக்கின்றோம். மேலும் தமதிருத்துவத்தின் ஒவ்வொரு ஆளுக்கும் ஒவ்வொரு பணி இருக்கின்றது (1 கொரி 8:6, திவெ 4:11, யோவா 3:16-17, 14:10). மேலும் ஆபிரகாமை மம்ரே என்ற இடத்தில் கடவுள் சந்தித்த போதும் (தொநூ 18:2), இயேசு தாபோர் மலையில் உருமாறிய போதும் (மத் 17:1-13), அன்னை மரியாளுக்கு மங்கள வார்த்தை அறிவித்த போதும் (லூக் 1:5), இயேசுவின் அருள்மொழிகளிலும் (மத் 11:27, யோவா 1:18) மூவொரு இறைவனின் வெளிப்படுதலை விவிலியத்தில் பார்க்கின்றோம்.

2. தமதிருத்துவத்தை இரண்டு நிலைகளில் புரிந்து கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன: (அ) இயல்புசார்ந்த தமதிருத்துவம், (ஆ) பணிசார்ந்த தமதிருத்துவம். இயல்புசார்ந்த புரிதலில், தந்தை, மகன், தூய ஆவியார் மூன்றுபேரும் கடவுள் என்பதும், ஒருவரின் பிரசன்னம் மற்றவரோடு தொடர்புடையதல்ல என்றும் சொல்லப்படுகி;றது. பணிசார்ந்த புரிதலில், தமதிருத்துவத்தின் ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு வேலையைச் செய்கின்றனர் (தந்தை - படைப்பது, மகன் - மீட்பது, தூய ஆவி - பராமரிப்பது) என்று சொல்லப்படுகிறது. முதல் ஏற்பாட்டு காலத்தை 'தந்தையின்' காலம் என்றும், நற்செய்தி நூல்களை"மகனின்' காலம் என்றும், திருத்தூதர் பணிகள் மற்றும் மடல்களை"ஆவியின்' காலம் என்றும்கூட சிலர் பிரிக்கின்றனர். பணிசார்ந்த புரிதல் இந்து மதத்திலும் இருக்கின்றது. பிரம்மா-விஷ்ணு-சிவா என்னும் மும்மூர்த்திகள் முறையே படைத்தல்-காத்தல்-அழித்தல் வேலைகளைச் செய்கின்றனர். ஆனால், இவர்கள் மூன்று-ஆள்-ஒரு-கடவுள் அல்லர். மாறாக, மூன்று-ஆள்-மூன்று-கடவுள்கள்.

3. தமதிருத்துவமும் உருவகங்களும். ஒன்றின் பொருளை மற்றொன்றோடு தொடர்பு படுத்தி அறியச் செய்பவை உருவகங்கள். தந்தை-மகன்-தூய ஆவி என்பதை கணவன்-மனைவி-பிள்ளை (தந்தை-தாய்-பிள்ளை) என குடும்ப உறவு உருவகம், திடம்-திரவம்-ஆவி என தண்ணீர் உருவகம், ஓடு-வெள்ளை-மஞ்சள்கரு என முட்டை உருவகம், கிளாவர் எனப்படும் இலை உருவகம், முக்கோணம் உருவகம் என நாம் உருவகங்களைக் கையாளுகின்றோம்;. ஆனால் உருவகங்கள் வெறும் நிலவைச் சுட்டிக்காட்டும் விரல்கள்தானே தவிர அவைகள் நிலவு அல்ல என்பதை நாம் மனதில் வைக்க வேண்டும். உருவகங்கள் எந்த அளவுக்கு எதார்த்தத்தை வெளிப்படுத்துகின்றனவோ, அந்த அளவுக்கு எதார்த்தை மறைக்கவும் செய்கின்றன. சில நேரங்களில் உருவகங்கள் ஆபத்தானவைகளாகவும் இருக்கின்றன. உதாரணத்திற்கு, என் அப்பா எந்நேரமும் வீட்டில் சண்டையிடுபவராக, என் அம்மாவை அடிப்பவராக, பிள்ளைகளிடம் கோபப்படுபவராக இருந்தால், நான் எப்படி தந்தை அன்பானவர் என்றும் அந்த அன்பே தூய ஆவியானவர் என்றும் உணர முடியும். மேலும், தந்தை-தாய்-பிள்ளை என தமதிருத்தவத்தை உருவகிக்கும்போது மற்றொரு பிரச்சனையும் வருகிறது. தமதிருத்துவத்தில் வரும் மூன்று பேரும்"ஆண்கள்'. அவர்களுக்கு 'மனைவி' அல்லது"தாய்' என்ற உருவகம் எப்படிப் பொருந்தும்?

இப்புரிதல் ஓரளவுக்கு தெளிவாக இருந்தாலும், தொடக்கத் திருஅவையிலும் இன்றும் தமதிருத்துவம் பற்றி ஏகப்பட்ட கேள்விகள் எழுகின்றன:

அ. இயேசு மனிதராகப் பிறந்தபோது தமதிருத்துவத்தில் குறை ஏற்பட்டதா?

ஆ. இயேசு பிறப்பிலேயே கடவுளின் மகனா, அல்லது"நீ என் அன்பார்ந்த மகன்' என்று திருமுழுக்கின்போது தத்தெடுக்கப்பட்டாரா? (அடாப்ஷன்)

இ. இயேசு சிலுவையில் இறந்தபோது, அவர் மட்டும் இறந்தாரா? அல்லது அவரோடு சேர்ந்து மூவொரு இறைவனும் இறந்தாரா? அவர் மட்டும் இறந்தாhர் என்றால் அவர் எப்படி இறைவனாக இருக்க முடியும்? மூவொரு இறைவனும் இறந்தார் என்றால், அந்த இரண்டு நாட்கள் நாம் கடவுள் இல்லாமல் இருந்தோமா?

ஈ. இவர்கள் மூவரும் மூன்று கடவுளர்களா?

உ. தந்தை-மகன் என்று நாம் அழைக்கும்போதே, ஒருவர் மற்றவரைவிட மேலாக அல்லது முதன்மையாக இருக்கிறார் என்று ஆகிவிடுகிறது இல்லையா? (சப்ஆர்டினேஷனிசம்)

ஊ. கடவுள் ஒருவர்தான். ஆனால் அவர் மூன்று பேராக தன்னை வெளிப்படுத்தியிருக்கின்றார். முதல் ஏற்பாட்டில் யாவே என்றும், இரண்டாம் ஏற்பாட்டில் இயேசு என்றும், தொடர்ந்து திருச்சபை வரலாற்றில் தூய ஆவி என்றும் தன்னை வெளிப்படுத்துகின்றார். (மோடலிசம்). ஆக, தமதிருத்துவம் என்பது ஒரு வெளிப்பாடே அன்றி அது இறைஇயல்பு அல்லவே?

எ. எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுளை மனிதர் என்று சொல்வது மனித இனம் மற்ற உயிர்களிடமிருந்து தன்னைத்தானே உயர்த்திக்கொள்ளும் ஆணவத்தின் வெளிப்பாடு இல்லையா?

இந்தக் கேள்விகளையும் தாண்டி நாம் மூவொரு இறைவன் என்னும் மறைபொருளை நம்பவும், புரிந்துகொள்ளவும் வேண்டுமெனில், நாம், 'தமதிருத்துவம் எப்படி?' என்ற கேட்பதை விடுத்து, 'தமதிருத்துவம் ஏன்?' என்று கேட்க வேண்டும்.

இன்றைய முதல் வாசகத்தில் மோசே இஸ்ரயேல் மக்களிடம் ஆண்டவராகிய இறைவனின் அரும்பெரும் செயல்களைத்"தெரிந்துகொள்ளவும்,' 'நினைவுகூறவும்,'"பின்பற்றவும்' அழைப்பு விடுக்கின்றார். கடவுளின் இந்தச் செயல்கள் தொடக்கத்தில் அவர்,"நான் உங்களோடு' என்ற வாக்குறுதியை நமக்குத் தருகின்றது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில்"தூய ஆவி அருளும் வாழ்வு' என்றால் என்ன என்பதைப் பற்றி உரோமைத் திருஅவை இறைமக்களோடு தன் கடிதம் வழியாக உரையாடும் பவுலடியார்"தூய ஆவி என்பது நம்மில் இருக்கும் ஒரு மனப்பான்மை' என்ற புதிய அடையாளத்தை தூய ஆவியானவருக்குக் கொடுக்கின்றார். இந்தத் தூய ஆவியானவர் இறைமக்களின் உள்ளத்தில் இருப்பதால் இறைமக்களுக்குக் கிடைப்பது என்ன? அ."கடவுளின் மக்கள்' என்ற அடையாளத்தை இவர் தருகின்றார். ஆ. கடவுளை"அப்பா, தந்தையே' என அழைக்கும் உரிமையைத் தருகின்றார். இ. நாம் கடவுளின் பிள்ளைகள் என்று மற்றவர்களிடம் சான்று பகர்கின்றார்.

முதலில்"தந்தை-மகன்' உறவு என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்வோம். நம் தமிழில் மற்றவர்ளை அழைக்கும்போது,"அம்மா' என்று பெண்களிடம் எளிதாக நாம் பயன்படுத்துவதுபோல,"அப்பா' என்பதை ஆண்களிடம் எளிதாகப் பயன்படுத்துவதில்லை. அல்லது பயன்படுத்த இயலவில்லை. அப்படிப் பயன்படுத்தினாலும், அதில் ஒரு சொல்லமுடியாத தூரம் இருக்கின்றது. நான் என் அப்பாவை,"அப்பா' என்று அழைப்பதும், என் நண்பனின் அப்பாவை"அப்பா' என்று அழைப்பதும் ஒன்றா? என் அப்பாவை நான்"அப்பா' என அழைக்கக் காரணம், அவருக்கும் எனக்கும் உள்ள"உடல்முறை உறவு' - அதாவது என் அப்பாவின் உயிரணுவின் ஒரு மாற்று வடிவமே நான். என் நண்பனின் அப்பாவை நான்"அப்பா' என அழைக்கக் காரணம், அவருக்கும் எனக்கும் உள்ள"உடல்முறை உறவு' அல்ல. மாறாக, எனக்கும் என் நண்பனுக்கும் இடையே உள்ள நட்பு. ஆக, எனக்கருகில் இருக்கும் என் நண்பனோடு இருக்கும் நட்ப, எனக்குத் தூரத்தில் இருக்கும் அவனது அப்பாவையும்,"அப்பா' என்று அழைக்க எனக்கு உரிமை அளிக்கிறது.

இயேசு கடவுளை,"அப்பா' என அழைப்பதற்கும், நான் கடவுளை,"அப்பா' என அழைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இயேசு"அப்பா' என அழைக்கக் காரணம், கடவுளுக்கும், அவருக்கும் இடையே இருக்கும் 'உடல்முறை உறவு'. நான்"அப்பா' என அழைக்கக் காரணம் இயேசுவுக்கும், எனக்கும் இடையே இருக்கும்"உடன்பிறப்பு முறை' உறவு அல்லது நட்பு.

இந்தப் பின்புலத்தில் பார்க்கும்போது, தூய ஆவியானவருக்கு 'உறவு' என்ற புதிய அடையாளம் பிறக்கின்றது. எனக்கும், என் நண்பனுக்கும் இடையே உள்ள உறவை நான்"நட்பு' என பெயரிடுகிறேன். அதேபோல தந்தைக்கும், மகனுக்கும் அல்லது இயேசுவுக்கும் நமக்கும் இடையே இருக்கும் உறவை"தூய ஆவி' எனப் பெயரிடுகின்றோம். ஆக, தூய ஆவி மேல்நோக்கியும் செயலாற்றுகின்றார். சமநிலையிலும் செயலாற்றுகின்றார். இந்த இரண்டு நிலைகளிலும் அவர் உறவாக இருக்கின்றார்.

அவர் உறவாக இருக்கின்றார் என்று சொல்வது நம்மை அடுத்த கட்ட சிந்தனைக்கு அழைக்கிறது. உறவு என்றால் அங்கே இரண்டு பரிமாணங்கள் உண்டு: ஒன்று, அகப் பரிமாணம். இரண்டு, புறப் பரிமாணம். அகப் பரிமாணத்தில், நான் என் நண்பனோடு கொண்டுள்ள உறவை நட்பாக என் மூளையில் பதிவு செய்கிறேன். புறப் பரிமாணத்தில், நான் அவனோடு பேசுகிறேன், அன்பளிப்பு கொடுக்கிறேன், வெளியே சாப்பிடச் செல்கிறேன் அல்லது சேர்ந்து இருக்கிறேன். இரண்டு பரிமாணமும் இணைந்திருந்தால் தான் உறவு முழுமையடைகிறது.

தூய ஆவியானவரின் பிரசன்னமும் இந்த இரண்டு பரிமாணங்களை என்னில் கொண்டிருக்கின்றது. அகப் பரிமாணத்தில்,"நான் கடவுளின் மகன் அல்லது மகள்' என்ற புத்துணர்வை இது தருகின்றது. புறப் பரிமாணத்தில், கடவுளை"என் அப்பா' என அழைக்கும் உரிமைப்பேறு தருகின்றது. இந்தப் புறப் பரிமாணம் மற்றவர் முன் ஒரு சான்றாகவும் அமைகின்றது. என்னைப் பார்க்கும் எனக்கு அடுத்திருப்பவர்,"இதோ! இவர் கடவுளின் மகன்! அல்லது மகள்!' என்று சொல்லத் தொடங்குகின்றார்.

இவ்வாறாக, தூய ஆவியானவர் எனக்கு கடவுள் பிள்ளை என்ற உரிமையையும், கடவுளை அப்பா என்று அழைக்கும் பேற்றையும், மற்றவர்கள் என்னைப் பார்த்து"இவர் கடவுளின் மகன்' என்று சொல்லும் சான்றையும் தருகின்றார்.

மூவொரு இறைவனைக் குறித்த புரிதலில், இன்றைய இரண்டாம் வாசகம் சொல்வது என்னவென்றால், தந்தைக்கும், மகனுக்கும் இடையே இருக்கும் உறவு தூய ஆவி. கடவுளி;ன் மகன் இயேசுவுக்கும், நமக்கும் உள்ள உறவிற்குப் பெயரும் தூய ஆவியே. ஆக, தூய ஆவியானவர் கடவுளைச் சார்ந்தவர் மட்டுமல்லர். உங்களையும், என்னையும் சார்ந்தவர் அவர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு விண்ணேற்றம் அடையுமுன் தன் சீடர்களுக்கு மறைத்தூது கட்டளை கொடுத்ததோடு, இறுதிவரை தன் உடனிருப்பையும் வாக்களிக்கின்றார்.

மூவொரு இறைவன் நமக்கு விடுக்கும் செய்தியும் இதுதான்: "நான் உங்களோடு"

'கடவுள் - நான் - அடுத்தவர்' - இந்த மூன்றும்தான் இன்றைய மூவொரு இறைவனின் உருவகம். அவர் என்னிடம்,"நான் உங்களோடு' என்று வாக்களிக்கின்றார் என்றால், நான் ஒருவர் மற்றவரிடம் 'நான் உங்களோடு' என்று சொல்லும்போது மூவொரு இறைவன் என்னில் உயிர்பெறுகிறார்."இம்மானுவேல்' ('கடவுள் நம்மோடு') என்ற கடவுளின் முதல் வாக்குறுதியே இயேசுவின் இறுதி வாக்குறுதியாகவும் இருக்கிறது.

மூவொரு இறைவனைப் பற்றி அறிந்து கொள்வது என்பது, என்னைத் துரத்திக்கொண்டே ஒரு மரத்தைச் சுற்றிக்கொண்டு நான் ஓடுவது போன்றது. நான் எத்துணை வேகமாக ஓடினாலும், என்னை நான் பிடிக்க முடியாது. ஏனெனில்"நான்' என்பதும்,"எனது' என்பதும் ஒன்றே.

இவ்வாறே, மூவொரு இறைவனைப் பற்றிப் புரிந்து கொள்ள முயலும் ஒவ்வொரு நொடியும் நான் என்னையே புரிந்துகொள்கிறேன். என்னையும், என்னைச் சுற்றி இருக்கும் சமூகத்தையும் புரிந்து கொள்ளும் ஒவ்வொரு நொடியும் நான் என் மூவொரு இறைவனையே புரிந்து கொள்கிறேன்.

"நான் உங்களோடு" - இதுவே அவரின் மையம். இந்த மையம் நம் மையமாகட்டும்.

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!