|
year B |
|
பாஸ்கா காலம்
ஐந்தாம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
பவுல் ஆண்டவரை வழியில் கண்டது
பற்றி பர்னபா திருத்தூதர்களுக்கு விளக்கிக் கூறினார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 9: 26-31
அந்நாள்களில் சவுல் எருசலேம் நகரத்துக்கு வந்தபோது சீடர்களுடன்
சேர்ந்துகொள்ள முயன்றார். ஆனால் அவரும் ஒரு சீடர் என்பதை நம்பாமல்
அனைவரும் அவரைக் கண்டு அஞ்சினர். பர்னபா அவருக்குத் துணை
நின்று அவரைத் திருத்தூதர்களிடம் அழைத்துச் சென்றார்.
பவுல் ஆண்டவரை வழியில் கண்டது பற்றியும் ஆண்டவர் அவரோடு பேசியது
பற்றியும் அவர் தமஸ்குவில் இயேசுவின் பெயரால் துணிவுடன் உரையாடியது
பற்றியும் பர்னபா அவர்களுக்கு விளக்கிக் கூறினார்.
அதன்பின் சவுல் அவர்களோடு சேர்ந்து எருசலேமில் அங்கும் இங்குமாகச்
சென்று ஆண்டவரின் பெயரால் துணிவுடன் பேசி வந்தார்.
கிரேக்க மொழி பேசும் யூதரிடம் சென்று அவர்களோடு வாதாடினார்.
அவர்கள் அவரைக் கொன்றுவிட முயன்றார்கள்.
ஆனால் அவரோடு இருந்த சகோதரர்கள் இதை அறிந்து அவரைச் செசரியாவுக்குக்
கூட்டிச் சென்று அங்கிருந்து தர்சு நகருக்கு அனுப்பி வைத்தார்கள்.
யூதேயா, கலிலேயா, சமாரியா ஆகிய பகுதிகளிலெல்லாம் திருச்சபை வளர்ச்சியுற்று,
ஆண்டவருக்கு அஞ்சி நடந்து, அமைதியில் திளைத்து, தூய ஆவியாரின்
துணையால் பெருகிவந்தது.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 22: 25b-26. 27,29. 30-31 (பல்லவி: 25a)Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, நான் செலுத்தும் புகழ் உம்மிடமிருந்து எழுவதாக!
அல்லது: அல்லேலூயா.
25b உமக்கு அஞ்சுவோர் முன்னிலையில் என் பொருத்தனைகளைச்
செலுத்துவேன். 26 எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்; ஆண்டவரை
நாடுவோர் அவரைப் புகழ்வராக! அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக!
பல்லவி
27 பூவுலகின் கடையெல்லைவரை உள்ளோர் அனைவரும் இதை உணர்ந்து ஆண்டவர்
பக்கம் திரும்புவர்; பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும் அவர்
முன்னிலையில் விழுந்து பணிவர். 29 மண்ணின் செல்வர் யாவரும் அவரைப்
பணிவர்; புழுதிக்குள் இறங்குவோர் யாவரும் தம் உயிரைக்
காத்துக்கொள்ளாதோரும் அவரை வணங்குவர். பல்லவி
30 வருங்காலத் தலைமுறையினர் அவரைத் தொழுவர்; இனிவரும் தலைமுறையினருக்கு
ஆண்டவரைப் பற்றி அறிவிக்கப்படும். 31 அவர்கள் வந்து, அவரது
நீதியை அறிவிப்பர்; இனி பிறக்கப்போகும் மக்களுக்கு `இதை அவரே
செய்தார்" என்பர். பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
நம்பிக்கை கொண்டு, அன்பு செலுத்த வேண்டும். இதுவே கிறிஸ்துவின்
கட்டளை.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்
3: 18-24
பிள்ளைகளே, நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான
அன்பை விளங்கச் செய்வோம். இதனால் நாம் உண்மையைச் சார்ந்தவர்கள்
என அறிந்துகொள்வோம்; நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத்
தீர்ப்பளித்தாலும், கடவுள் திருமுன் நம் உள்ளத்தை அமைதிப்படுத்த
முடியும்.
ஏனெனில் கடவுள் நம் மனச்சான்றைவிட மேலானவர்; அனைத்தையும் அறிபவர்.
அன்பார்ந்தவர்களே, நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத்
தீர்ப்பளிக்காதிருந்தால் நாம் கடவுள் திருமுன் உறுதியான நம்பிக்கை
கொண்டிருக்க முடியும். அவரிடம் நாம் எதைக் கேட்டாலும்
பெற்றுக்கொள்வோம்; ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்
பிடிக்கிறோம்; அவர் திருமுன் அவருக்கு உகந்தவற்றையே செய்து வருகிறோம்.
கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, அவருடைய மகன் இயேசு
கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு
செலுத்த வேண்டும். இதுவே அவரது கட்டளை.
கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்;
கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந்
திருக்கிறார் என்பதை அவர் நமக்கு அருளிய தூய ஆவியால் அறிந்து
கொள்கிறோம்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 15: 4-5b
அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களோடு இணைந்து இருப்பது போல
நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடன் இணைந்திருந்தால்
அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி
வாசகம்
=================================================================================
ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால், அவர்
மிகுந்த கனி தருவார்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-8
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "உண்மையான
திராட்சைக் கொடிநானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர்.
என்னிடமுள்ள கனி கொடாத கிளைகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார்.
கனி தரும் அனைத்துக் கிளைகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்துவிடுவார்.
நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள்.
நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து
இருங்கள்.
கிளைகள் திராட்சைக் கொடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாகக்
கனி தர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக்
கனி தர இயலாது.
நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும்
நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்.
என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. என்னோடு
இணைந்து இராதவர் கிளையைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து
போவார். அக்கிளைகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும்.
நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும்
நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்.
நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு
மாட்சி அளிக்கிறது."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
நாம் இறைவனோடு இணைந்திருக்கும்போதும், அவர் வார்த்தைகள் நம்மிலும்
இருக்கும்போது நாம் மிகுந்த கனி தரக்கூடியவர்களாக திகழ
முடியும். ஆபிராம் இறைவனோடு இணைந்திருந்ததால், இறைவனின்
வார்த்தையை ஏற்றதால், ஈசாக் என்ற மகனை கனியாகப் பெற்றார். அன்னைமரி,
இறைவனோடு தன் வாழ்வை இணைத்திருந்ததால், இறைவனின் வாhத்தையை தன்
வாழ்வாக்கியதால், அவர் இறைமகனை பெற்றெடுக்கும் மாபெரும்
பேற்றினைப் பெற்றார்கள்.
நாம் இறைவனோடு இணைந்திருக்கும் போது நம்மால் எந்த ஒரு செயலையும்,
தளர்ந்திடாது, சோர்ந்திடாது, அச்சமோ, கலக்கமோ, அவநம்பிக்கையோ
இன்றி, சிறப்புடன் செய்ய முடியும். அன்னை தெரசா இறைவனோடு இணைந்திருந்ததால்
தான் அவரால் மாபெரும் பணிகளைச் செய்ய முடிந்தது. இறைவனோடு
கைகோர்த்து நாம் செல்லும் பாதை ஒருபோதும் தவறாது. அவரை விட்டு
விலகி, "நான்" என்ற ஆணவத்துடன். சுயநலத்துடன் வாழ்வாமேயானால்,
நாம் வீழ்ந்துபோவோம் என்பது திண்ணமான உண்மை. இதை உணர்ந்து. இறைவனோடு
இணைந்து, மிகுந்த கனிதருபவர்களாக வாழ்ந்திடுவோம்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 1
=================================================================================
இறைவனோடு இணைந்திருப்போம், மிகுந்த கனிதருவோம்!
டைட்டானிக் கப்பலைக் குறித்துச் சொல்லப்படும் மிக
முக்கியமான செய்தி.
அந்தக் கப்பலை வடிவமைத்த பொறியாளர்கள் "டைட்டானிக் கப்பலுக்கு
இணையான கப்பல் இந்த உலகத்தில் எங்கும் கிடையாது, இதனை இயேசு
கிறிஸ்து நினைத்தாலும்கூட மூழ்கடிக்க முடியாது என்ற ஒருவிதமான
ஆணவத்தில் வடிவமைத்தார்கள். அதனால் அதன் பக்கவாட்டில் "NOT
EVEN CHRIST COULD MAKE IT SINK, NO GOD, NO POPE, NEITHER
EARTH NOR HEAVEN CAN SWALLOW HER UP என்றெல்லாம் எழுதி
வைத்தார்கள்.
இதனைப் பார்த்த அந்தக் கப்பலில் பணியாற்றிய ஒருசில இறை நம்பிக்கையாளர்கள்,
"இப்படியெல்லாம் தயவு செய்து எழுதவேண்டாம், இறைவனுக்கு முன்பாக
நாமெல்லாம் ஒன்றுமில்லை" என்றெல்லாம் அவர்களிடம் எடுத்துச்
சொன்னார்கள். ஆனால், அவர்களோ, அதையெல்லாம் கேட்காமல், "நாம்
யாரென்று இந்த உலகத்திற்குக் காட்டுவோம், அதனால் எழுதியது எழுதியதாகவே
இருக்கட்டும்" என்று சொல்லி அப்படியே விட்டுவிட்டார்கள்.
குறிப்பட்ட நாளில் டைட்டானிக் கப்பல் கடலில் பயணமானது.
தொடக்கத்தில் எல்லாமே நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது.
மக்கள் அனைவரும் உலகத்தில் இருக்கும் மிகப்பிரமாண்டமான
கப்பலில் பயணிக்கின்றோம் என்ற ஒருவிதமான மமதையோடு பயணம்
செய்தார்கள். திடிரென்று கப்பல் பனிப்பாறையின் மீது மோதி
மூழ்கத் தொடங்கியது. கப்பல் பனிப்பாறையில் மோதிய பகுதியில்தான்
"NO GOD NO POPE என்று எழுதப்பட்டிருந்தது. ஆம், "கடவுளே
வேண்டாம், ஏன் கடவுளைவிட நாங்கள் பெரியவர்கள் என்ற ஆணவத்தோடு
செயல்பட்டதால், உலகத்திலே மிகப்பெரிய சொகுசுக் கப்பல் என்று
மார்தட்டுக்கொண்டு பயணப்பட்ட டைட்டானிக் கப்பல் கடைசியில்
பனிப்பாறையில் மோதி கடலுக்குள் மூழ்கும் அவலத்திற்குத்
தள்ளப்பட்டது.
அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்று சொல்வார்கள். ஆம்,
ஆண்டவரின் துனையின்று நம்மால் ஒன்றும் செய்ய முடியாது
என்பதுதான் யாராலும் மறுக்கமுடியாத உண்மை. பாஸ்கா காலத்தின்
ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் "இணைவனோடு
இணைந்திருப்போம், மிகுந்த கனிதருவோம் என்னும் சிந்தனையைத்
தருகின்றது. நாம் அதனைக் குறித்து ஆழமாக சிந்தித்துப்
பார்ப்போம்.
இன்றைய நவீன உலகம் மிகவும் பரபரப்பாகப்
போய்க்கொண்டிருக்கின்றது. பரபரப்பான இந்த உலகத்தில் ஒருசிலர்
கடவுளை நினைப்பதற்கு "ஏது நேரம் என்று
வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இன்னும் ஒருசிலர் கடவுளையே
மறந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். கடவுளே வேண்டாம்,
எல்லாம் நாமே செய்துவிடலாம் என்ற ஒருவிதமான செருக்கோடு
வாழ்கின்றபோது எத்தகைய அழிவினை நாம் சந்திக்கின்றோம் என்பதற்கு
மேலே சொல்லபட்ட நிகழ்வே மிகப்பெரிய சான்றாக இருக்கின்றது.
ஆகையால், நாம் இந்த உலகத்தில் இருப்பதற்கும் இயங்குவதற்கும்
இறையருளானது, அவருடைய துணையானது தேவையாக இருக்கின்றது. நாம்
எப்படி இறைவனோடு இணைந்திருப்பது என்பதுதான் நாம் சிந்தித்துப்
பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.
நற்செய்தி வாசகத்தில் இயேசு கிறிஸ்து கூறுவார், "உண்மையான
திராட்சைக் கொடி நானே... நான் உங்களோடு இணைந்திருப்பது போல
நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கிளைகள் திரட்சைக்
கொடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாகக் கனிதர இயலாது. அது
போல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது".
ஆம். நாம் மிகுந்த கனிதரவேண்டும் என்றால் இறைவனோடு/ இயேசுவோடு
இணைந்திருக்கவேண்டும். இறைவனோடு எந்தெந்த வழிகளில்
இணைந்திருக்கலாம் என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.
இறைவனோடு எப்போதும் இணைந்திருப்பதற்கான முதன்மையான வழி
இறைவேண்டல் அல்லது ஜெபம் செய்வது ஆகும். ஆண்டவர் இயேசு சென்ற
இடங்களில் எல்லாம் நன்மைகள் பலபுரிந்து, ஆண்டவருடைய வார்த்தையை
மிகத் துணிச்சலோடு எடுத்துரைப்பதற்கு மிக முக்கியமான காரணியாக
இருந்தது அவர் அனுதினமும் செய்துவந்த ஜெபம்தான் என்று சொன்னால்
அது மிகையாகாது. அவர் நாள்முழுவதும் செய்துவந்த பல்வேறு
பணிகளுக்கு ஊக்கத்தையும் உத்வேகத்தையும் கொடுத்தது அவர்
செய்துவந்த ஜெபம்தான். ஆகையால், நாம் இறைவனோடு
இணைந்திருப்பதற்கு ஜெபம்தான் முதன்மையான வழி என்பதில் எந்தவொரு
மாற்றுக் கருத்தும் கிடையாது.
ஜெபம் இறைவனோடு இணைந்திருப்பதற்கு முதன்மையான வழி என்று
சிந்தித்த நாம் இதில் இருக்கின்ற இன்னொரு பிரச்சனையையும் நாம்
உணர்ந்துகொள்ளவேண்டும். அது என்னவெனில் நிறையப் பேர் கிறிஸ்தவ
வாழ்க்கைக்கு ஜெபம் மட்டுமே போதும் என்று
நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால், விசுவாச வாழ்விற்கு
ஜெபம் மட்டும் போதுமானது கிடையாது, ஜெபத்தோடு செயலும்
இணைந்திருக்கவேண்டும். அதைதான் யாக்கோபு தன்னுடைய
திருமுகத்தில், "நம்பிக்கை செயல்வடிவம் பெறவில்லை என்றால், அது
தன்னிலே உயிரற்றது" என்கின்றார் (யாக் 2:17).
இறைவனோடு இணைந்திருப்பதற்கான இரண்டாவது வழி இறைவார்த்தையைக்
கேட்டு நடப்பது ஆகும். யோவான் எழுதிய முதல்
திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில்,
"கடவுளுடைய கட்டளையைக் கடைப்பிடிப்பவர் அவரோடு
இணைந்திருக்கின்றார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கின்றார்"
என்கின்றார். இதுதான் உண்மை. யாராரெல்லாம் கடவுளின் கட்டளையைக்
கடைப்பிடித்து வாழ்ந்தார்களோ அவர்களோடு கடவுள் இருந்தார்
என்பதற்கு நாம் பல உதாரணங்களை/ எடுத்துக்காட்டுகளைச்
சொல்லலாம். அவற்றில் ஒருசிலவற்றை மட்டும் பார்ப்போம்.
இஸ்ரயேல் மக்கள் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து
வாழ்ந்தபோது அவர்களோடு கடவுள் இருந்தார். என்றைக்கு அவர்கள்
கடவுளின் கட்டளையை மறந்து, அதாவது யாவே கடவுளை மறந்துவிட்டு
பாகாலை வழிபடத் தொடங்கினார்களோ அன்றைக்கே அவர்கள் கடவுளை
விட்டுப் பிரிந்து போனார்கள், அது மட்டுமல்லாமல், அவர்கள்
வேற்று நாட்டுக்கு நாடுகடத்தப்பட்டார்கள். ஆகவே, இஸ்ரயேல்
மக்கள் கடவுளோடு இருந்தபோது, கடவுள் அவர்களோடு இருந்தார்
என்பதையும், அவர்கள் கடவுளை விட்டுப் பிரிந்து சென்றபோது,
கடவுள் அவர்களை விட்டுப்போனார் என உறுதியாகச் சொல்லலாம்.
இன்னொரு உதாரணம் மூன்று ஞானிகள். மூன்று ஞானிகள் குழந்தை
இயேசுவைக் காணவேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு வந்தபோது, விண்மீன்
அவர்களுக்கு முன்பாகச் சென்று, அவர்களை வழி நடத்தியது. எப்போது
அவர்கள் தீயவனாகிய ஏரோதின் உதவியை நாடினார்களோ, அப்போது
விண்மீன் அவர்களுடைய பார்வையிலிருந்து மறைந்து போனது. அவர்கள்
ஏரோதின் அரண்மனையை விட்டு வெளியே வந்தபோதுதான் விண்மீனானது
அவர்களுடைய பார்வைக்குத் தெரிந்தது. எனவே, நாம் கடவுளின்
கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்கின்றபோது கடவுளோடு என்றும்
இணைந்திருக்கின்றோம், கடவுள் நம்மோடு இணைந்திருக்கின்றார்
என்று நாம் உறுதியாகச் சொல்லலாம்.
கடவுளோடு ஜெபத்தின் வழியாகவும், அவருடைய கட்டளையைக்
கடைப்பிடித்து வாழ்வதன் வழியாகவும் அவரோடு இணைந்திருக்கலாம்
என்று சிந்தித்துப் பார்த்த நாம், கடவுளோடு இணைந்திருப்பதால்
என்ன நன்மை கிடைக்கின்றது என்று சிந்தித்துப் பார்க்கக்
கடமைப்பட்டிருக்கின்றோம். நற்செய்தியில் இயேசு கூறுவார்,
"ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர்
மிகுந்த கனி தருவார்" என்று. ஆம், நாம் கடவுளோடு
இணைந்திருக்கின்றபோது நாம் மிகுந்த கனிதருவோம் என்பது ஆழமான
உண்மை. நிறையப் புனிதர்கள், இறையடியார்கள் யாவரும் மிகுந்த
கனிதரும் வாழ்க்கை வாழ்ந்ததற்குக் காரணம் அவர்கள் கடவுளோடு
இணைந்திருந்ததே என்று நாம் உறுதிபடச் சொல்லலாம்.
ஒரு கிறிஸ்தவக் கிராமத்தில் ஷீலா என்னும் கைம்பெண் ஒருத்தி
இருந்தாள். கணவனை இழந்த அவள் வாழ்க்கையில் மிகவும்
கஷ்டப்பட்டாள். தன்னுடைய பிழைப்பிற்காக அவள் செய்துவந்த
வேலையும்கூட அவ்வளவு பெரிய வேலையும் கிடையாது, துணி தைக்கும்
வேலையைத்தான் செய்துவந்தாள். அதிலிருந்து அவளுக்கு சொற்ப
வருமானம்தான் கிடைத்தது. இதில் அவள் வசித்துவந்த வீடு வேறு
வாடகைவீடு. வீட்டுக்காரர் வேறு மாதமாத வந்து வாடகைப் பணத்தைக்
கொடு என்று நச்சரித்து வந்தார். இதனால் அவளுடைய வாழ்க்கையே
மிகவும் திண்டாட்டமாய் போனது. இவ்வளவு பிரச்னைகளுக்கு
மத்தியிலும் அவள் அனுதினமும் ஆலயத்திற்குச் செல்லத்
தவறுவதில்லை, தன்னால் முடிந்த உதவிகளை தன்னைவிட வறியவர்களுக்கு
செய்யத் தவறியதில்லை. இதைவிட முக்கியமான விஷயம் என்னவெனில்
அவள் ஒவ்வொருநாளும் துணை தைக்கும் வேலையைத் தொடங்குவதற்கு
முன்பாக விவிலியத்தை வாசித்து, அதைப் பற்றி சிறுது நேரம்
தியானித்துவிட்டுத்தான் தொடங்குவாள்.
ஒருநாள் அவள் தன்னுடைய வேலையைத் தொடங்குவதற்கு முன்பாக
விவிலியத்தை எடுத்து வாசிக்கும்போது அதில் நல்ல சமாரியன் உவமை
வந்தது. அந்த உவமையைப் படித்ததும் அவளுக்கு யாராவது ஒருவருக்கு
உடனடியாக உதவி செய்யவேண்டும் என்று தோன்றியது. யாருக்கு உதவி
செய்வது என்று அவள் யோசித்துக் கொண்டிருந்தது பக்கத்துத்
தெருவில் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்த தன்னுடைய
தோழியின் ஞாபகம்தான் வந்தது. உடனே ஷீலா தன்னுடைய வீட்டிலிருந்த
கொஞ்சம் பழங்களை எடுத்துக்கொண்டு தோழியின் வீட்டுக்குப்
புறப்பட்டாள். ஷீலாவைப் பார்த்ததும் படுக்கையில் கிடந்த
அவளுடைய தோழி மிகவும் சந்தோசப்பட்டாள். அவர்கள் இருவரும் நீண்ட
நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
பேச்சின் இடையே ஷீலாவின் தோழி அவளிடம், "நீ என்னைப் பார்க்க
வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது... சில
நாட்களுக்கு முன்பாக பக்கத்தில் புதிதாக ஒரு வீடு வாங்கினேன்.
ஆனால், நான் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்த பிறகு அந்த
வீட்டில் குறியேற முடியாமலே போய்விட்டது. நீ வாடகை
வீட்டில்தானே இருக்கின்றாய், எதற்காக நீ உன்னுடைய
வாடகைவீட்டைக் காலிசெய்துவிட்டு, நான் வாங்கியிருக்கும்
வீட்டில் குடியிருந்துகொண்டு என்னைக் கவனித்துக்கொள்ளக் கூடாது
என்றார். இதைக் கேட்ட ஷீலாவிற்கு கண்களிலிருந்து ஆனந்தக்
கண்ணீர் வந்தது. அவள் தன்னுடைய தோழி கேட்டதற்கு சரியென்று
சொல்லிவிட்டு புது வீட்டில் குடி புகுந்தார். ஷீலா இறைவன்
தனக்குச் செய்த இந்த உதவியை நினைத்து அவரை வாயாரப்
புகழ்ந்தார்.
இறைவனோடு இணைந்திருக்கும்போது நம்முடைய வாழ்க்கை
கனிதரக்கூடியதாகும், ஆசிர்வாதம் மிக்கதாகும் இருக்கும்
என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.
ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும்போது நாம் ஜெபத்தின்
வழியாகும், இறைவார்த்தையைக் கேட்டு நடப்பதன் வழியாகவும்
இறைவனோடு இணைந்திருப்போம், அதன்வழியாக மிகுந்த
கணிதருகின்றவர்களாவோம், இறையருளை நிறைவாய் பெறுவோம்.
மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 2
=================================================================================
என்னைவிட்டு பிரிந்து
திருத்தூதர் பணிகள் 9:26-31
1 யோவான் 3:18-24
யோவான் 15:1-8
உயர்ந்த மரம் ஒன்று. அந்த மரத்தில் நிறைய இலைகள்
தளிர்த்திருந்தன. எல்லா இலைகளும் காற்றில்
சலசலத்துக்கொண்டிருக்க ஒரு இலை மட்டும் சலசலக்காமல் விறைப்பாக
நின்றது.
மரம் கேட்டது, "எல்லாரும் காற்றில் சலசலக்க நீ மட்டும்
விறைப்பாக இருப்பதேன்?"
இலை சொன்னது, "நான் கோபமாக இருக்கிறேன்?"
... "ஏன் கோபம்?"
... "எனக்கு ஒரே இடத்தில் இப்படி ஒட்டிக்கொண்டு இருப்பது
பிடிக்கவில்லை."
... "அப்படியா? நீ ஒட்டிக்கொண்டு இருப்பதுதானே உனக்கு நல்லது"
... "எனக்கு இப்படி இருக்க விருப்பமே இல்லை"
மரம், "சரி நீ உனக்கு விருப்பம்போல் செய். இப்போது நான் வேகமாக
என்னையே ஆட்டுகிறேன். நீ தனியே பிய்ந்து போவாய். சந்தோஷமாக
இரு!"
அப்படியே மரம் வேகமாக ஆட்ட, இந்த இலை மரத்திலிருந்து
பிரிந்துவிடுகிறது. அப்படியே ஒய்யாரமாக அது கீழே விழ
ஆரம்பித்தது. "ஆஹா, நான் பறக்கிறேனே!" என்று சொல்லிக்கொண்டு
மற்ற இலைகளையும், மரத்தையும் ஏளனமாகப் பார்த்தது. கீழே விழ
ஆரம்பித்த இலை சற்று நேரத்தில் தரையைத் தொட்டது. தரையின் மண்
உடலில் பட்டவுடன், "ஐயோ, உடம்பெல்லாம் அழுக்காயிடுச்சே" என்று
வருத்தப்பட்டது. சற்று நேரத்தில் இன்னொரு காற்றடிக்க, அது
மறுபடியும் பறக்க ஆரம்பித்தது. "அழுக்கானால் என்ன? நாம்தான்
பறக்கிறோமே!" என்று மகிழ்ச்சி கொண்டது. சற்று நேரத்தில் சாலை,
மனிதர்களின் மிதி, வாகனங்களின் சுமை, என அனைத்தையும் தாங்கி
சாலையில் ஒதுங்கியது. காலையில் சாலையைக் கூட்ட வந்த குப்பை
வண்டிக்குள் சிக்கி சில மணி நேரங்களில் நெருப்புக்கு
இரையாகியது.
நிற்க.
கடந்த வாரம் ஒரு ஆலயத்தில் திருப்பலி முடிந்து அங்கிருந்த
ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். நான் அந்த ஆலயத்தில்
அருள்சகோதரராக வார இறுதி பணி செய்திருப்பதால் அவரை
அப்போதிருந்தே தெரியும். தன் குடும்பம், வேலை, குழந்தைகள்
பற்றி பேச ஆரம்பித்த அவர், "என் வாழ்க்கை ஓடாத பஸ்சில் ஏறி
அமர்ந்துகொண்டு டிக்கெட் எடுப்பது போல இருக்கிறது" என்றார்.
அவர் பேசிய அந்த நேரத்தில் அவரின் வார்த்தைகள் என்னில் எந்தப்
பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், மாலையில் வீடு வந்தவுடன்
அதைப் பற்றி யோசித்தேன். "ஓடாத பஸ்சில் ஏறி அமர்ந்து டிக்கெட்
எடுப்பது" - பஸ் ஓடாது என்று தெரிந்தும் ஏன் அதில் ஏற
வேண்டும்? அப்படி ஓடாது என்று தெரிந்தும் ஏன் டிக்கெட் எடுக்க
வேண்டும்? பஸ்சில் ஏறி டிக்கெட் எடுப்பதன் நோக்கமே அதோடு ஓடி
இலக்கை அடைவதுதான். அப்படி என்றால் இலக்கை அடைய உதவாத
பேருந்தில் ஏறி அமர்வதால் என்ன பயன்? டிக்கெட் எடுப்பதால்
யாருக்கு லாபம்?
இப்படி நிறைய கேள்விகள்.
ஆக, இருபது நிமிடம் ஏறி அமர்கின்ற பேருந்தில் நாம் அமர்வதன்
நோக்கமே நம் இலக்கை அடைவதுதான். இவ்வாறாக, "பேருந்தில்
ஏறுதல்," "இலக்கை அடைதல்" என்னும் இரண்டு நிகழ்வுகள் இங்கே
நடந்தேறினால்தான் நாம் வாங்கும் டிக்கெட்டிற்கு மதிப்பு
இருக்கிறது. இல்லையா?
"பேருந்தில் ஏறுதல்," "இலக்கை அடைதல்" - இந்த இரண்டு
வார்த்தைகளை, "இணைந்திருத்தல்," "கனி தருதல்" என்னும் இரண்டு
வார்த்தைகளாக நாம் இன்றைய நற்செய்தி வாசகத்தில் படிக்கின்றோம்.
இயேசு தன்னை திராட்சைக் கொடியாகவும், தன் சீடர்களை அதன்
கிளைகளாகவும் உருவகித்துப் பேசுகின்ற இந்த நற்செய்திப் பகுதியை
நாம் பலமுறை வாசித்திருக்கின்றோம். பல நேரங்களில் இங்கே
"இணைந்திருத்தல்" என்ற ஒன்றை மட்டுமே நாம் சிந்திக்கின்றோம்.
ஆனால், அதையும் தாண்டி மற்றொரு பரிமாணம் இருக்கிறது. அதுதான்
"கனி தருதல்."
"இணைந்திருத்தல்" மற்றும் "கனிதருதல்" என்னும் சொல்லாடல்களை
இன்றைய நற்செய்தியின் பின்புலத்தில் புரிந்துகொள்வோம்:
அ. இணைந்திருத்தல். "திராட்சைச் செடியொடு அதன் கொடி
இணைந்திருப்பதுபோல இணைந்திருக்க வேண்டும்" என்கிறார் இயேசு.
"செடி" - "கொடி" என்று புதிய மொழிபெயர்ப்பில் இருப்பது
குழப்பத்தைத் தருகிறது. ஏனெனில் நம் பேச்சுவழக்கில்
"செடி-கொடி" என்று நாம் சொல்வது இரண்டு வேறுபட்ட தாவர வகைகளைக்
குறிக்கிறது. பழைய மொழிபெயர்ப்பில் இருக்கும், "கொடி-கிளை"
சொல்லாடல்தான் தெளிவான பொருளைத் தருகிறது. மேலும், திராட்சை
தானாக நின்று வளரும் செடி அல்ல. மாறாக, தூணிலோ, குச்சியிலோ,
வேலியிலோ, பந்தலிலோ படரும் ஒரு கொடிதான். திராட்சைக்கொடி
என்பது யூதர்களின் காதுகளுக்குப் பரிச்சயமான ஒரு உருவகம்.
முதல் ஏற்பாட்டில் இஸ்ராயேல் மக்கள் "யாவே இறைவனின் திராட்சைத்
தோட்டம்" என்று அழைக்கப்பட்டனர் (காண். எரே 2:21, எசே
19:10-14, ஒசேயா 10:1, திபா 80:8-19, எசா 27:2-6). ஆக, முதல்
ஏற்பாட்டில் யாவே இறைவனுக்கும், இஸ்ராயேல் மக்களுக்குமான
உறவைக் குறித்துக்காட்டிய ஒரு உருவகத்தை, இரண்டாம் ஏற்பாட்டில்
இயேசுவுக்கும், சீடர்களுக்கும் குறித்துக்காட்டுவதன் வழியாக,
இயேசுவை புதிய இறைவன் என்றும், சீடர்களை புதிய இஸ்ரயேல்
என்றும் முன்மொழிகின்றார் யோவான் நற்செய்தியாளர். இந்த
இணைந்திருத்தல் மேல்நோக்கியும் இருக்க வேண்டும். கீழ்
நோக்கியும் இருக்க வேண்டும். செடியோடு இணைகின்ற கொடி
மேல்நோக்கி செடியோடும், கீழ்நோக்கி இலைகளோடும் இணைதல்
வேண்டும். மேல்நோக்கிய இணைதல் இல்லையென்றால் கொடி
காய்ந்துவிடும். கீழ்நோக்கிய இணைதல் இல்லையென்றால் இலைகள்
வாடிவிடும். இவ்வாறாக, இயேசுவின் சீடர்கள் இயேசுவோடும், ஒருவர்
மற்றவரோடும் இணைந்திருக்க வேண்டும்.
ஆ. கனிதருதல். கனிதராத மரத்தால் யாருக்கும் பலனில்லை. ஒரு
மரத்தில் நிறைய கிளைகள் இருந்து அவற்றில் ஒன்றில்கூட கனிகள்
இல்லையென்றால் அந்தக் கிளைகள் மரத்திற்குச் சுமையாகவே
கருதப்பட்டு காலப்போக்கில் தறித்துவிடப்படும். இணைந்திருப்பதன்
நோக்கம் கனிதருதலில் இருக்கின்றது. "நீங்கள் கனி தந்து என்
சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது" என்று
சொல்கிறார் இயேசு. ஏனெனில் மரத்தின் கனி மரத்திற்கு மட்டுமல்ல,
மரத்தை நட்டவருக்கும், மரத்தின் உரிமையாளருக்கும் பெருமை
சேர்க்கிறது. சீடர்கள் எத்தகைய கனிகளைக் கொடுக்க வேண்டும்
என்பது பற்றி இயேசு சொல்லவில்லை. சீடர்களின் நல்வாழ்வு,
மகிழ்ச்சி, இறைவார்த்தைப் பணி, அமைதி, பொருளாதார முன்னேற்றம்,
இவை அனைத்துமே இயேசு விரும்பும் கனிகளாக இருக்கலாம்.
"என்னைவிட்டுப் பிரிந்து" உங்களால் இணைந்திருக்கவும் முடியாது,
கனிதரவும் முடியாது என்கிறார் இயேசு. இவ்வாறாக,
இணைந்திருத்தலுக்கும், கனிதருதலுக்கும் முதற்பொருளாய்
இருப்பவர் இயேசுவே.
நாம் ஒருவர் மற்றவரோடு உள்ள தொடர்பு கம்பித் தொடர்பிலிருந்து
கம்பியில்லாத் தொடர்பாக இன்ஃப்ரா ரெட், ப்ளுடீத், ஏர், வைஃபை
என மாறிக்கொண்டிருக்கிறது. கம்பியில்லாத் தொடர்பும்
தொடர்புதான். இன்று கடவுளோடு இணைந்திருப்பதையும், ஒருவர்
மற்றவரோடு இணைந்திருப்பதையும் இன்று சில நேரங்களில் சுமையாகப்
பார்க்கும் நிலைக்கு வந்துவிட்டோம். செடி கொடியைத் தாங்குவது
அதற்கு வலிக்கத்தான் செய்யும். கொடி செடியோடு இணைந்திருப்பதால்
அதன் சுதந்திரம் பறிபோய்விட்டதாக அது சில நேரங்களில்
நினைக்கும். ஆனால், செடியும், கொடியும் இந்த வலியை
ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.
இன்று கடவுளோடு நாம் இணைந்திருக்கத் தடையாக இருப்பது எது?
சில நேரங்களில் கடவுள் நம்மைவிட்டுத் தூரமாக இருக்கிறார்.
அவருக்கும் நமக்குமான இணைப்பை ஏற்படுத்துகின்ற வைஃபை
பாஸ்வேர்ட் நமக்குத் தெரியாததுபோல இருக்கிறது. "அன்பு" என்ற
வார்த்தையே நம்மைக் கடவுளோடும் ஒருவர் மற்றவரோடும் இணைக்கிறது
என்று சொல்கிறது இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 யோவா
3:18-24): "ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துபவர் ... கடவுளோடு
இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார்." அன்பு
என்பது மிகப்பெரிய அல்லது மிக அகலமான வார்த்தை. இது நட்பு,
கனிவு, பரிவு, துணிவு, பணிவு, கருணை, பாசம், தாராள உள்ளம்,
பொறுமை, அமைதி என பல சிறுசிறு நிலைகளில் தன்னை
வெளிப்படுத்துகிறது.
இவ்வாறாக, இன்று "என்னைப் பிரிந்து இணைந்திருக்கவும்,
கனிதரவும் உங்களால் முடியாது" என்று சொல்கின்ற இயேசு அன்பை
நமக்கு வாழ்வாக்கிச் சென்றுள்ளார். அந்த வாழ்வையொட்டி நம்
வாழ்வை அமைத்துக்கொள்ளுதல் நலம்.
இது சாத்தியமா? என்று கேட்டால், "சாத்தியம்" என்று விடை
தருகிறது இன்றைய முதல் வாசகம் (காண். திப 9:26-31). இன்றைய
நற்செய்தி வாசகத்தில் இயேசு கடவுளுக்கும் (தந்தைக்கும்)
சீடர்களுக்கும் நடுவே நின்று இணைப்பை ஏற்படுத்துகின்றார். அந்த
இணைப்பின் விளைவாக சீடர்கள் கனிதருகின்றனர். தந்தையும் மாட்சி
பெறுகின்றார். அதே போல இன்றைய முதல் வாசகத்தில் பர்னபா
சவுலுக்கும் திருச்சபைக்கும் நடுவே நின்று இணைப்பை
ஏற்படுத்துகின்றார்.
பர்னபா."பர்னபா" என்ற வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள்
கொடுக்கலாம். அரமேயத்தில் "பர் நப்யா" என்று பிரித்தால்
"இறைவாக்கினரின் மகன்" அல்லது "இறைவாக்கின் மகன்" என்றும்,
கிரேக்கத்தில் "ஹ்யோஸ் பராக்ளேசேயுஸ்" எனப் பிரித்தால்
"ஆறுதலின் அல்லது தேற்றரவின் மகன்" என்றும் மொழிபெயர்க்கலாம்
(காண். திப 4:36). சைப்பிரசு நாட்டைச் சார்ந்த யோசே என்ற
இவரைத்தான் "பர்னபா" என்று மாற்றுகின்றனர் திருத்தூதர்கள். திப
14:14ல் இவரும் திருத்தூதர் என அழைக்கப்படுகின்றார். பவுலின்
தூதுரைப் பயணங்களில் உடனிருந்த உற்ற தோழர் பர்னபா.
பர்னபாவின் ஆளுமை நமக்கு மூன்று விதங்களில் இங்கே
வெளிப்படுகிறது:
1. இணைப்புக்கோடு. பர்னபா ஒரு இணைப்புக் கோடு - பவுலுக்கும்,
மற்ற தூதர்களுக்கும். இணைப்புக் கோடாக இருக்க வேண்டியவர் இரு
தரப்பினரையும் அறிந்தவராக இருக்க வேண்டும். அறிமுகம் செய்து
வைப்பது ஒரு கலை. எல்லாருக்கும் இது வந்துவிடாது. அறிமுகம்
செய்து வைக்க நமக்கு இரண்டு அறிமுகங்கள் தேவை: முதலில் நாம்
யாரை அறிமுகம் செய்து வைக்கிறோமோ அவரைப் பற்றி நாம்
அறிந்திருக்க வேண்டும். இரண்டு நாம் யாரிடம் அறிமுகம் செய்து
வைக்கிறோமோ அவர்களைப் பற்றியும் அறிந்திருக்க வேண்டும்.
மேலும், இந்த இரண்டு பேருக்கும் இடையே இருக்கின்ற பொதுவான
குணம் என்ன என்பதை அறிந்து, இடம், பொருள், ஏவல் உணர்ந்துதான்
அறிமுகம் செய்து வைக்க முடியும். சவுலைப் பற்றி மூன்று
விடயங்களைச் சொல்கின்றார்: (அ) சவுல் ஆண்டவரைக் கண்டார், (ஆ)
ஆண்டவர் அவரோடு பேசினார் ("அவர் ஆண்டவரோடு பேசினார்" என்றும்
மொழிபெயர்க்கலாம்), (இ) தமஸ்குவில் நற்செய்தியை அறிவித்தார்.
ஆக, நீங்கள் இயேசுவைக் கண்டது போல அவரும் கண்டார். நீங்கள்
அவரோடு, அல்லது அவர் உங்களோடு உரையாடியது போல இவரோடும்
உரையாடினார். உங்களைப் போல இவர் பணியும் செய்கின்றார். ஆக,
"உங்களுக்கு சரி சமமானவர் இவர்" என்று அறிமுகத்தை நிறைவு
செய்கின்றார்.
2. நம்பிக்கை. "ஆண்டவர் பவுலுக்குத் தோன்றினார்" என்பதை
நம்புகிறார். ஆச்சர்யமாக இருக்கிறது? கேள்வி கேட்கும் மனம்
அல்ல, சரணடையும் மனமே நம்பிக்கையை நம்மில் வளர்க்கும்.
"அப்படியா? ஆண்டவரைப் பார்த்தீங்களா? எங்கே? எப்போ? என்ன
சொன்னார்?" என்ற எந்த கேள்வியும் இல்லாமல் நம்பும் துணிச்சல்
இவருக்கு எங்கிருந்து வந்தது?
3. "அவர் வளர வேண்டும். நான் குறைய வேண்டும்." பர்னபாவால்
அறிமுகம் செய்யப்பட்ட பவுலே காலப்போக்கில் பர்னபாவைவிட மிக
முக்கியத்துவம் பெறுகின்றார். "உன் வளர்ச்சிக்கு நான்தான்
காரணம்" என்று சொல்லிக் காட்டவோ, அல்லது "அவன் வளர்ந்து
விட்டான், நான் அப்படியே இருக்கிறேன்" என்று பவுல் மேல்
பொறாமைப்படவோ இல்லை பர்னபா. அடுத்தவரை வளரவிட்டுப்
பார்க்கின்றார்.
பர்னபாவின் இந்தப் பண்பால் இன்றைய முதல் வாசகம் தொடர்ந்து,
திருச்சபை வளர்ச்சி பெற்றது (திப 9:31) என நிறைவு பெறுகிறது.
இவ்வாறாக, இயேசுவைப்போல நாம் இணைந்திருத்தலும், கனிதருதலும்
இயலும் என்பதை நமக்கு முன் பர்னபா என்னும் ஆளுமை
வாழ்ந்துகாட்டிவிட்டது.
இறுதியாக, இந்தப் பர்னபாவின் பண்போ, அல்லது இயேசுவின் அன்போ
நம்மிடம் இருந்தது என்றால்,
நாமும் அவரோடு இணைந்திருக்கவும், கனிதரவும் முடியும்.
ஏனெனில் அவரைப் பிரிந்து ... அவரைப் பிரிந்தால் வெற்றிடமே!
அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
Teaching Faculty
Saint Paul"s Seminary
Tiruchirappalli 620 001
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 3
=================================================================================
|
|