|
year B |
|
ஆண்டின்
தவக்காலம் 5ஆம் ஞாயிறு |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
புதிய உடன்படிக்கை
செய்துகொள்வேன்; பாவங்களை நினைவுகூரமாட்டேன்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 31: 31-34
இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் இஸ்ரயேல் வீட்டாரோடும்
யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றைச்
செய்துகொள்வேன், என்கிறார் ஆண்டவர்.
அவர்களுடைய மூதாதையரை எகிப்து நாட்டினின்று விடுவிப்பதற்காக,
அவர்களை நான் கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது அவர்களோடு
செய்துகொண்ட உடன்படிக்கையைப் போன்று இது இராது. நான் அவர்களின்
தலைவராய் இருந்தும், என் உடன்படிக்கையை அவர்கள் மீறிவிட்டார்கள்,
என்கிறார் ஆண்டவர்.
அந்நாள்களுக்குப் பிறகு, இஸ்ரயேல் வீட்டாரோடு நான் செய்யவிருக்கும்
உடன்படிக்கை இதுவே: என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்;
அதை அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன். நான் அவர்களின் கடவுளாய்
இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள், என்கிறார் ஆண்டவர்.
இனிமேல் எவரும் "ஆண்டவரை அறிந்துகொள்ளும்" எனத் தமக்கு அடுத்திருப்பவருக்கோ
சகோதரருக்கோ கற்றுத்தரமாட்டார். ஏனெனில் அவர்களுள் பெரியோர் முதல்
சிறியோர் வரை அனைவரும் என்னை அறிந்துகொள்வர், என்கிறார் ஆண்டவர்.
அவர்களது தீச்செயலை நான் மன்னித்துவிடுவேன்; அவர்களுடைய பாவங்களை
இனிமேல் நினைவுகூரமாட்டேன்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 51: 1-2. 10-11. 12-13 (பல்லவி: 10a)
Mp3
=================================================================================
பல்லவி: கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்.
1 கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற
இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். 2 என்
தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம்
அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். பல்லவி
10 கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும்
ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும். 11
உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை
என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். பல்லவி
12 உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ
மனம் தந்து என்னைத் தாங்கியருளும். 13 அப்பொழுது, குற்றம்
செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை
நோக்கித் திரும்புவர். பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்; அனைவரும் என்றென்றும் மீட்படையக்
காரணமானார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 5: 7-9
சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச்
சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி,
கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று
கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவிசாய்த்தார்.
அவர் இறை மகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.
அவர் நிறைவுள்ளவராகி, தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும்
மீட்படையக் காரணமானார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 12: 26
அல்லேலூயா, அல்லேலூயா!
"எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும்
இடத்தில் என் தொண்டரும் இருப்பர்," என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி
வாசகம்
=================================================================================
கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் மிகுந்த
விளைச்சலை அளிக்கும்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 20-33
அக்காலத்தில் வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோருள்
கிரேக்கர் சிலரும் இருந்தனர். இவர்கள் கலிலேயாவிலுள்ள
பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, "ஐயா, இயேசுவைக்
காண விரும்புகிறோம்" என்று கேட்டுக்கொண்டார்கள். பிலிப்பு அந்திரேயாவிடம்
வந்து அது பற்றிச் சொன்னார்; அந்திரேயாவும் பிலிப்பும் இயேசுவிடம்
சென்று அதைத் தெரிவித்தனர்.
இயேசு அவர்களைப் பார்த்து, "மானிடமகன் மாட்சி பெற வேண்டிய நேரம்
வந்துவிட்டது. கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது
அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்
என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தமக்கென்றே வாழ்வோர் தம்
வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர்
நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். எனக்குத் தொண்டு
செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என்
தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்"
என்றார்.
மேலும் இயேசு, "இப்போது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது. நான் என்ன
சொல்வேன்? தந்தையே, இந்த நேரத்திலிருந்து என்னைக்
காப்பாற்றும்" என்பேனோ? இல்லை! இதற்காகத்தானே இந்நேரம்வரை
வாழ்ந்திருக்கிறேன். தந்தையே, உம் பெயரை மாட்சிப்படுத்தும்"
என்றார்.
அப்போது வானிலிருந்து ஒரு குரல், "மாட்சிப்படுத்தினேன்;
மீண்டும் மாட்சிப்படுத்துவேன்" என்று ஒலித்தது. அங்குக் கூட்டமாய்
நின்றுகொண்டிருந்த மக்கள் அதைக் கேட்டு, "அது இடிமுழக்கம்"
என்றனர்.
வேறு சிலர், "அது வானதூதர் ஒருவர் அவரோடு பேசிய பேச்சு" என்றனர்.
இயேசு அவர்களைப் பார்த்து, "இக்குரல் என் பொருட்டு அல்ல, உங்கள்
பொருட்டே ஒலித்தது. இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது;
இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான். நான் மண்ணிலிருந்து
உயர்த்தப்படும்போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன்" என்றார்.
தாம் எவ்வாறு இறக்கப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே இப்படிச்
சொன்னார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
இவ்வாசகங்களுக்குப் பதிலாக முதலாண்டு வாசகங்களையும் பயன்படுத்தலாம்.
(காண்க: பக்கம் 311)
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 1
=================================================================================
மடிந்து பலன்தரும் கோதுமைமணிகள் ஆவோம்!
முன்பொரு காலத்தில் டெலமசுஸ் (Telemachus) என்னும் துறவி பாலைவனத்தில்
தங்கி, அங்கே சிலகாலம் தனிமையில் இறைவனிடம் ஜெபித்து வந்தார்.
ஒருநாள் அவருடைய உள்ளுணர்வு "நீ உரோமை நகருக்குச் செல். அங்கு
நடைபெறுகின்ற கிளாடியேட்டர் விளையாட்டைப் பார்" என்று சொல்லியது.
உடனே அவர் பாலைவனத்திலிருந்து கிளம்பி உரோமை நகருக்குச்
சென்று, கிளாடியேட்டர் விளையாட்டு நடைபெறுகின்ற அரங்கத்திற்குள்
சென்றார். இரண்டு பேர் பயங்கரமாக அடித்துக்கொண்டு சாவதுதான் இந்த
விளையாட்டின் உள்ளடக்கம்.
கிளாடியேட்டர் விளையாட்டு நடைபெற இருந்த அந்த அரங்கில் ஏறக்குறைய
எண்பதாயிரம் பேர் கூடி இருந்தார்கள். சிறுது நேரத்திலேயே
விளையாட்டு தொடங்கியது. இரண்டு வீரர்கள் ஒருவரை ஒருவர் மாறி
மாறி அடித்துக்கொண்டார்கள். கூட்டம் அவர்கள் சண்டையிடுவதைப்
பார்த்து, ஆரவாரம் செய்து மகிழ்ந்தது. இப்படி ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு
சாவது ஒருபோதும் கூடாது என நினைத்த டெலமசுஸ் மைதானத்திற்கு உள்ளே
சென்று, சண்டை போட்டுக்கொண்டிருந்த இரண்டு பேருக்கும் மத்தியில்
சென்று, அவர்களை விலக்கிவிடத் தீர்மானித்தார். அவர்களோ அவரைத்
தூக்கித் தூர எறிந்தார்கள். டெலமசுஸ் மீண்டுமாக அவர்களுக்கு நடுவிலே
சென்று, அவர்களிடம் சண்டை வேண்டாம் என்று கேட்டுப் பார்த்தார்.
இதற்கிடையில் அரங்கில் இருந்த பார்வையாளர் டெலமசுஸ் செய்யும்
செயலால் ஆட்டம் பாதிக்கின்றது என்று சொல்லி, அவர்மீது கற்களை
வீசினார்கள். இதனால் அவருடைய உடல் முழுவதும் காயங்கள் பட்டு,
இரத்தம் வழிந்தோடியது. அதனை எல்லாம் அவர் பொருட்படுத்தாமல் சண்டை
போட்டுக் கொண்டிருந்த இரண்டு வீரர்களையும் அவர் விளக்கிவிடவே
முயன்றுகொண்டிருந்தார். ஒருகட்டத்தில் ஒரு வீரர் வீசிய வாள் டெலமசுஸ்
மேல் இறங்கவே, அவர் அந்த இடத்திலேயே இறந்துபோனார். சண்டை
போட்டுக்கொண்டிருந்த இரண்டு வீரர்களும், அரங்கில் இருந்த
பார்வையாளர்களும் ஒரு கணம் திகைத்துப் போனார்கள். ஒருவரை ஒருவர்
அடித்துக்கொள்ளும் இந்த விளையாட்டு வேண்டாம் என்பதற்காகத்தானே
இந்த மனிதர் தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார். இனிமேலும் இப்படிப்பட்ட
ஒரு விளையாட்டுத் தேவையில்லை என முடிவு எடுக்கப்பட்டது. அன்றிலிருந்து
கிளாடியேட்டர் விளையாட்டு அறவே ஒழிந்தது. இவ்வாறு டெலமசுஸ் தன்னுடைய
இறப்பின் மூலம், ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளக்கூடிய
கிளாடியேட்டர் விளையாட்டு அறவே ஒழிவதற்குக் காரணமாக இருந்தார்.
பிறருக்காகத் தன் இன்னுயிரையே தந்த டெலமசுஸ் கோதுமை மணியைப்
போன்று மடிந்து பலன்தரக்கூடியவராக இருந்தார். தவக்காலத்தின் ஐந்தாம்
ஞாயிறான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள், "கோதுமைமணியைப்
போன்று மடிந்து பலன்தரும் மக்களாவோம்" என்று சிந்தனையைத் தருகின்றது.
நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
நற்செய்தி வாசகத்தில் திருவிழாவிற்கு வந்திருந்த கிரேக்கர்கள்
சிலர் ஆண்டவர் இயேசுவைப் பார்க்க விரும்புகின்றார்கள்.
பிலிப்பும் அந்திரேயாயாவும் அவர்கள் இயேசுவைப் பார்க்க உதவிசெய்கின்றார்கள்.
இங்கே நாம் கவனிக்கவேண்டிய செய்தி "இயேசு யூதர்களுக்கு மட்டும்
சொந்தமல்ல, எல்லாருக்கும் சொந்தம்" என்பதாகும். இயேசுவைத் தேடி
எல்லா இனத்தாரும்
- புறவினத்தார் நிறையப் பேர் வந்தார்கள்.
இயேசு அவர்களுக்கு நலம் தந்ததுடன் இறைவார்த்தையையும் கடவுளின்
இரக்கத்தையும் அவர்களுக்கு எடுத்துச் சொல்கின்றார்.
இன்றைய நற்செய்தியில் இயேசு, ஒருசில வாழ்வில் உண்மைகளையும்
மானிட மகன் எப்படி இறப்பார் என்பதைப் பற்றி மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார்.
"மானிட மகன் மாட்சி பெறவேண்டிய நேரம் வந்துவிட்டது. கோதுமை மணி
மண்ணில் விழுந்து முடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது
மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும். தமக்கென்றே
வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப்
பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்"
என்பதுதான் இயேசு கிரேக்கர்களுக்குச் சொல்லும் செய்தியாக இருக்கின்றது.
இயேசு கிரேக்கர்களிடம் பேசியதிலிருந்து ஒருசில உண்மைகளை நாம்
அறிந்துகொள்ளலாம். அதில் முதலாவது, ஒருவருடைய வாழ்வு முழுமையாகப்
பலன் கொடுக்க வேண்டும் என்றால், அவர் தன்னையே முற்றிலுமாக தியாகம்
செய்யவேண்டும் அல்லது தன்னை முற்றிலுமாகக் கரைக்கவேண்டும். எப்படி
கோதுமை மணியானது தன்னை இழப்பதினால் அதிகமான பலன் கொடுக்கின்றதோ,
அது போன்று நாமும் நம்மை இழக்கின்றபோது அதிகமான பலன்
கொடுப்போம் என்பது உறுதி. அந்தவகையில் பார்க்கின்றபோது இந்த
உலகிற்கு வாழ்வினை, மீட்பினை வழங்கவந்த இயேசு, அதனைத் தன்னுடைய
சிலுவைச் சாவினால் வழங்கி நிற்கின்றார். ஆகையால், தன்னையே
முற்றிலுமாக கையளிப்பதன் வழியாக மட்டுமே ஒருவர் முழுமையான பலனைத்
தரமுடியும் என்பதுதான் நாம் உணர்ந்துகொள்ளவேண்டிய முதன்மையான
செய்தியாக இருக்கின்றது.
இயேசு சொல்லும் இரண்டாவது செய்தி "தமக்கென்றே வாழ்வோர் தம்
வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வை ஒரு பொருட்டாகக்
கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்" என்பதாகும்.
இந்த உலகத்தில் இருக்கின்ற மண், மரம், செடி கொடிகள், மழை, உயிரினங்கள்
இவையெல்லாமே ஒருபோதும் தமக்காக, வாழ்ந்ததுமில்லை, இனிமேல் வாழப்போவதுமில்லை.
ஆனால், மனிதன் மட்டும்தான் தனக்காகவே வாழ்ந்து மடிந்து
போகின்றான். அதனால்தான் அவன் எந்தவொரு தடயமும் இல்லாமல் மடிந்து
போகின்றான். இது எல்லா மனிதர்களுக்கும் பொருந்துவதில்லை. ஒருசில
நல்ல மனிதர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் தனக்காக மட்டும் வாழவில்லை,
பிறருக்காகவும் வாழ்ந்தார்கள். பிறர் மீது அக்கறை கொண்ட
வாழ்வினால் அவர்கள் இன்றைக்கும் மக்களால் நினைவுகூரப்படுகின்றார்கள்.
அப்படிப் பிறர் மீது அக்கறைகொண்டு, பிறருக்காக வாழ்ந்த ஒரு
மானிதர்தான் இரஷ்ய நாட்டை ஆண்ட மாமன்னர் நிக்கோலாஸ் என்பவர்.
மாமன்னர் நிக்கோலாசைப் பற்றிச் சொல்லபடுகின்ற ஒரு நிகழ்வு.
நிக்கோலாசின் படையில் படைவீரன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும்
ஏழை. ஒருநாள் அவன் தான் பட்டிருக்கும் வீட்டுக் கடன்களை எல்லாம்
ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டு, அதனடியில், "இவ்வளவு கடனை யார் அடைப்பார்"
என்று மலைப்போடு எழுதி வைத்தபடியே படைவீரர்களுக்கு என்று இருந்த
அறையில் சோகத்தோடு தூங்கிப் போனான். அன்றிரவு தற்செயலாக படைவீரர்களின்
அறைக்கு வந்த மாமன்னர் நிக்கோலாஸ் குறிப்பிட்ட அந்த படைவீரரின்
தலையணைக்குக் கீழ் மிகப் பெரிய பட்டியல் ஒன்று இருப்பதைக் கண்டு
அது என்னவென்று பார்த்தார். எல்லாம் அந்தப் படைவீரன் பட்ட கடன்
பட்டியலாக இருந்தது.
உடனே மாமன்னர் அந்தக் கடன் பட்டியலுக்குக் கீழே "நான் அடைக்கின்றேன்"
என்று எழுதிக் கையொப்பம் இட்டது மட்டுமல்லாமல், ஒவ்வொரு கடனையும்
அடைத்து அந்தப் படைவீரனை நிம்மதியாக வாழச் செய்தார். இப்படிப்
பிறர்மீது அக்கறை கொண்டு, பிறருக்காகவே தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்ததால்தான்
அவர் இன்றளவும் மக்களால் நினைவுகூரப்படுகின்றார். நாம் கடவுள்
நமக்குக் கொடுத்த வாழ்வினை நமக்காக மட்டும் வாழாமல், பிறருக்காக
வாழ்கின்றபோது நிலைவாழ்வினைப் பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி.
நிறைவாக இன்றைய இறைவார்த்தை சொல்லும் செய்தி, "துன்பவேளையில்
நாம் ஆண்டவரை நோக்கி மன்றாடுகின்றபோது, அவர் நமக்கு செவி
சாய்த்து, நம்முடைய வாழ்வினை வளமானதாக மாற்றுவார்" என்பதாகும்.
இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, "இப்போது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது.
நான் என்ன சொல்வேன்? தந்தையே, இந்த நேரத்திலிருந்து என்னைக்
காப்பாற்றும் என்பேனா? இல்லை! இதற்காகத்தானே இந்நேரம் வரை
வாழ்ந்திருக்கின்றேன். தந்தையே, உம் பெயரை மாட்சிப்படுத்தும்"
என்கின்றார். அப்போது வானிலிருந்து ஒரு குரல்,
"மாட்சிப்படுத்தினேன்; மீண்டும் மாட்சிப்படுத்துவேன். இங்கு இயேசு
தந்தைக் கடவுளை நோக்கி எழுப்பும் ஒருவிதமான வேதனை கலந்த ஜெபம்,
கெத்சமணியில் அவர் எழுப்பும் ஜெபத்தோடு ஒத்துப் போகின்றது. இயேசு
தந்தைக் கடவுளை நோக்கி எழுப்புகின்ற ஜெபத்திற்கு அவர்
"மாட்சிப்படுத்தினேன்; மீண்டும் மாட்சிப்படுத்துவேன்" என்று பதிலளிக்கின்றார்.
இயேசு தந்தைக் கடவுளை நோக்கி எழுப்புகின்ற ஜெபத்திற்கு அவர் எப்படி
பதில் தந்தார் என்பதை எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து
எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகம் மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது.
"கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து
காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர்
சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த
அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்கு செவி சாய்த்தார்" என்று
நாம் அங்கு வாசிக்கின்றோம். ஆகையால், நம்முடைய துன்ப வேளையில்,
இக்கட்டான தருணத்தில் கடவுளை நோக்கி மன்றாடும்போது அவர் நமக்கு
செவிசாய்ப்பார் என்பது உறுதி.
பளுதூக்கும் போட்டியில் உலகச் சம்பியன் பட்டத்தை வென்றவர்
சிட்னி வாக்கர் (Sidney Walker). ஒரு சாதாரண ஜூ பாலிஸ்
செய்யும் பையனாக இருந்து, இந்த நிலையை அடைந்தவர். ஒரு சமயம் டபிள்யு.சி.ஹெய்ன்ஸ்
(W.C.Hiens) என்னும் அவருடைய நண்பர் அவரிடம், "நண்பா! உன்னால்
மட்டும் பளுதூக்கும் போட்டியில் இவ்வளவு பெரிய சாதனைகளைச்
செய்ய முடிகின்றதே. அது எப்படி?" என்று கேட்டார். அதற்கு
சிட்னி வாக்கர், "போட்டி தொடங்குவதற்கு முன்பாக நான் செய்யும்
ஜெபம்தான் காரணம்... போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இரண்டு
காரியங்களுக்காக ஜெபிப்பன். ஒன்று எதிராளி எந்தவிதமான காயமும்
படக்கூடாது என்பதற்கு. இரண்டு போட்டியில் நிச்சயம் நான் ஜெயிக்கவேண்டும்
என்பதற்கு. கடவுள் என்னுடைய ஜெபத்தைக் கேட்கின்றார். அதனால்தான்
நான் பெரிய சாதனைகளைச் செய்துகொண்டிருக்கின்றேன்" என்றார்.
இறைவனை நோக்கி நாம் எழுப்பும் வேண்டுதலுக்கு இறைவன் நிச்சயம்
பதில் தருவார் என்பதைத்தான் மேலே உள்ள நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
ஆகையால், கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக்க
நம்மையே முற்றிலுமாக இறைபணிக்காய், பிறர் பணிக்காய் தியாகம்
செய்வோம், இந்த வாழ்வு நமக்கானது மட்டுமல்ல, பிறருக்கானதும்
கூட என்பதை உணர்ந்து, அதன்படி வாழ்வோம், இப்படிப்பட்ட வாழ்வில்
சவால்கள் வருகையில் அதனை இறைவனிடம் ஒப்புக் கொடுத்து
ஜெபிப்போம். இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள்
நிறைவாய் பெறுவோம்.
Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 2
=================================================================================
இயேசுவைக் காண விரும்புகிறோம்!
எரேமியா 31:31-34
எபிரேயர் 5:7-9
யோவான் 12:20-33
இயேசுவும் அவருடைய திருத்தூதர்களும் பாஸ்கா விழாவுக்காக
எருசலேம் வந்திருக்கின்றனர். அதே நேரத்தில் அதே திருவிழாவுக்கு
சில கிரேக்கர்களும் வந்திருக்கிறார்கள். கிரேக்கர்கள் ஏன்
யூதர்களின் திருவிழாவுக்கு வந்திருந்தார்கள் என்பது
தெரியவில்லை. இந்த கிரேக்கர்கள் ஒருவேளை எல்லா மதங்களையும்
ஏற்றுக்கொள்பவர்களாக இருந்திருக்கலாம். அல்லது அந்த
திருவிழாவில் என்னதான் இருக்கிறது என்று பார்க்கும் ஆர்வத்தில்
வந்திருக்கலாம். அல்லது வேறு வேலையாக வந்திருக்கலாம். வந்த
இடத்தில் திருவிழா நடந்து கொண்டிருக்கலாம். எது எப்படியோ
இவர்கள் வந்த நேரம் திருவிழா நடக்கிறது. திருவிழா நடக்கிற
நேரம் இவர்கள் வருகிறார்கள்.
இப்படி வந்த கிரேக்கர்கள் பெத்சாய்தா ஊரைச் சார்ந்த
பிலிப்பிடம் - அவரை ஒரு பி.ஆர்.ஓ என நினைத்திருக்கலாம்
- "ஐயா,
நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம்!" என்கின்றனர்.
இவர்களின் இந்தத் தேடலை, விருப்பத்தை நாம் நமது இன்றைய
சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.
"ஐயா, நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம்"
இந்த ஆண்டு பேராயரின் செயலராக நான் ஏற்ற தொலைபேசி
அழைப்புகளில், அல்லது மக்களின் வருகையில் நான் கேட்ட
வார்த்தைகளும் இவையே:
"ஃபாதர், நாங்கள் பேராயரைக் காண விரும்புகிறோம்"
மக்கள் பேராயரைக் காண ஏன் விரும்புகின்றனர்?
"தங்கள் குறைகள் தீர்க்கப்பட," "குறைகள் தீர்க்கப்பட்டதற்கு நன்றி
சொல்ல," "உதவி கேட்க," "அவரை வாழ்த்த," "பிரச்சினைகளுக்கு
தீர்வு கேட்க," "முடிவுகள் எடுப்பதில் அறிவுரை கேட்க" -
இப்படியாக ஒவ்வொரு விருப்பத்தின் பின்னாலும் ஒரு நோக்கம்
இருக்கும்.
நோக்கம் இல்லாத விருப்பம் மிகக் குறைவே.
"சும்மா பார்க்க வந்தேன்" என்று சொல்வதெல்லாம் சும்மா சொல்வதாக
இருக்கிறது.
கிரேக்கர்கள் இயேசுவைக் காண்பதற்காக தெரிவிக்கும்
விருப்பத்திற்கு எந்தவொரு நோக்கமும் இல்லாமல் இருப்பது நமக்கு
ஆச்சர்யமாக இருக்கிறது.
ஆக, "நோக்கத்தோடு கூடிய விருப்பத்திலிருந்து" "நோக்கம் இல்லாத
விருப்பத்தை நோக்கி" செல்வதற்கான அழைப்பாக இருக்கிறது இன்றைய
இறைவாக்கு வழிபாடு.
ஒரு குழந்தை தன் தாயைக் காண விருப்பம் தெரிவிக்கிறது என்றால்,
அந்த விருப்பத்திற்கென நோக்கம் எதுவும் இருப்பதில்லை.
ஒரு தந்தை தன் குழந்தையைக் காண குழந்தை படிக்கும் விடுதிக்குச்
செல்கிறார் என்றால் அந்த விருப்பத்திற்கென நோக்கம் எதுவும்
இருப்பதில்லை.
கடவுளைத் தேடுவதிற்கான நம் விருப்பம் பல நேரங்களில் நோக்கம்
கொண்டதாக இருக்கிறது. இப்படி இருப்பது ஒரு தொடக்க நிலையே தவிர
முதிர்நிலை அல்ல என்பதை இன்று நாம் உணர்ந்துகொள்வோம்.
எப்படி?
இன்றைய பதிலுரைப்பாடலாக திருப்பாடல் 51ன் ஒரு பகுதியை
வாசிக்கின்றோம்.
"தாவீது பத்சேபாவிடம் முறைதவறி நடந்தபின் இறைவாக்கினர்
நாத்தான் அவரிடம் வந்தபோது அவர் பாடியது" என்று திருப்பாடல்
51க்கு முன்னுரை தரப்பட்டுள்ளது.
தன் பாவத்தால் தான் தன் இறைவனிடமிருந்து
அந்நியமாக்கப்பட்டுவிட்டதையும், தன் திருப்பொழிவு நிலை
மாசுபட்டதையும் எண்ணுகின்ற தாவீது மனம் வருந்தி இறைவனின்
இரக்கத்தை மன்றாடுகின்றார்.
கடவுளை தாவீதுக்கு ரொம்ப பிடிக்கும். கடவுளுக்கும் தாவீதை
ரொம்ப பிடிக்கும். ஆக, எந்நேரமும் அவரைக் காண்பதையே தன்
விருப்பமாகக் கொண்டிருந்த தாவீது தான் பத்சேபாவிடம் கொண்ட
தவறான உறவினால் அந்த விருப்பத்திற்கு
திரையிட்டுக்கொள்கின்றார். தாவீது பத்சேபாவை அடைய நினைத்தது
அக்கால வழக்கப்படி தவறு அல்ல. ஏனெனில் அரசனுக்கு அவனது
நாட்டில் உள்ள எல்லாரும், எல்லாமும் சொந்தம். கடவுளின்
முறைப்பாடு என்னவென்றால், "உன்னிடமிருந்து நிறைவைக் காண்பதை
விட்டு, உன்னிடம் இல்லாத ஒன்றை அல்லது உனக்கு வெளியே இருக்கும்
ஒன்றை நீயாக அடைய நினைத்தது" என்பதுதான். "நீ என்னிடம்
கேட்டிருக்கலாமே!" என்றுதான் கடவுள் வருத்தப்படுகின்றார்.
இந்தத் தவற்றால் கடவுளிடமிருந்து விலகிப்போன தாவீது கடவுளிடம்
நான்கு விருப்பங்களை முன்வைக்கின்றார்:
அ. தூயதோர் உள்ளம்
ஆ. உறுதிதரும் ஆவி
இ. மீட்பின் மகிழ்ச்சி
ஈ. தன்னார்வ மனம்
இந்த நான்கும் இருந்தால் கடவுளைக் காண தாவீது மட்டுமல்ல. நாம்
எல்லாருமே விருப்பம் கொள்வோம். ஏனெனில் இந்த நான்கிற்கும்
கடவுளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எப்படி?
அ. தூயதோர் உள்ளம்
- "தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர். ஏனெனில்
அவர்கள் கடவுளைக் காண்பர்" (மத் 5:8) என்பது இயேசுவின்
மலைப்பொழிவு. தூய்மை என்பது முழுமை. வெள்ளைத் துணியை தூய்மையாக
இருக்கிறது என நாம் எப்போது சொல்கிறோம்? துணி முழுவதும்
வெண்மையாக இருக்கும்போது. ஆக, ஒன்றின் இயல்பின்மேல் மற்றது
படிந்திருந்தால் அது தூய்மையற்றதாகிறது. லட்டு வாங்கி
வருகிறோம். சிகப்பு கலரில் இருக்கிறது. நான்கு நாள்கள் கழித்து
அதன் மேல் வெள்ளையாக அல்லது பழுப்பு நிறத்தில் ஏதோ ஒன்று
படிகிறது. உடனே "கெட்டுவிட்டது" என நாம் அதை தூக்கி வெளியே
போடுகிறோம். முழுமையான உள்ளம் கடவுளை மட்டுமே தேடும்.
ஆகையால்தான் "பிளவுண்ட மனம்" தவறு என பவுலடியார் சொல்கின்றார்
(காண். 1 கொரி 7:34).
ஆ. உறுதிதரும் ஆவி
- தவறு செய்யும் மனம் தவறுக்கான வாய்ப்பு
இல்லாதவரை உறதியாக இருக்கும். எனக்கு ஃபோர்னோகிராஃபி
பார்க்கும் பழக்கம் உள்ளது என வைத்துக்கொள்வோம். கணிணி
இல்லாதவரை, அல்லது இணைய இணைப்பு இல்லாத வரை என் மனம் "அதை
பார்க்கக்கூடாது" என உறுதியாக இருக்கும். ஆனால், கணிணியும்,
இணையமும், தனிமையான இடமும் கிடைத்தவுடன் முதல் வேலையாக "அதைப்
பார்க்கும்." ஆக, உறுதியாக இருந்த மனம் சூழல் மாறியவுடன்
உறுதியை இழந்துவிடுகிறது. தாவீது கேட்கும் ஆவி உறுதியை
தரக்கூடிய ஆவி.
இ. மீட்பின் மகிழ்ச்சி. அதாவது, தான் பத்சேபா வழியாக பெற்றது
இன்பம் என்றும், இறைவனிடமிருந்து வரும் மீட்பால் கிடைப்பது
மகிழ்ச்சி என்றும் சொல்கிறார் தாவீது. ஒருமுறை தவறு
செய்துவிட்டு அந்தத் தவறிலிருந்து வெளிவந்து கடவுளின்
மன்னிப்பை பெற்றவுடன் மனதில் ஒருவிதமான பெருமிதம்
அமர்ந்துகொள்கிறது. அந்த பெருமிதமே மகிழ்ச்சி. மேலும் தாவீது,
"மீண்டும் எனக்குத் தந்தருளும்!" என்று தான் இழந்ததை திரும்ப
பெற்றுக்கொள்ள விழைகின்றார்.
ஈ. தன்னார்வ மனம். கடந்த வாரம் என் நண்பர் ஒருவரிடம் அருள்பணி
வாழ்வு கஷ்டமாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருந்தேன்.
அப்போது அவர் சொன்னார்: "நீயா விரும்பித்தானே வந்தாய்!"
அவ்வளவுதான். நான் ஞானம் பெற்றேன். யாரும் நிர்பந்தித்து நான்
இந்த வாழ்வைத் தேர்ந்துகொள்ளவில்லை. ஆக, நான் ஏன்
நிர்பந்திக்கப்படுவதாக உணர வேண்டும். தன்னார்வ மனம் என்பது
நிர்பந்தம் இல்லாத மனம்.
இந்த நான்கு பண்புகள் வழியாக நாமும் அந்த கிரேக்கர்களைப் போல,
"ஐயா, நாங்கள் கடவுளை (இயேசுவை) காண விரும்புகிறோம்" என்று
சொல்ல முடியும்.
கடவுளைக் காண விரும்புகிறோம் என்றால் அவர் எங்கே இருக்கிறார்?
இந்தக் கேள்விகளுக்கான விடை இன்றைய முதல் மற்றும் இரண்டாம்
வாசகங்களில் இருக்கின்றன.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். எரே 31:31-34) புதிய
உடன்படிக்கை பற்றி பேசுகின்ற எரேமியா இறைவாக்கினர், இறுதியாக,
"இனிமேல் எவரும் "ஆண்டவரை அறிந்துகொள்ளும்" எனத் தமக்கு
அடுத்திருப்பவருக்கோ சகோதரருக்கோ கற்றுத்தர மாட்டார். ஏனெனில்
அனைவரும் என்னை அறிந்துகொள்வர்" என்று யாவே இறைவன் சொல்வதாக
இறைவாக்குரைக்கின்றார். இவ்வாறாக, கடவுளை வெளியே தேடும் நிலை
மறைந்து, கடவுள் ஒவ்வொருவரின் உள்ளத்தில் தோன்றும் நிலை
உருவாகிறது. ஆக, கடவுளை அறிவது என்பது அவர் நம் உள்ளத்தில்
எழுதியிருக்கும் சட்டத்தை, உடன்படிக்கையை அறிவது மட்டுமல்ல.
அதற்கு மேலும், "நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன். அவர்கள்
என் மக்களாய் இருப்பார்கள்" என்ற உணர்வை பெற்றுக்கொள்வது.
அதாவது, ஒரு தாயின் கருவறைக்குள் இருப்பது போன்றது. தாயின்
கருவறைக்குள் இருக்கும் குழந்தை கேட்கும் ஒலி தன் தாயின் ஒலி
மட்டுமே. மேலும், கருவறையில் இருக்கும் குழந்தை தன் தாயின் ஒரு
பகுதியாகவே நினைக்கும். அங்கே தாய்க்கும், சேய்க்கும் வேற்றுமை
இல்லை.
இயேசு கொண்டுவந்த மீட்பின் இரகசியம் இதுதான். கடவுளுக்கும்
மனிதருக்கும் உள்ள தூரத்தை இல்லாமல் செய்துவிட்டார்.
ஆக, கடவுளைக் காண்பதற்கு நாம் கண்களைத் திறக்கத் தேவையில்லை.
கண்களை மூடினாலே போதும். அவரை நாம் நம் அகத்துள் உணர்ந்துகொள்ள
முடியும்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் கடவுளைப் பற்றிய தேடல் நம் அன்றாட
வாழ்க்கை நிலைகளிலும் தெரிகிறது என்பது தெளிவாகிறது.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் இயேசுவை
தனிப்பெரும் தலைமைக்குருவாக முன்வைப்பதற்கு முன் அவர்
பெற்றிருந்த நிறைவை, "அவர் இறைமகனாயிருந்தும் துன்பங்கள் வழியே
கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அவர் நிறைவுள்ளவரானார்" என
எழுதுகிறார். ஆக, கடவுளுக்கான விருப்பம் நம் வாழ்வின்
துன்பங்களிலிருந்தும் ஊற்றெடுக்கும்.
இவ்வாறாக, கடவுளை நோக்கிய நம் தேடல் நமக்கு வெளியிலிருந்தும்,
நமக்கு உள்ளிருந்தும் வருகிறது.
மீண்டும், கிரேக்கர்களின் வார்த்தைகளுக்கே வருவோம்:
"ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்"
இந்த வார்த்தைகளோடு நம் சிந்தனையை நிறைவு செய்வோம்:
இயேசுவை அவரின் வாழ்நாளில் மூன்று வகையான மக்கள் காண
விரும்புகின்றனர்:
1. ஏரோது வகையினர். இயேசுவை தந்தை ஏரோதும் தேடுகிறார். மகன்
ஏரோதும் தேடுகிறார். இயேசு பிறந்த போது யூதேயாவை ஆட்சி செய்த
தந்தை ஏரோது இயேசுவைக் கொல்லத் தேடுகிறார் (மத்தேயு 2:16).
இயேசுவின் பாடுகளின் போது கலிலேயாவை ஆண்ட மகன் ஏரோது அவரிடம்
அறிகுறி எதிர்பார்த்துக் காண விரும்புகின்றார் (லூக்கா 23:8).
2. சக்கேயு வகையினர். சக்கேயு (லூக்கா 19:1-10) இயேசுவைக் காண
விரும்பியதன் நோக்கம் ஒரு பேரார்வம். மனமாற்றம் இயேசுவைச்
சந்தித்தபின் வந்ததுதான். இயேசுவைத் தேடி வந்த நோயுற்றோர்,
பேய்பிடித்தவர், தொழுநோயாளர், பார்வையற்றவர் எல்லாரும்
இவ்வகையில் அடங்குவர்.
3. கிரேக்கர் வகையினர். இவர்களைத் தான் இன்றைய நற்செய்தியில்
நாம் சந்திக்கின்றோம். தங்களின் முகத்தை மறைத்துக் கொண்டு
இயேசுவின் முகத்தைத் தேடியவர்கள். இயேசுவிடமிருந்து எந்தவித
எதிர்பார்ப்பும் இல்லாதவர்கள். இயேசுவை தங்கள் எதிரியாகவோ,
உபகாரியாகவோ பார்க்காதவர்கள்.
இன்று நாம் நம்மைப் பார்த்துக் கேட்க வேண்டிய முதல் கேள்வி:
நான் இயேசுவைக் காண விரும்புகிறேனா? விரும்புகிறேன் என்றால்,
நான் இந்த மூன்றில் எந்த வகையைச் சார்ந்தவர். முதல் இரண்டு
வகைத் தேடலிலும், இயேசுவைக் கண்டவுடன் பயணம் முடிந்து
விடுகிறது. ஆனால், மூன்றாம் வகையில் மட்டும் தான் பயணம்
தொடர்கிறது. முதல் வகையினர், எதிரிகள். இரண்டாம் வகையினர்
பக்தர்கள். மூன்றாம் வகையினர் சீடர்கள். இன்று இயேசுவுக்கு
நாம் எதிரிகளா, பக்தர்களா அல்லது சீடர்களா? எதிரிகளாகக் கூட
இருந்துவிடலாம். ஆனால், பக்தர்களாக இருப்பதுதான் மிகவும்
ஆபத்தானது. ஆலயத்திற்கு வந்தோம், மெழுகுதிரி ஏற்றினோம்,
கைகளைக் கும்பிட்டோம், வழிபட்டோம், சென்றோம் என்று நாம்
இருக்கும் போது இயேசுவை நம்மிடமிருந்து, அல்லது நம்மை
இயேசுவிடமிருந்து அந்நியப்படுத்திவிடுகிறோம். நாம் சீடர்களாக
அல்லது கிரேக்க வகையினராக இயேசுவைத் தேட வேண்டும்.
இரண்டாம் கேள்வி: இந்தக் கிரேக்கர்களைப் போலத் தேடுவது என்றால்
எப்படி?
இயேசுவே இதற்கான பதிலை மூன்று நிலைகளில் தெரிவிக்கின்றார்:
1. கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிய வேண்டும்.
2. தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதவராக இருக்க வேண்டும்.
3. என்னை (இயேசுவை) பின்பற்ற வேண்டும்.
1. கோதுமை மணி
இயேசு சொல்லும் இந்த உருவகம் ஒரு விவசாய உருவகம். நாம்
விவசாயம் செய்து விதைகள் விதைக்கும் போது, நாம் செய்யும்
விவசாயத்தின் நோக்கம் நாம் தெளிக்கும் விதைகள் எல்லாம் நம்
வயலின் மேல் கிடந்து அதை அலங்கரிக்க வேண்டும் என்பதா? இல்லை.
விதைக்கப்படுகின்ற விதைகள் போராட வேண்டும். முதலில் விதை
மண்ணோடு போராட வேண்டும். மண்ணைத் துளைத்து உள்ளே சென்று
தன்னையே மறைத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக, தன்னை
மறைத்துக் கொள்ளும் விதை மடிய வேண்டும். தன் இயல்பை முற்றிலும்
இழக்க வேண்டும். மூன்றாவதாக, அதே போராட்டத்துடன் மண்ணை
முட்டிக் கொண்டு மேலே வர வேண்டும். இந்த மூன்று நிலைகளில்
ஏதாவது ஒரு நிலையில் விதையின் போராட்டம் தடைபட்டாலும் விதை
பயனற்றதாகிவிடுகிறது. "இல்லை! நான் என்னை மறைக்க மாட்டேன்.
கீழே போக மாட்டேன். என்னை எல்லாரும் பார்க்க வேண்டும்!" என்று
அடம்பிடித்தால் வானத்துப் பறவைக்கு உணவாகிவிடும். அல்லது
கதிரவனின் சூட்டில் கருகிவிடும். மடிய மறுத்தாலோ அல்லது போராடி
உயிர்க்க மறுத்தாலோ அது மட்கிப்போய் விடுகிறது. இயேசுவின்
வாழ்வையும் விதையின் இந்த போராட்டத்தைப் போலத்தான் இருக்கிறது:
பாடுகள் படுகின்றார், இறக்கின்றார், உயிர்க்கின்றார்.
இயேசுவைக் காண விரும்பும் நம் மனநிலையும் இப்படித்தான் இருக்க
வேண்டும். கோதுமை மணி போல மடிவது என்றால் நம் உயிரை
மாய்த்துக்கொள்வது அல்ல. நாம் எதற்காக படைக்கப்பட்டோமோ அந்த
நோக்கத்தை நிறைவேற்றுவது. நாம் விதியினாலோ. இயற்கையின்
விபத்தினாலே வந்தவர்கள் அல்லர். நம் ஒவ்வொருவருக்கும் ஒரு
நோக்கம் இருக்கிறது. வெறும் 10 ரூபாய் கொடுத்து 10 நிமிடம்
செல்லும் பயணத்திற்கே இலக்கும் நோக்கமும் இருக்கிறது என்றால்
பல வருடங்கள் பயணம் செய்கின்ற நம் வாழ்க்கைப் பயணத்திக்கு
இலக்கும், நோக்கமும் இல்லாமல் இருக்குமா? இயேசுவின் சீடர்கள்
என்று சொல்லிக்கொள்ளும் வாழ்க்கை "சராசரி" வாழ்க்கையாக
இருந்துவிடக் கூடாது. நம் முழு ஆற்றலும் வெளிப்படுகின்ற
வகையில் நம் வாழ்க்கை ஓட்டம் அமைய வேண்டும். மாணவராக
இருக்கிறோமா! முழு அர்ப்பணத்துடன் படிக்க வேண்டும். டாக்டராக,
ஆசிரியராக, அன்றாட கூலியாக நாம் என்னவாக இருந்தாலும் அதில்
நாம் முழுமையாக மடிய வேண்டும். பலன் தர வேண்டும்.
2. தமக்கென்று
வாழ்வோர் - தமக்கென்று வாழாதோர்
இரண்டாவதாக, இயேசு இரண்டு வகை மனிதர்களைக் குறிப்பிடுகின்றார்:
"தமக்கென்று வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுகின்றனர்", "தம்
வாழ்வை ஒருபொருட்டாகக் கருதாதவர் நிலைவாழ்வு பெறுகின்றனர்".
இரண்டும் ஒன்றிற்கொன்று தொடர்பு இல்லாததுபோல இருக்கிறது.
இரண்டாவது வாக்கியம் லாஜிக் படி பார்த்தால், "தமக்கென்ற
வாழாதோர்" என்றுதானே இருக்க வேண்டும். இயேசுவின் இந்தப்
போதனையின் நோக்கம் நாம் நமக்காக வாழ வேண்டுமா அல்லது
பிறருக்காக வாழ வேண்டுமா என்பதல்ல. மாறாக, வாழ்வின் மேலான நம்
கண்ணோட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதுதான். "ஒருவர் உலகம்
முழுவதும் தமதாக்கிக் கொண்டாலும், தன் வாழ்வை இழந்து விட்டால்
அதனால் வரும் பயன் என்ன?" (மத்தேயு 16:26) என்னும் இயேசுவின்
போதனை இப்போது முரண்படுகிறது போல தெரிகிறதல்லவா! வாழ்வை ஒரு
பொருட்டாகக் கருதாதது என்றால் சரியாகக் குளிக்கக் கூடாது, நல்ல
டிரஸ் போடக்கூடாது, எம்.பி.3 ப்ளேயரில் பாட்டுக் கேட்கக்
கூடாது என்பதல்ல. மாறாக, எதற்கும் நான் உரிமையாளன் அல்ல என்ற
நிலையில் வாழ்வது. நாம் நம் வாழ்விற்கும், நம் உயிருக்கும்,
நம் உறவுகளுக்கும் கண்காணிப்பாளர்கள் தாம். நம் மேலும், நம்
உறவுகள் மேலும் நமக்கு உரிமையில்லை. நம் வாழ்வில் அருட்பணி
நிலையில் ஒரு பங்கோ, பொதுநிலை வாழ்வில் கணவனோ, மனைவியோ,
பிள்ளைகளோ தரப்பட்டிருக்கிறது என்றால் அவர்கள் மேல் ஆட்சி
செலுத்துவதற்கும், உரிமை கொண்டாடுவதற்கும் அல்ல. மாறாக,
கண்காணிப்பதும், பராமரிப்பதும் தான் நம் வேலை. "எது இன்று
உன்னுடையதோ, அது நாளை வேறொருவனுடையது!" என்ற கீதையின் சாரமும்
இங்கே நினைவுகூறத்தக்கது. எதன்மேலும் உரிமையில்லை என்பதற்காக,
"வந்த மாட்டையும் கட்ட மாட்டேன், போன மாட்டையும் தேட மாட்டேன்"
என்ற கண்டுகொள்ளாத மனநிலையிலும் இருந்துவிடக்கூடாது.
3. எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப்
பின்பற்றட்டும்
இயேசுவின் சீடரோ அல்லது இயேசுவைக் காண விரும்புவரோ இருக்க
வேண்டிய இடம் இயேசு இருக்கும் இடம்தான். ஒழுக்கம் என்றால்
என்ன? "இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டிய பொருள்
இருப்பதும், செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டிய வேலையைச்
செய்வதும்தான்!" உதாரணத்திற்கு, படிக்கின்ற மாணவர்கள் திங்கள்
கிழமை காலை 10 மணிக்கு வகுப்பறையில் இருக்க வேண்டும் என்பது
ஒழுக்கம். அதே மாணவர்கள் திங்கள் கிழமை 10 மணிக்கு தியேட்டரில்
இருந்தால் அது ஒழுங்கீனம். இயேசு இருக்க வேண்டிய இடத்தில்
அவரைத் தேடுவோரும் இருப்பதும், இயேசு கொண்டிருந்த மனநிலையைக்
கொண்டிருப்பதும் தான் ஒழுக்கம். இயேசுவைப் பின்பற்றுவது
என்றால் என்ன? பின்பற்றுவது அல்லது ஃபாலோ செய்வது என்றால்
உடனடியாக நம் நினைவிற்கு வருவது டுவிட்டர்தான். டுவிட்டரில்
நாம் சிலரைப் பின்பற்றுகிறோம். அல்லது சிலர் நம்மைப்
பின்பற்றுகிறார்கள். நாம் யாரைப் பின்பற்றுகிறோமோ அவர்களின்
கருத்தியலைப் பகிர்ந்து கொள்கிறோம் என்றுதான் அர்த்தம்.
அரசியல், விளையாட்டு, சினிமா, ஆன்மீகம், படிப்பு, வேலை என
எல்லாத் தளங்களிலும் நாம் சிலரைப் பின்பற்றுகிறோம். நாம்
பின்பற்றும் நபர்கள் நம்மையறியாமலேயே நம்மில் ஒரு தாக்கத்தை
ஏற்படுத்துகின்றனர். டுவிட்டரில் அடுத்தவர்களைப்
பின்பற்றுவதற்கு மெனக்கெடும் நாம் இயேசுவைத் தேடுவதற்கும்,
பின்பற்றுவதற்கும் மெனக்கெடுவதில்லை என்பதுதான் வேதனையான
விஷயம். அன்று கிறிஸ்தவராக மாறுவது கடினம். ஆனால் வாழ்வது
எளிது. இன்று, கிறிஸ்தவராக மாறுவது எளிது. ஆனால், வாழ்வதுதான்
கடினம்.
"நான் இயேசுவைக் காண விரும்புகிறேன்!" - இது ஒன்றே இன்று என்
மன்றாட்டாக, ஆசையாக, தேடலாக இருந்தால் எத்துணை நலம்!
(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
Archdiocese of Madurai
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 3
=================================================================================
புதிய நெறி... புதிய வாழ்வு...
திருப்பலி கவிதை
தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு
சொல்லித்தரும்
பாடங்களை
அப்படியே மனனம் செய்து
தேர்வில் பதிவுச் செய்யும்
பழக்கம் சிறப்புக்குரியது
பாராட்டுவதற்குரியது
இதைத்தான் விரும்புகிறது
இன்றைய உலகம்...
பார்த்ததை
கேட்டதை
வேண்டியவன் என்றால்
ஊமையாய் மாறி
காப்பாற்றுவதும்
வேண்டாதவன் என்றால்
சாமியாய் மாறி
சாட்சி சொல்லுவதும்
இன்றைய அவனியில்
தென்படும் இரட்டை வாழ்க்கை!
நிமிர்ந்துகூட
பார்க்க துணியாதவன்
இன்றும் இவ்வுலகில் இருக்க
தலைகணத்தோடு
அடுத்தவருக்கு தலைவலி
கொடுக்கும் கூட்டமும்
இருக்கத்தான் செய்கிறது...
வழிகளை மறைத்து
வடிகால்களை உடைத்து
வயோதியர்களை மிதித்து
வாலிப இளைஞர்களைத் தடுத்து
வயதுவந்த பெண்களைக் கெடுத்து
வம்சாவழியையே அழிக்க
அற்பமான கூட்டங்கள்
இன்றைக்கு கொடிகட்டி பறக்கின்றன!
புதிய நெறியும்
புதிய வழியும்
புதிய பாதையும்
புதிய வாழ்வும்
விடியலாய் மலரும் என்ற
வெட்டிப் பேச்சுகளுக்கு மத்தியில்
தன்னையே இழந்து
தரணியை மீட்க
வந்த இறைமகன் இயேசு
இன்றைய இறைவாக்கு வழிபாடு
வழியாக நமக்கு
புதிய நெறியைத் தருகிறார்...
புதிய வாழ்வு வாழ அழைக்கிறார்...
கோதுமை மணி மடிந்தால்
பலன் தரும்
அதுபோல மடிந்திட வா
மனிதனே என்கிறார் இயேசு!
தன் கரங்களை விரித்து
தன் சீடர்களின்
பாதங்களைக் கழுவி
புதிய கட்டளையை வழங்கி
வாழ்வைக் கொடுத்தவர்
இன்று நாம் அவரின் வழி வாழ
அழைக்கப்படுகின்றோம்...
சாதியின் சாக்கடையில்
ஊறிப்போன நமக்கு
சண்டையில் மழுங்கிபோன
நமக்கு
மதத்தின் வெறியில்
மறைந்துபோன நமக்கு
பணத்தினுள்
தொலைந்துபோன நமக்கு
பதவிக்குள்
அடக்கமான நமக்கு
கட்சி மனப்பான்மையில்
ஒளிந்துகொண்ட நமக்கு
பழிவாங்கும் எண்ணத்தினுள்
சிக்கிக் கொண்ட நமக்கு
கெட்டவற்றைப் பார்க்க
பழகிய நமக்கு
அடுத்தவர்களைக் காட்டிக்கொடுக்கவே
கற்றுக்கொண்ட நமக்கு
இன்றைக்கு புதிய வழியைக் காட்டி
புத்தொளி பெற்று
ஓளியின் மக்களாய் வாழ
வழிகாட்டுகின்றது
தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு!
மன்னிப்பால் மனிதகுலத்தை
மீட்ட இறைத்தந்தையின் இரக்கம்
பாவத்தை தூக்கியெறிந்து
மறுவாழ்வு வழங்கிய
இறைத்தந்தையின் பரிவிரக்கம்
முதல் வாசகத்தின் சாரம்!
இருளில் வாழ்ந்து
இருளின் பிள்ளைகளாய் வளர்ந்து
இருளுக்குப் பணிபுரிந்ததுபோதும்
ஒளிக்கு வாருங்கள்
ஒளிக்குச் சான்றுபகருங்கள் என்று
ஒளியின் மக்களாய் வாழ்தலே சிறப்பு
என்பது இரண்டாம் வாசகத்தின் சாரம்!
இவ்விரண்டையும் ஒருசேர
உள்ளத்தில் தியானிக்க
வழியமைக்கின்றது நற்செய்திவாசகம்!
மன்னிப்பும்
இரக்கமும்
அவ்வளவு எளிதில் வந்துவிடாது
அதற்கு நாம் மடிய வேண்டும்....
ஆடம்பரத்தை இழக்க வேண்டும்
அநீதியை விலக்க வேண்டும்
அக்கிரமத்தை ஒழிக்க வேண்டும்
இருளை அகற்ற வேண்டும்
பகட்டான வாழ்வை அழிக்க வேண்டும்
தலைகணத்தை மழிக்க வேண்டும்
தாறுமாறான வாழ்வை தொலைக்க வேண்டும்
தாந்தோன்றிதனமான போக்கை கைவிட வேண்டும்
கஞ்சத்தனத்தை கரைக்க வேண்டும்
கோபத்தை விடுக்க வேண்டும்
கெட்ட நடத்தையை புறந்தள்ள வேண்டும்
அப்போது
நாமும் மடிவதற்கான வாய்ப்புகள்
தென்படும்
பாதைகள் தெளிவாய் தெரியும்...
அக்கணமே
அன்பு மழைப் பொழியும்
இரக்கக் காற்று வீPசும்
மன்னிப்புச் சாரல் தெறிக்கும்
பாச உணர்வு உதிக்கும்
நேர்மைத்தன்மை மலரும்
இப்படியாய் வாழ்வை அமைப்பதில்
நாமும் ஒருநாள்
மற்றவருக்காய் கரங்களை விரிப்போம்
உயிரைக் கொடுக்கவும்
யோசிக்க மாட்டோம்
மற்றவர்களை வாழ வைக்கவும்
கடினப்படமாட்டோம்
தொடர்ந்து பயணிப்போம்....
கல்வாரியில் மரிப்போம்!
இயேசுவோடு மடிவோம்...
அவரோடு உயிர்ப்போம்! - ஆமென்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 4
=================================================================================
கோதுமை மணியின் மாட்சி ...
தம்மைத் தேடிவந்த கிரேக்கர்களுக்கு இயேசு சொன்ன அருமையான போதனை
கோதுமை மணி உவமை. கிரேக்கர்கள் அறிவுஜீவிகள். அவர்கள்
ஞானத்தைத் தேடியவர்கள். எனவே, ஞானம் நிறைந்த இயேசுவின்
போதனைகளையும், அருங்குறிகளையும் கேள்விப்பட்டு அவரைக்
காணவந்தார்கள். அவர்களுடைய அறிவாற்றலுக்கு ஏற்றவகையில் இயேசு
அவர்களிடம் உரையாடுகிறார்.
கிரேக்கர்களுக்குத் தோல்வி, துன்பம் இவற்றில் நம்பிக்கை இல்லை.
துன்பத்தின் வழியாக இன்பமும், வெற்றியும் கிடைக்கும்
என்பதெல்லாம் அவர்களின் அறிவாற்றலுக்கு ஒவ்வாத செய்திகள்.
எனவேதான், ஞானத்தை நாடும் கிரேக்கருக்கு சிலுவை மடமையாய்
இருக்கிறது என்றார் பவுலடியார். பவுலைப் பொறுத்தவரையில்,
சிலுவையில் அறையுண்ட கிறிஸ்து "கடவுளின் வல்லமையும், ஞானமுமாய்
இருக்கிறார்" (1 கொரி 1: 22-24).
அந்த ஞானத்தைத்தான் தம்மைத் தேடிவந்த கிரேக்கர்களுக்கும்,
அவர்களோடு நின்றுகொண்டிருந்த தம் சீடர்களுக்கும் இயேசு
கற்றுக்கொடுக்க முன்வந்தார். "கோதுமை மணி மண்ணில் விழுந்து
மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான்
மிகுந்த விளைச்சலை அளிக்கும். தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை
இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர்
நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்" என்றார் இயேசு.
இந்த போதனையைக் கேட்டு அந்தக் கிரேக்கர்கள் மலைத்திருக்க
வேண்டும். இயேசுவின் சீடர்கள்கூட வியந்திருப்பர். அவர்களின்
வியப்பை அதிகரிக்கும் வகையில் "மாட்சிப்படுத்தினேன், மீண்டும்
மாட்சிப்படுத்துவேன்" என்று தந்தையின் குரல் வானிலிருந்து
ஒலித்தது. கோதுமை மணிபோல மடிந்தாலும், இறுதியில்
இறைத்தந்தையால் இயேசு மாட்சிப்படுத்தப்படுவார் என்னும் உண்மையை
அப்போது அவர்கள் உணராமல் இருக்கலாம். ஆனால், இயேசுவின் இறப்பு,
உயிர்ப்பு என்னும் அனுபவங்களிலிருந்து சீடர்கள் கோதுமை மணியின்
மாட்சியை உணர்ந்துகொண்டனர்,
நாமும் இந்த ஞானத்தைக் கற்றுக்கொள்வோம்.
மன்றாடுவோம்: கோதுமை மணிபோல மண்ணில் மடிந்த ஆண்டவராகிய
இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். மடிந்த உம்மை உயிர்த்தெழச்
செய்து மாட்சிப்படுத்திய தந்தை இறைவன், பிறருக்காகத் தம்
உயிரைக் கையளிக்கும் அனைவரையும் மாட்சிப்படுத்துவதற்காக நன்றி
செலுத்துகிறோம். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி,
ஆமென்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
இன்றைய திருப்பலி மறையுரை :
"கிரேக்கர் சிலர்... பிலிப்பிடம்
வந்து, 'ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்' என்று
கேட்டுக்கொண்டார்கள்" (யோவான் 12:20-21)
இயேசுவில் நம்பிக்கை கொண்ட மக்கள் யூதர்கள் மட்டுமல்ல, பிற
இனத்தாரும் அவரை ஏற்றனர் என்னும் உண்மையை இங்கே யோவான்
நற்செய்தி தெரிவிக்கிறது. இயேசு எருசலேம் நகருக்கு வருகிறார்.
அங்கே வழிபடுவதற்கென்று யூதர்களும் "சில கிரேக்கர்களும்"
வருகின்றனர். இங்கே கிரேக்கர்கள் எனக் குறிக்கப்படுவோர் "பிற
இனத்தார்" ஆவர். அவர்கள் இயேசுவைத் தேடி வருகிறார்கள்.
நேரடியாக அவர்கள் இயேசுவிடம் போகவில்லை. மாறாக, இயேசுவின்
சீடர்களில் ஒருவராகிய பிலிப்புவை அவர்கள் அணுகுகிறார்கள்.
"ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்" என்பது அவர்களது
வேண்டுகோள்.
இங்கே பல கருத்துக்கள் அடங்கியுள்ளன. தொடக்க காலத் திருச்சபை
இயேசுவின் நற்செய்தி யூதர்களுக்கு மட்டுமல்ல, பிற
இனத்தாருக்கும் உலக மக்கள் அனைவருக்குமே உரியது என்னும்
உண்மையை உணர்ந்தது. ஆகவே, இயேசுவைத் தேடி எல்லா மக்களுமே
வருகிறார்கள். அவ்வாறு வருவோரை இயேசுவிடம் கொண்டுசெல்லும் பணி
இயேசுவின் சீடர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிலிப்பு இங்கே
இயேசுவின் சீடர்களுக்கு அடையாளம். இயேசுவில் நம்பிக்கை
கொண்டோர் பிற மக்களையும் இயேசுவிடம் இட்டுச் செல்ல வேண்டும்.
ஏனென்றால் "இயேசுவைக் காண விரும்பி" வருகின்ற மக்கள் பலர்
இருக்கிறார்கள். அவர்களது உள்ளத்தில் எழுகின்ற தாகத்தைத்
தணிக்க வேண்டும் என்றால் அவர்களை வாழ்வின் ஊற்றாகிய இயேசுவிடம்
நாம் இட்டுச் செல்ல வேண்டும். இயேசுவே நமக்கு
வாழ்வளிக்கின்றார். மண்ணில் விழுந்து மடிகின்ற கோதுமை மிகுந்த
விளைச்சலைத் தருவதுபோல, சிலுவையில் இறக்கின்ற இயேசு நமக்கு
நிலைவாழ்வு அளிக்கிறார். அவரை நாம் அணுகிச் சென்று வாழ்வு
பெறுவதோடு பிறரையும் அவரிம் கூட்டிச் செல்ல நாம்
அழைக்கப்படுகிறோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல். |
|