|
Year B |
|
பாஸ்கா காலம்
நான்காம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இயேசுவினாலே அன்றி, வேறு
எவராலும் மீட்பு இல்லை.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 8-12
அந்நாள்களில் பேதுரு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு கூறியது: `"மக்கள்
தலைவர்களே, மூப்பர்களே, உடல்நலமற்றிருந்த இவருக்கு நாங்கள்
செய்த நற்செயல் எப்படி நிகழ்ந்தது என்பதைக் குறித்து நாங்கள்
இன்று விசாரணை செய்யப்படுகிறோம்.
நாசரேத்து இயேசுவின் பெயரால் இவர் நலமடைந்து நம்முடன்
நிற்கிறார். இது உங்கள் எல்லாருக்கும், இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும்
தெரிந்திருக்கட்டும். நீங்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள்.
ஆனால் கடவுள் இறந்த அவரை உயிருடன் எழுப்பினார்.
இந்த இயேசுவே, "கட்டுகிறவர்களாகிய உங்களால் இகழ்ந்து தள்ளப்பட்ட
கல். ஆனாலும் முதன்மையான மூலைக் கல்லாக விளங்குகிறார்.' இவராலே
அன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை.
ஏனென்றால் நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே
இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை."
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 118: 1,8-9. 21-23. 26,28,29 (பல்லவி: 22)
Mp3
=================================================================================
பல்லவி: கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்தின் மூலைக்கல் ஆயிற்று!
அல்லது: அல்லேலூயா.
1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும்
உள்ளது அவரது பேரன்பு. 8 மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம்
தஞ்சம் புகுவதே நலம்! 9 உயர்குடியினர்மீது நம்பிக்கை வைப்பதைவிட,
ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவதே நலம்! பல்லவி
21 என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால்,
உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். 22 கட்டுவோர் புறக்கணித்த
கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! 23 ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது!
நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! பல்லவி
26 ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று
உங்களுக்கு ஆசி கூறுகிறோம். 28 என் இறைவன் நீரே! உமக்கு நான்
நன்றி செலுத்துகின்றேன்; என் கடவுளே! உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன்.
29 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்;
என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
கடவுள் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்
3: 1-2
அன்பிற்குரியவர்களே, நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு
கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்;
கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான்
நம்மையும் அறிந்துகொள்ளவில்லை.
என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம்.
இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை.
ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப்போல் இருப்போம்; ஏனெனில்
அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 10: 15
அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்;
என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி
வாசகம்
=================================================================================
நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 11-18
அக்காலத்தில் இயேசு கூறியது: "நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத்
தம் உயிரைக் கொடுப்பார். கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக்
கண்டு ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும்
அல்ல; ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல. ஓநாய் ஆடுகளைப் பற்றி
இழுத்துக் கொண்டுபோய் மந்தையைச் சிதறடிக்கும். கூலிக்கு மேய்ப்பவருக்கு
ஆடுகளைப்பற்றிக் கவலை இல்லை.
நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை
அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்;
என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக்
கொடுக்கிறேன். இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன.
நான் அவற்றையும் நடத்திச் செல்ல வேண்டும். அவையும் எனது குரலுக்குச்
செவிசாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும்
நிலை ஏற்படும்.
தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக்
கொடுக்கிறேன்; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன். என்
உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக்கொள்வதில்லை. நானாகவே அதைக்
கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதை
மீண்டும் பெற்றுக்கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே
நான் இப்படிச் செய்கிறேன்" என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 1
=================================================================================
"நல்ல ஆயன் நானே: நான் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்,
அவையும் என்னை அறிந்திருக்கின்றன". நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள
பணி எதுவாக இருந்தாலும் நாம் அதைப்பற்றி நன்கு அறிந்திருக்க,
புரிந்திருக்க வேண்டும். அவற்;றைப்பற்றிய எந்த அறிவும், அறிதலும்,
புரிதலும் இல்லாமல் நம் பணியை செம்மையாகச் செய்ய இயலாது.
ஆயன் என்பவன் தன் ஆடுகளின் ஒவ்வொரு அசைவையும் நன்கு அறிந்திருக்;க
வேண்டும். அதுபோல, அந்த ஆடுகளும் தன் ஆயனை நன்கு அறிந்திருக்க
வேண்டும். இல்லையேல், நமக்கு இழப்புகள் நேர்வதை நாம் தவிர்க்க
முடியாது. இது, ஆயனுக்கும், ஆடுகளுக்கும் மட்டுமல்ல, இறைவனுக்கும்,
நமக்கும் உள்ள உறவிலும், மற்றும் நமக்கும், நம் உறவுகளுக்கும்
உள்ள உறவிலும் இந்ந அறிதல், புரிதல் மிகமிக அவசியம். இறைவனைப்பற்றி
நாம் முழுமையாக அறியாததால்தான் பல தருணங்களில் அவர்மீது நம்பிக்கை
இழக்கின்றோம். நம்; உடன் உள்ள உறவுகளை அறிந்து கொள்ளாததால்,
புரிந்து கொள்ளாததால்தான் உறவில் விரிசல்கள் உண்டாகின்றது. இதை
உணர்ந்தவர்களாய், நம்முடைய பணி எதுவாக இருந்தாலும். உறவாக இருந்தாலும்
நல்ல அறிதலுடன், புரிதலுடன் செயல்படுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 2
=================================================================================
நல்லாயன் இயேசு
1792 ஆம் ஆண்டு மெக்லென் பெர்க்கின் இளவரசர் ஆரஞ்ச் நாட்டின்
இளவரசரைச் சந்திக்கச் சென்றார். கப்பல்கள் கடலுக்குள் செல்லும்
விழாவிற்கு அயல்நாட்டு இளவரசரை அழைத்துப் போனார் ஆரஞ்ச் நாட்டு
இளவரசர்.
விழாவைக் குறிக்கும் விதமாக கப்பலில் இருந்தவர்கள் ஆடிப்பாடிக்
கொண்டிருந்தார்கள். அவர்களில் ஓர் இளைஞன் கடலில் தவறி
விழுந்துவிட்டான். அடுத்த வினாடியே ஆரஞ்சு நாட்டு இளவரசர் அவரைக்
காப்பாற்ற கடலில் குதித்தார். இதைப் பார்த்து, இளவரசரையும் இளைஞனையும்
மீட்க பலரும் குதித்தனர். இறுதியில் இளவரசரை மட்டுமே முடிந்தது.
அப்போது அங்கிருந்தவர்கள் இளவரசரிடம், "ஏன் இந்த விஷப் பரீட்சை?" என்று கேட்டபோது அவர் சொன்னார், "என் சொந்த சகோதரன்
விழுந்திருந்தால் நான் சும்மா இருந்திருப்பேனா? கடலில்
குதித்து, அவனைக் காப்பாற்றி இருப்பேன் அல்லவா... கடலில் தவறி
விழுந்த இளைஞனை என்னுடைய சொந்த சகோதரனாகவே பார்த்தேன். அதனால்தான்
கடலில் குதித்து அவனைக் காப்பாற்ற முயன்றான். ஆனால், என்னால்
அவனைக் காப்பாற்ற முடியவில்லை" என்றார். பின்னர் இறந்த இளைஞனின்
குடும்பத்திற்கு பெரும் தொகையைக் கொடுத்து, குடும்பத்தாரிடம்,
எந்த நேரத்தில் எதுவேண்டுமானாலும் கேளுங்கள், நான் உங்களுக்கு
நிறைவேற்றித் தருகின்றேன்" என்றார் அந்த இரக்கமிக்க இளவரசர்.
"நல்ல ஆயன் நானே, நல்ல ஆயன் ஆடுகளுக்காக தம் உயிரையும்
கொடுப்பார்" என்பார் இயேசு கிறிஸ்து. மேலே சொல்லப்பட்ட நிகழ்வில்
வரும் இளவரசர் ஒரு நல்ல ஆயனுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டகத்
திகழ்கின்றார். பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறை திருச்சபை நல்லாயன்
ஞாயிராகக் கொண்டாடப் பணிக்கின்றது. இந்த நல்ல நாளில் ஆண்டவர்
இயேசு எப்படி ஒரு நல்ல ஆயனாகத் திகழ்கின்றார், நல்லாயனின் மந்தையாகிய
நாம் எப்படி இருக்கவேண்டும் என்று சிந்தித்துப் பார்த்து
நிறைவு செய்வோம்.
தொடக்க காலத்தில் யூதர்கள் ஆடு மேய்க்கும் தொழிலைத்தான் பிரதானத்
தொழிலாகச் செய்துவந்தார்கள். விவிலியத்தில் நாம் வாசிக்கின்ற
ஆபேல், மோசே, தாவீது, இறைவாக்கினர் ஆமோஸ் இன்னும் ஒருசில
முக்கியமான ஆளுமைகள் எல்லாம் ஆடு மேய்க்கும் தொழிலைச் செய்துவந்தார்கள்
என்பது நம்முடைய கவனத்தில் கொள்ளவேண்டிய செய்தியாக இருக்கின்றது.
இப்படி ஆடுமேய்த்தலை பிரதானத் தொழிலாகக் கொண்டிருந்த யூதர்கள்
தாங்கள் வணங்கும் கடவுளை ஆயனாக பார்த்ததில் வியப்பேதும் இல்லை
(திபா 23). இதனை நன்கு உணர்ந்த இயேசு கிறிஸ்து தன்னை ஓர் ஆயனாகவும்,
மக்களை மந்தையாகவும் உருவகமாகப் பேசுகின்றார். எனவே, இயேசு தன்னை
ஒரு ஆயனாக, அதுவும் நல்ல ஆயனாகக் குறிப்பிடும் பட்சத்தில், அவர்
எப்படி ஒரு நல்ல ஆயனாகத் திகழ்கின்றார், அவருடைய மந்தையாகிய
நாம் எப்படி இருக்கவேண்டும் என்று சிந்தித்துப் பார்த்து
நிறைவு செய்வோம்.
நல்ல ஆயனுக்கு உரிய முதன்மையான தகுதி ஆடுகளை அறிந்திருப்பதாகும்.
எதுவெல்லாம் தன்னுடைய ஆடுகள், அந்த ஆடுகளின் தேவை என்ன, அவற்றிற்கு
என்ன பிரச்சனை என்பதை ஓர் ஆயன் முழுமையாக அறிந்திருக்கவேண்டும்.
ஆடுகளையும், அவற்றின் பிரச்னையையும் முழுமையாக அறியாத ஆயன் நல்ல
ஆயானாக இருக்கமுடியாது என்பதுதான் உண்மை. இயேசு கிறிஸ்து தன்னுடைய
பணிவாழ்வில் சீடர்களையும், மக்களையும் அழைக்கின்றபோது அவர்களுடைய
பெயர் சொல்லிதான் அழைக்கின்றார். எடுத்துக்காட்டாக மத்தேயுவையும்,
நத்தனியேலையும், ஏன் சக்கேயுவையும் அழைக்கின்றபோது அவர் பெயர்
சொல்லித்தான் அழைக்கின்றார். பழைய ஏற்பாட்டில் ஆண்டவராகிய கடவுள்
இறைவாக்கினர்களையும், இறையடியார்களையும் அழைக்கின்றபோது எப்படி
பெயர் சொல்லி அழைத்தாரோ, அதுபோன்று ஆண்டவர் இயேசுவும் மக்களைப்
பெயர் சொல்லி அழைக்கின்றார்.
பெயர் சொல்லி அழைப்பது என்பது ஒரு மனிதரை முழுமையாக அறிவதற்குச்
சமமாகும். அந்த வகையில் நம்மை முழுமையாக அறிந்திருப்பதால் இயேசு
ஓர் நல்ல ஆயானாகத் திகழ்கின்றார்.
நல்லாயனாகிய இயேசு ஒவ்வொருவரையும் முழுமையாக அறிந்திருக்கின்றார்
என்று சிந்தித்துப் பார்த்த நாம், நம்மை ஆளக்கூடியவர்கள், நம்
தலைவர்கள், ஏன் நாம் நம்மோடு இருப்பவர்களை முழுமையாக அறிந்திருக்கின்றோமா?
என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இன்றைக்கு குடும்பத்தில்
பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை முழுமையாக அறிந்திருக்கவில்லை,
கணவன் தன்னுடைய மனைவியையும், மனைவி தன்னுடைய கணவரையும்
முழுமையாக அறிந்திருக்கவில்லை, அதனாலேயே குடும்பத்தில் அதிகமான
குழப்பங்களும் பிரச்சனைகளும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஒரு தம்பதியினர் தங்களுக்குத் தெரிந்த இன்னொரு தம்பதியினரின்
வீட்டுக்கு விருந்துக்குச் சென்றிருந்தனர். விருந்து மிகத் தடபுலாக
நடைபெற்றது. விருந்து முடிந்ததும் மனைவியர் இருவரும் சற்று
வெளியே சென்றுவிட்டனர். கணவன்மார்கள் இருவர் மட்டும் சாப்பிட்ட
இடத்திலேயே நீண்ட நேரமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது ஒருவர் மற்றவரிடம், "நேற்று இரவு நானும் என் மனைவியும்
ஓர் உயர்தர உணவகத்திற்குச் சென்றிருந்தோம். அந்த உணவகத்தில்
உணவு அருமையாக இருந்தது. நீங்களும்கூட அந்த உணவகத்திற்குப் போகலாம்,
நிச்சயம் அருமையாக உணவு வகைகள், அற்புதமான உபசரிப்பு அங்கு
கிடைக்கும்" என்றார். உடனே மற்றவர் அவரிடம், "அந்த உணகத்தின்
பெயர் என்ன?" என்று கேட்டார். அவருக்குத் திடிரென்று உணவகத்தின்
பெயர் ஞாபகம் வரவில்லை. உடனே அவர் அதனை மற்றவரிடம்
வெளிகாட்டிக்கொள்ளாமல், "நீங்கள் ஒருவரை காதலிக்கின்றீர் என்றால்,
அவருக்கு என்ன பூவை பரிசாகக் கொடுப்பீர்கள்?... அந்தப் பூ சிவப்பாக
இருக்கும், அதன் அடியில் முட்கள்கூட இருக்கும். அது என்ன
பூ?" என்று கேட்டார். உடனே மற்றவர்,
"ரோஸ்" என்றார்.
"மிகச் சரியான பதில்" என்று சொல்லிவிட்டு அவர் கொஞ்சம் தள்ளி
நின்று பேசிக்கொண்டிருந்த தன்னுடைய மனைவியைப் பார்த்து, "ரோஸ்!
நேற்று நாம் சாப்பிடச் சென்ற உணவகத்தின் பெயர் என்ன?" என்று
கேட்டார். இதைக் கேட்ட மற்றவருக்குத் தூக்கி வாரிப்போட்டது.
தன் மனைவியின் பெயரைக்கூட அறிந்து வைத்திராத கணவனை என்னவென்று
சொல்வது? இப்படித்தான் நிறையப் பேர் தங்களோடு இருப்பவர்களை, தங்களுடைய
மக்களை முழுமையாக அறிந்துவைக்காமல் இருக்கின்றார்கள். ஆனால்,
நல்லானாகிய இயேசு நம்மை முழுமையாய் வைத்திருக்கின்றார்.
நல்லாயனுக்குரிய இரண்டாவது முக்கியமான தகுதி ஆடுகளின் தேவையை
பூர்த்தி செய்வதாகும். திருப்பாடல் 23 ல் வாசிக்கின்றோம்,
"பசும்புல் வெளிமீது அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான
நீர்நிலைகளுக்கு அழைத்துச் செல்வார்; புத்துயிர் அளிப்பார்;
நீதிவழி நடத்திடுவார்" என்று. ஆம், ஒரு நல்ல ஆயன் என்பவர் இப்படித்தான்
தன்னுடைய மந்தையின் தேவையென்ன, அதன் அன்றாடப் பிரச்சனை என்ன என்பதை
அறிந்து அவற்றினை நிவர்த்தி செய்யவேண்டும்.
இயேசு ஒரு நல்ல ஆயனைப் போன்று செயல்பட்டார் என்பதை நற்செய்தியில்
வருகின்ற பல நிகழ்வுகள் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. மக்கள்
ஆயனில்லா ஆடுகளைப் போன்று இருந்ததால் அவர்கள்மீது பரிவுகொண்டார்
என்றும், அவர்களுக்குப் பலவற்றைப் போதித்து, மக்களிடமிருந்த
நோயாளிகளைக் குணமாக்கினர் என்று நாம் வாசிக்கின்றோம் (மத்
14:14). அது மட்டுமல்லாமல், இயேசு மக்களின் அவலநிலையை கண்டு,
தாமாகவேச் சென்று உதவி செய்தார் என்று நற்செய்தி நூல்கள் நமக்குச்
சான்று பகர்கின்றன. இவையெல்லாம் இயேசு ஒரு நல்ல ஆயன் என்பதற்கு
சான்றுகளாக இருக்கின்றன.
நல்லாயன் வழியில் நடக்கும் நாம் ஒவ்வொருவரும் நம்மோடு இருப்பவர்களின்
தேவையை அறிந்து, அவற்றினை நிவர்த்தி செய்கின்றோமா என்று
சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
நல்லாயனுக்கு உரிய மூன்றாவது முக்கியமான தகுதி ஆடுகளுக்காக உயிரைத்
தருவதாகும். இயேசு சொல்கின்றார், "நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர்
ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய்
வருவதைக் கண்டு ஆடுகளைவிட்டு விட்டு ஓடிபோவார்" என்று. இது
முற்றிலும் உண்மை. இயேசு மந்தையாகிய நமக்காக தன்னுடைய உயிரையே
தந்தார். உயிரைத் தந்ததோடு மட்டுமல்லாமல், தன்னுடைய இறப்பினால்
நமக்கு பாவத்திலிருந்தும், சாவிலிருந்தும் மீட்பைப் பெற்றுத்
தருகின்றார் (முதல் வாசகம்). இதுதான் இயேசுவுக்கும் மற்ற ஆயர்களுக்கும்
உள்ள வித்தியாசம். ஏனையோர் ஆடுகளைப் பற்றி அக்கறைகொள்ளவில்லை,
அவற்றிற்காக உயிரையும் தரவில்லை. ஆனால், இயேசுவோ ஆடுகளுக்காக
உயிரைத் தந்தார். அதுவும் தாமாகவே தந்தார். இவ்வாறு அவர் நல்ல
ஆயனுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் ( 1 யோவான்) யோவான், "நம் தந்தை நம்மிடம்
எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள" என்கின்றார். தந்தை
நம்மீது அன்பு கொண்டதுபோன்றே மகனாகிய இயேசுவும் நம்மீது அன்புகொண்டார்.
அதன் வெளிப்பாடுதான் தன்னுடைய உயிரைத் தந்தது. இயேசு நம்மீது
அன்புகொண்டது போன்று, நாமும் ஓருவர் மற்றவர் மீது அன்பு கொள்ளவேண்டும்
என்பதுதான் நமக்கு முன்பாக இருக்கும் சவாலாக இருக்கின்றது.
ஒரு நல்ல ஆயன் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று இதுவரை
சிந்தித்துப் பார்த்த நாம், ஆடுகளாக நம் எப்படி இருக்கவேண்டும்
என்றும் சிந்தித்துப் பார்க்க அழைக்கப்படுகின்றோம்.
இயேசு கூறுவார், "என் ஆடுகள் என் குரலுக்கு செவிகொடுக்கும்". ஆம், ஆடுகளாகிய நாம் ஆயனின் குரலுக்கு செவிமடுத்து, அதற்கேற்ப
வாழவேண்டும். அப்போதுதான் வாழ்வினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
ஆயனின் குரலுக்குச் செவிகொடுக்காத ஆடுகள் அழிவுக்குச் செல்வது
போன்று, ஆண்டவரின் குரலுக்கு செவிகொடுத்து, அதன்படி வாழவில்லை
என்றால், நாம் அழிவது உறுதி.
ஆகவே, நல்லாயன் ஞாயிரைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில், இயேசுவை
நல்லாயன் என்பதை உணர்வோம். ஆயனின் குரலுக்கு செவிமடுத்து
வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.Antony
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 3
=================================================================================
நல்லாயனின் நல்உணர்வுகள்
திருத்தூதர்பணிகள் 4:8-12
1 யோவான் 3:1-2
யோவான் 10:11-18
பாஸ்கா காலத்தின் 4ம் ஞாயிற்றை "நல்லாயன் ஞாயிறு" என நாம்
கொண்டாடி மகிழ்கின்றோம். "ஆயன்" என்ற உருவகம் "இஸ்ரயேலரின் பணி
மற்றும் வாழ்வியல் உருவகம்." உருவகங்களைக் கையாளும்போது மிகக்
கவனமாக இருத்தல் அவசியம். ஏனெனில், ஒவ்வொரு உருவகமும் ஓர்
இடத்திற்கும், நேரத்திற்கும் உட்பட்டுக் கட்டமைக்கப்படுகிறது.
அது அந்த இடத்தையும், நேரத்தையும் கடந்த மனிதர்களால்
புரிந்துகொள்ளப்படும்போது நிறைய இடைவெளி இருக்கவே செய்கிறது.
மேலும், ஒரு உருவகத்தை நாம் எடுக்கும்போது அந்த உருவகம் சாராத
நபர்களை நாம் ஒதுக்கிவிடுகின்றோம். எப்படி?
இயேசுவின் சமகாலத்தில் யூதர்கள் ஆடு மேய்க்கவும், புறவினத்தார்
பன்றிகள் மேய்க்கவும் செய்தனர். இயேசு ஓர் யூதராக இருந்ததால்
அவர் "ஆடு மேய்க்கும் ஆயன்" உருவகத்தைச் சொல்கின்றார். இயேசு
இப்படிச் சொல்வதால் அல்லது அவர் உயர்வாகக் கருதப்படுவதால்,
அவரைச் சாராத "பன்றி மேய்க்கும் ஆயன்" உருவகம் தாழ்வானது என்று
நாம் எடுத்துக்கொள்ள முடியாது. அப்படி எடுத்துக்கொண்டால் நாம்
ஒட்டுமொத்தமாக பன்றிகள் மேய்க்கும் ஆயன்களை ஒதுக்கிவிடும்
ஆபத்து வந்துவிடும்.
இயேசுவின் "நல்லாயன்" உருவகம் ஒரு தொழில் உருவகம்.
"நல்லாசிரியர்," "நல்விவசாயி," "நல்மருத்துவர்,"
"நல்தணிக்கையாளர்," "நல்துப்புரவாளர்" என நாம் மாற்றிக்கொண்டே
போகலாம். "நல்ல ஆசிரியர் நானே. நல்ல ஆசிரியர் தன்
மாணவர்களுக்காக தன் உயிரைக் கொடுப்பார். வெறும் சம்பளத்திற்கு
வேலை பார்ப்பவர் தேர்வு வருவதைக் கண்டு அல்லது பாடங்கள் அதிகம்
இருப்பதைக் கண்டு மாணவர்களை விட்டுவிட்டு ஓடிப்போவார். அவர்
ஆசிரியரும் அல்ல. மாணவர்கள் அவருக்குச் சொந்தமும் அல்ல..."
- இப்படியாக நாம் எந்தத் தொழிலோடும் இந்த உருவகத்தைப்
பொருத்திப்பார்க்க முடியும்.
ஆடுமேய்க்கும் ஆயன் தொழில் மட்டுமல்ல, மாறாக, எல்லா தொழில்கள்
மற்றும் பணிகளுக்கு பொதுவாக இந்த "ஆயன்" என்ற உருவகத்தை
எடுத்துக்கொண்டு, குடும்பத்தில், சமூகத்தில், நம்
பணித்தளத்தில் நாமும் நல்ல ஆயர்களாக இருப்பது எப்படி என்பதை
"சொந்தம், பொறுப்பு" என்ற இரண்டு உணர்வுகள் வழியாகச்
சிந்திப்போம். நல்லாயானின் நல்உணர்வுகளாக இன்றைய நற்செய்தி
வாசகம் நமக்குச் சொல்வது மேற்காணும் இரண்டு உணர்வுகளே.
"அதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்" ("The Seven
Habits of Highly Effective People") என்ற நூலின் ஆசிரியர்
ஸ்டீபன் கோவே மனித நடத்தையின் சில கூறுகளை ஒரு மாதிரி வழியாக
விளக்குகின்றார். இந்த மாதிரியில் இரண்டு வட்டங்கள் உண்டு: (அ)
கவலை வட்டம் (The Circle of Concern), (ஆ) பாதிப்பு வட்டம்
(The Circle of Influence). வெளியில் இருக்கும் வட்டம் கவலை
வட்டம். இந்த வட்டத்தில் உள்ளவை நமக்கு கவலை தருகின்றன. ஆனால்,
இவற்றைக் குறித்து நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.
முதலமைச்சரின் செயல்பாடு, பெட்ரோல் விலை ஏற்றம், பொருளாதாரம்,
சூரிய வெப்பம், ஐபிஎல் கிரிக்கெட் போன்றவை. நாம்
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இவை நம்மை அச்சுறுத்தி
நமக்குக் கவலை தருகின்றன. ஆனால், இவற்றை நம்மால் ஒன்றும் செய்ய
முடியாது. உள்ளே இருக்கும் வட்டம் பாதிப்பு வட்டம். இந்த
வட்டத்தில் இருப்பவர்கள் நம் உறவுகளும், நண்பர்களும், நம்
வேலையும். இவற்றின்மேல் நாம் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்த
முடியும். அவைகளும் நம்மேல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
உள்வட்டத்தை விட்டு வெளிவிட்டத்தின்மேல் அதிக கவனம்
செலுத்துபவர்களுக்கு அந்த வட்டம் விரிந்துகொண்டே சென்று
உள்வட்டத்தையும் விழுங்கிவிடும் அபாயம் இருக்கிறது.
அவர்களுக்குப் பதற்றம், பரபரப்பு, கவனமின்னை அதிகமாகும்.
ஆனால், உள்வட்டத்தின்மேல் மட்டும் அக்கறை கொள்பவர்கள் தங்கள்
குடும்பம், நட்பு, வேலை அனைத்திலும் நல்பாதிப்பை, தாக்கத்தை
ஏற்படுத்துபவர்களாக உருப்பெறுவர்.
இன்றைய நாளின் பின்புலத்தில் சொல்ல வேண்டுமென்றால்
உள்வட்டத்தின்மேல் கவனம் செலுத்துபவர்களே நல்ல ஆயர்கள். இந்த
நல்ல ஆயர்களிடம் இரண்டு பண்புகள் மேலோங்கி இருக்கும் என இயேசு
இன்றைய நற்செய்தியில் முன்மொழிகின்றார்: அ. சொந்தம் உணர்வு, ஆ.
பொறுப்புணர்வு.
அ. சொந்தம் உணர்வு ("Sense of Ownership")
தன்னை "நல்ல ஆயன்" என்று உருவகிக்கின்ற இயேசு தொடர்ந்து,
"கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டு
விட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல. ஆடுகள்
அவருக்குச் சொந்தமும் அல்ல" என்கிறார். கூலிக்கு மேய்ப்பவர்
ஆடுகள்மேல் உரிமை கொண்டாட முடியாது. இவ்வாறாக, ஆடுகளின்
உரிமையாளருக்கும், ஆடுகளுக்கும் அவர் அந்நியமாகவே இருக்கிறார்.
ஆனால், ஆயன் அப்படி அல்ல. ஏனெனில் ஆடுகள்மேல் அவருக்கு உரிமை
உண்டு. அவர் அவைகளின் மேல் சொந்தம் கொண்டாட முடியும். சொந்தம்
கொண்டாடும் இந்த உணர்வே அவருக்கு ஆடுகளின் மேல் உள்ள அக்கறையை
இன்னும் அதிகமாக்குகிறது. "சொந்த உணர்வு" இங்கே "அறிதல்" என்ற
வார்த்தையால் குறிக்கப்படுகிறது. "நானும் என் ஆடுகளை
அறிந்திருக்கிறேன். என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன"
என்கிறார் இயேசு.
இன்று நம் உறவுநிலைகளில் சில இரத்த உறவுகள், சில திருமண
உறவுகள், சில உடன்படிக்கை அல்லது நட்பு உறவுகள். இந்த மூன்று
வகை உறவுகளிலும் சொந்த உணர்வு இயல்பாகவே இருக்கிறது. சில
நேரங்களில் இரத்த, திருமண உறவுகளை விட உடன்படிக்கை மற்றும்
நட்பு உறவுநிலைகளில் சொந்த உணர்வு அதிகமாக இருக்கிறது. இந்த
சொந்த உணர்வு வரக்காரணம் ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளுதலே.
அறிந்துகொள்ளுதலில் இரண்டு வகை உண்டு: (அ) மேலோட்டமான அறிதல்
("superficial knowing" - "to know about), (ஆ) ஆழ்ந்த அறிதல்
("deeper knowing - "to know" . எடுத்துக்காட்டாக, ஜென்
தியானம் பற்றிய அறிதலில் மேலோட்டமான அறிதல் என்பது இந்த தியான
முறையைத் தோற்றுவித்தவர் அல்லது அதன் வரலாறு பற்றி அறிதல்.
ஆனால் ஆழ்ந்த அறிதல் என்பது இந்த தியானத்தில் பங்கேற்று இந்த
தியானத்தை முழுமையான அனுபவத்தைப் பெற்றிருப்பது. அது போலவே,
ஒரு நபரைப் பற்றிய மேலோட்டமான அறிதலில் நாம் அவரின் பெயர்,
ஊர், சுற்றம், விருப்பு, வெறுப்பு பற்றி அறிகின்றோம். ஆனால்,
அதுவே ஆழமான அறிதலாக மாறும்போது அந்த நபரோடு நாம் இருக்கும்
அனுபவம் பெற்றவர்களாக இருக்கின்றோம்.
இரண்டாம் வகை அறிதல்தான் "சொந்த உணர்வை" தோற்றுவித்து
வலுப்படுத்துகின்றது.
ஆ. பொறுப்புணர்வு ("Sense of Responsibility")
சொந்தம் உணர்வு என்னும் நாணயத்தின் இரண்டாம் பக்கம்
பொறுப்புணர்வு. ஒரு உணர்வுநிலை நமக்கு எப்படி உரிமையைக்
கொடுக்கிறதோ, அதுபோல அது பொறுப்புணர்வையும் வரையறுக்கிறது.
"என் ஆடுகளுக்காக என் உயிரைக் கொடுக்கிறேன் ... நான்
அவற்றையும் நடத்திச் செல்ல வேண்டும்" என தன் பணியை
வரையறுக்கின்றார் இயேசு. இயேசுவின் இந்த வரையறை நல்லாயனின்
பொறுப்புணர்வை எடுத்தியம்புகிறது. உயிரைக் கொடுத்தல் தான் உச்ச
கட்ட கொடுத்தல். நேரம், ஆற்றல், பணம் போன்ற அனைத்து
கொடுத்தல்களிலும் ஒருவர் அதை மீண்டும் பெற்றுக்கொள்ளும்
வாய்ப்பு இருக்கிறது. ஆனால் உயிரைக் கொடுத்தலில் அப்படி
எதுவும் இல்லை. ஒருவர் தன் வாழ்வை அழித்து மற்றவருக்கு வாழ்வு
கொடுத்தல் எப்படி எல்லாம் சாத்தியமாகலாம்?
இஸ்ரயேல் நாடு மலைப்பாங்கான நாடு. இவ்வகை இடங்களில் ஆடுகளை
மேய்ப்பவர் ஆடுகளுக்கு முன் நடந்து செல்வார். ஒருவேளை ஓநாய்
மந்தையைத் தாக்க முன்வந்தால் இவர் தன்னை இரையாக ஓநாய்க்கு
கையளித்து ஒட்டுமொத்த மந்தையின் உயிரைக் காப்பாற்றுகின்றார்.
இவ்வாறாக, அடுத்தவரின் வாழ்வுக்குத் தன் உயிரைக்
கையளிக்கின்றார் நல்லாயன்.
இன்று நாம் நம் உயிரைக் கொடுக்கும் அளவிற்கு நல்லாயனாக இருக்க
முடியவில்லை என்றாலும், நம் நேரம், ஆற்றல், பொருள், அறிவு
ஆகியவற்றை அடுத்தவருக்கு விரித்துக்கொடுத்தாலே அது பெருமையே.
இன்றைய முதல் வாசகத்தில் (திப 4:8-12) எருசலேமின் சாலமோன்
மண்டபத்தில் பேதுரு ஆற்றிய மறையுரையின் ஒரு பகுதியை வாசிக்கக்
கேட்டோம். இயேசுவின் இறப்புக்குக் காரணமானவர்களைக்
கடிந்துகொள்கிறார் பேதுரு. இவர்களிடம் "சொந்தம் உணர்வு"
மற்றும் "பொறுப்புணர்வு" இல்லாத காரணத்தால்தாம் அவர்கள்
இயேசுவை சிலுவைச்சாவுக்கு உட்படுத்துகின்றனர். ஆனால் அவரின்
உயிர்ப்பில் வானகத்தந்தையின் "சொந்த உணர்வு" மற்றம்
"பொறுப்புணர்வு" துலங்குகிறது. இன்றைய இரண்டாம் வாசகம் கடவுள்
மனிதர்கள்மேல் பாராட்டும் சொந்த உணர்மூ கடவுளுக்கும் நமக்கும்
உள்ள "தந்தை-பிள்ளை" உறவு என்று விரிகின்றது. இங்கேயும் அறிதலே
அடிப்படையான ஒரு செயலாகக் கருதப்படுகிறது.
இறுதியாக,
"சொந்த உணர்வு" மற்றும் "பொறுப்புணர்வு" நல்லாயனின்
நற்பண்புகளாக அவரிடம் நாம் கற்றுகொள்வோம். அவற்றை நம்
குடும்பங்களிலும், பணி மற்றும் படிப்பு தளங்களில் கொண்டிருக்க
முன்வருவோம்.
(அருட்தந்தை இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
Archdocese of Madurai |
|