Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                                   year 2  
                                        ஆண்டின் தவக்காலம் 4ஆம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 

ஆண்டவரின் சினமும் இரக்கமும் மக்கள் நாடுகடத்தப்படுதலிலும், அவர்கள் மீட்கப்பெறுவதிலும் வெளியாகின்றன.


குறிப்பேடு இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 36: 14-16,19-23

அந்நாள்களில் குருக்களின் தலைவர்களும் மக்களும் வேற்றினத்தாரின் அனைத்து அருவருப்புகளையும் தொடர்ந்து செய்து, உண்மையற்றவர்களாய், ஆண்டவர் தமக்காக எருசலேமில் தூய்மையாக்கியிருந்த திருக்கோவிலை மேலும் தீட்டுப்படுத்தினர். அவர்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவர் தம் மக்களின்மீதும், தம் உறைவிடத்தின்மீதும் இரக்கம் கொண்டு, தம் தூதர்களை மீண்டும் மீண்டும் அவர்களிடம் அனுப்பினார்.

ஆனால் அவர்கள் கடவுளின் தூதர்களை ஏளனம் செய்து, அவர்தம் வார்த்தைகளைப் புறக்கணித்து, அவர்தம் இறைவாக்கினர்களை இழித்துரைத்தனர்.

ஆதலால், அவர்கள் தப்ப முடியாத அளவுக்கு ஆண்டவரது சினம் அவர்கள்மேல் கனன்றெழுந்தது. கடவுளின் இல்லத்தை அவர்கள் எரித்து, எருசலேமின் மதில்களைத் தகர்த்தனர்; அங்கிருந்த அனைத்து அரண்மனைகளையும் தீக்கிரையாக்கி, விலையுயர்ந்த பொருள்கள் அனைத்தையும் அழித்தனர்.

மேலும் அவன் வாளுக்குத் தப்பியவர்களைப் பாபிலோனுக்கு நாடு கடத்தினான்; பாரசீக அரசு எழும்பும்வரை, அங்கே அவர்கள் அவனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் அடிமைகளாக இருந்தனர்.

"நாடு, ஓய்வு நாள்களைக் கடைப்பிடிக்காததால், எழுபது ஆண்டுகள் பாழாய்க் கிடக்கும்" என்று எரேமியா உரைத்த ஆண்டவரின் வாய்மொழிகள் இவ்வாறு நிறைவேறின. பாரசீக மன்னன் சைரசு ஆட்சியின் முதல் ஆண்டில், எரேமியா உரைத்த ஆண்டவரின் வாய்மொழிகள் நிறைவேறும் வண்ணம், ஆண்டவர் அவனது மனத்தைத் தூண்டி எழுப்பினார்.

எனவே அவன் தனது நாடு முழுவதற்கும் மடல் வரைந்து அறிவித்தது யாதெனில்: "பாரசீக மன்னராகிய சைரசு என்னும் யாம் கூறுவது இதுவே: விண்ணகக் கடவுளாம் ஆண்டவர் மண்ணக அரசுகள் எல்லாவற்றையும் எனக்கு அளித்துள்ளார். மேலும் யூதாவிலுள்ள எருசலேமில் அவருக்குத் திருக்கோவில் எழுப்புமாறு எனக்குப் பணித்துள்ளார். எனவே, அவருடைய மக்களாக இருப்பவர் அங்கு செல்லட்டும்! கடவுளாம் ஆண்டவர் உங்களோடு இருப்பாராக!"




- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
 
பதிலுரைப் பாடல் திபா 137: 1-2. 3. 4-5. 6 (பல்லவி: 6a)  Mp3
=================================================================================

பல்லவி: உன்னை நான் நினையாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக!

1 பாபிலோனின் ஆறுகள் அருகே அமர்ந்து, நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம். 2 அங்கிருந்த அலரிச் செடிகள் மீது எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம். பல்லவி

3 ஏனெனில், அங்கு எங்களைச் சிறையாக்கினோர் எங்களைப் பாடும்படி கேட்டனர்; எங்களைக் கடத்திச் சென்றோர் எங்களை மகிழ்ச்சிப்பா இசைக்குமாறு கேட்டனர். `சீயோனின் பாடல்களை எங்களுக்குப் பாடிக்காட்டுங்கள்" என்றனர். பல்லவி

4 ஆண்டவருக்கு உரித்தாக்கும் பாடலை அன்னிய நாட்டில் எங்ஙனம் பாடுவோம்? 5 எருசலேமே! நான் உன்னை மறந்தால் என் வலக்கை சூம்பிப் போவதாக! பல்லவி 6 உன்னை நான் நினையாவிடில், எனது மகிழ்ச்சியின் மகுடமாக நான் எருசலேமைக் கருதாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக் கொள்வதாக! பல்லவி


================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
 குற்றங்களின் காரணமாய் இறந்தவர்களாயிருந்த நீங்கள் மீட்கப்பட்டிருப்பது அந்த அருளாலேயே.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 4-10

சகோதரர் சகோதரிகளே, கடவுள் மிகுந்த இரக்கம் உடையவர். அவர் நம்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார். குற்றங்களின் காரணமாய் இறந்தவர்களாயிருந்த நாம் அவ்வன்பின் மூலம் இணைந்து உயிர் பெறச் செய்தார். நீங்கள் மீட்கப் பட்டிருப்பது அந்த அருளாலேயே. இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் நாம் அவரோடு உயிர்த்தெழவும் விண்ணுலகில் அவரோடு அமரவும் செய்தார்.

கிறிஸ்து இயேசு வழியாகக் கடவுள் நமக்குச் செய்த நன்மையையும் அவரது ஒப்புயர்வற்ற அருள் வளத்தையும் இனி வரும் காலங்களிலும் எடுத்துக்காட்டுவதற்காகவே இவ்வாறு செய்தார். நீங்கள் அந்த அருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப் பட்டிருக்கிறீர்கள். இது உங்கள் செயல் அல்ல; மாறாக இது கடவுளின் கொடை. இது மனிதச் செயல்களால் ஆனது அல்ல.

எனவே எவரும் பெருமை பாராட்ட இயலாது. ஏனெனில் நாம் கடவுளின் கைவேலைப்பாடு; நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறு நற்செயல்கள் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார்.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 3: 16
அல்லேலூயா, அல்லேலூயா! தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தம் மகன் வழியாக உலகை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.

தூயயோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 14-21

அக்காலத்தில் இயேசு நிக்கதேமுக்குக் கூறியது: "பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்.

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.

உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர்.

ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது. தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர்.

தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்."


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
தூய்மைச் சாட்டை

புறத் தூய்மை நீரால் அமையும் அகத் தூய்மையோ வாய்மையினால் அமையும் என்பதனை இயேசு இன்றைய நற்செய்தியில் தன் செயல் மூலம் காட்டுகிறார். எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்துகிறார். அவருக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவரது வாழ்நாளில் பலமுறை எருசலேம் தேவாலயத்துக்குச் சென்றிருந்தாலும் இன்று அதனைத் தட்டிக் கேட்கின்றார். ஒருவர் செய்யும் செயலைத் தவறு என சுட்டிக்காட்டுவதற்கு துணிவும் தைரியமும் அதிகம் தேவை . அதிலும் சுட்டிக்காட்டுபவருக்கு என்று ஒரு நிலை வேண்டும். அப்போது தான் அவர் கூறும் கருத்து, தவறு செய்பவன் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இல்லை என்றால் அதனை யாரும் ஒரு பொருட்டாக கூட ஏற்கமாட்டார்கள்.
உதாரணத்திற்கு நமது நடைமுறை வாழ்வையே எடுத்துக் கொள்வோம். நாம் ஓர் ஆலயம் அல்லது பொது இடத்தில் வணிகம் செய்யும் வியாபாரிகளை /வணிகர்களை இடைக்கச்சை கொண்டு அடித்தோம் என்று வைத்துக் கொள்வோம். என்ன செய்வார்கள் நம்மை?

நாம் ஒருவரை அடித்தால் அவர்கள் பலர் சேர்ந்து நம்மை அடிப்பார்கள் அல்லது காவல் நிலையத்திற்கு நம்மைக் கையோடு அழைத்துச் செல்வார்கள். அல்லது புத்தி பேதலித்துவிட்டது என்று முத்திரை குத்தி அனுப்பிவிடுவர். இதில் மூன்றில் ஒன்று கட்டாயம் நடக்கும்.

இயேசுவின் வாழ்வில் அவர் பிறந்த சில நாட்களில் விருத்தசேதனம் செய்ய எருசலேம் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது" பிற இனத்தார்க்கு இருளகற்றும் ஒளி" என சிமியோன் இறைவாக்கினரால் புகழப்பட்டார்.
12 வயதில் பெற்றோருடன் திருவிழா கொண்டாடச் சென்றபோது அறிவார்ந்த கேள்விகள் கேட்டும், விளக்கங்கள் அளித்தும் அறிஞர்களால் பாராட்டப்பெற்றார்.
இறுதியாக இப்போது சீடர்களுடன் பாஸ்கா விழா கொண்டாடச் சென்ற நேரத்தில் கோவிலின் தூய்மைக்காக சாட்டை எடுக்கிறார். இப்போது என்ன பேசினார்கள் மக்கள்.?

இதுவரை நன்றாகத் தானே இருந்தார். என்ன ஆயிற்று இவருக்கு? இவர் பெற்றொர் கூட நம்மிடம் தானே மாடப்புறாக் குஞ்சுகளை வாங்கிக் காணிக்கையாகக் கொடுத்தனர்.? இப்போது மட்டும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? என்று சிலர் பேசினர். ஆனால் அதையும் தாண்டி "இவர் மெசியா, அற்புதங்கள் பல செய்பவர். நோயாளிகளைக் குணப்படுத்துபவர். பேய்களை அடித்து விரட்டுபவர் என்றெல்லாம் கேள்விப்பட்டு அவரைப் பின்தொடர்ந்த மக்கள் பலர், இவர் நல்லவர் இவர் இப்படி செய்தால் இதில் ஏதோ ஒரு நன்மை இருக்கிறது" என்று நம்பினர். இல்லாவிட்டால் அனைவரும் மீண்டும் அவரைத்தேடி சென்றிருக்க மாட்டார்கள். ஆம் அந்த ஒரு நம்பிக்கையை மக்களிடத்தில் விதைக்கத் தான் இயேசு இத்தனை நாள் காத்திருந்திருப்பார் என்று எண்ணுகிறேன். தவறைச் செய்பவன் யாராக இருந்தாலும் அதைச் சுட்டிகாட்டுபவன் சரியானவனாக இருக்க வேண்டும். இல்லையெனில் எதிர்ப்புக் குரல் எடுபடாதக் குரலாகப் போயிருக்கும். இன்று நாமும் நமது வாழ்வில் பலவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் நாம் தெரிவிக்கும் எதிர்ப்பு நியாயமானது தான் ஆனால் நாம் நின்று சொல்லும் இடம் தான் சரியானதா என்று பார்க்க வேண்டும். கூரைக்கு அடியில் நின்று கோழி கொக்கரித்தால் ஊர் எழும்பாது மாறாக கூரைக்கு மேல், வேண்டுமானால் அதைவிட உயரமான இடத்தில் நின்று கொக்கரித்தால் மட்டுமே தூங்குபவர்களை துயில் எழும்பச்செய்ய முடியும். இயேசு காலம் வரும் வரைக் காத்திருந்தார். தன்னை யார் என்று காட்டினார். பின் தன் செயல்கள் மூலம் தான் யார் என வெளிப்படுத்தினார். சாதாரணத் தொழுகைக் கூடத்தில் தொடங்கவில்லை. எருசலேம் தேவாலயத்தில் தொடங்குகிறார். இப்படிச்செய்வதனால் தனக்கு ஆபத்து என்பதை நன்கு உணர்ந்திருந்தும் அவ்வாறு செயல்படுகிறார். ஏனெனில் சலித்துக் கொள்பவன் தான் ஒவ்வொரு வாய்ப்பிலும் ஆபத்தை மட்டுமே காண்பான். இயேசுவோ சாதிப்பவர் எனவே ஒவ்வொரு ஆபத்திலும் வாய்ப்பினைக் கண்டு கொள்கிறார்.

என் தந்தையின் இல்லத்தை சந்தை ஆக்காதீர்கள் என உரக்கச் சொல்லி தன் உரிமையை உலகறியச் செய்கின்றார். பழைய ஏற்பாட்டில் அகத்தூய்மை வாழ்க்கை வாழ யாவே கடவுள் பத்து கட்டளைகளை இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுக்கிறார். அகத்தூய்மையோடு வாழ வேண்டும் என அறிவுறுத்தும் தந்தை கடவுளின் இல்லமே புறத்துய்மையின்றி இருப்பது கண்டு பொங்கி எழுகிறார் புதிய ஏற்பாட்டு இயேசு. தனது தூய்மைச் செயலை உடனடியாக செய்யத் துவங்குகிறார்.

கயிற்றுச்சாட்டை: சிறு பிள்ளையில் தோசை சுடும் கரண்டியால் அடிவாங்கிய அனுபவம் எனக்கு பல உண்டு. ஏதாவது தவறு செய்தால் எடு அந்த கரண்டிய என்று சொன்னாலோ அல்லது கையில் எடுத்து வைத்திருந்தாலோ போதும் எங்கும் நகர மாட்டோம். நான் மட்டுமல்ல என் உடன் பிறப்புக்களும் அப்படியே .அது ஒரு வகையான தூய்மையான பயம் என்றே கூறலாம். இயேசு கயிற்றினால் ஒரு சாட்டை பின்னி அவர்களை விரட்டுகிறார். இத்தகைய தூய்மையான ஒரு பயத்தையே அவர்களிடத்தில் வர வைக்கிறார். சாட்டை கொண்டு அடித்தாரா என்று தெரியவில்லை. ஆனால் விரட்டுகிறார்.

பிறர் பணத்தில் பாதி லாபம் பார்த்து அமர்ந்து பணம் சம்பாதிக்கும் நாணயம் மாற்றுவோரின் மேசைகளைக் கவிழ்த்துப் போடுகிறார். தாங்கள் வளர்த்த ஆடு மாடு கோழி புறா போன்றவற்றை விற்போரிடம் அதை எடுத்துப்போகச்சொல்கிறார். கோபமே கொண்டாலும் இடம் அறிந்து செயல்படுகிறார்.
இன்றைய நற்செய்தியில் இயேசு நமக்கு விடுக்கும் அழைப்பு செய்தி இதுதான்,
தவறைச்சுட்டிக்காட்டத் தயங்காதே.
எதிர்ப்பே ஆனாலும் சரியான இடத்திலிருந்து தெரிவி.
தூய்மையான பயம் கொள்.

அபாயம் வரும் என்று பயந்து கொண்டிருப்பதை விட அதை எதிர்நோக்கி சந்திப்பதே நல்லது என உணர்ந்து வாழ்வோம். அகத்தூய்மையை விரும்பும் இறைவன் புறத்தூய்மையையும் விரும்புகிறார் என்பதை நன்கு உணர்ந்து செயல்படுவோம். நமது உள்ளங்களில் இருக்கும் தேவையற்ற குப்பைகளை இயேசுவின் துணிவு கருணை என்னும் சாட்டை கொண்டு விரட்டுவோம் .இறைத்துணை என்றும் நம்மோடும் நம் குடும்பத்தினர் அனைவரோடும் இருப்பதாக ஆமென்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
சிலுவையை உற்றுநோக்குவோம்...

"திருப்பலி கவிதை"

தவக்காலத்தின் 4ம் ஞாயிறு
(2 குறிப் - 36:14-16, 19-23
எபே 2:4-10
யோவா 3:14-21)
பார்ப்பதற்காகவே
கண்கள் படைக்கப்பட்டன
பேசுவதற்காகவே
நாவு படைக்கப்பட்டது
கேட்பதற்காகவே
காதுகள் படைக்கப்பட்டன
தர்மம் செய்யவே
கரங்கள் படைக்கப்பட்டன
ஓடோடி சென்று உதவவே
கால்கள் படைக்கப்பட்டன
ஒவ்வொன்றின் படைப்பும்
பயன்பாட்டிற்கு உகந்ததாய்
அமைய வேண்டுமென்பதே
இயற்கையின் நியதி!
மாற்றங்கள் வருவதும்
ஏமாற்றங்கள் நிகழ்வதும்
தடுமாற்றங்கள் எழுவதும்
வாடிக்கையானாலும்
வாழ்வதற்கான வழிகளைத்
தேடிச் செல்வது
மனிதர்களாகிய
நம் அனைவரின் கடமையன்றோ!
கேட்க வேண்டி நேரத்தில்
கேட்காத பல கேள்விகள்
செய்யபட வேண்டிய தருணத்தில்
செய்யாத பல செயல்கள்
இன்று நடைபெறாமல்
இருப்பதாலேயே
வாழ்விற்கான அர்த்தத்தையும்
வாழ்வதற்கான வழிகளையும் இழந்து
மானுடம் தவிக்கிறது
என்றால் அது மிகையல்ல!
இன்றைய வாசகங்கள்
சரியான பார்வையில்
வாழ்வதும்
சரியான சிந்தனையில்
நடப்பதும்
சரியான விதத்தில்
பேசுவதும்
முதன்மையாக்கப்பட வேண்டுமென்ற
செய்திகளை நமக்குத் தருகின்றன!
சிலுவையை
அனைவரும் பார்த்திருப்பபோம்
கைகளை விரித்து
இரத்தம் சிந்தி
மரித்த இயேசுவின் முகம்
எப்போதும் தெரியும்
இது எதார்த்தம்!
இன்றைய இறைவாக்கு வழிபாடு
சிலுவையை
உற்றுப்பார்க்க நமக்கு
அழைப்பு விடுகின்றது!
வெறும் வெற்று உடம்போடு
சிலுவையில் தொங்கும்
இயேசுவின் உடல்
இன்றைக்கு பல கருத்துகளைச்
சிந்தித்துப் பார்க்க நம்மை அழைக்கின்றது!
முதல் வாசகம்
இரக்கத்தைப் பற்றிப் பேசுவதும்
இரண்டாம் வாசகம்
இரக்கம் நிறைந்தவர் இறைவன்
என்கிற செய்தியைக் கொடுப்பதும்
முத்தாய்ப்பாய் நற்செய்தியில்
இறைவன் தன் ஒரே மகனை
இவ்வுலகிற்கு அனுப்பி
இரக்கத்தின் முகமாய்
இயேசுவை நம்மிடத்தில் அனுப்புகிறார்
என்கிற இறைச்சிந்தனையையும்
தவக்காலத்தின் நான்காம் ஞாயிற்றுக்கிழமை
நமக்கு வழங்குகின்றது!
ஆனால்
இன்றைய நாளில்
நாம் ஆழமாய்
யோசிக்க பார்க்க வேண்டிய ஒன்று...
சிலுவை
இது வெறும் மரம் அல்ல
மீட்பின் சின்னம்!
அவமானத்தின் சின்னமான இது
மீட்பின் அடையாளமாய் மாறிற்று
இது அனைவரும் தெரிந்த ஒன்று...
இந்த தெரிந்த பார்வைதான்
இன்றைய நாளில் தெளிவாக்கப்பட வேண்டும்
மோசே அன்று பாலைநிலத்தில்
வெண்கலப் பாம்பை
உயர்த்தியது போன்று
இன்று இயேசு உயர்த்தப்பட்டுள்ளார்...
அவரைப் பார்ப்போர்
மீட்பு அடைவர்!
இதுதான் இன்றைய நாள் சிந்தனை...
உற்றுப்பார்ப்போம்
ஒளியான இயேசுவைச்
சற்று உற்றுப்பார்ப்போம்
தீமையில் உழலும் நாம்
ஒளியாம் இறைவனைக் கண்டு
மனமாற்றம் அடைய அழைக்கிறது
இந்தத் தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு!
இயேசு உரத்த குரல் எழுப்பி
தன் உயிரை விடும்போது
நாடு எங்கும் இருள் சூழ்ந்தது
இது விவிலிய வார்த்தை
ஆனால் அந்த இருளுக்கு நடுவில்
உதித்த ஒளிதான் இயேசு!
எத்தனை முறை
பாடுபட்ட இயேசுவைச் சிலுவையில்
பார்த்திருப்போம்
சற்று பார்வையை மாற்றுவோம்
நாசரேத்து இயேசு
யூதர்களின் அரசன்
இதனைச் சற்று வித்தியாசமாய்
யோசிப்போம்
இயேசு தனிமைப்படுத்தப்பட்டவர்
இயேசு புறக்கணிக்கப்பட்டவர்
இயேசு விலாசமற்றவராக்கப்பட்டவர்
இயேசு புண்படுத்தப்பட்டவர்
இதுதான் இயேசுவிடத்தில்
நான் காணும் நான்கு நிலைகள்
தனிமைப்படுத்தப்பட்ட வாழ்வு
நிச்சயம் மாறும்
நாம் சிலுவையை உற்றுநோக்குகையில்
புறக்கணிக்கப்படும் நிலை
நிச்சயம் மறையும்
நாம் சிலுவையை உற்றுநோக்குகையில்
விலாசமற்ற சூழல்
நிச்சயம் விலகும்
நாம் சிலுவையை உற்றுநோக்குகையில்
புண்பட்ட மனம்
நிச்சம் இளைப்பாறும்
நாம் சிலுவையை உற்றுநோக்குகையில்
தொடர்ந்து பயணிப்போம்
பாதைகள் தோறும் சிலுவையைக்
கண்முன் நிறுத்துவோம்
அழிந்து போகிறவர்களுக்கு இது மடமை
ஆனால்
மீட்புப் பெறும் நமக்கோ அது
கடவுளின் வல்லமை!
சிலுவை என்பது இடறல் அல்ல
நம்மை இயக்கும் சக்தி!
சிலுவையை உற்றுநோக்குவோம்
சிதைந்த நம் வாழ்வைச் சீர்ப்படுத்துவோம் !

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
இறைவன் நீடிய பொறுமையும், பேரன்பும் கொண்டவர், என்றென்றும் கடிந்து கொள்பவரல்லர்: எளிதில் சினங்கொள்ள தாமதிப்பவர்" என திருப்பாடல்(103:08.09) கூறுகின்றது. இறைவன் இரக்கம்; நிறைந்தவர்தான். சினங்கொள்ள தாமதிப்பவர்தான். ஆனால், அதையும் கடந்து, அவர் தண்டனை நமக்கு கிடைக்கின்றதென்றால், நிச்சயம்; பாவம் நம்மில் எங்கேயோ அதிகரித்துவிட்டது என்பதே உண்மை. அன்று, ஆதாம், ஏவாளுக்கு தண்டனை கிடைத்தது. நோவா காலத்தில் பெருமழையால் மக்களுக்கு தண்டனை கிடைத்தது. சோதோம், கொமரோ நகர மக்களுக்கு தண்டனை கிடைத்தது. பாலைநிலத்தில் இஸ்ரயேல்; மக்களுக்கு தண்டனை கிடைத்தது. தாவீதுக்கும் தண்டனை கிடைத்தது. அனைத்து தண்டனையும், இறைவன் விரும்பிக் கொடுத்ததல்ல: மாறாக, அவர்கள் செய்த பாவத்திற்கான கூலிதான் அது.

நாமும் ஒளியின் மக்களாக வாழாமல், இருளுக்குரிய பாவ நாட்டங்களில், தீய செயல்களில் ஈடுபடும்போது கடவுளின் தண்டனை நிச்சயம் உண்டு. "தண்டனைத் தீர்ப்பளிக்க மானிடமகன் வரவில்லை" என்பது உண்மைதான். ஆனால், "ஒளி உலகிற்கு வந்திருந்தும், தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட, இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது"(யோ.03:19).. இதை நன்கு உணர்ந்தவர்களாய், உண்மைக்கேற்ப வாழ்ந்து, ஒளியாம் இறைவனுக்கு ஏற்ற செயல்களைச் செய்து, தண்டனைத் தீர்ப்பிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வோம்.

Thanks to Fr Yesu - Rome

இன்றைய நற்செய்தியில் நாம் வாசிப்பது இயேசுவும், நிக்கதேமும் உரையாடும் பகுதியின் இரண்டாம் உட்பிரிவு. நிக்கதேம் கேள்வி கேட்க முதல் உட்பிரிவில் இயேசு பதில் சொல்கின்றார். இரண்டாம் உட்பிரிவில் இயேசுவின் பேச்சு உரையாடல் போல இல்லாமல் ஒரு உரைவீச்சு போல இருக்கின்றது.

இன்றைய நற்செய்தியை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம்.


மானிட மகன் உயர்த்தப்படும்போது அனைவரையும் அவர் ஈர்த்துக்கொள்வார்.

அப்போது அவரில் நம்பிக்கை கொள்வோர் வாழ்வு பெறுவர்.

இந்த வாழ்வைத் தரவே கடவுள் தன் மகனை அனுப்பினார்.

நம்பிக்கை கொள்ளாதவர்கள் தண்டனை பெறுவர்.

ஒளியிடம் வருவோர் கடவுளோடு இணைந்திருக்கின்றனர்.


இப்படிப் பிரித்துப் பார்க்கும் போது நற்செய்தியின் பொருள் எளிதாக விளங்குகிறது. மையமாக இருப்பது (3) கடவுளின் அன்பையும் அவரது கையளிப்பையும் உணர்த்துகிறது. (2) மற்றும் (4) நம்பிக்கை கொள்பவர்களையும், நம்பிக்கை கொள்ளாதவர்களையும் பற்றிச் சொல்கின்றது. (1) மற்றும் (5)ல் கடவுளோடு மக்கள் இணைக்கப்படுவதையும், அவரிடம் ஈர்க்கப்படுவதையும் சொல்கின்றது.

"கடவுள் - மனிதர் - கடவுள் - மனிதர் - கடவுள்" என்று கட்டமைக்கப்பட்டுள்ளது இயேசுவின் பேச்சு.

இந்த நற்செய்தியை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு முன் அவற்றில் வரும் ஒருசில வார்த்தைகளுக்குப் பொருள் அறிவோம்:


"உயர்த்தப்படுதல்" என்பது யோவான் நற்செய்தியில் மட்டுமே பயன்படுத்தப்படும் சொல் (3:14, 8:28, 12:32-34). யோவானைப் பொறுத்தவரையில் இயேசுவின் இறப்பு, உயிர்ப்பு மற்றும் விண்ணேற்றம் என்ற மூன்று நிகழ்வுகளும் ஒரே நேரத்தில் நடந்தவை. இந்த மூன்றையும் குறிக்கும் சொல்தான் "உயர்த்தப்படுதல்". ஒத்தமைவு நற்செய்திகளில் இயேசு தன் பாடுகளையும், இறப்பையும், உயிர்ப்பையும் பற்றி மூன்று முறை முன்னுரைப்பது போல, யோவான் நற்செய்தியில் மூன்றுமுறை தனது உயர்த்தப்படுதல் பற்றிப் பேசுகின்றார்.

"நிலைவாழ்வு" - இந்த வார்த்தையைப் பற்றி பல்வகைக் கருத்துகள் நிகழ்கின்றன. சிலர் இதை நிறைவாழ்வு எனவும் மொழிபெயர்க்கின்றனர். இயேசு வாழ்ந்த காலத்தில் இறப்பிற்குப் பின் உயிர்ப்பு அல்லது வாழ்வு இருப்பதாக மக்கள் நம்பவில்லை. ஆக, இயேசு இறப்பிற்குப் பின் உள்ள வாழ்வைப் பற்றிப் பேசியிருக்க வாய்ப்பில்லை. யோவான் நற்செய்தியில் "வாழ்வு" என்பது இயேசுவை நம்புவதன் பரிசு என்றே சொல்லப்படுகிறது. வாழ்வு என்பதை மகிழ்ச்சி, மனநிறைவு, மனச்சுதந்திரம் என்ற பொருளில் நாம் எடுத்துக்கொள்வோம்.

"உலகம்" - இதற்கு இரண்டு பொருள் உண்டு: ஒன்று, மனிதர்களின் உறைவிடம். இரண்டு, கடவுளின் செயல்பாடுகளுக்கு எதிரான இயங்குதளம்.

"ஒளி" - கடவுளையும், கடவுளின் செயல்களையும், கடவுளின் மனிதர்களையும் குறிக்கும் உருவகம். "ஒளியின் மக்கள்" என்ற உருவகம் கும்ரான் குகைகளில் வசித்த எஸ்ஸீன் சமூகத்தின் சொல்லாடல். ஊர் வேண்டாம், உலகம் வேண்டாம், பொன் வேண்டாம்இ பெண் வேண்டாம், பொருள் வேண்டாம் என்று தங்களையே பாலைவனத்திற்குள்ளும், மலைகளின் குகைகளுக்குள்ளும் அடைத்துக் கொண்டவர்கள் தங்களை ஒளியின் மக்கள் என அழைத்துக்கொண்டனர். யோவான் நற்செய்தியாளர் ஏதோ ஒரு வகையில் இவர்களோடு அல்லது இவர்களின் கருத்தியலோடு தொடர்பு கொண்டிருக்கலாம் என்பது பலரின் கருத்து. ஏனெனில் யோவான் நற்செய்தியில் பயன்படுத்தப்படும் சொல்லாடல்கள் பல இவர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டவை.

"தண்டனைத் தீர்ப்பு" - இறைவனையும், அவரது மகனையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள் அனுபவிப்பது. இந்தத் தண்டனைத் தீர்ப்பு நாம் வாழும்போதே இங்கே நாம் அனுபவிப்பதா, அல்லது இறந்தபின் அனுபவிப்பதா என்ற மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன.


இன்றைய நற்செய்தியில் சிதறிக்கிடக்கும் முத்துக்களை இணைக்கும் ஒரே நூல்: "கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்" (யோவான் 3:16)

யோவான் 3:16ஐ இரண்டு வகைகளில் நாம் மொழிபெயர்க்கலாம்:


தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.

கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்ததால் தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளித்தார்.


முதல் வகை மொழிபெயர்ப்பில் கடவுளின் அன்பு முக்கியத்துவம் பெறுகிறது. இரண்டாம் வகை மொழிபெயர்ப்பில் கடவுளின் கையளிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

அதிகமான பேரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல்வகை மொழிபெயர்ப்பையே நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்:

கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.

எப்படி? தன் மகனையே அளிக்கும் அளவுக்கு.

ஏன்? மகனை நம்பினவர்கள் நிலைவாழ்வ பெற.

கடவுளின் அன்பில் இரண்டு கொடைகள் இருக்கின்றன: ஒன்று, அவரின் மகன். இரண்டு, நம்பினவர்களுக்கு நிலைவாழ்வு.

இன்று அன்பு என்பது எல்லாத் தளங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. அன்பு என்பது அனைத்தையும் உள்ளடக்கியதாக மாறிவிட்டது. திருமணத்தில் ஆண், பெண்ணின் மேல், பெண், ஆணின்மேல் காட்டிய அன்பு இன்று மாறி, ஆண், ஆணின் மேல், பெண், பெண்ணின் மேல் என்று காட்டுவதும் அன்பு என்றாகிவிட்டது. தான் வளர்க்கும் செல்லப்பிராணிகளோடு திருமணம் செய்து கொள்ளலாமா? அது திருமண அன்பாகுமா? என்ற ஆராய்ச்சிகளும் தொடங்கிவிட்டன. வாட்ஸ்ஆப்பில் ரிப்ளை பண்ணுவது, ஃபேஸ்புக் ஸ்டேடஸை லைக் பண்ணுவது, டுவிட்டரில் ஃபாலோ பண்ணுவதும் அன்பு என்றாகிவிட்டது. "எல்லாம் அன்பு" என்று சொல்வதன் ஆபத்து என்னவென்றால் ஒருகட்டத்தில் "எதுவுமே அன்பில்லை" என்று ஆகிவிடும் நிலைதான்.

அன்பு என்ற வார்த்தையை கொஞ்சம் ப்ராக்டிகலாக யோசிப்போம் இன்று:

அன்பில் வளர என்ன செய்ய வேண்டும்?


நாம் அன்பு செய்பவரோடு அதிக நேரம் செலவிட வேண்டும். பகவத்கீதையின் பல போதனைகளில் ஒன்று "தினச்சார்யா". இந்தத் தினச்சார்யாவிற்கு அதிக அர்த்தங்கள் உண்டு. அதில் ஒன்று என்னவென்றால், "நாம் எதன்மேல் அதிக நேரத்தைச் செலவிடுகின்றோமோ அது வளரும். எதன் மேல் குறைவான நேரத்தைச் செலவிடுகின்றோமோ அது மறைந்து போகும்". எபிரேய வகுப்புகளும், பாடமும் ஒன்றும் புரியவில்லை என்று மாணவர்கள் நாங்கள் ஒருமுறை ஒரு வயதான பேராசிரியரிடம் முறையிட்டபோது அவர் சொன்னதும் இதுதான்: "கடினமாக இருக்கிறதென்றால் நீங்கள் அதற்குப் போதுமான நேரம் கொடுக்கவில்லை என்று அர்த்தம்". நாம் யாருடன் அல்லது யாருக்காக அதிக நேரம் செலவிடுகின்றோமோ அது வளரும். யாரிடம் அல்லது யாருக்காக செலவழிக்கவில்லையோ அந்த உறவு உதிரும். ஒருவர் திருடும் குணமுள்ளவர் என வைத்துக்கொள்வோம். அவரின் திருட்டை எப்படி ஒழிப்பது? தினச்சார்யா சொல்வது இதுதான்: "திருடும் நேரத்தைக் குறை. திருட்டு ஒழிந்து போகும். திருடுவதற்கு நீ அதிக நேரம் செலவழித்தால் திருடிக்கொண்டேதான் இருப்பாய்". கெட்ட வார்த்தை பேசும் பழக்கத்தை நிறுத்த அதற்காக நாம் செலவிடும் நேரத்தைக் குறைப்பதுதான் வழி. உடல்நலம் நன்றாக இருக்க வேண்டுமா அதற்கேற்ற நேரத்தை நாம் செலவழிக்க வேண்டும். இதே கொள்கையை டார்வினும் தன் கோட்பாட்டில் நிரூபிக்கின்றார். உயிர்களில் எல்லா உயிரினங்களும் தாங்கள் எவற்றைப் பயன்படுத்துகின்றனவோ அவைகளில் அதிக வளர்ச்சி காண்கின்றன. ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீளமானதற்குக் காரணம் அது உயரமான மரங்கள் நோக்கித் தங்கள் தலைகளை நீட்டியதுதான். அன்பிற்கு நேரம் செலவழித்தால்தான் அன்பு வளரும். திருமண உறவில் இது எளிது. துறவற வாழ்வில் இது கொஞ்சம் கடினம். தன் இலக்கு மக்களுக்காக நேரம் செலவழிக்கும் அருட்பணியாளர் மட்டுமே அன்பில் வளர முடியும். தன் பணி, தன் நட்பு வட்டம், தன் குடும்பம் எனச் சுருக்கிக் கொண்டால் மக்களுக்கு நேரம் இருக்காது. "என் மக்கள் என்னைப் புரிந்துகொள்வதில்லை" எனப் புலம்பத் தொடங்குவோம். யாரும் நம்மைப் புரிந்துகொள்வார்கள் -அதற்கான நேரத்தை நாம் எடுக்கும்போது.

அன்பில் வளர இரண்டாம் வழி அன்பு செய்பவர்களோடு உணவருந்துவது. மனிதர்கள் உண்பதற்கும், தாவரங்கள், விலங்குகள் உண்பதற்கும் உள்ள வித்தியாசம் இதுதான். மற்றவைகள் உடல் வளர்ச்சிக்காக மட்டும் உண்கின்றன. மனிதர்கள் மட்டுமே உறவு வளர்ச்சிக்காக உண்கின்றோம். "ஒவ்வொரு உணவுப் பகிர்வும் ஒரு உடலுறவுக்குச் சமம்" என்பார் கலீல் கிப்ரான். ஏனெனில் இரண்டிலுமே உயிர்தான் பரிமாறப்படுகின்றது. ஆன்மீக நிகழ்வுகளில் எல்லாம் உணவும் முக்கியமானதாக இருக்கும்: இந்துமதத்தில் பிரசாதம், கிறித்தவ மதத்தில் நற்கருணை, இசுலாமிய மதத்தில் "ஓகேல்" (அரேபிய மொழியில் "உணவு") என மதங்கள் உணவுப் பகிர்தலை உறவுப் பகிர்தலாகவும், அடையாளமாகவும் வைத்திருக்கின்றன. ஒருவரின் உணவுப் பழக்கத்தை வைத்தே அவர் எந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர் எனவும் நம் இந்திய மரபில் சொல்லிவிடுவர். திருமணங்களில் மற்றும் மற்ற இன்ப துன்ப நிகழ்வுகளில் ஏன் உறவு பரிமாறப்படுகிறது? நம் வீட்டில் உணவில்லை என்ற காரணமா? இல்லை. ஒரே பாத்திரத்தில் சமைக்கப்பட்ட சோற்றில் நாம் கையிடுகிறோம் என்றால் நம்மில் இருப்பது ஒரே உயிர் என்ற அர்த்தம்தான். நாம் யாருடன் சேர்ந்த உண்கின்றோமோ அவர்களோடு ஒரு உயிராக மட்டுமல்லாமல் ஒரே உடலாகவும் ஆகிவிடுகின்றோம். சேர்ந்து சாப்பிடாத குடும்பம் விரைவில் பிரிந்து விடுகிறது. இன்று வேலை, படிப்பு, தொலைக்காட்சி என தனித்தனியே சாப்பிட்டுப் பழகுவது நம் குடும்ப உறவுகளில் சீக்கிரமே பிரிவைக் கொண்டு வந்துவிடும். துறவற வாழ்வில் இதை எப்படி புரிந்து கொள்வது? முதல் உணவு நற்கருணை. நற்கருணைக் கொண்டாட்டத்தில் ஒரு அருட்பணியாளர் முழுமையாகப் பங்கேற்பதில்லையென்றாலோ, அதைத் தவிர்க்கிறார் என்றாலோ, நற்கருணையின் முன் அவரால் நேரம் செலவிட முடியவில்லை என்றாலோ, அவர் இறையன்பிலிருந்து பின்வாங்குகிறார் என்றே அர்த்தம். அடுத்ததாக, என் பங்கு மக்கள் 1000 குடும்பங்கள் இருக்கின்றார்கள். 1000 குடும்பங்களில் நான் எப்படிச் சாப்பிட முடியும்? என் பள்ளியில் 1000 குழந்தைகள் படிக்கிறார்கள். அனைவரின் வீட்டிலும் சாப்பிட்டால்தான் அன்பு வளர முடியுமா? ஆம். 1000 வீடுகளில் சாப்பிட்டுப் பாருங்களேன். உங்களைக் கொண்டாடத் தொடங்குவார்கள். "அவர்கள் வீட்டில் சாப்பிட்டால் பின் என்னிடம் ஏதாவது உதவி கேட்பார்கள். என்ன செய்வது?" என்று சப்பைக் கட்டு கட்டுவார்கள் ஒரு சிலர். ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் ஃபாதர்: "யாரும் உங்களை நம்பி இல்லை! உங்கள் உதவியை நம்பி இல்லை! நீங்கள் வருவதற்கு முன்னே இந்த உலகம் இருந்தது. நீங்கள் போன பின்னும் இந்த உலகம் இருக்கும். இருக்கும் வரை அன்பு செய்யுங்கள். உதவி கேட்டால் செய்யுங்களேன்!"

அன்பின் இயல்பு விரியக் கூடியது. மாரடைப்பு என்றால் என்ன? இதயத்தின் வால்வுகளோ, இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய்களோ சுருங்குவதால் தான் மாரடைப்பு வருகின்றது. அன்பு சுருங்குகிறது என்றால் அங்கே ஆபத்து வரப்போகிறது என அர்த்தம். காதல் எப்போது கள்ளக்காதலாக மாறுகின்றது? ஊருக்கே தெரிந்தால், ஊரறியச் செய்தால் அது காதல். அது திருமண உறவில் இயல்பாக இருக்கும். "உனக்கும் - எனக்கும்" எனச் செய்தால் அது கள்ளக்காதல். அன்பின் இயல்பு விரிந்து கொடுப்பது. திருமண உறவில் கணவனும் மனைவியும் மட்டும் இணைவதில்லை. கணவன் சார்ந்த அனைவரும், மனைவி சார்ந்த அனைவரும் ஒருவர் மற்றவரோடு இணைகின்றனர். "நீ எனக்கு மட்டும் - நான் உனக்கு மட்டும்" என்று இருப்பது அன்பன்று. உன்னைச் சார்ந்தவர்களும் என்னைச் சார்ந்தவர்கள் - என்னைச் சார்ந்தவர்களும் உன்னைச் சார்ந்தவர்கள் என்று விரித்துக் கொடுப்பதே அன்பு. நாம் அன்பு செய்பவர்களைப் பற்றி அனைத்தையும் தெரிந்துகொள்ளவேண்டும். அவர்களின் பெற்றோர், உடன்பிறந்தோர், நண்பர்கள், பிடித்தவை, பிடிக்காதவை, அவர்களின் ரசனை, அவர்களின் ஆர்வம், அவர்களின் பொழுதுபோக்கு என அனைத்தையும் தெரிந்துகொள்ளும்போது அவர்களைப் பற்றிய பார்வையும் விரிகின்றது. அன்பும் அகலமாகிக் கொண்டே போகின்றது. "எனக்குப் பிடிப்பதுதான் உனக்குப் பிடிக்க வேண்டும்" என்று நினைப்பதன் பெயர் ஆதிக்கம். ஆதிக்கம் இருக்கும் இடத்தில் பயம்தான் இருக்கும். அன்பு இருக்காது. திருமண உறவில் அன்பு கணவன் - மனைவி, மாமனார் - மாமியார், கொழுந்தனர் - கொழுந்தியா என விரிகின்றது. துறவற உறவில் எப்படி விரியும்? ஒரு பங்கு அருட்பணியாளர் பங்கு மக்களை அன்பு செய்கிறார் என்றால் அவர்களை முழுமையாக அறிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். பங்கு மக்களுக்கு 15 நிமிடங்களுக்கு மேல் மறையுரை வைத்தால் பிடிக்காது என்பதைக் கூடப் பலரால் புரிந்து கொள்ள முடிவதில்லை. அதே நேரத்தில் எந்த ஒரு தனிநபரோடு கொள்ளும் நெருக்கம் "இது நமக்குள்ளே இருக்கட்டும்" என்று மாறுகிறதோ அன்றே அருட்பணி நிலை ஆட்டம் காணத் தொடங்குகிறது. சந்திப்புக்கள், பரிசுப்பொருட்கள் என இலைமறை காயாக வளர்ந்து பின் ஒரு கட்டத்தில் மற்றவர்களையும், இந்த உறவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களையும் பகையாளர்களாகப் பார்க்கத் தொடங்கிவிடுகிறது. இங்கே அன்பு விரிவதில்லை. சுருங்குகிறது. சுருக்குகிறது.

நம் அன்பிற்குரியவர்களுக்குப் பிடிக்காததை நாம் செய்வதில்லை. புதிதாக வரும் உளவியல் ஆய்வுகள் சொல்வது என்னவென்றால் ஒருவரின் குடிப்பழக்கத்திற்கும், புகைப்பிடிக்கும் பழக்கத்திற்குக் காரணம் அவர் தன்னை யாரும் அன்பு செய்வதில்லை என்று நினைப்பதுதான் என்கிறார்கள். ஒரு அருட்பணியாளர் சரியாகக் குளிக்க மாட்டார். நேரத்திற்குத் தூங்க மாட்டார். சரியாக முகச்சவரம் செய்ய மாட்டார். நல்ல ஆடைகள் அணிய மாட்டார். அறை எப்போதும் குப்பையாக இருக்கும். அடிக்கடி சுருட்டு குடிப்பார். நிறைய மது அருந்துவார். அவரின் நண்பர் ஒருமுறை, "ஏன் இப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டபோது சொன்னார்: "எனக்கென்று யார் இருக்கிறார்? யார் என்னைப் பார்க்க வருகிறார்? நான் யாருக்காக நல்லா ஆடை அணிய வேண்டும்? நான் ஷேவ் செய்தால் யார் பார்க்கப் போகிறார்?" தனக்கென்று யாரும் இல்லை என்ற உணர்வுதான் மிகவும் கொடிய உணர்வு. நாம் அன்பு செய்பவர்கள் விரும்புவதை மட்டுமே நாம் செய்கின்றோம். அல்லது அவர்களுக்குப் பிடிக்காததை நாம் செய்வதில்லை. இதையேதான் நற்செய்தி நூல்கள் மனமாற்றம் என அழைக்கின்றன. மனமாற்றம் என்பது நாம் அன்பு செய்பவர்களின் பக்கம் மனத்தைத் திருப்புவது. ஒரு சில வீடுகளில் சில அம்மாக்கள், "என் மகன் கல்யாணத்திற்கு அப்புறம் ரொம்ப மாறிட்டான்" என்பார்கள். "மாறிட்டான்" என்றால் "பெரிய வீடு கட்டிவிட்டான்" என்றோஇ "நிறைய பணம் சேர்க்கிறான்" என்றோ பொருள் அல்ல. "மனைவி பக்கம் மனதைத் திருப்பிவிட்டான்" என்றுதான் அர்த்தம். நாம் அன்பு செய்பவர் பக்கம் நோக்கி நம்மை முழுமையாகத் திருப்புகிறோம். திருமண உறவிலும், துறவற உறவிலும் இந்த இயல்பு முக்கியமான ஒன்று. "நான் என்ன செய்தாலும் என் பங்கு மக்கள் குறை சொல்கிறார்கள்" என்று ஒரு சில அருட்பணியாளர்கள் புலம்புவார்கள். இதற்குக் காரணம் மக்கள் அல்ல. நாம்தான். நம் அன்பிற்குரிய அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை நாம்தான் அறியத் தவறிவிடுகிறோம்.

அன்பின் இயல்பு தன்னையே அழிக்கக் கூடியது. "இனி நான் அல்ல - நீதான் எல்லாம்" என நினைப்பதே அன்பின் உச்சகட்ட குணம் - தற்கையளிப்பு. இதற்குமேல் கொடுக்க ஒன்றுமில்லை என்று கைகளை விரித்து சிலுவையில் இறந்து போகின்றார் இயேசு. என் அப்பா அம்மாவின் மேல் சின்ன வயசில் நிறையக் கோபப்பட்டிருக்கிறேன். என்னுடன் உடன் பயிலும் குருமாணவர்களைப் பார்க்க வரும் அவர்களின் அப்பா அம்மாக்கள் அவர்களுக்கு 100 ரூபாய், 500 ரூபாய் எனக் கொடுத்துவிட்டுச் செல்வார்கள். என் அப்பா 5 அல்லது 10 ரூபாய் மட்டுமே கொடுப்பார்கள். நான் மற்றவர்களோடு ஒப்பிட்டு உடனே அழுவேன். இப்போது நினைத்துப் பார்க்கிறேன் - அந்த 5 ரூபாய்க்கும் 10 ரூபாய்க்கும் அவர்கள் எவ்வளவு தியாகம் செய்திருப்பார்கள். தினமும் வேலை பார்த்தால் தான் வீட்டில் அடுப்பெரியும். என்னைப் பார்க்க வந்தால் அன்று அவர்கள் வேலைக்குப் போக முடியாது. பேருந்து கட்டணம். எனக்கான மாத உணவுக் கட்டணம். பள்ளிக் கட்டணம். இவ்வளவையும் எப்படிச் சமாளித்திருப்பார்கள் என்று இப்போது நினைத்தாலும் கண்களில் வியர்த்து விடுகிறது. நாம் பல நேரங்களில் அன்னை தெரசாவின் தியாகத்தையும், அப்துல் கலாமின் தியாகத்தையும் நினைக்கும் அளவிற்கு நம் அப்பா - அம்மாவின் தியாகத்தை நினைப்பதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. நாம் அன்பு செய்பவர்களுக்காக நம்மை ஒரு நிமிடமாவது தியாகம் செய்திருக்கிறோமா? நமக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் மட்டும் மற்றவர்களைத் தேடுவது அன்பு அல்ல. பொழுதுபோக்கு. நமக்குத் தேவைக்குப் போக நாம் அன்ப செய்பவர்களுக்குக் கொடுப்பதும் அன்பு அல்ல. பிச்சை. ஒரு அருட்பணியாளர் தனக்குரிய நேரம் போக மற்றவர்களுக்குக் கொடுக்கிறார் என்றால் அவர் அன்பு செய்யவில்லை. மக்களுக்கு நேரப் பிச்சை போடுகின்றார்.

அன்பின் இயல்பு கனிவு. "கனிந்த உங்கள் உள்ளம் எல்லாருக்கும் தெரிந்திருக்கட்டும்" என கலாத்திய திருச்சபைக்கு எழுதுகின்றார் தூய பவுல். இன்று நாம் அன்பு செய்பவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது நம் படிப்பும், நம் ஆலோசனையும், நம் பணமும், நம் அறிவும் அல்ல. நம் கனிவான வார்த்தைகள் தாம். நேற்று மதுரையில் ஒரு அச்சகத்தில் வேலை பார்க்கும் ஒரு அக்காவிற்கு தொலைபேசி அழைப்பு செய்தேன். பேசிக் கொண்டேயிருந்தபோது, "ஃபாதர் நீங்க என்ன படிக்கிறீங்க?" என்று கேட்டார்கள். "பைபிள்" என்றேன். அவர் ஒரு இந்து சகோதரி. "அதைப் படித்தால் என்ன பயன்?" என்று கேட்டார்கள். நான் சற்று நேரம் அமைதியாக இருந்தேன். எனக்குச் சொல்லத் தெரியவில்லை. அவர்களே பேசினார்கள், "திருச்சபையின் சட்டம் படித்தால் பேராயர் இல்லத்தில் பணி செய்யலாம். பைபிள் படிச்சு என்ன செய்வீங்க?" "இல்லக்கா...இங்க நாங்க பைபிள கிரேக்க மொழியிலயும், எபிரேய மொழியிலயும் படிக்கிறேன்" என்று சொன்னேன். "என்னதான் எந்த மொழியில படிச்சாலும் நீங்க "நல்லா இருக்கீங்களான்னு" கேட்கிற இரண்டு வார்த்தைகள்தான் உங்களை யாருன்னு எங்களுக்குச் சொல்லுது" என்றார்கள். இன்று மக்கள் ஒரு அருட்பணியாளரிடம் விரும்புவது அவர்களின் படிப்பையோ, அறிவுரையையோ, நகைச்சுவைகளையோ, மறையுரைகளையோ, ஏன் செப வழிபாடுகளையோ அல்ல. கனிவான நாலு வார்த்தைகளைத்தான். மற்ற அனைத்தையும் காசு கொடுத்து வாங்கிவிடலாம். நம்மைவிட ஆங்கிலம் தெரிந்த, கம்ப்யூட்டர் தெரிந்த, சட்டம் தெரிந்த, நிதிநிர்வாகம் தெரிந்த, அறிவியல் தெரிந்த, அரசியல் தெரிந்தவர்கள் நிறையப்பேர் இருக்கின்றனர். ஆனால் கனிவான வார்த்தைகளைப் பேசுவது நம்மால் மட்டும்தான் சாத்தியம். அன்பின் இயல்பு கனிவது. "யார் எனக்கென்று இல்லையென்றாலும், அவர் எனக்காக இருக்கிறார்" என்று நம் அன்பிற்குரியவர்கள் நம்மைப் பார்த்துச் சொல்ல முடியுமா? அவர்களுக்கு நம் கனிந்த உள்ளத்தைக் காட்டுகிறோமா?

அன்பு தன்னில் புறப்பட வேண்டும். "சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்" என்று சொல்வார்கள். நம்மிடம் இல்லாத ஒன்றை நாம் ஒருக்காலும் மற்றவர்களுக்குக் கொடுக்க முடியாது. தன்னை அன்பு செய்யும் ஒருவரால் தான் மற்றவரை அன்பு செய்ய முடியும். தன்னை அறிந்தவர் மட்டுமே மற்றவரையும் அறிய முடியும். எனக்கே என்ன பிடிக்கும் என்று தெரியாத போது மற்றவர்களுக்கு என்ன பிடிக்கும் என எனக்கு எப்படித் தெரியும்? திருமண அன்போ, துறவற அன்போ அது நம்மில் தொடங்க வேண்டும். "நிறைவாழ்வு என்றால் என்ன?" இறந்தபின் வானதூதர் வந்து நம்மைத் தூக்கிக் கொண்டு சென்று தூயவர் கூட்டத்தில் அமர்த்தி "தூயவர்! தூயவர்!" என்று பாடுவதா நிறைவாழ்வா? இல்லை. நன்றாகக் குளிப்பதும், சுத்தமான ஆடை அணிவதும், அவசரமில்லாமல் உண்பதும், மற்றவர்களைப் பார்த்து புன்னகை செய்வதும், நம் அன்பிற்கினியாளின் உள்ளங்கைச் சூட்டின் இதத்தை உணர்வதுமே நிறைவாழ்வு.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
நம் மீட்புக்காக தம் ஒரே மகனையே கையளித்த பேரன்பின் ஊற்றாகிய இறைவன்!

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்பெயின் நாட்டின் மன்னராக இருந்தவர் அல்போன்சோ என்பவர். நீதி வழுவாமல் பொற்கால ஆட்சியை மக்களுக்கு வழங்கியதால், மக்களால் இன்றும் அவர் நினைவு கூரப்படுகின்றார். ஸ்பெயின் நாட்டை அல்போன்சோ ஆட்சி செய்த சமயத்தில் முகமதியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே பயங்கரச் சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒரு சமயம் முகமதியர்கள் சிலர் மாறுவேடத்தில் ஸ்பெயின் நாட்டுக்குள் புகுந்து, மன்னரின் மகனை அதாவது இளவரசரைக் கடத்திக் கொண்டு போய் அவர்களுடைய நாட்டில் வைத்துக்கொண்டனர். இளவரசர் கடத்தப்பட்ட செய்தியைக் கேட்டு மன்னர் மனமுடைந்து போனார்.

இச்சம்பவம் நடந்த சில நாட்கள் கழித்து, முகமதியர்களிடமிருந்து மன்னருக்கு ஓர் ஓலை வந்தது. அந்த ஓலையில், "உனக்கு உன்னுடைய மகன் வேண்டுமா? இல்லை உன்னுடைய மக்கள் வேண்டுமா?. மகன் வேண்டும் என்றால், நாங்கள் நாட்டின் மீது படையெடுத்து வந்து, மக்களைக் கொன்றொழிப்போம். இல்லை உனக்கு மக்கள்தான்வேண்டும் என்றால், உன்னுடைய மகனைக் கொன்றொழிப்போம்" என்று எழுதி இருந்தது. அந்த ஓலையைப் படித்தபோது மன்னர் ஒருகணம் அதிர்ந்து போய்விட்டார். மன்னரைச் சுற்றி அரசபையினர் இருந்தனர். மன்னர் என்ன முடிவெடுக்கப்போகின்றார் என்று பார்த்துக்கொண்டே இருந்தனர்.

அப்போது மன்னர் அரசபையில் இருந்த எழுத்தரை தன் அருகே அழைத்து, அவரிடம் "என்னுடைய மகனை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால், நாட்டு மக்களை நீங்கள் ஒன்றும் செய்யாதீர்கள்" என எழுதுமாறு கேட்டுக்கொண்டார். எழுத்தரும் மன்னர் சொன்னவாறே ஓலை எழுதி, அதனை முகமதியர்களுக்கு அனுப்பி வைத்தார். மன்னர் எடுத்த இந்த முடிவினை அறிந்து அரசபையினர் மட்டுமல்லாமல், நாட்டு மக்களே திகைத்துப் போனார்.

மக்களுக்காக தன் மகனையே கையளித்த மன்னர் அல்போன்சோவின் தியாகச் செயல் உண்மையில் நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது. எப்படி மன்னர் அல்போன்சோ மக்களுக்காக தன்னுடைய மகனையே கையளித்தாரோ, அதுபோன்று தந்தையாம் கடவுளும் தன் ஒரே மகன் இயேசு கிறிஸ்துவை நமக்காக, நம்முடைய மீட்புகாகக் கையளித்து தான் பேரன்பின் ஊற்று என்பதை நமக்கு நிரூபித்துக் காட்டுகின்றார்.

தவக்காலத்தின் நான்காம் ஞாயிறான இன்று நாம் படிக்கக் கேட்ட வாசகங்கள் "கடவுளின் பேரன்பை" நமக்கு எடுத்துக் கூறுவதாக இருக்கின்றது. எனவே, நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

யோவான் எழுதிய நற்செய்தி நூலிலிருந்து எடுக்கப்பட்ட நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெரும் பொருட்டு, அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்" (யோவா 3: 16) என்கின்றார். இயேசுவின் இவ்வார்த்தைகள் கடவுள் எந்தளவுக்கு பேரன்பு கொண்டவராக இருக்கின்றார் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

இந்த இடத்தில் பவுலடியார் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் கூறுகின்ற வார்த்தைகளை இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால் இன்னும் பொருள் நிறைந்ததாக இருக்கும். "நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார்" என்பார் அவர் (உரோ 5: 7-8). ஆம், எல்லாரும் வாழ்வு பெறவேண்டும் அதுதான் கடவுளின் திருவுளமாக இருக்கின்றது, அங்குதான் கடவுளின் பேரன்பும் விளங்குவதாக இருக்கின்றது.

இரண்டு குறிப்பேடு புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் கடவுளின் பேரன்புக்குச் சாட்சியாக விளங்குகின்றது. எகிப்தில் அடிமைப்பட்டுக் கிடந்த இஸ்ரயேல் மக்களை கடவுள் மீட்டெடுத்து, அவர்களுக்குப் பாலும் தேனும் பொழியக்கூடிய கானான் தேசத்தை வழங்கினார். அது மட்டுமல்லாமல், அவர்களை நல்வழியில் வழி நடத்துவதற்கு நீதித் தலைவர்கள், அரசர்கள், இறைவாக்கினர்களை எல்லாம் கொடுத்தார். ஆனால், அவர்களோ தங்களுக்கு எண்ணில்லா நன்மைகளைச் செய்த யாவே கடவுளை வழிபடுவதை மறந்துவிட்டு, ஓய்வுநாளை ஒழுங்காகக் கடைபிடிக்காமல் போலி தெய்வங்களை, பாகாலை வழிபடத் தொடங்கினார்கள். அதோடுகூட தங்களுக்கு இறைவார்த்தையை எடுத்துச் சொன்ன இறைவாக்கினர்களையும் அவர்கள் கொடுமைப்படுத்தினார்கள். இதனால் சினம்கொண்ட கடவுள் அவர்களை பாபிலோனியர்களின் கையில் ஒப்புவிக்கின்றார். அங்கு அவர்கள் எழுபது ஆண்டுகள் அடிமைகளாய் வாழப் பணிக்கின்றார். இவ்வாறு தனக்குக் கீழ்படியாத இஸ்ரயேல் மக்கள் இனத்தை அவர் கடுமையாகத் தண்டிக்கின்றார்.

இது ஒரு பக்கம் இருக்க, மக்கள் என்னதான் தன்னுடைய அன்பை மறந்து, வேற்று தெய்வங்களை வழிபட்ட போதும், ஒருகட்டத்தில் அவர்கள் தங்களுடைய குற்றங்களை உணர்ந்து, மனம் வருந்தி, மன்றாடுகின்றபோது, கடவுள் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்கின்றார். மேலும் புறவினத்தைச் சார்ந்த சைரஸ் மன்னன் வழியாகச் செயல்பட்டு இஸ்ரயேல் மக்களை அவர்களுடைய சொந்த நாட்டிற்கு கூட்டி வருகின்றார். இவ்வாறாக கடவுள் மன்னிகின்றவராக, பேரன்பு கொண்டவராகத் திகழ்கின்றார்.

ஆகையால், தவறு செய்த மக்கள் அப்படியே ஒழிந்துபோகட்டும் என்பதல்ல, மாறாக அவர்கள் மனம்வருந்தி, திருந்தி வருகின்றபோது அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்வதுதான் கடவுளின் சித்தமாக இருக்கின்றது.

தூய பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகம் கூட, கடவுளின் அன்பையும் அவருடைய இரக்கத்தையும் தான் நமக்கு எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. "கடவுள் மிகுந்த இரக்கமுடையவர். அவர் நம்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார். குற்றங்களின் காரணமாய் இறந்தவர்களாயிருந்த நாம் அவ்வன்பின் மூலம் இணைந்து உயிர்பெறச் செய்தார். நீங்கள் மீட்கப்பட்டிருப்பது அந்த அருளாலேயே ( 2: 4,5) என்பார் பவுலடியார். இங்கே பவுலடியார் கடவுளின் அன்பையும் இரக்கத்தையும் ஆழமாக வலியுறுத்தும் அதே வேளையில் நாம் மீட்படைந்திருப்பது நம்முடைய செயலால் அல்ல, கடவுளின் மேலான அருளால் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார். ஆகவே, நாம் மீட்கப்பட்டிருப்பது குறித்தோ, வாழ்வினைக் கொடையாகப் பெற்றுக்கொண்டிருப்பது குறித்தோ பெருமை பாராட்டுவதற்கு நமக்கு எந்தவிதத் தகுதியும் இல்லை என்பதுதான் உண்மை. ஏனெனில், நாம் மீட்படைந்திருப்பதே கடவுளின் அருளால்தான்.

பவுலடியார் கடவுளின் மீட்புச் செயலைப் பற்றிப் பேசுகின்ற அதே வேளையில், நம்முடைய கடமையும் பற்றிப் பேசுகின்றார். "நாம் நற்செயல் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கின்றோம். இவ்வாறு நற்செயல்கள் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கின்றார்" என்பார் அவர். ஆகையால், இறையருளால் சாவிலிருந்தும், அழிவிலிருந்தும் மீட்கப்பட்டிருக்கின்ற நாம், அதற்குக் கைமாறாக நற்செயல் புரிவதுதான் கடவுளுக்கு ஏற்புடைய செயலாகும் என்பதாகும் என்பது பவுலடியாரின் ஆழமான செய்தியாக இருக்கின்றது.

இறையருளால் மீட்கப்பட்டிருக்கும் நாம், நம்முடைய வாழ்க்கையில் நற்செயல் செய்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். மத்தேயு நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், "உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்" என்று (மத் 5:16). ஆம், இறையருளால், கடவுளின் பேரன்பால் மீட்கப்பட்டிருக்கும் நாம் நற்செயல் புரிகின்ற வாழ்க்கையை வாழ்கின்றபோது அது கடவுளுக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.

முன்னாள் அமெரிக்க அதிபர் கிளீவ்லான்ட் (Cleveland) அவர்களைப் பற்றிச் சொல்லப்படும் ஓர் அற்புதமான நிகழ்வு.

ஒரு சமயம் கிளீவ்லான்டின் வாழ்க்கை வரலாற்றைச் எழுதிய ரிச்சர்ட் டபிள்யு கில்டர் (Richard W. Gilder) என்பவர் இரயிலிலே பயணம் செய்துகொண்டிருந்தார். அவர் பயணம் செய்த அதே இரயிலில் அதிபர் கிளீவ்லாண்டும் பயணம் செய்கின்றார் என்று கேள்விப்பட்ட கில்டர், அவரிடத்தில் ஒரு முக்கியமான செய்தியைச் சொல்வதற்காக அவரைத் தேடிப் போனார். அவர் எவ்வளவோ தேடியும் அதிபர் எங்கு இருக்கின்றார் என்பதை அவரால் கண்டுகொள்ளவே முடியவில்லை.

கடைசியில் அவர் பயணச் சீட்டு பரிசோதகரிடம் சென்று, அதிபர் கிளீவ்லாண்ட் எங்கு இருக்கின்றார் என்று கேட்டார். அதற்கு அவர் அந்த இரயிலில் பயணிகளின் பொருட்களை, மூட்டை முடிச்சுகளை சுமந்து செல்லும் இரயில் பெட்டியை (Baggage Car) சுட்டிக்காட்டினார். கில்டர் ஒரு நிமிடம் அதிர்ந்து போய் நின்றார். பயணிகளின் பொருட்களை, மூட்டை முடிச்சுகளைச் சுமந்து செல்லும் பெட்டியில் அதிபர் என்ன செய்கின்றார் என்று கில்டர் கனத்த இதயத்தோடு அங்கு சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆம், அதிபர் அவர்கள் பயணிகளின் மூட்டை முடிச்சுகளின் மீது அமர்ந்து சன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது கில்டர், "அதிபர் அவர்களே! இங்கு என்ன செய்கின்றீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அவர், "இளம்பெண் ஒருத்தி கைக்குழந்தையுடன் இந்த இரயிலில் ஏறினாள். ஏற்கனவே, இரயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவருக்கு இடம் கொடுக்க யாரும் முன்வரவில்லை. அதனால்தான் நான் என்னுடைய இருக்கையை அவளுக்குக் கொடுத்துவிட்டு, இங்கு வந்து அமர்ந்து கொண்டேன்" என்றார். அதிபரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட கில்டர் கண்கலங்கிப் போனார்.

கிளீவ்லாண்ட் தான் அமெரிக்க அதிபர் என்றெல்லாம் பாராது, கைக்குழந்தையோடு இருந்த பெண்மணிக்கு உதவி செய்தது, நற்செயல் புரிந்தது நம்மை வியக்கவைப்பதாக இருக்கின்றது. கடவுளின் அன்பால், அருளால் மீட்கப்பட்டிருக்கும் நாம் ஒவ்வொருவரும் நற்செயல் செய்து வாழவேண்டும் என்பதுதான் அவருடைய திருவுளமாக இருக்கின்றது.

எனவே, நாம் கடவுளின் பேரன்பையும் அவருடைய இரக்கத்தையும் உணர்ந்தவர்களாய், நற்செயல் புரிகின்ற வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


Maria Antonyraj, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 5
=================================================================================

 கடவுளோடு இணைந்தே!

 2 குறிப்பேடு 36:14-16,19-23
 எபேசியர் 2:4-10
 யோவான் 3:14-21

திருவருகைக்காலத்தின் 3ஆம் ஞாயிறு "மகிழ்ச்சி ஞாயிறு" என்று அழைக்கப்படுவதுபோல, தவக்காலத்தின் 4ஆம் ஞாயிறும் "மகிழ்ச்சி ஞாயிறு" (லெயதாரே சன்டே) என அழைக்கப்படுகிறது. இது இவ்வாறு அழைக்கப்படுவதன் காரணம் "அகமகிழ்வாய்! எருசலேமே!" எனத் தொடங்கும் இன்றைய திருப்பலியின் வருகைப் பல்லவியே.

இன்றைய நாள் சிந்தனைக்கு "கடவுளோடு இணைந்தே மகிழ்ச்சி" என்ற தலைப்பை எடுத்துக்கொள்வோம்.

ஓர் இரவில் தன்னிடம் வந்த நிக்கதேமிடம் இயேசு ஆற்றும் உரையின் இறுதிப் பகுதிதான் இன்றைய நற்செய்தி வாசகம். இந்த இறுதிப் பகுதியின் இறுதி வார்த்தைகளோடு நம் சிந்தனையைத் தொடங்குவோம்:

"இதனால் இவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்!"

"கடவுளோடு இணைந்தே செய்தல்" - இதுதான் மகிழ்ச்சிக்காக இன்றைய இறைவாக்கு வழிபாடு வைக்கும் ஒரு வழி.

மகிழ்ச்சிக்காக ஒரு வழி இருக்கிறது என்றால், இன்பத்திற்கான ஒரு வழியும் இருக்கும். இந்த இரண்டு வழிகளை நாம் முதலில் புரிந்துகொள்வோம்:

அ. இன்பத்திற்கான வழி

படைப்பின் தொடக்கத்தில் கடவுள் ஆணும், பெண்ணுமாக மனிதரைப் படைக்கின்றார். தோட்டத்தில் தங்கள் விருப்பம்போல வாழ்ந்த இவர்களில் பெண்ணைத் தேடி பாம்பு வருகின்றது: "கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக் கூடாது என்றது உண்மையா?" (தொநூ 3:1) என்ற கேள்வியை முன்வைக்கின்றது. தொடர்ந்து, "... நீங்கள் சாகவே மாட்டீர்கள் ... கடவுளைப் போல ஆவீர்கள்..." என்றும் சொல்கின்றது. "கடவுளைப் போல" என்ற இந்த வார்த்தைகளில் கொஞ்சம் சரிந்துவிடுகின்றார் நம் தொடக்கத்தாய் ஏவாள். "கடவுளைப் போல" இருப்பது என்பது கடவுளிடமிருந்து பிரிந்து கடவுளுக்கு இணையாக நிற்பது. ஆக, கடவுளைப் போல இருப்பது இன்பம்.

ஆ. மகிழ்ச்சிக்கான வழி

பாம்பின் பேச்சைக் கேட்டு ஏவாளும், தொடர்ந்து ஆதாமும் விலக்கப்பட்ட கனியை உண்ண, அவர்கள் கண்கள் திறக்கப்பட, தாங்கள் ஆடையின்றி இருப்பதை அவர்கள் உணர்ந்துகொள்கின்றனர். மென்காற்று வீசும் பொழுதில் ஆண்டவர் வரும்போது இருவரும் ஒளிந்து கொண்டிருக்கின்றனர். ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, "நீ எங்கே இருக்கின்றாய்?" என்று கேட்கின்றார் (காண். தொநூ 3:8). மனிதன் எங்கிருக்கின்றான் என்று தெரியாமல் கடவுள் அவனிடம் இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. மாறாக, "நீ இருக்க வேண்டிய இடத்தில் இல்லையே!" என்று அவனிடமும், அவளிடமும் உணர்த்துவதற்காகவே இக்கேள்வியைக் கேட்கின்றார். ஆக, "என்னோடு இணைந்திருக்க வேண்டிய நீ என்னைப்போல ஆக முயற்சி செய்துவிட்டாயே!" என்ற ஆதங்கமாகத்தான் கடவுளின் கேள்வி இருக்கிறது. இணைந்திருந்த நிலையை அவர்கள் இழந்ததால் அவர்கள் வாழ்வில் வேதனையும், வேட்கையும், சாபமும், வலியும், வியர்வையும் சேர்ந்து கொள்கிறது. ஆக, கடவுளோடு இணைந்திருப்பது மகிழ்ச்சி.

தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு சுட்டிக் காட்டும் மகிழ்ச்சியை நாம் நம் வாழ்வில் மீட்டெடுக்க நாம் கடவுளோடு இணைதல் அவசியமாகிறது.

இந்த அவசியத்தை இன்றைய வாசகங்களின் பின்புலத்தில் பார்ப்போம்:

இன்றைய முதல் வாசகத்தின் (காண். 2 குறி 36:14-16, 19-23) எட்டு வசனங்களில் விவிலிய ஆசிரியர் ஏறக்குறைய 300 ஆண்டுகள் நிகழ்வைச் சொல்லி முடிக்கின்றார். இறைவாக்கினர் எரேமியாவின் காலத்தில் (கிமு 587) இஸ்ரயேல் மக்கள் பாபிலோனிய படையெடுப்பபுக்கு உள்ளாகி, நெபுகத்னேசர் அரசர் காலத்தில், நாடுகடத்தப்படுகின்றனர். அவர்களின் எருசலேம் நகரமும், ஆலயமும் அழிக்கப்படுகின்றன. திருச்சட்டம், ஆலயம், ஓய்வுநாள், சொந்த மண் என எதுவும் இல்லாமல் அந்நியநாட்டில் அடிமைகளாக நிற்கின்றனர். இவர்களின் இந்த நாடுகடத்தலுக்கும், அடிமைத்தனத்துக்குமான காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், குறிப்பேடு நூலின் ஆசிரியர் குருக்கள், அரசாட்சி செய்பவர்கள், சாதாரண மக்கள் என எல்லாரையும் குற்றம் சாட்டி, ஓய்வுநாள் மீறலை முதன்மையான குற்றமாக முன்வைக்கின்றார். நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்களுக்கான மீட்பு பாரசீக மன்னன் சைரசு (கிமு 320) வழியாக வருகிறது. தான் வெற்றி கொண்ட பாபிலோனிய நாட்டில் அடிமைகளாக இருந்த இஸ்ரயேல் மக்களை திரும்பவும் தங்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பும் சைரசு மன்னனின் வார்த்தைகள் முக்கியமானவை:

அ. "ஆண்டவருடைய மக்களாக இருப்பவர் அங்கு செல்லட்டும்."

ஆ. "கடவுளாம் ஆண்டவர் உங்களோடு இருப்பாராக."

மக்கள் ஆண்டவரோடு இருக்க வேண்டும். ஆண்டவர் மக்களோடு இருப்பார். ஆக, மக்கள் கடவுளோடு இணைந்திருத்தல் அவர்களுக்கு மறுவாழ்வை, நாடு திரும்பும் நல் மகிழ்ச்சியைத் தருகின்றது. அடிமைத்தனத்தில் இருந்தவர்கள் நாடு திரும்பக் காரணமாக இருந்தவர் சைரசு மன்னன் என்றாலும், நாடு திரும்புதலின் மகிழ்ச்சி ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்வு தொடர்பானதாகவே இருக்கிறது.

எனவே, கடவுளோடு இணைந்திருத்தல் என்பது பாரசீக மன்னன் சைரசு வழியாக வழங்கப்படும் கொடையாகவும், அதே நேரத்தில் மக்கள் மேற்கொள்ள வேண்டிய கடமை அல்லது செயலாகவும் இருக்கிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 2:4-10) "கிறிஸ்துவும் திருச்சபையும்" என்ற இறையியல் பதிவில், இறைமக்கள் சாவின் நிலையிலிருந்து வாழ்வின் நிலையை அடைதல் என்ற பகுதியில், "நாம் கடவுளின் கைவேலைப்பாடு" என்றும், "இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் இருப்பது அவரின் கொடை" எனவும் பதிவு செய்கின்றார் பவுலடியார். ஆக, கடவுளின் இணைப்பு அல்லது கடவுளின் இணைந்த நிலை என்பது இயேசு கிறிஸ்து வழியாக கடவுள் நமக்குக் கொடுத்த கொடையாக இருந்தாலும், நாம் கடவுளின் கைவேலைப்பாடு என்பதை உணர்ந்து, "நற்செயல்கள் புரிந்து வாழும்படி" கடவுள் நம்மை அழைக்கிறார்.

இவ்வாறாக, கடவுளோடு இணைந்திருத்தல் தொடக்கமுதல் தரப்பட்ட ஒரு கொடையாகவும், தொடர்ந்து நடைபெற வேண்டிய செயலாகவும் இருக்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 3:14-21) "மீண்டும் பிறப்பது" அல்லது "தூய ஆவியால் பிறப்பது" பற்றி நிக்கதேமோடு உரையாடும் இயேசு தொடர்ந்து, மானிட மகன் உயர்த்தப்பட வேண்டியதன் அவசியத்தையும், அவ்வாறு உயர்த்தப்படுதலால் மனுக்குலம் பெறும் பயனையும், அந்தப் பயனில் நிலைத்திருக்க மனுக்குலம் செய்ய வேண்டிய செயல்களையும் எடுத்துரைக்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. மானிட மகன் உயர்த்தப்படும்போது அனைவரையும் அவர் ஈர்த்துக்கொள்வார்.

2. அப்போது அவரில் நம்பிக்கை கொள்வோர் வாழ்வு பெறுவர்.

3. இந்த வாழ்வைத் தரவே கடவுள் தன் மகனை அனுப்பினார்.

4. நம்பிக்கை கொள்ளாதவர்கள் தண்டனை பெறுவர்.

5. ஒளியிடம் வருவோர் கடவுளோடு இணைந்திருக்கின்றனர்.

இப்படிப் பிரித்துப் பார்க்கும் போது நற்செய்தியின் பொருள் எளிதாக விளங்குகிறது. மையமாக இருப்பது (3) கடவுளின் அன்பையும் அவரது கையளிப்பையும் உணர்த்துகிறது. (2) மற்றும் (4) நம்பிக்கை கொள்பவர்களையும், நம்பிக்கை கொள்ளாதவர்களையும் பற்றிச் சொல்கின்றது. (1) மற்றும் (5)ல் கடவுளோடு மக்கள் இணைக்கப்படுவதையும், அவரிடம் ஈர்க்கப்படுவதையும் சொல்கின்றது.

"கடவுள் - மனிதர் - கடவுள் - மனிதர் - கடவுள்" என்று கட்டமைக்கப்பட்டுள்ளது இயேசுவின் பேச்சு.

இந்த நற்செய்தியை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு முன் அவற்றில் வரும் ஒருசில வார்த்தைகளுக்குப் பொருள் அறிவோம்:

1. "உயர்த்தப்படுதல்" என்பது யோவான் நற்செய்தியில் மட்டுமே பயன்படுத்தப்படும் சொல் (3:14, 8:28, 12:32-34). யோவானைப் பொறுத்தவரையில் இயேசுவின் இறப்பு, உயிர்ப்பு மற்றும் விண்ணேற்றம் என்ற மூன்று நிகழ்வுகளும் ஒரே நேரத்தில் நடந்தவை. இந்த மூன்றையும் குறிக்கும் சொல்தான் "உயர்த்தப்படுதல்". ஒத்தமைவு நற்செய்திகளில் இயேசு தன் பாடுகளையும், இறப்பையும், உயிர்ப்பையும் பற்றி மூன்று முறை முன்னுரைப்பது போல, யோவான் நற்செய்தியில் மூன்றுமுறை தனது உயர்த்தப்படுதல் பற்றிப் பேசுகின்றார்.

2. "நிலைவாழ்வு" - இந்த வார்த்தையைப் பற்றி பல்வகைக் கருத்துகள் நிகழ்கின்றன. சிலர் இதை நிறைவாழ்வு எனவும் மொழிபெயர்க்கின்றனர். இயேசு வாழ்ந்த காலத்தில் இறப்பிற்குப் பின் உயிர்ப்பு அல்லது வாழ்வு இருப்பதாக மக்கள் நம்பவில்லை. ஆக, இயேசு இறப்பிற்குப் பின் உள்ள வாழ்வைப் பற்றிப் பேசியிருக்க வாய்ப்பில்லை. யோவான் நற்செய்தியில் "வாழ்வு" என்பது இயேசுவை நம்புவதன் பரிசு என்றே சொல்லப்படுகிறது. வாழ்வு என்பதை மகிழ்ச்சி, மனநிறைவு, மனச்சுதந்திரம் என்ற பொருளில் நாம் எடுத்துக்கொள்வோம்.

3. "உலகம்" - இதற்கு இரண்டு பொருள் உண்டு: ஒன்று, மனிதர்களின் உறைவிடம். இரண்டு, கடவுளின் செயல்பாடுகளுக்கு எதிரான இயங்குதளம்.

4. "ஒளி" - கடவுளையும், கடவுளின் செயல்களையும், கடவுளின் மனிதர்களையும் குறிக்கும் உருவகம். "ஒளியின் மக்கள்" என்ற உருவகம் கும்ரான் குகைகளில் வசித்த எஸ்ஸீன் சமூகத்தின் சொல்லாடல். ஊர் வேண்டாம், உலகம் வேண்டாம், பொன் வேண்டாம், பெண் வேண்டாம், பொருள் வேண்டாம் என்று தங்களையே பாலைவனத்திற்குள்ளும், மலைகளின் குகைகளுக்குள்ளும் அடைத்துக் கொண்டவர்கள் தங்களை ஒளியின் மக்கள் என அழைத்துக்கொண்டனர். யோவான் நற்செய்தியாளர் ஏதோ ஒரு வகையில் இவர்களோடு அல்லது இவர்களின் கருத்தியலோடு தொடர்பு கொண்டிருக்கலாம் என்பது பலரின் கருத்து. ஏனெனில் யோவான் நற்செய்தியில் பயன்படுத்தப்படும் சொல்லாடல்கள் பல இவர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டவை.

5. "தண்டனைத் தீர்ப்பு" - இறைவனையும், அவரது மகனையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள் அனுபவிப்பது. இந்தத் தண்டனைத் தீர்ப்பு நாம் வாழும்போதே இங்கே நாம் அனுபவிப்பதா, அல்லது இறந்தபின் அனுபவிப்பதா என்ற மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன.

இன்றைய நற்செய்தியில் சிதறிக்கிடக்கும் முத்துக்களை இணைக்கும் ஒரே நூல்: "கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்" (யோவான் 3:16) என்பதுதான்.

யோவான் 3:16ஐ இரண்டு வகைகளில் நாம் மொழிபெயர்க்கலாம்:

1. தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.

2. கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்ததால் தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளித்தார்.

முதல் வகை மொழிபெயர்ப்பில் கடவுளின் அன்பு முக்கியத்துவம் பெறுகிறது. இரண்டாம் வகை மொழிபெயர்ப்பில் கடவுளின் கையளிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

அதிகமான பேரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல்வகை மொழிபெயர்ப்பையே நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்:

கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.

எப்படி? தன் மகனையே அளிக்கும் அளவுக்கு.

ஏன்? மகனை நம்பினவர்கள் நிலைவாழ்வ பெற.

கடவுள்-மனித இணைப்பு இரண்டு நிலைகளில் நடந்தேறுகின்றன: (அ) கடவுள் மகனை அனுப்புகின்றார். (ஆ) மகன் தன்னை நம்புவோருக்கு நிலைவாழ்வைத் தருகின்றார்.

இந்த இணைந்திருத்தலை தொடர்ந்து "ஒளி-இருள்" என்ற இருதுருவ உருவகம் வழியாக விரிக்கின்றார் யோவான். "நம்புவோர்" உண்மைக்கேற்ப வாழ்வோர் என அழைக்கப்பெறுகின்றனர். இறுதியாக, இவர்களின் செயல்கள் அனைத்தும் "கடவுளோடு இணைந்தே செய்யப்படுபவையாக" இருக்கின்றன.

ஆக, இங்கும் கடவுளோடு இணைந்திருத்தல் ஒரு பக்கம் கொடையாகவும், மற்றொரு பக்கம் கடமை அல்லது செயலாகவும் இருக்கிறது.

இத்தகைய புரிதல் எதைக் காட்டுகிறது?

கடவுளோடு இணைந்திருத்தல் நமக்கு "ஆட்டோமேடிக்" மகிழ்ச்சியைக் கொண்டுவருவதில்லை. மாறாக, அந்த மகிழ்ச்சிக்கான பாத்திரமாக நாமே இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஆற்றல் இறங்கிய நமது கைபேசியை ஆற்றல் ஏற்றுவதற்காக சுவரில் உள்ள மின்வழங்கியில் பொருத்துகிறோம் என வைத்துக்கொள்வோம். பொருத்தியவுடன் ஆட்டோமேடிக்காக ஆற்றல் பரிமாறப்படுமா? இல்லை. ஆற்றல் பரிமாறப்படுவதற்கான மின்கற்றை, கைபேசியின் பேட்டரியின் உள்வாங்கு நிலை என அனைத்தும் நன்றாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், விடிய விடிய அது மின்வழங்கியோடு இணைந்திருந்தாலும் அது ஆற்றலைப் பெற்றுக்கொள்வதில்லை.

ஆதாம், ஏவாள், இஸ்ரயேல் மக்கள் என அனைவரும் செய்த தவறு இதுதான்: கடவுளோடு இணைந்திருத்தல் என்ற ஆட்டோமேடிக் செயலால் மகிழ்ச்சி வந்துவிடும் என நினைத்தது.

ஒளி உலகிற்கு வந்திருந்தாலும் மனிதர்களுக்கு ஒரு சாய்ஸ் இருக்கிறது. அவர்கள் விரும்பினால் ஒளியிடம் வரலாம். விரும்பாவிட்டால் ஒளியைவிட்டுத் தூரமாகலாம். மனிதர் ஒளியைவிட இருளையே விரும்புவதாகவும், ஏனெனில் அவர்களின் செயல்கள் தீயனவாய் இருக்கின்றன என்றும் பதிவு செய்கின்றார் யோவான். ஒளி அனைத்தையும் ஒளிர்விக்கக் கூடியது. ஒளியிடம் எந்த மறைவும் இல்லை. அது இருப்பதை அப்படியே காட்டிவிடுகின்றது. ஒருவர் தானே விரும்பி அந்த ஒளியிடம் வர வேண்டும். வரும்போது தன் தீச்செயல்களை விட்டுவிட வேண்டும்.

முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் இருளை விரும்பியதால் நாடுகடத்தப்படுகின்றனர். சைரசு மன்னனால் ஒளியை நோக்கி திரும்பவும் அனுப்பப்படுகின்றனர்.

நற்செய்தி வாசகத்தில் பாவம் என்ற இருளால் மனுக்குலம் சூழப்பட்டிருக்கின்றது. கடவுளின் ஒரே திருமகனின் வருகை இருளை அகற்றி ஒளியைத் தருகின்றது.

கடவுளை விட்டு தூரமாக இருந்தவர்கள் மீண்டும் கடவுளோடு இணைந்திருக்கின்றனர்.

இணைந்திருத்தலின் மகிழ்ச்சி வீடுதிரும்புவதிலும், நிலைவாழ்வு பெறுவதிலும் புத்துயிர் பெறுகிறது.

இறுதியாக,

இன்று நான் ஒரே ஒரு கேள்வியைக் கேட்கின்றேன். கடவுளுக்கும் எனக்கும் உள்ள தொப்புள் கொடியை நான் எப்போதெல்லாம் அறுத்துக் கொள்கிறேன்? நானாக அறுத்துக்கொண்டு அவரை வி;ட்டு அகலும்போதெல்லாம் என்னிடம் வாழ்வும், இருப்பும், இயக்கமும் குறைவுபடுமே. அதை நான் எப்படி சரி செய்கின்றேன்?

அவரைவிட்டு நான் என்னை வெட்டிக்கொள்ளும்போதெல்லாம் நான் வேறு எவற்றோடு என்னை இணைத்துக்கொள்கிறேன்?

நான் அவரோடு இணைந்திருக்கும்போது மகிழ்ச்சியும், மற்றவற்றோடு இணைந்திருக்கும்போது வெறும் இன்பமும் மட்டுமே கிடைக்கிறது என்றால், நான் பின்னதிலிருந்து முன்னது நோக்கிச் செல்ல துணிச்சல் பெறாதது ஏன்?

நான் அன்றாடம் அணைத்துவிடத் துடிக்கும் வெளிச்சம் எது?

கடவுளோடு இணைந்திருத்தல் என்னும் அவரின் கொடையும், நம் கடமையும் நம்மை மகிழ்ச்சியாகட்டும் - இன்றும், என்றும்!

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
Archdiocese of Madurai

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!