|
Year
3 |
|
பாஸ்கா காலம் மூன்றாம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள்
கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் அவரை உயிரோடு எழுப்பினார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 3: 13-15, 17-19
அந்நாள்களில் பேதுரு மக்களை நோக்கிக் கூறியது: ஆபிரகாம், ஈசாக்கு,
யாக்கோபு என்னும் நம் மூதாதையரின் கடவுள் தம் ஊழியர் இயேசுவைப்
பெருமைப்படுத்தினார். ஆனால் நீங்கள் அவரைப் புறக்கணித்துப்
பிலாத்திடம் ஒப்புவித்துவிட்டீர்கள். அவன் அவருக்கு விடுதலைத்
தீர்ப்பு அளிக்க முயன்றபோதும் நீங்கள் அவரை மறுதலித்தீர்கள்.
நீங்கள் தூய்மையும் நேர்மையுமானவரை மறுதலித்துக் கொலையாளியை
விடுதலை செய்யுமாறு வேண்டிக்கொண்டீர்கள். வாழ்வுக்கு ஊற்றானவரை
நீங்கள் கொன்றுவிட்டீர்கள்.
ஆனால் கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார். இதற்கு நாங்கள்
சாட்சிகள்.
அன்பர்களே, நீங்களும் உங்கள் தலைவர்களும் அறியாமையினாலேயே இப்படிச்
செய்துவிட்டீர்கள் என எனக்குத் தெரியும்.
ஆனால் கடவுள், தம் மெசியா துன்புற வேண்டும் என்று இறைவாக்கினர்
அனைவர் வாயிலாகவும் முன்னறிவித்ததை இவ்வாறு நிறைவேற்றினார்.
எனவே உங்கள் பாவங்கள் போக்கப்படும்பொருட்டு மனம் மாறி அவரிடம்
திரும்புங்கள்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 4: 1. 6. 8 (பல்லவி: 6b காண்க)
Mp3
=================================================================================
பல்லவி: உமது முகத்தின் ஒளி எம்மீது வீசச் செய்யும் ஆண்டவரே.
அல்லது: அல்லேலூயா.
1 எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே, நான் மன்றாடும்போது எனக்குப்
பதிலளித்தருளும்; நான் நெருக்கடியில் இருந்தபோது, நீர் எனக்குத்
துணைபுரிந்தீர்; இப்போதும் எனக்கு இரங்கி, என் வேண்டுதலுக்குச்
செவிசாய்த்தருளும். பல்லவி
6 `நலமானதை எங்களுக்கு அருள யார் உளர்?" எனக் கேட்பவர் பலர்.
ஆண்டவரே, எங்கள்மீது உமது முகத்தின் ஒளி வீசும்படிச் செய்தருளும்.
பல்லவி
8 இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்; ஏனெனில், ஆண்டவரே,
நான் தனிமையாய் இருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச்
செய்கின்றீர். பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
நம் பாவங்களுக்குக் கழுவாய் அவரே; அனைத்துலகின் பாவங்களுக்கும்
கழுவாய் அவரே.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்
2: 1-5
என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என இதை
நான் உங்களுக்கு எழுதுகிறேன்; ஆயினும் ஒருவர் பாவம் செய்ய
நேர்ந்தால் தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார்.
அவரே மாசற்ற இயேசு கிறிஸ்து.
நம் பாவங்களுக்குக் கழுவாய் அவரே; நம் பாவங்களுக்கு மட்டும் அல்ல,
அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் அவரே. அவருடைய கட்டளைகளை
நாம் கடைப்பிடித்தால் நாம் அவரை அறிந்துகொண்டோம் என்பது உறுதியாகத்
தெரியும்.
"அவரை எனக்குத் தெரியும்" எனச் சொல்லிக்கொண்டு அவருடைய கட்டளைகளைக்
கடைப்பிடிக்காதோர் பொய்யர்; உண்மை அவர்களிடம் இராது.
ஆனால் அவரது வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு
உண்மையாகவே நிறைவடைகிறது; நாம் அவரோடு இணைந்து இருக்கிறோம் என
அதனால் அறிந்துகொள்ளலாம்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
லூக் 24: 32
அல்லேலூயா, அல்லேலூயா!
ஆண்டவராகிய இயேசுவே, மறைநூலை எங்களுக்கு விளக்கியருளும். நீர்
எம்மோடு பேசும்போது எம் உள்ளம் பற்றி எரியச் செய்தருளும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி
வாசகம்
=================================================================================
மெசியா துன்புற்று, இறந்து, மூன்றாம்
நாள் உயிர்த்தெழ வேண்டும் என்று எழுதியுள்ளது.
+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
24: 35-48
அக்காலத்தில் சீடர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும், இயேசு அப்பத்தைப்
பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கு
இருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில்
நின்று, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று அவர்களை
வாழ்த்தினார்.
அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய்
நினைத்தார்கள்.
அதற்கு அவர், "நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள்
உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள்? என் கைகளையும் என் கால்களையும்
பாருங்கள், நானேதான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும்
சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே"
என்று அவர்களிடம் கூறினார்; இப்படிச் சொல்லித் தம் கைகளையும்
கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி
இருந்தார்கள்.
அப்போது அவர் அவர்களிடம், "உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும்
உண்டா?" என்று கேட்டார்.
அவர்கள் வேகவைத்த மீன் துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள். அதை
அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார்.
பின்பு அவர் அவர்களைப் பார்த்து, "மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர்
நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப்பற்றி எழுதப்பட்டுள்ள
அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான் உங்களோடு இருந்தபோதே உங்களுக்குச்
சொல்லியிருந்தேனே" என்றார்; அப்போது மறைநூலைப்
புரிந்துகொள்ளுமாறு அவர்களுடைய மனக் கண்களைத் திறந்தார்.
அவர் அவர்களிடம்,
"மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ
வேண்டும் என்றும், பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் என எருசலேம்
தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட
வேண்டும் என்றும் எழுதியுள்ளது.
இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்" என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை
"இயேசுவைக் கண்டதும், சீடர்கள் திகிலுற்று அச்சம் நிறைந்தவர்களாய்,
ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள்" அன்று, அச்சம் சீடர்களைக்
ஆட்கொண்டதுபோல். இன்று, நாமும் பலவித அச்சத்துடன் வாழ்ந்;து வருகிறோம்.
"அச்சமில்லை, அச்சமில்லை, உச்சிமீது வானிடிந்து வீழுகின்றபோதிலும்
அச்சமென்பதில்லையே" என கவிஞர் பாரதி பாடினார். அத்தகைய மனநிலை
நம்மிலே வேண்டும். "அச்சம் என்பது பகுத்தறிவின் துணையை நாம்
கைவிடுவதே"(சாஞா.17:12). நம் வாழ்வில் தேவையற்ற காரியங்களுக்கெல்லாம்
அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால், நம் அச்சம் ஆண்டவரிடம்
மட்டுமே இருக்க வேண்டும். அவர் ஒருவருக்கே நாம் அஞ்ச வேண்டும்.
சீமோன் பேதுரு, கடல்மீது நடந்து சென்றபோது பெருங்காற்று அடித்ததும்
அஞ்ச மூழ்கும்போது, "ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்" என்றார் .ஆண்டவர்
அவரோடு இருந்தபோதும் அவர் நம்பிக்கை இழந்து, கத்தினார். நாமும்
பல நேரங்களில் அப்படித்தான்; செயல்படுகிறோம். "ஆண்டவர் என்பக்கம்
இருக்க நாம் ஏன் அஞ்ச வேண்டும், மனிதர் எனக்கு என்ன செய்ய
முடியும்"(திருப்பா.118:06)
பாவகாரியங்களைச் செய்ய எண்ணும்போது
மட்டுமே நமக்கு அச்சம் வேண்டும். "ஆண்டவரின் கொள்ளும் அச்சம்
பாவங்களை விரட்டி விடுகிறது" (சீராக்01:21). இதுவே உண்மை. இதை
உணர்ந்து, ஆன்மாவையும், உடலையும் நரகத்தில் வீழ்த்த வல்லவருக்கே
அஞ்சிடுவோம். பாவங்களிலிருந்து விடுபட்டு, ஆண்டவர் என்னுடன் இருக்க
எதற்கும் அஞ்சிடேன்" என்ற ஆழமான நம்பிக்கையுடன் வாழ்வைத் தொடர்வோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 1
=================================================================================
மனம்மாறி ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்!
பிரபல சிறுகதை எழுத்தாளரான ஓ. ஹென்றி சொல்லக்கூடிய ஒரு
கதை.
ஒரு கிராமத்தில் சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் அவ்வூரில்
இருந்த பள்ளிக்கூடத்தில் படித்து வந்தான். அந்தச் சிறுவன்
படித்துவந்த அதே வகுப்பில் சிறுமி ஒருத்தி இருந்தாள். அவர்கள்
இருவரும் ஒருவர் மற்றவர்மீது மதிப்பும், மரியாதையும்,
உள்ளார்ந்த அன்பும் வைத்திருந்தார்கள். இருவரும்
பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வேறுவேறு ஊர்களுக்குப்
போய்விட்டார்கள். சிறுவன் வளர்ந்து தன்னுடைய கிராமத்திற்கு
அருகே இருந்த ஒரு நகரத்திற்கு குடிபெயர்ந்து போனான். அங்கு
அவனுக்கு புதிய நண்பர்கள், அதுவும் தீய வழியில் நடக்கும்
நண்பர்கள் கிடைத்தார்கள். அதனால் அவன் சிறுது காலத்திலேயே
கைதேர்ந்த பிக்பாக்கெட் திருடனாக மாறிப்போனான்.
ஒருநாள் அவன் ஒரு மூதாட்டியிடமிருந்து பர்சை திருடிக்கொண்டு
ஆளில்லாத ஒரு வீதியின் வழியாக சென்றுகொண்டிருந்தான். அப்போது
திடிரென்று அவனுக்கு எதிரே பள்ளிக்கூடத்தில் அவனோடு படித்த
பெண் வந்துகொண்டிருந்தாள். அவன் அவளைப் பார்த்தபோது, அவளது
முகம் மிகப் பிரகாசமாகவும், அருள்பொங்கி வழியக் கூடியதாகவும்
இருந்தது. அப்போது அவன் அவளுக்கு முன்பாக நிற்பதற்கு
அருகதையற்றவற்றவனாக உணர்ந்து, தன்னை அருகில் இருந்த ஒரு
மின்கம்பத்திற்குப் பின்னால் மறைத்துக்கொண்டான்.
அவள் அவனைக் கடந்துபோன பின்பு, தன்னுடைய வாழ்வை ஆய்வுக்கு
உட்படுத்திப் பார்த்தான். அது கடவுளுக்கு உகந்த வாழ்க்கை இல்லை
என்பதை உணர்ந்தான். எனவே, அவன் வானத்தை அண்ணார்ந்து பார்த்து,
"கடவுளே நான் மனம்மாறவேண்டும்" என்று மிக உருக்கமாக
ஜெபித்தான். அவன் செய்த ஜெபம் அவனுக்குள் ஒரு மாற்றத்தைக்
கொண்டு வரவே, அவன் தான் செய்துவந்த திருட்டு வேலையை
விட்டுவிட்டு மனம்திரும்பிய மனிதனாக வாழத் தொடங்கினான்.
கதையில் வரும் அந்தப் பெண்ணின் முகத்திலிருந்து வெளிப்பட்ட
பிரகாசமான ஒளி திருட்டுவேலையில் ஈடுபட்டிருந்த பையனுடைய
வாழ்க்கையில் மனமாற்றத்தைக் கொண்டுவந்ததுபோல, பேதுரு
திரண்டிருந்த மக்களிடம், அவர்கள் இயேசுவுக்கு செய்த தீமையை
எடுத்துச் சொன்னபோது, அவர்கள் மனம்வருந்தி, மனம்திருந்தி
திருமுழுக்குப் பெறுகின்றார்கள்.
பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறான இன்று நாம் படிக்கக்கேட்ட
வாசகங்கள்
"மனம்மாறி ஆண்டவரிடம் திரும்பிவாருங்கள்" என்ற
செய்தியை நமக்கு எடுத்துரைக்கின்றன. நாம் அதனைக் குறித்து
இப்போது சற்று ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்
வாசகத்தில் பேதுரு திரண்டிருந்த மக்களைப் பார்த்து, "நீங்கள்
வாழ்வுக்கு ஊற்றானவரைக் கொன்றுபோட்டுவிட்டீர்கள். ஆனால்,
கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார். இதற்கு நாங்கள்
சாட்சிகள். எனவே, உங்கள் பாவங்கள் போக்கும் பொருட்டு மனம்மாறி
அவரிடம் திரும்புங்கள்" என்கின்றார். பேதுரு மக்களுக்கு
அறிவித்த செய்தியைக் கேட்டு, மக்கள் மனம்மாறி, திருமுழுக்குப்
பெறுகின்றார்கள்.
இங்கு நாம் நம்முடைய கவனத்தில் கொள்ளவேண்டிய ஆழமான செய்தி
என்னவெனில், திருத்தூதர்களின் தலைவராகிய பேதுரு, மக்களிடம்
அவர்கள் செய்த குற்றத்தை ஓர் இறைவாக்கினரைப் போன்று
எடுத்துரைக்கின்றார். அவர் அறிவித்த செய்தியைக் கேட்டு மக்கள்
தங்களுடைய குற்றங்களை உணர்ந்து மனம்மாறுகின்றார்கள். ஆகையால்
திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் ஓர் இறைவாக்கினரைப் போன்று
இறைவனுடைய வார்த்தையை மக்களுக்கு எடுத்துரைத்து, அவர்களை
மனம்மாற்றத்திற்கு இட்டுச்செல்லவேண்டும் என்பதுதான் காலத்தின்
கட்டாயமாக இருக்கின்றது.
ஓர் இறைவாக்கினருக்கு உள்ள கடமை என்னவென்று இறைவாக்கினர்
எசேக்கியேல் மிக அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றார்,
"தீயோனிடம் நான், "ஓ தீயோரே! நீங்கள் உறுதியாகச் சாவீர்கள்" என்று சொல்ல, அத்தீயோர் தம் வழியிலிருந்து திரும்பும்படி நீ
அவர்களை எச்சரிக்காவிடில், அத்தீயோர் தம் குற்றத்திலேயே
சாவார்; ஆனால், அவர்களது இரத்ததப்பழியை உன் மேலேயே
சுமத்துவேன். ஆனால், தீயோரை அவர்கள் தம் வழியிலிருந்து திரும்ப
வேண்டுமென்று நீ எச்சரித்தும் அவர்கள் தம் வழியிலிருந்து
திருமாவிட்டால், அவர்கள் தம் குற்றத்திலேயே சாவர். நீயோ, உன்
உயிரைக் காத்துக்கொள்வாய்" (எசே 33:8) என்று ஆண்டவராகிய கடவுள்
கூறுவதாக இறைவாக்கினர் கூறுவார்.
ஆம், தீய, பாவ வழியில் நடக்கும் ஒருவரிடம் அவருடைய குற்றத்தை
அவரிடம் எடுத்துச் சொல்லி, அவரை மனம்திருந்தி வாழச்
செய்வதுதான் ஓர் இறைவாக்கினருக்கு இருக்கின்ற தலையாய
கடமையாகும். அதைச் செய்யாதபோது ஓர் இறைவாக்கினர் தன்னுடைய
கடமையிலிருந்து தவறுகின்றார் என்பதுதான் யாராலும்
மறுக்கமுடியாத உண்மையாக இருக்கின்றது. முதல் வாசகத்தில் பேதுரு
ஓர் இறைவாக்கினரைப் போன்று செயல்பட்டு, அவர்களை
மனமாற்றத்திற்கு இட்டுச் செல்கின்றார்.
பேதுரு இத்தகைய
நெறியை - மக்களை மனமாற்றத்திற்கு இட்டுச்
செல்கின்ற நெறியை
- யாரிடமிருந்து கற்றுக்கொண்டார் என்று
பார்க்கும்போது, அதனை ஆண்டவர் இயேசுவிடமிருந்துதான்
கற்றிருக்கின்றார் என நாம் உறுதியாகச் சொல்கின்றார்.
ஏனென்றால், இன்றைய நற்செய்தி வாசகத்தில் உயிர்த்த ஆண்டவர்
இயேசு, தன்னுடைய சீடர்களிடம், "மெசியா துன்புற்று இறந்து
மூன்றாம் நாள் உயிர்த்தெழவேண்டும் என்றும்,
"பாவ மன்னிப்புப்
பெற மனம் மாறுங்கள்" என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும்
அவருடைய பெயரால் பறைசாற்றப்படவேண்டும் என்றும் எழுதியுள்ளது.
இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்" என்கின்றார். இயேசுவின் இந்த
வார்த்தையை (பாவ மன்னிப்புப் பெற மனம்மாறுங்கள்)
உள்வாங்கிக்கொண்டுதான் பேதுரு மக்களை மனம்மாறுவதற்கு அழைப்பு
விடுக்கின்றார்.
அவர் மக்களை மனமாற்றத்திற்கு அழைப்பதற்கு முன்னதாக, இயேசுவை
மறுதலித்த குற்றத்திற்காக மனம் வருந்தி, மனம்
திரும்புகின்றார். ஆகையால், ஓர் இறைவாக்கினர்/ இறையடியார்/
இறைவாக்கை எடுத்துரைப்பவர் மக்களுக்கு மனமாற்றச் செய்தியை
எடுத்துரைக்கும் முன்னதாக, அவர் மனம்திருந்தி கடவுளுக்கு
ஏற்புடையவராக இருக்கவேண்டும்.
மனமாற்றத்திற்கு ஆண்டவர் இயேசு எதற்கு இவ்வளவு முக்கியத்துவம்
கொடுக்கின்றார் என்று சிந்தித்துப் பார்க்கின்றபோது, நாம்
இறைவனின் திருமுன் எப்போதும் தூயவர்களாக இருக்கவேண்டும் (மத்
5:8) என்பதலாயே மனமாற்றத்திற்கு இயேசு இவ்வளவு முக்கியத்துவம்
கொடுக்கின்றார். எனவே, நாம் ஒவ்வொருவரும் மனமாறிய மக்களாக வாழ
முயற்சி எடுக்கவேண்டும்.
ஒவ்வொருவரும் மனம் மாறவேண்டும், ஏன் மனமாற்றச் செய்தியை
அறிவிக்கின்றவரும் மனம் மாறவேண்டும் என்று சிந்தித்த நாம்,
இன்றைய இரண்டாம் வாசகத்தில் யோவான் தன்னுடைய முதல்
திருமுகத்தில் கூறுகின்ற செய்தியையும் ஆழமாக சிந்தித்துப்
பார்க்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். அவர் கூறுகின்றார்,
"நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என இதை நான் உங்களுக்கு
எழுதுகின்றேன்" என்று. மனமாற்றம் முக்கியமானதுதான். ஆனால்,
பாவம் செய்யாதிருத்தல், அதைவிட முக்கியமாகும். புனிதையான மரிய
கொரற்றி ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார், "நான் பாவம்
செய்வதைவிடவும் சாவதே மேல்" என்று. எவ்வளவு அர்த்தம் பொதிந்த
வார்த்தைகள். பாவம் செய்வதற்கு நாம் அஞ்சவேண்டும். பாவம்
செய்வதைவிடவும் சாவதே மேல் என்ற எண்ணத்தோடு வாழவேண்டும்.
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஏழை மாணவன் ஒருவன்,
ஒவ்வொருநாளும் கல்லூரி முடிந்தததும் தெரிந்தவர் ஒருவருடைய பழக்
கடையில் பகுதி நேர வேலை பார்த்துவந்தான். அதன்மூலம்
கிடைக்கின்ற வருமானத்தை வைத்து தன்னுடைய குடும்பத்தின் சுமையை
ஓரளவு குறைத்து வந்தான்.
ஒருநாள் கடைமுதலாளி வீட்டிற்குச் சென்றிருந்த நேரம், அவன்
மட்டும் கடையில் தனியாக இருந்தான். அப்போது நடுத்தர வயதில்
இருந்த ஒருவர் வந்தார். அவர் அந்த கல்லூரி மாணவனிடம், "தம்பி
ஒருகிலோ ஆப்பிள் பழம் போடு" என்றார். அவனும் சரியாக ஒரு கிலோ
ஆப்பிள் பழங்களை எடைபார்க்கும் எந்திரத்தில் வைத்து, இருத்து,
அவருக்குப் போட்டான். அவரோ "என்ன தம்பி ஒரு கிலோ ஆப்பிள்
என்றால், சரியாக ஒருகிலோ ஆப்பிள் போடுகின்றாயே, இதற்கு முன்பாக
இங்கே உதவிக்கு இருந்த தம்பியெல்லாம் ஒரு கிலோ என்றால்
ஒன்றரைக் கிலோ பழங்களைப் போடுவார், நானும் அவருக்கு கொஞ்சம்
பணம்தருவேன். நீ என்னடாவென்றால், இப்படிச் செய்கின்றாயே" என்று
அவனிடம் குறைபட்டுக் கொண்டார்.
அதற்கு அவன், "என்னால் அப்படியெல்லாம் செய்ய முடியாதைய்யா"
என்றான். "ஏன் தம்பி, அதில் என்ன பிரச்சனை?" என்று இழுத்தார்.
அவனோ, "என்னால் இது போன்ற காரியங்களைச் செய்ய முடியாது,
ஏனென்றால் நான் ஒரு கிறிஸ்தவன்" என்றான். வந்தவர் எதுவும்
பேசாமல் தன்னுடைய நடையைக் கட்டினார்.
கிறிஸ்தவர்கள் என்றால், பாவம் செய்வதற்கு அஞ்ச வேண்டும்.
அதைதான் மேலே உள்ள நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. பாவம்
செய்யாமல் வாழ்வதுதான் இறைவனின் விருப்பமும் கூட, இப்படி பாவம்
செய்யாது வாழ்பவர்கள் கடவுளை அறிந்திருக்கின்றார்கள். கடவுளை
அறிந்தவர்களை, அவரை செய்பவர்களைக் கடவுளும் அன்பும்
செய்கின்றார் என்பதுதான் உண்மை (இரண்டாம் வாசகம்.)
ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், பாவம் செய்யாது, நன்மை
செய்யக் கற்றுக்கொள்வோம். ஒருவேளை பாவம் செய்தாலும்
பாவத்திற்கு மனம்வருந்துவோம். இறைவனுக்கு உகந்த வாழ்க்கை
வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 2
=================================================================================
நலமானதை எங்களுக்கு அருள்பவர் யார்?
உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் உண்மையான அன்பு உள்ளங்களே, பாஸ்கா
காலத்தின் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமையில் அடியெடுத்து
வைத்திருக்கிறோம் . இந்நாளில் எம்மாவூஸ் சீடர்களோடு உடன் பயணிப்பவர்களாய்,
உயிர்த்த இயேசுவின் தரிசனம் பெறுபவர்களாய் வாழ நாம் அழைக்கப்படுகிறோம்.
இயேசுவோடு எம்மாவூஸுக்கு பயணம் செய்த சீடர்கள் வழியில் இயேசுவைக்
கண்டு, குறிப்பாக அப்பம் பிடும் செயல் மூலம் அவரைக்கண்டு
கொண்டு எருசலேம் திரும்புகின்றனர். மற்ற சீடர்களோடு தங்களது அனுபவத்தை
பகிர்ந்து கொண்டிருக்கும் வேளையில் இயேசு அவர்கள் அனைவருக்கும்
காட்சியளிக்கிறார். எம்மாவூஸ் நோக்கிப் புறப்பட்ட அவர்கள் பயணம்
நினைத்தது போல் முடியவில்லை. வெற்றி பெறவில்லை. ஆனால் அதுவே ஓர்
மிகப்பெரிய அனுபவமாக மாறி அவர்கள் வாழ்வை வெற்றி பெற வைத்தது.
உயிர்த்த ஆண்டவரின் ஆற்றலும் அது தரும் அனுபவமும் நமது
வாழ்க்கையை , வாழ்க்கைப்பாதையை மாற்றிப் போடக்கூடிய அளவுக்கு
வல்லமை வாய்ந்தது என்பதே ஆணித்தரமான உண்மை.
காணொளி ஒன்றில் கண்ட செய்தி ஒன்றினைக் கூறி எனது சிந்தனைகளை உங்களுடன்
பகிர விரும்புகிறேன். தொலைதூர நெடுஞ்சாலைப் பயணம். இளம் தம்பதியர்
இருவர் தங்களது மகிழுந்தில் பயணம் செய்து கொண்டிருக்கின்றனர்.
இருமருங்கும் காட்டு மரஞ்செடிகொடிகள், அடைய வேண்டிய இலக்கை
நோக்கிய பயணம், இனிய இசை என விரைந்து செல்கிறது மகிழுந்து.
திடீரென்று சாலையின் நடுவில் ஒரு பெண், கை கால் தலையில் அடிபட்டு
ரத்த வெள்ளமாய் காட்சியளிக்கிறாள். கண்களில் கண்ணீர் மல்க, கை
கூப்பி உதவி கேட்டு மன்றாடுகிறாள். இளகிய மனம் கொண்ட அவர்கள்
வண்டியை விட்டு இறங்கி உதவ விரைகின்றனர். தாயானவள் தூரத்தில்
தெரிந்த ஒரு வண்டியைக்காட்டி கண்ணீர் சிந்துகிறாள். விரைந்து
சென்று விபரம் என்னவென்று அறிகின்றனர். நெடுஞ்சாலையில் பயணித்துக்
கொண்டிருந்த மகிழுந்து தடம் மாறி காட்டு மரத்தில் மோதி விபத்துக்கு
உள்ளாகி இருக்கிறது. வண்டியை ஓட்டி வந்த பெண் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்து விடுகிறார். மோதிய வேகத்தில் வண்டியின் ஜன்னல்களும்
கதவுகளும் இறுக மூடிக்கொள்ள, வண்டியினுள்ளே ஒரு குழந்தையானது
மூச்சுவிட சிரமப்பட்டு உயிருக்காக போராடிக்கொண்டிருக்கிறது.
சூழ்நிலை புரிந்த தம்பதியினர், கண்ணாடிகளை உடைத்து குழந்தையைக்
காப்பாற்றுகின்றனர். ஓட்டுநர் இடத்தில் அமர்ந்தவாறு இறந்திருந்த
பெண்ணின் முகத்தைப் பார்த்ததும் திடுக்கென்று இருந்தது அவர்களுக்கு
. ஏனெனில் எந்தப் பெண் தங்களது வண்டியை நிறுத்தி உதவி கேட்டு
கண்ணீர் சிந்தினாரோ, அந்த பெண்ணே ஓட்டுநர் இடத்தில் இறந்து கிடந்தார்.
அக்குழந்தையின் தாயே அவர். தான் இறந்த பின்பும் தன் குழந்தையின்
உயிரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என துடிப்பது தாயின்
உள்ளம் மட்டுமே. ஆவியாக மாறினாலும் தாய் எந்நிலையிலும் தாய்
தான் என்பதை இந்நிகழ்வு நமக்கு நினைவூட்டுகிறது. தாயின் அன்புக்கு
ஈடாக இவ்வுலகில் எதையும் கூற முடியாது. அதே தாயன்பைத் தான் இன்றைய
விவிலிய நிகழ்வில் இயேசுவினிடத்தில் நாம் காண்கிறோம்.
பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாய்க்கு இணையான பாசத்தை
மூன்றாண்டுகாலம் தன் சீடர்கள் மேல் காட்டியவர் இயேசு. சிறு குழந்தை
போல் அவர்களுக்கு எல்லாவிதமான பயிற்சியும் வாய்ப்பும் கொடுத்து
வளர்த்தவர். தான் இறந்த பின்பும் தனது சீடர்கள் நலமாக வாழ
வேண்டும் என்று எண்ணியவர், விரும்பியவர். எனவே தான் யூதர்களின்
மிரட்டல், உரோமை அரசின் அதிகார அடக்குமுறை, தலைமை குருக்களின்
கண்காணிப்பு, போன்ற கெடுபிடிகளுக்கு மத்தியில் தங்களுக்கு யார்
உதவுவார்? என்று எண்ணி வருந்திய அவர்களுக்கு மகிழ்வளிக்க உயிர்த்த
இயேசு காட்சியளிக்கிறார். இன்றைய திருப்பாடல் வரிகளில் வருவது
போல நலமானதை எங்களுக்கு அருள்பவர் யார்? என எண்ணி வருந்திய அவர்களுக்கு
நம்பிக்கையூட்டி அருள் ஆசீர் தருகிறார்.
வாழ்வில் சவால்களை சந்திக்கின்ற மனிதர்கள் ஏராளம். அவர்கள் அனைவரின்
மிக முக்கியமான கேள்விகளில் ஒன்று. எங்களுக்கு நன்மை செய்பவர்
யார்? என்பதே. இன்று தமிழக மக்களாகிய நம் அனைவர் மனங்களிலும்
எழுந்திருக்கக்கூடிய கேள்வியும் இதுதான். ஜல்லிக்கட்டு,
ஸ்டெர்லைட், காவிரி நதிநீர் மேலாண்மை, ஹைட்ரோகார்பன், மீத்தேன்
என நாம் அன்றாடம் சந்திக்கும் சவால்கள் ஏராளம். இது அனைத்திலுமிருந்து
நம்மை மீட்பவர் யார்? இத்தனை தீமைகளுக்கும் மத்தியில் எம் தமிழக
மக்களுக்கு நன்மை தருவது யார் என்று ஏங்கிக்கொண்டிருக்கிறோம்,
எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். நமக்கு உயிர்த்த இயேசுவாக
தோன்றி திடமளிப்பவர் யார்? அவர் அனுபவமாக மாறப்போவது எது?
சிந்திப்போம்.
இயேசு சீடர்களோடு அமர்ந்து உண்கிறார். அன்றைய காலத்து எளிய மக்களும்
உண்ணும் உணவு மீன். இயேசு பிறக்கும் போது மட்டுமல்ல, இறந்து உயிர்த்த
பின்பும் எளியவராகவே வாழ்கிறார் என்பதை உணர்த்துகிறது இச்செயல்.
கொஞ்சம் பணமும் பதவியும் புகழும் வந்தாலே, பேச்சும் மிடுக்கும்
தோரணையும் மாறிவிடும் இக்காலத்தில் இயேசு இறந்து உயிர்த்து இறைமகனாக
மாட்சி பெற்றும், எளியவராகவே காட்சி தருகிறார். உறவினர்கள்
வீட்டு நிகழ்வில் கலந்து கொள்ளும் போது கை நனைத்தல் என்பது மிகவும்
முக்கியமான ஒன்றாக நமது ஊர்களில் கருதப்படும். விருந்தில் கை
நனைக்காமல் அதாவது உணவு உண்ணாமல் ஒருவர் சென்றுவிட்டாரென்றால்
விழா கொண்டாடும் நபரோடு அவருக்கு இனி உறவு இல்லை என்று அர்த்தம்.
அதுவே விருந்து உண்டு மகிழ்ந்தார் என்றால் உறவு புதுப்பிக்கப்பட்டு
பலப்படுத்தப்படுகிறது ,தொடர்கிறது என்று அர்த்தம்.
சீடர்கள் தங்களது உயிர்த்த இயேசுவின் அனுபவத்தை ஒருவரோடு ஒருவர்
பகிர்ந்து மகிழ்ந்து கொண்டிருக்கும் தருணம், இயேசு அவர்கள் மகிழ்வில்
பங்கு கொள்கிறார். தான் இறந்து உயிர்த்த பின்பும் அவர்களுடனான
உறவு நீடிக்கும், தொடரும் என்பதை வெளிப்படுத்தும் அடையாளமாக
அவர்களோடு அமர்ந்து உணவு உண்கிறார்.அதே போல் அனுதினமும் திவ்ய
நற்கருணை மூலமாக நம்முள் வந்து தங்கி, நம்முடனான உறவையும்
புதுப்பித்துக் கொள்கிறார்.
நாம் அதை உணர்கிறோமா? அவருடனான உறவைப் புதுப்பிக்கின்றோமா?
அன்று சீடர்களுக்கு தோன்றி கலங்காதீர்கள் பயம்கொள்ளாதீர்கள் என்று
கூறி திடப்படுத்தியவர், எலும்பும் சதையுமான தனது உடலைத் தொட்டு
நம்பிக்கை பெறச்செய்தவர், இன்று நமக்கும் திட மூட்டுகிறார். நம்பிக்கை
தருகிறார். அன்று உண்மைக்கு சாட்சியம் பகிரவே நான் வந்தேன் என்று
கூறியவர், இன்று இக்காலத்து சீடர்களாகிய நம்மைப்பார்த்து
சொல்கிறார் நீங்களே இதற்கு சாட்சிகள் என்று. இன்றைய நமது ஒவ்வொரு
செயல்பாடுகளும் நமது வருங்கால சந்ததியினருக்கு சாட்சியமே.
சாட்சியம் சொல்லுதல் என்பது கொடை ஒரு புது வாழ்வு. சாட்சியம்
கூறுபவனுக்கும் அதனால் பயன் பெறுபவனுக்கும் ஒரு கொடையாக புது
வாழ்வளிப்பதாக மாறுகிறது. நமது வாழ்வு புது வாழ்வாக மாற,
கொடையாக பொலிவடைய நாம் உண்மையின் சாட்சிகளாக மாற வேண்டும்.
எவ்வாறு உயிர்த்த இயேசு திகிலும் மனக்கலக்கமும் கொண்டிருந்த சீடர்களுக்கு
தைரியமும் மனத்திடமும் கொடுத்தாரோ, அதே போல் நமக்கும் தருவார்
என நம்புவோம். எங்களுக்குத் தலைவராக இருந்து வழிநடத்திய இயேசு
இறந்து விட்டார் . இனியார் எங்களுக்கு தலைமை தாங்குவார்? என்று
எண்ணி கலங்கிய சீடர்களையே தலைவர்களாக மாற்றுகிறார். பாவ மன்னிப்பு
பெற மனம் மாறுங்கள் என்று கூறி உலகெங்கும் நற்செய்தியைப் பறைசாற்ற
சீடர்களாக அல்ல, தலைவர்களாக அல்ல, மக்கள் பணி செய்யும் பணியாளர்களாக
அனுப்புகிறார். அவர்கள் தலைவர்களாக, முன் மாதிரிகைகளாக உருமாறுகிறார்கள்.
நாமும் உருமாறுவோம். நலமானதைப்பெற, நன்மையை பிறருக்கு தர உண்மையின்
சாட்சிகளாவோம்.
நலமானதை நமக்கு அருள்பவர் இறைவன் ஒருவரே. அந்த இறைவனின் அருளை
நாம் பெற உயிர்த்த இயேசுவின் திருமுக ஒளி நம்மீது படுபவர்களாக
நாம் மாற வேண்டும். பள்ளிப் பருவத்தில் குழி ஆடி, குவி ஆடி எனும்
இரண்டு லென்ஸுகளைப் பற்றி நாம் படித்திருப்போம். ஒன்று ஒளியை
உள்வாங்கி பிரதிபலிக்கும் . மற்றொன்று ஒளியைக் குவித்து
நெருப்பாக மாற்றும். நாம் உயிர்த்த இயேசுவின் திருமுக ஒளியைப்
பெறுபவர்களாக மாறும்போது அதை பிறருக்கு பிரதிபலிக்கும் லென்சாகவும்,
அவ்வொளியால் தீமையை சுட்டெரித்து சுடர்விட்டு எரியும் நெருப்பாகவும்
மாறவேண்டும். தான் மட்டும் நலமாய் இருந்தால் போதும் என்று
நினைப்பவரைக் காட்டிலும் தானும் நலமாய் வாழ்ந்து ,தன்னைச்சுற்றிலும்
இருப்பவர்களையும் நலமாய் வாழ வைக்க எண்ணும் நல் இயேசுக்களாய்
வாழ முற்படுவோம். நலமனைத்தையும் தரும் உயிர்ப்பின் ஆற்றல் நம்மேலும்
நம் குடும்பத்தினர் அனைவர் மேலும் இருந்து வழிநடத்துவதாக ஆமென்.
மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 3
=================================================================================
* நெருக்கடி மேலாண்மை *
* திருத்தூதர் பணிகள் 3:13-15,17-19 *
* 1 யோவான் 2:1-5 *
* லூக்கா 24:35-48 *
"நான் நெருக்கடியில் இருந்தபோது நீர் எனக்குத் துணைபுரிந்தீர்"
(திபா 4:1) என்னும் இன்றைய பதிலுரைப் பாடலின் வரியோடு நம்
சிந்தனையைத் தொடங்குவோம்.
தாவீதின் புகழ்ப்பா என்று பெயரிடப்பட்டுள்ள திபா 4 தாவீது
அரசர் ஓர் இக்கட்டான சூழலில் இருப்பதாகவும் அந்த இக்கட்டான
சூழலிலிருந்து அவர் வெளிவந்து கடவுளுக்கு நன்றி சொல்வதாகவும்
அமைந்துள்ளது. தாவீது அரசருக்கு இருந்த நெருக்கடி என்னவென்று
வாசகருக்குத் தெரிவதில்லை. ஆனால், "இனி, நான் மன அமைதியுடன்
படுத்துறங்குவேன். ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும்
நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர்" (4:8) என்ற
வரியிலிருந்து தாவீது தனிமை என்னும் நெருக்கடியினால்கூட
அவதியுற்றிருக்கலாம் என்பது தெரிகிறது.
நெருக்கடி ("க்ரைசிஸ்") என்ற வார்த்தையை மையமாக எடுத்து, இந்த
"நெருக்கடியை" எப்படி மேலாண்மை செய்வது என்பதை இன்றைய
இறைவாக்கு வழிபாட்டின் பின்புலத்தில் சிந்திப்போம்.
மேலாண்மையியல் முக்கியமான ஒன்று "நெருக்கடி மேலாண்மை" -
"க்ரைசிஸ் மேனேஜ்மென்ட்"
நாம் எவ்வளவுதான் கரெக்டாக இருந்தாலும் நெருக்கடி வந்தே
தீருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன் ஊருக்குச்
சென்றிருந்தேன். என் ஞானதந்தை அவர்கள் பஞ்சு அள்ளிப்போடும்
எந்திரத்தில் கையைக் கொடுத்து தன் மூன்று விரல்களை இழந்து
கட்டுப்போட்டுக்கொண்டு நின்றார். கட்டுப்போட்ட அந்தக்கையை
பார்த்தவுடன் எனக்கு பயமாக இருந்தது. ஆனால் அவர் ஒன்றும்
நடக்காததபோல எனக்கு கைகொடுக்க என்னை நீட்டி கை நீட்டினார்.
காலையில் எழுதல், உணவு, சைக்கிள் பயணம், வேலை, வீடு, தூக்கம்
என்று இருந்தவர் இப்போது உடல்சார்ந்த நெருக்கடியை
சந்திக்கின்றார். இவருக்கு உடலிலும் நெருக்கடி. இவரின்
வருமானம் நிறுத்தப்படுவதால் குடும்ப உறவிலும் நெருக்கடி.
வேலைக்கு புறப்பட்டு சென்ற அந்த நாளில் அவர் இப்படி ஒரு
நெருக்கடி வரும் என நினைத்திருக்கமாட்டார்.
நெருக்கடிகள் பல நேரங்களில் திடீரென்றுதாம் வருகின்றன. காவிரி
நீர் பிரச்சினை, ஸ்டெர்லைட் ஆலை, குரங்கணி தீ விபத்து என
நெருக்கடிகள் ஒரு சமூகத்தையும் தாக்குகின்றது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் லூக்கா நற்செய்தி நூலின்
இறுதிப்பகுதியை வாசிக்கின்றோம். இந்த வாசகத்தில் மூன்று வகை
நெருக்கடி நிலைகள் இருக்கின்றன:
அ. "இயேசு உயிர்த்தாரா? இல்லையா?"
இயேசுவின் உயிர்ப்பை நாம் நம்புவது மிக எளிது. ஏனெனில் அவரின்
பிறப்பு, பாடுகள், இறப்பு எதையும் நாம் பார்த்ததில்லை. அந்த
வரிசையில் அவரின் உயிர்ப்பும் நமக்கும் பார்த்தாலும்
பார்க்கவில்லை என்றாலும் பிரச்சினை இல்லை. எல்லாவற்றையும்
எளிதாக நம்மால் நம்பிவிட முடியும். ஆனால், இயேசுவின்
திருத்தூதர்களுக்கு அப்படி இல்லை. அவரின் பணிகள் அனைத்திலும்
உடனிருந்த அவர்கள் அவரின் பாடுகள் மற்றும் இறப்பை நேரில்
கண்டவர்கள். உலகின் பார்வையில் ஒரு தோல்வியாக இறந்த ஒருவர்
எப்படி உயிர்க்க முடியும்? இறந்தவர் உயிர்ப்பார்களா? இவர் மற்ற
மனிதர்கள் போல் அல்லரா? இவர் கடவுளா? என்று நிறைய கேள்விகள்
அவர்கள் உள்ளங்களில் எழுந்தன. இந்த நேரத்தில் சிலர் அவர்
உயிர்த்துவிட்டார் என்றும், தாங்கள் அவரைக் கண்டோம் என்றும்
சொன்னது அவர்கள் உள்ளத்தில் இன்னும் நிறைய கேள்விகளை
எழுப்பிவிடுகின்றன. இயேசுவின் இறப்பை ஒட்டி அவருடைய
திருத்தூதர்களையும் கைது செய்வதற்காக நிறைய நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டதாக வரலாற்று அறிஞர் ஃப்ளேவியுஸ் பதிவு
செய்கின்றார். அவர் உயிர்த்துவிட்டதாகச் சொன்னால் இன்னும் அதிக
பிரச்சினைகள் வரும் என்பது அவர்களின் கவலையாக இருந்தது. ஆக,
இயேசு உயிர்த்தாரா? இல்லையா? என்பது முதல் நெருக்கடி.
ஆ. "அவர் உடலா? அல்லது ஆவியா?"
இயேசு இறந்தபோதும், உயிர்த்தபோதும் இறந்தவர்கள் பலர்
உயிர்த்தெழுந்ததாகவும், அவர்கள் எருசலேமில் பல்வேறு இடங்களில்
பல்வேறு நபர்களுக்குத் தோன்றியதாகவும் பதிவு செய்கின்றார்
மத்தேயு நற்செய்தியாளர். இப்படி பலர் உயிர்த்தார்கள் என்றால்
இயேசுவின் உடலை எப்படி தனியாக அடையாளம் காண்பது? அல்லது
அடையாளம் காட்டுவது? அல்லது இயேசு உடலோடு உயிர்த்தாரா? அல்லது
அவர் வெறும் ஆவியா? இந்தப் பின்புலத்தில் இயேசு பூட்டிய
அறைக்குள் நுழைகின்றார். இருந்தாலும் அவர்கள் கண்முன் வேக
வைத்த மீன் ஒன்றையும் உண்கின்றார். இயேசு ஆவி என்றால் அவர்
எப்படி மீன் உண்ண முடியும்? அவர் உடலோடு இருந்தார் என்றால்
அவரால் எப்படி எல்லா இடத்திலும் தோன்ற முடியும்? இந்தக் கேள்வி
அவர்கள் சந்தித்த இரண்டாம் நெருக்கடி.
இ. "இனி நாம் என்ன செய்வது?"
இயேசு கனவு கண்ட, பறைசாற்றிய இறையரசு அப்படியே முடிந்துவிடுமா?
அல்லது தொடருமா? முடிந்தது என்றால் திருத்தூதர்கள் இதுவரை
பெற்றிருந்த அழைப்பு பொருளற்றதாகிவிடுமே. தொடரும் என்றால் அது
எப்படிப்பட்டதாக இருக்கும்? தங்கள் பணி இத்தோடு முடிந்தது
என்றால் தாங்கள் செலவிட்ட மூன்று ஆண்டுகள் உழைப்பு வீணோ?
-
இப்படி நிறைய எண்ணங்கள் உதயமாகி திருத்தூதர்களை மூன்றாம்
நெருக்கடிக்கு தள்ளின.
இவ்வாறாக நெருக்கடி நிலைகளில் இருந்தவர்களை ஆற்றுப்படுத்தவும்,
வழிகாட்டவும் வருகின்றார் இயேசு. இயேசுவின் வழிகாட்டுதல்
மூன்று பரிமாணங்களில் நிகழ்கிறது:
அ. "அமைதி"
திருத்தூதர்களுக்குத் தோன்றுகிற உயிர்த்த இயேசு, "உங்களுக்கு
அமைதி உரித்தாகுக!" என வாழ்த்துகிறார். "உங்களுக்கு அமைதி
உரித்தாகுக" என்பது அரமேயத்தில் வெறும் "ஷலோம்" என்பதுதான்.
யூத மரபில் ஒருவர் மற்றவரைக் காணும்போது, "ஷலோம்" என்று
வாழ்த்துகின்றனர். ஷலோம் என்றால் ஓட்டையில்லாத பானை. அதாவது
ஒழுகாத பானை. பானையில் தண்ணீர் ஊற்றி வைத்து அதில் சின்ன
வெடிப்பு இருந்தால் தண்ணீர் அங்கே வழிந்துவிடும். நெருக்கடி
நிலையில் நமக்கு நிறைய ஆற்றல் லீக்கேஜ் இருக்கும். ஆக, நம்
பானை வெடிப்பு இன்றி "ஷலோம்" (முழுமையாக) இருக்க வேண்டும். ஆக,
ஆற்றல் வழிந்தோடுதல் ("எனர்ஜி லீக்கேஜ்") இல்லாத நிலையே அமைதி.
நம் உள்ளம் அமைதியற்று இருக்கும்போது நம் உடலும் தனது ஆற்றலை
இழந்துவிடுகிறது என்பது நாம் அறிந்ததே.
சீடர்கள் தங்கள் உள்ளத்தில் கொண்டிருந்த கேள்விகள்,
கலக்கங்கள், பய உணர்வுகள், ஐயம், திகில், வியப்பு ஆகியவற்றால்
தங்கள் அமைதியை இழக்கின்றனர். அமைதியில்லாத போது நம் கண்கள்
கலங்கிவிடுகின்றன. கலங்கிய கண்களுக்கு எதுவும் தெளிவாகத்
தெரிவதில்லை.
நெருக்கடி நேரங்களில் நாம் வெகு விரைவாக நம் அமைதியை
இழந்துவிடுகின்றோம். ஆகையால்தான் அந்த நேரத்தில் நமக்கு
எதுவும் சரியாகத் தெரிவதில்லை. ஆக, அமைதியைப் பெறுதல் அல்லது
தக்கவைத்தல்தான் நெருக்கடி மேலாண்மைக்கான முதல் படி.
ஆ. "உடலை ஆவி என நினைக்காதீர்கள்"
"இருப்பதை இருப்பதாகப் பார்ப்பது" நெருக்கடி மேலாண்மையின்
இரண்டாம் படி. இதன் பொருள் என்ன? இன்றைய முதல் வாசகத்தில் தனது
முதல் எருசலேம் மறையுரையில் பேதுரு, "நீங்கள் தூய்மையும்
நேர்மையுமானவரை மறுதலித்துக் கொலையாளியை விடுதலை செய்யுமாறு
வேண்டிக்கொண்டீர்கள்" என மக்களைக் கடிந்துகொள்கின்றார். இந்த
மக்கள் செய்த தவற்றையே திருத்தூதர்களும் செய்கிறார்கள்.
உயிர்த்த ஆண்டவரை வெறும் ஆவி என்கிறார்கள். இயேசுவை வெறும்
ஆவியாக திருத்தூதர்கள் பார்க்கக் காரணம் அவர்களின் முற்சார்பு
எண்ணங்களே.
நமக்கு நெருக்கடியான நேரங்களில் நம் முற்சார்பு எண்ணங்கள்
நம்மை இன்னும் அதிகமாக அவற்றுக்குள் இழுத்துப்போடுகின்றன.
பார்ப்பதை விகாரப்படுத்தி, விசாலப்படுத்தி, மிகைப்படுத்திப்
பார்க்காமல், இருப்பதை இருப்பதாகப் பார்த்தால் நெருக்கடி நிலை
மறைந்துவிடும்.
இ. "புள்ளிகளை இணையுங்கள்"
இயேசு தான் பட்ட பாடுகள், துன்பம், இறப்பு, உயிர்ப்பு
அனைத்தையும் மோசே, இறைவாக்கு, திருப்பாடல் ஆகியவற்றோடு
இணைத்துப் பார்ப்பதோடல்லாமல், "இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்"
என்று சீடர்களை எதிர்காலத்தில் நிறுத்தி எல்லாப் புள்ளிகளையும்
இணைக்கிறார். நம் வாழ்வில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு
புள்ளி. இந்தப் புள்ளி தனித்து நிற்கும் புள்ளி அல்ல. மாறாக,
ஒரு இணைப்புக் கோடு. "நீங்கள் உங்கள் சுண்டுவிரலை
நகர்த்தும்போது எங்கோ நிற்கும் நட்சத்திரத்தை
நகர்த்துகிறீர்கள்" என்பது டாவோ சமயத்தின் நம்பிக்கை. இந்த
நம்பிக்கையின்படி நாம் அனைவரும் இந்த பிரபஞ்சத்தோடும், நம்
வாழ்க்கை நிகழ்வுகள் ஒன்று மற்றதோடும் கட்டப்பட்டுள்ளன என்பதே
உண்மை. இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு ஆகிய நிகழ்வுகள்
அவரின் தனிமனித வாழ்வில் நடந்த தனிநபர் அனுபவங்கள் அல்ல.
மாறாக, திருச்சட்டம், இறைவாக்கு நூல்கள், திருப்பாடல்கள் என
அனைத்தோடும் கட்டப்பட்டவை.
இன்று நெருக்கடியான நேரங்களில் நம் வாழ்வை நாம் எப்படி
பார்க்கிறோம்? ஒன்றிற்கொன்றான தொடர்பை ஏற்றுக்கொள்வதே உண்மை
(காண். இரண்டாம் வாசகம்).
இறுதியாக,
நெருக்கடி
மேலாண்மைக்கான தீர்வு மேலிருந்து - இறைவனிடமிருந்து
- வருகிறது. எப்படி?
"அப்போது மறைநூலைப் புரிந்துகொள்ளுமாறு அவர்களுடைய
மனக்கண்களைத் திறந்தார்" என தன் நற்செய்தி நூலை நிறைவு
செய்கிறார் லூக்கா. நம் உடல்கண்கள் நெருக்கடியை நேருக்கு நேர்
காணும்போது, நம் மனக்கண்கள் திறக்கப்பட்டால் சிக்கலுக்கான விடை
கிடைத்துவிடுகிறது.
அவரைக் கண்டுகொள்ளவும், அவரின் வழியாக நம் வாழ்வின் நெருக்கடி
நிலைகளிலிருந்து நாம் விடுதலை பெறவும் அவர் நம் மனக்கண்களைத்
திறப்பாராக.
இதையே இன்றைய பதிலுரைப்பாடலில் தாவீதும், "உமது முகத்தின் ஒளி
எம்மீது வீசச்செய்யும் ஆண்டவரே" என்று செபிக்கின்றார். அவரின்
செபம் நம் செபமாகட்டும்! ஆண்டவரின் ஒளி நம்மை
ஒளிர்விக்கட்டும்!
(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
Archdiocese of Madurai
|
|