|
Year B |
|
பாஸ்காக்காலம் 02ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்
4: 32-35
அந்நாள்களில் நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே
உயிருமாய் இருந்தனர். அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக்
கருதவில்லை; எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது.
திருத்தூதர் அனைவரும் ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் என
மிகுந்த வல்லமையோடு சான்று பகர்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும்
மக்களின் நல்லெண்ணத்தை மிகுதியாகப் பெற்றிருந்தனர்.
தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை. நிலபுலங்களை
அல்லது வீடுகளை உடையோர் அவற்றை விற்று அந்தத் தொகையைக் கொண்டுவந்து
திருத்தூதருடைய காலடியில் வைப்பர்; அது அவரவர் தேவைக்குத் தக்கவாறு
பகிர்ந்து கொடுக்கப்படும்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
- திபா
118: 2-4. 16ab-18. 22-24 (பல்லவி: 1)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர்;
என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!
2
"என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு" என இஸ்ரயேல் மக்கள்
சாற்றுவார்களாக!
3
"என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு" என ஆரோனின் குடும்பத்தார்
சாற்றுவார்களாக!
4
"என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு" என ஆண்டவருக்கு அஞ்சுவோர்
அனைவரும் சாற்றுவார்களாக! - பல்லவி
16ab
ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச்
செயலாற்றியுள்ளது.
17
நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை
விரித்துரைப்பேன்.
18
கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்; ஆனால் சாவுக்கு என்னைக்
கையளிக்கவில்லை. - பல்லவி
22
கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!
23
ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!
24
ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்;
அகமகிழ்வோம். - பல்லவி
இரண்டாம் வாசகம்
கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும்
உலகை வெல்லும்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து
வாசகம் 5: 1-6
அன்பார்ந்தவர்களே,
இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்.
பெற்றவரிடம் அன்பு செலுத்துவோர் பிள்ளைகளிடமும் அன்பு செலுத்துவர்.
நாம் கடவுள்மீது அன்பு கொண்டு அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது,
கடவுளின் பிள்ளைகள்மீதும் அன்பு கொள்கிறோம் என்பது நமக்குத்
தெரியவரும். ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்தான்
கடவுள் அன்பு அடங்கியுள்ளது. அவர் கட்டளைகள் நமக்குச் சுமையாய்
இருப்பதில்லை.
ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்;
உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே.
இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்?
நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால்
மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவரென தூய ஆவியார்
சான்று பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 20: 29
அல்லேலூயா, அல்லேலூயா! "தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய்.
காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்," என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
எட்டு நாள்களுக்குப் பின் இயேசு சீடர்களுக்குத் தோன்றினார்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 19-31
அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச்
சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள்.
அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று,
"உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்தினார். இவ்வாறு
சொல்லியபின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம்
காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.
இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!
தந்தை என்னை அனுப்பியதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்" என்றார்.
இதைச் சொன்னபின் அவர் அவர்கள்மேல் ஊதி, "தூய ஆவியைப்
பெற்றுக்கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ,
அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ,
அவை மன்னிக்கப்படா" என்றார்.
பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு
இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், "ஆண்டவரைக் கண்டோம்" என்றார்கள்.
தோமா அவர்களிடம், "அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப்
பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி
நான் நம்பமாட்டேன்" என்றார்.
எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே
கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள்
பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில்
நின்று, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்தினார்.
பின்னர் அவர் தோமாவிடம், "இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு.
உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை
கொள்" என்றார்.
தோமா அவரைப் பார்த்து, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!"
என்றார். இயேசு அவரிடம், "நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே
நம்புவோர் பேறுபெற்றோர்" என்றார்.
வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள்
முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை.
இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி
அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
ஆதிக்கிறிஸ்தவ மக்களின் வாழ்க்கை தூய ஆவியினால் அர்ச்சிக்கப்பட்டது.
அவர்களிடையே ஓற்றுமை இருந்தது.
அவர்களிடையே பகிர்வு இருந்தது.
அவர்கள் பிறரை மதித்தனர்.
தெய்வ பற்றுருதியோடு அவர்கள் வாழ்ந்து வந்தனர்.
திருதூதர்களுக்கு பணிந்து இருந்தனர்.
இன்றைக்கு இத்தகைய வாழ்வுமுறை நம்மிடையே இருந்தால் நாமும் ஆவியினால்
அர்ச்சிக்கப்பட்டவர்கள்.
அர்ச்சிக்கப்பட்டவர்களாய் வாழ்வை தொடர அருள் கேட்போம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
பாலை நிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும்
உயர்த்தப்படவேண்டும்!
பெற்றோரோடு கடைத்தெருவுக்கு வந்த ஆறு வயது ஜான், கூட்டத்தில்
தன்னுடைய பெற்றோரைத் தொலைத்துவிட்டு, ஓரிடத்தில் நின்றுகொண்டு
ஓவென்று அழுதுகொண்டிருந்தான்.
அவனைப் பார்த்த பெரியவர், "தம்பி! உனது பெயர் என்ன?... உன்னுடைய
பெற்றோர் யார்?... உன்னுடைய வீடு எங்கே இருக்கின்றது?" என்று
கேட்டார். அவனோ எதுவும் பேசாமல் அழுதுகொண்டே இருந்தான். பெரியவர்
மிகவும் பொறுமையாக, "அழாதே தம்பி... உன்னுடைய பெற்றோர் யார்?
உன்னுடைய வீடு எங்கே இருக்கின்றது என்று நீ சொன்னால்தானே என்னால்
உன்னை உன்னுடைய பெற்றோரிடம் ஒப்படைக்க முடியும்" என்றார். அவனோ
தன்னுடைய பெயர் மற்றும் பெற்றோருடைய பெயர் என்னென்ன என்று
சொல்லிவிட்டு, இருக்கின்ற இடத்தின் பெயர் தெரியாது விழித்தான்.
பெரியவர் அவனுடைய சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, நகரில் இருந்த
ஒவ்வொரு இடமாகச் சொல்லி, இந்த இடத்திற்குப் பக்கத்தில் உன்னுடைய
வீடு இருக்கின்றதா என்று கேட்டுவந்தார். எல்லாவற்றையும் இல்லை
இல்லையென்று சொல்லிவந்த ஜான், அந்தப் பெரியவர், "சிலுவைக்
கோவிலுக்குப் பக்கத்தில் உன்னுடைய வீடு இருக்கின்றதா?" என்று
கேட்டதும் "ஆமாம், சிலுவைக் கோவிலுக்குப் பக்கத்தில்தான் என்னுடைய
வீடு இருக்கின்றது. நீங்கள் என்னை அங்கே கொண்டு போய்
விட்டுவிடுங்கள், நான் என்னுடைய வீட்டிற்குப் போய்விடுவேன்" என்றான்.
ஜான் சொன்னது போன்றே அந்தப் பெரியவர் அவனை சிலுவைக் கோவிலில்
கொண்டுபோய் விட, ஜான் தன்னுடைய வீட்டை எளிதாய் அடைந்தான்.
மேலே சொல்லப்பட்ட நிகழ்வில், வழி தெரியாமல் தவித்த ஜானுக்கு
சிலுவைக் கோவில் சிலுவை வழிகாட்டியது. திக்குத் தெரியாமல்,
வாழ்வில் விடிவில்லாமல் ஏங்கித் தவிப்போர் சிலுவையை, அதில் அறியப்பட்டிருக்கும்
இயேசுவைக் கண்டால் வாழ்வடைவது உறுதி என்பதை இந்த நிகழ்வின் வழியாக
அறிந்துகொள்ளலாம்.
நற்செய்தி வாசகத்தில் யூதத் தலைவர்களுள் ஒருவரும் பரிசேயருமான
நிக்கதேமுக்கும் ஆண்டவர் இயேசுவுக்கும் இடையே உரையாடல் நடைபெறுகின்றது.
அந்த உரையாடலில்தான் இயேசு கிறிஸ்து, "பாலை நிலத்தில் மோசேயால்
பாம்பு உயர்த்தப்பட்டதுபோல், மானிட மகனும் உயர்த்தப்பட
வேண்டும் என்கின்றார். இதனை எப்படிப் புரிந்துகொள்வது என்று இப்போது
நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
எண்ணிக்கை நூல் 21 ஆம் அதிகாரத்தில் இடம்பெறுகின்ற "மோசேயால்
பாம்பு உயர்த்தப்படுகின்ற" நிகழ்விற்கு முன்னதாக, இஸ்ரயேல் மக்கள்
பாலை நிலத்தில் தங்களுக்கு சரியான உணவு கிடைக்கவில்லை, தாங்கள்
சரியாகக் கவனிக்கப்படவில்லை என்று ஆண்டவருக்கு எதிராகவும்
மோசேயுக்கும் எதிராகக் கலகம் செய்கின்றார். ஆண்டவராகிய கடவுளோ
எகிப்தில் அடிமைப்பட்டுக் கிடந்த மக்களை விடுவித்து, பாலும்
தேனும் பொழியக்கூடிய கானான் தேசத்தை வழங்குவதாக இருந்தார். அது
புரிந்துகொள்ளாமல் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு எதிராகக் கலகம்
செய்ததால், கொல்லிவாய்ப் பாம்புகளை அவர்களிடத்தில் அனுப்புகின்றார்.
அப்பாம்பு மக்களைக் கடிக்க அவர்கள் இறந்துபோகிறார்கள். இதனைப்
பார்க்கும் மோசே ஆண்டவரிடத்தில் சென்று, அவர்கள்மீது மனமிரங்கச்
சொல்கின்றார். உடனே அவர் வெங்கலத்தால் பாம்பு ஒன்றைச் செய்யச்
சொல்லி, அதனை மக்கள் பார்வைக்கு வைக்கவும், அதனைப் பார்ப்பவர்
உயிர்பிழைப்பர் என்று சொல்கின்றார். மோசேயும் அவ்வாறு செய்ய
கொள்ளிவாய்ப் பாம்பினால் கடிபட்டவர்கள் உயிர்
பிழைத்துக்கொள்கின்றார்.
ஆண்டவர் இயேசு இந்த நிகழ்வினைச் சுட்டிக்காட்டி, எப்படி வெண்கலப்
பாம்பினைப் பார்த்தவர்கள் வாழ்வடைந்தார்களோ, அது போன்று
சிலுவையில் உயர்த்தப்படுகின்ற மானிட மகனைக் காண்போர் வாழ்வினை,
மீட்பினை எல்லாவித நலன்களைப் பெற்றுக்கொள்வர் என்கின்றார்.
நாம் நம் ஆண்டவரை, அவர் நமக்காகப் பட்ட பாடுகளை எப்படிப்
புரிந்துகொள்கின்றோம் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். பல
நேரங்களில், இஸ்ரயேல் மக்களைப் போன்று ஆண்டவர் நமக்கு எத்தனை
நன்மை செய்தபோதும், தன் ஒரே மகனை இந்த உலகிற்கு அனுப்பி, நம்மை
மீட்டுக் கொண்டபோதும் அதனைப் புரிந்துகொள்ளாமல், அவருடைய அன்புக்கு
உகந்தவர்களாக இல்லாமல், அவரை உதாசீனப்படுத்துகின்றோம்.
ஆகவே, நாம் செய்யவேண்டியதெல்லாம் இறைவனின் மேலான அன்பையும் அவருடைய
திட்டத்தையும் உய்த்துணர்வதுதான். அவர் நமக்காகப் பாடுகள் பட்டு,
சிலுவையில் அறியப்பட்டார் என்பதை உணர்ந்து, அவருடைய வழியில்
நடக்கும்போது, நாம் அவருடைய அன்பிற்கு உகந்தவர்களாவோம் என்பதில்
எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.
ஆகவே, நாம் வாழ்வில் சிலுவையின் மகிமையை உணர்ந்து வாழ்வோம், மட்டுமல்லாமல்,
இறைவன் நம்மீது கொண்டிருக்கும் மேலான அன்பை உணர்ந்து, அதற்கேற்றார்
போல் அவருடைய வழியில் நடப்போம்,. அதன்வழியாக இறையருள் நிறைவாய்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
|
|