|
Year B |
|
பொதுக்காலம்
29ம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
தம் உயிரைக் குற்றநீக்கப் பலியாகத் தந்தார்; எனவே, தம் வழிமரபு
கண்டு நீடு வாழ்வார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 53: 10-11
அந்நாள்களில் ஆண்டவரின் துன்புறும் ஊழியரை நொறுக்கவும் நோயால்
வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்; அவர் தம் உயிரைக் குற்றநீக்கப்
பலியாகத் தந்தார்; எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்; ஆண்டவரின்
திருவுளம் அவர் கையில் சிறப்புறும்.
அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார்; நேரியவராகிய
என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளர் ஆக்குவார்; அவர்களின்
தீச்செயல்களைத் தாமே சுமந்து கொள்வார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா 33: 4-5. 18-19. 20, 22 (பல்லவி: 22)
Mp3
=================================================================================
பல்லவி: உம்மையே நாங்கள் நம்புவதால், உம் பேரன்பு எம்மீது இருப்பதாக!
4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு
உரியவை. 5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்;
அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. பல்லவி
18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக்
காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். 19 அவர்கள் உயிரைச்
சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும்
வாழ்விக்கின்றார். பல்லவி
20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும்
கேடயமும் ஆவார். 22 உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு
எங்கள்மீது இருப்பதாக! பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
அருள்நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 4: 14-16
சகோதரர் சகோதரிகளே, வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை
நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால் நாம் அறிக்கை
இடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக!
ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம்
காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லா வகையிலும் நம்மைப் போலச்
சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர்.
எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக்
கண்டடையவும், அருள்நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச்
செல்வோமாக.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மாற் 10: 45
அல்லேலூயா, அல்லேலூயா! மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத்
தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக்
கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மானிட மகன் பலருடைய மீட்புக்கு ஈடாகத்
தம் உயிரைக் கொடுப்பதற்கு வந்தார்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
10: 35-45
அக்காலத்தில் செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் இயேசுவை
அணுகிச் சென்று அவரிடம், "போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச்
செய்ய வேண்டும் என விரும்புகிறோம்" என்றார்கள்.
அவர் அவர்களிடம், "நான் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள்
விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார்.
அவர்கள் அவரை நோக்கி, "நீர் அரியணையில் இருக்கும்போது எங்களுள்
ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்துகொள்ள
எங்களுக்கு அருளும்" என்று வேண்டினர்.
இயேசுவோ அவர்களிடம், "நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத்
தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால்
குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா?"
என்று கேட்டார்.
அவர்கள் அவரிடம், "இயலும்" என்று சொல்ல, இயேசு அவர்களை
நோக்கி, "நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள்.
நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள்.
ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது
எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ
அவர்களுக்கே அருளப்படும்" என்று கூறினார்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபு மீதும்
யோவான் மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர்.
இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், "பிற இனத்தவரிடையே தலைவர்கள்
எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள்
பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்.
ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது.
உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்.
உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும்
பணியாளராக இருக்கட்டும்.
ஏனெனில் மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும்
பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்"
என்று கூறினார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
அல்லது
குறுகிய வாசகம்
மானிட மகன் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கு
வந்தார்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 42-45
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களிடம் கூறியது: "பிற இனத்தவரிடையே
தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள்.
அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக்
காட்டுகிறார்கள்.
ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக
இருக்க விரும்புகிறவர், உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள்
முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக
இருக்கட்டும்.
ஏனெனில் மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும்
பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்"
என்று கூறினார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
பணிபுரிய, பலியாக
முன்பொரு காலத்தில் இரத்தின புரியை ஆண்ட மன்னன் மரணப்படுக்கையில்
கிடந்தான். அவனுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால், தனக்குப்
பின் நாட்டை ஆளக்கூடிய பொறுப்பை யாரிடம் கொடுப்பது என்ற குழப்பத்தில்
இருந்தான். அந்நேரத்தில் அறிவும், ஞானமும் நிறைந்த தன்னுடைய அமைச்சரை
அழைத்து அதற்கு ஒரு தீர்வு காணச் சொன்னான்.
அதற்கு அமைச்சர் அரசரிடம், அரசே! நம்மிடம் இந்த நாட்டை ஆள்வதற்கு
எல்லாத் தகுதிகளையும்கொண்ட ஷெர்சிங், ராம்தாஸ் என்ற இரண்டு படைத்தளபதிகள்
இருக்கிறார்கள். அவர்கள் இருவரையும் இப்போது உங்களிடம் அழைத்து
வருகின்றேன். நீங்கள் அவர்கள் இருவரையும்
சோதித்துப்பார்த்துவிட்டு யார் உண்மையிலேயே நாட்டை ஆள்வதற்கான
தகுதியைக் கொண்டிருக்கிறார் என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள்
என்று சொல்லிவிட்டு, அவர்கள் இருவரையும் அவரிடம் அழைத்து வந்தார்.
அரசர் முதலில் வந்த ஷெர்சிங்கைப் பார்த்து, உன்னிடம் இந்த
நாட்டை ஆள்வதற்கான பொறுப்பைக் கொடுத்தால் நீ மக்களை எப்படி ஆளுவாய்
என்று கேட்டார். அதற்கு அவன், நான் என்னிடம் கொடுப்பட்ட
பொறுப்பை உணர்ந்து, சட்டங்களை இன்னும் கடினமாக்குவேன். அத்தோடு
எல்லோரையும் இரும்புக் கரம்கொண்டு ஆளுவேன் என்றான்.
அடுத்து அரசன் ராம்தாஸிடம் அதே கேள்வியைக் கேட்டார். அதற்கு
அவன், நான் மக்களுக்கு சேவை செய்து வாழ்வேன். மக்களோடு மக்களாவேன்
என்று பதிலளித்தான். அரசன் ராம்தாஸின் பதிலைக் கேட்டு வியப்படைந்து
அவனையே அரசனாக மணிமுடி சூட்டினார். தொடர்ந்து அவர் அவர்களிடம்,
அரசன் என்பவன் அடிப்படையில் ஒரு சேவகனே. அவன் வகிக்கும் பதவி
ஒன்றே அவனை மக்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் என்றார்.
சாது வாஸ்வானி ஒருமுறை குறிப்பிட்டார், யார் மிகப்பெரிய அளவுக்கு
சேவை செய்கிறாரே, அவரே உங்களில் மிகச் சிறந்தவர் என்று. ஆம்.
பணியாளர்தான் தலைவராக இருக்க முடியும் என்பது எல்லோரும் ஏற்றுக்கொள்ளகூடிய
ஓர் உண்மை.
பொதுக்காலத்தின் இருப்பத்தி ஒன்பதாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும்
நமக்கு இன்றைய நாள் வாசகங்கள் தரும் அழைப்பு பணி புரிய, பலியாகவே
என்பது ஆகும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசுவிடம்
செபதேயுவின் மக்களாகிய யோவானும், யாக்கோபும், ஆண்டவரே! நீர்
ஆட்சியுரிமையுடன் வரும்போது எங்களில் ஒருவர் உம் வலப்புறமும்,
இன்னொருவர் இடப்புறமும் அமர அனுமதியும் என்கிறார்கள். அதற்கு
இயேசு, என்னுடைய வலப்புறமும், இடப்புறமும் அமரச் செய்வது என்னுடைய
செயல் அல்ல, மாறாக யாருக்கு அவை அருளப்பட்டிருக்கிறதோ, அவர்களுக்கே
கொடுக்கப்படும் என்கிறார்.
தொடர்ந்து அவர் அவர்களிடம், உங்களில் தலைவராக இருக்க
விரும்பிகிறவர் தொண்டராகவும், முதன்மையானவராக இருக்க
விரும்புகிறவர், கடையவராகவும் இருக்கட்டும் என்கிறார்.
இயேசு கூறும் இவ்வார்த்தைகளை நாம் சற்று ஆழமாகச் சிந்தித்துப்
பார்ப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்றே தோன்றுகிறது.
காரணம் நம்மில் பெரும்பாலானவர்கள் எல்லாவற்றிலும் எனக்கு முதலிடம்
கொடுக்கப்படவேண்டும் என்று நினைக்கிறோம். அது குடும்பமாக இருந்தாலும்
சரி, நிறுவனமாக இருந்தாலும் சரி. நாம் முதன்மையான இடம் வகிக்கவேண்டும்
என்றுதான் நினைக்கின்றோம். ஆனால் அதற்கு உண்மையிலேயே நாம்
தகுதி உடையவர்களாக இருக்கிறோமா என்றால் நிச்சயமாக இருக்காது.
இங்கே இயேசுவின் போதனையோ வித்தியாசமாக இருக்கின்றது. தலைவன்
என்பவன் பணியாளனாகவும், முதன்மையானவனாக இருக்க விரும்புகிறவன்
கடையவனாக இருக்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார். இதனை அவர்
வெறுமனே போதித்ததோடு நின்றுவிடாமல் தன்னுடைய வாழ்வில் வாழ்ந்து
காட்டினார். இறுதி உணவின்போது இயேசு சீடர்களின் பாதங்களை
கழுவியது இதற்கு ஒரு மிகப்பெரிய சான்று. ஆதலால் நாம்
ஒவ்வொருவருமே நான் தலைவன், பெரியவன் என்ற மனநிலையில் வாழாமல்
பணியாளன் என்ற மனநிலையோடு வாழ்வோம்.
விவேகானந்தர் ஒருமுறை இவ்வாறு கூறினார், தன்னலம் மறுத்து,
பொதுநலத்திற்காக தொண்டாற்றுபவர்கள்தான் உண்மையான தலைவர்கள்
என்று. இன்றைய முதல்வாசகத்தில்கூட மெசியா எனப்படுவர்
துன்புறும் ஊழியனாகவே இருப்பார் என்று
சுட்டிகாட்டப்படுகின்றது. அவரை நொறுக்கவும், நோயால்
வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார் என்று படிக்கின்றோம்.
ஆக, மெசியா என்பவர் அடிப்படையில் மக்களுக்காக தன்னையே
கையளித்து, எல்லாருக்கும் ஒர் ஊழியனைப் போன்றே இருப்பார்
என்பது இறைவார்த்தை நமக்கு உணர்த்தும் உண்மையாக இருக்கின்றது.
எனவே நாம் ஒவ்வொருவரும் இயேசுவைப் போன்று நான் பணியாளர்,
ஊழியம் புரிபவர் என்ற மனநிலையோடு வாழப் பழகுவோம்.
அடுத்ததாக நாம் பணியாளர்களைப் போன்று வாழ்வதற்கு நமக்கு
அடிப்படையாக இருப்பது பணிவு, தாழ்ச்சி என்ற மனநிலையே. காரணம்
நான் பெரியவன், மற்ற எல்லாரையும் விட உயர்ந்தவன் என
நினைப்போரால் இயேசுவின் சீடராக இருக்க முடியாது; அவருடைய
பணியாளராகவும் இருக்க முடியாது.
மத்தேயு நற்செய்தி 18:1-5 ல் உள்ள பகுதிகளில் வாசிக்கின்றோம்,
மனந்திரும்பி சிறுபிள்ளைகள் போன்று ஆகாவிட்டால் விண்ணரசில்
புகமாட்டீர்கள். இச்சிறுபிள்ளைகளைப் போன்று தம்மைத்
தாழ்த்திக்கொள்பவரே விண்ணரசில் மிகப்பெரியவர் என்று. ஆம் நாம்
விண்ணரசில் நுழைவதற்கு அடிப்படையாக இருப்பது தாழ்ச்சி, பணிவு
என்ற புண்ணியம் மட்டுமே.
அதேபோன்று மீக்கா புத்தகம் 6:8 ல் வாசிக்கின்றோம் நேர்மையோடு
நடந்துகொள்வதையும், இரக்கத்தோடு வாழ்வதையும், தாழ்மையோடு
நடந்துகொள்வதையும் தவிர கடவுள் உன்னிடம் எதை
எதிர்பார்க்கின்றார் என்று. எனவே நாம் தாழ்ச்சி நிறைந்த
உள்ளத்தினராய் வாழவேண்டும் என்பதுதான் இறைவனின் விருப்பமாக
இருக்கின்றது. உண்மையில் அப்படி வாழ்கிறோமா என்று சிந்தித்துப்
பார்க்கவேண்டும்.
புக்கர் டி. வாஷிங்டன் என்பவர் அமெரிக்காவில் வாழ்ந்த
மிகப்பெரிய கல்வியாளர். அலபாமா என்ற இடத்தில் இருக்கக்கூடிய
கல்வி நிறுவனங்களின் தலைவராக இருந்தவர். அவர் ஒரு
கறுப்பினத்தவர்.
ஒருமுறை அவர் சாலையோரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது
அவரைப் பார்த்த ஒரு வெள்ளைக்கார பெண்மணி, அவர் ஒரு சாதாரண
வழிபோக்கர் கறுப்பினத்தவர் - என நினைத்து அவரை தன்னுடைய
தோட்டத்தில் கிடந்த மரங்களையெல்லாம் வெட்டி அடுக்குமாறு
கேட்டுகொண்டார். அவரும் அதற்கு மறுப்பேதும் சொல்லாமல் தன்னுடைய
மேல்சட்டையை கழற்றி வைத்துவிட்டு, மரத்தை வெட்டி, அதனை
வீட்டுக்குள் அடுக்கி வைத்தார்.
அந்நேரத்தில் அங்கு வந்த அந்த வெள்ளைக்காரப் பெண்மணியின் மகள்
ஒரு நிமிடம் அதிர்ந்துபோய் நின்றார். ஏனென்றால் புக்கர் டி.
வாஷிங்டன் நடத்திவரும் கல்வி நிறுவனத்தில்தான் அவள் படித்துக்
கொண்டிருந்தாள். அவர் போகும்வரைக்கும் ஏதும் பேசாமல் அமைதி
காத்து, பின்னர் தன்னுடைய தாயிடம் எல்லா உண்மைகளையும்
எடுத்துச் சொன்னாள். இதைக்கேட்டு அந்தப் பெண்மணி இன்னும்
அதிர்ச்சியடைந்து புக்கர் டி. வாஷிங்டன் அவர்களிடம் சென்று
நீங்கள் யாரென்று தெரியாமல் இப்படி வேலை வாங்கிவிட்டேனே
என்று மன்னிப்புக் கேட்டார்.
அதற்கு அவர் மிகவும் பணிவாக, உடல் உழைப்பு மேற்கொண்டு நீண்ட
நாட்கள் ஆகிவிட்டது. இப்போதுதான் நான் மீண்டுமாக வேலைபார்க்க
ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆதலால் நீங்கள் சொன்ன வேலையை
நான் செய்தது எனக்கு மகிழ்ச்சியே என்று பதிலளித்தார். இதைக்
கேட்ட அந்த பெண்மணி இப்படி பணிவாக, தாழ்ச்சியாக இருக்கும்
உங்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று சொல்லி, தன்னுடைய
நண்பர்கள், உறவினர்கள் எல்லாரிடமும் புக்கர் டி. வாஷிங்டன்
அவர்களைப் பற்றியும், அவர் நடத்தும் நிறுவனத்தைப் பற்றியும்
சொல்லி நிதிதிரட்டித் தந்தார்.
மிகச் சிறந்த கல்வியாளராகிய புக்கர் டி. வாஷிங்டன் எந்தளவுக்கு
தாழ்ச்சியாக நடந்துகொண்டார் என்பதை இக்கதையானது நமக்குச்
சுட்டிக்காட்டுகிறது.
இயேசுவின் சீடர்களாக, அவருடைய பணியாளர்களாக வாழ நம்மிடத்தில்
அடிப்படையாக இருக்கவேண்டியது தாழ்ச்சி மட்டுமே. இப்படியெல்லாம்
வாழ்கிறபோது கடவுள் கொடுக்கும் ஆசீர்வாதம் ஏராளாம். முதல்
வாசகத்தில் படிக்கின்றோம். அவர் தம் வழிமரபு கண்டு நீடு
வாழ்வார் என்று. ஆம், நாம் கடவுளின் திருவுளப்படி
நடக்கும்போது கடவுள் நமக்கு நீடிய ஆயுளைத் தருவார் என்பதே
உண்மை.
ஆகவே நான் பெரியவன், உயர்ந்தவன் என்ற ஆணவத்தை அகற்றி,
எல்லாருக்கும் நான் பணியாளன் என்ற மனநிலையில், பணிவோடும்,
தாழ்ச்சியோடும் வாழ்வும். இறையருள் நிறைவாய் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
தொண்டு ஆற்றவும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தன்னுடைய உயிரையே
தரவந்த இயேசு
ஒருசமயம் ஒரு குக்கிராமத்தில் அடைமழை பெய்து, பயங்கர வெள்ளப்பெருக்கு
ஏற்பட்டு அந்தக் கிராமமே மூழ்கும் அபாயம் ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கில்
சிக்கி குழந்தைகள், பெரியவர்கள் என ஏராளமான பேர் இறந்துபோனார்கள்.
அந்தக் கிராமத்தில் வெறும் பதினோரு பேர் மட்டுமே உயிர்
பிழைத்தார்கள். அவர்கள்கூட ஊரில் இருந்த மேட்டுப் பகுதியில் ஏறியதால்
உயிர்பிழைத்தர்கள். மழை விடாமல் தொடர்ந்து பெய்துகொண்டிருந்ததால்,
தண்ணீர் மேலே ஏறிவருவதைக் கண்டு, அவர்கள்கூட "காப்பாற்றுங்கள்,
காப்பாற்றுங்கள்" என்று அலறிக் கொண்டிருந்தார்கள்.
இதற்கிடையில் செய்தி எப்படியோ அரசாங்க அதிகாரிகளின் காதுகளை எட்ட,
அவர்கள் ஒரு ஹெலிகாப்டரை அவ்வூருக்கு அனுப்பி வைத்தார்கள்.
ஹெலிகாப்டர் வந்ததும் மேட்டுப்பகுதியில் இருந்த அந்தப் பதினோரு
பேரும் அடித்துப் பிடித்துக்கொண்டு, கயிறு வழியாக மேலே ஏறினார்கள்
அந்தப் பதினோரு பேரில் ஒருவர் மட்டுமே பெண் (தாய்). ஏனையோர் எல்லாம்
ஆண்கள். இதைக் கவனித்த அந்த ஹெலிகாப்டர் ஓட்டுநர், "இந்த
ஹெலிகாப்டரில் பத்துப் பேர்தான் ஏறமுடியும், அதற்கு மேல் ஏறினால்,
எடை தாங்காமல் அனைவரும் கீழே விழவேண்டியதுதான். அதனால் உங்களில்
யார் கீழே இறங்குவது என்று நீங்களே பேசி முடிவெடுங்கள்" என்று
சொன்னார். ஆனால், யாரும் கயிற்றிலிருந்து கீழே இறங்க முன்வரவில்லை.
அப்போது அந்தப் பதினோரு பேர் கூட்டத்தில் இருந்த தாயானவள்,
"உங்களில் யாருக்குமே ஹெலிகாப்டரிலிருந்து இறங்கவேண்டும் என்ற
எண்ணம் வராததால், நானே இதிலிருந்து இறங்கிக் கொள்கின்றேன். ஏனென்றால்,
பலமுறை என்னுடைய கணவருக்காகவும் பிள்ளைகளுக்காகவும் பல்வேறு
தியாகங்களைச் செய்திருக்கின்றேன். அது போன்று இந்தமுறை உங்களுக்காக
என்னுடைய உயிரைத் தியாகம் செய்கிறேன். நீங்களாவது நல்லாயிருங்கள்
என்று பேசி முடித்தார். அவர் இவ்வாறு பேசியதைக் கேட்ட - கயிற்றைப்
பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்த - அந்தப் பத்துப் பேரும் பலமாக
கைகளைத் தட்டத் தொடங்கினார்கள். அந்தோ பரிதாபம் கைகளைத் தட்டிய
அந்த பத்துப் பேரும் கயிற்றிலிருந்த பிடியை விட்டுவிட்டு அப்படியே
கீழே விழுந்தார்கள். ஹெலிகாப்டர் ஓட்டுநரோ அந்தத் தாயை மட்டும்
மேலே ஏற்றுக்கொண்டு பயந்து சென்றார்.
கயிற்றைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்த சந்தோசத்தில் தங்களுடைய
பிடியைவிட்ட - அந்தப் பத்துப் பேருக்காக தன்னுடைய இன்னுயிரையே
தர முன்வந்த அந்த தாயின் தியாகச் செயல் மிகவும் அளப்பெரியது.
எப்படி அந்தத் தாயானவள் பிறருக்காக தன்னுடைய இன்னுயிரையே தர
முன்வந்தாளோ அதுபோன்றுதான் நம் ஆண்டவர் இயேசுவும் நமது
மீட்புக்காகத் தன் இன்னுயிரையே தியாகம் செய்தார். அவர் நமக்காக
செய்த தியாகம் எத்தகையது, பட்ட பாடுகள் எத்தகையது என்பதை இன்றைய
வாசகங்கள் எடுத்துரைக்கின்றன. நாம் அதைக் குறித்து
சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 10:32-35) ஆண்டவர் இயேசு தன்னுடைய
பாடுகளை, எருசலேமில் தான் பட இருந்த சிலுவை மரணத்தைப் பற்றிப்
பேசியபோது, சீடர்களோ (யோவானும் யாக்கோபும்) அது புரியாமல்
"நீர் அரியணையில் இருக்கும்போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும்
இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்துகொள்ள எங்களுக்கு அருளும்
என்று கேட்கின்றார்கள். யோவானும் யாக்கோபும் இப்படி
புரிந்துகொள்ளாமல் பேசுவதைக் கேட்ட இயேசு அவர்களிடம், மானிட
மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய
மீட்புக்காகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார் எனச்
சொல்லி, தான் யார், எதற்காக இந்த மண்ணுலகிற்கு வந்தேன் என்பதைப்
பற்றி அவர்களுக்கு எடுத்துரைக்கின்றார்.
இயேசு தன்னைப்பற்றி இப்படி மீண்டும் மீண்டுமாக அவர்களுக்கு எடுத்துச்
சொன்னாலும்கூட, அவர்கள் எதுவும் புரியாத மரமண்டைகளாக இருந்தார்கள்
என்பதுதான் வேடிக்கை.
நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களுக்குக் கூறுகின்ற
வார்த்தைகளும், இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா
கூறுகின்ற வார்த்தைகளும் இயேசு யார் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றன.
இன்றைய முதல் வாசகத்தில், "அந்நாளில் ஆண்டவரின் துன்புறும் ஊழியரை
நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்.
அவர் தம் உயிரைக் குற்றநீக்கப் பலியாகத் தந்தார் என்று
வாசிக்கின்றோம். இறைவாக்கினர் எசாயா உரைக்கின்ற இவ்வார்த்தைகள்
ஆண்டவர் இயேசுவில் நிறைவு பெறுவதாக விவிலிய அறிஞர்கள் கூறுவார்கள்.
ஏனென்றால், இயேசுதான் தன்னுடைய உயிரை குற்ற நீக்கப் பலியாகத்
தந்தார்; இயேசுதான் தந்தைக் கடவுளின் உலக மீட்புத் திட்டத்திற்கு
தன்னை முற்றிலுமாகக் கையளித்து, பாடுகளைகளையும் துன்பங்களையும்
அவமானங்களையும் தன்னுடைய உடலிலே சுமந்துகொண்டார். ஆகையால், இயேசுவை,
தவதிருத்துவத்தின் இரண்டாம் ஆளாக இருந்தும் தம்மைமே
தாழ்த்திக்கொண்டு, மக்களுக்காக தன்னுடைய உயிரையே தந்த துன்புறம்
ஊழியன் என உறுதியாகச் சொல்லலாம். இதைதான் நற்செய்தியில் அவர்,
"மானிட மகன் தொண்டு ஏற்பதற்காக அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும்
பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்
என்கின்றார்.
ஆதலால், இதுவரைக்கும் நாம் சிந்தித்ததிலிருந்து இயேசுவை மக்களின்
மீட்புக்காக தன்னையே தந்தவர் என நாம் உறுதியாக நம்பலாம். இயேசு
தன்னை மக்களுக்காக, அவர்களுடைய மீட்புக்காகத் தியாகம் செய்தவர்
என்றால், அவருடைய வழியில் நடக்கும் நாம் ஒவ்வொருவருமே பிறருக்காக
நமது உயிரைத் தரவேண்டும் என்பதுதான் நமக்கு முன்பாக இருக்கும்
சவாலாக இருக்கின்றது.
பல நேரங்களில் நாம் நற்செய்தியில் வரும் சீடர்களைப் போன்று சீடத்துவ
வாழ்க்கை என்பது அதிகாரம் செலுத்துவது, பிறரை அடக்கி ஆள்வது,
உயர்ந்த பதவிகளை வகிப்பது என்று நினைத்துக்கொண்டிருக்கின்றோம்.
அப்படியில்லை, சீடத்துவம் என்பது பணிவிடை செய்வதில் அடங்கி இருக்கின்றது.
சீடத்துவம் என்பது அடுத்துவருக்கு தொண்டு செய்வதில் அடங்கி இருக்கின்றது.
பணிவிடை புரியாமல், அடுத்தவருக்குத் தொண்டு செய்யாமல் சீடத்துவ
வாழ்க்கையானது ஒருபோதும் முழுமை பெறாது.
சுவாமி விவேகானந்தரின் நேரடிச் சீடராக இருந்தவர் கல்யாணானந்தர்
என்பவர். விவேகானந்தர் அவருக்கு 1900 - ல் துறவு தீட்சை வழங்கியபோது,
"கல்யாண், எனக்குக் குருதட்சிணையாகத் தர உன்னிடம் என்ன
வைத்திருக்கிறாய்? என்று கேட்டபோது அவர், "இதோ என்னையே தருகிறேன்,
நான் தங்கள் அடிமை. தங்களின் கட்டளைப்படி எதைவேண்டுமானாலும்
செய்கிறேன் என்றார். அதற்கு விவேகானந்தரோ, "இதுதான் எனக்கு
வேண்டும். கொஞ்சம் பணம் தருகிறேன். ஹரித்துவாருக்குப் போ. நிலத்தை
வாங்கு. குடிசைகளைக் கட்டு. மருத்துவ உதவியின்றிப் பலர் இறந்து
போகிறார்கள். சாலையோரங்களில் எவராவது நோயுற்றுக் கிடந்தால் அவர்களைக்
குடிசைக்குத் தூக்கிவந்து அவர்களுக்குப் பணிவிடைசெய்.
தொண்டுபுரி என்றார்.
தன் குருவின் கட்டளைப்படி கல்யாணானந்தர் ஹரித்துவாருக்கு அருகில்
கன்கல் என்ற இடத்தில் குடிசைகளை எழுப்பினார். ஏழை எளிய நோயாளிகளுக்குப்
பணிவிடை செய்துவந்தார். பின்னாளில் விவேகானந்தர் கல்யாணானந்தரைப்
பார்க்கச் சென்றபோது, அவர் செய்துவந்த பணிகளையும் சேவைகளையும்
கண்டு மிகவும் மகிழ்ந்து போய், "நீதான் என்னுடைய உண்மையான சீடன்
என்று பாராட்டினார். ஆம், சீடத்துவ வாழ்க்கை என்பது பணிவிடை
பெறுகின்ற வாழ்க்கை அல்ல, மற்றவருக்குப் பணிவிடை புரிகின்ற
வாழ்க்கை, தொண்டு ஏற்கின்ற வாழ்க்கை அல்ல, மற்றவருக்கு தொண்டு
ஆற்றக்கூடிய வாழ்க்கை, அதன் உச்சமாக உயிரையும் தரக்கூடிய
வாழ்க்கை.
இதுவரைக்கும் இயேசு யார் என்பதையும் அவருடைய வழியில் நடக்கும்
சீடர்களாகிய நாம் எத்தகைய வாழ்க்கையை வாழவேண்டும் என்று
சிந்தித்த நாம், சீடத்துவ வாழ்வில் வரும் சவால்களை, இடையூறுகளை
எப்படி எதிர்கொள்வது என்று சிந்தித்துப் பார்ப்போம்.
எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய
இரண்டாம் வாசகத்தில், "நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக்
கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்
போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர். எனவே, நாம்
இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும்
அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக என்று
வாசிக்கின்றோம். ஆம், நாம் இயேசுவின் சீடர்களாய், அவருடைய வழியில்
நடக்கின்றபோது, பணிகளைச் செய்கின்றபோது நமக்கு ஏராளமான துன்பங்களும்
பிரச்சனைகளும் வரலாம். அத்தகைய தருணங்களில் நாம் ஆண்டவரின்
துணையை நாடுகின்றபோது அவருடைய அருளால் மீட்கப் படுவோம் என்பதுதான்
உண்மை.
திருத்தூதர் பணிகள் நூல் 12 ஆம் அதிகாரத்தில் வருகின்ற ஒரு நிகழ்வு.
ஏரோது அரசன் பேதுருவை பிடித்து சிறையில் அடைத்து வைத்திருந்தபோது,
திருச்சபையே அவருக்காக மன்றாடியது அதனால் அவர் சிறையிலிருந்து
விடுவிக்கப் படுகின்றார். நமக்கொரு துன்பம் வருகின்றபோது, நாம்
இறைவனை நோக்கி மன்றாடினோம் என்றால், அவர் நம்முடைய துன்பத்தை
இன்பமாக மாற்றி, நமக்கு மகிழ்வான வாழ்வினைத் தந்திருடுவார் என்பதுதான்
இதிலிருந்து நாம் அறிந்துகொள்ளும் உண்மை.
ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம் அவரைப் போன்று தொண்டு
ஏற்பதில் அல்ல, தொண்டு செய்வதில் மகிழ்வுருவோம். பிறருக்காக நம்
உயிரைத் தர முன்வருவோம் வேண்டும். உள்ளத்தில் தாழ்ச்சியை
தாங்கிக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
|
|