Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

திருப்பாடுகளின் வெள்ளி  

                      ஆண்டு A  
                                     கிறிஸ்து இயேசுவின் திருப்பாடுகளின் வாசகங்கள்.
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 
நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 52: 13 - 53: 12

இதோ, என் ஊழியர் சிறப்படைவார்; அவர் மேன்மைப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டு, பெரிதும் மாட்சியுறுவார். அவரைக் கண்ட பலர் திகைப்புற்றனர்; அவரது தோற்றம் பெரிதும் உருக்குலைந்ததால் மனித சாயலே அவருக்கு இல்லாதிருந்தது; மானிடரின் உருவமே அவருக்கு இல்லை.

அவ்வாறே, அவர் பல பிற இனத்தாரை அதிர்ச்சிக்குள்ளாக்குவார்; அரசர்களும் அவரை முன்னிட்டு வாய்பொத்தி நிற்பர்; ஏனெனில் தங்களுக்குச் சொல்லப்படாததை அவர்கள் காண்பர்; தாங்கள் கேள்விப்படாததை அவர்கள் புரிந்துகொள்வர்.

நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்? ஆண்டவரின் ஆற்றல் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது? இளந்தளிர்போலும் வறண்ட நில வேர்போலும் ஆண்டவர் முன்னிலையில் அவர் வளர்ந்தார்; நாம் பார்ப்பதற்கேற்ற அமைப்போ அவருக்கில்லை; நாம் விரும்பத்தக்க தோற்றமும் அவருக்கில்லை. அவர் இகழப்பட்டார்; மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்; வேதனையுற்ற மனிதராய் இருந்தார்; நோயுற்று நலிந்தார்; காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார்; அவர் இழிவுபடுத்தப்பட்டார்; அவரை நாம் மதிக்கவில்லை. மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்; நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும் சிறுமைப் படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம்.

அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம். ஆடுகளைப்போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம்; நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்; ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார்.

அவர் ஒடுக்கப்பட்டார்; சிறுமைப்படுத்தப்பட்டார்; ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை; அடிப்பதற்கு இழுத்துச்செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார். அவர் கைது செய்யப்பட்டு, தீர்ப்பிடப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டார்;
அவருக்கு நேர்ந்ததைப்பற்றி அக்கறை கொண்டவர் யார்? ஏனெனில், வாழ்வோர் உலகினின்று அவர் அகற்றப்பட்டார்; என் மக்களின் குற்றத்தை முன்னிட்டுக் கொலையுண்டார். வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை; வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை; ஆயினும், தீயவரிடையே அவருக்குக் கல்லறை அமைத்தார்கள்; செத்தபோது அவர் செல்வரோடு இருந்தார். அவரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்; அவர் தம் உயிரைக் குற்றநீக்கப் பலியாகத் தந்தார்; எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்; ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும். அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார்; நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளராக்குவார்; அவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்துகொள்வார்.

ஆதலால், நான்அவருக்கு மதிப்பு மிக்கவரிடையே சிறப்பளிப்பேன்; அவரும் வலியவரோடு கொள்ளைப் பொருளைப் பங்கிடுவார்; ஏனெனில், அவர் தம்மையே சாவுக்குக் கையளித்தார்; கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்; ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்; கொடியோருக்காகப் பரிந்து பேசினார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 31: 1,5. 11-12. 14-15. 16, 24 (பல்லவி: லூக் 23: 46) Mp3
=================================================================================

பல்லவி: "தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்.''

1 ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; நான் ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்; உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும். 5 உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளினீர். பல்லவி

11 என் பகைவர் அனைவரின் இகழ்ச்சிக்கு உள்ளானேன்; என்னை அடுத்திருப்போரின் பேரிழிவுக்கு ஆளானேன்; என் நண்பர்களுக்குப் பேரச்சம் வருவித்தேன்; என்னைத் தெருவில் பார்ப்போர் என்னிடமிருந்து விலகி ஓடுகின்றனர். 12 இறந்தோர்போல் நினைவினின்று நான் அகற்றப்பட்டேன்; உடைந்துபோன மட்கலம்போல் ஆனேன். பல்லவி

14 ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; `நீரே என் கடவுள்' என்று சொன்னேன். 15 என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளது; என் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும். பல்லவி

16 உமது முகத்தின் ஒளி அடியேன்மீது வீசும்படி செய்யும்; உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும். 24 ஆண்டவருக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போரே, நீங்கள் அனைவரும் உள்ளத்தில் வலிமையும் உறுதியும் கொண்டிருங்கள். பல்லவி

இரண்டாம் வாசகம்

கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்; தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 4: 14-16;5: 7-9

வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால் நாம் அறிக்கையிடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக!

ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர்.

எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக்கூடிய அருளைக் கண்டடையவும், அருள்நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக. அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார்.

அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவிசாய்த்தார். அவர் இறைமகனாய் இருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அவர் நிறைவுள்ளவராகி, தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.



=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
பிலி 2: 8-9

அல்லேலூயா, அல்லேலூயா!  கிறிஸ்து சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். அல்லேலூயா! 

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
குருத்து ஞாயிறன்று நடைபெற்றதுபோல், ஆண்டவருடைய திருப்பாடுகளின் வரலாறு, எரியும் திரிகளும் தூபமும் இன்றி, வாழ்த்துரை கூறாமலும் திருநூலில் சிலுவை அடையாளம் வரையாமலும் வாசிக்கப்படும். (காண்க: திருப்பலிப் புத்தகம், பக்கம் 103, எண் 22)

யோவான் எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள் 18: 1 - 19: 42

விரிஉரையாளர்: புனித யோவான் எழுதியபடி யேசுவின் திருப்பாடுகள்:

விரிஉரையாளர்: இயேசு தம் சீடர்களோடு கெதரோன் என்னும் நீரோடையைக் கடந்து சென்றார். அங்கே ஒரு தோட்டம் இருந்தது. தம் சீடர்களோடு இயேசு அதில் நுழைந்தார். அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசுக்கு அந்த இடம் தெரியும். ஏனெனில், இயேசுவும் அவருடைய சீடர்களும் அடிக்கடி அங்குக் கூடுவர். படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான். தமக்கு நிகழப் போகிற அனைத்தையும் இயேசு அறிந்து அவர்கள்முன் சென்று,

இயேசு: "யாரைத் தேடுகிறீர்கள்?"

விரிஉரையாளர்: என்று கேட்டார். அவர்கள் மறுமொழியாக,

மக்கள்: "நாசரேத்து இயேசுவைத் தேடுகிறோம்"

விரிஉரையாளர்: என்றார்கள். இயேசு,

இயேசு: "நான்தான்"

விரிஉரையாளர்: என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களோடு நின்றுகொண்டிருந்தான். "நான்தான்" என்று இயேசு அவர்களிடம் சொன்னதும் அவர்கள் பின்வாங்கித் தரையில் விழுந்தார்கள்.

இயேசு: "யாரைத் தேடுகிறீர்கள்?"

விரிஉரையாளர்: என்று இயேசு மீண்டும் அவர்களிடம் கேட்டார். அவர்கள்,

மக்கள்: "நாசரேத்து இயேசுவைத் தேடுகிறோம்"

விரிஉரையாளர்: என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து,

இயேசு: "நான்தான்" என்று உங்களிடம் சொன்னேனே. நீங்கள் என்னைத் தேடுகிறீர்கள் என்றால் இவர்களைப் போகவிடுங்கள்"

விரிஉரையாளர்: என்றார். "நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுள் எவரையும் நான் இழந்து விடவில்லை" என்று அவரே கூறியிருந்தது இவ்வாறு நிறைவேறியது. சீமோன் பேதுருவிடம் ஒரு வாள் இருந்தது. அவர் அதை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவரது வலக்காதை வெட்டினார். அப்பணியாளரின் பெயர் மால்கு. இயேசு பேதுருவிடம்,

இயேசு: "வாளை உறையில் போடு. தந்தை எனக்கு அளித்த துன்பக் கிண்ணத்திலிருந்து நான் குடிக்காமல் இருப்பேனோ?"

விரிஉரையாளர்: என்றார். படைப்பிரிவினரும் ஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி, முதலில் அவரை அன்னாவிடம் கொண்டுசென்றார்கள். ஏனெனில் அந்த ஆண்டில் தலைமைக் குருவாய் இருந்த கயபாவுக்கு அவர் மாமனார். இந்தக் கயபாதான், "ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது" என்று யூதர்களுக்கு ஆலோசனை கூறியவர். சீமோன் பேதுருவும் மற்றொரு சீடரும் இயேசுவைப் பின்தொடர்ந்து வந்தனர். அந்தச் சீடர் தலைமைக் குருவுக்கு அறிமுகமானவர்; ஆகவே இயேசுவுடன் தலைமைக் குருவின் மாளிகை முற்றத்தில் நுழைந்தார். பேதுரு வெளியில் வாயிலருகே நின்று கொண்டிருந்தார். அப்போது தலைமைக் குருவுக்கு அறிமுகமாயிருந்த அந்தச் சீடர் வெளியே வந்து, வாயில் காவலரிடம் சொல்லிப் பேதுருவை உள்ளே கூட்டிச் சென்றார். வாயில் காவல் செய்த அப்பணிப்பெண் பேதுருவிடம்,

பணிப்பெண்: "நீயும் இம்மனிதனுடைய சீடருள் ஒருவன் தானே?"

விரிஉரையாளர்: என்று கேட்டார். பேதுரு,

பேதுரு: "இல்லை"

விரிஉரையாளர்: என்றார். அப்போது குளிராய் இருந்ததால் பணியாளர்களும் காவலர்களும் கரியினால் தீமூட்டி அங்கே நின்று குளிர்காய்ந்து கொண்டிருந்தார்கள்.

விரிஉரையாளர்: தலைமைக் குரு இயேசுவின் சீடர்களைப்பற்றியும் அவருடைய போதனையைப்பற்றியும் அவரிடம் கேட்டார். இயேசு அவரைப் பார்த்து,

இயேசு: "நான் உலகறிய வெளிப்படையாய்ப் பேசினேன். யூதர் அனைவரும் கூடிவரும் தொழுகைக் கூடங்களிலும் கோவிலிலும்தான் எப்போதும் கற்பித்து வந்தேன். நான் மறைவாக எதையும் பேசியதில்லை. ஏன் என்னிடம் கேட்கிறீர்? நான் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் கேட்டுப்பாரும். நான் என்ன சொன்னேன் என அவர்களுக்குத் தெரியுமே"

விரிஉரையாளர்: என்றார். அவர் இப்படிச் சொன்னதால் அங்கு நின்று கொண்டிருந்த காவலருள் ஒருவர்,

காவலர்: "தலைமைக் குருவுக்கு இப்படியா பதில் கூறுகிறாய்?"

விரிஉரையாளர்: என்று சொல்லி இயேசுவின் கன்னத்தில் அறைந்தார். இயேசு அவரிடம்,

இயேசு: "நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டும். சரியாகப் பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்?"

விரிஉரையாளர்: என்று கேட்டார். அதன்பின் அன்னா அவரைக் கட்டப்பட்ட நிலையில் தலைமைக் குரு கயபாவிடம் அனுப்பினார். சீமோன் பேதுரு அங்கு நின்று குளிர் காய்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரிடம்,

மக்கள்: "நீயும் அவனுடைய சீடர்களுள் ஒருவன் தானே"

விரிஉரையாளர்: என்று கேட்டனர். அவர்

பேதுரு: "இல்லை"

விரிஉரையாளர்: என்று மறுதலித்தார். தலைமைக் குருவின் பணியாளருள் ஒருவர்,

பணியாளர்: "நான் உன்னைத் தோட்டத்தில் அவரோடு பார்க்கவில்லையா?"

விரிஉரையாளர்: என்று கேட்டார். பேதுருவால் காது வெட்டப்பட்டவருக்கு இவர் உறவினர். பேதுரு மீண்டும் மறுதலித்தார். உடனே சேவல் கூவிற்று. அதன்பின் அவர்கள் கயபாவிடமிருந்து ஆளுநர் மாளிகைக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள். அப்போது விடியற்காலம். பாஸ்கா உணவை உண்ணுமுன் தீட்டுப் படாமலிருக்க ஆளுநர் மாளிகையில் அவர்கள் நுழையவில்லை. எனவே பிலாத்து வெளியே அவர்களிடம் வந்து,

பிலாத்து: "நீங்கள் இந்த ஆளுக்கு எதிராகக் கூறும் குற்றச்சாட்டு என்ன?"

விரிஉரையாளர்: என்று கேட்டார். அதற்கு அவர்கள்,

மக்கள்: "இவன் குற்றம் செய்யாதிருந்தால் இவனை நாங்கள் உம்மிடம் ஒப்புவித்திருக்க மாட்டோம்"

விரிஉரையாளர்: என்றார்கள். பிலாத்து அவர்களிடம்,

பிலாத்து: "நீங்கள் இவனைக் கொண்டுபோய் உங்கள் சட்டப்படி இவனுக்குத் தீர்ப்பு வழங்குங்கள்"

விரிஉரையாளர்: என்றார். யூதர்கள் அவரிடம்,

மக்கள்: "சட்டப் படி நாங்கள் யாருக்கும் மரண தண்டனை விதிக்க முடியாது"

விரிஉரையாளர்: என்றார்கள். இவ்வாறு, தாம் எப்படிப்பட்ட சாவுக்கு உட்படப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டு இயேசு கூறியிருந்ததை நிறைவேறச் செய்தார்கள். பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு, அவரிடம்,

பிலாத்து: "நீ யூதரின் அரசனா?"

விரிஉரையாளர்: என்று கேட்டான். இயேசு மறுமொழியாக,

இயேசு: "நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப்பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?"

விரிஉரையாளர்: என்று கேட்டார். அதற்கு பிலாத்து,

பிலாத்து: "நான் ஒரு யூதனா, என்ன? உன் இனத்தவரும் தலைமைக் குருக்களும் தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்?"

விரிஉரையாளர்: என்று கேட்டான். இயேசு மறுமொழியாக,

இயேசு: "எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல"

விரிஉரையாளர்: என்றார். பிலாத்து அவரிடம்,

பிலாத்து: "அப்படியானால் நீ அரசன்தானோ?"

விரிஉரையாளர்: என்று கேட்டான். அதற்கு இயேசு,

இயேசு: "அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்"

விரிஉரையாளர்: என்றார். பிலாத்து அவரிடம்,

பிலாத்து: "உண்மையா? அது என்ன?"

விரிஉரையாளர்: என்று கேட்டார். இப்படி கேட்டபின் பிலாத்து மீண்டும் யூதரிடம் சென்று,

பிலாத்து: "இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லையே"

விரிஉரையாளர்: என்றான். மேலும்,

பிலாத்து: "பாஸ்கா விழாவின்போது உங்கள் விருப்பப்படி ஒரு கைதியை விடுதலை செய்யும் வழக்கம் உண்டே! யூதரின் அரசனாகிய இவனை நான் விடுதலை செய்யட்டுமா? உங்கள் விருப்பம் என்ன?"

விரிஉரையாளர்: என்று கேட்டான். அதற்கு அவர்கள்,

மக்கள்: "இவன் வேண்டாம். பரபாவையே விடுதலை செய்யும்"

விரிஉரையாளர்: என்று மீண்டும் கத்தினார்கள். அந்தப் பரபா ஒரு கள்வன்.

விரிஉரையாளர்: பின்னர் பிலாத்து இயேசுவைச் சாட்டையால் அடிக்கச் செய்தான். வீரர்கள் ஒரு முள்முடி பின்னி அவர் தலையின்மேல் வைத்து, செந்நிற மேலுடையை அவருக்கு அணிவித்தார்கள். அவரிடம் வந்து,

மக்கள்: "யூதரின் அரசே வாழ்க!"

விரிஉரையாளர்: என்று சொல்லி அவருடைய கன்னத்தில் அறைந்தார்கள். பிலாத்து மீண்டும் வெளியே வந்து அவர்களிடம்,

பிலாத்து: "அவனை நான் உங்கள்முன் வெளியே கூட்டிவருகிறேன், பாருங்கள். அவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை என்பதை அறிந்;துகொள்ளுங்கள்"

விரிஉரையாளர்: என்றான். இயேசு முள் முடியும் செந்நிற மேலுடையும் அணிந்தவராய் வெளியே வந்தார். பிலாத்து அவர்களிடம்,

பிலாத்து: "இதோ! மனிதன்"

விரிஉரையாளர்: என்றான். அவரைக் கண்டதும் தலைமைக் குருக்களும் காவலர்களும்,

மக்கள்: "சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்"

விரிஉரையாளர்: என்று கத்தினார்கள். பிலாத்து அவர்களிடம்,

பிலாத்து: "நீங்களே இவனைக் கொண்டு போய்ச் சிலுவையில் அறையுங்கள். இவனிடம் குற்றம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை"

விரிஉரையாளர்: என்றான். யூதர்கள் அவரைப் பார்த்து,

மக்கள்: "எங்களுக்கு ஒரு சட்டம் உண்டு. அச்சட்டத்தின்படி இவன் சாகவேண்டும். ஏனெனில் இவன் தன்னையே இறைமகன் என உரிமைகொண்டாடுகிறான்"

விரிஉரையாளர்: என்றனர். பிலாத்து இதைக் கேட்டதும் இன்னும் மிகுதியாக அஞ்சினான். அவன் மீண்டும் ஆளுநர் மாளிகைக்குச் சென்று இயேசுவிடம்,

பிலாத்து: "நீ எங்கிருந்து வந்தவன்?"

விரிஉரையாளர்: என்று கேட்டான். ஆனால் இயேசு அவனுக்குப் பதில் கூறவில்லை. அப்போது பிலாத்து,

பிலாத்து: "என்னோடு பேசமாட்டாயா? உன்னை விடுதலை செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டு, உன்னைச் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்பது உனக்குத் தெரியாதா?"

விரிஉரையாளர்: என்றான். இயேசு மறுமொழியாக,

இயேசு: "மேலிருந்து அருளப்படாவிடில் உமக்கு என் மேல் எந்த அதிகாரமும் இராது. ஆகவே என்னை உம்மிடம் ஒப்புவித்தவன்தான் பெரும் பாவம் செய்தவன்"

விரிஉரையாளர்: என்றார். அதுமுதல் பிலாத்து அவரை விடுவிக்க வழிதேடினான். ஆனால் யூதர்கள்,

மக்கள்: "நீர் இவனை விடுவித்தால் சீசருடைய நண்பராய் இருக்க முடியாது. தம்மையே அரசராக்கிக் கொள்ளும் எவரும் சீசருக்கு எதிரி"

விரிஉரையாளர்: என்றார்கள். இவ்வார்த்தைகளைக் கேட்டதும் பிலாத்து இயேசுவை வெளியே கூட்டி வந்தான். "கல்தளம்" என்னும் இடத்தில் இருந்த நடுவர் இருக்கை மீது அமர்ந்தான். அந்த இடத்திற்கு எபிரேய மொழியில் "கபதா" என்பது பெயர். அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். ஏறக்குறைய நண்பகல் வேளை. பிலாத்து யூதர்களிடம்,

பிலாத்து: "இதோ, உங்கள் அரசன்!"

விரிஉரையாளர்: என்றான். அவர்கள்,

மக்கள்: "ஒழிக! ஒழிக! அவனைச் சிலுவையில் அறையும்"

விரிஉரையாளர்: என்று கத்தினார்கள். பிலாத்து அவர்களிடம்,

பிலாத்து: "உங்கள் அரசனை நான் சிலுவையில் அறையவேண்டும் என்கிறீர்களா?

விரிஉரையாளர்: என்று கேட்டான். அதற்குக் தலைமைக் குருக்கள்,

தலைமைக்குருக்கள்: "எங்களுக்குச் சீசரைத் தவிர வேறுஅரசர் இல்லை"

விரிஉரையாளர்: என்றார்கள். அப்போது பிலாத்து அவரைச் சிலுவையில் அறையுமாறு அவர்களிடம் ஒப்புவித்தான். அவர்கள் இயேசுவைத் தம் பொறுப்பில் ஏற்றுக்கொண்டார்கள். இயேசு சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு "மண்டை ஓட்டு இடம்" என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர். அங்கே அவர்கள் இயேசுவையும் அவரோடு வேறு இருவரையும் சிலுவைகளில் அறைந்தார்கள்; அவ்விருவரையும் இரு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாக அறைந்தார்கள். பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் "நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்" என்று எழுதியிருந்தது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்துக்கு அருகில் இருந்ததால் யூதருள் பலர் இந்தக் குற்ற அறிக்கையை வாசித்தனர். அது எபிரேயம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்தது. யூதரின் தலைமைக் குருக்கள் பிலாத்திடம்,

குருக்கள்: "'யூதரின் அரசன் ' என்று எழுத வேண்டாம்; மாறாக, "யூதரின் அரசன் நான்" என்று அவனே சொல்லிக் கொண்டதாக எழுதும்"

விரிஉரையாளர்: என்று கேட்டுக்கொண்டார்கள். பிலாத்து அவர்களைப் பார்த்து,

பிலாத்து: "நான் எழுதியது எழுதியதே"

விரிஉரையாளர்: என்றான்.

விரிஉரையாளர்: இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின் படைவீரர் அவருடைய மேலுடைகளை நான்கு பாகமாகப் பிரித்து ஆளுக்கு ஒரு பாகம் எடுத்துக் கொண்டார்கள். அங்கியையும் அவர்களே எடுத்துக்கொண்டனர். அந்த அங்கி மேலிருந்து கீழ்வரை தையலே இல்லாமல் நெய்யப்பட்டிருந்தது. எனவே அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி,

படைவீரர்: "அதைக் கிழிக்க வேண்டாம். அது யாருக்குக் கிடைக்கும் என்று பார்க்கச் சீட்டுக் குலுக்கிப் போடுவோம்"

விரிஉரையாளர்: என்றார்கள். "என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து என் உடைமீது சீட்டுப் போட்டார்கள்" என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம்,

இயேசு: "அம்மா, இவரே உம் மகன்"

விரிஉரையாளர்: என்றார். பின்னர் தம் சீடரிடம்,

இயேசு: "இவரே உம் தாய்"

விரிஉரையாளர்: என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார். இதன்பின், அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு,

இயேசு: "தாகமாய் இருக்கிறது"

விரிஉரையாளர்: என்றார். மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே இவ்வாறு சொன்னார். அங்கே ஒரு பாத்திரம் நிறையப்புளித்த திராட்சை இரசம் இருந்தது. அதில் கடற்பஞ்சை நன்கு தோய்த்து ஈசோப்புத் தண்டில் பொருத்தி அதை அவர்கள் அவரது வாயில் வைத்தார்கள் அந்த இரசத்தைக் குடித்ததும் இயேசு,

இயேசு: "எல்லாம் நிறைவேறிற்று"

விரிஉரையாளர்: என்று கூறித் தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார்.

(அனைவரும் முழந்தாள் படியிட்டு மெளனமாக ஜெபிக்கவும்)


விரிஉரையாளர்: அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். அடுத்த நாள் ஓய்வு நாளாகவும் பெருநாளாகவும் இருந்தது. எனவே அன்று சிலுவையில் உடல்கள் தொங்கலாகா என்பதற்காகக் கால்களை முறித்துச் சடலங்களை எடுத்துவிடுமாறு யூதர்கள் பிலாத்திடம் கேட்டுக்கொண்டார்கள். ஆகவே படைவீரர் வந்து இயேசுவோடு சிலுவையில் அறையப் பட்டிருந்தவருள் ஒருவனுடைய கால்களை முதலில் முறித்தார்கள்; பின்னர் மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள். பின்பு அவர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர் ஏற்கெனவே இறந்து போயிருந்ததைக் கண்டு அவருடைய கால்களை முறிக்கவில்லை. ஆனால் படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார் உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன. இதை நேரில் கண்டவரே இதற்குச் சாட்சி. அவரது சான்று உண்மையானதே. அவர் உண்மையையே கூறுகிறார் என்பது அவருக்குத் தெரியும். நீங்களும் நம்ப வேண்டும் என்பதற்காகவே அவர் இதைக் கூறுகிறார். "எந்த எலும்பும் முறிபடாது" என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. மேலும் "தாங்கள் ஊடுருவக் குத்தியவரை உற்றுநோக்குவார்கள்" என்றும் மறைநூல் கூறுகிறது. அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் இயேசுவின் சீடர்களுள் ஒருவர்; யூதருக்கு அஞ்சியதால் தம்மைச் சீடர் என்று வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாதவர். அவர் இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டுபோகக் பிலாத்திடம் அனுமதி கேட்டார். பிலாத்தும் அனுமதி கொடுத்தான். யோசேப்பு வந்து இயேசுவின் சடலத்தை எடுத்துக்கொண்டு போனார். முன்பு ஒருமுறை இரவில் இயேசுவிடம் வந்த நிக்கதேம் என்பவரும் அங்கு வந்து சேர்ந்தார். அவர் வெள்ளைப்போளமும் சந்தனத் தூளும் கலந்து ஏறக்குறைய முப்பது கிலோ கிராம் கொண்டுவந்தார். அவர்கள் இயேசுவின் உடலை எடுத்து யூத அடக்க முறைப்படி நறுமணப் பொருள்களுடன் துணிகளால் சுற்றிக் கட்டினார்கள். அவர் சிலுவையில் அறையப்படடிருந்த இடத்தில் ஒருதோட்டம் இருந்தது. அங்கே புதிய கல்லறை ஒன்று இருந்தது. அதில் அதுவரை யாரும் அடக்கம் செய்யப்படவில்லை. அன்று பாஸ்கா விழாவுக்கு ஆயத்த நாளாய் இருந்ததாலும் அக்கல்லறை அருகில் இருந்ததாலும் அவர்கள் இயேசுவை அதில் அடக்கம் செய்தார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
நமக்காகப் பலியான இயேசு


ஜப்பானில் உள்ள கடற்கரைக் கிராமம் அது. அந்தக் கிராமத்தில் நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்கள் எல்லாம் அடிக்கடி ஏற்படும். மக்களும் அவையெல்லாம் தங்களுடைய வாழ்வில் ஓர் அங்கம் என்பதுபோல் வாழப் பழகிக்கொண்டார்கள்.

இவற்றுக்கிடையில் ஒருநாள் அந்தக் கிராமத்தில் இருந்த மலை உச்சியில் நெல் பயிரிட்டு சாகுபடி செய்துவந்த பெரியவர் ஒருவர் கடல் நோக்கி தன்னுடைய கண்களை ஏறெடுத்துப் பார்த்தார். அப்போது அவர் கண்ட காட்சி அவரை ஒரு கணம் நிலைகுலைய வைத்தது. ஏனென்றால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடலில் அலைகள் கொந்தளித்துக் கொண்டு வந்தன. உடனே அந்தப் பெரியவர் "இச்செய்தியை மக்களுக்கு எப்படியாவது அறிவிக்கவேண்டும், இல்லையென்றால் கடல் தண்ணீர் ஊருக்குள் புகுந்து மக்கள் எல்லாரையும் கொன்றொழித்துவிடும்" என்று யோசித்தவாறு, பரபரப்பானார். பின்னர் ஏதோ சிந்தனைவயப்பட்டவராய், ஒரு தீப்பந்தத்தைப் பொருத்தி, தனது வயலுக்குத் தீ வைத்தார். அவர் வைத்த தீயில் வயல் கொழுத்துவிட்டு எரிந்தது.

இதனைக் கீழேயிருந்து பார்த்த மக்கள், வாளியில் நீரை ஏந்திக்கொண்டு தீயை அணைப்பதற்காக மேலே ஓடிவந்தார்கள். எல்லாரும் மேலே ஓடி வருவதற்குள் வயற்காடு முழுவதும் எரிந்து சாம்பலாயிருந்தது. வந்தவர்கள் அனைவரும் அந்தப் பெரியவரிடம், "வயலில் எப்படி தீப்பற்றியது?" என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெரியவரோ, "நான்தான் தீ வைத்தேன்" என்றார். அவர் எதற்காகத் தீ வைத்தார் என்று சொல்வதற்குள் மக்கள் அனைவரும், "இந்த ஆள் சரியான லூசாக இருப்பாரோ" என்று திட்டத்தொடங்கினார்கள். அவர் அவர்களை அமைதிப் படுத்திவிட்டு தொடர்ந்து பேசினார், "நான் காரணமில்லாமல் என்னுடைய வயலைக் கொழுத்தவில்லை... தொலைவில் பாருங்கள். கடல் அலைகள் எப்படி கொந்தளித்துக் கொண்டு வருகிறன என்பதை. நான் உங்கள் அனைவரையும் இந்த ஆபத்திலிருந்து காப்பாற்ற நினைத்தேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால்தான் நான் என்னுடைய வயலைக் கொழுத்தி, உங்களை இந்த மலை உச்சிக்குக் கொண்டு வந்தேன்".

பெரியவர் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போதே கொந்தளித்துக் கொண்டு வந்த கடல் அலைகள் ஊருக்குள் புகுந்து, வீடுகளையெல்லாம் தரைமட்டம் ஆக்கிவிட்டு, வந்த வேகத்தில் அப்படியே திரும்பிச் சென்றது. இதைப் பார்த்த மக்கள் அனைவரும், மிகப்பெரிய அழிவிலிருந்து தங்களைக் காப்பாற்றிய அந்த பெரியவருக்கு பெரிய நன்றிசொல்லிவிட்டு கீழே இறங்கிச் சென்றார்கள்.

ஊர் மக்களைக் காப்பாற்றும் பொருட்டு, தன்னுடைய வயலையே தீயிட்டுக் கொழுத்திய பெரியவரைப் போன்று, நம் ஆண்டவர் இயேசுவும் நாம் அனைவரும் வாழ்வு பெறும்பொருட்டு தன்னையே சிலுவையில் கையளித்தார். அந்த நிகழ்வினைத்தான் இன்று நாம் அனைவரும் "பெரிய வெள்ளியாக" நினைவுகூர்ந்து பார்க்கின்றோம். ஆண்டில் எத்தனையோ வெள்ளிகள் வந்தாலும், ஆண்டவர் இயேசு மரித்த வெள்ளி போன்று வராது என்பதால்தான் இதனை பெரிய வெள்ளி என்று சிறப்பித்துக் கொண்டாடுகின்றோம்.

ஆண்டவராகிய கடவுள் இந்த உலகின் மேல்கொண்ட பேரன்பினால் மக்களை பாவத்திலிருந்தும் சாவின் பிடியிலும் மீட்க நினைத்தார். அதற்காக தன்னுடைய ஒரே மகன் இயேசு கிறிஸ்துவை இந்த உலகிற்கு அனுப்பினார். இயேசுவோ தன்னுடைய பாடுகளாலும் சிலுவைச் சாவினாலும் தந்தைக் கடவுளின் மீட்புத் திட்டம் நிறைவேற தன்னை முற்றிலும் கையளித்தார். ஆகவே, இயேசு பாடுகள் பட்டதும் கொடிய சிலுவைச் சிலுவைச் சாவை அனுபவித்ததும் நம்மீது கொண்ட அன்பினால்தான் என நாம் உறுதியாகச் சொல்லலாம். இதைத் தான் இறைவாக்கினர் எசாயா இன்றைய முதல் வாசகத்தில், "அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிலைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்" என்கின்றார்.

இயேசு நமக்காக பாடுகளையும் துன்பங்களையும் பட்டதுபோன்று, நாமும் ஒருவர் மற்றவருக்காக, இந்த மானுட விடியலுக்காக துன்பங்களைத் துணிவோடு ஏற்க என்பதைத்தான் இந்த நாள் நமக்கு எடுத்துக்கூறுகின்றது. நாம் பிறருக்காக, நாம் மானுட விடியலுக்காக துன்பங்களை ஏற்றுக்கொள்ள முன்வருகின்றோமா? அல்லது நாம் உண்டு, நம்முடைய வேலையுண்டு, குடும்பமுண்டு என்று இருக்கின்றோமா? என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

வள்ளலார் ஒருமுறை குறிப்பிடுவர், "அடுத்தவரின் துன்பம் தீர்க்கத் துடிக்கும் அருட்கருணையே உண்மையான மனித நேயம்" என்று. நாம் இயேசு கிறிஸ்து போன்று மனிதநேய மிக்கவர்களாக வாழ, அவரைப் போன்று அடுத்துவரின் துன்பம் துடைக்க முயற்சி செய்வோம். இறைத்திருவுளம் நிறைவேற நம்மையே முற்றிலும் கையளிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


- Fr. Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
புனித வெள்ளி

I எசாயா 52: 13-53:12
II எபிரேயர் 4: 14-16; 5: 7-9
III யோவான் 18: 1-19:42

நாம் வாழ்வை நிறைவாகப் பெறும்பொருட்டுத் தன்னையே தந்த இயேசு

நிகழ்வு


சில ஆண்டுகளுக்கு முன்பாக இங்கிலாந்து நாட்டை சார்ந்த பிரெட் மிட்செல் (Fred MitchelI) என்ற இராணுவ வீரருக்கு அந்நாட்டில் கொடுக்கப்படும் மிக உயரிய விருது கொடுக்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டில் கொடுக்கப்படும் மிக உயரிய விருதைப் பெருமளவுக்கு பிரெட் மிட்செல் அப்படியென்ன பெரிய செயலைச் செய்துவிட்டார் என்ற கேள்வி நமக்கு எழலாம். அவர் செய்த செயல் இதுதான்:

இங்கிலாந்து நாட்டிற்கும் அதன் எதிரி நாட்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, எதிரி நாட்டினர், இங்கிலாந்து நாட்டின் ஒரு சிற்றூரில் இருந்த ஆட்டுப்பட்டி ஒன்றில் அணுகுண்டை வீசினர். அவர்கள் அந்த ஆட்டுப்பட்டியில் அணுகுண்டை வீசிய நேரம், அதைக் காவல் காத்துக்கொண்டிருந்த ஆயன் இல்லை. அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பிரெட் மிட்செல்தான் அங்கு இருந்தார். இவர் ஆட்டுப்பட்டியில் எதிரிநாட்டவர் அணுகுண்டை வீசியைப் பார்த்ததும், ஆட்டுப்பட்டிக்கு வேகமாக ஓடிவந்து, அதிலிருந்த முப்பத்து நான்கு ஆடுகளையும் ஒவ்வொன்றாக தன் மார்போடு சேர்த்துத் தூக்கிக்கொண்டு, பாதுகாப்பான ஓர் இடத்தில் வைத்தார். இத்தனைக்கும் குண்டுவீச்சினால் ஆட்டுப்பட்டியே தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. உயிருக்கு ஆபத்தான அந்தச் சூழலிலும்கூட ஆட்டுப்பட்டியில் இருந்த அத்தனை ஆடுகளையும் இவர் தன்னுடைய உயிரைப் பணையம் வைத்துக் காப்பாற்றினார். இதனால்தான் இங்கிலாந்து நாட்டு அரசாங்கம் பிரெட் மிட்செலுக்கு மிக உயரிய விருதைக் கொடுத்துச் சிறப்பு செய்தது.

ஆட்டுப்பட்டியில் இருந்த அத்தனை ஆடுகளும் வாழ்வுபெறுவதற்காக பிரெட் மிட்செல் எப்படித் தன்னுடைய உயிரையும் ஒரு பொருட்டாகக் கருதாது செயல்பட்டோ, அப்படி நம் ஆண்டவர் இயேசு, நாம் அனைவரும் வாழ்வினை நிறைவாகப் பெற்றுக்கொள்ள, தன்னுடைய உயிரையே சிலுவையில் கையளிக்கின்றார். இயேசு கிறிஸ்து, சிலுவையில் நமக்காகத் தன்னுடைய இன்னுயிரைக் கையளித்ததை இன்று நினைவுகூரும் நமக்கு, சிலுவையின் வழியாக இயேசு என்ன செய்தியைச் சொல்கின்றார் என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

சிலுவை தற்கையளிப்பின் சின்னம்

டி.டி. ஃபோர்சைத் (D.T. Forsythe) என்ற அறிஞர் இவ்வாறு கூறுவார்: "கிறிஸ்துவை அறிந்துகொள்ளவேண்டும் என்றால், அதற்கு முதலில் சிலுவையை அறிந்துகொள்ளவேண்டும்." ஆம். நாம் இயேசுவைப் பற்றியும் அவருடைய பேரன்பைப் பற்றியும் அறிந்துகொள்வதற்கு சிலுவையைப் பற்றி அறிந்துகொள்வது மிகவும் அவசியம்.

பழங்காலத்தில் ஒருவரைச் சித்திரவதை செய்வதற்கும் கொடுமைப்படுத்துவதற்கும் பல்வேறுவிதமான தண்டனைகளை கொடுக்கப்பட்டன. பசியோடு இருக்கின்ற சிங்கங்களுக்கு இரையாய்ப் போடுவது; எரிகின்ற எண்ணெய்க் கொப்பறைக்குள் தூக்கிப் போடுவது; அம்புகளை விட்டு உடலைச் சிதைப்பது... இதுபோன்ற தண்டனைகள் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டன; ஆனால், இவற்றை விடவும் மிகவும் கொடிய தண்டனை சிலுவையில் அறைந்து கொல்வது. ஏனென்றால், மற்ற தண்டனைகளில் ஒருவருடைய உயிர் உடனடியாகப் போய்விடும்; சிலுவைச் சாவோ அப்படியில்லை. ஒருவரை அணு அணுவாக கொல்வதற்காகவே சிலுவைச் சாவு கொடுக்கப்படும். இத்தகைய கொடிய தண்டனையை பெலிஸ்தியர்கள்தான் முதலில் கண்டுபிடித்தார்கள். அவர்களிடமிருந்து இதை அப்படியே எடுத்துக்கொண்ட உரோமையர்கள் தங்களுக்கு எதிராக இருந்தவர்களுக்கு இத்தகைய தண்டனையை கொடுத்தார்கள்.

இங்கு இயேசுவுக்குச் சிலுவை சாவு கொடுக்கப்பட்டது என்பதை, அதிகார வர்க்கம் அவருக்குக் கொடுத்தது என்று சொல்வதை விடவும், "இவ்வுலகம் வாழ்வு பெறவேண்டும்" என்ற தந்தையின் திருவுளம் நிறைவேறவேண்டும் என்பதற்காக இயேசுவே அதைப் பெற்றுக்கொண்டார் சொல்லலாம். யோவான் நற்செய்தி 10: 18 இல் வாசிப்பது போல, சிலுவைச் சாவுக்கு இயேசு தன்னுடைய உயிரையைத் தாமாகவே கொடுத்தார். அப்படியானால், சிலுவையைத் தற்கையளிப்பின் சின்னம் என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

சிலுவை பேரன்பின் சின்னம்

இவ்வுலகம் வாழ்வுபெற வேண்டும் என்ற தந்தையின் திருவுளம் நிறைவேறவேண்டும் என்பதற்காக, சிலுவையில் இயேசு தன்னையே கையளித்ததால், சிலுவை தற்கையளிப்பின் சின்னம் என்று பார்த்தோம். சிலுவை தற்கையளிப்பின் சின்னம் மட்டுமல்ல, அது பேரன்பின் சின்னம். புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் கூறுவது போல, இவ்வுலகில் நல்லோர் ஒருவருக்காக யாரேனும் தன்னுடைய உயிரைத் தரலாம்; ஆனால், நாம் பாவிகளாக இருக்கும்பொழுதே, கிறிஸ்து நமக்காகச் சிலுவையில் தன் உயிரைத் தந்தார் எனில், அங்குதான் கடவுளின் பேரன்பு வெளிப்படுகின்றது. ஆம், ஆண்டவராகிய கடவுள் தன் ஒரே மகனையே சிலுவையில் கையளிக்கும் அளவுக்கு இவ்வுலகின்மீது அன்பு கூர்ந்தார் (யோவா 3:16). அப்படியானால், ஒவ்வொரு முறையும் நாம் சிலுவையை உற்றுநோக்கும்போதும், கடவுளின் நம்மை எந்தளவுக்கு அன்பு செய்திருக்கின்றார், இன்னும் அன்பு செய்கின்றார் என்பது நமக்குத் தெரியவேண்டும்.

மிகப்பெரிய மறைப்போதகரான டி.எல். மூடி ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார்: "கிறிஸ்தவ வாழ்வின் மையமாக இருப்பது திருவிவிலியம். திருவிவிலியத்தின் மையமாக இருப்பது, இயேசுவின் சிலுவைச் சாவு. இயேசுவின் சிலுவையின் சாவின் மையமாக இருப்பது கடவுளின் பேரன்பு." ஆம், கடவுளின் பேரன்புதான் இயேசுவை சிலுவைச்சாவை ஏற்க வைத்தது.

சிலுவை வெற்றியின் சின்னம்

சிலுவை, தற்கையளிப்பின் சின்னமாக மட்டுமல்ல, பேரன்பின் சின்னமாக மட்டுமல்ல, வெற்றியின் சின்னமாக இருக்கின்றது. அது எவ்வாறு எனில், இயேசுவுக்கு முன்பாகச் சிலுவையில் அறையைப்பட்ட யாரும் இறந்து உயிர்த்தெழ வில்லை; இயேசுவே சிலுவையில் அறையப்பட்டு, இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். இதனால் தோல்வியின் சின்னமாக, அவமானத்தின் சின்னமாக இருந்த சிலுவை, இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு வெற்றியின் சின்னமாக (கொலோ 2:15) மீட்பின் சின்னமாக மாறுகின்றது. புனித பவுல் இதைத்தான், "சிலுவை பற்றியச் செய்தி மீட்புப் பெறும் நமக்கோ கடவுளின் வல்லமை" (1 கொரி 1: 18) என்று கூறுகின்றார்.

ஆகையால், தற்கையளிப்பின் சின்னமாகவும் பேரன்பின் சின்னமாகவும் வெற்றியின் சின்னமாகவும் இருக்கும் சிலுவையை நாம் அவமானத்தின் சின்னமாய்ப் பார்ப்பதைத் தவிர்த்து, இவ்வுலகம் வாழ்வுபெற இயேசு சிலுவையைச் சுமந்தது போல், நாமும் இவ்வுலகம் வாழ்வு பெற, சிலுவையைச் சுமக்கத் தயாராவோம். சிலுவையின்றி சிம்மாசனம் இல்லையென உணர்வோம்; பாடுகள் இன்றி பரகதி இல்லையென உணர்வோம். அதன்மூலம் இயேசுவின் உண்மையான சீடர்களாக முற்படுவோம்.

சிந்தனை

"சிலுவையிலிருந்து இயேசு நம்மை நோக்கிச் சொல்கிறார்: "நான் உன்னை மிகவும் அன்பு செய்கிறேன்" என்று" என்பார் பில்லி கிரஹாம் என்ற மறைப்போதகர். ஆகையால், நம்மீது கொண்ட அன்பின் மிகுதியால், தன்னையே தந்த இயேசுவின் அன்பை உணர்ந்தவர்களாய், அவருடைய அன்பிற்குச் சாட்சிகளாய் வாழ்வோம். அதன்வழியாய் இறையருளை நிறைவாய்ப் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
ஆண்டவரின் திருப்பாடுகளின் புனித வெள்ளி

மறையுரை 1: மறக்க முடியாத முத்தம்

இயேசு தாம் உயிர்த்தெழுந்தபின் நாற்பது நாட்கள் மண்ணுலகில் தம் சீடர்களோடு இருந்துவிட்டு விண்ணகம் ஏறிச் செல்கின்றார். அவரை வானுலகில் வரவேற்க வானகத் தந்தை வானதூதர்களோடு காத்துக் கொண்டிருக்கிறார். தன் மகனைக் கண்டவுடன் ஓடிச் சென்று ஆரத் தழுவிக் கொள்கின்றார்.

"வா! மகனே! வா! என் வலப்புறம் அரியணை உனதாகட்டும்!" என்று வரவேற்கின்றார்.

அந்நேரம் இயேசுவின் முகம் சற்று வாடியிருக்க தந்தை கேட்கின்றார்: "என்ன மகனே? என்ன ஆயிற்று? நான் பூவுலகிற்கு அனுப்பியதில் உனக்கு எதுவும் வலி தந்ததா? சொல்! பெத்லகேமில் மாடடைக் குடிலில் பிறந்தது கஷ்டமாக இருந்ததா? எருசலேம் ஆலயத்தில் நீ தொலைந்து போனது கஷ்டமாக இருந்ததா? பாவிகளோடு நின்று யோர்தான் நதிக்கரையில் திருமுழுக்கு பெற்றது வலித்ததா? யூதேயா, கலிலேயா, சமாரியா எனப் பயணம் செய்து இறையரசைப் போதித்தது கஷ்டமாக இருந்ததா? உன் சீடர்கள் உன் போதனை கடினமாயிருக்கிறது என்று விலகியபோது கஷ்டமாக இருந்ததா? எல்லாருமே உனக்கு எதிராக எழுந்து உன்னைச் சிலுவையில் அறைந்தபோது உனக்குக் கஷ்டமாயிருந்ததா? இரண்டு கள்வர்களுக்கு மத்தியில் கள்வனைப்போல தொங்கியது உனக்குக் கஷ்டமாகயிருந்ததா? பின் ஏன் வாட்டமாயிருக்கிறாய்? சொல்." சற்று நேரம் அமைதியாய் இருந்துவிட்டு இயேசு சொன்னாராம்: "ஒன்றே ஒன்றுதான் கஷ்டமாயிருந்தது அப்பா.

முத்தம். ஒரேயொரு முத்தம். அதுதான் எனக்குக் கஷ்டமாயிருந்தது. என்னோடு உண்டு, என்னோடு பயணம் செய்து, என்னோடு உறங்கிய என் நண்பன் ஒருவனின் முத்தம்தான் இன்னும் எனக்கு வலிக்கிறது." "நீ எனக்கு உரிமையானவன்" என்று சொல்லும் முத்தத்தை வைத்தே "நீ எனக்கு உரிமையில்லை" என்று சொன்ன அந்த முத்தம் தான் இன்னும் வலிக்கிறது!

இன்று ஆண்டவரின் திருப்பாடுகளைக் கொண்டாடுகிறோம். நாற்பது நாட்கள் சிலுவைப்பாதைகள் செய்தும், நோன்பு இருந்தும், செபித்தும், பிறரன்புச் செயல்கள் வழியாகவும் இயேசுவின் பாடுகளை சிந்தித்தோம். அதில் பங்கேற்றோம். இன்றும் பெரிய சிலுவைப்பாதையில் சிந்தித்தோம். சிலுவையே இந்நாளில் நம் கண்முன் நிற்கின்றது.

யோவான் நற்செய்தியாளர் எழுதியபடி இயேசுவின் திருப்பாடுகளை வாசிக்கக் கேட்டோம். சிலுவை நமக்கு இன்று சொல்லும் ஒரே வார்த்தை: "சாய்ஸ்" (தேர்வு). பிலாத்து மக்களிடம் "இதோ! உங்கள் அரசன்!" என, அவர்கள் "எங்களுக்கு சீசரைத் தவிர வேறு அரசர் இல்லை" என்று குரலெழுப்புகின்றனர் (யோவான் 19:14-15). மனுமகனுக்குப் பதில் பரபாவைத் தேர்ந்து கொள்கின்றனர்.

இயேசுவின் தீர்ப்பில் இயேசுவைவிட இந்த உலகமே தீர்ப்பிடப்படுகின்றது. நாம் யாரைத் தேர்ந்து கொள்கிறோம்? சிலுவை என்பது தேர்ந்து கொள்தலே. இயேசுவின் வாழ்வில் சிலுவைக்கு இரண்டு அர்த்தம் இருக்கின்றது: "என்னைப் பின்செல்ல விரும்புபவர் நாள்தோறும் தன் சிலுவையைத் தூக்கிக் கொண்டு வரட்டும்" என்று சொல்லும் போது இயேசு நம் வாழ்வில் அன்றாடம் நாம் தெரிந்துகொள்பவற்றை, நம் "சாய்ஸை" சிலுவையெனக் குறிப்பிடுகின்றார். இரண்டாவதாக, மரத்தாலான சிலுவையை அவரே சுமக்கின்றார். சிலுவை என்பது மரம் மட்டுமல்ல. நம் வாழ்வும் கூடத்தான். நம் வாழ்வில் நாம் மேற்கொள்ளும் சாய்ஸ்கள் கூடத்தான். இயேசுவின் போதனைகள் அனைத்திலுமே ஒரு "சாய்ஸ்" இருக்கும்: கடவுளா? செல்வமா? என்னும் சாய்ஸ். நேர்மையாளரா? பாவிகளா? என்னும் சாய்ஸ். நம்மைச் சார்ந்தவரா? நமக்கு எதிரானவரா? என்னும் சாய்ஸ். அகன்ற வாயிலா? இடுக்கமான வாயிலா? என்னும் சாய்ஸ். ஒளியா? இருளா? என்னும் சாய்ஸ். இவற்றில் நாம் ஏதாவது ஒன்றைத்தான் தெரிவு செய்ய முடியும். அப்படி நாம் தெரிவு செய்யும் ஒன்று நமக்குச் சிலுவையாகத் தெரிந்தாலும் அது நமக்கு மீட்பைக் கொண்டு வரும்.

ஒவ்வொரு பொழுதுமே நம் முன் சாய்ஸ் இருக்கின்றது: "படிப்பா? ஆதித்யா டிவியா? - திருப்பலியா? கூடக் கொஞ்ச நேரக் குட்டித் தூக்கமா? - செபமா? சீரியலா? - உடல்நலமா? டாஸ்மாக்கா? - காலையில் வாக்கிங்கா? சுகர் கம்ப்ளைண்டா? - இப்படியாக நாம் ஒவ்வொரு பொழுதும் தெரிவு செய்கின்றோம். இரண்டும் வேண்டும் என்று சொல்ல முடியுமா? உடல்நலமும் வேண்டும், குடிப்பழக்கமும் வேண்டும் என்றால் சாத்தியமா? சத்தியமாக இல்லை. பகைமை என்ற இடத்தில் அன்பையும், பழிக்குப் பழி என்ற இடத்தில் மன்னிப்பையும் தெரிவு செய்கின்றார் இயேசு. இன்று நாம் எப்படித் தெரிவு செய்யப் போகிறோம்?

னுளைஉசiஅiயெவந வாந டழறநச கசழஅ வாந hiபாநச. நுஅடிசயஉந வாந hiபாநச யனெ நடiஅiயெவந வாந டழறநச. நம் முன் உள்ள இரண்டில் தாழ்ந்தது எது, உயர்ந்தது என்று முதலில் ஆராய வேண்டும். உயர்ந்ததைத் தழுவிக் கொண்டு, தாழ்ந்ததை விட்டுவிட வேண்டும். இந்த முடிவில் மாற்றம் இருக்கக் கூடாது.

உயர்ந்ததைத் தழுவிக் கொள்வதே சிலுவை. மகிழ்ச்சியோடு தழுவிக் கொள்ள வேண்டும். அல்லது துன்பத்தோடு விட்டு விட வேண்டும். இரண்டிற்கும் நடுவழி கிடையாது. தழுவிக் கொள்ளவும் மாட்டேன், விட்டு விடவும் மாட்டேன் என்பதும், தழுவியும் கொள்வேன், விட்டும் விடுவேன் என்பதும் சாத்தியம் அல்ல. பிலாத்து தன் அரியணையைக் காத்துக் கொள்வதை தன் சாய்ஸ் என நினைக்கிறான். தலைமைக் குருக்கள் தங்கள் பாரம்பரியத்தைக் காத்துக்கொள்ள விழைகின்றனர்.

சிலர் வேடிக்கை பார்க்கின்றனர். சிலர் கூச்சல் போடுகின்றனர். இந்தக் கூட்டத்தில் எல்லா வகை மக்களும் இருக்கின்றார்கள். இந்தக் கூட்டத்தில் நான் யார்? நாம் சரியானவற்றைத் தேர்வு செய்யாத போது முத்தமும் முள்ளாய்க் குத்தும்தானே!

மறையுரை 2: இவர்களில் நான் யார்?

யோவான் நற்செய்தியாளர் எழுதியபடி இயேசுவின் பாடுகளை நாம் வாசிக்கக் கேட்டோம். இந்தப் பாடுகளின் வாசகத்தின் பின்புலத்தில் இருந்தது கூட்டம். இங்கே நம் ஆலயத்தில் இருப்பதும் கூட்டம்.

இயேசுவின் பணிவாழ்வில் இருந்த கூட்டம், அவரை எருசலேமிற்குள் ஆரவாரமாக அழைத்த கூட்டம் இன்று அவரின் தீர்ப்பின்போதும் நிற்கின்றது.இந்தக் கூட்டத்தை மூன்று குழுக்களாகப் பிரிக்கலாம். இந்தக் கூட்டத்தில் நான் யார்?


யூதர்களும், அவர்களின் தலைவர்களும்


இயேசுவிடம் இவர்கள் நேரடியாகப் பேசவில்லை. பிலாத்திடம் மட்டுமே பேசுகின்றனர். கூக்குரலிடுகின்றனர். 'தலைமைக்குருவுக்கு இப்படியா பதில்கூறுகிறாய்?" (யோவா 18:22) என்று இயேசுவைக் கன்னத்தில் அறைந்தது இக்குழுவே. 'எங்களுக்குச் சீசரைத் தவிர வேறு அரசர் இல்லை" (19:15) - இந்த வார்த்தைகள்தாம் இஸ்ராயேல் வரலாற்றின் மிகச் சோகமான வார்த்தைகள். 'நாம் உங்கள் கடவுளாயிருப்போம், நீங்கள் என் மக்களாயிருப்பீர்கள்" என்று மோசே தலைமையில் ஏன் அவர்களின் முதுபெரும் தந்தையர் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு காலம் தொட்டு வந்த உடன்படிக்கையை, யாவே இறைவனின் அரசுரிமையை வெகு எளிதாகத் தூக்கி எறிந்து ஒரு புறவினத்து அரசனை தங்கள் அரசராக ஏற்க, அறிக்கையிடத் துணிகின்றனர். இது ஒரு சமயப் புறக்கணிப்பு. அவர்கள் ஒளியைவிட இருளையே விரும்பினர் (3:19). இயேசுவுக்கு தீர்ப்பு அளிப்பதாக எண்ணித் தங்களுக்கே தீர்ப்பிட்டுக்கொண்டவர்கள் இவர்கள் (12:47). 'அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்குரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை" (1:11).


பிலாத்து


யூதர்களுக்கும், இயேசுவுக்கும் இடையே நடக்கும், ஓடும் ஒரு ஆளுநன். இருளுக்கும், ஒளிக்கும் நடுவே ஓடி முடிவெடுக்க முடியாமல் நிற்கும் ஒரு சராசரி மனிதன். தயக்கம், பயம், குழப்பம் - இவைதான் இவனிடம் இன்று மேலோங்கும் உணர்வுகள். இயேசு யோவான் நற்செய்தியில் மூன்று புறவினத்தாரைச் சந்திக்கின்றார்: சமாரியப் பெண் (4), கிரேக்கர்கள் (12:20), பிலாத்து (19). பிலாத்து மட்டும்தான் இயேசுவை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றான். இயேசுவின் போதனைகளையும், பணிகளையும் 'உண்மையா அது என்ன?' என்று கேலியாக்கி விடுகின்றான். தனக்கென்று பதவி, அரசியல் அதிகாரம், படை வீரர்கள், மரண தண்டனை வழங்கும் அரசியல் அதிகாரம்  வைத்திருந்தாலும் இயேசுவின் முன் அனைத்தையும் இழந்து நிற்கின்றான். இயேசு தீர்ப்பிடுப்படுதல் என்பதைவிட பிலாத்து தீர்ப்பிடப்படுதல் என்றுதான் இந்நிகழ்வை நாம் அழைக்க வேண்டும். இயேசுவின் வெளிப்படுத்துதலை உதறத் துணிகின்றான். அவனும் இருளிலேயே நடக்க விரும்பினான் (3:19).


இயேசு


அன்பு செய்யும் ஆயன். சான்று பகரும் நீதிபதி. மனுவுருவான வார்த்தை. தான் உண்மைக்குச் சான்று பகர வந்ததாக மொழிகின்றார் (காண் 1:7,15,19,34. 3:26. 5:33). இவரின் அடையாளமும் பணியும் ஒன்றுதான். இவரின் வாழ்வும் போதனையும் ஒன்றுதான்: உண்மை, உண்மையைத் தவிர வேறில்லை.

இன்று இவருக்கு இரண்டு முகங்கள்: 1) ஏளனம் செய்யப்பட்ட, தீர்ப்பிடப்பட்ட, எள்ளி நகையாடப்பட்டது ஒருபுறம். 2) தன் ஆடுகளுக்காக உயிரைக் கொடுக்கின்ற ஆயன், சிலுவை என்ற அரியணையில் அமர்ந்த அரசன். உலகிற்கு தீர்ப்பளிக்கும் நிதிபதி மற்றொருபுறம். இம்மரணம் இயேசுவிற்குத் தோல்வியல்ல. உலகத்திற்குத்தான் தோல்வி. அங்கே நின்றிருந்தவர்களின் பார்வைக்கு இது ஒரு தோல்வியாகத் தெரிந்தது. ஆனால் இயேசுவைப் பொறுத்த வரையில் இது உயர்த்தப்படுதல் (3:14). அவர் மாட்சி பெறும் நேரம் (12:23). கோதுமை மணி மடியும் தருணம்.

இந்தக் கூட்டத்தில் நான் யார்? இன்று நான் அளிக்கும் பதிலே உயிர்ப்பு அனுபவத்திற்கு என்னை அழைத்துச் செல்லும். 'உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்" (8:32).

மறையுரை 3: மரம் என்னும் வரலாறு

நம்மைச் சுற்றி நாம் காண்கின்ற ஒவ்வொரு மரமும் ஒரு வரலாறு. எங்கோ கிடந்த விதையை காற்று சுமந்து வந்து நம் வீட்டருகில் விட்டிருக்கலாம். ஏதோ ஒரு பறவை அதை எச்சமாக நம் தோட்டத்தில் விதைத்திருக்கலாம். அல்லது நாமே அதை ஒரு விதையாகவோ, கன்றாகவோ நட்டிருக்கலாம். பு+மிக்குள் புதைக்கப்படுகின்ற எந்த விதையும் போராடித்தான் வளர வேண்டும். பூமித்தாய் தன் வாயைத் திறந்து எளிதாக ஏற்பதில்லை. விதை போராடி நிலத்தின் உள்ளே செல்ல வேண்டும்.

போராட்டம் அத்துடன் முடிவதில்லை. முன்பைவிட அதிகம் போராடி நிலத்ததைக் கிழித்து வெளியே வர வேண்டும். முளைவிட்டு வெளியுலகைப் பார்த்தாலும் அதன் போராட்டம் தொடரும். யாராவது தெரியாமல் மிதித்து விடலாம். களையென்று கருதி பிடுங்கி விடலாம். ஆடு, மாடுகள், கோழிகள் தங்களுக்கு உணவாக்கி விடலாம். சிறு குழந்தைகள் அதை வைத்து விளையாடி அழித்து விடலாம்.

எல்லாவற்றையும் தாண்டி வளர்ந்தாலும், மழை, வெயில், காற்று, குளிர் அனைத்தையும் எதிர்கொண்டு ஒரு மரமாக உருவெடுக்கிறது. இந்த மௌனமான போராட்டத்தில் ஒவ்வொரு மரமும் பெருமிதத்தோடு தழுவிக்கொள்வது வரலாற்றில் வெற்றி.

ஒவ்வொரு மரமும் ஒரு வரலாறு. சிலுவை என்ற மரமும் ஒரு வரலாறு. தொடக்கத்தில் மரத்தால் தோல்வி கண்ட மனுக்குலத்தை சிலுவை மரம் வெற்றிபெற வைக்கின்றது. சிலுவை மரமும் ஒரு வெற்றியின் வரலாறுதான்.

முதற்பெற்றோரிடம் வாக்குறுதியாக இடப்பட்ட விதை ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு, மோசே, யோசுவா, நீதித்தலைவர்கள், தாவீது, சாலமோன் என வளர்ந்து எசாயா, எரேமியா என நீருற்றப்பட்டு இயேசு கிறிஸ்துவில் கனிகிறது இந்த மீட்பின் மரம். சிலுவை என்றால் அவமானம், வலி, அவலம், இறப்பு என்ற நிலை கிறிஸ்துவில் பெருமை, மகிழ்ச்சி, உயர்வு, வாழ்வு என மலர்கிறது.

இந்தச் சிலுவை என்பதை வெறும் மரம் என்று நாம் எடுத்துக்கொண்டாலே அத நமக்கு சவால்விடும் மரமாக, வரலாறு படைக்கத் தூண்டும் மரமாக இருக்கின்றது. சிலுவை மரத்தின் முப்பரிமாணச் சவால்கள்:


சிலுவை நம் பார்வையை அகலமாக்குகின்றது

சிலுவை நமக்கு பெருமை உணர்வைத் தருகின்றது

சிலுவை நம் வாழ்விற்கு சமநிலையைத் தருகின்றது

சிலுவை நம் பார்வையை அகலமாக்குகின்றது


நாம் சாதாரணமாக ஒரு மரத்தில் ஏறிப் பார்க்கும்போது தரையிலிருந்து பார்க்கும் பார்வையைவிட நம் பார்வை அகலமாகின்றது. ஒரு சிலரை மட்டுமே பார்க்கின்றோம் என்ற நிலை மாறி நம்மால் பலரைப் பார்க்க முடிகின்றது. கீழிருக்கும்போது நம் பார்வைக்கு மறைவாய் இருந்தது தெளிவாகின்றது. இயேசு சிலுவையில் நின்றபோதுதான் வாழ்க்கைப்பாடமும் அவரது வாழ்வில் வெளிப்படுகின்றது. "ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள்" "உங்கள் வலது கன்னத்தில் அறைந்தால் இடது கன்னத்தையும் காட்டுங்கள்" "உங்கள் பகைவர்களை மன்னியுங்கள்" என்று பாடம் சொன்ன இயேசு சிலுவையில் நின்றபோது "தந்தையே இவர்களை மன்னியும்" என்று வாழ்ந்து காட்டுகின்றார். நாம் நம் வாழ்க்கைச் சூழலில் உறவுகளில் விரிசல்கள் விழும்போது நமது குறுகிய பார்வையினால் விரிசல்களைப் பெரிதாக்கிவிடுகின்றோம். சாதாரண நிலையிலிருந்து கொஞ்சம் மேலே எழுந்து சிந்தித்தோமென்றால் நம் பார்வை பெரிதாகும். நாம் ஒருவர் மற்றவரை எளிதாக ஏற்றுக்கொள்ள முடியும்.


சிலுவை நமக்கு பெருமை உணர்வைத் தருகிறது


நாம் அனைவருமே வீட்டின், பணியிடங்களின் மொட்டை மாடிக்கு எப்போதாவது ஏறியிருப்போம். துணிகளை உலர்த்த, வடாகம் காயப்போட, துப்புரவுப் பணிக்கு, மராமத்துப் பணிகளுக்கு என்ற மாடி ஏறுகின்ற நாம் மாடியிலிருந்து கீழே குனிந்து பார்த்தபோது நம்மையறியாமலேயே தொற்றிக்கொண்ட ஒரு உணர்வு "பயம்". ஆனால் பயம் உடனடியாக மறைந்த ஒரு வித பெருமித உணர்வு நம்மில் பிறக்கின்றது. கீழே நிற்கின்ற மனிதர்கள், சாலைகளில் செல்லும் வாகங்கள், செடி, கொடிகள், என்று இந்த உலகமே நம் காலடிகளுக்குள் வந்து விட்டதாக அந்த நேரத்தில் நாம் உணர்கிறோம். நானே ராஜா, நானே ராணி என்ற வெற்றியுணர்வு நம்மில் வருகின்றது. சிலுவை மரமும் இயேசுவுக்குப் பெருமித உணர்வு தந்ததால்தான் தான் துன்புற்ற நிலையிலும் நல்ல கள்வனைப் பார்த்து "நீ இன்றே என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பாய்" என்ற அரசாட்சியில் அவனுக்கிருந்த பங்கை ஆணித்தரமாக வாக்களிக்கின்றார். நாமும் இந்த மரத்தில் இயேசுவோடு ஏறினோம் என்றால் நமது தாழ்வு மனப்பான்மைகளுமம், இயலாது என்கிற மனமும் மாறி என்னால் முடியும் என்கிற பெருமிதம் நம்மில் பிறக்கும்.


சிலுவை நம் வாழ்விற்கு சமநிலையைத் தருகின்றது


சிலுவை இரண்டு கோடுகளின் சங்கமம். நெடுக்கும், குறுக்கும் சந்திக்கும் ஒரு அடையாளம். இது நம் வாழ்வின் சமநிலையைத் தூண்டுகிறது. ஒவ்வொரு மனிதரும் வேரூன்ற வேண்டும், விழுதுகளைப் பரப்ப வேண்டும் என்ற நிலையை அடையாளப்படுத்துவது இந்த சிலுவை மரம். சிலுவையின் நீளமான பகுதி இறையன்பில் வேரூன்ற நம்மை அழைக்கின்றது. இந்த வேரூன்றும் நிலையே நம்மை ஒளியின் மக்களாக மாறச் செய்கிறது. சிலுவையின் குறுக்காக வைக்கப்படும் பகுதி மானிடர் நடுவில் நாம் உப்பாக மாறி பிறரன்பில் விழுதுகளைப் பரப்ப நம்மை அழைக்கின்றது. வேரூன்றுதல் மட்டும் இருந்த விழுதுகள் பரப்பவில்லையெனில் நாம் ஆன்மீக அடிப்படைவாதிகளாக மாறி ஒருவர் மற்றவரை சபிக்கவும், குற்றப்படுத்தவும் தொடங்கி விடுவோம். வேர்கள் வேண்டாம் விழுதுகள் மட்டும் போதும் என்று மனுக்குலத்தின் விடுதலையை மட்டும் முன்னிறுத்தினால் அது நுனிப்புல் மேய்கின்ற நிலையாக மாறிவிடும். வேரூன்றுதலையும், விழுதுகள் பரப்புவதையும் சமநிலைப்படுத்துவதுதான் சிலுவை.

நாமும் அவரோடு சிலுவை மரம் ஏறுவோம். அவரோடு நம்மை அறைந்து கொள்வோம். நம் பார்வை அகலமாகட்டும். நம் உணர்வுகள் உயரட்டும். நம் வாழ்வு சமநிலை அடையட்டும். ஆமென்.

நன்றி: மறைத்திரு இயேசு கருணாநிதி, உரோமை



மறையுரைச் சிந்தனை

அவர் நமக்காக மரித்தார்

அமெரிக்காவில் உள்நாட்டுப்போர் ஏற்பட்டபோது, அந்நாட்டு அரசாங்கமானது, தன்னுடைய நாட்டிலிருந்த பெரும்பாலான ஆண்களை இராணுவத்தில் சேர்ந்து போர்புரிய வேண்டுமென்று கட்டாயப்படுத்தியது.

தன்னுடைய மனைவியை இழந்து, ஒரே ஒரு மகனோடு வாழ்ந்து வந்த விவசாயி ஒருவரையும் அமெரிக்க அரசாங்கமானது விட்டுவைக்க வில்லை. அவரும் இராணுவத்தில் சேர்ந்து, போர்புரியுமாறு அவரைக் கட்டாயப்படுத்தியது.

அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மனைவி இல்லாமல், தன்னுடைய மகனை வளர்க்க மிகவும் கஷ்டப்பட்ட அந்த விவசாயி, ஒருவேளை தானும் இராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காகப் போர்புரியும் பட்சத்தில், தன்னுடைய மகனை யார் பராமரிப்பார் என்ற குழப்பத்தில் இருந்தார்.

அந்த நேரத்தில் தனக்கென்று எந்த ஒரு சொந்தமும் இல்லாது இருந்த இளைஞன் ஒருவன், அந்த விவசாயிக்காக தான் இராணுவத்தில் சேர்ந்து, போர்புரிய முன்வந்தான். இராணுவமும் அதற்குச் சரி என்று ஏற்றுக்கொண்டது.

போர்க்களத்திற்குச் சென்ற அந்த இளைஞன், முதல்கட்டமாக நடந்த போரில் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தான். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட விவசாயி கண்ணீர்விட்டு அழுதார். பின்னர் போர்களத்திற்குச் சென்று, இறந்த அந்த இளைஞனின் உடலை எடுத்து வந்து, தன்னுடைய வீட்டுக்குப் பின்புறம் இருந்த கல்லறைத் தோட்டத்தில் அவனைப் புதைத்தான். அந்தக் கல்லறையின் மேலே இப்படியாக எழுதி வைத்தார் "இவன் எனக்காக மரித்தான்" என்று. (He Died For Me).

யாரோ ஒரு விவசாயிக்காக அந்த இளைஞன் தன்னுடைய உயிரையே தந்தது போன்று, பாவிகளாகிய நமக்காக ஆண்டவர் இயேசு தன்னுடைய இன்னுயிரையே தந்தார். அதைதான் இன்றைக்கு "பாடுகளின் பெரிய வெள்ளியாக நினைவுகூர்ந்து பார்க்கின்றோம்.

ஜான் பேஜ் என்ற அறிஞர் இவ்வாறு எழுதுவார், "கிறிஸ்தவ மதம் என்பது மீட்பின் மதம். இம்மதத்தின் வேதநூலாகிய விவிலியத்தின் நடுநாயகமாக இருப்பவர் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. மேலும் அவருடைய வாழ்வின் நடுநாயகமாக இருப்பது அவருடைய பாடுகளே " என்று குறிப்பிடுவார். ஆம், இயேசுவின் சிலுவை மரணமும், அவருடைய பாடுகளும்தான் அவருடைய வாழ்வின்/ கிறிஸ்தவ வாழ்வின் மையமாக இருக்கின்றது. அவர் தனக்காக அல்ல, நமக்காக தன்னுடைய இன்னுயிரையே தந்தார்.

இந்த நாளில் நாம் படிக்கக்கேட்ட இறைவார்த்தையின் அடிப்படையில் ஒருசில கருத்துகளை சிந்தித்துப் பார்ப்போம்.

எசாயாப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் துன்புறும் ஊழியன்/ இயேசு என்னும் மெசியா எப்படியெல்லாம் துன்பத்தை அனுபவிப்பார் என்று பற்றிச் சொல்லப்படுகின்றது. அவர் இகழப்பட்டார்; மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்; காறி உமிழப்பட்டார்; சாட்டையால் அடிக்கப்பட்டார்; மனித சாயலே இல்லாத அளவுக்குத் துன்புறுத்தப்பட்டார். இவையெல்லாம் யாருக்காக? பாவிகளாகிய நமக்காக. அதனால்தான் எசாயா இறைவாக்கினர் தொடர்ந்து சொல்வார், "அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம் தீச்செயல்களுகாக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிலைவாழ்வை அளிக்கத் தண்டிக்கப்பட்டார்" என்று.

ஆம், இயேசு நமக்காகவும், நம்மைப் பாவங்களிலிருந்து மீட்பதற்காகவுவே இப்படிப்பட்ட ஒரு கொடிய சிலுவை மரணத்தை சந்தித்தார். இப்படிப்பட்ட ஒரு சாவை இயேசுவைத் தவிர வேறு எந்த மனிதரும் சந்தித்ததில்லை. இயேசுவைப் போன்று யாரும் இப்படி பிறருக்காகத் தன்னுயிரைத் தந்ததில்லை. இதை நாம் மனதில் இருத்தி சிந்திக்கவேண்டும்.

ரஷ்யாவை ஸ்டாலின் ஆட்சி செய்துகொண்டிருந்த தருணம். அப்போது இராணுவ ஆட்சி ரஷ்யாவில் அமுல்படுத்தப்பட்டிருந்தது. அப்படிப்பட்ட நேரத்தில், ஒரு வயதான பெண்மணி, தேவாலயத்திற்குச் சென்று, அங்கிருந்த இயேசுவின் பாடுபட்ட சிரூபத்தையும், குறிப்பாக, அவருடைய கால்களில் ஆணிகளால் ஏற்பட்ட காயத்தையும் முத்தி செய்துகொண்டிருந்தார். இதைப் பார்த்த ஒரு இராணுவ வீரன் அவர் அருகே வந்து, "உங்களால் இதுபோன்று ஸ்டாலினுடைய பாதங்களை முத்தி செய்யமுடியுமா?" என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்மணி, "என்னால் முடியும். எப்போது என்றால், ஸ்டாலின் எனக்காக சிலுவை மரத்தில் இரத்தம் சிந்தி, உயிர் துறக்கின்றபோது, என்னால் அவருடைய பாதங்களை முத்திசெய்ய முடியும்" என்றார். இதைக் கேட்ட அந்த இராணுவ வீரன் வாயடைத்து நின்றான்.

ஆம், இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரும் நமது மீட்புக்காக, நமது பாவத்திற்குக் கழுவாயாக, சிலுவை மரத்தில் இரத்தம் சிந்தியதில்லை. அவர் ஒருவரே நம்முடைய பாவத்திற்காக சிலுவை மரத்தில் கழுவாயானர். ஆதாலால், நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் அளவு கடந்த அன்பை உணர்ந்து அவருக்குப் பிரமாணிக்கமாக இருக்கவேண்டும்.

தூய பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகம் அதிகாரம் 3 இறைவாத்தை 18 ல் கூறுவார், "இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து கிறிஸ்துவின் அன்பின், அகலம், ஆழம், நீளம், உயரம் என்னவென்று உணர்ந்து, அறிவுகெட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக" என்று. ஆகவே நாம் ஒவ்வொருவரும் இயேசு நம்மீது வைத்திருக்கும் அளவுகடந்த அன்பை உணர்ந்துகொண்டு, நாமும் நம்மோடு வாழும் மக்களை அன்பு செய்யவேண்டும்.

ஜான் நியூட்டன் என்ற ஆங்கிலக் கவிஞர் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார். "நான் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைப் பார்க்கின்றபோது அவர் என்னிடம் "உன்மீது கொண்ட அன்பினால்தான் இப்படிச் சிலுவையில் அறையப்பட்டுக் கிடக்கிறேன் என்று சொல்வதுபோன்று இருக்கும்" என்பார். தொடர்ந்து அவர் சொல்வார், "நான் ஒவ்வொருமுறையும் சிலுவையைப் பார்க்கின்றபோது அதிலிருந்து நான் திடம் பெறுகின்றேன், இயேசுவைப் போன்று எல்லாரையும் நிபந்தனையின்றி அன்புசெய்யவும் அழைக்கப்படுகின்றேன்" என்பார்.

ஆதலால், இயேசுவின் சிலுவை மரணத்தை, அவரது பாடுகளைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கும் இந்த தருணத்தில் நாமும் ஒருவர் மற்றவரை நிபந்தனையற்ற விதத்தில் அன்பு செய்ய அழைக்கப்படுகின்றோம்.

அதே வேளையில் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் கேட்பதுபோன்று, "இயேசு இறைமகனாக இருந்தும் துன்பங்களின் வழியாகக் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டதுபோல, நாம் ஆண்டவர் ஒருவருக்கே கீழ்படிந்து, அவர் அளிக்கும் மீட்பினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஏனென்றால், ஆண்டவராகிய இயேசு கெத்சமணித் தோட்டத்தில் தந்தையை நோக்கி, "தந்தையே, இந்தத் துன்பக் கிண்ணம் என்னைவிட்டு அகலட்டும், ஆனாலும் என்னுடைய விரும்ப அல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே நிகழட்டும்" என்று சொல்லி தந்தைக்குக் கீழ்படிந்து நடந்தார். கடவுளும் எல்லாருக்கும் மேலாக அவரை உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளுக்கின்றார் (பிலி 2:9). நாமும் கடவுளுக்குக் கீழ்படிந்து, அவர்காட்டும் வழியில் நடக்கும்போது கடவுள் நம்மையும் உயர்த்துவார்.

ஆகவே, இயேசுவின் பாடுகளை சிறப்பாக நினைவுகூர்ந்து பார்க்கின்ற இந்த வேளையில் நாமும் இயேசுவைப் போன்று எல்லா மக்களையும் அளவுகடந்த விதமாய் அன்புசெய்வோம். இறைவனுக்குக் கீழ்படிந்து அவரது திருவுளத்தின்படி நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம். Fr. Maria Antony, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
திருப்பாடுகளின் வெள்ளி


முன்னுரைகள்:

இன்று தியாகத்தின் தினம். நம்முடைய மீட்பரின் தினம். கடவுள் உலக மக்களாகிய நம்மை எவ்வளவு நேசித்தார் என்றால், தமது ஏக மகனாகிய இயேசுவையே நமக்கு அளித்தார். தெய்வீக திருமகனும் தம்மையே வெறுமையாக்கி. அடிமையின் தன்மை பூண்டு, மனிதருக்கு ஓப்பானார். மனித உருவில் தோன்றி, தம்மைத் தாழ்த்தி, சிலுவை சாவையேற்கும் அளவிற்கு, கீழ்படிபவரானார். இவ்வாறு தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள ஒன்றிப்பின் அடையாளம் தான் சிலுவை. பாம்பினால் கடியுண்டவர்கள் குணம் பெற, மோயீசனால் பாலைவனத்தில் வெண்கல பாம்பு உயர்த்தப்பட்டது போல, நாம் நம்முடைய பாவங்களில் இருந்து எழுந்து, மீட்பு பெற கிறிஸ்து தன்னையே சிலுவையில் உயர்த்தினார்.

கிறிஸ்துவின் பாடுகளையும், மரணத்தையும் பற்றி சிந்திப்பதற்கு எற்றவாறு இன்றைய திருவழிபாடு


இறைவார்த்தை வழிபாடும், பொது மன்றாட்டுக்களும்

திருச்சிலுவை ஆராதனை

திருவிருந்து


என்று மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறது.



கிறிஸ்து தம்மை வெறுமையாக்கிக் கொண்டார் என்பதை நினைவு கூறும் பொருட்டு பீடம் பொழிவிழந்து காணப்படுகின்றது. பாவத்தினால் மனிதன் வலுவிழந்து காணப்படுகின்றான் என்பதனை நினைத்து ஏற்றுக் கொள்ள குரு முகம் குப்பறு விழுந்து (தெண்டனிட்டு) மௌனமாக செபிக்கின்றார். அத்தருணத்தில் நாமும் முழந்தாழ்படியிட்டு, கிறிஸ்து இயேசுவுக்கு முன் நாம் நிற்க பாவம் தடையாக இருப்பதை உணாந்து அமைதியாக மன்னிப்பு கோரி செபிப்போம். இப்பொழுது எழுந்து நின்று குருவை வரவேற்போம்.



இறைவார்த்தை வழிபாடு



நம் குற்றங்களுக்காக அரும்பாடுபட்டார். இயேசுவின் பாடுகள் உலகின் மக்கள் யாவருக்கும் மீட்பை அளிக்கின்றன. யாதொரு குற்றமும் செய்யாது, துன்பத்திற்கு ஆளான இயேசுவைத் தந்தை மகிமைப்படுத்துகின்றார் என்று இசையாஸ் இறைவாக்கினர் விவரித்து கூறியதை முதல் வாசகமாகவும், எபிரேயருக்கு எழுதப்பட்ட மடலில் இயேசு தம் தந்தையின் விருப்பத்திற்கு கீழ்ப்படிந்து, கீழ்ப்படிகின்றவாகளின் மீட்புக்கு காரணமானார் என்பதை இரண்டாவது வாசகமாகவும், நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் பாடுகளின் இறுதிவரை பயணமான திருத்தூதர் யோவானின் சான்றுப்படி நடந்த நிகழ்வுகளை விரிவாகவும் வாசிக்க கேட்க உள்ளோம். இறைசித்தத்திற்கு ஆட்கொள்ளப்பட்டவர்களாய் கேட்கும் வாசகங்களை உள்ளத்தில் இருத்தி, ஆழமாய் பதியச் செய்து, தியான மனநிலையில் நாமும் இயேசுவின் பாடுகளில் பங்கேற்போம்.



(மறையுரைக்குப் பின்னர்)



கிறிஸ்து உலக மக்களின் மீட்புக்காக சிலுவையில் மரித்தார் என விசுவசிக்கும் நாம், திருஅவை, உலகம் ஆகியவற்றில் உள்ள பலதரப்பட்ட மக்களுக்காக செபிக்க உள்ளோம். மன்றாட்டின் கருத்தின் பொருள் கூறி செபிப்போமான என அழைக்கப்பட்டப் பின்னர் அமைதியாக அந்த கருத்திற்காக செபிப்போம். பின்னர் குரு நம்சார்பாக மன்றாட்டை ஏறெடுத்து செபிப்பார். இறுதியில் எல்லாரும் ஆமென் என்று பதில் அளிப்போம். மன்றாட கடமைப்பட்டவர்கள் நாம் என்பதனை உணர்ந்து பக்தியோடு நித்திய குருவாகிய கிறிஸ்துவோடு இணைந்து தந்தையின் திருமுன் மன்றாட்டுக்களை சமர்ப்பிப்போம்.



(மன்றாட்டுக்களுக்குப் பின்னர்)

இரண்டாம் பகதியாக திருச்சிலுவை ஆராதனை



இன்று நற்கருணை வழிப்பாட்டுக்குப் பதில் திருச்சிலுவை வழிபாடு நடைபெறுகின்றது. நமது மீட்புக்காக சிலுவையில் அறையுண்ட மெசியாவை ஆராதிக்கின்றோம். அவமானத்தின் சின்னமாக கருதப்பட்ட சிலுவை மரம் இறைவல்லமையும், இறைஞானமும் கொண்ட கிறிஸ்துவை சுமந்ததனால், நாம் ஆராதிக்கின்ற பொருளாக மாறியது. சிலுவையல் கிறிஸ்துவே பொருள் கூறி நிற்கின்றார். இதை உலகுக்கு எடுத்துக் கூற நம்மையும் அழைக்கின்றார். இதை உணர்ந்து வாழ, இறைவல்லமையையும், ஞானத்தையும் வேண்டி, கிறிஸ்துவை ஆராதித்து, வணங்கி, முத்தி செய்து வாழ்த்துவோம். எடுத்து வரப்படுகின்ற சிலுவையை, குரு பீடத்தில் நின்று பெற்று, மூன்று முறை உயர்த்திப் பிடித்து, "திருச்சிலுவை மரம் இதோ" எனப்பாடுவார். நம்முடைய பதில் மொழியாக "வருவீர் ஆராதிப்போம்" என பதில் சொல்லி பாடுவோம்.

முற்றிலுமாய் அமைதி காத்து. வரிசையில் வந்து, முத்தி செய்து ஆராதிப்போம். கேட்ட வாசகங்களை தியானிப்போம். பாடகர் குழுவினரோடு பாடிப் புகழ்வோம்.


திருச்சிலுவை முத்தி செய்த பின்னர்


இன்றைய வழிபாட்டின் மூன்றாம் பகுதியாக திருவிருந்து. கிறஜஸ்துவின் திருப்பாடுகளையும் மரணத்தையும், சிந்தித்துக் கொண்டு இருக்கும் நமக்கு நம்பிக்கையும் ஆறுதலும், அளிக்கினற கிறிஸ்துவின் திருவுடலை உட்கொள்ள சிறப்புடனே அழைக்கப் பெறுகின்றோம். கிறிஸ்துவின் உடலை உட்கொண்டு உறுதி பெறுவோம். நம்பிக்கையில் நிலைபெறுவோம். எழுந்து நின்று, குருவின் அழைப்பை பெற்று, ஆண்டவர் இயேசு கற்றுத் தந்த செபத்தை சொல்லி மன்றாடுவோம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!