Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                       
                                தூய ஆவியார் பெருவிழா - 3ம் ஆண்டு
     
=================================================================================
முதல் வாசகம்

=================================================================================
தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் பேசத் தொடங்கினார்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 1-11

பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது சீடர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவதுபோன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது.

மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத் தொடங்கினார்கள்.

அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூத மக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். அந்த ஒலியைக் கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக் கேட்டுக் குழப்பமடைந்தனர்.

எல்லாரும் மலைத்துப்போய், "இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பது எப்படி?" என வியந்தனர்.

"பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும் பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும், யூதரும், யூதம் தழுவியோரும், கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம் மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக் கேட்கிறோமே!" என்றனர்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:  
104: 1ab,24ac. 29bc-30. 31,34 (பல்லவி: 30) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். அல்லது: அல்லேலூயா.

1ab என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! 24ac ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. பல்லவி

29bc நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். 30 உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். பல்லவி

31 ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! 34 என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். பல்லவி

 

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
 
கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 8-17


சகோதரர் சகோதரிகளே, ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது. ஆனால் கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல. பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும், கிறிஸ்து உங்களுள் இருந்தால், நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுவீர்கள்; அதன் பயனாகத் தூய ஆவி உங்களுக்குள் உயிராய் இருக்கும்.

மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர்பெறச் செய்வார். ஆகையால் சகோதரர் சகோதரிகளே, நாம் ஊனியல்புக்குக் கடமைப்பட்டிருக்கவில்லை; அவ்வியல்பின்படி வாழவேண்டியதில்லை. நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள்; ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச் செயல்களைச் சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள். கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள்.

மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை; மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், "அப்பா, தந்தையே" என அழைக்கிறோம். நாம் இவ்வாறு அழைக்கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார். நாம் பிள்ளைகளாயின், உரிமைப் பேறு உடையவர்களாய் இருக்கிறோம். ஆம், நாம் கடவுளிடமிருந்து உரிமைப் பேறு பெறுபவர்கள், கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெறவேண்டும்; அப்போதுதான் அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம்.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
தொடர் பாடல்

 

தூய ஆவியே, எழுந்தருள்வீர், வானினின்றுமது பேரொளியின் அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.

எளியவர் தந்தாய், வந்தருள்வீர், நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர், இதய ஒளியே, வந்தருள்வீர்.

உன்னத ஆறுதலானவரே, ஆன்ம இனிய விருந்தினரே, இனிய தண்மையும் தருபவரே.

உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே, வெம்மை தணிக்கும் குளிர் நிழலே, அழுகையில் ஆறுதலானவரே.

உன்னத பேரின்ப ஒளியே, உம்மை விசுவசிப்போருடைய நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.

உமதருள் ஆற்றல் இல்லாமல் உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை, நல்லது அவனில் ஏதுமில்லை.

மாசு கொண்டதைக் கழுவிடுவீர். வறட்சியுற்றதை நனைத்திடுவீர், காயப்பட்டதை ஆற்றிடுவீர்.

வணங்காதிருப்பதை வளைத்திடுவீர், குளிரானதைக் குளிர் போக்கிடுவீர், தவறிப்போனதை ஆண்டருள்வீர்.

இறைவா உம்மை விசுவசித்து, உம்மை நம்பும் அடியார்க்குக் கொடைகள் ஏழும் ஈந்திடுவீர். புண்ணிய பலன்களை வழங்கிடுவீர், இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர், அழிவிலா இன்பம் அருள்வீரே.

 

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீ பற்றியெரியச் செய்தருளும். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார்.

 
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 15-16, 23-26

அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: "நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள். உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்.

என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை.

நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை. உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன்.

என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


 PENTECOST S


Vigil: Gn 11: 1-9 or Ex 19: 3-8a. 16-20b or Ez 37: 1-4 or Jl 3: 1-5/ Ps 104: 1-2. 24. 35. 27-28. 29. 30/ Rom 8: 22-27/ Jn 7: 37-39. Acts 2: 1-11/ Ps 104: 1. 24. 29-30. 31. 34/ 1 Cor 12: 3b-7. 12-13 or Rom 8: 8-17/ Sequence Veni Creator Spiritus/ Jn 20: 19-23 or Jn 14: 15-16. 23b-26


ஓரே இடத்தில், ஓரே மனதாய், இயேசுவின் நினைவில் ஒன்று கூடியிருந்த சீடர்கள் பெந்தகோஸ்து என்னும் 50வது நாளில் தூய ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டனர். திருமுழுக்கு மற்றும் உறுதிபூசுதல் வழியாக உண்மை உணாத்தும் ஆவியின் கொடைகளாலும், வரங்களினாலும் நாமும் நிரப்பப்பட்டுள்ளோம். ஆவிக்குரிய வாழ்வு வாழ உறுதியெடுப்போம்.



- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1தூய ஆவியார் விழா
=================================================================================
(திருத்தூதர் பணிகள் 2: 1-11; உரோமையர் 8: 8-17; யோவான் 14: 15-16, 23-26)

மற்றொரு துணையாளர்

நிகழ்வு

அமெரிக்கர்களால் 'மக்கள் கவிஞர்' என அன்போடு அழைக்கப்படுபவர் 'எட்கர் கெஸ்ட் (Edgar Guest 1881 - 1959). இவர் பிறந்தது என்னவோ இங்கிலாந்தாக இருந்தாலும், வளர்ந்ததெல்லாம் அமெரிக்காதான். தன்னுடைய பத்தாவது வயதில் இங்கிலாந்திலிருந்து வந்த இவர், கடைசிவரைக்கும் அமெரிக்காவிலேயே இருந்தார்.

எட்கர்க்கு ஒரு மகன் இருந்தான். அவன்மீது அவர் அளவுகடந்த அன்பு வைத்திருந்தார். பதிலுக்கு அவனும் அவர்மீது அன்பு வைத்திருந்தான். ஒருநாள் அவருடைய மகன் திடீரென இறந்துபோனான். அவரால் தன்னுடைய மகனின் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் அவர் மனம்போன போக்கில் நடந்துபோனார். அவ்வாறு அவர் நடந்துபோகும்போது யாரோ ஒருவர் அவரைப் பெயர் சொல்லி அழைக்க, அவர் திரும்பிப் பார்த்தார். அங்கு அவருடைய பக்கத்து வீட்டில் வசித்துவந்த பெரியவர் ஒருவர் தன்னுடைய கடையில் அமர்ந்திருந்தார்.

அந்தப் பெரியவர் எட்கரைத் தன்னிடம் கூப்பிட்டார். எட்கரும் அவருடைய கடைக்குள் சென்றார். அப்பொழுது அந்தப் பெரியவர் எட்கரின் தோளை வாஞ்சையோடு பிடித்ததுக்கொண்டு, "தம்பி! உங்களுடைய மகன் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டேன். கவலைப்படதே! உனக்கு என்ன வேண்டுமானாலும் என்னிடத்தில் கேள். நான் தருகிறேன். என்னுடையதெல்லாம் உன்னுடையதுதான்" என்றார். இவ்வார்த்தை எட்கரின் உள்ளத்திற்கு ஆறுதலைத் தந்தது. இதுகுறித்து எட்கர் பின்னாளில் குறிப்பிடும்போது, "பாலைவனத்தில் தனித்துவிடப்பட்டவனைப் போன்று உணர்ந்த எனக்கு பெரியவரின் வார்த்தைகள் மிகப்பெரியத் துணையாக இருந்தது" என்று குறிப்பிட்டார்.

மகனை இழந்து நின்ற எட்கர் கெஸ்ட் என்ற அந்த மக்கள் கவிஞர்க்கு, பெரியவரின் வார்த்தைகள் எப்படி மிகப்பெரிய துணையாக இருந்தோ, அதுபோன்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தந்தையிடமிருந்து அனுப்பப்போகிற தூய ஆவியார் இருப்பார்.

இன்று நாம் தூய ஆவியாரின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். இத்தூய ஆவியாரின் விழா நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது? தூய ஆவியாரின் வருகையினால் நாம் என்ன நன்மையைப் பெறப் போகிறோம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

துணைவரும் தூய ஆவியார்

இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களை விட்டுப் போவதற்கு முன்னம் அவர்களிடம், "உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை அனுப்புமாறு தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்குக் அருள்வார்" என்கின்றார். அவர் சொன்னதுபோன்றே பெந்தகோஸ்தே நாளில், தூய ஆவியார் சீடர்கட்க்கு அருளப்படுகின்றார். இந்தத் தூய ஆவியார் எப்படிப்பட்டவர் எனத் தெரிந்துகொண்டால், அவருடைய ஆசியை நாம் எப்படிப் பெறலாம் என்பதை அறிந்துகொள்ளலாம்.

தூய ஆவியாரைக் குறித்து இயேசு சொல்லக்கூடிய முதன்மையான செய்தி, அவர் மற்றொரு துணையாளர் அல்லது துணையாளர் என்பதாகும். இந்த மண்ணுலகத்தில் வாழ்ந்துபோது தன்னுடைய சீடர்கட்க்கு மிகப்பெரிய துணையாக இருந்த இயேசு, தான் போனபிறகு அவர்கள் திக்கற்றவர்களாகப் போய்விடக்கூடாது என்பதற்காக மற்றொரு துணையாளராம் தூய ஆவியாரை அனுப்புகின்றார். இதன்மூலம் இயேசு, தான் தந்த துணையை, உடனிருப்பை தூய ஆவியார் தருவார் என்று வாக்குறுதி அளிக்கின்றார். இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு அதுதான் நடக்கின்றது. மேலும் இயேசு தூய ஆவியாரைக் குறித்துச் சொல்கின்ற 'துணையாளர் (Comforter) என்பதை ஆறுதல் அளிப்பவர், வலுவற்ற நிலையில் இருக்கின்ற சீடர்கட்க்கு வலுவூட்டுகிறவர் (உரோ 8:26) என்ற விதத்திலும் புரிந்துகொள்ளலாம்.

கற்றுத்தரும் தூய ஆவியார்

தூய ஆவியாரைக் குறித்து இயேசு உணர்த்தும் இரண்டாவது உண்மை, அவர் அனைத்தையும் கற்றுத்தருவார் (யோவா 14: 26) என்பதாகும்.

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த உலகமானது பொய்யும் புரட்டும் போலித்தனமும் நிரம்பி வழியும் உலகமாக இருக்கின்றது. இதனால் உண்மை எது, பொய் எது, நன்மை எது தீமை எது எனப் பிரித்துப் பார்க்க முடியாமல் இருக்கின்றோம். இத்தகைய சூழ்நிலையில்தான் தூய ஆவியார் பாவம், நீதி, தீர்ப்பு போன்றவற்றைக் குறித்த கருத்துகள் தவறானவை என்று கற்றுத்தந்து (யோவா 16:8) உண்மையை வெளிப்படுத்துபவராக இருக்கின்றார். ஏனெனில், அவர் உண்மையை வெளிப்படும் தூய ஆவியார் (யோவா 16:13)

இங்கு நாம் இன்னொரு உண்மையையும் தெரிந்துகொள்ளவேண்டும். அது என்னவெனில், தூய ஆவியார் நம்முடைய வாழ்க்கையில் உண்மையை வெளிப்படுத்துவராக, கற்றுத்தருபவராக, நம்மிடம் வந்து குடிகொள்பவராக இருக்க, நாம் மிகவும் முக்கியமான ஒரு காரியத்தைச் செய்யவேண்டும். அது என்ன என்று தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

தூய ஆவியார் நம்மிடம் வந்து குடிகொள்ள நாம் என்ன செய்யவேண்டும்?

தூய ஆவியார் துணையாளர், அவர் நமக்கு அனைத்தையும் கற்றுத்தருபவர் என்று இதற்கு முன்னதாக சிந்தித்துப் பார்த்தோம். இப்பொழுது இத்தகைய தூய ஆவியார் நம்மிடம் வந்து குடிகொள்வதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்வார்; "என்மீது அன்புகொள்பவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து குடிகொள்வோம்," இங்கு 'நாங்கள்' என்று இயேசு சொல்வதை, தந்தைக் கடவுள், மகனாகிய இயேசு, தூய ஆவியார் என்று எடுத்துக்கொள்ளலாம். எப்போது நாம் இயேசுவிடம் அன்பு கொள்கின்றோமோ, அப்போது தந்தை, மகன் உட்பட தூய ஆவியார் நம்மிடம் வந்து குடிகொள்வார் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.

பழைய ஏற்பாட்டில், 'நம்பிக்கையின் தந்தை' என அழைக்கப்படும் ஆபிரகாம் ஆண்டவரின் கட்டளையைக் கடைப்பிடித்து வந்தார். அதனால் ஆண்டவர் அவரோடு இருந்தார்; அவரோடு குடிகொண்டார் (தொநூ 18). இதற்கு மாறாக ஆபிரகாமின் சகோதர் லோத்து ஆண்டவர்க்கு உகந்த வாழ்க்கை வாழவில்லை. அதனால் கடவுள் அவரிடம் குடிகொள்ளவில்லை (தொநூ 19) பழைய ஏற்பாட்டில் வருகின்ற இன்னோர் எடுத்துக்காட்டு. இஸ்ரயேலின் அரசர்களான சவுல் மற்றும் தாவீதிடமிருந்து தூய ஆவியார் எடுக்கப்பட்டது (1 சாமு 16: 14, 18:12). இவர்கள் இருவரும் ஆண்டவரின் கட்டளைகளை மீறினார்கள். அதனால்தான் அவர்களிடமிருந்து தூய ஆவியார் எடுத்துக்கொள்ளப்பட்டார். ஆனால், நற்செய்தியிலோ இயேசு தம் சீடர்களிடம், "உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன்" என்கின்றார். தூய ஆவியார் நம்மோடு என்றும் இருக்கவேண்டும் என்றால், அதற்கு நாம் இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழவேண்டும்.

சிந்தனை

'தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்' (உரோ 8:26) என்பார் பவுல். ஆகவே, நமக்குத் துணையாக இருப்பவரும் கற்றுத்தருபவருமான தூய ஆவியார் நம்மிடம் வந்து குடிகொள்ள, நாம் இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3தூய ஆவியார் பெருவிழா

=================================================================================
 பணிக்குத் தயார்நிலை!

 திருத்தூதர் பணிகள் 2:1-11
 1 கொரிந்தியர் 12:3-7, 12-13
 யோவான் 20:19-23

கடந்த வாரம் என் நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். பேச்சின் ஊடே அவருடைய அம்மா என்னிடம், "அபிஷேகம் - அனாய்ன்ட்டிங் பெற நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார். 'என்ன?' என்றேன். 'நான் சில வாரங்களாக செபக் கூட்டத்திற்குச் செல்கிறேன். அங்கிருப்பவர்கள் என்னிடம் இதைக் கேட்டார்கள். அதை நான் உங்களிடம் கேட்டேன்' என்றார். தொடர்ந்து, 'நீங்க அனாய்ன்ட்டிங் பெற்றுவிட்டீர்களா?' என்று கேட்டார். இது எனக்கு ஒரே நேரத்தில் அதிர்ச்சியாகவும், தன்னாய்வு செய்யும் நிகழ்வாகவும் இருந்தது.

'அபிஷேகம்' என்றால் என்ன? நான் 'அனாய்ன்டிங்' பெற்றுவிட்டேனா? - இக்கேள்விகள் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.
என்னைப் பொறுத்தவரையில் 'அனாய்ன்டிங்' அல்லது 'அபிஷேகம்' என்பது தயார்நிலை என்று புரிந்துகொள்கிறேன். விவிலியத்தின் புரிதலும் இதுதான். இறைவாக்கினர் சாமுவேல் சவுலையும், பின் தாவீதையும் அபிஷேகம் செய்யும்போது அவர்கள் 'அரசர்களாக' தயார்நிலையில் இருக்கின்றனர். மரியாளிடம் வானதூதர், 'தூய ஆவியின் வல்லமை உம்மேல் நிழலிடும்' என்று சொல்லி அருள்பொழிவு செய்யும்போது அவர் மீட்பரைப் பெற்றெடுக்கும் தயார்நிலையை அடைகின்றார்.

நம் கத்தோலிக்கத் திருஅவையில் நாம் திருமுழுக்கின்போதும், உறுதிபூசுதலின் போதும் 'தூய ஆவியாரின்' முத்திரையைப் பெற்றுக்கொள்கிறோம். இவ்வருளடையாளங்கள் வழியாக நாம் கிறிஸ்தவ வாழ்விற்கான தயார்நிலையில் இருக்கிறோம்.

இன்று நம் தாய்த்திருஅவை தனது பிறந்த நாளாம் தூய ஆவியாரின் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கிறது. பிளவுண்ட நாவுகள் இறங்கி வந்து பிளவுபட்ட மானுடத்தை அன்று இணைத்தன. இன்று இத்தூய ஆவியாரின் பெயரைக் கொண்டே நிறைய பிரிவுகள் திருஅவையிலும், பிரிவினை சபைகளில் தோன்றிவிட்டன என்பது வருத்தத்திற்குரியது.
'தூய ஆவியானவர் திருவிழா' நம்முள் நிறைய கேள்விகளை எழுப்புகிறது: (1) இவரை எப்படி அழைப்பது? 'தூய ஆவி' என்று அழைப்பதா? அல்லது 'தூய ஆவியார்,' அல்லது 'தூய ஆவியானவர்' என்று அழைப்பதா? (2) 'தந்தை' மற்றும் 'மகன்' என்னும் இருவருக்குள் இருக்கும் உறவே தூய ஆவி என்றும், இந்த தூய ஆவியே மூவொரு இறைவன் என்று கற்பிக்கும் கத்தோலிக்க திருஅவை, கணவன்-மனைவி-பிள்ளை என்ற உருவகத்தையும் கொடுக்கின்றது. ஆனால், இந்த உருவகம் அடுத்த பிரச்சினைக்கு வழி வகுக்கிறது. 'தூய ஆவியானவர்' உறவின் கனியாகிய குழந்தை என்றால், அது அல்லது அவர் மற்ற இருவரைவிட சிறியவர் என்று ஆகிவிடுவதில்லையா? (3) 'தந்தை உலகைப் படைத்தார்,' 'மகன் உலகை மீட்டார்,' 'தூய ஆவி உலகை வழிநடத்துகிறார்' என்று அவர்களின் செயல்கள் அடிப்படையிலான புரிதலும் தூய ஆவியானவரைப் பற்றி நமக்கு முழுமையாகச் சொல்வதில்லை. (4) இன்று 'பெந்தகோஸ்தெ' என்றழைக்கப்படும் பிரிந்த சபையினர் தூய ஆவியானவரை மட்டுமே இறைவனாகக் கருதுகின்றனர். பொட்டு அணியக்கூடாது, பூ அணியக் கூடாது, வெள்ளைநிற ஆடைதான் அணிய வேண்டும் என்று சொல்லி நம் தெருக்களில் வழிநடக்கும் இவர்கள், 'நீங்கள் அக்கினி அபிஷேகம் பெற்றுவிட்டீர்களா?' என்று நம் வயிற்றில் புளியைக் கரைக்கிறார்கள். மற்றும் (5) 'அருங்கொடையாளர்கள்' (...) என்று தங்களையே அழைக்கும் ஒரு சிறு பகுதியினர், நம் திருஅவை மரபிற்குள் இருந்துகொண்டே ஒரு மாற்று வழிபாட்டு முறையையும் முன்வைக்கின்றனர்.

பவுல் எபேசு நகரில் எதிர்கொண்ட கேள்விதான் இங்கே நினைவிற்கு வருகிறது: 'தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்றுகூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே!' (காண். திப 19:1-10)

இந்த நாளின் பொருளைப் புரிந்து கொள்ளுமுன் 'தூய ஆவி' என்னும் பெயரைப் புரிந்து கொள்வோம். விவிலியத்தில் 'தூய ஆவி' என்ற பெயர் நான்கு நிலைகளில் கையாளப்படுகின்றது:

(1) 'ஆண்டவரின் ஆவி.' எபிரேயத்தில் 'ருவா' என்ற வார்த்தையை 'ஆவி' என்று மொழிபெயர்க்கிறோம். இந்த 'ஆவி' தான் படைப்பின் தொடக்கத்தில் நீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தவர் (காண். தொநூ 1:2). ஆதாமின் உடலுக்குள் ஊதப்பட்டவர். அரசர்கள் மற்றும் இறைவாக்கினர்கள்மேல் இறங்கி வந்தவர். இயேசுவின் திருமுழுக்கின்மேல் அவர்மேல் இறங்கி வந்தவரும், அவரை பாலைநிலத்திற்கு அழைத்துச் சென்றவரும், 'ஆண்டவரின் ஆவி என்மேல் உளது' என்று இயேசு தொழுகைக்கூடத்தில் சொன்னவரும் இவர்தான்.

(2) 'இயேசுவின் ஆவி.' தன் உயிர்ப்புக்குப் பின் தன் சீடர்கள் மேல் ஊதுகின்ற இயேசு, 'தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்' (யோவா 20:22) என்கிறார். இங்கே தூய ஆவியானவர் இயேசுவின் கொடையாக, அவரிடமிருந்து ஊற்றெடுக்கின்றார்.

(3). 'மூவொரு இறைவனில் ஓர் ஆள்.' தன் இறுதி இராவுணவில் சீடர்களின் பாதங்களைக் கழுவிவிட்டு அவர்களோடு தொடர்ந்து உரையாடும் இயேசு (காண். யோவா 13 -1 6) அவர்களிடம், 'தூய ஆவியானவர்' என்னும் துணையாளரைத் தான் அனுப்பவதாகவும், அவர் அவர்களுக்கு எல்லாவற்றையும் கற்பிப்பார், நினைவூட்டுவார் என்றும் வாக்களிக்கின்றார். இங்கே இயேசு மூவொரு இறைவனின் மூன்றாம் ஆளைச் சுட்டிக்காட்ட 'தூய ஆவி' என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகின்றார். இந்தப் புரிதலை பிற்கால திருமடல்களிலும் பார்க்கின்றோம். உதாரணத்திற்கு, கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமடலை நிறைவு செய்யும் பவுல், 'ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!' (2 கொரி 13:13) என எழுதுகின்றார்.

(4). தூய பவுலடியாரின் திருமடல்களுக்கு வரும்போது அங்கே புதியதொரு புரிதலைப் பார்க்கின்றோம். 'ஊனியல்பு,' 'ஆவிக்குரிய இயல்பு' என்று இருதுருவ வாழ்க்கை நிலைகளை எடுத்துச் சொல்லும் பவுல், ஒரு கட்டத்தில் 'ஆவிக்குரிய இயல்பு' என்பது இயல்பாகவே நம் ஒவ்வொருவரிடமும் இருப்பதுபோல எழுதி முடிக்கின்றார் (காண். கலா 5:16-26).
இந்த நான்கு புரிதல்களில் எந்தப் புரிதலை நாம் எடுத்துக் கொள்வது என்ற குழப்பத்திலிருந்து நாம் தெளிவாவதற்கே தூய ஆவியானவரின் துணை தேவைப்படுகிறது!

திருத்தூதர்கள் மேல் இன்று தூய ஆவியானவர் இறங்கி வந்த நிகழ்வை வாசிக்குமுன் முதல் ஏற்பாட்டில் தூய ஆவியானவர் எப்படி இருந்தார் என்பதைப் புரிந்து கொள்வோம்: (அ) 'ஒருசிலருக்கு மட்டுமே தூய ஆவியானவர்.' முதல் ஏற்பாட்டில் தூய ஆவியானவர் ஒருசிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டார். குறிப்பாக, அரசர்கள் மட்டும் இறைவாக்கினர்கள். ஆக, ஒரே அரண்மனையில் இருந்தாலும் அரசர்மேல் தூய ஆவியானவர் இருப்பார். ஆனால், அரசி மேலோ, பணிப்பெண் மேலோ இருக்கமாட்டார். இறைவாக்கினர்மேல் இருப்பாhர். ஆனால், சாதாரண மக்கள்மேல் இருக்க மாட்டார். (ஆ) 'நிபந்தனைக்குட்பட்டவர்.' தூய ஆவியானவர் ஒருவருக்கு கொடுக்கப்படுவதுபோல அவரிடமிருந்து திரும்பவும் எடுத்துக்கொள்ளப்படுவார். உதாரணத்திற்கு, சிம்சோன் பிறக்கும்போதே ஆண்டவரின் ஆவி அவருக்குள் இருக்கின்றார். அவரின் குழந்தைப் பருவத்தில் அவரை ஆட்டுவிக்கின்றார். ஆனால், அவரின் தலை மழிக்கப்பட்டபோது, அவரிடமிருந்து ஆவியானவர் விலகுகின்றார். அதேபோல, சவுல் அரசராக அருள்பொழிவு செய்யப்பட்டபோது அவர்மேல் தூய ஆவியானவர் இருக்கிறார். ஆனால், தாவீதின் மேல் பொறாமை கொண்டு அவரை அம்பு எய்து கொல்ல முயலும்போது, ஆண்டவரின் ஆவி அவரைவிட்டு அகல்கின்றார். (இ) 'அவர் ஒரு ஆற்றல்.' தூய ஆவியானவர் என்பவர் ஆற்றல், அல்லது சக்தி. அவர் ஒரு மனிதர் அல்லர்.

இந்த மூன்று புரிதல்களும் இன்றைய முதல் வாசகத்தில் புரட்டிப்போடப்படுகின்றன: (அ) 'அனைவருக்கும் தூய ஆவி.' திருத்தூதர்களும், அன்னை மரியாளும் தூய ஆவியானவரைப் பெறுகின்றனர். மேலும் இவர்கள் கைகளை விரிக்கும் அனைவர்மேலும் தூய ஆவியானவர் அருளப்படுகின்றார். (ஆ) 'நிபந்தனைகள் அல்லாதவர்.' ஒருவருக்கு ஒருமுறை வழங்கப்படும் தூய ஆவி அவரிடமிருந்து திரும்ப எடுக்கப்படுவதில்லை. அவர் தூய ஆவியின் ஆற்றல் பெற்ற வாழ்க்கையை வாழவில்லை என்றாலும், அந்த ஆவியானவர் அழியாத முத்திரையாக அவரின் உள் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கின்றார். (இ) 'அவர் ஒரு மனிதர்.' மூவொரு இறைவனின் மூன்றாம் நபராக இருக்கும் இவர் வெறும் ஆற்றல் அல்லது சக்தி மட்டுமல்ல. மாறாக, மூன்றாவதாக இருக்கின்ற ஒரு மனிதர். இவரின் பெயரால் ஆசி வழங்கவும் முடியும் (காண். 2 கொரி 13:13).

இவ்வாறாக, முதல் ஏற்பாட்டுப் புரிதலைவிட இரண்டாம் ஏற்பாட்டுப் புரிதல் மாறுபட்டு நிற்கின்றது.

இன்றைய முதல் வாசகத்தின்படி (காண். திப 2:1-11) தூய ஆவியானவர் பெந்தக்கோஸ்து என்னும் நாளில் திருத்தூதர்கள்மேல் பொழியப்படுகின்றார். எதற்காக இந்த நாளை இறைவன் தெரிவு செய்ய வேண்டும்? இதற்கு ஐந்து காரணங்களைச் சொல்கின்றது வரலாறு:

1. 'பெந்தக்கோஸ்து' என்னும் சொல்லுக்கு ஐம்பதாவது நாள் என்பது பொருள். இது அறுவடைக்காக நன்றி செலுத்தும் யூதத் திருவிழா. பாஸ்கா திருவிழாவுக்குப் பின் ஐம்பதாவது நாள் இது கொண்டாடப்பட்டது (காண். லேவி 13:15). யூதர்கள் தங்கள் முதற்கனிகளை தங்கள் இல்லங்களுக்கு கொண்டு வந்த இந்த நாளில்தான் திருத்தூதர்கள் ஆவியின் கொடைகளை முதற்கனிகளாகப் பெறுகின்றனர்.

2. மோசேக்கு சீனாய் மலையில் பத்துக் கட்டளைகள் கொடுக்கப்பட்டதை இந்த நாளில்தான் யூதர்கள் நினைவுகூர்ந்தனர். இந்தக் கட்டளைகள் நமக்கு வெளியில் இருப்பவை. ஆனால் எரேமியா புதிய கட்டளைகள் நமக்கு உள்ளேயே இருக்கும் (31:33) என முன்னுரைக்கின்றார். நம் உள் உறையும் கட்டளையாக, நம் மனச்சான்றின் ஒளியாக இங்கே இறங்கி வருகிறார் தூய ஆவியானவர்.

3. மோசே மலைக்கு ஏறிச்சென்று கட்டளைகளைப் பெற்று வந்ததுபோல, இயேசு விண்ணேற்றம் அடைந்து தூய ஆவியானவரை அனுப்புகின்றார்.

4. மலையிலிருந்து இறங்கி வந்த மோசே வெறும் சத்தங்களை மட்டும் எழுப்பினார் என்றும், அந்தச் சத்தங்களை அங்கே கூடியிருந்த மக்கள் 70 மொழிகளில் கேட்டனர் என்றும் சொல்கிறது தாக்குமா 26 என்னும் ரபிக்களின் விளக்கவுரை. இதேபோல, தூய ஆவியால் நிரப்பப்பட்ட திருத்தூதர்களின் பேச்சை அங்கே கூடியிருந்தவர்கள் தத்தம் மொழிகளில் கேட்கின்றனர்.

5. தோரா அல்லது சட்டம் யூதர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. ஆனால், தூய ஆவியானவர் எல்லாருக்கும் கொடுக்கப்படுகின்றார். மேலும், இங்கே; இறங்கி வரும் பிளவுண்ட நாவுகள், முதல் ஏற்பாட்டு பாபேல் நிகழ்வையும் நினைவூட்டுகின்றன (காண். தொநூ 11:1-9). தங்களுக்கென்ற ஒரே நகரம், ஒரே மொழி, ஒரே கோபுரம் எனக் கட்ட விரும்பியவர்களின் நாவுகள் பிளவுபடுகின்றன. இங்கே பிளவுபட்ட நாவுகள் எல்லாரையும் இணைக்கின்றனர். அங்கே கோபுரம் கட்டி மக்கள் கடவுளிடம் ஏறிச் செல்ல விரும்பினர்.
இங்கே கடவுளே தன் ஆவியானவரின் வழியாக இறங்கி வருகின்றார்.

முதல் வாசகத்தில் திருத்தூதர்கள் இரண்டு நிலைகளில் துணிச்சல் பெறுகின்றனர்:

அ. அவர்களின் நா கட்டவிழ்க்கப்படுகிறது. அவர்கள் வௌ;வேறான மொழிகளில் (க்ளோசலாலியா) பேசத் தொடங்குகின்றனர். மொழி அவர்களுக்கு இனி தடையல்ல.

ஆ. அவர்களின் இல்லக் கதவுகள் திறக்கப்படுகின்றன. 'எல்லாம் முடிந்தது!' என பயந்து கொண்டு, விரக்தியிலும், கவலையிலும் சோர்ந்திருந்தவர்கள் தங்களின் கதவுகளைத் திறந்து வெளியே வருகின்றனர். இனி யாரும் அவர்களை அடைத்து வைக்கவோ, அவர்களின் வேகத்திற்கு தடை போடவோ முடியாது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 12:3-7, 12-13) பவுல் கொரிந்து நகரத் திருச்சபையினர் பெற்றிருக்கின்ற அருங்கொடைகள் பற்றி விளக்கம் தருகின்றார். பரவசப் பேச்சு பேசுதல், நலம் தருதல் போன்றவை கிறிஸ்தவம் தவிர மற்ற சமயங்களிலும் உள்ளவை. ஆனால், கிறிஸ்தவத்தில் அவை எப்படி முக்கியத்துவம் பெறுகின்றன என்றால், கொடைகள் அவற்றைப் பெற்றிருப்பவரைக் கிறிஸ்துவோடு இணைக்க வேண்டும், இவை குழும வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட வேண்டும். ஒரே கடவுளிடமிருந்து ஊற்றெடுக்கும் இக்கொடைகள் தூய ஆவியாரால் அனைவருக்கும் வழங்கப்படுகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 20:19-23), உயிர்ப்புக்குப்பின் தன் சீடர்களைச் சந்திக்கும் இயேசு, சீடர்கள் மேல் தன் ஆவியை ஊதுவுவதோடு, பாவங்களை மன்னிக்கும் ஆற்றலையும் அளிக்கின்றார். 'ஊதுதல்,' 'பாவங்களை மன்னித்தல்' என்னும் வார்த்தைகளை நாம் மீட்பு மற்றும் தண்டனைத்தீர்ப்பு என்னும் வார்த்தைகளோடு இணைத்தே பார்க்க வேண்டும். யோவான் நற்செய்தியில் பாவம் என்பது நம்பிக்கையின்மை. நம்புதல் மீட்பைக் கொண்டுவருகிறது.

நிற்க.
இவ்வளவு பெரிய இறையியல் ஆராய்ச்சியை இன்றைய வாழ்வோடு நாம் எப்படி பொருத்திப் பார்ப்பது?

எளிதான உருவகத்திலிருந்து தொடங்குவோம். நாம் இருக்க, இயங்கக் காரணம் நம்மில் இருக்கும் உயிர். இந்த உயிர் உடலில் எங்கு இருக்கிறது என்று நமக்குத் தெரியாது. சுவாசத்தில் இருக்கிறது என்றால், இரத்தம் வெளியேறும்போது நாம் ஏன் இறக்கிறோம்? இரத்தத்தில் இருக்கிறது என்றால் இறந்தவர் ஏன் வாய் திறக்கிறார்? உயிர் எங்கு இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. ஆனால், உயிர் இல்லை என்றால் இயக்கம், வெப்பம், இருப்பு என எல்லாம் நின்றுவிடுகிறது. உயிர் நம்மைத் தயார்நிலையில் வைத்திருக்கிறது. தூய ஆவியாரை இந்த உயிருக்கு ஒப்பிடலாம். இவர் நம்மைத் தயார்நிலையில் வைத்திருப்பவர்.

எதற்கான தயார்நிலை?
கத்தி தயாராக இருக்கிறது. ஆனால், அதை வைத்து காய்கறி வெட்டவும் முடியும். கழுத்தை வெட்டவும் முடியும். நல்லது செய்வதற்கான, மேன்மைக்கான தயார்நிலையை அளிக்கிறார் தூய ஆவி. இத்தயார்நிலை எதற்கான தயார்நிலை என்றால் கிறிஸ்துவின் பணிக்கான தயார்நிலை. மருத்துவமனையின் வெளியே நிற்கும் ஆம்புலன்ஸின் தயார்நிலை அவசரச் சிகிச்சைக்கே அன்றி, திருமண வரவேற்புக்கு அல்ல. என் வாழ்வின் தயார்நிலை கிறிஸ்துவின் பணிக்காக என்றால், அந்தப் பணி மூன்று கருவிகளைக் கொண்டு இன்று நடைபெற வேண்டும்.

1. மொழி :
திருத்தூதர்கள் பேசுவதை மக்கள் தத்தம் மொழிகளில் கேட்கின்றனர். நாவைக் கட்டவிழ்க்கின்றார் தூய ஆவியார். இன்று நான் பேசும் வார்த்தைகள் எப்படி இருக்கின்றன? என்னை மற்றவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் நான் பேசுகிறேனா? என் வார்த்தைகளில் கிறிஸ்து அறிவிக்கப்படுகிறாரா?

2. கொடைகள் :
கொரிந்து நகர மக்கள் தாங்கள் பெற்றிருக்கின்ற கொடைகளைக் கண்டுகொள்ள அழைக்கிறார் பவுல். இன்று எனக்கென நிறைய திறன்கள் இருக்கலாம். பேசுவது, எழுதுவது, பழகுவது, வரைவது, உறவாடுவது தொடங்கி நிறைய திறன்களை நாம் சொல்லலாம். இவற்றை நாம் பயன்படுத்திப் பணி செய்யலாம்.

3. மன்னிப்பு :
தன் சீடர்கள் மேல் ஆவியை ஊதியவுடன் இயேசு மன்னிப்பைப் பற்றியே பேசுகின்றார். மன்னிக்கின்ற மனம் பயத்திலிருந்தும், கோபத்திலிருந்தும், நம்பிக்கையின்மையிலிருந்தும் விடுபடும். நான் பிறரை மன்னிக்குமுன் என்னை மன்னித்தல் அவசியம். மன்னிப்பு மட்டுமே நம்மை வாழ்வில் நகர்த்துகிறது. ஏனெனில், மன்னிக்காத மனம் கடந்த காலத்தில் தன்னைக் கட்டிக்கொள்கிறது.

இறுதியாக,
நாம் எவ்வளவோ அடையாளங்கள், உருவகங்களைப் பயன்படுத்தினாலும், தூய ஆவியார் நம் புரிதலுக்கு எட்டாத ஒருவராகவே இருக்கிறார். செல்ஃபோனை இயக்கும் சிம் கார்ட் போல மறைந்திருக்கும் அவர் நம்மைத் தயார்நிலையில் வைத்திருக்கிறார். இயேசுவின் வாயிலிருந்து வரும் தென்றலிலும் இவர் இருக்கிறார். வானத்திலிருந்து வரும் சூறாவளியிலும் இருக்கிறார். 'பரத்தைமை, கெட்ட நடத்தை, காம வெறி, சிலை வழிபாடு, பில்லி சூனியம், சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம்' - இவற்றோடு, பொய், சந்தேகம், வெறுப்பு, எரிச்சல், பழிவாங்குதல், புறங்கூறுதல், கெட்ட வார்த்தை பேசுதல், திருட்டு, ஏமாற்றுதல் என கூட்டிக்கொள்ளலாம்! - போன்ற உடல் சார்ந்தவற்றை விடுத்து, இறப்பின் காரணிகளை விடுத்து, 'அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம்' (காண். கலா 5:22-23) ஆகியவற்றை நோக்கி நம் மனத்தை எழுப்பும்போது அங்கே அவர் அசைவாடுகின்றார்.

தூய ஆவியார் பெருவிழா வாழ்த்துக்களும், செபங்களும்!

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)

=================================================================================
பெருவிழாத் திருப்பலி-முன்னுரை   மூன்றாம் ஆண்டு
=================================================================================

அன்புள்ளோரே,

தூய ஆவியின் பெருவிழாவை கொண்டாடிட அழைக்கப்பட்டுள்ளோம்.

அன்புடனே வாழ்த்தி வரவேற்கின்றோம்.

மூவொரு இறைவனில் மூன்றாம் ஆளாக இருப்பவர் தூயஆவியார்.

விவிலியத்தில் இவர் பேசியதாக இல்லை. மௌனமாக வீசும் தென்றலைப் போல் உள்ளார் என விவரிக்கப்பட்டுள்ளது.

எல்லா செயல்பாட்டிற்கும் கிரியா ஊக்கியாக இருக்கிறார் என விவரிக்கப்பட்டுள்ளது.

தொடக்கக்கால திருச்சபையில் அனைவரையும் நிரப்பிய இவர், இன்று திருவருட்சாதனங்களின் வழியாக நம்மையும் நிரப்பி வருகின்றார்.

நம்மை இயக்கச் செய்யும் ஆவியாரிடம் நம்மை ஓப்படைப்போம்.

நேரிய வழியில் நம்மை வழிநடத்திடுவார்.



மன்றாட்டு

திருஅவையை வழிநடத்தும் அன்பர்களை உம்ஆவியின் அனலால் நிரப்பி, சமூகத்திலே இயக்குகின்ற சக்தியாக திகழ்ந்து, நெரியவழியில் நடத்திட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சமூகப் பொறுப்பாளர்களை உம்ஆவியானவர் தன் நெருப்பினால் சுட்டெரித்து, வாய்மைக்கு மதிப்பளித்து வாழும் மாந்தர்களாக செயல்பட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பலியிலே பங்குகொள்ளும் எம்மை உம்ஆவியானவர் சுத்திகரித்து, நாங்கள் புவியிலே அவரது வரங்கள், கனிகள் பெற்று, சாட்சியாக வாழ்ந்திட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஆவியின் அனலால், நாங்கள் பிரிவினைகளுக்கு துணை போகாமல், ஓன்றிணைக்கும் சக்தியாக விளங்கிட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உம் ஆவியின் பெருவிழாக் கொண்டாட்டத்தில் பங்கேற்க இயலாத நிலையில் உள்ளோரை உம்ஆவியானவர், பூரண ஆசீரால் நிரப்பிட வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

=================================================================================
பெருவிழாத் திருப்பலி- விசுவாசிகள் மன்றாட்டுகள்:  மூன்றாம் ஆண்டு
=================================================================================
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

ஆவியைப் பொழிபவராம் இறைவா,
தூய ஆவியாரின் வருகையால் தோன்றி வளர்ந்த திருச்சபை, அதே ஆவியாரால் வழிநடத்தப்பட்டு செழித்தோங்குமாறு, திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் ஆவியானவரின் அருள் கொடைகளை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

புதுவாழ்வு அளிப்பவராம் இறைவா,
இந்த உலகில் பணம், பதவி, சிற்றின்பம் போன்றவற்றில் சுகங்களைத் தேடி, அருள் வாழ்வில் நாட்டமின்றி வாழும் மக்கள் மீது உமது புதுப்பிக்கும் ஆவியைப் பொழிந்து, விண்ணகத்தை வாழ்வை நாடித் தேடும் மனதை அவர்களுக்கு அருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

பிரிந்ததை இணைப்பவராம் இறைவா,
கிறிஸ்துவின் பெயரால் பல்வேறு சபைகளாக வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும், தூய ஆவியாரின் வல்லமையால் ஒன்றிணைக்கப்பட்டு, உலகமெங்கும் கிறிஸ்துவின் சாட்சிகளாக விளங்கத் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

உறவை வளர்க்கும் எம் இறைவா!
எங்கள் குடும்பங்களை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். நீர் அனுப்பும் துணையாளரைக் கொண்டு எங்கள் குடும்பங்களில் அன்பும், நட்புறவும் தழைத்திடவும், எமக்கு அடுத்திருப்பவரைக் கண்டு கொள்ளவும், அதன் மூலம் உமது இரக்கத்தின் இறையாட்சிப் பறைச்சாற்ற எமக்கு ஆற்றலைத்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எம் வாழ்வின் ஒளியும் வழியுமாய் இருக்கும் எம் இறைவா!
எங்கள் பங்கிலுள்ள இளையோர் அனைவரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். அவர்களின் வாழ்வு ஒளிமயமானதாய் இருக்கவும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பிலும், ஒழுக்கத்திலும் தலைசிறந்து விளங்கவும், உமது உயிருள்ள சாட்சிகளாய் இவ்வுலகில் வலம் வர இறைமகன் இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாவின் இருள் சூழ்ப் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தால் எம்மைப் பாதுக்காக்கும் இறைவா!
எம்மை வழி நடத்தும் அரசியல் தலைவர்களின் எண்ணங்களைப் புனிதம் பெறச் செய்யும். அவர்களின் இதயத்தில் உம் அன்புத் தீயை மூட்டும். அனைவரையும் அன்புச் செய்யும் உள்ளத்தைக் கொடுத்தருளும். அவர்கள் செய்யும் பணிகளில் சமுக நீதியை நிலைநாட்டவும், மக்கள் பேணிக்காத்திட வேண்டிய நல்ல உள்ளங்களைத் தந்தருளமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எம் கால் கல்லில் மோதாதபடித் தூதர்களால் எம்மைத் தாங்கிக் கொள்ளும் எம் இறைவா!
தூய ஆவியின் ஒளியால் எங்கள் பங்கிலுள்ள இளையோரின் இதயங்களுக்கு அறிவூட்டும். அவர்கள் சரியானவற்றை உணரவும், அவர் அளிக்கும் ஆறுதலினால் என்றும் மகிழ்ச்சியாய் இருக்கவும், ஞானக்கதிர்களை அவர்கள் மேல் பொழியுமாறும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!