Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

   புது வருட வாசகம்

                       Year B  
                                                               புது வருடம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இஸ்ரயேல் மக்கள்மீது நமது பெயரைக் கூறி நீங்கள் வேண்டும்போது, நாம் அவர்களுக்கு ஆசி அளிப்போம்.

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 6: 22-27

ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்; நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை: ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக! இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்; நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல்தி.பா: 67;1-2,,4-5.7 Mp3
=================================================================================
பல்லவி: கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!
கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பல்லவி

பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! பல்லவி

ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர்.பல்லவி

கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக. பல்லவி

கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக!பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
இனி நீங்கள் அடிமைகளல்ல: பிள்ளைகள்தாம்: பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள்.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4:4-7
சகோதர சகோதரிகளே, காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார். நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்: அந்த ஆவி "அப்பா, தந்தையே" எனக் கூப்பிடுகிறது. ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல பிள்ளைகள்தாம்: பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
எபி 1: 1-2

அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 புனித லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்.2:16-21

அக்காலத்தில் இடையர்கள் விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும்; கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார். இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது. குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
அன்னையின் ஆசியோடு!

இன்று புத்தாண்டு விழா. இறைவனின் அன்னையாம் தூய மரியாவின் பெருவிழா. நம் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளையும் நம் தாயின் ஆசியோடு தொடங்குதுதானே நமது பண்பாடு. எனவே, இந்தப் புத்தாண்டையும் இறைவனின் தாயும், நம் விண்ணக அன்னையுமான மரியாவின் ஆசியோடு தொடங்குவோமா!

இந்தப் புதிய ஆண்டில் ஒரு புதிய நல்ல பழக்கம் ஒன்றை நாம் மேற்கொண்டால் என்ன? குறிப்பாக, அது நம் ஆன்மீக வாழ்வை வளப்படுத்தும் பழக்கமாக இருந்தால் மிகவும் நல்லது. எடுத்துக்காட்டாக, நாள்தோறும் விவிலியம் வாசித்து செபிப்பது, அல்லது நாள்தோறும் 3 திருப்பாடல்களை செபிப்பது, அல்லது வாரம் ஒருமுறை உண்ணாநோன்பிருப்பது, அல்லது வாரம் ஒருநாள் தொலைக்காட்சியையோ, அலைபேசியையோ பயன்படுத்தாமல் இருப்பது என்று ஏதாவது ஒரு புதிய பழக்கத்தை இந்த ஆண்டின் முதல் நாளில் இருந்து தொடங்கினால் என்ன? நல்ல பழக்கங்கள் நம் ஆளுமையை வளர்த்து, நம் வாழ்வை வளப்படுத்துகின்றன. உளவியலாளர்கள் சொல்கிறார்கள் எந்த ஒரு பழக்கமும் உருவாக ஒரு செயலைத் தொடர்ந்து 21 நாள்கள் செய்தால் அது பழக்கமாக மாறிவிடும் என்று. ஆம், 21 நாள்கள் என்பதுதான் ஒரு பழக்கத்தை உருவாக்கவோ, நிறுத்தவோ தேவைப்படும் நாள்கள்.

இன்று முதல் ஒரு நல்ல செயலைத் தேர்ந்தெடுத்து, அதனை 21 நாள்கள் தொடர்ந்து கடைப்பிடித்து, நம் வாழ்வின் தொடர்பழக்கமாக அதனை மாற்றுவோம். நம் அன்புத் தாய் அன்னை மரியா அதற்கான ஆசியை நமக்கு வழங்குவார்.

மன்றாட்டு:
அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நீர் தந்திருக்கிற இந்தப் புதிய ஆண்டு என்னும் கொடைக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். இந்தப் புதிய ஆண்டில் உமது ஆசிக்காக இறைஞ்சுகிறோம். நாங்கள் தொடங்க விரும்பும் ஒரு நல்ல பழக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்க உமது ஆவியின் ஆற்றலை எங்களுக்குத் தந்தருளும். ஆமென்
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மரியா இறைவனின் தாய்!

இன்னும் மண்ணில் பிறக்காத குழந்தை ஒன்று இறைவனிடத்தில் மிக உருக்கமாகக் கேட்டது, "நாளைய நாளில் நீர் என்னை மண்ணுலகிற்கு அனுப்பப்போவதாக அறிந்தேன். அப்படி நீர் என்னை அனுப்பும் பட்சத்தில் - ஒரு குழந்தையாக நான் பிறக்கும் பட்சத்தில் - அங்கே எப்படி நான் வாழ்வது?". அதற்கு இறைவன் அதனிடம், "உன்னுடைய வருகைக்காக தேவதை ஒருத்தி காத்துக்கொண்டிருக்கின்றாள். அவள் உனக்குத் தேவையான அத்தனையும் பார்த்துக்கொள்வாள்" என்றார்.

"நான் மண்ணுலகிற்கு போனபின்பு, உம்மிடத்தில் நான் பேசவேண்டும் என்று நினைக்கின்றேன். அப்போது நான் என்ன செய்வது?" என்று கேட்டது குழந்தை. "அதைப் பற்றி ஒன்றும் கவலைப்படாதே, உன்னுடைய தேவதை உன்னுடைய கைகளைக் கூப்பிவைத்து, உன்னை என்னிடத்தில் ஜெபிக்க வைப்பாள், அதன்மூலம் நீ என்னிடத்தில் பேசிக்கொள்ளலாம்" என்றார் இறைவன். தொடர்ந்து குழந்தை இறைவனிடம், "இங்கே நான் பாதுகாப்பாக இருந்துவிட்டேன். ஆனால், நான் மண்ணுலகிற்குப் போனபின்பு, எனக்கு ஆபத்து வருகின்றபோது, என்னை யார் பாதுகாப்பார்?" என்று கேட்டது. அதற்கு இறைவன் மிகவும் அமைதியாக, "உன்னுடைய தேவதை உனக்கு எந்தவொரு ஆபத்தும் வராமல், ஏன் தன்னுடைய உயிரைத் தந்தாவது உன்னைப் பாதுகாத்துக்கொள்வாள்" என்றார்.

இறுதியாகக் குழந்தை தன்னுடைய முகத்தை மிகவும் சோகமாக வைத்துக்கொண்டு சொன்னது, "நான் மண்ணுலகிற்குப் போனபின்பு, உம்முடைய திருமுகத்தைக் காணமுடியாது போய்விடுமே, அப்போது உமது திருமுகத்தைக் காண்பதற்கு நான் என்ன செய்வது?". "மண்ணுலகில் உனக்கென்று ஒரு தேவதை இருக்கிறாளே, அவள் உன்னை என் பக்கம் திருப்புவாள், உன்னை என்னுடைய திருமுகத்தைக் காணச்செய்வாள்" என்றார் இறைவன். குழந்தை சற்று பொறுமை இழந்து, "எதற்கெடுத்தாலும் தேவதை இருக்கிறாள், தேவதை இருகின்றாள் என்று சொல்கின்றீரே, யார் அந்த தேவதை?" என்று கேட்டது. இறைவன் மிகவும் சாந்தமாக, "அந்தத் தேவதை (உன்னுடைய) அம்மா தான்" என்றார்.

ஆம், இந்த மண்ணுலகில் நமக்காக இருக்கின்ற தேவதை, தெய்வம், இறைவி எல்லாம் "அம்மா"தான். இந்த உன்னதத்தை உணர்ந்துதான், "இறைவன் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்பதால்தான் தாயினைப் படைத்தார்" என்று யூதப் பழமொழி சொல்கின்றது.

இன்று தாயாம் திருச்சபை "மரியா இறைவனின் தாய்" என்னும் பெருவிழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றது. ஆண்டின் முதல் நாளான இன்று, அன்னையின் அடிதொட்டு தொடங்குவது உண்மையில் மிகப் பெரிய ஆசிர்வாதம்தான். இவ்வேளையில், இன்று நாம் கொண்டாடுகின்ற விழா நமக்கு எடுத்துரைக்கும் செய்தி என்ன? என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம். கி.பி.431 ஆம் ஆண்டு, எபேசு நகரில் நடைபெற்ற திருச்சங்கம் "மரியா இறைவனின் தாய்" என்னும் விசுவாசப் பிரகடனத்தை அறிக்கையிட்டது. அன்றிலிருந்து இன்றுவரை மரியாவை இறைவனின் தாயாகப் பாவித்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரித் திங்கள் முதல் நாளில், விழா எடுத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். மரியா இறைவனின் தாயாகின்றபோது, இறைவனின் அன்புப் பிள்ளைகளாகிய நமக்கும் தாய் என்பதுதான் உண்மை. எனவே, ஒரு தாய்க்குரிய வாஞ்சையுடன் மரியா எப்படியெல்லாம் நமக்குத் துணை புரிகின்றார், நம்மை ஆசிர்வதிக்கின்றார் என்று இப்போது பார்ப்போம்.

மரியா, இந்த உலகமே உயிருக்குப் பயந்து, (நம்மை விட்டு) ஓடிபோனாலும், ஓடிப்போகாத ஒரு தாய் என்று சொன்னால் மிகையாகாது. உரோமை அரசாங்கம் இயேசு கிறிஸ்துவின்மீது சிலுவையைச் சுமத்தி, கல்வாரி மலையில் அறைந்து கொன்றபோது, அவரோடு யாருமே இல்லை, மரியா மட்டும்தான் அவரோடு இருந்தார். அப்படியானால், இயேசுவோடு இறுதிவரைக்கும் இருந்த ஒரே சொந்தம் தாய் மரியா என்பதுதான் உண்மை. இயேசுவோடு மட்டுமல்ல, நம்மோடும் இறுதிவரைக்கும் இருக்கின்ற ஒரே சொந்தம் தாய் (மரியா) என்பதுதான் அசைக்கக் முடியாத உண்மை. அதனால்தான் முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஒருமுறை இவ்வாறு சொன்னார், "தாயைப் பெற்றிருக்கின்ற யாரும் ஏழை இல்லை" என்று. ஆம், நமக்கென்று ஒரு தாய் இருகின்றாள், அவள் நம்மை ஒருபோதும் விட்டு விலகிவிடாத தாய், அவள் நம்மோடு இருக்கின்றபோது, நாம் ஒன்றும் ஏழைகள் இல்லை, மாறாக ஆசிர்பெற்ற மக்கள்.

அடுத்ததாக, மரியா தன்னுடைய மகன் இயேசுவுக்காக, இன்று நமக்காக பல்வேறு தியாகங்களை மேற்கொண்ட, மேற்கொள்ளும் ஒரு தியாகச் சுடர். ஒரு குழந்தையைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கி அழகுபார்ப்பதற்கு ஒரு சாதாரண தாய் எவ்வளவு தியாகங்களை மேற்மேற்கொள்கின்றாளோ, அவ்வளவு தியாகங்களையும் மேற்கொண்டவர் அன்னை மரியா. அது மட்டுமல்லாமல் தான் பெற்றெடுத்த மகன் தனக்காக வாழாமல், மனுக்குல மீட்புக்காக தன்னுடைய வாழ்வைத் தியாகம் செய்தவர். அப்படிப்பட்ட தியாகச் செம்மலை ஈன்றெடுத்து, அவரை மனுக்குல மீட்புக்காக தியாகம் செய்த மரியாவின் தியாக உள்ளத்தை எப்படி வார்த்தைகளால் விவரித்துச் சொல்வது?..

வழக்கமாக தாயின் தியாகத்தை பெலிக்கான் பறவையோடு ஒப்பிடுவார்கள். பெலிக்கான் பறவை தன்னுடைய குஞ்சுகளுக்கு இரை கிடைக்காதபோது, தன்னுடைய கூரிய, சிவந்த அலகினால் தன்னுடைய மார்பினில் குத்தி, அதிலிருந்து வழிகின்ற இரத்தத்தைக் கொண்டு குஞ்சுகளுக்கு உணவூட்டும். தாயும் கூட அப்படித்தான் தன்னுடைய பிள்ளை நன்றாக இருக்கவேண்டும், வாழ்வில் உயரவேண்டும் என்பதற்காக, தன்னுடைய உடலை வருத்திகொண்டு பல்வேறு தியாகங்களைச் செய்கின்றாள். அதனால்தான் "ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும் உனக்கிங்கு நான் பட்ட கடன்தீருமா?" என்று தாயின் தியாகத்திற்கு ஈடாக எதையும் கொடுத்துவிட முடியாது என்கிறார் கவிஞர் வாலி.
இப்படி நமக்காக பல்வேறு தியாகங்களை மேற்கொள்கின்ற, இறுதிவரைக்கும் உடனிருக்கின்ற தாய், அன்னை மரியைப் பெற்றிருப்பது உண்மையில் நாம் பெற்ற பாக்கியம்தான். இந்த அன்னையின் அன்பு மக்களாக, அவருக்கு உகந்தவராக வாழவேண்டும் என்றால், அந்த அன்னை நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான். அது வேறொன்றுமில்லை "அவர் (இயேசு) சொல்வதையெல்லாம் செய்வதுதான்" (யோவா 2:5). நாம் இயேசு சொன்ன வழியில் நடக்கும்போது, நாம் அன்னையின் அன்பு மக்களாக மாறுவதோடு மட்டுமல்லாமல், இயேசுவின் அன்புச் சகோதர சகோதரிகளாக மாறுகின்றோம் என்பது உண்மையாகின்றது.

இயேசு அல்லது இறைவன் சொன்ன வழியில் நாம் நடக்கும்போது, அவர் நமக்கு இன்று மூன்று ஆசிர்வாதங்களைத் தருவதாக வாக்களிக்கின்றார். பாதுகாப்பு, அருள், அமைதி ஆகிய இம்மூன்றும்தான் இறைவன் தருகின்ற ஆசிர்வாதங்கள். (இன்றைய முதல் வாசகம்),

ஆகவே, மரியா இறைவனின் தாய் என்னும் விழாவைக் கொண்டாடுகின்ற நாம், மரியா நம்மீது கொண்டிருக்கும் அளவுகடந்த அன்பினை உணர்ந்து, அவருடைய அன்பு மக்களாக வாழ முயற்சி செய்வோம். அதே நேரத்தில் இறைவனுடைய வழியில் நடப்போம். அதன்வழியாய் இறையருள் நிறைவாய் பெறுவோம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
இறைவனின் தாய், அன்னை மரியா

 ஆண்டின் முதல் நாளாகிய இத்திங்களன்று, திருஅவை, இந்நாளை, இறைவனின் தாய் அன்னை மரியாவின் பெருவிழாவாக சிறப்பித்தது. உள்ளூர் நேரம் 10 மணிக்கு, அதாவது, இந்திய மற்றும் இலங்கை நேரம், பிற்பகல் 2.30 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். அன்னை மரியாவை மையப்படுத்தி, அவர் வழங்கிய மறையுரையின் சுருக்கம்:

அன்னை மரியாவின் மிக உயரிய சிறப்புப் பட்டமான "இறைவனின் தாய்" என்ற பெயருடன் ஆண்டின் முதல் நாளை நாம் துவக்குகின்றோம். ஏன் அன்னை மரியாவை நாம், "இயேசுவின் தாய்" என்று அழைக்காமல், "இறைவனின் தாய்" என அழைக்கிறோம் என்பது குறித்து சிந்திக்க வேண்டும். அன்னை மரியாவில் மனு உருவெடுத்த இறைமகன், நம்மைப்போல் மனித நிலைகளை எடுத்துக்கொண்டார். அன்னை மரியாவை, இறைவனின் தாய் என நாம் அழைக்கும்போது, கடவுள், மனித குலத்திற்கு அருகாமையில் உள்ளார் என்பது நமக்கு நினைவூட்டப்படுகிறது. வானகத்தின் இறைவனும், முடிவற்றவருமான, கடவுள், நம்மோடு இருப்பதற்கென, நம்மைப்போல் உருவெடுத்தார்.,

மனிதன் தனியாக இல்லை, அவன் அநாதையும் அல்ல, என்பதை அறியும்போது மகிழ்கிறோம். அன்னை மரியாவின் கைகளில் இருக்கும் இயேசு பாலனைப்போல், நாமும் இறைவனின் கைகளில் குழந்தையாக உள்ளோம். மனித குலம் இறைவனுக்கு மதிப்பு மிக்கது. ஆகவே, மனிதனுக்கு ஆற்றும் பணி, இறைவனுக்கு ஆற்றும் பணியாகிறது. தாயின் வயிற்றில் கருவானது முதல், அனைத்து உயிர்களும், முதியோர், நோயாளிகள், துன்புறுவோர் என, ஒவ்வொரு உயிரும் வரவேற்கப்பட்டு, அன்புகூரப்பட்டு உதவப்படவேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம், " மரியா, இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்தி சிந்தித்துக் கொண்டிருந்தார்" என்பதைப் பார்த்தோம். கிறிஸ்து பிறப்பு காலத்தில் ஒரு வார்த்தை கூட அன்னை மரியா பேசியதாக இல்லை. பல்வேறு நேரங்களில், பல்வேறு வழிகளில் பேசி வந்த இறைவன், இப்போது, காலம் முழுமைபெற்றபோது, எப்படி அமைதியின் உருவாக, பேசமுடியாத குழந்தையாக உள்ளாரோ, அதேபோல், அன்னை மரியாவும், இயேசு பாலனுடன் கொண்டிருந்த ஒருமைப்பாட்டில் அமைதி காக்கிறார். நாமும், குடிலை அமைதியில் உற்றுநோக்கும்போது, நம் வாழ்வின் அர்த்தத்தை காண்டுகொள்கிறோம். நாம் அமைதி காக்கும்போது, நம் உள்ளத்தில் இறைவன் பேசுவதற்கு அனுமதிக்கிறோம்.
அன்னை மரியா தன் உள்ளத்தில் இருத்தி சிந்தித்தவை, மகிழ்வும், சோகங்களுமே. ஒரு பக்கத்தில், இயேசுவின் பிறப்பு, யோசேப்பின் அன்பு, இடையர்களின் வருகை, ஒளிமிக்க ஓர் இரவு என பல விடயங்கள் மகிழ்வளித்தாலும், மறுபக்கம், வருங்காலம் குறித்த அச்சமும், வீடற்ற நிலையும், சோகங்களாக இருந்தன. அனைத்தையும் அவர் தன் இதயத்தில் இருத்தி அங்கிருக்கும் இறைவனுடன் உரையாடினார். நாமும் நம் துயர்கள் குறித்து உரையாடலை மேற்கொள்வோம், நம்முள் இருக்கும் இறைவனுடன். நம்மை தன் இதயத்தில் வைத்து காக்கும் இறைவன், இப்போது நம் வாழ்வில் குடிகொள்ள வந்துள்ளார்.

அனைத்தையும் அமைதியாக ஏற்று, இறைவனிடம் கொணர்வது, அன்னை மரியாவின் இரகசியம். அன்னை மரியாவைப்போல் நாமும் இருக்க வேண்டும் என இறைவன் விரும்புகிறார், அதாவது, எளிய மனதினராக, பொருள் செல்வம் இல்லையெனினும், அன்பில் செல்வந்தராக, குற்றமற்றவராக, இயேசுவில் இணைந்து, இறைவனை நம் இதயத்திலும், நமக்கு அடுத்திருப்பவரை நம் வாழ்விலும் கொண்டிருப்பவர்களாக செயல்படவேண்டும் என்று.

அன்னை மரியாவின் மீது பக்தி கொண்டிருப்பது, கிறிஸ்தவ வாழ்வுக்கு தேவையான ஒன்றாகும். அன்னையைப் பார்த்து, எதெது நம் வாழ்வுக்கு முக்கியான தேவை என்பதை கற்றுக் கொள்வோம். நம் அனைவருக்கும் ஓர் அன்னையின் இதயம் தேவை. ஆம், இறைவனின் அன்பை உணரவும், நமக்கு அடுத்திருப்போரின் இதயத்துடிப்புக்களை அறிந்து கொள்ளவும், அன்னையின் இதயம் தேவை. உன்னத படைப்பாம், அன்னை மரியா, இந்த ஆண்டில், இறைமகனின் அமைதியை நமக்கும், இவ்வுலகிற்கும் வழங்குவாராக.

இவ்வாறு தன் மறையுரையை வழங்கினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

✠ புத்தாண்டுப் பெருவிழா ✠
சொல்லப்பட்டவாறே எல்லாம்!
திருவிழா நாள்: ஜனவரி 1
இன்று நாம் நான்கு திருவிழாக்களை ஒருசேரக் கொண்டாடுகிறோம்:
அ. கிரகோரியன் காலண்டர் படி இன்று ஆண்டின் முதல் நாள் - புத்தாண்டுப் பெருநாள்.
ஆ. கன்னி மரியாள் இறைவனின் தாய் - திருஅவைத் திருநாள்.
இ. கிறிஸ்து பிறப்பின் எட்டாம் திருவிழா - கிறிஸ்து பிறப்பின் எண்கிழமை நிறையும் நாள்.
ஈ. மரியாளும் யோசேப்பும் தங்களுடைய குழந்தைக்கு 'இயேசு' என்று பெயரிட்ட நாள் - இயேசுவின் பெயர் விழா.

இந்த நான்கு திருவிழாக்களையும் இணைக்கும் ஒரு மையக்கருத்தை எண்ணிப்பார்ப்பது கடினமாகவே இருந்தது. இருப்பினும், இன்றைய நற்செய்தியில் வரும் ஒரு வாக்கியம் இந்த வேலையை எளிதாக்குவதுபோல இருக்கிறது:
'அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறே எல்லாம் நிகழ்ந்திருந்தது' - என்று கிறிஸ்து பிறப்பு நிகழ்வை நிறைவு செய்கிறார் லூக்கா.

யார் இந்த 'அவர்கள்'? - இடையர்கள்.
என்ன சொல்லப்பட்டது?
- 'இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காக தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அடையாளம்'
இந்த இடையர்கள் 'தாவீதின் ஊர்' என்றால் 'பெத்லகேம்' என்பதை எப்படி அறிந்தார்கள்?

அந்த இரவில் அவர்கள் எத்தனை பேர் வீடுகளைத் தட்டியிருப்பார்கள்?
எத்தனை பேரிடம் விசாரித்திருப்பார்கள்?
திருடர்கள், பொய்யர்கள், அழுக்கானவர்கள் என்று சொல்லப்பட்ட இடையர்களுக்கு எத்தனை பேர் சரியான வழிகாட்டியிருப்பார்கள்?
அவர்கள் எப்படி தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டிருந்த குழந்தையைக் கண்டுபிடித்தார்கள்?

இவர்கள் தாங்கள் வானதூதர்களிடம் கேட்டதை யோசேப்புக்கும் மரியாவுக்கும் தெரிவித்தபோது (காண். லூக் 2:17) மற்றவர்கள் அதை எப்படிக் கேட்டார்கள் (காண். லூக் 2:18)? அல்லது இந்த இடையர்கள் தாங்கள் சந்தித்த எல்லாரிடமும் இதைப்பற்றியே சொல்லிக்கொண்டே சென்றார்களா?

மெசியாவைத் தேடி வந்த இவர்களின் மந்தைகளை யார் கவனித்துக்கொண்டார்கள்?
இடையர்களின் இறுதி பதிலிறுப்பு இப்படியாக இருக்கிறது: 'அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது?'
தீவனத் தொட்டியில் கிடந்த குழந்தையில் மீட்பரையும், மெசியாவையும், ஆண்டவரையும் காண அவர்களால் எப்படி முடிந்தது?

இதுதான் நம்முடைய சிந்தனையின் தொடக்கம்.
வலுவற்ற குழந்தையில் மீட்பரையும், மெசியாவையும், ஆண்டவரையும் காண வேண்டுமென்றால் பின்வருவனவற்றை அவர்கள் செய்ய வேண்டும்:

1. பயம் களைதல் வேண்டும்:
இடையர்களுக்குத் தோன்றுகிற வானதூதரின் முதல் வார்த்தையே, 'அஞ்சாதீர்கள்!' என்பதுதான். தடைகளைவிட தடைகள்வரும் என்ற பயமே நம்மை பலவீனமாக்குகிறது. பயம் களைந்தால் மட்டுமே வானதூதரின் செய்தியைக் கேட்க முடியும். பயம் களைந்தால் மட்டுமே கடவுளின் குரலை நாம் கேட்க முடியும்.

2. இதுவரை செய்யாத செயல் ஒன்றைச் செய்ய வேண்டும்:
எழுதல், ஆடுகளை எழுப்புதல், நடத்தல், மேய்த்தல், உண்ணுதல், உணவு தருதல், உறங்குதல் என்று எப்போதும் ஒரே மாதிரி வாழ்ந்த அவர்களுடைய செயலை அவர்கள் மாற்றுகின்றனர்.

3. மேல் நோக்கிப் பயணம் செய்ய வேண்டும்:
மெசியாவைக் காண வேண்டுமென்றால் ஆடுகளை விட வேண்டும். மேலானவற்றைத் தழுவிக்கொள்ள கீழானவற்றை விட வேண்டும். மேல் படிக்கட்டில் ஏற வேண்டுமென்றால் கீழ்ப்படிக்கட்டிலிருந்து காலை எடுக்க வேண்டும்.

4. மகிழ்ச்சியைப் பரப்ப வேண்டும்:
'ஆடுகளோடு இருந்தால் ஆடுகளின் வாடைதான் இருக்கும்' என்று அவர்கள் அறிந்ததால், மகிழ்வோடு இருந்த அவர்கள் சென்ற இடமெல்லாம் மகிழ்ச்சியைப் பரப்புகின்றனர். அவர்களின் மகிழ்ச்சியே நற்செய்தி அறிவிப்பாக மாறுகின்றது.

5. இன்று தொடங்க வேண்டும்:
தங்களுடைய பயணத்தை அவர்கள் தள்ளிவைக்கவில்லை. 'உடனே' புறப்படுகின்றனர். வாழ்வின் முக்கியமான முடிவுகள் நேற்று எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு அடுத்து இன்று இப்போது எடுக்கப்பட வேண்டும் என்பதை உணர்கின்றனர் இடையர்கள்.

6. எப்போதும் செயல்பட வேண்டும்:
வாழ்க்கை என்பது செயல்பாட்டில் இருக்கிறதே தவிர ஓய்வில் அல்ல. நாம் நம்முடைய ஓய்வால் அல்ல, மாறாக, நம்முடைய செயல்பாட்டால்தான் வாழ்வை மாற்றவும், மற்றவர்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தவும் முடியும்.
இந்த ஆறு பண்புகளுமே மரியாளின் தாய்மையிலும் அடங்கியிருக்கின்றன.
இன்று மரியாளை இறைவனின் தாயாக அழைத்து, அவரின் தாய்மையைக் கொண்டாடுகிறோம். 'இறைவனின் தாய்' என்றால், அவர் 'இறைவனையே பெற்றெடுத்தார்' என்ற பொருளில் அல்ல. ஏனெனில், 'படைக்கப்பட்டவர்' 'படைத்தவரை' பெற்றெடுக்க முடியாது. ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த நெஸ்டோரியஸ் என்ற கீழைத்திருஅவை (கான்ஸ்டான்ட்டிநோபில்) ஆயர் மற்றும் அவரது சீடர்கள் இயேசுவின் மனித தன்மையை மட்டுமே ஏற்றுக்கொண்டு, மரியாளை 'கிறிஸ்துவின் தாய்' அல்லது 'இயேசுவின் தாய்' என அழைத்தனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடிய எபேசு பொதுச்சங்கம் (431), 'இம்மானுவேல்தான் கடவுள். இந்த இம்மானுவேலின் தாய் இறைவனின் தாய். இதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் சபிக்கப்படுக!' என்று அறிவித்தது. ஆக, 'இறைவனின் தாய்' என்னும் தலைப்பு மரியாளுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு என்பதைவிட, இயேசுவின் இறைத்தன்மைக்கு கொடுக்கப்பட்டது என்றே சொல்ல வேண்டும். மரியாள் எலிசபெத்தைச் சந்திக்கச் சென்றபோது, அவரை வாழ்த்தி வரவேற்கும் எலிசபெத்து, 'என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?' (லூக் 1:43) என்று கேட்கின்றார். 'ஆண்டவரின் தாய்' என்ற இந்தச் சொல்லாடல்தான் 'இறைவனின் தாய்' என்று வந்தது என்றும் நாம் சொல்ல முடியாது. ஆனால், எலிசபெத்து மரியாளை 'ஆண்டவரின் தாய்' என்று அழைக்கின்றார். மற்றபடி மரியாளை இறைவனின் தாய் என அழைக்க வேறு குறிப்புக்கள் விவிலியத்தில் இல்லை.

மரியாளின் தாய்மைக்கு அடிப்படை நம்பிக்கை. 'தனக்குச் சொல்லப்பட்டவாறே எல்லாம் நடக்கும்' என்று நம்பினார். இடையர்களின் வருகையைக் கண்ட, அவர்களின் வார்த்தைகளைக் கேட்ட மரியாள், 'அனைத்தையும் உள்ளத்தில் இருத்திச் சிந்திக்கின்றார்.' இங்கே, 'சிந்திக்கின்றார்' என்ற வார்த்தை கிரேக்கத்தில் 'சும்பல்லோ' என்று இருக்கிறது. 'சும்பல்லோ' என்றால் 'அனைத்தையும் கூட்டிச் சேர்ப்பது' அல்லது 'ஒன்றை ஒன்று பொருத்திப்பார்ப்பது' என்பது பொருள். தனக்குச் சொல்லப்பட்டது அனைத்தும் அடுத்தடுத்து நிறைவேறுவதைப் பொருத்திப் பார்க்கிறார்.

இன்று புத்தாண்டிற்கள் நாம் நுழைகின்றோம்.
நமக்குச் சொல்லப்பட்டது என்ன? நமக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் எப்படி நிகழும்?

நமக்குச் சொல்லப்படுவது மூன்று:
அ. ஆசீர் - மக்கட்பேறு, நிலம், உடைமைகள்
ஆ. அருள் - ஆண்டவரின் திருமுக ஒளி
இ. அமைதி - கீறலற்ற மனம்

இவை நம்மில் நடக்கும் என்பதற்கு நம்பிக்கை அவசியம்.
'டோரிஸ் டே' என்ற திரைப்படத்தில், 'கே ஸெரா ஸெரா' என்று ஒரு பாடல் உண்டு.
அதாவது. 'எது நடக்குமோ அது நடக்கும்'
'காலங்கள் அவருடையன, யுகங்களும் அவருடையன' என்கிறோம்.
இடத்தை நாம் தெரிவு செய்துகொள்ளலாம். காலத்தைத் தெரிவு செய்கிறவர் அவர் ஒருவரே.

அவரின் கரங்களில் நம்முடைய வாழ்க்கை இருக்க நமக்கு கவலை ஏன்?
நம்பிக்கையோடும் எதிர்நோக்கோடும் நகர்வோம்.
ஏனெனில், 'அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறே எல்லாம் நிகழ்ந்தது.'
நமக்குச் சொல்லப்பட்டவாறே எல்லாம் நிகழும்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!
(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 5
=================================================================================
✠ புத்தாண்டில் புதிய திருப்பம் ✠
திருவிழா நாள்: ஜனவரி 1
 குன்று நோக்கி...

புலர்ந்துள்ளது புத்தாண்டு!
அது - காலப்போக்கின் ஒரு புதிய திருப்பம்
- மனித வாழ்க்கை ஏட்டின் ஒரு புதிய பக்கம்
- உலக வரலாற்றின் ஒரு புதிய அத்தியாயம். புத்தாண்டு என்பது என்ன?
மனிதனைத் தவிர காலத்தைக் கடந்த கடவுளுக்கோ, கடவுளின் மற்ற படைப்புகளுக்கோ - உயிரற்ற சடப்பொருளாகட்டும், உயிருள்ள ஆனால் உணர்வற்ற பயிரினமாகட்டும், உணர்வுள்ள ஆனால் அறிவற்ற மிருக இனமாகட்டும், அல்லது அறிவே நிறைவான இறைவனாகட்டும் அனைத்துக்கும் - புத்தாண்டு என்பது பொருளற்றது!

புத்தாண்டு என்பது ஓர் எல்லைக்குட்பட்ட காலத்தின் தொடக்கம் தானே! அது உண்மை என்றால், காலமற்ற, காலத்தைக் கடந்த கடவுளுக்கு ஒரு காலத்தின் தொடக்கமா? நினைத்துப் பார்க்க முடியவில்லை.

நாள், வாரம், மாதம், வருடம் என்று வரையறுக்கப்பட்ட கால எல்லைகளுக்கு மதிப்பேது?

பூமி தன்னையே சுற்றுவதைக் கண்டு, தன்னைச் சுற்றிக் கொண்டே சூரியனைச் சுற்றுவதைக் கண்டு நாள் என்றும் வாரம் என்றும், மாதம் என்றும், ஆண்டு என்றும் வகுத்தும் கணித்தும் அதற்கு ஒரு தொடக்கத்தைக் கற்பித்தவனே மனிதன் தானே!
இம்மை, அதன் தொடர்ச்சியான மறுமை இவற்றையெல்லாம் உள்ளடக்கிய நித்தியம் ஒன்றே உண்மை ! அந்த நித்தியத்தை நம் வசதிக்காக அநித்தியமாக்கிக் கொள்கிறோம் நாம்.

எப்போது பூமி சுற்றத் தொடங்கியது? யாருக்குத் தெரியும்?

தமிழனுக்கு என ஒன்று, தெலுங்கனுக்கு என ஒன்று, ஆங்கிலேயனுக்கு என ஒன்று... இப்படி எத்தனை எத்தனை புத்தாண்டுகள்! அத்தனையும் மனிதக் கற்பனைகள்!
நமக்கென வகுத்துக் கொண்ட புத்தாண்டுக்கு நாம்தாம் பொருள் தரவேண்டும்.
குறிப்பிட்ட ஒரு காலக்கட்டத்தின் தொடக்கமாகப் புத்தாண்டு இருப்பதுபோல, நமது வாழ்க்கையிலும் ஒரு புதிய தொடக்கத்தைக் காண விழையும் போதுதான், ஒரு புதிய திருப்பத்தைப் பார்க்க நினைக்கும் போதுதான் புத்தாண்டு பொருள் பெறும்; பொலிவு பெறும்!

தவறுகள் கூட வாழ்வுக்கு வலுவூட்டும். கூட்டித் தள்ளும் குப்பைகள் வயலுக்கு உரமாவது போல கடந்த ஆண்டு நாம் செய்த தவறுகளை உரமாக்கிப் புதிய ஆண்டில் நம் வாழ்க்கையைப் பசுமையாக்கிக் கொள்வோம்.

கடவுள் மனித இனத்துக்கெனத் திறந்து வைத்திருக்கும் மாளிகை தான் புதிய ஆண்டு,
தந்தை ஒருவர் தன் இருமக்களையும் அழைத்துத் தன் சொத்தை ஒப்படைக்கப் பொறுப்பான தகுதியுள்ள வாரிசு யார் என்பதை அறிய ஒரு சோதனைக்கு உட்படுத்தினார். குறிப்பிட்ட பணத்தை இருவருக்கும் சமமாகப் பகிர்ந்து கொடுத்து இரு அறைகளை ஒதுக்கி தனித்தனியாக அந்த அறைகளைப் பொருட்களால் நிரப்புங்கள் என்றார். மூத்தவன் வண்டி வண்டியாக வைக்கோலை வாங்கிச் சிறிதுகூட இடம் இல்லாமல் அறை முழுவதையும் நிரப்பினான். இளையவனோ ஒரு மெழுகுதிரி ஒரு தீப்பெட்டி, ஒரு ஊதுபத்தி வாங்கித் திரியை ஏற்றி வைத்தான். ஊதுவத்தியைப் புகைய விட்டான். மீதிப்பணத்தை ஏழை எளியவருக்கு அள்ளிக் கொடுத்தான். தந்தை மூத்த மகனுக்குரிய அறைக்குள் நுழைய முயன்றார். நுழைய முடியாதபடி அறைமுழுவதும் இறுக இறுக வைக்கோல் மலை. இளையவன் அறைக்குள் நுழைந்தார். பார்க்கும் இடம் எல்லாம் ஒளி வெள்ளம், மூக்கைத் துளைக்கும் நறுமணம்.

இரண்டு பேர்களுமே அறைகளை நிறைத்திருந்தார்கள். ஆனால் என்ன வேறுபாடு? ஒருவன் குப்பை கூளம் போல வைக்கோலால் நிறைத்திருந்தான். மற்றவனோ ஒளியாலும் நறுமணப் புகையாலும் நிறைத்திருந்தான். வைக்கோல் நிறைந்த அறைக்குள் அவனாலும் நுழைய முடியவில்லை . அவன் தந்தையாலும் நுழைய முடிய வில்லை. மற்ற அறைக்குள்ளோ நுழைந்த அனைவராலும் ஒளியையும் மணத்தையும் அனுபவிக்க முடிந்தது.

நாமும் இப்படி வீணானவற்றால் நம் மனத்தையும் வாழ்வையும் நிறைக்காது இளையவனைப் போல இறைவார்த்தை என்ற ஒளியை ஏற்றி நற்செயல்களால் வாழ்வை நறுமணம் கமழச் செய்தால் வாழ்க்கை எப்படிப் பொலிவுறும்! புத்தாண்டு எப்படிப் பொருள் பெறும்!

ஞானியாக மக்கள் கருதிப் போற்றிய அந்தப் பெரியவரிடம் இளைஞன் ஒருவன் வந்தான். அவரைச் சோதிக்க எண்ணி உள்ளங்கைக்குள் ஒரு சிட்டுக் குருவியை மறைத்துக் கொண்டு கேட்டான்: சிட்டுக்குருவி உயிரோடு இருக்கிறதா? இல்லை இறந்து விட்டதா? இறந்து விட்டது என்று சொன்னால் குருவியைப் பறக்க விட்டு உயிரோடு இருக்கிறது எனச் சொல்லலாம். உயிருள்ளது என்று சொன்னால் மெதுவாக நசுக்கிக் கொன்றுவிட்டு இறந்து விட்டது என்கலாம் என்பதுதான் இளைஞனின் திட்டம். ஞானி சொன்ன பதில்: "அது உன் கையில் இருக்கிறது புத்தாண்டு எப்படி இருக்கும்? அது உன்னைப் பொருத்தது.

இறைவன் தாமே உனக்கு முன்பாகப் போகிறார். அவர் உன்னோடு இருப்பார். அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை . உனைக் கைவிடுவதும் இல்லை . நீ பயப்படவும் கலங்கவும் வேண்டியதில்லை (இ.ச.38:8) என்ற நம்பிக்கை உணர்வில், அதோ அங்கே ஒரு தேவை! உன்னால் அதனைத் தீர்த்து வைக்க முடியும். இதோ இங்கே ஒரு புண்! உன்னால் இதனை ஆற்றிவிட முடியும் என்ற இலட்சிய ஈடுபாட்டில் புதிய வாழ்க்கைப் பாதை பிறக்கட்டும். புதிய ஆண்டின் ஒவ்வொருநாளும் கடந்து செல்லட்டும்.

புலர்ந்துள்ள புதிய ஆண்டில் மனங்களில் மகிழ்ச்சி மலரட்டும், இல்லங்களில் நல்உறவு வளரட்டும். வாழ்க்கையில் வளமை பெருகட்டும்!
(அருட்பணி இ. லூர்துராஜ்)



=================================================================================
திருப்பலி முன்னுரை
=================================================================================


அன்னை மரியா இறைவனின் தாய் பெருவிழா



புலர்ந்துள்ள இனிய புத்தாண்டின் முதல் நாளிலே நம் திருச்சபையானது அன்னை மரியா இறைவனின் தாய் என்ற திருவிழாவைக் கொண்டாடி மகிழ நம்மை அழைக்கின்றது.

மேகத்தைச் சிறப்பித்துப் புகழ்வது அது கொடுக்கும் மழைக்காக; மரத்தைப் புகழ்வது அது கொடுக்கும் கனிகளுக்காக; பசுவைப் புகழ்வது அது கொடுக்கும் பாலுக்காக; அன்னை மரியாவை சிறப்பித்துப் புகழ்வது அவர் பெற்றெடுத்த உலக மீட்பர் இயேசுவுக்காக.

தந்தையாம் கடவுளின் திருவுளத்தில் தூய ஆவியாரின் உடனிருப்பில் மானிட உடல் ஏற்று வாக்களிக்கப்பட்ட வார்த்தையான மெசியாவுக்கு தாயாகும் பேற்றினை பெற்றுள்ளதால் படைப்பு உயிர்களில் சிறந்தவராக போற்றப்படுகிறார்.

இன்றைய முதல் வாசகத்திலே ஆசிகள் வழங்கப் பெறுவதையும், வழங்கும் முறையைப் பற்றியும் விடுதலைத் தலைவர் மோசே வழியாக ஆரோன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எடுத்துரைக்கின்றது எண்ணிக்கை திருநூல். இப்புத்தாண்டில் ஆண்டவர் தம் திருமுகத்தை நம்மீது திருப்பி நம்மை பாதுகாப்பார் என்ற நம்பிக்கைச் செய்தியைப் பெற்று இறை பராமரிப்பில் வாழ்வோம்.

இரண்டாம் வாசகத்திலே நாம் கடவுளின் பிள்ளைகள் என்ற நிலையில் எந்தவிதமான அடிமைத்தனங்களுக்கும் உள்ளாகாதவாறு வாழ வேண்டியது நமது கடமை என்பதை புனித பவுலடியார் கலாத்தியருக்கு எழுதிய மடலில் உணர்த்துகின்றார்.

இன்றைய நற்செய்தியிலே மீட்பராக பிறந்த இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வை வாசிக்கின்றோம். இப்பெருவிழா நாளில் நமக்குப் பெயரிடப்பட்ட திருமுழுக்கு நாளை நினைவு கூர்வோம். அந்த அருள்பொழிவில் நமக்கு வழங்கப்பட்ட உரிமைகளாகிய கடவுளின் திருச்சபையின் பிள்ளை என்பதில் பெருமகிழ்வு கொள்வோம். இப்புத்தாண்டில் இறைவனது ஆசிகளால் நிரப்பப்பட இப்பலியிலே இறையருளை வேண்டுவோம்.

மன்றாட்டுகள்:

1. ஆசி வழங்குகின்றவரே இறைவா!
எங்களது அன்றாட வாழ்வில் நீரே மையமாக இருந்து எங்களுக்குத் தேவையான பாதுகாப்பு, அருள், அமைதி இவற்றை அளித்து எங்களது வாழ்வை வளப்படுத்த இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. புதுவாழ்வைத் தருகின்றவரே இறைவா!
புதிதாகப் பிறந்துள்ள இப்புத்தாண்டிலே நாங்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்ற தேவைகள் அனைத்தும் நிறைவேறவும், ஒவ்வொரு நொடிப்பொழுதும் உடனிருந்து எங்களைப் பாதுகாத்து பராமரித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்னை மரியாளை எமக்குத் தாயாகத் தந்தவரே இறைவா!
அன்னைமரி இறைவனின் தாய் என்று கொண்டாடி மகிழ்கின்ற இந்நாளிலே அன்னையின் பாதுகாப்பிலும், பரிந்துரையிலும் இறையருளைப் பெற்றிடவும், உலக தாய்மார்கள் அனைவரும் மதிக்கப்படவும் தங்களது நிலையினை புனித நிலையாக கருதி வாழ்வதற்குத் தேவையான உமது அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. காலங்களைக் கடந்தவரே இறைவா!
நீர் எங்களுக்கு மூலதனமாக அளித்துள்ள காலங்களை வீணாக்காமல அவற்றை பயன் தருகின்ற வகையில் செலவிட்டு, இறைவார்த்தையில் புதைந்துள்ள ஞான செல்வத்தைக் கண்டு உணர்ந்து எங்கள் வாழ்வை அமைத்திட ஞானத்தைப் பொழிந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. விடுதலையும் வாழ்வையும் கொடுப்பவரே இறைவா!
விளை நிலங்கள் நல்ல பலனைக் கொடுத்து விவசாயிகள் வாழ்வில் ஏற்ற பெறவும், இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பும் நலமும் வளமுமான நிறைவான வாழ்வு கிடைத்திடவும், உலக நாடுகள் அனைத்தும் சமாதானத்தில் மகிழ்ந்திருக்கவும், நீதிக்காகவும், விடுதலைக்காகவும் உரிமை வாழ்விற்காகவும் எதிர்நோக்கியிருப்போர் அனைவரின் மனங்களிலும் நிறைவு பெற உமது அருளை அளித்திட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நன்றி: ஆசிரியை. திருமதி. லூயிஸ் ரெக்ஸ்லின், பாவூர்சத்திரம்.

 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!