Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                       
                           கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழா
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
தொடக்க நூலிலிருந்து வாசகம் 14: 18-20

அந்நாள்களில்

சாலேம் அரசர் மெல்கிசெதேக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார். அவர் 'உன்னத கடவுளின்' அர்ச்சகராக இருந்தார். அவர் ஆபிராமை வாழ்த்தி, "விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுள் ஆபிராமிற்கு ஆசி வழங்குவாராக! உன் எதிரிகளை உன்னிடம் ஒப்புவித்த உன்னத கடவுள் போற்றி! போற்றி!" என்றார். அப்பொழுது ஆபிராம் எல்லாவற்றிலிருந்தும் அவருக்குப் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார்.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 110: 1. 2. 3. 4 (பல்லவி: 4a) Mp3
=================================================================================
 

பல்லவி: மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே.
1
ஆண்டவர் என் தலைவரிடம், 'நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப் பக்கம் வீற்றிரும்' என்று உரைத்தார். - பல்லவி

2
வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஓங்கச் செய்வார்; உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்! - பல்லவி

3
நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்; வைகறை கருவுயிர்த்த பனியைப் போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர். - பல்லவி

4
'மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே' என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்; அவர் தம் மனத்தை மாற்றிக்கொள்ளார். - பல்லவி



================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
நீங்கள் உண்டு பருகும்போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அறிவிக்கிறீர்கள்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 11: 23-26

சகோதரர் சகோதரிகளே,

ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக் கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக் கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, "இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்" என்றார். அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, "இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்" என்றார்.

ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


தொடர்பாடல்
இத்தொடர் பாடலை விருப்பம் போல் பயன்படுத்தலாம்: இதை முழுமையாக அல்லது குறுகிய பாடமாக "வானவர் உணவிதோ" என்ற (21ஆம்) அடியிலிருந்தும் சொல்லலாம் அல்லது பாடலாம்.

சீயோனே, உன் மீட்பரைப் புகழ்வாய்,
கீதமும் பாடலும் இசைத்தே உந்தன்
ஆயரை, தலைவரைப் புகழ்வாயே.
எல்லாப் புகழும் கடந்தவர் அவரே;
இயலாது உன்னால் அவரைப் புகழ,
இயன்ற மட்டும் துணிந்திடுவாயே.
உயிர்மிகு அப்பம் உயிர்தரும் உணவாம்
போற்றுதற்குரிய இப்பேருண்மை
இன்று சிந்தனைக்கு ஏற்ற பொருளே.
தூய விருந்தின் பந்தியில் அன்று
பன்னிரு சோதரர் கூட்ட மதற்கே
கிடைத்த உணவிது; ஐயமே யில்லை.
ஆர்ப்பரிப் புடனே இனிமையும் கலந்த
நிறைபுகழ்க் கீதம் ஒலிப்பதோ டன்றி
மகிழ்வும் மனதில் பெருகிடல் தகுமே.
பெருஞ்சிறப்பான திருவிழா இன்றே
இத்திரு விருந்தை முதன் முதலாக
நிறுவிய நாளை நினைவுகூர்கின்றோம்.
புதிய பேரரசரின் இத்திருப் பந்தியில்
புதிய ஏற்பாட்டின் புதுத்தனிப் பாஸ்கா
பழைய பாஸ்காவை முடிவுறச் செய்யும்.
புதுமை பழமையைப் போக்குதல் காணீர்,
உண்மை நிழலை ஓட்டுதல் காணீர்,
ஒளியோ இரவை ஒழித்தல் காணீர்.
திருவிருந்ததனில் நிறைவேற்றியதைத்
தம் நினைவாகச் சீடரும் செய்யக்
கட்டளை தந்தார் கிறிஸ்து பெருமான்.
திருக் கட்டளையால் அறிவுரை பெற்று
அப்பமும் இரசமும் மீட்புக்குரிய
பலிப் பொருளாக அர்ச்சிக்கின்றோம்.
அப்பம் மாறி அவர் ஊன் ஆவதும்,
இரசமது மாறி இரத்தமாவதும்
கிறிஸ்துவர்க் கருளிய உண்மையாமே.
புலனையும் அறிவையும் முற்றும் கடந்து,
இயற்கை முறைமைக் கப்பால்,
உள்ளத்தை உறுதியோ டேற்கும் உயிர்விசு வாசம்.
அப்பமும் இரசமும் குணங்களில் வேறாய்
அவற்றின் தோற்றம் மட்டுமே யிருக்க
அற்புத உட்பொருள் மறைவாய் உள்ளதே.
ஊனே உணவு, இரத்தமே பானம்
இருவித குணங்கள் ஒவ்வொன் றுள்ளும்
கிறிஸ்து முழுவதும் உண்டெனக் கொள்வீர்.
உண்பவர் அவரைப் பிய்ப்பதுமில்லை.
உடைப்பதுமில்லை, பிரிப்பதுமில்லை.
அவரை முழுதாய் உண்கின் றனரே.
உண்பவர் ஒருவரோ, ஆயிரம் பேரோ,
ஒருவர் உண்பதையே அனைவரும் உண்பர்;
உண்பதால் என்றுமே தீர்வதுமில்லை.
நல்லவர் உண்பர், தீயரும் உண்பர்
அதனால் அவர் பெறும் பயன் வெவ்வேறாம்
முன்னவர் வாழ்வார், பின்னவர் அழிவார்.
நல்லோர் வாழ்வார், தீயோர் அழிவார்:
உணவொன்றாயினும் எத்துணை வேறாம்
பயன்விளைத் திடுமெனப் பகுத்துணர் வாயே.
அப்ப மதனைப் பிட்ட பின்னரும்
முழுமையில் எதுவோ அதுவே பகுதியில்
உளதாம், அறிந்திடு, ஐயமே வேண்டா.
உட்பொருள் பிளவு படுவதே யில்லை;
குணத்தில் மட்டும் பிடப்படுமே
அவரது நிலையும் உருவும் குறையா.
வானவர் உணவிதோ வழிநடப் போர்க்கும்
உணவா யிற்றே; மக்களின் உணவை
நாய்கட் கெறிதல் நலமா காதே.
ஈசாக் பலியிலும் பாஸ்கா மறியிலும்
நம் முன்னோர்க்குத் தந்த மன்னாவிலும்
இந்தப் பலியின் முன்குறி காண்பீர்.
நல்ல ஆயனே, உண்மை உணவே,
யேசுவே, எம்மேல் இரங்கிடு வீரே,
எமக்குநல் அமுதே ஊட்டிடுவீரே.
நும்திரு மந்தை எம்மைக் காத்து,
நித்திய வாழ்வினர் வாழும் நாட்டில்
நலன்கள் அனைத்தும் காணச் செய்வீர்.
அனைத்தும் அறிவோய், அனைத்தும் வல்லோய்,
மாந்தர்க் கிங்கு உணவினைத் தருவோய்,
அங்கும் பந்தியில் அமரச் செய்வாய்.
அமர்ந்து நும்முடன் பங்கினைக் கொள்ளவும்,
வான்திருக் கூட்டத்தின் நட்பினராகவும், அருள்வீர்,
ஆமென், அல்லேலூயா.


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 6: 51-52

அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
 
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
அனைவரும் வயிறார உண்டனர்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 11b-17

அக்காலத்தில்

இயேசு மக்களை வரவேற்று இறையாட்சியைப் பற்றி அவர்களோடு பேசி, குணமாக வேண்டியவர்களைக் குணப்படுத்தினார். பொழுது சாயத் தொடங்கவே பன்னிருவரும் அவரிடம் வந்து, "இவ்விடம் பாலை நிலம் ஆயிற்றே; சுற்றிலும் உள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் சென்று தங்கவும் உணவு வாங்கிக்கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்" என்றனர். இயேசு அவர்களிடம், "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்றார். அவர்கள், "எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே உள்ளன. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும்" என்றார்கள்.

ஏனெனில் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்கு இருந்தனர். இயேசு அவருடைய சீடர்களை நோக்கி, "இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள்" என்றார். அவர் சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள்.

அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, அவற்றின்மீது ஆசி கூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார். அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================



மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!