Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                                Year B  
                                        கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழா
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 24: 3-8

அந்நாள்களில் மோசே மக்களிடம் வந்து ஆண்டவர் சொன்ன அனைத்து வார்த்தை களையும் விதிமுறைகளையும் அறிவித்தார். மக்கள் அனைவரும் ஒரே குரலாக, "ஆண்டவர் கூறிய வார்த்தைகள் அனைத்தையும் நாங்கள் செயல்படுத்துவோம்" என்று விடையளித்தனர்.

மோசே ஆண்டவரின் வாக்குகள் அனைத்தையும் எழுதி வைத்தார். அதிகாலையில் அவர் எழுந்து மலையடிவாரத்தில் ஒரு பலிபீடத்தையும், இஸ்ரயேலின் பன்னிரண்டு குலங்களுக்காகப் பன்னிரண்டு தூண்களையும் எழுப்பினார். அவர் இஸ்ரயேல் மக்களின் இளைஞர்களை அனுப்பி வைக்க, அவர்களும் ஆண்டவருக்கு எரிபலிகள் செலுத்தினர். மாடுகளை நல்லுறவுப் பலிகளாகவும் ஆண்டவருக்குப் பலியிட்டனர். மோசே இரத்தத்தில் ஒரு பாதியை எடுத்துக் கலங்களில் விட்டு வைத்தார். மறு பாதியைப் பலிபீடத்தின் மேல் தெளித்தார். அவர் உடன்படிக்கையின் ஏட்டை எடுத்து மக்கள் காதுகளில் கேட்கும்படி வாசித்தார்.

அவர்கள், "ஆண்டவர் கூறிய அனைத்தையும் நாங்கள் செயல்படுத்திக் கீழ்ப்படிந் திருப்போம்" என்றனர்.

அப்போது மோசே இரத்தத்தை எடுத்து மக்கள் மேல் தெளித்து, "இவ்வனைத்து வார்த்தைக்குமிணங்க, ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ" என்றார்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 116: 12-13. 15-16. 17-18 (பல்லவி: 13) Mp3
=================================================================================
பல்லவி: மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவர் பெயரைத் தொழுதிடுவேன்.

12 ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்? 13 மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். பல்லவி

15 ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. 16 ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். பல்லவி

17 நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்; 18 இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
கிறிஸ்துவின் இரத்தம் நம் மனச்சான்றை தூய்மைப்படுத்துகிறது!

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 9: 11-15

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து தலைமைக் குருவாக வந்துள்ளார். அவர் அருளும் நலன்கள் இப்போது நமக்குக் கிடைத்துள்ளன. அவர் திருப்பணி செய்யும் கூடாரம் முன்னதை விட மேலானது, நிறைவுமிக்கது. அது மனிதர் கையால் அமைக்கப்பட்டது அல்ல; அதாவது, படைக்கப்பட்ட இவ்வுலகைச் சார்ந்தது அல்ல. அவர் பலியாகப் படைத்த இரத்தம் வெள்ளாட்டுக் கிடாய்கள், கன்றுக்குட்டிகள் ஆகியவற்றின் இரத்தம் அல்ல, அவரது சொந்த இரத்தமே.

அவர் ஒரே ஒரு முறை தூயகத்திற்குள் சென்று எக்காலத்திற்குமென அதைப் படைத்து நமக்கு என்றுமுள்ள மீட்புக் கிடைக்கும்படி செய்தார். வெள்ளாட்டுக் கிடாய்கள், காளைகள் இவற்றின் இரத்தமும் கிடாரியின் சாம்பலும் தீட்டுப்பட்டவர்கள் மீது தெளிக்கப்படும்போது, சடங்கு முறைப்படி அவர்கள் தூய்மை பெறுகிறார்கள். ஆனால் கிறிஸ்துவின் இரத்தம், வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு, சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து நம் மனச்சான்றை எத்துணை மிகுதியாய்த் தூய்மைப்படுத்துகிறது! ஏனெனில் என்றுமுள்ள தூய ஆவியினால் தம்மைத்தாமே கடவுளுக்கு மாசற்ற பலியாகக் கொடுத்தவர் அவரே.

இவ்வாறு அவர் புதிய உடன்படிக்கையின் இணைப்பாளராய் இருக்கிறார். கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் அவரால் வாக்களிக்கப்பட்ட, என்றும் நிலைக்கும் உரிமைப்பேற்றைப் பெறுவதற்கென்று இந்த உடன்படிக்கை உண்டானது. இது ஒரு சாவின்மூலம் ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சாவு முந்திய உடன்படிக்கையை மீறிச் செய்த குற்றங்களிலிருந்து மீட்பளிக்கிறது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


 விருப்பம்போல் தொடர் பாடல் சொல்லலாம் (பாடலாம்). காண்க: பக்கம் 1151.

தொடர் பாடல் இத்தொடர் பாடலை விருப்பம் போல் பயன்படுத்தலாம்: இதை முழுமையாக அல்லது குறுகிய பாடமாக "வானவர் உணவிதோ" என்ற (21ஆம்) அடியிலிருந்தும் சொல்லலாம் அல்லது பாடலாம்.

1 சீயோனே, உன் மீட்பரைப் புகழ்வாய், கீதமும் பாடலும் இசைத்தே உந்தன் ஆயரை, தலைவரைப் புகழ்வாயே.

2 எல்லாப் புகழும் கடந்தவர் அவரே; இயலாது உன்னால் அவரைப் புகழ, இயன்ற மட்டும் துணிந்திடுவாயே.

3 உயிர்மிகு அப்பம் உயிர்தரும் உணவாம் போற்றுதற்குரிய இப்பேருண்மை இன்று சிந்தனைக்கு ஏற்ற பொருளே.

4 தூய விருந்தின் பந்தியில் அன்று பன்னிரு சோதரர் கூட்ட மதற்கே கிடைத்த உணவிது; ஐயமே யில்லை.

5 ஆர்ப்பரிப்புடனே இனிமையும் கலந்த நிறைபுகழ்க் கீதம் ஒலிப்பதோ டன்றி மகிழ்வும் மனதில் பெருகிடல் தகுமே.

6 பெருஞ்சிறப்பான திருவிழா இன்றே இத்திரு விருந்தை முதன் முதலாக நிறுவிய நாளை நினைவுகூர்கின்றோம்.

7 புதிய பேரரசரின் இத்திருப்பந்தியில் புதிய ஏற்பாட்டின் புதுத்தனிப் பாஸ்கா பழைய பாஸ்காவை முடிவுறச் செய்யும்.

8 புதுமை பழமையைப் போக்குதல் காணீர், உண்மை நிழலை ஓட்டுதல் காணீர் ஒளியோ இரவை ஒழித்தல் காணீர்.

9 திருவிருந்ததனில் நிறைவேற்றியதைத் தம் நினைவாகச் சீடரும் செய்யக் கட்டளை தந்தார் கிறிஸ்து பெருமான்.

10 திருக் கட்டளையால் அறிவுரை பெற்று அப்பமும் இரசமும் மீட்புக்குரிய பலிப் பொருளாக அர்ச்சிக்கின்றோம்.

11 அப்பம் மாறி அவர் ஊன் ஆவதும், இரசமது மாறி இரத்தமாவதும் கிறிஸ்துவர்க் கருளிய உண்மையாமே.

12 புலனையும் அறிவையும் முற்றும் கடந்து, இயற்கை முறைமைக் கப்பால், உள்ளத்தை உறுதியோ டேற்கும் உயிர்விசு வாசம்.

13 அப்பமும் இரசமும் குணங்களில் வேறாய் அவற்றின் தோற்றம் மட்டுமே யிருக்க அற்புத உட்பொருள் மறைவாய் உள்ளதே.

14 ஊனே உணவு, இரத்தமே பானம் இருவித குணங்கள் ஒவ்வொன் றுள்ளும் கிறிஸ்து முழுவதும் உண்டெனக் கொள்வீர்.

15 உண்பவர் அவரைப் பிய்ப்பதுமில்லை. உடைப்பதுமில்லை, பிரிப்பதுமில்லை. அவரை முழுதாய் உண்கின் றனரே.

16 உண்பவர் ஒருவரோ, ஆயிரம் பேரோ, ஒருவர் உண்பதையே அனைவரும் உண்பர்; உண்பதால் என்றுமே தீர்வதுமில்லை.

17 நல்லவர் உண்பர், தீயரும் உண்பர் அதனால் அவர் பெறும் பயன் வெவ்வேறாம் முன்னவர் வாழ்வார், பின்னவர் அழிவார்.

18 நல்லோர் வாழ்வார், தீயோர் அழிவார்: உணவொன்றாயினும் எத்துணை வேறாம் பயன்விளைத் திடுமெனப் பகுத்துணர் வாயே.

19 அப்ப மதனைப் பிட்ட பின்னரும் முழுமையில் எதுவோ அதுவே பகுதியில் உளதாம், அறிந்திடு, ஐயமே வேண்டா.

20 உட்பொருள் பிளவு படுவதே யில்லை; குணத்தில் மட்டும் பிடப்படுமே அவரது நிலையும் உருவும் குறையா.

21 வானவர் உணவிதோ வழிநடப் போர்க்கும் உணவா யிற்றே; மக்களின் உணவை நாய்கட் கெறிதல் நலமா காதே.

22 ஈசாக் பலியிலும் பாஸ்கா மறியிலும் நம் முன்னோர்க்குத் தந்த மன்னாவிலும் இந்தப் பலியின் முன்குறி காண்பீர்.

23 நல்ல ஆயனே, உண்மை உணவே, யேசுவே, எம்மேல் இரங்கிடு வீரே, எமக்குநல் அமுதே ஊட்டிடுவீரே.

24 நும்திரு மந்தை எம்மைக் காத்து, நித்திய வாழ்வினர் வாழும் நாட்டில் நலன்கள் அனைத்தும் காணச் செய்வீர்.

25 அனைத்தும் அறிவோய், அனைத்தும் வல்லோய், மாந்தர்க் கிங்கு உணவினைத் தருவோய், அங்கும் பந்தியில் அமரச் செய்வாய்.

26 அமர்ந்து நும்முடன் பங்கினைக் கொள்ளவும், வான்திருக் கூட்டத்தின் நட்பினராகவும், அருள்வீர், ஆமென், அல்லேலூயா

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 6: 51-52

அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இது எனது உடல்; இது எனது உடன்படிக்கையின் இரத்தம்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 12-16, 22-26

புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது. பாஸ்கா ஆட்டுக் குட்டியைப் பலியிடும் அந்நாளிலே இயேசுவின் சீடர், "நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?" என்று கேட்டார்கள்.

அவர் பின்வருமாறு கூறி, தம் சீடருள் இருவரை அனுப்பினார்: "நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்து கொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள். அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், " நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே?' என்று போதகர் கேட்கச் சொன்னார் எனக் கூறுங்கள். அவர் மேல் மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய்யுங்கள்."

சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.

அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, "இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல்" என்றார். பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர்.

அப்பொழுது அவர் அவர்களிடம், "இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் இறையாட்சி வரும் அந்நாளில்தான் நான் திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை ஒருபோதும் குடிக்க மாட்டேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.

அவர்கள் புகழ்ப் பாடல் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை:

பழைய உடன்படிக்கை பலிக்கும், புதிய உடன்படிக்கை பலிக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. மாட்டின் இறைச்சியையும், இரத்தத்தையும் பலியாக்கினார்கள். இந்த இரத்தம் மக்களை தூய்மையாக்கியது என்பது உண்மையே.

புதிய உடன்படிக்கை பலியிலே, தூய ஆவியின் துணையால் தன்னை மாசற்ற பலியாக ஓப்புக் கொடுத்து, தன் சதையையே, தன் குருதியையே உணவாக கொடுத்து, என்றுமுள்ள ஓரே பலியையே ஓப்புக் கொடுத்தார்.

அதன் நினைவாக இன்று ஓப்புக் கொடுக்கப்படுகின்ற பலி, நம்மையே தூய்மையாக்க செலுத்தப்படுகின்ற பலியே. இதன் வழியாக நம்மோடு செய்யப்படுகின்ற உடன்படிக்கை அன்பின் வழியே செய்யப்படுகின்ற மீட்பின் விடுதலையை நமக்கு தரவல்லது. எனவே புதிய உடன்படிக்கையின் பலி மிகவே சிறப்பானது. ஈடு இணையில்லாதது. படைத்தவரே பலிப் பொருளாகின்றார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"இதை என் நினைவாய் செய்யுங்கள்"

வில்லி ஹோப்சுயூமர் (Willi Hoffsuemmer) என்ற பிரபல ஆங்கில எழுத்தாளர் சொல்லக்கூடிய ஒரு நிகழ்வு.

ஒரு சமயம் நற்கருணையின் மீது நம்பிக்கை இல்லாத ஒருவன் ஒரு குருவானவரைச் சந்தித்து, "சாதாரண அப்பமும் திராட்சை இரசமும் எப்படி இயேசு உடலாகவும் இரத்தமாகமாகவும் மாறமுடியும்?" என்று கேட்டான். அதற்குக் குருவானவர், "உன்னாலேயே உண்ணும் உணவை உன்னுடைய உடலாகவும் இரத்தமாகவும் மாற்ற முடியும்போது, ஆண்டவர் இயேசுவால் ஏன் சாதாரண அப்பத்தை இரசத்தையும் உடலாகவும் இரத்தமாகவும் மாற்றமுடியாது?" என்றார்.

அவனோ விடாமல் அவரிடம், "அது எப்படி அண்ட சராசரங்கையும், அதில் உள்ள அனைத்தையும் படைத்த கடவுளால் ஒரு சாதாரண அப்பத்துண்டுக்குள் இருக்க முடிகின்றது?" என்று கேட்டான். "பரந்து விரிந்து கிடக்கிண்ட இந்த் உலகினை உன்னுடைய சிறு கண்களால் பார்க்க முடிகின்றபோது, அகிலத்தையே படைத்த கடவுள் ஒரு சாதாரண அப்பத் துண்டுக்குள் ஏன் இருக்கமுடியாது?" என்று குருவானவர் அவனுக்கு மிகத் தெளிவான பதிலைத் தந்தார்.

மீண்டுமாக அவன் அவரிடம், "இதுதான் நான் கேட்டும் கடைசிக் கேள்வி. ஒரே ஒரு கிறிஸ்துவால் எப்படி எல்லாத் திருச்சபையிலும் பிரசன்னமாக இருக்க முடிகின்றது?" என்று கேட்டான். குருவானவோ எதுவும் பேசாமல், அருகில் இருந்த நிலைக்கண்ணாடியை எடுத்து, அவனுக்கு முன்பாக நிறுத்தி, "இதில் யாருடைய உருவம் தெரிகின்றது?" என்று கேட்டார். அவனோ, "என்னுடைய முகம் தெரிகின்றது" என்றான். உடனே குருவானவர் அந்த நிலைக்கன்னாடியைத் தூக்கிக் கீழே போட்டார். அது பல நூறு துண்டுகளாக உடைந்து சிதறியது. பின்னர் குருவானவர் அவனிடம் உடைந்து கிடந்த கண்ணாடித் துண்டுகளைச் சுட்டிக்காட்டி, "இந்தக் கண்ணாடித் துண்டுகளில் எல்லாம் யாருடைய பிம்பம் தெரிகின்றது?" என்று கேட்டார். அவனோ, "என்னுடைய முகந்தான் தெரிகின்றது" என்றான். அப்போது குருவானவர் அவனிடம், "நீ ஒரு சாதாரண மனிதன், உன்னாலேயே ஒரே நேரத்தில் உடைந்து கிடக்கும் எல்லாக் கண்ணாடித் துண்டுகளிலும் இருக்க முடிகின்றபோது, எல்லாம் வல்ல இயேசுவால் ஏன் ஒரே நேரத்தில் எல்லாத் திச்சபையிலும் இருக்க முடியாது" என்று சொல்லி அவனை வாயடைக்கச் செய்தார்.

ஆம், நற்கருணை என்பது சாதாரண அப்பம் கிடையாது. அது இயேசுவின் திருவுடல். நற்கருணையைக் குறித்துச் சொல்லும்போது திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் இவ்வாறாக குறிப்பிடுவார், "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மனுவுருவாகிய வார்த்தையாகிய இயேசு, இன்றும் நற்கருணை வடிவில் பிரசன்னமாக இருக்கின்றார்". எவ்வளவு ஆழமான உண்மை இது.

இன்று நாம் ஆண்டவர் இயேசுவின் திருவுடல் திரு இரத்தப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். இந்த நல்ல நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் உண்மை என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

ஆண்டவர் இயேசு தன்னுடைய இறுதி இராவுணவின்போது பாஸ்கா உணவின்போது - அப்பத்தைத் எடுத்து, "இது என் உடல்" என்கின்றார். பின்னர் கிண்ணத்தை தம் கையில் எடுத்து, "இது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம்" என்கின்றார். இயேசு தான் இவ்வாறு சொல்வதன் வழியாகவும், செய்வதன் வழியாகவும் பாஸ்கா உணவிற்கு புதிய அர்த்தத்தைக் கொடுக்கின்றார். இயேசு பாஸ்கா உணவிற்குக் கொடுக்கும் புதிய அர்த்தம் என்னவென்று அறிந்துகொள்ள வேண்டும் என்றால், பழைய பாஸ்கா விழா எப்படிக் கொண்டாடப்பட்டது அல்லது பழைய பாஸ்கா உணவு எப்படி உண்ணப்பட்டது என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.

பழைய பாஸ்கா உணவு எப்படி உண்ணப்பட்டது என்பதை விடுதலை பயண நூல் நமக்கு எடுத்துக்கூறுகின்றது. அங்கே வெள்ளாட்டுக் கிடாயை வெட்டி, அதனை உணவாக உட்கொண்டார்கள். மேலும் அதனுடைய இரத்தத்தை பீடத்தின் மீதும், மக்கள்மீதும் தெளித்து உடன்படிக்கை செய்துகொண்டார்கள். இதுதான் பழைய பாஸ்கா உணவின்போது நடைபெற்றது. ஆனால், புதிய பாஸ்கா உணவில் அப்படியில்லை. ஆண்டவர் இயேசு தன்னுடைய உடலையும் இரத்தத்தையும் உணவாகக் கொடுக்கின்றார், அதை உலகு வாழ்வு பெறுவதற்காகக் கொடுகின்றார். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் வாசிக்கக்கேட்பது போல, "அவர் பலியாகப் படைத்த இரத்தம் வெள்ளாட்டுக் கிடாய்கள், கன்றுக்குட்டிகள் ஆகியவற்றின் இரத்தம் அல்ல. அவரது சொந்த இரத்தம்".

எனவே, இயேசுவின் திருவுடலும் திரு இரத்தமும்தான் பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது, அது பலருடைய மீட்புக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டது என்னும் உண்மையை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.

இயேசு தன்னுடைய உடலையும் இரத்தைதையும் நமக்கு வாழ்வளிக்கும் உணவாகவும், ஆன்மீகப் பானமாகவும் தந்துவிட்டு, "இதை என்னை நினைவாய் செய்யுங்கள்" என்பார். மாற்கு நற்செய்தியில் இவ்வார்த்தைகள் இடம்பெறாவிட்டாலும் லூக்கா நற்செய்தியிலும், தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலும் இவ்வார்த்தைகள் இடம்பெறுகின்றன (லூக் 22:19, 1 கொரி 11:24). ஆண்டவர் இதை என் நினைவாகச் செய்யுங்கள் என்று சொல்வதற்கு பின்னால் என்ன அர்த்தம் இருக்கின்றது என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இயேசுவின் வார்த்தைகளை நாம் இரண்டு விதமாகப் புரிந்துகொள்ளலாம். ஒன்று அப்படியே புரிந்துகொள்ளுதல். அதாவது ஆண்டவர் இயேசு நிறைவேற்றிய திருவிருந்தை அப்படியே நிறைவேற்றுவது. இன்றைக்கு ஒவ்வொரு நாளும் குருவானவரால் ஆண்டவருடைய திருவிருந்து நிறைவேற்றப் படுகின்றதென்றால் அதனுடைய தொடக்கம் என்று நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

இங்கு இன்னொரு உண்மையையும் நம்முடைய மனதில் இருத்தவேண்டும். அது என்னவெனில், இதை என் நினைவாக செய்யுங்கள் என்று ஆண்டவர் இயேசு சொன்னதன்பேரில் ஒவ்வொருநாளும் நிறைவேற்றப்படும் திருப்பலியில் நாம் எப்படிக் கலந்துகொள்கின்றோம் என்பதுதான் அந்த உண்மை. இரண்டாம் வத்திக்கான் சங்கம், திருப்பலில், ஆண்டவரின் திருவிருந்தில் நாம் எப்படிக் கலந்து கொள்ளவேண்டும் என்று சொல்கின்றபோது, முழுமையாகவும், தெளிவோடும், பங்கேற்பாளராகவும் கலந்துகொள்ளவேண்டும் (Fully, Conscious active participateion) என்று சொல்கின்றது. இன்றைக்கு நிறையப் பேர், பாதித் திருப்பலிக்கு வந்து, சிந்தனைகளை எங்கோ அலையவிட்டு, ஏனோ தானோவென்று திருப்பலியில் கலந்துகொள்கின்றார்கள். அவர்களால் திருப்பலியின் முழுபலனையும் அடையமுடியாது என்பதே உண்மை. ஆகவே, இயேசுவின் வார்த்தைகளுக்கு இணங்க திருப்பலியை அனுதினமும் நிறைவேற்றவேண்டும். அது மட்டுமல்லாமல், அப்படி நிறைவேற்றப்படும் திருப்பலியில் ஒவ்வொருவரும் முழுமையாகக் கலந்துகொள்ளவேண்டும். அப்படிச் செய்வதனால் மட்டுமே ஒருவர் திருப்பலியின் முழுபலனையும் பெறமுடியும் என்பது உறுதி.

இதை என் நினைவாய் செய்யுங்கள் என்று ஆண்டவர் இயேசு சொல்வதில் உள்ள இரண்டாவது அர்த்தம், நற்கருணையை அடையாள முறையில் நிறைவேற்றுவது ஆகும். இயேசு தன்னுடைய உடலையும் இரத்தத்தையும் பலருடைய மீட்புக்காகத் தந்தார். அப்படியானால், ஆண்டவரின் திருப்பலியில் கலந்துகொள்கின்ற ஒவ்வொருவரும் அவரைப் போன்றே தன்னுடைய வாழ்வை பிறருக்குத் தியாகமாகத் தரவேண்டும். அதில்தான் ஆண்டவரின் வார்த்தைகள் முழுமை பெறுகின்றன. ஆகவே, இயேசுவின் வார்த்தைகளை அப்படியே எடுத்துக்கொண்டு, அதனை சடங்காக மட்டும் செய்துகொண்டிருக்காமல், இயேசுவைப் போன்று நம்முடைய வாழ்வினை பிறருக்குத் தியாகமாகத்தர முன்வரவேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக தென் அமெரிக்காவை சேர்ந்த கப்பல் ஒன்று கடலில் பயணம் செய்துகொண்டிருந்தது. அதில் குழந்தைள், பெண்கள், ஆண்கள் என்று ஏராளமான பேர் பயணம் செய்தார்கள். நன்றாகப் போய்க்கொண்டிந்த கப்பல், கடலில் திடிரென்று வீசிய கடும் புயலில் சிக்கி சின்னாபின்னமானது. இதனால் கப்பலுக்குள் தண்ணீர் வந்து, அது கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கத் தொடங்கியது. இதைக் கண்டு கப்பலில் இருந்தோர் அலறியடித்து அங்கும் இங்கும் ஓடினார்கள்.

அந்நேரத்தில் அவ்வழியாக ஒரு சிறிய படகு வந்தது. அந்தப் படகில் இருந்தவர் கப்பல் இப்படி சின்னபின்னமாகிப் போயிருப்பதையும் அதில் இருப்போர் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதையும் கண்டார். எனவே, அவர் கப்பலில் இருந்தோர் சிலரை தன்னுடைய படகில் ஏற்றிக்கொள்ளத் தீர்மானித்தார். ஆனால், தன்னுடைய படகு சிறியது என்பதால், முதலில் குழந்தைகளையும் பெண்களையும் ஏற்றிக்கொண்டார். இன்னும் படகில் ஒரே ஒருவரை மட்டும் ஏற்றிக்கொள்கின்ற அளவுக்கு இடம் இருந்தது. ஆனால், கப்பலில் இருந்த நிறைய ஆண்கள் அந்த ஓர் இடத்தைப் பிடிப்பதற்கு முயன்றுகொண்டிருந்தார்கள்.

அப்போது படகை ஓட்டிவந்தவர் அவர்களிடம், "இந்தப் படகில் எல்லாரையும் ஏற்றுக்கொள்ளமுடியாது. ஒரே ஒருவரைத் தான் ஏற்றிக்கொள்ளமுடியும். யார் அந்த ஒருவர் என்பதை இப்போது சீட்டுக் குலுக்கிப்போடுவோம், யாருடைய பெயர் வருகின்றதோ, அவர் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம்" என்றார். கப்பலில் இருந்தவர்கள் அதற்கு சம்மதம் தெரிவிக்கவே, எல்லா ஆண்களின் பெயர்களும் சீட்டுக் குலுக்கிப் போடப்பட்டது. சீட்டு பெர்னத் என்ற வழக்குரைஞர் பெயருக்கு விழுந்தது. அவர் ஒரு பக்தியான கிறிஸ்தவர். அவரோ படகு உரிமையாளரிடம், "படகில் இருக்கும் அந்த ஓரிடம் எனக்கு வேண்டாம். மாறாக என்னுடைய நண்பனுக்குத் தாருங்கள்" என்று கேட்டார். அதற்கு படகு உரிமையாளர், "ஏன்?" என்று காரணத்தைக் கேட்டபோது, பெர்னத் என்ற அந்த வழக்குரைஞர், "இந்தக் கப்பலிலே பயணம் செய்வதற்கு முன்பாக நான் திருப்பலியில் கலந்து. திவ்விய நற்கருணை உண்கொண்டு வந்தேன். நான் உட்கொண்ட நற்கருணை என்னை ஆண்டவர் இயேசுவைப் போன்று பிறருக்கு வாழ்வுகொடுக்கத் தூண்டியது. அதனால்தான் என் பெயரில் விழுந்த சீட்டுக்கு என்னுடைய நண்பனுடைய பெயரைப் பரிந்துரைக்கின்றேன்,. அவனை நீங்கள் உங்கள் படகில் ஏற்றுக்கொண்டு, அவனுடைய உயிரைக் காப்பாற்றுங்கள்" என்றார். இதைக் கேட்டு எல்லாரும் ஆச்சரியப்பட்டு நின்றார்கள்.

நாம் உட்கொள்ளும் நற்கருணை நம்மை பிறருக்காக வாழ்வுகொடுக்கத் தூண்டவேண்டும். அப்போதுதான் நாம் உட்கொள்ளும் நற்கருணைக்கு அர்த்தம் இருக்கின்றது.

எனவே, ஆண்டவரின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவர் நமக்காக தன்னுடைய உடலையும் இரத்தத்தையும் தந்தார் என்பதை உணர்ந்து, நாமும் அவரைப் போன்று பிறர் வாழ்வுபெற நம்மையே தியாகமாய் தருவோம், திருப்பலியில் முழுமையாய் கலந்துகொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மண்குடத்தில் தண்ணீர்

 வி.ப 24:3-8
 எபி 9:11-15
 மாற் 14:12-16, 22-26

இன்றைய நற்செய்திப் பகுதியில் வரும் ஒரு பெயரில்லாக் கதைமாந்தரிடமிருந்து நம் சிந்தனையைத் தொடங்குவோம்: 'மண்குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு ஓர் ஆள்.'

யார் இவர்? இவர்தான் மாற்கு நற்செய்தியாளரின் பதிவில் இயேசுவின் பாடுகளுக்கு 'உ' வரைபவர். புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது என்றும், அந்த நாளில் ஆட்டுக்குட்டி பலியிடப்படும் என்றும் பதிவு செய்கின்ற மாற்கு நற்செய்தியாளர், பாஸ்கா விருந்திற்கான ஏற்பாடு பற்றி எழுதுகின்றார். எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும்? என்ற சீடர்களின் கேள்விக்கு விடையாக வருபவர்தாம் இந்தக் கதைமாந்தர்.

'மண்குடத்தில் தண்ணீர் சுமந்து கொண்டு ஓர் ஆள் (ஆண்)'

பெண்கள் தாம் மண்குடத்தில் தண்ணீர் எடுப்பார்கள் என்பது இக்காலத்தைப் போல அக்காலத்திலும் பரவலாக இருந்த ஒன்று. ஆகையால்தான் இயேசுவை சந்திக்க வந்த அல்லது இயேசு கிணற்றடியில் சந்தித்த சமாரியப்பெண்ணும் மண்குடத்தை கிணற்றடியில் போட்டுவிட்டு ஊருக்குள் ஓடுகின்றாள். இயேசுவின் சமகாலத்தில் செல்வந்தர்கள் தங்கள் வீட்டு வேலைகளுக்கு ஆண் அடிமைகளை வைத்திருந்தனர். இவர்களின் வேலை தண்ணீர் எடுப்பது. ஆக, இயேசு குறிப்பிடும் இந்தக் கதைமாந்தர் ஓர் ஆண் அடிமையாக இருந்திருக்கலாம். இவரின் தலைவருக்காக இவர் தண்ணீர்குடம் சுமந்திருக்கலாம். பல ஆண் அடிமைகள் இங்கும் அங்கும் தண்ணீர் குடம் சுமந்து கொண்டிருக்க இவரை மட்டும் எப்படி தனியாக சீடர்கள் அடையாளம் கண்டிருப்பார்கள்? - இந்தக் கேள்வி நமக்குள் எழலாம். ஆனால் கேள்வியை அப்படியே விட்டுவிடுவோம்.

இந்த தண்ணீர் சுமக்கும் ஆள் கிணற்றடிக்கும் வீட்டிற்கும் நடக்கிறார். ஆக, கிணற்றடிக்கும் வீட்டிற்குமான ஒரு சதைப்பாலம் இவர். இப்படிப் பாலமாக இருக்கும் ஒருவரே தான் விரைவில் நிகழ்த்தப் போகும் கல்வாரிப் பலியின் முன்னடையாளம் என இயேசு நினைத்திருக்கலாம். ஆகையால்தான் இந்த ஆளைத் தேர்ந்தெடுக்கிறார் இயேசு. சீடர்கள் 'அ' என்ற இடத்திலிருந்து 'ஆ' என்ற இடம் நோக்கிச் செல்கின்றனர். தண்ணீர் குடம் கொண்டு வருபவர் 'ஆ' என்ற இடத்திலிருந்து 'அ' என்ற இடம் நோக்கி - அதாவது, 'எதிரே' வருகிறார். இப்போது சீடர்கள் அவர் பின்னே செல்ல வேண்டும் என்பது இயேசுவின் கட்டளை. அதாவது, அவர்களும் 'ஆ' விலிருந்து 'அ' நோக்கி அல்லது எல்லாரும் சேர்ந்து 'இ' ('இல்லம்') நோக்கிச் செல்ல வேண்டும். இவ்வாறாக, இந்த பெயரில்லாத ஆள் இயேசுவின் சீடர்களின் வழியைத் திருப்புகின்றார்.

இந்தப் பின்புலத்தில் பார்த்தால் இந்த ஆள் இயேசுவின் உருவகம் என்றும், இவர் சுமக்கும் தண்ணீர் இயேசுவின் உடன்படிக்கையின் இரத்தத்தின் உருவகம் என்றும் எண்ணத் தோன்றுகிறது. எப்படி?

1. இயேசு தந்தையின் திருவுளம் நிறைவேற்றுபவர் - அடிமை தலைவரின் திருவுளம் நிறைவேற்றுபவர்.

2. இயேசுவின் தந்தை பெரிய வீட்டின் உரிமையாளர் - அடிமையின் தலைவர் பெரிய இல்லத்தை தயாராக வைத்திருக்கின்றார்.

3. இயேசு சீடர்களின் பாதையைத் திருப்புகின்றார் - அடிமை சீடர்களின் பாதையைத் திருப்புகின்றார்.

4. விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையேயான சதைப்பாலம் இயேசு - வீட்டிற்கும் கிணற்றுக்குமான சதைப்பாலம் அடிமை.

5. இயேசு மேலிருக்கும் தந்தையின் இல்லத்திற்கு வழி காட்டுகிறார் - அடிமை மேலறையைக் காட்டுகிறார்.

6. இயேசு இரத்தத்தின் கிண்ணத்தைக் கையிலெடுத்தார் - அடிமை தண்ணீரின் மண்குடத்தைக் கையில் எடுத்தார்.

7. இயேசு தம் சீடர் பருகக் கொடுத்தார் - அடிமை தலைவரின் தாகம் தணிக்கிறார்.

8. இங்கே இது இயேசுவின் உடல், இரத்தம் - அங்கே அது அடிமையின் உடல், இரத்தம், வியர்வை.

9. இங்கே இயேசுவின் உடன்படிக்கை முத்திரையிடப்படுகிறது - அங்கே அடிமை என்றென்றும் தன் தலைவருக்கான ஒப்பந்தத்தில் முத்திரையிடப்படுகிறது.

ஆக, இன்று நாம் கொண்டாடும் ஆண்டவரின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவின் சிந்தனையை ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமென்றால்: 'நம் கையில் உள்ளதை வைத்து முன்னும் பின்னும் நடந்து பாலம் ஆவதே நற்கருணை.'

அது என்ன முன்னும் பின்னும் நடப்பது?

தொநூ 15:9-21ல் கடவுள் ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கையை வாசிக்கின்றோம். இங்கே உடன்படிக்கை முத்திரையப்படும்போது ஆபிராம் பலிப்பொருள்களை இரண்டாக வெட்டி வைத்து நடுவில் ஒரு பாதை விடுகின்றார். இந்தப் பாதையின் ஊடாக அவர் முதலில் நடக்கின்றார். பின் ஆண்டவராகிய இறைவன் நெருப்பு வடிவத்தில் நடக்கின்றார். இவ்வாறாக, முன்னும் பின்னும் நடக்கும்போது நடப்பவர்களுக்கு இடையே இருக்கின்ற ஒப்பந்தத்தை அங்கிருக்கின்ற பலிப்பொருள்கள் உறுதி செய்கிறது. இப்படி உறுதி செய்யப்பட்ட நிலையில் உடன்படிக்கை செய்பவர்கள் இந்த உறுதியை மீறினால் அவர்களும் பலிப்பொருள்கள் போல இரண்டாகக் கிழிக்கப்படுவர் என்பதே பொருள்.

இன்றைய முதல் வாசகத்தில் (விப 24:3-8) ஆண்டவராகிய இறைவனுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே நடக்கும் உடன்படிக்கை வாசிக்கின்றோம். உடன்படிக்கை இரண்டு நிலைகளில் நடக்கின்றது. முதலில், மோசே உடன்படிக்கையின் ஏட்டை வாசிக்கின்றார். இரண்டாவதாக, பலிப்பொருள்களின் இரத்தை எடுத்து முன்னும் பின்னும் சென்று பீடத்தின்மேலும் மக்களின் மேலும் தெளிக்கின்றார்.

இதே ஃபார்முலாவைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்திலும் (மாற் 14:22-26) பார்க்கின்றோம். முதலில் இயேசு கடவுளைப் போற்றி, அப்பத்தையும், இரசத்தையும் எடுத்து சீடர்களிடம் பேசுகின்றார். இரண்டாவதாக, முன்னும் பின்னும் அவர்களுக்குப் பரிமாறுகின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகத்திலும் (எபி 9:11-15) இயேசுவின் கல்வாரிப் பலியை எருசலேம் ஆலயத்தின் பலியாக உருவகிக்கும் எபிரேயர் நூலின் ஆசிரியர், இயேசுவே உள்ளும் புறமும் சென்று தன் சொந்த இரத்தத்தால் 'புதிய உடன்படிக்கையின் இணைப்பாளராயிருக்கிறார்' என்கிறார்.

ஆக, இன்றைய திருநாளின் மையமாக இருக்கும் செயல் 'முன்னும் பின்னும் செல்வது' - 'ஒன்றையும் மற்றொன்றையும் இணைப்பது.'

மண்குடத்தில் தண்ணீர் சுமந்தவர் தலைவரையும் கிணற்றையும் இணைத்தார்.

மோசே ஆண்டவரையும் மக்களையும் இணைத்தார்.

தலைமைக்குரு கடவுளையும் பாவிகளையும் இணைத்தார்.

இயேசு கடவுளையும் அனைவரையும் இணைத்தார்.

நீங்களும் நானும் ஒருவர் மற்றவரை இணைக்கும்போது - நற்கருணை ஆகின்றோம்!

ரொம்ப எளிதான லாஜிக்.

இதை வாழ்வாக்குவது எப்படி?

மீண்டும் மண்குடத்தின் கதைமாந்தருக்கே வருவோம்.

அ. தண்ணீர் சுமப்பவரின் கவனம் கிணற்றின்மேலும், தன் வீட்டின்மேலும், தன் தண்ணீர் குடத்தின்மேலும் இருக்க வேண்டும். இவற்றில் ஒன்று தவறினாலும் தண்ணீர் வந்து சேரவேண்டிய இடத்திற்கு வந்து சேராது. இயேசுவின் கவனம் தன் தந்தையின் திருவுளம் மேலும், தான் மீட்க வந்த இந்த உலகின்மேலும், தன் கல்வாரிப் பலியின்மேலும் இருந்தது. ஆகையால்தான் அவரின் பலி சாத்தியமாயிற்று. ஆக, அவரின் பலியில் பங்கேற்கும் நம் கவனமும் இப்படித்தான் இருக்க வேண்டும். நம் ஊற்றாகிய இறைவன் மேலும், நாம் அன்றாடம் உறவாடும் நம் உலகின்மேலும், நாம் சுமக்கும் வாழ்க்கை மேலும். இவற்றில் ஏதாவது ஒன்றில் கவனம் தவறினாலும், அல்லது ஏதாவது ஒன்று நம் அதிக கவனத்தை எடுத்துக்கொண்டாலும் அங்கே தாகம் தணிவதில்லை.

ஆ. மண்குடத்தில் தண்ணீர் சுமக்கும் ஆள் மிகக் குறைந்த ஆடைகளையே அணிந்திருப்பார். மண்குடத்தை தோளில் சுமப்பதை விட தலையில் சும்மாடு கூட்டி சுமப்பதே எளிது. இப்படி சுமக்கும்போது கைகளை உயர்த்தி தாங்கிப் பிடிக்க வேண்டும். இப்படிப் பிடிக்க வேண்டுமானால் தளர்வான மேலாடை அணிதல் அல்லது மேலாடை அகற்றுதல் வேண்டும். தன் மேலாடையை அகற்ற முன்வரும் ஒருவரே தலையில் தண்ணீர்குடம் சுமக்க முடியும். தன் மேலாடை அகற்றி, தன் சீடர்களின் காலடிகளின் தண்ணீர் ஊற்றிக் கழுவியபோது இயேசு செய்ததும் இதுவே. மேலாடை என்பது என் ஆடம்பரம். மேலாடை என் அவசியம் அல்ல. இன்று அவசியங்களை விட ஆடம்பரங்களே நம் வாழ்வில் அதிகம் குறுக்கே வருகின்றன. ஆடம்பரங்களுக்காகத்தான் இன்று மனிதர்கள் தன்னலம் நாடுகிறார்கள். ஆக, மேலாடை அகற்றுவது என்பது தன்னலம் அகற்றுவது. மேலாடையை அகற்றாத வீட்டுத் தலைவர் தன் வீட்டுக்குள்ளேதான் இருப்பார். மேலாடையை அகற்றத் துணியும் அடிமைதான் கிணற்றடிக்கும் செல்வார். ஆக, மேலாடை என்பது நம்மைக் கட்டியிருக்கும் சங்கிலி. இன்று நான் அகற்ற விரும்பும், ஆனால், அகற்றத் தயங்கும் மேலாடை எது?

இ. முற்றிலும் பலியாவது. முதல் வாசகத்தில், மோசே உயிரோடிருக்கிறார். மக்கள் உயிரோடிருக்கின்றனர். ஆனால் மாடுகள் பலியாகின்றன - இறந்துவிடுகின்றன. இரண்டாம் வாசகத்தில், தலைமைக்குரு உயிரோடிருக்கிறார். பாவிகள் உயிரோடிருக்கின்றன. ஆனால், ஆடு பலியாகின்றது - இறந்துவிடுகின்றது. நற்செய்தி வாசகத்தில், கடவுள் உயிரோடிருக்கிறார். சீடர்கள்-நாம் உயிரோடிருக்கின்றோம். ஆனால், இயேசு பலியாகின்றார் - இறந்துவிடுகின்றார். மூன்று இடங்களிலும் இரத்தம் சிந்தப்படுகிறது. இரத்தத்தில்தான் உயிர் இருப்பதாக நம் முன்னோர் நம்பினர். விவிலியமும் அதே நம்பிக்கையைத்தான் கொண்டிருக்கிறது (காண். லேவி 17:11). பலியாகின்ற ஆடு, மாடு, ஆள் - இவர்களுக்குக் குரல் கிடையாது. இவர்கள் குரல்வளை நெரிக்கப்படுகிறது. ஏனெனில் தொண்டையில்தான் உயிர் இருக்கிறது என்பது மனுக்குலத்தின் முதல் நம்பிக்கை. ஆகையால்தான் நாம் இறக்கும்போது நம் வாய் அகலத் திறக்கிறது (!). ஆனால், பலியாகின்றவர்கள் மற்றவர்களின் குரலுக்காக தங்கள் குரலை நெரித்துக்கொள்கின்றனர். மண்குடம் சுமந்த அந்த அடிமை போல. ஆகையால்தான் இயேசுவம், 'அவர் அறையைக் காட்டுவார்' என்கிறார். நற்கருணையின் நிறைவான பொருள் இதுதான். நம் குரலை ஒடுக்கி அடுத்தவர்களின் குரலை ஒலிக்கச் செய்வது - நம் வாழ்வை அழித்தாவது.

இறுதியாக,

இன்று நாம் நம் குரல்வளை நெரிக்கப்பட்டு பலியாகி உடன்படிக்கையின் பலிப்பொருளாகவில்லை என்றாலும், அந்த அநாமிகா அடிமை போல நாம் அன்றாடம் சுமக்கும் நம் வாழ்வின் மண்குடங்களைத் தூக்கிக்கொண்டு முன்னும் பின்னும் சென்று, புன்னகையின் பாலமாக இருந்தாலே போதும்.

'ஆமென்' என்று வாய் திறந்து, பெற்று, மூடிக்கொள்ளும் நற்கருணை நம் வாழ்வில் பொருள்தரும்.

மண்குடத்தில் தண்ணீர் - கவனம் ரொம்ப தேவை. தவறினால் குடமும் உடைந்து விடும், தண்ணீரும் உடைந்துவிடும், சுமப்பவரும் காயம் படுவார். உடன் வருபவரும் அடிபடுவார்.

ஆண்டவரின் திருவுடலும், இரத்தமும் அப்படியே!

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!