|
ஆண்டு
A |
|
ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 3: 1-4
கடவுளாகிய ஆண்டவர் கூறுவது: "இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன்.
அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்; அப்பொழுது, நீங்கள்
தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள்
ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார்''
என்கிறார் படைகளின் ஆண்டவர். ஆனால் அவர் வரும் நாளைத் தாங்கக்
கூடியவர் யார்? அவர் தோன்றும்போது நிற்க வல்லவர் யார்? அவர் புடமிடுகிறவரின்
நெருப்பைப் போலும் சலவைத் தொழிலாளியின் சவர்க்காரத்தைப் போலும்
இருப்பார். அவர் புடமிடுபவர் போலும் வெள்ளியைத் தூய்மைப்படுத்துபவர்
போலும் அமர்ந்திருப்பார். லேவியின் புதல்வரைத் தூய்மையாக்கிப்
பொன், வெள்ளியைப் போல் அவர்களைப் புடமிடுவார். அவர்களும் ஆண்டவருக்கு
ஏற்புடைய காணிக்கை கொண்டு வருவார்கள். அப்பொழுது பண்டைக் காலத்தில்
முன்னைய ஆண்டுகளில் இருந்தது போல் யூதாவின் காணிக்கையும் எருசலேமின்
காணிக்கையும் ஆண்டவருக்கு உகந்தனவாய் இருக்கும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
- திபா
24: 7. 8. 9. 10 Mp3
=================================================================================
பல்லவி: படைகளின் ஆண்டவர் இவர்; இவரே மாட்சிமிகு மன்னர்.
7 வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்;
தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்;
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். பல்லவி
8 மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?
வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவர் இவர்;
இவரே போரில் வல்லவரான ஆண்டவர். பல்லவி
9 வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்;
தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்;
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். பல்லவி
10 மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?
படைகளின் ஆண்டவர் இவர்; இவரே மாட்சிமிகு மன்னர். பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 2: 14-18
சகோதரர் சகோதரிகளே, ஊனும் இரத்தமும் கொண்ட பிள்ளைகளைப் போல்
கிறிஸ்துவும் அதே இயல்பில் பங்கு கொண்டார். இவ்வாறு சாவின்மேல்
ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாகவே அழித்துவிட்டார்.
வாழ்நாள் முழுவதும் சாவு பற்றிய அச்சத்தினால் அடிமைப்பட்டு இருந்தவர்களை
விடுவித்தார். ஏனெனில் அவர் வானதூதருக்குத் துணை நிற்கவில்லை.
மாறாக, ஆபிரகாமின் வழிமரபினருக்கே துணை நின்றார் என்பது கண்கூடு.
ஆதலின், கடவுள் பணியில் அவர் இரக்கமும், நம்பிக்கையும் உள்ள தலைமைக்
குருவாயிருந்து, மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு எல்லாவற்றிலும்
தம் சகோதரர் சகோதரிகளைப் போல் ஆகவேண்டியதாயிற்று. இவ்வாறு தாமே
சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால் சோதிக்கப்படுவோருக்கு
உதவி செய்ய அவர் வல்லவர்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
லூக் 2: 32
அல்லேலூயா, அல்லேலூயா! இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு
அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 22-40
மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது,
குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக்
கொண்டு சென்றார்கள். ஏனெனில், "ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு
அர்ப்பணிக்கப்படும்'' என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது.
அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு
புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது. அப்போது
எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்;
இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை
எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார். "ஆண்டவருடைய
மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை'' என்று தூய ஆவியால்
உணர்த்தப்பட்டிருந்தார். அந்த ஆவியின் தூண்டுதலால் அவர்
கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச்
செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப்
பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்த போது, சிமியோன் குழந்தையைக்
கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி, "ஆண்டவரே, உமது சொற்படி உம்
அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில்
மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை
என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு
வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப்
பெருமை'' என்றார். குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன்
தாயும் தந்தையும் வியப்புற்றனர். சிமியோன் அவர்களுக்கு ஆசி
கூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, "இதோ, இக்குழந்தை இஸ்ரயேல்
மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்;
எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான
எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப்
பாயும்'' என்றார். ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய
அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது
முதிர்ந்தவர். மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின்
கைம்பெண் ஆனவர்; அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலை
விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி
செய்துவந்தார். அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து
எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்
பற்றிப் பேசினார். ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும்
செய்து முடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய
நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள். குழந்தையும் வளர்ந்து
வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
ஆண்டவரின் நற்செய்தியை எடுத்துரைக்கும் சீடர்களாவோம்
கடலில் சென்றுகொண்டிருந்த ஒரு பெரிய கப்பலில் பயணம்
செய்துகொண்டிருந்த குருவானவர், அங்கிருந்த பயணிகளுக்குப்
போதித்துக் கொண்டிருந்தார். அவருடைய போதனையை அங்கிருந்தவர்கள்
மிக ஆர்வமாய்க் கேட்டார்கள். குருவானவரின் போதனை முடிந்ததும்,
அவருடைய போதனையைக் கேட்டுக்கொண்டிருந்த பயணி ஒருவர் அவரிடத்தில்
வந்து, "தந்தையே உங்களுடைய போதனையை மிக அருமையாக இருந்தது"என்றார்.
அதற்கு குருவானவர் அவரிடத்தில், "எதை வைத்து அப்படிச்
சொல்லுகிறீர்?"என்று கேட்டார். அதற்கு அந்த பயணி, "நீங்கள்
கடவுளுடைய வார்த்தையை உங்களுடைய உள்ளத்திலிருந்து எடுத்துரைத்தீர்கள்.
அதனால்தான் அப்படிச் சொன்னேன்"என்றார்.
இயேசுவின் நற்செய்திப் பணியைச் செய்கின்ற யாவரும் தங்களுடைய
வார்த்தைகளை அல்ல, கடவுளுடைய வார்த்தையை எடுத்துரைக்கவேண்டும்,
அதுதான் மனிதருடைய உள்ளத்தை ஊடுருவிப்பாயும் என்பதை இந்த நிகழ்வு
நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களை பணித்தளத்திற்கு அனுப்புகிறார்.
அப்போது அவர் கூறுகின்ற அறிவுரைதான் இன்றைய நற்செய்தி வாசகமாக
அமைந்திருக்கிறது. இயேசு சீடர்களை பணித்தளத்திற்கு அனுப்புகிறபோது
கூறுகின்ற முதன்மையான அறிவுரை, "பயணத்திற்கு கைத்தடி தவிர உணவு,
பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள்
எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக்கொள்ளலாம்;
அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்"என்பதுதான். இயேசு எதற்கு
இப்படிச் சொல்லவேண்டும் என சிந்திக்கலாம். ஆனால் அதற்கு
விவிலிய அறிஞர்கள் கூறுகின்ற கருத்து, எருசலேம் திருக்கோவிலில்
நுழைகின்ற யாரும் தன்னிடம் இருக்கும் எதையும் உள்ளே எடுத்துக்கொண்டு
போகக்கூடாது, வெறுமனேதான் செல்லவேண்டும். இயேசு நற்செய்தி அறிவிப்புப்
பணியை ஆலயத்திற்கு பிரவேசிக்கின்ற திருப்பணியாகக் கருதியதால்
என்னவோ, அவர் கையில் எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம் என
சொல்லியதாக அவர்கள் கூறுவார்கள்.
விவிலிய அறிஞர்கள் கூறுகின்ற இன்னொரு விளக்கம் நற்செய்தியைப்
பணியாளர்களை, அவர்கள் எந்த ஊரில் பணிசெய்கிறார்களோ அவர்கள் பராமரித்துக்கொள்ளவேண்டும்.
அது அவர்களுடைய தலையாயக் கடமையாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான்
கையில் எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம் என இயேசு கூறியதாகச்
சொல்வார்கள்.
அடுத்ததாக இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களிடம் என்ன செய்தியை
மக்களுக்குப் போதிக்கச் சொன்னார் என சிந்தித்துப் பார்ப்பது மிகப்
பொருத்தமானதாகும். அவர் அவர்களிடத்தில் போதிக்கச் சொன்ன முக்கியமான
செய்தி மனமாற்றம்தான். சீடர்கள் ஆண்டவர் இயேசு தங்களுக்குச்
சொன்னதுபோன்று மனமாற்றச் செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள்,
அவர்களை இறைவன் பக்கம் திரும்பினார்கள்.
இந்த இடத்தில் நற்செய்திப் பணி செய்யும் ஒவ்வொருவரும்
சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்று இருக்கின்றது. அதுதான் தங்களுடைய
செய்தியை அல்ல, ஆண்டவருடைய செய்தியைப் போதிக்கவேண்டும் என்பதாகும்.
சீடர்கள் யாவரும் ஆண்டவர் இயேசு தங்களுக்குச் சொன்ன மனமாற்றச்
செய்தியை மக்களுக்குப் போதித்து, அவர்கள் மனமாறச் செய்தார்கள்.
அதைப் போன்று இறைவாக்குப் பணிசெய்யும் ஒவ்வொருவரும் தங்களுடைய
செய்தியை அல்ல, இறைவனுடைய செய்தியை மக்களுக்கு
எடுத்துரைக்கவேண்டும். அதுதான் ஆண்டவர் இயேசு தன்னுடைய
பணியாளர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் எதிர்பார்க்கும் ஒன்றாக
இருக்கின்றது.
நற்செய்திப் பணியாளர்கள் ஆண்டவருடைய சேதியை அறிவித்து, மக்களை
மனமாற்றத்திற்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று சிந்தித்த
நாம், ஆண்டவரின் நற்செய்தியை அறிவிக்கும் நற்செய்திப்
பணியாளர்களுக்கு குருக்களுக்கு - எத்தகைய
மதிப்பளிக்கவேண்டும் என்பதையும் நாம் சிந்தித்துப்
பார்க்கவேண்டும். இயேசு தன்னுடைய சீடர்களை கையில் எதையும்
எடுத்துக்கொண்டு போகவேண்டாம் என்று சொன்னார். எதற்காக என்றால்
அவர்கள் பணியாற்றுகின்ற இடத்தில் இருக்கும் மக்கள்தான்
அவர்களைப் பராமரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில். எனவே,
இறைவார்த்தையைக் கேட்கின்ற மக்கள், அதனை அவர்களுக்கு அறிவிக்க
பணியாளர்களை உரிய முறையில் கவனித்துக் கொள்கிறார்களா?,
அவர்களுக்குத் தகுந்த மதிப்பளிக்கிறார்களா? என சிந்தித்துப்
பார்க்கவேண்டும்.
நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களிடத்தில் கூறுவார்,
"நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து
புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள். உங்களை எந்த
ஊராவது ஏற்றுக்கொள்ளாமலோ உங்களுக்குச் செவிசாயக்காமலோ போனால்
அங்கிருந்து வெளியேறும்போது உங்கள் கால்களில் படிந்துள்ள
தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்"
என்று. இயேசுவின் இவ்வார்த்தைகள், இறைவார்த்தையை இறைவாக்கை
எடுத்துச் சொல்லும் பணியாளர்களை ஏற்றுக்கொள்ளாத மக்களுக்குக்
கிடைக்கும் தண்டனையாக இருக்கின்றது.
ஆகவே, இறைவாக்கை எடுத்துச் சொல்லும் நற்செய்திப் பணியாளர்கள்
இறைவாக்கை மட்டும் எடுத்துரைப்பவர்களாக இருக்கவும்,
இறைவார்த்தையைக் கேட்கும் மக்கள், அதன்படி நடக்கவும், அந்த
இறைவாக்கை எடுத்துச் சொல்லும் நற்செய்தி பணியாளர்களுக்கு உரிய
மதிப்புத் தரவும் ஜெபிப்போம், இவ்வாறு இறைவனுக்கு உகந்த
மக்களாய் வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Palayamkottai, Fr. Maria Antonyraj, 2017.
மறையுரைச் சிந்தனை (பிப்ரவரி 02)
இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தல்
புத்தரிடம் சீடராகச் சேர்ந்து ஆசி பெறுவதற்காக தேவதத்தர்
வந்தார். அவரிடம் புத்தர், "நான் உன்னை என்னுடைய சீடராக
ஏற்றுக்கொண்டு உனக்கு ஆசிவழங்கவேண்டும் என்றால், நீ நாளை
அதிகாலை 4 மணிக்குத் தனியாக வரவேண்டும்"என்றார்.
அதன்படி தேவதத்தர் மறுநாள் அதிகாலை 4 மணிக்குத் தனியாக புத்தர்
இருந்த குடிசைக்கு வந்தார். அவரைக் கூர்ந்து நோக்கிய புத்தர்,
"நான் உன்னைத் தனியாகத்தானே வரச் சொன்னேன். எதற்காக இப்படி
இரண்டு மூன்று ஆட்களை உன்னோடு கூட்டிவந்திருக்கிறாய்?"என்று
கேட்டார். அதற்கு அவர், எங்கே தனக்குப் பின்னால் யாராது
இருக்கிறார்களா? என்று திரும்பிப் பார்த்தார். அதற்கு புத்தர்,
"நான் வெளியே உள்ள ஆட்களைச் சொல்லவில்லை, உனக்கு உள்ளே
இருக்கும் ஆட்களைப் பற்றிச் சொல்கிறேன்"என்றார்.
தேவதத்தர் தனக்குள் கவனித்தார், அப்போதுதான் அவருக்குத் உண்மை
தெரிந்தது தனக்குள் தன்னுடைய மனைவி, பிள்ளைகள், தான் சேர்த்து
வைத்திருக்கும் சொத்து, புகழ் எல்லாம் இருக்கிறது என்று. உடனே
அவர் புத்தரிடம், "எனக்கு ஓராண்டு காலம் அவகாசம் கொடுங்கள்.
அதற்குள் நான் என்னையே தகுதிப்படுத்திக் கொண்டு, மீண்டுமாக
வந்து உங்களுடைய சீடராகச் சேர்கிறேன்"என்று சொல்லிவிட்டு
அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.
ஓராண்டு காலம் முடிந்த பிறகு அவர் மீண்டுமாக புத்தரிடம்
வந்தார். இப்போது அவரைப் பார்த்த புத்தர், அவர் மிகவும்
பக்குவமடைந்து தனி ஆளாக வந்திருப்பதை அறிந்து, அவரைத் தன்னுடைய
சீடராக ஏற்றுக்கொண்டு, அவருக்கு ஆசி வழங்கினார்.
துறவு வாழ்வுக்கு/ பொது வாழ்வுக்கு தங்களையே அர்ப்பணிப்போர்
எல்லாவற்றையும் துறந்துவிட்டு, தங்களையே அர்பணிக்கவேண்டும்
என்பதை இந்த நிகழ்வானது நமக்கு உணர்த்துகின்றது.
இன்று திருஅவையானது ஆண்டவராகிய இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக
ஒப்புக்கொடுத்த விழாவைக் கொண்டாடுகின்றது. தூய பவுல்
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் அதிகாரம் 5:15 ல்
கூறுவதுபோல "வாழ்வோர் இனி தங்களுக்காக வாழாமல், தங்களுக்காக
இறந்து, உயிர்த்த கிறிஸ்துவுக்காக வாழவேண்டும் என்று
இவ்விழாவானது நமக்கு அழைப்புத் தருகின்றது.
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் மலாக்கி கூறுவார், "இதோ!
நீங்கள் தேடுகின்ற தலைவர் திடிரென்று தம் கோவிலுக்கு வருவார்;
நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ
வருகிறார்"என்று. அதன்படி நற்செய்தி வாசகத்தில் தூய்மைச்
சடங்கை நிறைவேற்றுவதற்காக குழந்தை இயேசுவை அதனுடைய பெற்றோர்கள்
எருசலேம் ஆலயத்திற்கு கொண்டுவருகிறார்கள்.
"தலைப்பேறு அனைத்தும் எனக்கு அர்ப்பணம் செய்"(விப 13:2) என்ற
ஆண்டவரின் வாக்கிற்கிணங்க இஸ்ரேயல் மக்கள் தங்களுடைய தலைப்பேறை
ஆண்டவருக்கு காணிக்கையாகச் செலுத்திவந்தார்கள். அதன்படியே
இயேசுவின் பெற்றோர்களும் அவரைக் கோவிலில் காணிக்கையாகச்
செலுத்துகிறார்கள். இதன்மூலம் இயேசு இறைவனுக்குக்
கையளிக்கப்பட்டவர் ஆகிறார்.
இறைவனுக்கு கையளிக்கப்படல் என்று சொல்கிறபோது நமது வாழ்க்கையை
இறைவனுக்காக முற்றிலுமாகக் கையளித்து, அவரது விருப்பத்தின்படி
வாழ்வதாகும். ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனுக்காகத் தன்னையே
முற்றிலுமாகக் கையளித்து, அவரது விருப்பத்தின்படி வாழ்ந்தார்
என்பதை நற்செய்தியில் பல இடங்களில் வாசிக்கின்றோம். குறிப்பாக
கெத்சமனித் தோட்டத்தில் ஆண்டவர் இயேசு சிலுவைப் பாடுகளை
ஏற்பதற்கு முன்பாக, "தந்தையே! உமக்கு விருப்பமானால் இந்தத்
கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும், என் விருப்படி
அல்ல; உம் விருப்பப்படி நிகழட்டும்"(லூக் 22:42) என்கிறார்.
ஆக, இயேசு கிறிஸ்து தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும்
அவர் தந்தையின் திருவுளத்தை ஏற்று நடந்தார் என்பதை நாம் மிக
எளிதாகப் புரிந்துகொள்ளலாம். திருமுழுக்கின் வழியாக கடவுளுக்கு
அர்பணிக்கப்பட்ட நாம் ஒவ்வொருவருமே இறைத் திருவுளத்தின்படி
வாழவேண்டும் என்பதுதான் நமக்குத் தரப்படும் அழைப்பாக
இருக்கிறது.
இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் கூறுவார், "ஊனும்
இரத்தமும்கொண்ட பிள்ளைகளைப் போல கிறிஸ்துவும் அதே இயல்பில்
பங்குகொண்டார்; இவ்வாறு சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த
அலகையைச் சாவின் வழியாக அழித்துவிட்டார்"என்று. ஆம், இயேசு
கிறிஸ்து தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி சாவின்மீது
வெற்றிகொண்டார் என்றால், அவரது சீடர்களாக இருக்கும் நாமும்
தந்தையின் திருவுளத்தின்படி நடந்து சாவின் சக்திகளான வேற்றுமை,
வறுமை, பஞ்சம், பசி, பட்டினி போன்றவற்றைக் களையவேண்டும்.
"சமூக நலன் என்ற அக்கினியில் சுயநல ஆசைகளைச் சுட்டேரிப்பதே தூய
துறவு"என்பார் விவேகானந்தர். கடவுளுக்கு தங்களை முழுமையாக
அர்பணிப்போரும் தன்னால ஆசைகளைத் துறந்து, தன் விருப்பத்தை
நிறைவேற்றுவதை விடுத்து, இறைவிருப்பதை நிறைவேற்றவேண்டும்.
ஆதலால் ஆண்டவர் இயேசுவை கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த
விழாவைக் கொண்டாடும் நாமும் இயேசுவைப் போன்று இறைத்திருவுளம்
நிறைவேற்றுவோம். இறையருளை நிறைவாய் பெறுவோம். Fr. Maria
Antony, Palayamkottai.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
=================================================================================
திருப்பலி முன்னுரைஆண்டவரைக்
காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா
=================================================================================
எருசலேம் ஆலயத்தில் இயேசு காணிக்கையாய்
ஒப்புக்கொடுக்கப்பட்டதைக் கொண்டாடும் நாளை சிறப்பிக்க இன்றைய
ஞாயிறு திருப்பலிக்கு அழைக்கப்பட்டிருக்கிறோம். இறைவன்
விரும்பும் காணிக்கையாக இயேசுவை வெளிப்படுத்துகிறார் சிமியோன்
இறைவாக்கினர். தூய ஆவியால் உணர்த்தப்பட்டு இவரே புற
இனத்தாருக்கு இருளகற்றும் ஒளி என்று அறிக்கையிடுகிறோம். இதயம்
நிறைந்த காணிக்கையைச் செலுத்தும்போது இறை ஒளி நம்மில்
ஏற்றப்படுகிறது. மன இருள் அகற்றப்படுகிறது.
இன்றைய முதல் வாசகத்தில் இயேசுவைக் காணிக்கையாக ஒப்புக்
கொடுப்பர் என்பதை "நான் என் தூதனை அனுப்புகிறேன், திடீரென தம்
கோவிலுக்கு வருவார்"என முன்னறிவிக்கிறார். இறைவன் அன்பானவர்;
தவறுகளுக்காக நம்மை புடமிடுவார். பொன்னைத் தூய்மையாக்குவது
போல் நம்மை தூய்மையாக்குவார் என்கிறார் மலாக்கி இறைவாக்கினர்.
நம்மையே நாம் தூய்மைப்படுத்தி இறைவன் விரும்பும் இதயம்
படைப்போம்.
இன்றைய நற்செய்தியில், "பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும்
ஒளி"என்று இயேசுவை சிமியோன் வெளி உலகிற்கு
வெளிப்படுத்துகிறார். ஆண்டவரையே இவ்வுலகிற்காக அர்ப்பணித்த
புனித வளனாரும் தூய மரியாவும் போல நாமும் நம் வாழ்வின்
நேரத்தையும் பொருளையும் நற்குணங்களையும் ஆண்டவருக்கு அர்ப்பணம்
செய்வோம். இறையருள் பெறுவோம். இப்பலியில் இணைவோம்.
இறைமக்களின் மன்றாட்டுகள்
1. பிற இனத்தாருக்கு ஒளியாக உம்மையே தந்தவரே எம் இறைவா!
எம் திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, திருச்சபையின்
உறுப்பினர்கள் தம் அழைப்பின் பொருள் மற்றும் தன்மையை உணர்ந்து,
தங்களையே உகந்த காணிக்கையாக்கி, தம் இறை வாழ்வின் ஒளியிலே
மக்களை வழிநடத்திட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
2. நேர்மையாய் வாழ அழைப்பவரே எம் இறைவா!
எம் நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள், நேர்மையாய் பணிபுரியவும்,
அதிகாரப் போக்கில் திட்டங்களை செயல்படுத்தாமல், அவசியமான,
வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களைச் செயல்படுத்தி, நாட்டின்
பொருளாதாரத்தை உயர்த்தவும், மக்களை மகிழ்ச்சியாக வாழ விடவும்
நல்லறிவு தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
3. திருக்குடும்பத்தை உருவாக்கியவரே எம் இறைவா!
எங்கள் குடும்பங்களில் அன்பு, எளிமை, தாழ்ச்சி மற்றும்
இறைப்பற்று போன்ற நற்குணங்கள் நிறைந்து இருக்கவும், எங்கள்
குழந்தைகள் உம் அருளால் தொடர்ந்து வழிநடத்தப்படவும்
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
4. கருணையின் தெய்வமே எம் இறைவா!
எம் பகுதியில் அறுவடையை நோக்கியிருக்கும் விவசாயப்
பெருங்குடியினர் மகிழ்வோடு கதிர்களை நிறைவாக பெறவும், குடும்ப
அமைதி, மகிழ்ச்சி பெருகவும், மாணவர்கள் சிறந்த ஞானத்தோடு
தேர்வுக்கு தயாராகவும், வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை வரம்
போன்ற எதிர்பார்ப்புகள் நிறைவேறவும் வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
நன்றி: திருமதி ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.
|
|