Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                      25 டிசம்பர்  
                             கிறிஸ்து பிறப்புக் காலம் - பகலில் திருப்பலி
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 52: 7-10

நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும், நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும், சீயோனை நோக்கி, `உன் கடவுள் அரசாளுகின்றார்' என்று கூறவும் வருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன!

இதோ, உன் சாமக் காவலர் குரல் எழுப்புகின்றனர்; அவர்கள் அக்களித்து ஒருங்கே ஆரவாரம் செய்கின்றனர்; ஆண்டவர் சீயோனுக்குத் திரும்பி வருவதை அவர்கள் தம் கண்களாலேயே காண்பர். எருசலேமின் பாழ் இடங்களே, ஒருங்கே ஆர்ப்பரித்துப் பாடுங்கள்; ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்; எருசலேமுக்கு மீட்பு வழங்கியுள்ளார்.

பிற இனத்தார் அனைவரின் கண்களும் காண ஆண்டவர் தம் தூய புயத்தினைத் திறந்து காட்டியுள்ளார்; மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 98: 1. 2-3a. 3cd-4. 5-6 (பல்லவி: 3b)
=================================================================================
 பல்லவி: உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3a இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி

3cd உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி

5 யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். 6 ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். பல்லவி


================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
கடவுள் தம் மகன் இயேசு வழியாக நம்மிடம் பேசியுள்ளார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-6

பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார்.

கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தியபின், விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். இவ்வாறு இறைமகன் வானதூதரைவிடச் சிறந்ததொரு பெயரை உரிமைப்பேறாகப் பெற்றார். அந்நிலைக்கு ஏற்ப அவர்களை விட இவர் மேன்மை அடைந்தார்.

ஏனெனில், கடவுள் வானதூதர் எவரிடமாவது "நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்" என்றும், "நான் அவருக்குத் தந்தையாய் இருப்பேன், அவர் எனக்கு மகனாயிருப்பார்" என்றும் எப்போதாவது கூறியதுண்டா? மேலும் அவர் தம் முதற்பேறான இவரை உலகிற்கு அனுப்பியபோது, "கடவுளின் தூதர் அனைவரும் அவரை வழிபடுவார்களாக" என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! புலர்ந்தது நமக்குப் புனித நாள்; பிற இனத்தாரே, வருவீர், இறைவன் மலரடி தொழுவீர்; ஏனெனில் உலகின்மீது எழுந்தது பேரொளி இன்றே. அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்.

+ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-18

தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை. அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை.

கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான். அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக் குறித்துச் சான்று பகர்ந்தார். அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்.

அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது. ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்துகொள்ள வில்லை.

அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல; மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள்.

வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார். யோவான் அவரைக் குறித்து, "எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில், எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்" என உரத்த குரலில் சான்று பகர்ந்தார்.

இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம். திருச்சட்டம் மோசே வழியாகக் கொடுக்கப்பட்டது; அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன. கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

அல்லது - குறுகிய வாசகம்

வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்.

+ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-5, 9-14

தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை.

அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை. அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது. ஒளியான அவர் உலகில் இருந்தார்.

உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்துகொள்ள வில்லை.

அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல; மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள்.

வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.
 
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================



மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

 ✞ கிறிஸ்து பிறப்புத் திருவிழா ✞
(Christmas)


✠ வாக்கு மனிதரானார்; நம்மிடையே குடிகொண்டார். ✠
~ யோவான் நற்செய்தி 1:14

கிறிஸ்து பிறப்பு விழா, திருவருகைக்கால முதல் ஞாயிறில் தொடங்கி, டிசம்பர் 25ம் தேதி ஆடம்பரங்களோடு கொண்டாடப்பட்டு, திருக்காட்சி விழாவோடு முடிவடைந்து விடுவதல்ல.

மாறாக, எமது வாழ்வின் ஒவ்வொரு சம்பவங்களிலும் நமதாண்டவர் இயேசுவின் பிறப்பை, அவரது இறை பிரசன்னத்தைக் கண்டுணரவேண்டும் என்பது எனது பனிவான அபிப்பிராயம்.

நமதாண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்புத் திருவிழாவை அகில உலகமும் எவ்வித வேறுபாடுமின்றி கொண்டாடி மகிழும் மகிமையை இன்றைய நாளுக்கான நற்செய்தியின் அடிப்படையில் நாம் தியானிக்கும்போது, எமதாண்டவர் இயேசுவின் பிறப்பு, அவரது தாழ்ச்சி, எளிமை நிறைந்த ஆழமான அர்த்தத்தினை எமக்குக் கற்பிக்கின்றது என்ற உண்மையை நாம் உணரலாம்.

அனைத்து உலகையும் ஒளிர்விக்கும் ஒளியாக இவ்வுலகிற்கு அவர் வந்தார். ஆனால் இந்த உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை (யோவான் 1:1-10).
தமது உரிமைப் பிள்ளைகளது பாவக்கட்டுக்களை நீக்கி, விடுதலை வழங்கிட முன்வந்தும், அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக் கொள்ள வில்லை (யோவான் 1:1-11) எனவும் நற்செய்தியாளர் யோவான் குறிப்பிடுகின்றார்.

அகில உலகின் அரசரான கிறிஸ்து அரசர் இவ்வுலகில் மனிதனாகப் பிறந்த வேளையில் அவருக்கென அரச மாளிகை இருக்கவில்லை. மாறாக, மாட்டுக்கொட்டில் தயாராக இருந்தது. தற்காலத்திய குழந்தை மகப்பேற்று நிபுணர்கள் இருக்கவில்லை. மாறாக நீதிமான் சூசையும், ஏழை இடையர்களும் அங்கேயிருந்தனர்.

பளபளக்கும் நவீன பட்டுத்துணியால் தெய்வக் குழந்தை உடுத்தப்படவில்லை. மாறாக, கந்தல் துணியால் சுற்றி, மிருகங்களது தீவனத் தொட்டியில் வளர்த்தப்பட்டார்.

இறைமகன் இயேசுவின் பிறப்பை பரலோகத் தந்தை எதற்காக இவ்வாறு மிகவும் எளிய முறையில் நெறிப்படுத்தினார் என நாம் சிந்திக்கலாமல்லவா?

இதோ உமது அடிமை எனத் தம்மையே தாழ்த்திய அன்னை மரியாள் உதரத்தில் பிறப்பெடுத்த குழந்தை இயேசு, பெத்தலகேமின் மாட்டுக்கொட்டிலில் பிறந்ததனால், தனது சாயலாக உருவாக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பதற்காக இறைவன் இவற்றிலும் மேலாகத் தன்னைத் தாழ்த்தவேண்டும் என்ற உண்மையை எமக்கு உணர்த்துகிறார் என்பதனை எம்மால் மறுக்க முடியுமா?

தெய்வத்திருமகன் இயேசு பெத்லகேமில் பிறந்ததால் எதற்குமே பெறுமதியில்லாத மாட்டுத் தொழுவம் இன்று அகில உலகமும் போற்றும் ஒரு பரிசுத்த யாத்திரைத் தலமாக மாறியுள்ளதல்லவா? அவ்வாறே ஆண்டவர் இயேசு, எமது உள்ளத்தில் வந்து பிறந்திட நாம் இடம் ஒதுக்கிக் கொடுக்காவிட்டால் நாமும் பெறுமதியற்ற ஈனப்பிறவிகளே.

மார்கழிக் கடுங்குளிரில் மாட்டடையும் குடிலினிலே காரிருளில் பிறந்தவரே என நாம் பாடலாம். ஆனால் எமது இதயமோ அந்த மகிமை பெற்ற நள்ளிரவிலும் கொடியதாக வன்மம், வஞ்சனை, பழிவாங்கல், சாதியம் என்ற இருள் சூழ்ந்து, இறுமாப்போடு நாம் வாழவில்லையா? இப்படி நாம் வாழ்ந்துகொண்டு எவ்வாறு கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாட முடியும்?

கிறிஸ்து பிறப்புவிழா வருடா வருடம் வந்துபோகின்ற ஏதோ ஒருவிழா போன்று எமக்கு அமைந்திடாதிருக்க பரிசுத்த ஆவியின் துணை வேண்டிச் செபிப்போம். இவ்வுலகின் பாவக் கட்டுக்களிலிருந்து மீட்க வந்த மகிமை நிறைந்தவர் எமது சிறிய உள்ளத்திலும் வந்து பிறப்பதனால் நாமும் புதுப்பிறப்பாக மாற்றமடைந்திட வரம் வேண்டுவோம். அகில உலகையும் மீட்கவந்த மெசியா எமது உள்ளத்திலும் பிறந்துள்ளாரென நாமும் மகிழ்ந்து கொண்டாடுவோம்.

பட்டும் பவளமும் தருவதற்காய், பாராள்வோர் பார்த்திருக்க, பசுவின் கொட்டில் போதுமென்று பாலகனாய்ப் பரிணமித்த பாசத்திருமகனே!
பாவம் நிறை உலகினிலே குழந்தை போலாகினால், தீதேதுமில்லையென்று குவலயத்தில் பாவமறியா குழந்தை வடிவினிலே உபதேசம் செயும் குரு பாலகனே, எம் பாவம் தீர்த்து எமக்கு சமாதானம் அருளும் இறையருள் மகனே! ஆமென்

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!